கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 4,993 
 
 

சம்பந்தமூர்த்தி தெருவிலிருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு நடந்து போவது ஒண்ணும் சிரமமேயில்ல. மேல மாசி வீதியில் நுழைந்து , கோபால கொத்தன் தெருவில் புகுந்தால் கோயிலின் மேற்கு வாசல் கிட்டக்கதான். பாலு கூட இருந்தால் பேசிக்கொண்டே நடப்பதில் தூரமே தெரியாது .

முன்னெல்லாம் இருபது நிமிஷத்தில் போய்விடுவோம்.இப்போதோ நாப்பது நிமிஷமாகிறது. ஜனக்கூட்டம் பெருகிவிட்டதா அல்லது எங்களுக்கு வயசாச்சா , புரியவில்லை.

பாலு ஒண்டிக்கட்டை…..

சரஸ்வதியுடன் அதிக நாள் சேர்ந்து வாழ குடுத்து வைக்கவில்லை. சுயம்பாகம். என்னைத்தவிர, யாருடனும் வைத்துக்கொள்ள மாட்டான். சில நாள் திரும்பி வரும்போது வீட்டுக்கு வருவான்.மீனாட்சி குடுக்கும் காப்பியும் போண்டாவும் அமிர்தம் என்பான்.

இரண்டு பேரும் கோவிலைச் சுற்றி விட்டு பொற்றாமரைக் குளத்துப் படியில் உட்கார்ந்து விடுவோம்.

பாலுவுக்கு குறும்பு ஜாஸ்தி.

‌”அங்க பாரு! அந்த பையன் தினம் தினம் அதே இடத்ல உக்காந்து என்னமோ பலமா யோசிக்கறான்.நிச்சியம் காதல் தோல்வி…. , இல்லேன்னா வேல கிடக்கல!”

‌”அந்த மூணு பேரைப் பாரு! அப்பாவும் அம்மாவும் மாத்தி மாத்தி அவளுக்கு என்ன உபதேசம்?? பொண்ணு புருஷனோட கண்டிப்பா சண்ட போட்ருப்பா ”

‌இப்படி கற்பனையிலேயே கதை உருவாக்குவதில் மன்னன். இன்றைக்குக் கால் வலி வரவில்லை என்றான்.

நான் எப்போதும் கோவில் வாசலில் செருப்பை போடுவதில்லை. வெளியில் என்னுடய நண்பர் மொய்தீன் கடையில் தான் வைப்பது வழக்கம்….

அதற்கு ஒரு காரணமும் உண்டு.ஒரு வேளை கிழக்கு வாசல் வழியாக வெளியில் போனால் மறுநாள் வந்து எடுத்துக் கொள்வேன்.

ஒருசிலரைப் பார்த்திருக்கிறேன், கோவில் வாசலில் செருப்பை கழட்டி கையோடு கொண்டு வந்த பையில் போட்டுக் கொண்டு ….சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு…..ஒன்றுமே தெரியாத மாதிரி நடக்க ஆரம்பிப்பார்கள். அவ்வளவு சாமர்த்தியம்!

எங்கே விட்டேன் ? செருப்பை இல்லை, கதையை!!

சன்னிதி வாசலில் நுழையும் போது ஒரு குட்டிப் பயல் வேகமாய் ஓடி வந்து கீழே விழப் பார்த்தான். பின்னாலிருந்து இரண்டு மூன்று குரல்கள்……

…பாத்து கண்ணா ! ஓடாத……!!

திரும்பிப் பார்த்தேன். 60 , 50 களில் ஒரு தம்பதி. 30 , 25 களில் , மகனும் மருமகளாயிருக்கும் ! பார்த்தீர்களா பாலுவின் காத்து எனக்கும் அடித்து விட்டது.

அவர்களின் பின்னால் அவர்களை ஒட்டியும் ஒட்டாமலும் 80 வயசுகளில் நல்ல ஆரோக்யத்துடன் , அகலமான நெற்றி நிறைய பட்டை பட்டையாய் விபூதியுடன் நமது கதையின் நாயகன்.

அவர்களைப் பார்த்தால் உள்ளூர்காரர்களாய்த்தான் தெரிந்தது.

எல்லாருக்குமே நல்ல தாட்டியான சரீரம். மருமகளும் தாத்தாவும் மட்டும் டிரிம் ஆக இருந்தார்கள்.

நன்றாய் பேசி சிரித்துக் கொண்டே நடந்தார்கள். நேரே பிரகாரத்தை சுற்றி வந்து சுவாமி சன்னதிக்குள் நுழைந்தார்கள்.

முதலில் அம்மன் சன்னிதிக்கு செல்வதுதான் ஐதீகம்.

ஆனால் இவர்கள் சுவாமியை முதலில் தரிசிக்க ஏதாவது காரணம் இருக்கலாம்!!

கையில் இரண்டு அர்ச்சனை தட்டு.

ஒன்றில் பெரிய ரோஜா மாலை. அம்மனுக்காயிருக்கும். சுவாமிக்கு அர்ச்சனை பண்ணி விட்டு வெளிப்பிரகாரத்தில் வந்து நவக்கிரகத்தை சுற்ற ஆரம்பித்தார்கள்.

“Nine rounds Dev! என்று அம்மா குட்டிப்பயலைப் பார்த்து சொன்னாள். 1 ,2 என்று சொல்லிக்கொண்டே சுற்ற ஆரம்பித்தான். தாத்தா பையன்‌ பின்னாடியே போய்க் கொண்டிருந்தார்.

“அம்மா 9 over “என்றான் Dev.

“No one more ! “என்றாள் அம்மா ! “Look daddy , Amma doesn’t know to count “.

தாத்தா சிரித்துக் கொண்டார்.

பையனுடன் கால் தரையில் இருந்தால் தானே ! ஒரே ஓட்டம் தான்! முக்குருணி பிள்ளையாரின் வந்து தான் நின்றான்.

“Daddy big pillayar! I want கொழுக்கட்டை ! “என்றான்.

“இப்போ ஏதுடா கொழுக்கட்டை ? “என்றாள் தேவின் பாட்டி!

எல்லாருடய கண்களும் கலங்கியிருந்தது.

“போன வருஷம் பிள்ளையார் சதுர்த்திக்கு அப்பாவுடன் வந்து 108 கொழுக்கட்டை நைவைத்யம் பண்ணியதை மறக்க முடியுமா? ”

பெரியவர் ஆதங்கப்பட்டார்.

தள்ளி நின்று தாத்தாவும் கண் கலங்கினார்.

“நல்லா இருந்த மனுஷன் நிமிஷமாய்ப் போய்ட்டாரே”……

எல்லொருமே சில நிமிடங்கள் அமைதியாய் இருந்தார்கள்.

நேரே அர்ச்சனை சீட்டு வாங்கிக் கொண்டு அம்மன் சன்னிதிக்குள் நுழைந்தார்கள்.

அர்ச்சகர் தெரிந்தவர் தான் போல. வெள்ளிக்கிழமை , நாள் கிழமை இல்லாததால் அதிக கூட்டமில்லை.

“நமஸ்காரம் ! வீட்டில சுப சுவீகாரம் முடிந்து குடும்பத்துடன் கோயிலுக்கு வந்திருக்கோம். அப்பா தேவி பிரசாத் ஆத்ம சாந்திக்கும் குடும்ப ஷேமத்துக்கும் அர்ச்சனை பண்ணணும்.”

“பேரு , நட்சத்திரம் , கோத்ரம் சொல்லுங்கோ”

“பேரனுக்கு அப்பா பேரில் பாதி ! கொள்ளுப் பேரனுக்கு பாதி. பிரசாத் , தேவ் “என்றார் பெரியவர்.”

“என் பெயர் சுந்தரேசன் , நட்சத்திரம் அனுஷம் , ஆத்ரேய கோத்ரம் “

“சுந்தரேசன் நாமதேய…..”என்று அர்ச்சனையை தொடர்ந்தார் புரோகிதர்.

ஒரு நிமிஷம் தாத்தாவைக் காணம். கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்தார். கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. தேவி பிரசாத்துக்கு நெருங்கிய சினேகிதராயிருக்குமோ?

பாலு இன்னைக்குன்னு பார்த்து காலை வாரி விட்டு விட்டானே !

புரோகிதர் அர்ச்சனை முடிந்ததும் எல்லோருக்கும் பிரசாதம் கொடுத்தார்.

“தேவ்தான் தாத்தா தாத்தா என்று ரொம்ப அழறான் “என்றார் சுந்தரேசன்.

“அழாதேப்பா ! தாத்தா உன்னை விட்டு எங்கயும் போக மாட்டார். கூடவே இருந்து ஆசீர்வாதம் பண்ணுவார் “என்று கூறி பையன் நெற்றியில் குங்குமம் இட்டு விட்டார்.

எம்பி தாத்தாவைப் பார்த்தேன். முகம் மந்தகாசமாக மாறியது. இரண்டு கையையும் தூக்கி ஆசீர்வாதம் பண்ணுவது மாதிரி தோன்றியது. எல்லாம் முடித்துக் கொண்டு குளத்துப் படியில் உட்கார்ந்தார்கள்.

“எல்லாம் தாத்தா மனசு போல நன்றாய் நடந்தது. கொடுத்து வைத்தவர். ஒரு நாள் கூட உடம்புன்னு படுத்தாமல் யாருக்கும் தொந்தரவு தராமல் டக்னு போய்ட்டாரே! தேவை விட்டுட்டுப் போக எப்படித்தான் மனசு வந்ததோ “என்றான் பிரசாத்.

தாத்தா மேற்படியில் இவர்களுக்கு பின்னால் உட்கார்ந்திருந்தார். ஏதோ சொல்ல வந்தவர் போல் எனக்கு தோன்றியது.

அதற்குள் தேவ் ‘ போலாமா ….போலாமா’ என்று நச்சரிக்கவே கிளம்பி விட்டார்கள்.

நான் தெரியாதவர் பின்னாடியெல்லாம் இப்படி போனதேயில்லை. அந்த தாத்தா ஒரு ஆகர்ஷண சக்தி போல் இழுத்துக் கொண்டு போய் விட்டார்.

வெளியில் வந்ததும் அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். தாத்தா மட்டும் மிஸ்ஸிங்… எனக்கு நேரமாகிவிட்டது! வீட்டுக்கு நடையைக் கட்டினேன்.

மீனாட்சி சூடாக ஒரு காப்பி போட்டுக் கொண்டு வந்தாள். ராத்திரி முழுக்க தாத்தாவும் குட்டிப்பயலுமே கண் முன்னால் வந்து கொண்டிருந்தார்கள்.

மறுநாள் காலை பத்து மணி இருக்கும். மீனாட்சிக்கு நான் சும்மா அஞ்சு நிமிஷம் இருந்தால் பொறுக்காது.

அவள்தான் எப்போதுமே சுருசுருப்பாய் இருப்பது போலவும் நான் வெட்டியாய் பொழுதைக் கழிப்பது போலவும் மனசில் நினைப்பு. சும்மா விரட்டிக் கொண்டேயிருப்பாள். சரி அவளுடைய சந்தோஷத்தை கெடுப்பானேயென்று எந்த வேலை சொன்னாலும் சத்தம் போடாமல் செய்து விடுவேன்.

“பழய பேப்பர் கடையில் போட்டு மாசக்கணக்காச்சு! போய் கணபதியை கையோடு இழுத்துண்டு வரக்கூடாதா ?

பேப்பரெல்லாம் தூசி தட்டி அடுக்க ஆரம்பித்தேன்.

எனக்கு ஒரு பழக்கம் . பேப்பரில் முதலில் பார்ப்பது ‘ obituary ‘ தான். எனக்கு மட்டுமில்லை , நிறைய பேருக்கு இந்த பழக்கம் இருப்பதை பார்த்திருக்கிறேன். அதில் என் Photo வையும் பொருத்திப்பார்த்திருக்கிறேன்.

என்னுடைய சித்தி ஒருவர் தன்னுடைய photo ஒன்றை பையனிடம் கொடுத்து அதைத்தான் obituary யில் போடவேண்டுமென்று கண்டிப்பாய் சொல்லியிருக்காரென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.!!

பேப்பர் அடுக்கும் சாக்கில் , நடு நடுவில் கொஞ்சம் obituary பக்கத்தையும் பார்த்து வைத்தேன்.

திடீரென்று ஒரு photo வைப் பார்த்ததும் அப்படியே சர்வ நாடியும் ஒடுங்கி விட்டது.

“அதே புன்னகை தவழும் முகம். அகல நெற்றி . பட்டை பட்டையாய் திருநீறு. கோவிலில் பார்த்த அதே தாத்தா !

அவசரம் அவசரமாக பேரைப் பார்த்தேன்.

“We feel very sorry to inform the sudden demise of our beloved father Mr.Devi Prasad “…….

எனக்கு தலை சுற்றியது. ஒன்றுமே புரியவில்லை . தேதியைப் பார்த்தேன். சரியாக இன்றையிலிருந்து 15 நாள் முன்னாடி .

அப்போ நான் கோவிலில் பார்த்தது ????

அப்படியே பேப்பரை யெல்லாம் ஒதுக்கி வைத்தேன். சட்டையை மாட்டிக்கொண்டு கொண்டேன்.

“மீனாட்சி ! கொஞ்சம் தண்ணி குடு. அவசர வேலையாய் பாலு வீட்டுவரைக்கும் போய்ட்டுவந்துடறேன்…”

“இருங்க ! இப்போ என்ன பாலு ? ஒரு வேலையையாவது உருப்படியா முடிச்சோம்னு கிடையாது ….”இன்னும் ஏதேதோ அர்ச்சனை !!

பாலு ஏண்டா நீ நேற்றைக்கு கோவிலுக்கு வராமல் போனாய் ??

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *