தாத்தாவும் மற்றவைகளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2012
பார்வையிட்டோர்: 7,568 
 
 

மழை மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. வெளியில் போக முடியாது. ஏழாவது பேரன் அனுப்பியிருந்த “Bunnings ” என்று பெரிதாக எழுதிருந்த கனமான பெரிய குடையை முன்போல இலேசாகத் தூக்க முடிவதில்லை. மணியங் கடையில் வாங்கிய சின்னக் குடை ஒழுகும். சமாளித்து வெளிக்கிட்டாலும் எங்காவது விழுந்து வைக்காமல் திரும்பி வரவேணும். இல்லாவிட்டால் மனிசி திட்டும். “அப்பனே முருகா, பின்னேரத்துக்கிடையில மழையை நிப்பாட்டு” என்று வேண்டிக் கொண்டார்.

ரேடியோவைப் போட்டார். “புத்தூரைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தங்கராசா மரணமானார். அன்னார், …….” என்று உலகத்தில் உள்ள கால்வாசி நாடுகளில் உள்ள உறவினர்களின் பெயர்கள் வந்தது. இதில் வரும் பேரப்பிள்ளைகளின் பெயர்கள் வாயில் புகுவதில்லை. “நிமிஷன் , நமேஷன், வமிஷா, கநூஷா..” என்று இருந்தது.

காலமை சாப்பிட்ட தோசை இன்னும் செமிக்கவில்லை. மழைநாட்களில தப்பாது வீட்டு முற்றத்தில் தாவித்திரிகிற தவளைகளையும் காணவில்லை. வளவு முழுவதும் பரவியிருந்த ஈசல் செட்டைகள் முதல்நாள் பின்னேரத்தின் மழையிருட்டை ஞாபகப்படுத்தின. முதல்நாள், பின்னேரம் நாலு மணிவரை கொட்டுமழை. நாலு மணிக்குப்பிறகு ஒரே மழையிருட்டு.

மத்தியானமாகத் தூறல் நின்றுவிட்டது. குளிக்கவென்று கிணத்தடிக்குப் போனார். கிணற்றிற்குள் இருந்து தவளைக் கச்சேரி கேட்டது. “சே , இது வேறை ஒண்டு” என்று அலுத்துக் கொண்டார். துலா உடன் மல்லுக் கட்டி நாலு வாளி தண்ணீரில் குளித்து முடித்தார். மறக்காமல் திருநீறு பூசினார். மனிசி தட்டில் வைத்த சாப்பாட்டை “கப்சிப்” என்று விழுங்கினார். இந்நேரம் மனிசி “வாத”த்திற்கு எண்ணை பூசிவிட்டு கண்ணயர்ந்து இருக்கும். இப்போதெல்லாம் மத்தியானங்களில் அவரிற்கு நித்திரை வருவதில்லை.

பின்னேரம் வரை என்ன செய்வது என்று யோசித்தார். “கேற்”றைத் திறந்து வெளியில் நடந்தார். ஆளில்லாத நாலு வீடுகளைத் தாண்டியதும் பள்ளிக்கூடம் வந்தது. “playgrounds ” இனை ஒட்டியிருந்த மதிலில் இரண்டு முழங்கைகளையும் ஊன்றி தலையைக் கைகளில் முட்டுக் கொடுத்து , கிரிக்கெட், காற்பந்து என்று விளையாடும் சிறுவர்களைப் பார்த்தார். கொஞ்ச நேரந்தில் கால் மூட்டுக்களில் விண் விண் என்று வலி. தொடர்ந்து நிற்க முடியவில்லை. மனிசியிடம் “வாத” எண்ணை கொஞ்சம் கடன் வாங்கிப் பூச வேண்டும் என்று யோசித்தார். “உந்தப் பச்சை, சிவப்பு, கத்தரிப்பூக் கலர் எண்ணைகளை ஊத்திப் போட்டுக் கொஞ்சம் நட, எல்லாம் போய்விடும்” என்று மனுசிக்குக் கொடுத்த மருத்துவ அறிவுரைகள் திரும்பி விழும் என்பதில் சந்தேகம் இல்லை.

பள்ளிக்கூடத்தில் எதோ ஒரு பாடம் முடிந்து மணி அடிக்க நடக்கத் தொடங்கினார். இம்முறை சின்ன வைரவ கோவிற் பக்கம் போனார். ஒருவரும் இல்லை. முன்பெனில் குறைந்த பட்சம் வீட்டிற்குத் தெரியாமல் கள் அடித்துவிட்டு கள்மணம் “ஆறுமட்டும்” ஓய்வெடுக்கும் பேர்வழிகளாவது கோவிலிற்கு எதிரில் இருக்கும் ஒரு மரத்திற்குக் கீழ் இருப்பார்கள். இப்ப இலையான்கள், காகங்களுடன், மழை காலமென்பதால் நிறையத் தவளைகளும் தென்பட்டன. கலட்டிச் செடிகள் பூத்திருந்தன.நிறைய வண்ணாத்திப் பூச்சிகள் கண்ணுக்குப் பட்டன. கோயிலும் வெளிநாட்டுப் புண்ணியவான்களின் நன்கொடையில் பளிச் என்று பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. ஆனால் சின்ன மேளம், பெரிய மேளம், சேக்கஸ், இரண்டு மூன்று “லைற் மெசின் ” போட்டு கலர் “டியூப்” லைற் கட்டித் திருவிழா நடந்தது எல்லாம் பழைய காலம். ஒவ்வொரு திருவிழா முடியவும் இரண்டு மூன்று கல்யாணங்களும் , இன்னும் இரண்டு மூன்று காதல்களும் “செற்” ஆகும்.

மனதில் தோன்றிய வெறுமை முகத்தில் தெரியவில்லை. திருப்பி வீட்டை நோக்கி நடந்தார். வழியில் வந்த “வாசிக சாலை” யில் இருந்த வாங்கில் குந்தினார். அலுப்பாக முன்னால் மேசையில் இருந்த பேப்பர்களைப் பார்த்தார். “என்ன வரப்போகுது, களவு, கொள்ளை, கொலை, ஆட் கடத்தல், சினிமா நடிகைகளின் படங்கள்.’ என்று மனதிற்குள் அலுத்துக் கொண்டார்.எதிரில் வாங்கில் இருந்த செல்லையர் “வாங்கோ பெஞ்சனர்” என்று வரவேற்றார். இதில் “பெஞ்சனர்” என்பது ஒரு நக்கல். மாதமாதம் வெளிநாட்டில் இருந்து கொஞ்சம் காசு கைச்செலவுக்கு வருவதைத்தான் செல்லையர் குறிப்பிட்டார். செல்லையருக்கு மூத்த மகளும், கடைசி மகனும் மட்டும் நாட்டில். மிச்சப் பிள்ளைகள் வெளிநாட்டில்தான்.

பின்னேரமாக , பெரிய வேப்ப மரங்களும் பூவரச மரங்களும் நின்ற நீண்ட பாதையால் நடந்து, அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு “communication centre” இனை அடைந்தார்.

“என்ன அப்பு, இண்டைக்காவது லைன் கிடைக்குதா எண்டு பார்ப்பம்” என்று இவரைக் கேட்காமலே டெலிபோன் இனை அழுத்தத் தொடங்கினார், அங்கு வேலையில் இருந்தவர்.

“ஹலோ” என்று நித்திரைத் தூக்கத்தில் ஒரு குரல் ஒலித்தது.
“சுட்டி, நான் அப்புவடா” என்று ஆர்வத்தோடு சொன்னார். சின்ன மகனை “சுட்டி” என்றுதான் கூப்பிடுவார். இயற்பெயர், அந்த நாள் யாழ்ப்பாண ஸ்டைல் இல் “சிறிசற்குணநாதன்”

“அப்பு நான் இப்பதான் வேலையால வந்து நித்திரை கொள்ளத் தொடங்கின்னான், என்ன விஷயம் ” குரல் கொஞ்சம் எரிச்சலாக ஒலித்தது.

“இல்லை ,கன நாளா உன்ரை குரலைக் கேட்கவில்லை, அதுதான்……… ”

“அப்பு எனக்கு இப்ப நேரமில்லை, காசு ஏதும் தேவையே?” குரலில் விரைவாக ஆளைக் கழட்டிவிடும் அவசரம் தெரிந்தது.

அவரிற்கு தொடர்ந்தது ஒரு கிழமையாக டெலிபோன் எடுக்க முயற்சித்தது ஞாபகம் வந்தது. படக்கென்று லைனைத் துண்டித்தார்.

வீடு வரும்போது மத்தியானம் சாப்பிடவில்லை என்பதைவிட இனிமேல் மாதா மாதம் வரும் காசு நின்று விடுமோ என்ற பயம்தான் அவரின் முன்னே நின்றது.

– April 20, 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *