தாய்வீட்டு சீதனம் !

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2013
பார்வையிட்டோர்: 11,286 
 
 

நீண்ட நேரமாக சுவற்றில் தலைகீழாக தொங்கிக்கொண்டிந்த மின்விசிறியை வெறித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் லயித்திருந்த அசோக் ஒரு வழியாக தன் குழப்பங்களுக்கு தெளிவு கண்டவனைப்போல தன் இருக்கையில் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தான். அவனது முகம் வியர்வையால் குளிர்ந்திருந்தது. அவனது பிரதான மேசையின் வலது புறத்தில் நின்றுக்கொண்டிருந்த சதுர வடிவ கடிகாரத்தில் மணி நான்கை தொட்டிருந்தது. வேகமாக இருக்கையிலிருந்து எழுந்த அசோக் தன் சட்டை பித்தான்களை சரி செய்துகொண்டான். அந்த அலுவலகத்தின் தென்கோடியில் அமைந்திருந்த அவனது அறையிலிருந்து வெளியேறி வரிசையாக எதிர்பட்ட தன் அலுவலக உத்யோகஸ்தர்கள் அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டே வெளியேறினான். வெளியே அவனுக்காக அவனது மோட்டார் சைக்கிள் காத்துக்கொண்டிருந்தது. அதில் ஏறியமர்ந்து கிக்கரை உதைத்தான். மோட்டார் சைக்கிள் வேகமெடுத்து பறந்தது.

சரியாக இருபது நிமிடங்களில் அவனது மோட்டார் சைக்கிள் “ மார்டன் எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் “ என்ற பெரிய ஃப்ளகஸ் அறைந்த கடையின் முன்னால் நின்றுக்கொண்டிருந்தது. அசோக் அந்த கடையின் உரிமையாளரிடம் புதிதாக வந்துள்ள ரேடியோ பெட்டிகளின் கேட்லாக்கை வாங்கிப் பார்த்துகொண்டிருந்தான். ஒவ்வொன்றாக அதில் அச்சாகியிருந்த ரேடியோ பெட்டிகளை பார்க்கும் மறுகணம் கடையின் உட்புறம் வரிசை வரிசையாக அடுக்கப்பட்டிருந்த ரேடியோக்களில் அந்த வடிவத்தை கண்டடைந்து சரிப்பார்த்துகொள்வான். ஒவ்வொன்றும் ஒரு விதம் , ஒரு விலை , ஒரு வடிவம் . காலையிலிருந்து தன் அம்மாவுக்கு தன்னுடைய முதல் மாத சம்பளத்தில் என்ன பொருள் வாங்கித்தரலாம் என்று குழபத்தை விடவும் இந்த ரேடியோ பெட்டிகளில் எதை வாங்குவது , எது தன் தாயை திருப்திப்படுத்தும் , எது அவளை சந்தோஷப்படுத்தும் என்று குழம்பிப்போனான். மனதுக்குள் ‘ அப்பனே முருகா , இது என்னடாப்பா சோதனை , பேசாமல் அம்மாவை அழைத்து வந்தே வாங்கிவிடலாமா ‘ என்று ஒரு புறம் பிரார்த்தனையும் ஓடிக்கொண்டிருந்தது. இருப்பினும் தான் அம்மாவுக்கு புதிதாக வாங்கிக்கொடுக்கும் இந்த ரேடியோ அவளை திகைப்படையச்செய்ய வேண்டும் , அவள் பூரித்து புண் முறுவ வேண்டும் என எண்ணினான்.

“ அண்ணே , அந்த ரேடியோவ எடுங்க “ முடிவு செய்துவிட்டான் அசோக். 1700 ரூபாயில் ஒரு அட்டகாசமான ரேடியோ அவனுக்கு திருப்தியளித்தது. கூடவே இரண்டு செல்கள் இனாமாக கிடைத்தது. நிச்சயமாக இது தன் அம்மாவை உற்சாகப்படுத்தும் என நம்பினான். தன் முதல் மாத சம்பளத்தில் அசோக் அம்மாவுக்கு புடவை வாங்கிக் கொடுக்கலாம் , நகைகளை அள்ளி அவளை அலங்கரித்து மகிழலாம். ஆனாலும் அவன் ரேடியோ தான் வாங்க வேண்டும் என முடிவு செய்ததுக்கு காரணங்கள் இருந்தன.

அசோக் பொறியியல் பட்டம் பெற்று நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த நான்கு ஆண்டுகளில் நிலையாக ஒரு இடத்திலும் அவன் வேலை செய்யவில்லை. ஏதோ ஒரு கம்பெனியில் சேருவான் , பின் நான்கைந்து நாட்களிலேயே இடம் பிடிக்கவில்லை , சூழல் சரியில்லை , மனிதர்கள் சரியாக பழகவில்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் அப்பாவின் அரிசி மண்டியிலேயே கிடப்பான். உண்மையில் அவனுக்கு பொறியியல் துறையை துளியும் பிடிக்கவில்லை. பனிரெண்டாம் வகுப்பில் தன் நண்பர்கள் அனைவரும் ஃபெயில் ஆகிவிட இவன் மட்டும் தப்பித்தவறி பிழத்துக்கொண்டான். அப்போதே அவன் மனம் அரிசி மண்டியில்தான் அண்டிக்கிடந்தது . ஆனாலும் அசோக்கின் அப்பாவிற்கு அது பிடிக்கவில்லை. ‘ ‘ இம்மாந் தூரம் படிச்சுப்புட்டு இப்படி அரிசி மன்டியே பழியாக்கிடந்தா எப்படி ‘ என்று சலித்துக்கொள்வார். அதனால்தான் விருப்பமேயில்லை எனினும் அசோக் பொறியியல் படிக்க ஒப்புக்கொண்டான். பொறியியல்தான் படிக்க வேண்டும் என்பது அவனது அப்பாவின் ஆசை.

கல்லூரி என்பது அசோக்கிற்கு அப்படியொன்றும் நினைத்த நேரத்தில் பசுமை நினைவுகளை வாரி நெஞ்சில் அப்புவதாக இருக்கவில்லை. அவன் ஏனோ தானோ வென்றே படித்து முடித்தான். அவனுக்கென்று நண்பர்கள் கூட்டம் அதிகம் சேர்த்துக் கொள்ளவில்லை. கல்லூரி மாணவர்களின் இலக்கணங்களான கூத்துக் கும்மாளம் அறவே அசோக்கிடம் இல்லை. அவன் ஏதோ கிடந்தான். ஈர மண்ணை குழைத்து இறுக கட்டி அதனுள் கோழியை குஞ்சுடன் சேர்த்துப் பூட்டிவிட்டால் அவற்றின் குரல் எப்படி இருட்டு சுவற்றில் முட்டி மோதி அலறலாக வெளிப்படுமோ அப்படித்தான் அசோக்கின் மனம் அந்த நான்கு ஆண்டுகளில் அறைப்பட்டு ஓலமிட்டுக்கொண்டிருந்தது. கல்லூரியின் ஒவ்வொரு நாளையும் அவன் தவம் போல கழித்துக்கொண்டிருந்தான். சாமியார் என்ற புனைப்பெயரையும் வகுப்பு மாணவர்களிடம் சம்பாதித்துக்கொண்டான். கல்லூரி வாழ்வை கடத்துவதென்பது அடிமைப்பட்டு கிடப்பதாகவே எண்ணிக்கொண்டான். எப்போதுமே அவன் கண்கள் அவன் வீட்டின் திண்ணையைத்தான் தேடிக்கொண்டிருந்தன. ஒரு வழியாக தன் கல்லூரி படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தன் அம்மாவின் கரங்களை முத்தமிட்டு அவள் மடியில் சரிந்தபோதுதான் அவன் தன்னிலையை உணர்ந்தான். சராசரியாக கிராமத்து வீட்டில் அம்மாவின் முந்தானை சுட்டிலேயே வளர்ந்த பிள்ளைகளுக்கு அவர்களின் வீடும் வாசளும்தான் சொர்க்கம். அதை தாண்டி அரை அடி எடுத்துவைக்கவும் மனம் சஞ்சலப்பட்டு கூசம்.

எப்படியோ கல்லூரி முடிந்து நான்கு ஆண்டுகள் வேகமெடுத்து உருண்டோடிவிட்டன. நிலையான வேலை ஒன்றும் அசோக் செய்ததில்லை. அங்கும் இங்கும் எங்கும் அரைகுறை வேலைதான். இந்த நான்கு ஆண்டுகளில் எத்தனையோ ஏச்சுப்பேச்சுகளை அவன் அப்பா உதிர்த்துவிட்டார். அவரது ஒவ்வொரு சொல்லும் தேளாக அவனை கொட்டின. ஏதேனும் ஒரு உருப்படியான வேலையை தக்கவைத்துக்கொண்டு வாழ்க்கையில் கரைச்சேர்ந்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் அவனது நெஞ்சை அனுதினமும் ஊசிப்போல குடைந்துக்கொண்டிருந்தது. அப்போது தான் செய்தித்தாளில் இரண்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள நகரத்தில் கட்டுமான பணி தொடர்பான வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்தான், மூளை வேகமாக வேலை செய்தது. சட்டென்று ஒரு முழு வெள்ளை தாளில் தன் சுய விவரப் பட்டியலை வாரி இரைத்தான். மாதம் ஆறாயிரம் ரூபாய்க்கு நல்ல வேலை கிடைத்தது. இரண்டு கிலோமீட்டர் இடைவெளி தான் என்பதால் வீட்டிலிருந்தே தினமும் சென்று வருகிறான். ஒரு மாதமாக வேலையை மகன் தக்க வைத்துக்கொண்டதால் அசோக்கின் தந்தை ஏக கும்மாளத்தில் அவனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்து நான்கு நாட்கள் தான் ஆகின்றது. தன் வாழ் நாளிலேயே முதல் முறையாக ஆறாயிரம் ரூபாய் சம்பளத்தை முழுசாக கையில் வாங்கிவிட்டான் அசோக்.

மனம் தாயை காண துடித்துகொண்டிருந்தது. அவளது ஒரு கையில் இந்த ரேடியோ பெட்டியையும் மறுகையில் சொச்ச பணத்தையும் கொடுத்து தன்னை பெற்றெடுத்ததற்கான பிறவி பலனை தீர்த்துவிட வேண்டும் என எண்ணினான். ‘இதோ பார் தாயே , இனியும் நான் வெட்டி பயல் இல்லை , உன் புருஷனிடம் சொல் , இதோ என் மகன் கால் காசு பணம் சம்பாதிக்கும் நிலைக்கு வந்துவிட்டான் என்று அவர் காதில் நன்றாக விழும்படி உரக்கச்சொல்‘

அம்மா ஒரு தனி உலகம், ஒரு தனி வாழ்வு. ஒவ்வொரு தாயுமே அவள் வாழ்நாளில் தனக்கென்று எதையும் சேர்த்துக்கொள்ள துணியாத அப்பாவிகள். அவர்கள் வாழ்வது தங்கள் பிள்ளைக்காக , தங்கள் கணவனுக்காக , தங்கள் சொந்த பந்தத்திற்காக. வாழ்நாளில் ஒவ்வொரு நிமிடமும் ஓடிக்கொண்டேயிருக்கக் கூடியவள் அவள். உயிர் பிரியும் வரையும் அவள் பாதங்கள் சுழன்றுக்கொண்டிருக்கும். எப்போதுமே பரப்பரப்பாக இருக்கக்கூடிய ஒரே ஜீவன் அவள். முகம் வெதும்பி , கை கால்கள் கறுத்து , கட்டிலில் சரியும் தருவாயிலும் அவள் மனம் தன் பிள்ளைகளின் மீதே படிந்திருக்கும். அவர்கள் சரியாக சாப்பிட்டார்களா? , உடம்பு எப்படி இருக்கிறது? , லேசாக கனைப்பதைபோல தெரிகிறதே, என்னவாக இருக்கும்?. தன் பிள்ளைகளுக்கு உடல் சற்று பிழன்று இருக்கிறது என்றால் துடித்துப்போவாள்.அதுதான் தாய்மை. தன் உடலிலிருந்து தனி உயிராக பிரிந்து ஈரம் சொட்ட சொட்ட தனக்கு பக்கத்தில் கண்விழிக்காமல் சுருண்டு கிடக்கும் நாள் முதலே அவளது தாய்மை பாத்திரம் ஆரம்பமாகிவிடுகிறது. அதன்பின் ஒவ்வொரு நாளுமே அவளுக்கு ஒரு கனத்த போராட்டம்தான். போராட்டம் ஓய்வதும் , அவள் மூச்சு அடங்குவதும் ஒன்றுதான்.

அசோக் தன் அம்மாவின் நினைவுகளில் மூழ்கிப்போனான். இத்தனை வருடங்களும் அவனை தாங்கி சுமப்பவள் அவள்தான். பள்ளி நாட்களில் ஆசிரியர்கள் அவனை அடித்துவிட்டதால் ஆசிரியரிடமே சண்டைக்கு வந்துவிட்டாள் அவள். அப்போது அசோக்கிற்கு மிக சிறிய வயது , அவனது அம்மாவுக்கும்தான். இப்போது இருப்பதைபோல அவளது முகத்தில் அப்போது கோடுகள் இல்லை. கன்னங்கள் உப்பியிருந்தன. முடி அடர்ந்து கறுத்திருந்தது. தன் பிஞ்சு விரல்களை இறுக படித்துக்கொண்டு கடைவீதிகளுக்கு அழைத்துச்செல்லும் நாட்கள் அதி அற்புதமானவை. காய்கறி வாங்கும் கடைகளிலிருந்து ஒரு கேரட்டை உருவி அசோக்கின் கைகளில் திணிப்பாள். அவன் அதை முசல்குட்டிபோல கொரித்துக்கொண்டே கடைவீதியில் உலாபோவான். ஆனால் அப்போதெல்லாம் அவனது அம்மா வேகவேகமாக நடப்பாள். அரிசி மண்டிக்கு சென்றிருக்கும் கணவர் மதியசாப்பாட்டு நேரமாக வந்துவிடுவாரோ என்ற பதற்றம்தான் அந்த நடைக்கு காரணம். அவளது நடைக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் பாதி வழியிலேயே அசோக் உட்கார்ந்துக்கொண்டு மேற்கொண்டு நடக்க முடியாதென்று அடம்பிடிப்பான். அப்போதிருந்த வேக நடை அம்மாவுக்கு இப்போதில்லை. இப்போது அவள் கடைவீதிகளுக்கும் செல்வதில்லை. அதற்கு பணியாட்களை அவனது அப்பா நியமித்துவிட்டார்.

ஒவ்வொரு முறை அசோக்கின் அப்பா அவனை திட்டும்போது அவரையும் சமாதனம் செய்து வெளியே அனுப்பிவிட்டு , அசோக்கின் கரத்தை பற்றி “ அப்பா அப்படிதான்யா சொல்வாக , அதெல்லாம் மனசிலே போட்டு குழப்பிக்க கூடாது , போய் நல்லா தூங்கு “ என ஆறுதல் சொல்வாள். அசோக்கை அவனது அப்பா அடிக்கும் போது அவன் மீது அவனது அம்மா சாய்ந்து குஞ்சை அடைக்காக்கும் கொழியைபோல காத்துக்கொல்வாள். அவரது அடிகள் அவளின் முதுகின்மீது விழும். எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளும் சுமைதாங்கி அவள். இத்தனை வருடங்களும் அவனை ஈ காக்கை அண்டாது சுமந்து வந்தவள் அவள்.

அசோக்கின் அம்மாவிடம் ஒரு பழைய ரேடியோ இருந்தது. வீட்டின் உள்சுவற்றில் அறையப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கும் அதில் எந்த நேரமும் பாட்டும் செய்தியும் மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கும். அசோக் பெரும்பாலும் பள்ளியிலும், பள்ளி முடிந்ததும் சேக்காளிகளுடன் விளையாடவும் சென்றுவிடுவான். அவனது தந்தை ஆள் வருவார்களோ இல்லையோ அந்த அரிசி மண்டியில் தான் கிடப்பார். தினமும் காலை கடையை திறந்தவுடன் அந்த ஊரின் வழுக்கை விழுந்த தலைகளும் , பஞ்சாயத்துகளில் மீசை முறுக்கும் ஆசாமிகளும் கடையின் முன்பு குழுமிவிடுவார்கள். ‘ அது யாருய்யா ராசாவாம் , பல கோடி ரூபா அரசாங்க கொள்ள அடிச்சிட்டானாம் ’ , ‘ அது ஏதோ டி.வி கம்பெனி தொறக்க வச்சிருந்த பணமாம் , அத திருடிப்போட்டாங்கலாம் ‘ என்றெல்லாம் தங்களுக்கு தெரிந்த அரசியலை அசைப்போட்டு கொண்டிருப்பார்கள்.

வீட்டில் அசோக்கின் அம்மா பெரும்பாலும் தனியாகவே விடப்படுவாள். சேவல் கூவும் சாமத்திலேயே கண்விழிக்கும் அவளுக்கு வீட்டின் வேலைகளை மாலை வரையிலும் நீண்டுகொண்டிருக்கும். அப்போதெல்லாம் அவளுக்கு ஒரே துணை அந்த பழைய ரேடியோதான் . குரல் கரகரத்து ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த வயதான ரேடியோதான் அசோக்கின் அம்மாவிற்கு வீட்டில் ஒரே பேச்சுத்துணை. அந்த ரேடியோவின் மூலமாகதான் வெளியுலகை அவள் படித்துத் தெரிந்துகொள்வாள். அவள் அசோக்கின் அப்பாவை மணமுடித்து தான் தாய் வீட்டு உறவுகளை உதறிவிட்டு கணவனே கண்கண்ட தெய்வம் என குனிந்த தலையோடு கணவனை பின்தொடர்ந்து வந்த நாள் முதல் அந்த ரேடியோ அவளிடம் இருக்கின்றது. உண்மையில் தான் தாய் வீட்டில் தான் இருக்கின்றோம் என்ற உணர்வை ஏற்படுத்துவதும் அந்த ரேடியோ. அதன் மூலமாக தன் தாயே நேரடியாக பேசுவதுபோல உணர்ந்தாள் அசோக்கிடமும் அவனது தாய் இரவு நேரங்களில் தான் ரேடியோவின் மூலம் அன்றைய தினம் தெரிந்துக்கொண்ட தகவல்களை நினைவில் திரட்டி சொல்வாள். கணவர் ராசா , ஊழல் என்றெல்லாம் சொன்னால் , அதன் முழு பின்னணி விவரங்களையும் தெளிவாக சொல்லி முடிப்பாள். அந்த ரேடியோ அவர்களின் வீட்டில் ஒருநாளும் ஒலிக்காமலிருந்ததாக யாருக்கும் நினைவில்லை. அசோக்கின் அம்மா வீட்டின் பின்னால் சாணி மொய்த கரிய மண் அடுப்பில் ஊதாங்குழலை நுழைத்து அந்த குரும்புகையை துழாவிக்கொண்டிருக்கும்போதும், முன் தினத்தில் கணவனும், மகனுமாக அழுக்கேற்றி கழற்றி எறிந்திருந்த துணிகளை சலவைக்கல்லில் போட்டு வெளுத்துக்கொண்டிருக்கும் போதும் அவளின் காதுகள் அந்த ரேடியோ பேட்டியின் மீதுதானிருக்கும். அந்தளவுக்கு அசோக்கின் அம்மாவோடு அன்நோன்யமாகிவிட்டது அந்த ரேடியோ.

அசோக் தான் வாங்கி வந்திருந்த புத்தம் புதிய ரேடியோ பெட்டியை ஜிகினா தாளில் சுற்றி தான் அம்மாவின் முன்னால் நீட்டினான். சற்று குழும்பியவளாக ,

“ என்னப்பா இது ? “

“ உனக்குதான்மா , இன்னைக்கு எனக்கு முத சம்பளம் “

“ ஒஹ் அப்படியா! கத்துக்குட்டிக்கு தனியா சம்பாதிக்கிற தெனவு வந்திருச்சா “ அசோக்கின் கன்னத்தை லேசாக கிள்ளினாள்.

“ முதல்ல அத பிரிச்சு பாரு , ரொம்ப சந்தோஷப்படுவ “

அசோக்கின் அம்மா ரேடியோவின் மீது சுத்தப்பட்டிருந்த ஜிகினா தாளை மெல்ல உருவினாள் , ஜிகினா தாள் உருவப்பட உள்ளிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு புதிய ரேடியோ பெட்டி எதிர்ப்பட்டது . அதன் பொத்தான்கள் பற்களை காட்டி சிரிப்பதை போல துருத்திக்கொண்டு நின்றன.

அசோக்கின் அம்மா முகத்தில் எந்த ஒரு சலனமும் காட்டாமல் “ என்னப்பா இது ரேடியோ வா ? “ என்றாள்.

அம்மாவின் சலனமற்ற முகத்தால் ஏமாற்றமடைந்த அசோக் அவள் கண்களை பார்த்தபடி “ ஆமாம் அம்மா , உனக்கு தான் “ என்றான்.

அவனது பதிலில் துணுக்குற்றவளாக , “ எனக்குதான் ரேடியோ இருக்கே , பின்னே எதுக்கு இது , எனக்கு இதப்பாத்தா சுத்தமா பிடிக்கலப்பா , நீயே வச்சுக்க “ என்று சொல்லி திருப்பிக்கொடுத்தாள்.

அசோக் அவசரமாக “ அம்மா , இது புது மாடல்மா , இப்போ தான் கடைக்கு வந்திருக்கு , உன் ரேடியோ தான் பழசாயிடுச்சு இல்லை , அதான் வாங்கிட்டு வந்தேன் , இத வச்சிக்கோம்மா “ என்று அவள் கைகளில் திணித்தான்.

அந்த ரேடியோவை வாங்க மறுப்பவளாக

“ இங்க பாரு அசோக், அம்மாவும்தான் பழசாயிட்டேன் , அதனால் என்ன தூக்கி எறிஞ்சிட்டு புதுசா யாரையாவது தூக்கிட்டு வந்து வச்சிப்பியா. இது உனக்கு தான்யா ரேடியோ எனக்கு உசுரு. இத்தன வருஷம் என்ன நோய் நொடியில்லாம பாத்துக்கிட்டது நீயோ , உங்க அப்பனோ இல்லப்பா இந்த ரெடியோதான். தாய் வீட்டு சீதனமா எங்க அம்மா எனக்கு கொடுத்தது இது. இத்தன வருஷ்த்துள்ள ஒரு தடவக்கூட என் பொறந்த வீட்டு நெனப்பு வராம பாத்துக்கிட்டதுப்பா இது. உன்னோட கல்யாணத்தன்னிக்கு உனக்கு சீதனமா கொடுக்கலாம்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன் . இப்படி எந்தலையில குண்டத் தூக்கி போடுறியே “ அவள் குரல் உடைந்தது.

அசோக் தன் மடத்தனத்தை எண்ணி மனதுக்குள் விம்மினான். எத்தனை வருடங்களாக இந்த ரேடியோ தன் வீட்டு சுவற்றில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அந்த இடத்தில் இந்த புதிய ரேடியோவை பொருத்திப்பார்க்க மனம் கூசியது. எப்படி இதை செய்ய துணிந்தேன் என தன்னைத்தானே திட்டிக்கொண்டு நிமிர்ந்து தன் அம்மாவை பார்த்தான். அவள் சேலையை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு பின் வாசலை நோக்கி சென்றுக்கொண்டிருந்தாள். இவன் வாங்கி வந்த புதிய ரேடியோ திண்ணையில் சாய்ந்து கிடந்தது. பின்னணியில் கரகரத்த குரலில் “ வணக்கம் இன்றைய வானிலை அறிக்கை. தமிழகத்தில் ஆங்காங்கே மேகம்………… “ என அம்மாவின் அந்த பழைய ரேடியோ சொல்லிக்கொண்டிருந்தது.

– ஏப்ரல் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *