தியாகங்கள் புரிவதில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 24, 2022
பார்வையிட்டோர்: 1,861 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிளிப்பச்சை நிறத்தில் அந்த வாசனைக் குப்பி. கண் கொட்டாமல் பார்த்தால் ஒரு கிளி நெல் கொரிப்பதுபோல் இருக்கும். அத்தனை அழகு. ஒப்பனை மேசையில் அருகில் இருக்கும் உயரமான அலமாரித் தட்டில்தான் சதாசிவம் தன் சொந்த உபயோகப் பொருள்களை வைத்திருப்பார். அதில் அந்த வாசனைக் குப்பியும் ஒன்று. மகள் லதாவுக்கோ மனைவி சரோவிற்கோ அது எட்டாது. எட்டவேண்டிய அவசியமில்லை.

சதாசிவம் வீராசாமி சாலையில்தான் வசிக்கிறார். சனி ஞாயிறுகளில் வெளியே செல்வதைத் தவிர்ப்பார். வார நாட்களில் ஏதாவது ஒரு நாளில் சிட்டிஸ்கொயர் மால் சென்று சாப்பிடுவார்கள். என்டியுசி நியாயவிலைக் கடையில் வீட்டுக்குத் தேவையானதை வாங்குவார்கள். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உடைகள் என்றால் முதஸ்பா செல்வார்கள். இது அவர்களின் வாடிக்கையான வாழ்க்கை முறை.

ஒரு நாள் லதா சொன்னாள்.

‘என் கைக் கடிகாரத்தைக் கட்டுவதற்கே வெட்கமாக இருக்கிறதப்பா. எல்லாரும் கைக் கடிகாரங்களை நகைபோல் அணிந்து வருகிறார்கள். எனக்கு ஒரு நல்ல கைக் கடிகாரம் வாங்கித்தாருங்கள்.’

சதா சொன்னார்.

‘இந்த ஒரு மாதம் பொறுத்துக் கொள்ளம்மா. நிறைய திருமணங்கள் இந்த மாதம். தவிர்க்கவே முடியாது. அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வாங்க வேண்டும். அடுத்த மாதம் வாங்கித் தருகிறேன்.’

பொறுத்துக் கொள்ள சம்மதித்தாள் லதா.

திருமணம் என்றால் சதாவின் கணக்கு 50 வெள்ளி. பொருளாகவோ பணமாகவோ கொடுப்பது அவர் வழக்கம். அன்று இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு முஸ்தபா வந்தார்கள். ஒரு திருமண அன்பளிப்புக்காக கைக்கடிகாரம் வாங்குவதாகத் திட்டம். 50 வெள்ளிக்குக் குறைவாக இருக்கிறது. அல்லது 100 வெள்ளியைத் தாண்டுகிறது. சதா வெகுநேரம் குடைந்தார். ஓர் அழகான ‘கெஸ்’ கடிகாரம் லதா கண்ணில் பட்டது. 128 வெள்ளி.

‘இந்தக் கைக்க்டிகாரம் தானப்பா எனக்கு வேண்டும்’ என்றாள் அப்பாவிடம்.

‘வாங்கித் தருகிறேனம்மா. இப்போது 50 வெள்ளிக்குள் ஒன்று பாரம்மா. வருகிற ஞாயிறுதான் அந்தக் கல்யாணம். அடுத்தடுத்து திருமணங்கள். இப்போது இதை முடிப்போம்.’

அப்படியே நகர்ந்து வாசனைக் குப்பிப் பகுதிக்குப் லதா. அப்பா பயன்படுத்தும் அதே வாசனைக் குப்பி இருந்தது. விலையைப் பார்த்தாள். 248 வெள்ளி, ‘அடேங்கப்பா! இத்தனை விலைக்கா அப்பா இதை வாங்குகிறார்?’ லதாவால் நம்பவே முடியவில்லை.

ஒருவழியாக கைக்கடிகாரம் வாங்கிவிட்டார் சதா. எல்லாரும் வீட்டுக்குப் புறப்பட்டார்கள். தொடர்ந்து மூன்று வாரங்கள் இப்படியே ஓடின.

பிறந்தது அடுத்த மாதம். நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள் லதா. இந்த மாதம் எப்படியும் அப்பா வாங்கித் தந்துவிடுவார். நம்பினார் லதா. சதா மனைவியிடம் சொன்னார்.

‘இந்த மாதமும் பல செலவுகள் வந்துவிட்டது சரோ. என் மோட்டார் சைக்கிளுக்கு தகுதிச் சென்று கிடைக்கவில்லை. இரண்டு டயர்களையும் மாற்ற வேண்டுமாம். அதற்கே 200 வெள்ளி வேண்டும். லதாவிடம் தவணை கேட்க வெட்கமாக இருக்கிறது சரோ. நீயே லதாவிடம் சொல்லி இன்னும் இருக்கிறது மாதம் பொறுத்துக் கொள்ளச் சொல்.’

‘நீங்களே சொல்லலாமே. மகளிடம் சொல்ல என்ன வெட்கம். பொய்யா சொல்கிறீர்கள். தவிர்க்க முடியாத உண்மைதானே. சரியான கோழை நீங்கள்’ என்றார் சரோ.

அன்று இரவு வேலை முடிந்து கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துவிட்டார். மாலை மணி 6. கதவைத் திறந்து உள்ளே வந்தார். கூடத்தில் தொலைக் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அறையில் சரோவும் லதாவும் விவகாரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். சதா வந்ததையே அவர்கள் கவனிக்கவில்லை. அவர்கள் பேசுவது சதாவுக்கு நன்றாகவே கேட்டது.

‘அடம்பிடிக்காதே லதா. அடுத்த மாதம் கண்டிப்பாக வாங்கித் தருவார். அப்பாவுக்குள்ள செலவுகள் உன் கைக் கடிகாரத்தைவிட மிக அவசியம் லதா. நேரம் பார்க்கத்தானே கடிகாரம். நேரம் காட்டுகிறதல்லவா? பொறுத்துக் கொள்.’

‘உங்களுக்குப் புரியவில்லையம்மா. வந்து பாருங்கள். ஒவ்வொருவரும் எப்படிக் கைக்கடிகாரங்கள் கட்டி வருகிறார்களென்று. உண்மையிலேயே பள்ளிக்கூடம் சென்றதும் கடிகாரத்தை பைக்குள் வைத்துவிடுவேன். நானென்ன ஆயிரம் வெள்ளிச் சாமானா கேட்கிறேன். ஒரு கைக் கடிகாரம்தானே. இந்த வாசனைக் குப்பியை முஸ்தபாவில் பார்த்தேன். 248 வெள்ளி. இதெல்லாம் உடனே உடனே வாங்கமுடிகிறது. அவருக்குத் தேவையென்றால் அப்பா வாங்கிக் கொள்கிறார். எனக்கு ஒன்று கேட்டால் இழுத்தடிக்கிறார். சே!’

‘நிறுத்துடீ. என்னை வெறி கொள்ள வைக்காதே இன்னும் ஒரு வார்த்தை உன் அப்பாவைப் பற்றிப் பேசினால் என்ன நடக்கும் என்று தெரியாது. அடிப்பாவி உன்னிடம் தவணை கேட்கவே வெட்கப்பட்டவரடீ அவர்.’ கடைசி வார்த்தைகள் ஒடிந்து ஒடிந்து விழுந்தன.

சரி. இனிமேலும் தாமதிக்கக் கூடாது. சதா உள்ளே வந்தார் செயற்கையான அமைதி.

‘ஏதோ பேசிக் கொண்டிருந்தீர்கள். ம். பேசுங்கள்.’

‘பேசக் கூடியதாக இருந்தால்தானே பேசுவாள். அது போகட்டும். உங்கள் வண்டி எப்படியும் போகட்டும். தகுதிச்சான்றை அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளுங்கள். உடனே புறப்படுங்கள். அவள் கேட்கும் கைக்கடிகாரத்தை முதலில் வாங்குங்கள். அப்புறம் பேசுங்கள்.’

‘வாங்கிக் கொடுக்கத்தான் இன்று வந்தேன். சரோ. அதற்குமுன் நான் லதாவிடம் பேசவேண்டும்.

‘லதா.. நீ கேட்பதின் நியாயம் எனக்குப் புரிகிறதம்மா. தாமதித்தது தவறுதான். அதற்காக என்னுடைய தேவதைகளை உடனே உடனே வாங்கிக் கொள்கிறேனென்றாயே அதுதானம்மா புரியவில்லை. பல ஆண்டுகளாகி விட்டதம்மா, நான் ஒரு திரைப்படம் பார்த்து. நண்பர்கள் அணியும் சட்டைகளை யெல்லாம் பார்த்தால் ஆசையாக இருக்கும். இன்றுவரை என் ஆசைக்கு நான் ஒரு சட்டை வாங்கிக் கொண்டதில்லையம்மா. உன் அம்மா வாங்கித் தருவதைத் தானம்மா அணிகிறேன். இந்த வாசனைக் குப்பிதானே 248 வெள்ளி. இதை கொஞ்சம் அழுத்திப் பார். ம். பாரம்மா.’

லதா அழுத்தினாள். அதிலிருந்து காற்று கூட வரவில்லை. சதா தொடர்ந்தார்.

‘1998ல் என் ஆஸ்திரேலிய நண்பன் வாங்கிக் கொடுத்தானம்மா. இது காலியாகி பல வருடங்கள் ஆகிவிட்டன. என்னிடம் எதையும் வாங்கிக் கேட்க நீ தயங்கக்கூடாது என்பதற்காக நானும் ஒரு ஆடம்பரப் பொருள் வாங்குவதுபோல் நடித்தேனம்மா. முடிய முடிய புதிதாக வாங்கிக் கொள்கிறேனென்று பொய் சொன்னேன். மகளே! நீ ஒன்று கவனித்தாயா? எப்போது நீ கைக்கடிகாரம் வேம்டுமென்று கேட்டாயோ அன்று முதல் நான் கைக்கடிகாரம் அணியவில்லையம்மா.’

சதாவின் நெஞ்சில் முகம் புதைத்து அழுதாள் லதா. சதாவின் நெஞ்சுச் சட்டை லதாவின் கண்ணீரால் லதாவின் உச்சந்தலையை சதாவின் கண்ணீர்துளிகள் வாழ்த்தின.

இன்றைய இளைய தலைமுறைக்கு பெற்றோர்களின் தியாகங்கள் புரிவதேயில்லை.

– கட்டை விரல் ஆகட்டும் கல்வி, முதற் பதிப்பு: 2012, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *