தாய் மண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2024
பார்வையிட்டோர்: 306 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிறந்த மண்ணில் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாகவே மனதில் நிழலாடிக் கொண்டிருந்தது குமரவேலனுக்கு.ஏறக்குறைய ஐம்பத்தைந்து வருடங்கள் ஓடி விட்டன அவர் சிங்கப்பூருக்கு வந்து. ஐந்து வயதுப் பையனாய் வந்த மனிதர்!

இப்போது ஐந்து வயதில் அவருக்கு ஐந்து பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆம் அவருக்கு ஐந்து மக்கள். அந்த ஐந்து மக்களும் வளர்ந்து இல்லறத்தில் நுழைந்து குடியும் குடித்தனமுமாக வீடு நிறைய பேரப்பிள்ளைகள் விளையாடும் நேரம்.

மனம் நோகாது நடக்கும் மகன்களும் மருமகள்களும். இதுபோலவே பெண்பிள்ளைகளும். வீட்டுக்கு வந்த மருமகள்களும். வாழ்க்கைத் துணைவி வள்ளித்தாய் போய்விட்டதுதான் இப்போது அவருக்குள்ள ஒரே குறைபாடு!

ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும் அவரைப் பொருத்தமட்டில் அந்த இழப்பு ஈடுகட்ட முடியாத ஒன்றாகவே இருந்தது. என்னதான் பாலும் தேனுமாய் பெண்களும் மருமகள்களும் வாரி வழங்கினாலும் அந்த வள்ளித்தாயின் கையில் சாப்பிட்ட ஒரு வேளை நீர் மோரின் திருப்தி அதில் இல்லை அவருக்கு.

அந்த உண்மையை.. அவரின் ஏக்க உணர்வை வீட்டில் உள்ளவர்கள் உணராமல் இல்லை. அவரின் ஏக்கத்தைப் போக்கவும். தனிமைத் துன்பத்தை தவிர்க்கவும் அவர்களாக ஒரு முடிவுக்கு வந்து ஒரு ஏற்பாட்டை செய்து அவரிடம் அதை தெரிவித்தார்கள். ஆச்சரியப்பட்டார்.

தமிழ்த் திருநாடு தன்னைப் -பெற்ற
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!”

தொடக்கப் பள்ளியில் தமிழ் படித்தபோது தமிழாசிரியர் சொல்லிக் கொடுத்த பாரதியின் பாடல் வரிகள். அந்தத் தாய்த் திருநாட்டைப் போய்ப் பார்க்கப் போகிறார். அமிழ்தினும் இனிய நாட்டை ஆன்றோர்கள் வாழ்ந்த நாட்டைப் போய்ப் பார்க்கப் போகிறார்.

குமரவேலின் மனதில் கோடான கோடி கற்பனைகள்.. ஆயிரமாயிரம் ஆசைக்கனவுகள்.. கலையழகும் கலாச்சாரப் பண்புகளும் எல்லாவற்றுக்கும் மேலான இனிய தமிழ் மொழியும் கொண்ட அந்த அழகிய திருநாட்டினைக் காணப் போகும் உற்சாகத்தில் முதுமை மறைந்து இளமை திரும்பிய உணர்வு!

நண்பர்கள், உறவினர்கள். பிள்ளைகள் வாழ்த்தி வழியனுப்பக் குமரவேலு பயணமானார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அவரை இதமாகச் சுமந்துசென்றது. என்றோ நினைவு தெரியாத நாளில் யாரோ உறவினர் ஒருவர் தூக்கி வந்து அப்பாவின் கையில் ஒப்படைத்த காலம் போய், இன்று உலக அனுபவமும் வாழ்க்கை அனுபவமும் நிறைந்த முழு மனிதராக அவர் தாம் பிறந்த மண்ணை நோக்கிப் பயணமானார். குமரவேலின் உடம்பின் ஒவ்வொரு முடியும் சிலிர்த்து நின்றது.

சென்னை அண்ணா இன்டர் நேஷனல் ஏர்போர்ட்டில் விமானம் இறங்கி சோதனைகள் முடிந்து ‘சோழா ‘வில் வந்து தங்கிய போது புதிய அனுபவம். புதிய சூழ்நிலை! ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஹோட்டல்களின் தோற்றமும் அமைப்பும் ஆடம்பரமும் இரவு முழுவதும் பெருமித நிலையில் உறங்கிப் போனார்.

முதன்முதலாகக் தாய்மண்ணில் கதிரவனைக் கண்டபோது இரண்டு கைகளையும் தலைக்குமேல் தூக்கி மனசு முழுவதுமாய் வணங்கியவரின் ஈர உடம்பில் இனம் புரியாத புத்துணர்ச்சி பாய்கிறது. தாய்மண்ணில் நிற்பது தாயின் மடியில் கிடப்பது போன்ற உணர்வைத் தருகிறதோ….

குமரவேலு குளித்து முடித்து வெளியே கிளம்பினார். வரிசையாய் நிற்கும் வாடகைக் கார்களைவிட ஆட்டோ ரிக்ஷாவே அவருக்கு விருப்பமாக இருந்தது. போய் விசாரிக்கிறார்.

“இன்னா நைனா. எங்கே போணும் நீ..’ கேட்டது தமிழ் தானா! பேசினவன் தமிழன் தானா? மனசுக்குள் ஒரு பதட்டம், மறுபடியும் அவனிடம் பேசுகிறார்.

‘தம்பி நீ தமிழ்தானே…?” அவரது பேச்சு அவனுக்கு எரிச்சலை உண்டு பண்ணி இருக்கவேண்டும். தோளில் கிடந்த அழுக்குத் துண்டைஎடுத்து ஒரு முறை உதறித் தன் தோளில் போட்டுக் கொண்டான்.

“அட இன்னா நைனா.. காலங்காத்தால ஒங்கூட படா பேஜாரா கீது…! எங்கே போணும்னு சொல்வியா…” அவன் சலித்துக் கொண்டான். தேமதுரத் தமிழ் தேய்ந்து போன நிலை குறித்து தமக்குள் வருந்திக் கொண்டார்.

“எங்கேயாவது நல்ல சாப்பாடு இருக்கிற ஓட்டலா பார்த்துப் போப்பா…?

அவன் அவரை ஒருமுறை நன்றாய் கவனித்தான். கொஞ்சம் கூனிக் குறுகினான்.

“மன்ச்க்சுகோ ஸார்… நீ இன்னா சிங்கப்பூரா, மலேசியாவா..? நீ இந்த ஊர் கிராக்கின்னு நெனச்சுப்புட்டேன் ஸார்…!”

அவர் சிரித்துக் கொண்டார். “பரவாயில்லேப்பா.. உன்னோட வேலையை நீ ஆரம்பி.. இன்னும் ஏழுநாள் இங்கேதான் இருப்பேன்.. முக்கியமான இடமெல்லாம் சுத்திக்காட்டு”

அவன் முகம் பிரகாசமானது. அவரின் கையைப பிடித்துக் கும்பிட்டுக் கொண்டான்.

‘”மனசு நல்லா இல்லே சாமி… கன்னாபின்னான்னு பேசிட்டேன்.. மன்சிலே வெச்சுக்காதே.. எங்க ஆளு ஒருத்தனை அன்யாயமா கொன்னுட்டாங்க சாமி… அதான் மன்சு கேட்கலே…

“ஏன்பா உன்னோட ஆளு செத்துப்போனான். என்ன நடந்துச்சு… ஏதும் தீரா வியாதியா…?”

“இல்லே ஸார்.. இந்த கட்சிக்கார பசங்க பண்ற அநியாயம் பொறுக்காம செத்துட்டான் ஸார்..”

“அப்படின்னா…”

“தற்கொலை பண்ணிகிட்டான் ஸார்.. பெட்ரோல ஊத்தி உடம்பு பூராவும் நனைச்சிகிட்டு தீ வைச்சுக்கினு போய்ட்டான்…'”

அவருக்கு அது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

“எங்க தலைவர பேசிட்டாங்க ஸார். அவுரு கெவுரவம், மருவாதையெல்லாம் மறந்து பேசிட்டாங்க. பொறுக்க முடியலே ஸார் அவுருயாரு மனித தெய்வம் ஸார்.. அவுருதான் ஸார் இந்த நாட்டைக் காப்பாத்த வந்த தலைவர்! அதை இந்த கஸ்மாலம்லாம் புரிஞ்சுக்க மாட்டுது ஸார். இன்னும் பத்து நாள்ல பாரு ஸார்… அவுரு கொடிதான் பறக்கப் போவுது எங்க ஊர் கோட்டையில…”

குமரவேலுக்கு வியப்பின் மேல் வியப்பு. அவனது அரசியல் பற்றை எண்ணி எண்ணி வண்டி நின்றது.

“யாரப்பா உங்க தலைவரு… இவ்வளவு மரியாதையும் பிரியமும் வெச்சிருக்கிறே…! அந்த தலைவரை நான் தெரிஞ்சுக்கலாமா…?”

ஆர்வமுடன் கேட்கிறார் அவனிடம். அவனுக்கோ அளவு கடந்த உற்சாகம் பீறிட்டு எழும்ப “அட, இன்னா ஸார் நீ… இத்தக் கூடத் தெரிஞ்சுக்காத மனுஷனா இருக்கியே நீ…! அகில உலகமும் எங்க தலைவரோட புகழ் கொடிகட்டிப் பறக்குது. அவரைத் தெரியாத ஆளே கெடையாது ஸார்.. இங்கே பாரு”

தன் கையால் வண்டியின் உள்ளே மாட்டியிருந்த ஒரு சினிமா நடிகரின் படத்தைச் சுட்டினான்.

குமரவேலுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஒரு முறைக்கு இருமுறை பார்க்கிறார். அவனைப் போலவே சர்வகலா அலங்காரமும் நிறைந்த அந்த நடிகரின் முகத்தைப் பார்க்கப் பார்க்க அங்கேயே, அப்போதே தன்னை மாய்த்துக் கொள்ள வேண்டும் போன்ற வேதனை எழுகிறது. மௌனத்தில் இறுகிப் போகிறார்.

“இன்னா ஸார்… கம்முன்னு குந்திக் கெடக்கறே.. நம்ம தலைவரை கும்பிட்டுக்க ஸார்…”

அவனது குரல் எங்கோ தூரத்தில் இருந்து கேட்பது போன்ற பிரமை அவருக்கு. அந்த அளவுக்கு அவர் நினைவு பின்னோக்கி ஓடிச் சென்று தாய் திருநாட்டைப் பார்த்தது.

எத்தனை எத்தனை துன்பங்களையும் துயரங்களையும். தியாகத்தையும் இந்த மண்ணுக்கு ஈந்து இந்த அரிய சுதந்திரத்தை வாங்கினார்கள். அன்றைய தலைவர்கள்! செக்கிழுத்த செம்மல்கள், கொடிகாத்த குமரன்கள்… சிறையில் வாடிய சீமான் வீட்டுப் பிள்ளைகள். துப்பாக்கி குண்டுக்குத் தங்களின் இன்னுயிரைக் கொடுத்த எத்தனை எத்தனை மா மனிதர்கள்…? நினைக்க நினைக்க நெஞ்சு வெடித்து விடும் போல் இருந்தது.

இந்த நாட்டை ஆள்வதற்கு இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து இந்த நாட்டுக்காகத் தங்களையே அர்ப்பணித்த அறிவாளிகள், தியாகிகள், இந்த மண்ணின் மைந்தர்கள் ஒருவர் கிடையாதா இங்கே…!

எங்கிருந்தோ பிழைப்புத் தேடி ஓடி வந்து முகத்துக்குச் சாயம் பூசிக் கொண்டு மேடைக்கு மேடை ஒரு முகம் காட்டும் கூத்தாடிகள்… மக்களின் உழைப்பை அவர்களுக்கு உரிமையாளர்களாக்கி நாட்டை மொழியை, இனக்கலாச்சார பண்புகளைக் குழிதோண்டிப் புதைக்கும் கோமாளிகள்.

இவர்கள் பேசுகின்ற வசனங்கள் போடுகின்ற வேஷங்கள் உண்மையென நம்பி. தங்களின் அறியாமையால் அவர்களுக்குத் தங்கள் ஆதரவை வழங்கி அவர்களைத் தலைவர்களாக்கிவிடும் இவன் போன்ற பல கோடி மக்களைக் கொண்ட அன்னை பூமியின் தலை விதியை எண்ணி -எண்ணி இந்த மண்ணை விட்டு அகன்ற அந்த மனிதரின் மனம் அழுகிறது.

ஏதோ சந்திப்பில் குற்றுயிரும் குலை உயிருமாய்க் கிடந்து தவிக்கும் உணர்வில் மனம் துடிக்கிறது.

“தம்பி, அந்த ஓரமா என்னைக் கொஞ்சம் இறக்கி விட்டுடு.. எனக்குத் தலை சுத்தற மாதிரி இருக்கு” என்றார். அவனும் அவரை இறக்கி விட்டு நிற்கிறான்.

அவன் கேட்பதை விட அதிகமாகவே அவன் கையில் பணத்தைத் திணிக்கிறார். அவன் திகைப்புடன் அவரைப் பார்க்கிறான்.

“என்னைப் பார்க்காதேப்பா. வீட்டை நெனைச்சுப் பாரு, அங்கே இருக்கிற அப்பா அம்மா அண்ணன் தம்பி மனைவி மக்களை நெனைச்சுப்பாரு… அவுங்க நிம்மதியான வாழ்க்கையை ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதியான எதிர்காலத்தை நெனைச்சுப்பாரு…

எங்கிருந்தோ வந்தவனுக்கு ஆதரவு கொடுக்கிறதுக்குப் பதிலா… உன்னோட உழைப்ப உன்னோட சம்பாத்தியத்தை, உன்னோட உயிரை உன் குடும்பத்துக்கு கொடுப்பா… வீட்டை ஒழுங்கா நீ நெனைச்சேன்னா உன்னோட நாட்டையும் உயிரா மதிப்பே..! நாம பொறந்த வீடும் நாடும் நம்ம கண்ணுமாதிரி… அதில அடுத்தவன் புகுந்து அராஜகம் பண்ண வழி விட்டுட்டா அப்புறம் நமக்கும் ஒரு கபோதிக்கும் வித்தியாசம் இல்லாமப் போயிடும்.

“என்னைத் தப்பா நெனைக்காதே! இது புண்ணிய பூமி…. இது கூத்து மேடை இல்லே… நிலையான நேர்மையான தலைவர்களால பாதுகாக்கப்பட வேண்டிய பூமி.. இப்படிப்பட்ட பூமியை உங்க அவசரபுத்தியால அறியாமையினால குட்டிச் சுவராக்கிடாதீங்கப்பா… ஆவேசத்தில் தேர்வு செய்யப்படற விஷயமில்லே அரசியல்! அறிவுப்பூர்வமா சிந்திச்சு ஆக்கப்பூர்வமா முடிவு செய்யவேண்டிய விஷயம்! கொஞ்சம் நிதானம் வேணும்பா…’

அவனைக் கையெடுத்துக் கும்பிட்டு அங்கிருந்து ஒதுங்கி ஓரமாய் நடக்கிறார். வரப்போகும் பண்டிகையை முன்னிட்டு கடைகளில் விழாக்கால மலிவு விற்பனை விசேஷ விற்பனை என்று ஏகப்பட்ட விளம்பரங்கள்…!

புதிய புதிய கடைகளின் திறப்பு விழாக்கள்.. பரிசளிப்பு விழாக்கள். அறிமுக விழாக்கள்! எங்கே எதைப் பார்த்தாலும் சினிமா நடிகர் நடிககைகளின் முகங்கள்.

குமரவேலு ஒரு நிமிடம் நிற்கிறார். அலை அலையாய் திரள்கின்ற மக்களின் ஆர்வம் ஓடிப் போய் அமர்கின்ற அனைத்திலும் ஒருமுகமாய் வியாபித்துக் கிடக்கும் கூத்தாடிகளின் ஆக்கிரமிப்பு! எங்கும் எதிலும் சினிமாவின் பாதிப்பு.

மறைந்து போய் விட்ட… மறைக்கப்பட்டுவிட்ட நாட்டுத் தலைவர்களின் முகங்கள்.. நினைவுகள்..

“ஓ… என் இனிய தாய்த் திரு நாடே! உன் மக்களின் கண்களில் எப்போது அறிவொளி தென்படப் போகிறது.. இந்த இருள் மறைந்து என்றைக்கு அந்தச் சுடர் படரப் போகிறது..! உனது விலங்கு எப்போதோ உடைக்கப் பட்டதாகச் சொல்கிறார்களே தாயே… உன் பிள்ளைகளே உன் கால்களை – கைகளை இப்படிக் கட்டிப் போட்டு வைத்து உன்னை வேதனைப் படுத்துகிறார்களே அம்மா… உன் மக்கள் சிந்திக்கும் நாள் வரவே வராதோ… அப்படி ஒரு நாள் வரும்போது தானே இம்மண்ணில் விழாக்களும், பண்டிகைகளும் உண்மையான மரியாதையைப் பெறமுடியும். எப்போது வரும் அந்தநாள்!?”

மேடும் பள்ளமுமாய் குண்டு குழியுமாய் கிடக்கும் அந்தப் பிரதான சாலையில் ஓரமாய் ஒதுங்கி நடந்து கொண்டிருக்கிறார். அவர். மனம் மறுநாள் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

– செவ்வந்திப் பூக்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2007, வெளியீடு: சிங்கை தமிழ்ச்செல்வம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *