தாய்மையின் தாகம்……!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 11,554 
 
 

வீதி உலா சுற்றி வந்து களைத்த சூரியன் அலுப்புத் தீர கடலுள் முங்கிக் குளிப்பதை வெட்கப் புன்னகையில் பட்டு மேகங்கள் கன்னம் சிவக்கக் கண்டு மயங்கிக் கொண்டிருக்கும் அந்தி சாயும் மாலை நேரம்.

அந்த ரம்மியமான மாலைக் காட்சியைத் தன் வீட்டு பால்கனியில் நின்று கொண்டு ரசித்துக் கொண்டிருந்த உமாவின் கவனத்தை கீழே விளையாட்டுத் திடலில் இருக்கும் ஊஞ்சல்களிலும் சறுக்கலிலும் ஆரவாரமாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் தங்கள் பக்கமாக இழுத்தனர்.

இயற்கையோடு இணைந்திருந்த மனம் திரும்பி கீழே விளையாடும் குழந்தைகளை வேடிக்கை பார்க்க, அது ஆலமரத்தில் கீச் கீச் கீச் சென்று ஆலோலம் பாடும் பச்சைக் கிளிகளின் கூட்டத்தை நினைவு படுத்தியது…கீழே…குதூகலமாக ஓடியாடிக் கொண்டிருக்கும் எல்லாக் குழந்தைகளையும் தன் குழந்தைகளாகவே பாவித்து ரசித்தபடி வேடிக்கைப் பார்க்கலானாள் உமா. இதுவே அவளின் இதயத்தை இயங்கச் செய்யும் மின்னோட்டம் போன்ற ஆத்மீக விஷயம் . அந்தக் குடியிருப்பில் இருக்கும் மொத்தம் பன்னிரண்டு வீடுகளிலும் வீட்டுக்குவீடு ஒன்றும் இரண்டுமாக பதினெட்டுக் குழந்தைகள். மற்றவர்களை அரவிந்தம்மா,ப்ரியாம்மா, கார்த்தியம்மா,கிரிஜாம்மா….. என்று அந்தந்த பிள்ளைகளின் பெயரிலேயே அம்மாவாக அழைத்தாலும் தான் மட்டும் தனித்துவ பாசத்தோடு அவர்களுக்கு “உமா ஆன்ட்டி” தான்,

பால்கனியிலிருந்து கீழே பார்க்கையில், தூரத்தில் சிதறிப் பறக்கும் பட்டாம்பூச்சிகளாக விளையாடும் குழந்தைகளை …ஏய்…ஸ்ரையா…..ஊஞ்சலை வேகமா ஆட்டாதே……ப்ரியாக்குட்டி பயப்படுவா…… பாரு….டேய்….அர்விந்த்…கொஞ்சம் அபியைப் பார்த்துக்கோ….விழுந்துடப் போறா….என்று தாய்மை உணர்வோடு அங்கிருந்தபடியே கண்காணித்தபடியே தான் பார்த்துக் கொண்டிருப்பதை அவர்களுக்கு உணர்த்துவாள்..

உமாவுக்கு அங்கிருக்கும் அத்தனைக் குழந்தைகளைக் கவரும் எல்லா விஷயங்களும் அத்துப்படி. அன்பை விதைத்து அன்பை அறுவடை செய்யத் தெரிந்தவள். அவளது இந்த குணத்தினால் எந்தப் பிள்ளையும் உமாவிடம் மிகவும் பாசத்தோடு ஒட்டிக் கொள்ளும். சமயங்களில் தானும் குழந்தைகளோடு குழந்தையாக மாறிக் கலந்து போவாள். அந்த நேரம் மட்டும் அந்த நாளின் பொன்னான நேரமாகத் தோன்றும் அவளுக்கு.

மெல்ல இருள ஆரம்பிக்கவும், ஒவ்வொரு வீட்டு பால்கனி வழியாக அவரவர் குழந்தைகளை அழைக்கவும் ”இதோ…வந்துட்டேன்மா.”…என்று ஒவ்வொண்ணா… ஊஞ்சலை, சறுக்கலை விட்டு இறங்க மனசில்லாமல் .கிளம்ப …இத்தனை நேரம் சந்தோஷமாக ஆடிக் கொண்டிருந்த ஊஞ்சல் சோகத்தில் ஆடியாடி அசைவற்று நின்றதைப் பார்க்க பிரயாணிகளை ஏற்றிக் செல்லும் ரயில், ஸ்டேஷனை விட்டுக் கிளம்பிச் சென்றதும் இருக்கும் வெறிச்சோடிய நிலைமையை அவளுக்கு உணர்த்தியது.

அப்போது…. கைபேசி அழைப்பு மணி உள்ளிருந்து ஒலிக்க…யாராயிருக்கும்….? என்று எடுத்தவள்….அட ராஜுண்ணா…..என்ற ஆச்சரியத்துடன்….
அண்ணாவோட பேசி…. எத்தனை நாளாச்சு..நினைத்தபடியே….

“சொல்லுங்கோண்ணா……எல்லாரும் எப்படி இருக்கேள்…? சௌக்கியமா…?
………..
நான் நன்னா இருக்கேண்ணா…..சொல்லுங்கோ…என்ன விஷயம்…..? கேட்கிறது….சொல்லுங்கோ என்றாள்…

பொறு…..பொறு….இதோ…உன் மன்னி சொல்லுவா……

கைபேசி கைமாற…..அந்த அவகாசத்தில் ….என்னாயிருக்கும்……..என்னும் நினைவோடு…

மன்னி…சௌக்கியமா? திவ்யா எப்டி இருக்கா…? அவளுக்கு ரிசல்ட் வந்தாச்சா?

திவ்யா நன்னாருக்கா .உமா….நாளைக்குத் தான் அவளோட ரிசல்ட் வரும்….ஒரு முக்கியமான விஷயம்.நீ உடனே லீவு போட்டுட்டு கிளம்பி வா…
என்ன மன்னி….என்ன விஷயம்…..? யாருக்கு என்ன…?

அதெல்லாம் ஒண்ணுமில்லை..அது… வந்து….உனக்கு இங்க ஒரு வரன் பார்த்திருக்கோம்…..நமக்கேத்த வரன் தான். இந்த முறை…ஜாதகம்….தோஷம்…
பரிகாரம்…இதெல்லாம் பத்தி நீ கவலைப் படாதே….அவர் எனக்கு தூரத்து சொந்தம் தான். இந்தியன் பாங்கில் மேனேஜரா வேலை பார்க்கிறார். ஆனா ஒண்ணு….விடோயர்….மனைவி தவறிப்போய் ஆறு வருஷமாச்சு ….. பத்து வயசில் நித்யா ன்னு ஒரு பொண்ணு இருக்கா .. . நாங்க யோசிச்சு பார்த்து தான் இந்த முடிவுக்கு வந்தோம். இனிமேல் உன் முடிவு தான் முக்கியம்.

நீயும் எத்தனை நாள் தான் இப்படியே தனி மரமாய் இருப்பே….உனக்குன்னு சொல்லிக்க ஒரு குடும்பம் வேண்டாமா..? இந்த விஷயத்தில் நீயும் அறிவுபூர்வமா முடிவு எடுப்பேன்னு நான் நம்பறேன். காலம் எவ்வளவோ மாறிப் போச்சு….நம்ப அம்மா இருந்திருந்தாக் கூட இந்த முடிவை ஏத்துண்டிருப்பாள்………நீ உடனே கிளம்பி வா…மேற்கொண்டு என்னவோ அத நேர்ல பேசிக்கலாம்.

மன்னி பேசி முடிக்க உமாவுக்கு மூச்சு வாங்கியது…..

சரி…..மன்னி..நேக்கு ஒரு ரெண்டு நாள் யோசிக்க டைம் கொடுங்கோ …லீவு சொல்லிட்டு கிளம்பி வரேன்….சரியா மன்னி…உங்கள் மேல நேக்கு நம்பிக்கை இருக்கு…

கண்டிப்பா வா…அவர் உன் போட்டோவைப் பார்த்தே சம்மதம் சொல்லியாச்சு..சீக்கிரம் கிளம்பி வா…என்ன…அப்ப நான் போனை வெச்சுடவா…என்ற படி கைபேசி அணைந்தது.

உமாவுக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம் தான். இருந்து என்ன…பிரயோஜனம்…? தனக்கு ஜாதகத்தில் கடுமையான தோஷம் இருப்பதாகச் சொல்லி ஜோசியர்கள் சொன்ன அத்தனைப் பரிகாரங்கள் செய்தும் கடைசியில் எதுவும் கூடி வராமல் காலம் கடந்து அவளது கல்யாணக் கனவு ஜாதகப்பொருத்தம் பார்த்ததோடு நின்று விட ,அதன் பின் விரக்தியில் அதுவும் பார்க்க ஆளில்லாமல் கல்யாண வயதும் தாண்டிச் சென்று கூடையில் விற்காத கத்திரிக்காயாகத் தங்கிப் போனாள். வயதும் முப்பத்தி எட்டைத்தாண்டி முதிர்கன்னி என்ற உயர்பதவிக்கு தள்ளி விட்டது..

அவளுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்ற குறையை விட தன்னை அம்மா என்று அழைக்க ஒரு குழந்தை இல்லையே என்ற குறை தான் வாட்டி எடுத்தது,. அதனாலேயே நிறைய குழந்தைகள் இருக்கும் இடத்தில் குடி இருக்க வேண்டும் என்ற ஆசையோடு விருகம்பாக்கம் “கோகுலம்” அப்பார்ட்மெண்டைத் தேர்ந்தெடுத்து தனக்கென ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவளின் மனதுக்கு இதம் அளிப்பது அங்கு வசிக்கும் குழந்தைகள் தான். எப்போதாவது தன்னை வந்து பார்க்கும் அண்ணா,மன்னி, குழந்தை திவ்யா மூவரும் காலம் செல்லச் செல்ல வருகை குறைந்து இப்போதெல்லாம் வெறும் வாரத்துக்கு ஒரு முறை கைபேசி குசலம் தான். அதுபோல் வந்த அழைப்பு தான் இதுவும். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக….!

வாசலில் அழைப்பு மணி….

பக்கத்துக்கு வீட்டு ப்ரியா தான் ஒரு கிண்ணத்தில் ஒரு பதார்த்தத்தை தந்து விட்டுப் உமா ஆன்ட்டி…”எங்கம்மா இதை உங்ககிட்ட தந்துட்டு வரச் சொன்னா …..

அப்டியா…இன்னைக்கு என்ன ஸ்பெஷல்…..கிண்ணத்தை வாங்கியவள்…”ம்ம்ம்ம்” என்று வாசனை பிடித்து “அம்மாக்கு தேங்க்ஸ் சொல்லு… ப்ரியா….குட் நைட்” .

குட் நைட் ஆன்ட்டி…சொல்லியபடியே சிட்டாகப் பறந்தாள் ப்ரியா.

இது போல் தான் ஸ்கூல் லீவு விட்டாப் போதும் பசங்க ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்து அட்டென்டென்ஸ் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.மழலைப் பட்டாளங்களின் சிரிப்பும் கும்மாளமும் தான்….இவள் .வீடே கல கலன்னு இருக்கும். சிலர் அவர்கள் வீட்டில் செய்த பலகாரத்தை ஆசையாகக் கொடுத்து விட்டுப் போவார்கள். உமா மனம் நெகிழ்ந்து தான் போவாள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அனுசரணையா இருக்காளே. இதுக்கும் கொடுத்து வெச்சுருக்கணும்ன்னு நினைத்துக் கொள்வாள்.

ஞாயிற்றுக்கிழமை எப்போடா…. வரும்னு அதற்காகவே காத்திருந்து…. இவள் வீடே கதியாகப் பாடப் புத்தகத்தையும் சுமந்து கொண்டு வந்து “உமான்ட்டி…. எனக்கு இதிலெல்லாம் சந்தேகம்….எங்க டீச்சர் சொல்லித் தந்தது புரியவே இல்லை….போன வாரம் நீங்க சொல்லித் தந்தது தான் எனக்கு இந்த வார பரிட்சையில் ஈஸியா இருந்தது நான் “குட்” வாங்கிருக்கேன் பாருங்கோ… என்று தான் பரீட்சை நோட்டை எடுத்து காண்பிக்கும் போது உமா அகமகிழ்ந்து போவாள்…குழந்தைகள் தன் பெயரில் வைத்திருக்கும் நம்பிக்கையை எண்ணி உருகுவாள்.”நோட்டை வாங்கி மார்க்கைப் பார்த்து, அட…வெரி குட் போட்டுருக்காளே.. ரஞ்சனி….நீ புத்திசாலி…என்று கட்டி கொள்வாள். குழந்தை மனதில் ஆஸ்கார் வாங்கிய பெருமிதம் தெரியும். இவளும் ஒவ்வொருத்தரின் தனித்திறமையை வெளிக் கொணர்ந்து ரசித்து மனசாரப் பாராட்டி உற்சாகப் படுத்துவாள்..

நித்யா….” நீ ரொம்ப நல்லாப் பாடறியே…அம்மாட்ட சொல்லி சூப்பர் சிங்கர்ல பாட ஏற்பாடு செய்யச் சொல்லேன். நீ மட்டும் போட்டியில் கலந்துண்டா….. உனக்குத் தான் முதல் பரிசு” என்று உற்சாகமாகச் சொல்லுவாள்.

நித்யாவும் உடனே தனக்குத் தெரிந்த புதுப் பாடல்களை அழகாகப் பாடிக் காண்பிப்பாள். எல்லாக் குழந்தைகளும் நித்யாவின் பாடலைக் கேட்டு கைதட்டி ஆரவாரப் படுத்திப் பாராட்டும்போது நித்யா கண்களில் ஒரு புத்தொளி தெரிவதைப் பார்த்துப் உமா பெருமிதப்படுவாள்.

இங்கே…கணக்கில் புலி யாரு….? வேற யாரு ? இதோ…நம்ப கார்த்திக் தான்..டேய் கார்த்தி… “மாத்ஸ்” ல உன்னை அடிச்சுக்க யாராலயும் முடியாது…. என்று பெருமையாக சொல்லி யாருக்கு என்ன டவுட் இருந்தாலும் அவன்கிட்ட கேட்டுக்கங்க…கணக்குத் தெரியாமல் பூனைக்குட்டியா…. இருக்கறவாளைக் கூட கணக்கில் புலிக்குட்டியா மாத்திடுவான் தெரியுமா? என்றதும் கார்த்தி பெரிய ஹீரோ ஸ்டைலில் புன்னகைப்பான்…அவன் மனத்தில் எண்கள் வந்து
விளையாடும்.

அர்விந்த்…நீ தான் இன்னைக்கு எங்க எல்லாரையும் சிரிக்க வைக்கணும் …எங்கே….வடிவேலு மாதிரி மிமிக்க்ரி செய்து காட்டு பார்க்கலாம் , என்றதும்
அவனது தயக்கமில்லாத நடிப்பைப் பாராட்டி எப்டீடாக் கண்ணா …..என்று ஆச்சரியப்பட்டு ” நம்ம கோகுலத்தின் சிவகார்த்திகேயன்” என்ற பட்டதை அரவிந்துக்குக் கொடுக்கலாமா? என்று கேட்டதும் அனைவரும் ஏகமாக…..”வாவ்….வாவ்..” என்று சொல்லி ஹை ஃ ப்வை செய்ய அரவிந்தன் முகத்தில் ஆயிரம் மத்தாப்பு வெடிப்பொளி..

உமா ஆன்ட்டி….எங்கம்மாட்ட சொன்னேன் நாமெல்லாம் சேர்ந்து ராமாயணம் நாடகம் போடப் போறோம்னு..

அதுக்குள்ளே சொல்லிட்டியா..ஓட்டவாய்…ஓட்டவாய்….நான் தான் யாரையும்…தைப் பத்தி மூச்சு விடவேண்டாம்னு …சஸ்பென்ஸ்னு சொல்லிருந்தேனே……டிராமா போடும் நாள் முடிவானதும் சொல்லிக்கலாம்னு….. அதுக்கு முன்னாடி சரியான முந்திரிக்கொட்டைடா …நீ…உளறிட்டியா…சரி பரவாயில்லை….என்ன சொன்னா உங்கம்மா……..?

அதுல நீ என்ன வேஷத்துல நடிக்கிறேன்னு கேட்டா……..அர்விந்த் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

வாசலில் எதோ சத்தம் கேட்க….இரு….யாருன்னு பார்க்கலாம்….சொல்லிண்டே கதவைத் திறக்க அரவிந்தம்மா வாசலில்….அடுத்த வீட்டுப் ப்ரியாம்மாவோடு சத்தமாகப் பேசிக் கொண்டிருப்பது கேட்டு “வாங்க….வாங்க…அரவிந்த் இங்க தான் இருக்கான்…..உள்ள வாங்கோ என்று அழைக்கவும்….”

உங்களைத்தான் பார்க்க வந்தேன்…..என்னமோ ராமாயணத்தை நாடகமாப் போடப்போறதா நேத்து சொன்னான்……என்னைக்கு நாடகம்..?

ம்ம்…ஆமாமாமாம்…..இந்த விநாயகர் சதுர்த்திக்குத் போடலாம்னு…அதுக்காகத் தான் ஒத்திகை பார்க்க ஆரம்பிக்கலாம்னு…

ஒ…..ஹோ……அதுல அரவிந்துக்கு இராவணன் வேஷமாமே…..? அந்த வேஷத்தில் அவன் நடிக்க மாட்டான்..வேணா ராமனா நடிக்க வைக்கறது தானே….?
குரலே என்னமோ மாதிரி கேட்டது உமாவுக்கு…அருகில் நின்றிருந்த அரவிந்துக்குத் தான் ஏதோ ஒரு குற்ற உணர்வில் குறுகிப் போய் முகத்தை மறைத்துக் கொண்டான்.அதற்குள் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களும் மெல்ல வந்து கூட்டாக நின்று கொண்டிருந்தனர்.

அதில் கார்த்தியோட அம்மா…அதானே நானும் வந்து கேட்கனும்னு நினைச்சேன்…என் மகன் கார்த்தி என்ன குரங்கு மாதிரியா இருக்கான் அவனுக்கு அனுமார் வேஷமாம்…..சொன்னதும் நான் எவ்ளோ வேதனைப்பட்டேன் தெரியுமா? இங்க இப்படி ஒரு நாடகம் போடலைன்னு யார் அழுதாளாம்…? நாங்க கேட்டோமா? என்று ஒத்துப் பாட..

அதில்லைங்க…முதல்ல புரிஞ்சுக்கோங்க குழந்தைகளுக்கு ஒரு ஆர்வம்…அதிலும் ஒரு இதிகாசக் கதையை நாடகமாப் போடும்போது அவர்களின் நடிக்கும் ஆர்வத்தால் அந்த ராமாயணமே அவர்கள் மனதில் பதியுமேன்னு தான்……இதுக்குப் போய் இவ்ளோ டென்ஷன் ஆனா எப்படி? அர்விந்த் உடல்வாகு ராவணனுக்குப் பொருத்தமா இருக்கு…. அதே போலத் தான் கார்த்தியும் கொஞ்சம் குள்ளமா இருக்கறதா வெச்சு அவனுக்கு ஆஞ்சநேயர் வேஷம்…இந்த வேஷத்தை அவாவாளே தான் தேர்ந்தெடுத்து இந்த வேஷத்தில் நடிக்கறேன்னு சொன்னதால…தான்…..

உமா பேச்சை முடிக்க வில்லை…அதற்குள் …என்னது…? அரவிந்த் சின்னப் பையன், அவனுக்கு இராவணனைப் பத்தி என்ன தெரியும்..?
என் மகனை கடோத்கஜன் ன்னு சொல்லாமல் சொல்றேள் நீங்க….என்னமோ நீங்க தான் சமைச்சுப் போட்டா மாதிரி……தினம் நான் தலையால காலால அடிச்சுப்பேன்.,.எங்கியும் போகாமல் வீட்டுல கெடடான்னு…கேட்க மாட்டான்…இப்பப் பாரு….உமா ஆன்ட்டி…உமா ஆன்ட்டி…ன்னு கிளம்புவான்…இப்போ என்னாச்சு…..அவன ராவணனா…வில்லனா…. ஆக்கி நிக்க வெச்சுருக்கும் அழகை…! என்று வந்தது சண்டை இறக்கடி கூடையை என்பது போல….மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டபடி…..நீங்களும் உங்க நாடகமும் என்று அருகில் நின்றிருந்த அரவிந்தனை கோபமாகப் பார்த்தபடி கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஏதேதோ சொல்லிக் கொண்டே தர தரவென்று “இனிமேல்…டிராமா….அது …இதுன்னு சொல்லிண்டு வெளில போ…காலை ஒடிக்கிறேன்…..” அதட்டியபடியே ஆட்டை இழுத்துக் கொண்டு போவது போல் சென்றாள். உமா செய்த எந்த நல்ல விஷயமும் அவர்கள் மனதில் நிற்காமல் போனது, ஆச்சரியம் தான்.தன்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்லும் அவன் முகத்தில் “என்னை மன்னிச்சுக்கோங்கோ ” என் கெஞ்சிய தோரணை தெரிந்தது. சிறிது நேரத்திற்கு முன்னால் இருந்த ஒளி மறைந்து அப்படியே கருத்துப் போனதை எண்ணி உமா வருத்தப் பட்டாள். ச்சே…..என்னதிது கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாமல்…நடந்து கொள்கிறாள் இவள்.. எல்லாரும் ராமாயணத்தை நாடகமாப் போட்டால் எல்லாரும் ராமனாகவும் சீதையாகவும் தான் நடிக்க வேண்டுமா என்ன? ராவணன் இல்லாமல், அனுமாரின்றி ராமன் மட்டும் நடிக்கும் இராமாயணமா? இதென்ன புது குழப்பம்..? அந்தத் தாயிடம் ஒரு சுயநலம் தெரிந்தது.

கூடவே நின்றிருந்த கார்த்தியம்மா …..”அட…..கார்த்தி நீயும் ஆஞ்சநேயரா நடிக்க வேண்டாம்.,….ஒரு ராமன் இல்லாட்டா லக்ஷ்மணன் வேஷம் கூடவா இல்லை உனக்கு……..அனுமாராம்….அனுமார்….யாருக்கு வேணும்..? என்று நொடித்துக் கொண்டே கார்த்தியின் கையை தர தரவென இழுத்தபடியே…என்னவோ சொல்லியப்படியே அவன் முதுகில் ஒன்று வைத்து கூட்டிச் சென்றாள். ஒருத்தரைப் பார்த்து இன்னொருத்தர் என்று சங்கிலித் தொடர்போல் அவரவர் பிள்ளைகளை அழைத்துச் செல்ல…பக்கத்து வீட்டு ராக்கேஷம்மா…..நீங்க ….என் பையனை ராமனாக போட்ருக்கீங்க இல்லையா அதுல தான் இவங்களுக்கெல்லாம் ஒரே கோபம்….பொறாமை…என்று நேரம் காலம் தெரியாமல் சொல்லித் தொலைக்க…..வந்தது வினை…

நாக்கை அளந்து பேசு….வாய்க்கு வந்ததெல்லாம் பேசக் கூடாது….உன் பிள்ளை ராமனா இருந்தா என்ன இராவணனா இருந்தா எனக்கென்ன அவன் பெரிய இவன் பாரு…அவனைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா என்று குப்பையைக் கொட்டுவது போல் டப் டப் பென்று வார்த்தைகளால் படார் படார் என்று சுட்டுத் தள்ள. இதற்கும் மேல் அங்கு கதவைத் திறந்து கொண்டு நிற்க முடியாமல்…..” ப்ளீஸ்….விடுங்க…..நாமெல்லாருமே…. படிச்சவங்க….நாடகமும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.,…ராவணனாக, அனுமாராக யார் நடிப்பது என்று நமக்குள் சண்டை எதற்கு ? பிள்ளைகளின் இனிய பொழுது போக்கைத் தடுப்பவர் நீங்க தான்….தாய்மார்களா ? எல்லாம் கான்செல்…ப்ளீஸ்…ஆளை விடுங்க…” என்று சொல்லி உள்ளே சென்று விட்டாள். வெளி மழை விட்டாலும் செடி மழை விடாது என்பது போல உமாவின் மனம் அழுதது.

வெளியில் ஒருவர் முகத்தில் ஒருவர் அமிலத்தை அள்ளி வீசுவது போல வார்த்தைகளை வீசிக் கொண்டிருந்ததனர் . தங்கள் குழந்தை தான் உசத்தி என்ற எண்ணத்தில் ஆக்ரோஷமாக வந்து விழுந்தது வார்த்தைகள். இத்தனைக்கும் எல்லோரும் படித்தவர்கள் தான் இருந்தும் அவரவர் குழந்தைகள் என்று வந்ததும் போட்டியும்…சுயநலமும் மட்டும் முன்னுக்கு நிற்பதாகத் தெரிந்தது இவளுக்கு.

பாவம் குழந்தைகள்….. நேற்று தான் இராமாயணத்தில் தாங்கள் பேச வேண்டிய வசனங்களை ஆசையாசையாக மனப்பாடம் செய்ய ஆரம்பித்தனர். அதை நினைக்க மிகுந்த வருத்தம் உண்டானது உமாவுக்கு. என்ன பெற்றவர்கள் இவர்கள்…குழந்தைகள் உலகம் தனி என்பதைக் கூடப் புரிந்து கொள்ள இயலாமல்…தங்களோட ஆசாபாசத்தை மட்டும் பெரிதாக நினைத்துக் கொண்டு…. என்று மனதோடு சலித்துக் கொண்டாள். எல்லோருமே பல்லக்கில் ஏறணும் என்றால் பல்லக்கைத் தூக்க யார் முன்னுக்கு வருவார்கள்….? அப்போ பல்லக்குக்கு அங்கு என்ன வேலை இருக்கும்….? நின்ன இடத்தில் நிக்க வேண்டியது தான் பல்லக்கும்….. ஏறியவனும்…! என்னவோ பண்ணட்டும்…எத்தனை மாதங்கள்….வளர்த்துக் கொண்டு வந்த அன்புப் பாலம் ஒரே நாளில் உடைந்த பாலமானது போல் மனம் கனத்தது. முன்பெல்லாம் அவர்களே அவர்கள் குழந்தைகளிடம் ” போய் உமா ஆன்ட்டி வீட்டில் விளையாடு…” …உமா ஆன்ட்டி கிட்ட போய் பாடம் படி. அங்கே இரேன்…நான் கடைக்கு போயிடு வர வரைக்கும்…..ஆன்ட்டிகிட்ட கேட்டு ஹோம்வொர்க் முடிச்சுக்கோ…..என்றெல்லாம் சொன்னவர்கள்…..தானே இவர்கள்….அப்போ மட்டும் உமா ஆன்ட்டி தேவையா ? இப்போ நாடக விஷயத்தில் அவள் விரோதியா ? என்ன மனசோ…பெண்கள் மனசு…!

இந்த நிகழ்வின் எதிரொலியாக…அடுத்த நாளில் இருந்து குழந்தைகள் வருவது , பேசுவது..ஏன் பார்ப்பதற்குக் கூட அங்கே 144 தடை விதித்தது போலத் தெரிந்தது.

அரவிந்த், கார்த்தி, ப்ரியா,நிஷா,.வித்யா அனைவரும் அவரவர் வீட்டில் தனது அம்மாவிடம் அன்று இரவே “ஏன்..உமா ஆன்ட்டியோட சண்டை போட்டே என்று சாப்பிடாமல் இருந்து, பேசாமல் அழிச்சாட்டியம் செய்தது கூட உமாவின் காதில் விழுந்தது. அதனால் கோபித்துக் கொண்ட அவர்கள் ஏதேதோ நினைத்துக் கொண்டு உமா வேலைக்குச் சென்றதும் கூட்டம் போட்டுப் பேசுவதும் அரசல் புரசலாக காதில் விழுந்த வண்ணம் தான் இருந்தது. இதையெல்லாம் கேள்விப்பட்டவளின் இதயம் வெய்யிலில் அகப்பட்ட புழுவைப் போல துடித்தது.

குழந்தைகளைப் பெற்று விட்டதால் மட்டும் ஒருத்தி தாய்மை உணர்வு நிறைந்தவளாக இருக்க முடியாதோ…. பிள்ளைகள் பெற்றவள் வெறும் “அவளும் தாயாகிறாள்.”..என்கிற நிலை மட்டும் தானோ? தான் பெற்ற குழந்தையை பேணிக் காக்கும் போது அங்கே தாய்மையின் உணர்வையும் மீறி “தன் குழந்தை மட்டும் தான் அனைத்திலும் உயர்ந்தது….”… “நல்லவை எல்லாம் தான் பெற்ற பிள்ளைக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் ” என்ற சுயநல மிகுதியும் தான் தாய்மையா…? ஒவ்வொரு தாயிடமும் இது போன்ற உணர்வுகள் தான் மேலோங்கி நிற்குமா? புரியவில்லை அவளுக்கு.

காலையில் ஆபீசுக்கு வரும்போது நடந்த நிகழ்வு சட்டென நினைவுக்கு வந்து போனது.

முன்பெல்லாம் உமா ஆபீஸ் கிளம்பும்போது வாசலில் ஆன்ட்டிக்கு டாடா சொல்லு என்றவள் கூட இன்று குழந்தை இவள் முகத்தைப் பார்த்து விடுமோ என்ற எண்ணத்தில் திரும்பி நிற்பதைக் கண்டதும். ” என்னாச்சு இவர்களுக்கு…இப்படி நடந்து கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன தான் நடந்தது…..” தான் தாயாகாததால் தன்னிடம் தாய்மை உணர்வு இன்னதென்று அறிய முடியவில்லையோ? இன்னதென்று சொல்ல இயலாத மன உளைச்சலில் அந்த நாள் மனதளவில் நகராமல் நின்றது. பேசாமல் லீவு போட்டுட்டு ஊருக்குப் போகலாம் போலிருந்தது. ஒரே மனதாக பத்து நாட்கள் லீவு சொல்லிவிட்டு வந்து விட்டாள்.

மனதைக் குடைந்த கேள்விகளுக்கெல்லாம் அன்று மாலையே பதில் கிடைத்தது உமாவுக்கு.

“வந்ததுவும்…. போனதுவும்….
இமைப் பொழுதானாலும்
மனமிங்கு களவானதே….
கைதொழு நவநீதன்……”

ஜேசுதாஸின் குரலில் வீடு முழுதும் ஊத்துக்காடு நவநீதன் வந்து ஆக்ரமித்துக் கொண்ட சூழலில் கண்மூடி பாடலைக் கேட்டு ரசித்தபடி அமர்ந்தவளை…அழைப்பு மணி எழுப்பி விட பாடலை நிறுத்தி விட்டு கதவைத் திறந்தாள்….

“வாங்கோ…வாங்கோ…..நீங்கள் எல்லாரும் வருவீங்கன்னு தெரியும்….”
வந்தவர்கள் வேறு யாருமில்லை……அரவிந்தம்மா,ப்ரியாம்மா,கார்த்திம்மா…..வித்யாம்மா,,,மற்றும் சிலர்….வந்ததும்….இறுகிக் கிடந்த முகத்தில் வலுக்கட்டாயமாக புகுத்திய புன்னகை ஒட்டமாட்டேன்…..போ…. என்று விலகித் தனியே நின்றது. அவரது கடு கடு முகங்கள் உமாவின் நெஞ்சைக் கீறின.

அவரவர் குழந்தைகளை வைத்து நேற்று சண்டை போட்டுக் கொண்டவர்கள் இன்று ஒன்றாகக் கூடி வந்து ”தன் குழந்தைகளை தங்களிடமிருந்து பிரித்து விட்டதாக” உமாவிடம் குற்றம் சொல்ல வந்திருப்பது நெற்றியில் எழுதாமல் எழுதி ஒட்டியிருந்தது…..

“ஒண்ணு கூடீட்டாங்கய்யா…..!..ஒண்ணு கூடீட்டாங்கய்யா..! .இனிமேல் ஒண்ணாக் கூடிக் கும்மியடிச்சு தலை சீவி போட்டு வெக்காமப் போகமாட்டாங்கய்யா…….” என்று அரவிந்த் அப்பப்போ வடிவேலு மாதிரி மிமிக்க்ரி செய்து காட்டுவது சட்டென நினைவுக்கு வந்தது….உமாவுக்கு.

சொல்லுங்க…ஏன் ஒரு மாதிரியா இருக்கேள் எல்லாரும்….ஒரே நாளில் மாறுமா? என்ன விஷயமா…. இருந்தாலும் பரவாயில்லை..நான் உங்க பிள்ளைகளுக்கு ஆன்ட்டி..மாதிரி …. உங்களுக்கும் தோழி தான்… நீங்கள் திரண்டு என்கிட்டே சண்டைக்கு வந்திருக்கேள் ன்னு புரியறது….ஆனால் எனக்கு சண்டை போடத் தெரியாது ! போடவும் மாட்டேன்…. புரிஞ்சுக்கோங்க… அழுத்தமாகச் சொன்னாள்.

ஆனால் அங்கிருந்து வந்த பதில்கள் உமாவுக்கு அதிர்ச்சி தராமல் அவள் நெஞ்சில் பாலை வார்த்தன !

ரெண்டாவது நாளா பையன் சாப்பிட மாட்டேங்கறான்…வீட்டில் பேச மாட்டேங்கறான்….என் மேல கோபம்…உமா ஆன்ட்டி சொல்றது தான் சரி….என்று அடித்து பேசுகிறான்.இவன் மட்டும் தான் அப்படின்னு நினைச்சால் அனேகமா எல்லாரும் இப்படித் தான் இருக்காங்க….எங்களுக்கு ரொம்ப கவலையா இருக்கு.. எங்க குழந்தைகள் எங்க பேச்சை இதுவரை தட்டியதே இல்லை….இப்போல்லாம் தான் இப்படி….நீங்கள் வந்ததற்குப் பிறகு…என்று மென்று முழுங்கினார்கள்.

உமாவின் முகம் புன்னகையாய் மலர்ந்த படியே…..இவ்ளோ தானா? நான் என்ன செய்யட்டும்…? என்று கேட்க…

இது போதாதா….எங்களுக்கு…என்று சற்று எரிச்சலாகி சொல்கிறாள் அரவிந்தம்மா..

உங்கள் குழந்தைப் பாசம் உங்கள் கண்ணை மறைத்து நிற்கிறது….அதில் இருந்து கொஞ்சம் விலகி வாருங்கள்…உங்க பசங்க மனசிலேர்ந்து யோசியுங்க….என்றாள்.

எப்படி…..எப்படி….?

வாசலில் நிழலாடுகிறது….எட்டிப் பார்க்கிறாள்..அங்கு அரவிந்த் நிற்கிறான் கூடவே…அபிலாஷும்….

டேய்..அர்விந்த்.,..அபிலாஷ் இங்க வாங்க ரெண்டு பேரும் …அழைத்ததும் தயங்கியபடியே வந்தவர்களிடம்…

உன் அம்மா பேர் சொல்லு அர்விந்த் என்று கேட்க…

“காயத்ரி” என்று பட்டெனச் சொல்லிக் கொண்டே தன் அம்மாவிடம் ஒட்டிக் கொண்டு நிற்கும் மகனை…கட்டி அணைத்துக் கொள்கிறாள் அரவிந்தம்மா..

இப்போப் புரியுதா….இங்க உங்க பேரு யாருக்காவது தெரியுமா? எல்லாருக்கும் அரவிந்தம்மா….கார்த்தியம்மா….ப்ரியாம்மா ன்னு தானே தெரியும்…..
ஆனால்….உங்க பையன் அம்மா என்றால்….”காயத்ரி” ன்னு பளிச்சுன்னு சொல்றானே….அந்த அம்மா என்கிற இடம்…அவன் மனசில் உங்களுக்கு மட்டும் தான் இருக்கு….நான் அவனுக்கு.. வெறும் “உமா ஆன்ட்டி” மட்டும் தான். அவரவர் குழந்தைகள் என்று வந்து விட்டால் எந்தத் தாயும் ஒரே மாதிரி சுயநலமாகத் தான் சிந்திக்க ஆரம்பித்து விடுகிறாள்.

உங்கள் குழந்தைகள் மேல் உங்களுக்கு ஆளுமை இருப்பது தப்பே இல்லை..அதே சமயம் நான் உங்கள் குழந்தைகளை உங்களிடம் இருந்து பிரித்து விடுவேன் என்று நினைப்பதும் முற்றிலும் சரியில்லை. சொல்லும்போது கண்கள் பனித்தது உமாவுக்கு.

அங்கு நிலவிய மௌனம்…அவர்கள் மனதுக்குள் பேசிக் கொண்டிருப்பதை சொன்னது.
பின்பு ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தது போல சாதாரணமாக தங்கள் ஆற்றாமையை பேசித் தீர்த்து விட்டு ஏதோ ஒரு நிம்மதியில் உமாவிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு கலைந்தார்கள்.

அவளை அவர்களுக்குப் புரிய வைக்க அவளுக்குச் சற்று இடைவெளி தேவைப்பட்டது. அவளது நிலை என்ன என்று இப்போது அவளுக்கும் புரிந்தது. தனக்கு இந்த சமுதாயத்தில் வாழ எது அவசியம் என்ற உண்மையும் புரிந்தது.

அன்றிரவு தன் அண்ணாவுக்கு போன் செய்து “அண்ணா நான் நாளைக்குக் கார்த்தால அங்க வந்துண்டிருக்கேன்…மன்னி அங்க இருந்தால் கொஞ்சம் கொடுங்கோளேன் என்று கேட்க….

மன்னி….நான் யோசிச்சேன்….நீங்க சொல்றபடி நாளைக்கு கார்த்தால கிளம்பறேன்…ஆபீசுக்கு லீவு சொல்லியாச்சு…நீங்களும் அண்ணாவும் பார்த்து செய்தால் சரி தான்…… என்று தகவல் சொல்லி….அடுத்த நாளே காலை திருச்சிக்கு பஸ்ஸேறி விட்டாள்.

மன்னியும், திவ்யாவும் இவள் வரவுக்காகக் காத்திருந்தவர்கள்…உமாவைக் கண்டதும் “அத்தை என்று ஓடி வந்து கட்டிக் கொண்ட திவ்யாவைக் கட்டி அணைத்தபடியே “மன்னி… திவ்யா நன்னா வளர்ந்துட்டாளே….” ன்னு சொல்ல…

“அத்தை வரா… ..அத்தை வராள்னு ஒரே குஷி….” பரீட்சை ரிசல்ட் கூட வந்தாச்சு…அந்த குஷி வேற…..கொஞ்ச நாள் அத்தை கூட போயி சென்னைல இருக்கேன்னு சொல்லிண்டு தான் இருந்தா…அதுக்குள்ளே தான் இந்த விஷயம்.நீயே வந்துட்டியே…பாசத்துடன் அண்ணி சொல்லும்போது மனதுக்கு இதமாக இருந்தது.

ஆட்டோவில் அத்தையின் அருகில் நெருங்கி அமர்ந்து தோளோடு தலை சாய்க்க, நல்ல அழகா இருக்கே நீ …..கண்ணம்மா…என்று அணைப்பை இறுக்கிக் கொள்ள …திடீரென வளர்ந்த பெண்ணுக்கு தாயானது போல ஒரு உணர்வில் மனம் பறந்தது உமாவுக்கு.எங்கு சென்றாலும் தான் தாயாகி விடுவதாகவே தோன்றியது அவளது உள்ளுணர்வுக்கு.

மனசுக்குள் மகிழ்ச்சி மின்னலாக வந்து சென்றது….அவள் பாதையிலும் புதிய திருப்பம்…..! “நித்யா” என்று ஒருமுறை மெளனமாக சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.அதிலும் தாய்மை நிறைந்திருந்தது.

அண்ணா வீட்டுக்குள் நுழைந்ததும் வீட்டு ஹாலில் மாட்டியிருந்த அன்னை தெரசாவின் படம் கண்ணில் பட….”தாய்மை என்னும் தெய்வீக உணர்வு தாயாவதை விடவும் புனிதமானது… உள்ளே வா….உமா .என்று அவளை ஓர் அன்னை அணைத்து அழைப்பது போலிருந்தது.” அந்தக் காருண்யப் பார்வை.

– 18 ஜூன், 2012

Print Friendly, PDF & Email

1 thought on “தாய்மையின் தாகம்……!

  1. அன்னையாவது திரேசாவாவது? அவளிடம் ஏது தாய்மை? அவள் ஒரு ஃபிராடு பொம்பளை. இன்டெர்னெட்டுல எல்லா விவரமும் கிடைக்கும். இந்தியாவைக் கெடுக்கணும்னு வந்தவ. ஓவரா விளம்பரம் பண்ணி நோபல் பட்டம் வாங்குனா அவள் நல்லவளாகிட முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *