தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,164 
 
 

அது ஒரு குக்கிராமம். தன் பெட்டியை சுமந்தபடி வந்தான் கணேசன். சூரியன், தன் ஒட்டு மொத்த கோபத்தையும், அவனை நோக்கியே காட்டுவது போல், வெயில் சுட்டெரித்தது. வியர்வைத் துளியில், விலை உயர்ந்த அழகான சட்டை கூட நனைந்து, மழையில் நனைந்த கதாநாயகியை போல், உடலோடு ஒட்டிக் கொண்டிருக்க, வாசனை திரவியத்தையும் மீறி, வியர்வை வாடை மூக்கைத் துளைத்தது.
“ச்சே… இதுவே சிட்டி என்றால், எத்தனை வண்டி, ஆட்டோ, பஸ், வாடகைக் கார் என, வசதிகள் இருக்கும். ஆனால், இங்கே குறிப்பிட்ட நேரத்திற்குத்தான் வண்டி. அதை விட்டால், நாள் பூராதேவுடு காக்க வேண்டியதுதான்…’
தாய் மண்!அவன் பஸ்சில் இருந்து இறங்கி, கிட்டத்தட்ட அரைமணிக்கு மேல் இருக்கும். இன்னும், ஒரு மைல் தூரமேனும் நடந்தால் தான், அவன் வீட்டை எட்ட முடியும். அதற்குள் நா வறண்டு விட்டது.
“இத்தனை கஷ்டப்பட்டு, இங்கு வரத்தான் வேண்டுமா?’ என்று, மனதின் ஓரம் ஒரு கேள்வி, அவனையும் அறியாமல் எழுந்தது.
போகும் போதே மனைவி நந்தினி, “வேண்டாம் டியர்… ஐநூறோ, ஆயிரமோ மொய் அனுப்பிவிட்டு… இங்கு வேலை அதிகம், வரத் தோதில்லைன்னு லெட்டர் போட்டுடலாம்…’ என்று கூறினாள்.
அவன் கேட்காமல் வந்ததற்கு, நல்ல படிப்பினை. விஷயம் இதுதான்: கணேசனின் தந்தை ஒரு விவசாயி. தன் இரண்டு மகன்களையும் நன்றாய் படிக்க வைக்க வேண்டுமென்பது, அவரின் விருப்பம். ஆனால், பெரியவன் விசுவிற்கு, படிப்பு ஏறவில்லை. எனவே, தன்னுடன் வயல் வேலையை கவனிக்கச் செய்தார்.
ஆனால், இளையவன் கணேசன் நன்கு படித்தான். அந்தப் பள்ளிக்கூட வாத்தியார் தயவில், சென்னையில் உயர் படிப்போடு, காதலும் கை கூடி வந்தது. “கூடப்படித்த நந்தினியை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்…’ என்று தந்தையிடம் சொன்ன சமயம், சரியாகத்தான் இருக்கும் என்பது தந்தையின் முடிவு. கல்யாணம் முடிந்ததும், ஒருவாரமேனும், மகனும், மருமகளும், தங்களுடன் தங்கிட வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாய் இருந்தது!
ஆனால், “அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடத்தில், நானெப்படி தங்க முடியும்?’ என்று, கணவன் காதைக் கடித்தாள் புது மனைவி. அதிலும், காதலியாய் இருந்து, மனைவியாய் மாறியவள் வேறு. அவள் எண்ணமும் தவறில்லையே? சென்னையில் திறந்தவுடன் தண்ணீர், இங்கே, கொல்லையில் நீர் இறைக்க வேண்டும். கழிவறை வசதியும் இல்லை; மறைவிடம் தேடிச் செல்வது, அவளுக்கு முடிகிற காரியமா? ஏன், சென்னையில் இரண்டு வருடங்கள் பழக்கப்பட்ட தனக்கே, அது பிடிக்கவில்லை என்றாகிறதே…
ஊர் பெரிசுகள் எல்லாம் நந்தினியின் கையில்லாத மேல் சட்டையையும், ஜீன்ஸ்சையும், பாப் தலையையும், ஏதோ வேற்று கிரக ஜீவராசிகளை போல் பார்ப்பதும், “என்ன மருதாயீ… உம்மருமவ இப்படி இருக்கா?’ என்று ஏளனமாய் கேள்வி கேட்பதையும், நந்தினியால் பொறுக்க முடியவில்லை.
“எப்போடா… நிம்மதியாய் மூச்சு விடுவோம்?’என்று தவித்துக் கொண்டிருந்தாள்.
கணேசன் மெதுவாய் பெற்றோரிடம், “அப்பா… நான் என்னுடைய கம்பெனியிலேயே நந்தினிக்கும், வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கேன். அதனால, நாங்க கிளம்பறோம்…’
“என்னடா தம்பி… நம்ம வளசல்ல எத்தினி பேரு உங்களுக்கு விருந்து வைக்க கேட்டு இருக்காங்க… இப்பவே கிளம்பாட்டாத்தான் என்ன… அதான் கல்யாண லீவு இன்னமும் ஒரு வாரம் இருக்கே?’
“சரிதாம்மா… ஆனா, நான் போனாத்தானே குடித்தனத்திற்கு வீடு பார்க்கணும். தங்கியிருக்கிற ஆண்கள் விடுதிக்கு, பொண்டாட்டியை அழைச்சிட்டு போக முடியுமா?’
“அப்போ நீ மட்டும் போ… அவ இங்கனயே இருக்கட்டும்… வீடு எல்லாம் ஏற்பாடு பண்ண பொறவு, அவளைக் கூட்டிட்டுப் போவலாம்….’ அம்மா முடிவாய் சொல்ல…
அதுவரை பொறுத்துக் கொண்டிருந்த நந்தினி, “இல்லேத்த… அவர் தனியா கஷ்டப்படுவார்… அதனால, நானும் கூடவே கிளம்பறேன்…’ என்று பெட்டியில் துணிமணிகளை அடுக்கினாள். அதற்கு மேல், தடுக்க வேண்டாம்… சின்னஞ்சிறுசுகள் என்று, தடுத்து விட்டார் அப்பா. அம்மாவால் வெறுமனே முனங்கிட மட்டுமே முடிந்தது.
நான்கு வருடங்கள் ஆயிற்று. கோவில் கொடை, குழந்தைபேறு என்று, எதற்கும் அவர்கள் வருவதில்லை. போனமுறை பேரப்பிள்ளைகளைப் பார்த்துப்போக வந்த அம்மா கூட, “என்னடாயிது… இப்படியே இருந்திட்டா ஊரும், உறவும் வேண்டாமா? கல்யாணம் முடிஞ்ச கையோட வந்தது, இப்போ குழந்தை பிறந்திட்டது. தயவுசெய்து வருடத்திற்கு ஒருமுறையாவது வந்திட்டுப் போ#யா…’ என்று கெஞ்சினாள்.
அம்மா அத்தனை வருத்தத்தோடு கேட்டபோது, மறுக்கத் தோன்றாமல், “அவசியம் வர்றேம்மா…’ என்ற போது, மனைவியின் எரிச்சல் மிகுந்த பார்வையையும் சந்திக்க வேண்டி இருந்தது.
அவளைச் சொல்லியும் குற்றமில்லை… நகரத்து வசதிகளில் பழகியவள். பிறந்த இடம், எனக்கே அசவுகரியமாக தெரியும் போது, நந்தினி வர மறுப்பது நியாயமே!
இப்படியே அம்மாவும், அப்பாவும் வரச் சொல்வதும், வர முடியாமல் போவதற்கு காரணம் சொல்வதுமே, வாடிக்கையாய் போய் விட்டது. இப்போது அண்ணன், சொந்த வீடுகட்டி, குடிபுகும் விழா. அதற்குத்தான் சென்று கொண்டிருந்தான்.
வீட்டிற்குள் நுழைந்த போதே, வாசலைத்தாண்டி அம்மாவின் பார்வை சென்று ஏமாற்றமாய் மீண்டது.
“”என்னடா அவளும், பிள்ளையும் வரலையா?”
“”இல்லைம்மா… பிள்ளைகளுக்கு பரிட்சை வேற, அதனால்தான், நான் மட்டும் வந்தேன்.”
கடகடவென்று சப்தமிட்ட, அதே சீலிங் பேன், தட்டியை சுவர்களாய் கொண்ட குளியலறை என்று, வழக்கம் போல் வீடு, அதன் வர்ணம் மாறாமல் இருந்தது.
“”என்னம்மா அண்ணன் வீடு கட்டும் போது, இதையும் புதுப்பிச்சிருக்கலாமே?”
“”டேய்… இது உங்கப்பா கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கட்டினதுடா… இதோ, இந்த முற்றத்திலேதான் உனக்கும், உங்கண்ணனுக்கும், தூளி கட்டி போட்டு இருப்பேன். இது, நீங்க ஓடி ஆடி விளையாடிய இடம். என்னமோ வேலை, அது இதுன்னு நீங்க பார்க்க வராம போனாலும், நாங்க உங்க நினைவுகளோடுதான்டா வாழறோம்… வயசான காலத்திலே, எஞ்சியதே வர்ணம் மாறாத இயல்பான நினைவுகள் தானேடா…”
“”சரிம்மா… பெயின்டாவது அடித்திருக்கலாமே… சுவரெல்லாம் ஒரே கிறுக்கல்கள். எண்ணெய் படிஞ்சிப் போயிருக்கு அசிங்கமா… இப்படி இருந்தா, அவளும், குழந்தைகளும் எப்படி இங்க வருவாங்க?”
“”தம்பி… இந்த சுவரில் உள்ளது, கிறுக்கல் இல்லைடா… சிலேட்டு குச்சி வைச்சி, நீ ஆனா, ஆவன்னா எழுத கத்துகிட்டப்போ எழுதியது. அதை அழிக்க மனம் வரலைடா… போ… போய் குளிச்சிட்டு வா. அம்மா இட்லி அவுச்சி, கருவாட்டுக் கொழம்பு வச்சிருக்கேன்,” என்றாள்.
என்னதான் அசவுகரியங்கள் இருந்தாலும், அம்மா வைக்கும் குழம்பிற்கு நல்ல மணம், நந்தினி போல், பேக்கிங் உணவுகள் கிடையாது, இரண்டு பேரும் வேலைக்கு போவதால், பெரும்பாலும் கான் பிளாக்ஸ், பிரட் இவைதான் சமையலே; இல்லையெனில், பிட்சா. எனவே, அம்மாவின் கையால், அதிகமாகவே இட்லி சாப்பிட்டான்; திருப்தியாக இருந்தது.
அதன் பின், அம்மாவுடன் கிளம்பி, அண்ணனின் வீடு சென்ற போது, புதுப் பெண்ணைப்போல பளிச்சிட்டது வீடு. அங்கே விருந்தெல்லாம் முடிந்து, அனைவரும் ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
“”என்னமோடா… உன் பிள்ளைகள் இரண்டும், நல்ல நிலைக்கு வந்திட்டாங்க,” என்று பெரியப்பா பேச்சைத் துவங்கினார்.
“”என்ன நல்லாயிருந்து, என்ன பயன்… பாருங்க மாமா, ஒரு நல்லது கெட்டதுக்கு கூட, சின்னவன், பொண்டாட்டி, பிள்ளையைக் கூட்டிகிட்டு வர மாட்டேங்கிறான். அண்ணன் விசுவுக்கு, வயசு முப்பத்தாறாச்சு, இன்னமும் கல்யாணத்திற்கு ஒத்துக்க மாட்டேங்கிறான். வயசான காலத்திலே ஒரு பேரன், பேத்தியை கொஞ்சக் கூட வழியில்லாமப் போச்சே…” அம்மா மறுபடியும், அங்கலாய்ப்பைத் துவக்கினாள்.
விசு வந்தமர்ந்தான். உழைத்து, உழைத்து வைரம் பாய்ந்த உடம்பு, கிண்ணென்று இருந்தது. 36 வயதான போதும், கணேசனுக்கே இளையவனாய் காட்டியது. சுத்தமான காற்று, கலப்படமற்ற சாப்பாடு, வெயிலில் உழைப்பு என்று, அவனுக்கிருந்த வலுவில், கணேசனுக்கு ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கணிப்பொறியின் முன்னால் அமர்ந்து, உடல் நோகாமல், துரித உணவுகள் தின்று வாழும் தன் உடலை பார்த்தான். 30 வயதில் கொலஸ்ட்ரால், அதிக எடை, தொப்பை, தலைவழுக்கை என, எத்தனை பிரச்னைகள் என்று, மனம் கணக்குப் போட்டுப் பார்த்தது. தென்னமரக் காற்று, “ஏசி’யின் குளிர்ச்சியையும் தோற்கடிக்கும் வண்ணம் இருந்தது.
“”தம்பி… உங்க அண்ணன் விசுவுக்கு ஒரு வரன் வந்திருக்கு… பொண்ணு பக்கத்திலே தான் ராஜபாளையம் டவுன், நல்லா படிச்சப் பொண்ணு… என்ன, பொண்ணோட அப்பா, அவரோட கடையைப் பார்த்திட்டு கூடவே இருக்கணுமின்னு சொல்றார்…. இவன் வேண்டாம் வேண்டாங்கிறான்…”
“”ஏன் விசு… நல்ல விஷயம் தானே… இந்த வேகாத வெயில்ல, இன்னமும் எத்தனை நாள் காட்டு வேலை செய்யப் போறே?”
“”விவசாயம் ஒண்ணும் கஷ்டமான வேலையில்லைடா… நான் இதை மனசார செய்யறேன்… காலையிலே எல்லாம் வேலை பார்த்து, களைச்சிப் போய் வீட்டுக்கு வரும் போது, உடல்ல ஒட்டியிருக்க செம்மண்ணும், வியர்வையும், எனக்கு ஒரு தனி பெருமை உணர்வைத் தருகிறது. டிப்-டாப்பா துணியுடுத்தி, விரல்ல அழுக்குப்படாம, பேனுக்கு நேரா அமர்ந்து செய்யிற வேலையிலே கூட, இந்த திருப்தி கிடைக்காதுடா…”
“சரி… வேற யாரையாவது பார்க்கட்டுமா?”
“”ம்… வர்ற பொண்ணு அப்பா, அம்மாவை பார்த்துக்கணும், அதனால…”
“”இதையே சொல்லிச் சொல்லி, நல்ல சந்தர்ப்பத்தை எல்லாம் வேண்டான்னுட்டே… உனக்கும் வயசாகுதுடா…
“”நந்தினியோட சொந்தக்காரப் பொண்ணு ஒருத்தியிருக்கா… அவளை வேணும்ன்னா பார்க்கவா?”
“”தம்பி… நான் படிக்கலை. எனக்கு தகுந்தாற் போலத்தானே வாழ்க்கை இருக்கணும். எனக்கு மனைவியாக போகிறவ, என் வசதிக்குள்ளே வாழத் தெரிஞ்சவளாத்தான் இருக்கணும். நான் பிறந்த மண்ணிலே சொந்தமா ஒரு வீடு கட்டணும்ன்னு ஆசைப்பட்டேன். அதே போல, எம்மண்ணுலேயே கடைசி வரை வாழணும்ன்னு ஆசைப்படறேன். அதுக்கு ஏத்தமாதிரி பொண்ணு இருந்தா பாருங்க… நான் கட்டிக்கிறேன்,” என்று ஒரே பிடியாய் சொல்லியபடி சென்றான் விசு.
“”அப்புறம் என்ன… அவன் தான் வெட்டு ஒண்ணு, துண்டு இரண்டுன்னு சொல்லிட்டுப் போயிட்டானே… இனிமே, பொண்ணு பார்க்க வேண்டியது தான். கொஞ்சம் படிச்சிட்டாலே, காலரைத் தூக்கிவிட்டுட்டு, பெத்தவங்களை மதிக்காம திரியற பிள்ளைங்க மத்தியிலே, விசுவிற்குத்தான் இந்த ஊருமேலயும், உங்க மேலேயும் எத்தனை அன்பு. நல்ல பிள்ளையைப் பெத்திட்டே தம்பி,” என்று, பெரியப்பா பாராட்டினார்.
கணேசன் உடைந்தான்.
“நான் பிறந்த ஊரு, அதை நேசிக்காமல், பகட்டை நம்பி பறந்து விட்டேனே… உயிர் தந்த தந்தை, உருவம் தந்து, பத்து மாதம் சுமந்த தாய், இவர்கள் உயர்ந்தவர்கள் என்றால், நான் வாழ்ந்து, என் உடல் மண்ணில் வீழும் வரையில், என்னைச் சுமக்கும் இந்த பூமி, எத்தனை உயர்ந்தது… படிப்பினால், பகட்டினால் ஏதும் கிடைப்பதில்லை என்பதை அண்ணன் எத்தனை அழகாய் உணர்த்தி விட்டான்…’
போன் வந்தது; நந்தினி தான்!
“”சொல்லு நந்தினி…”
“”பங்ஷன் முடிந்ததா… கிளம்பலையா நீங்க?”
“”இல்லே இன்னமும் ஒரு வாரம் கழித்துதான் வருவேன். ஆபீசுக்கு மெயில் பண்ணிடு…”
“”அங்கே ஒரு வாரமா… ஒரு வசதியும் இல்லாத இடத்திலே எப்படித் தங்குவீங்க?”
“”நான் பிறந்த போது, வசதியோட பிறக்கல நந்தினி… மனிதனுக்கு என்றுமே நிரந்தரம் மண்தான். நான் பிறந்த ஊரிலே புழுதி படிந்த இந்த இடத்திலேயே கொஞ்ச நாள் இருக்கணுமின்னு ஆசைப் படறேன்…” என்று போனை வைத்தான் கணேசன்.
வெப்பம் கலந்த காற்று அவன் மீது புழுதியை வீசியது. அந்தக் காற்றை ஆழமாய் சுவாசித்தான் கணேசன்.

– லதா சரவணன் (ஏப்ரல் 2012)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *