தாத்தாவின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 15, 2023
பார்வையிட்டோர்: 2,851 
 

பள்ளிக்கூட மணி அடிப்பதற்கு முன்பே, தாத்தாவின் வருகையை எதிர்பார்த்து வாசலை பார்க்கத் தொடங்கிவிடுவது வழக்கம். கேட்டை கடந்து வெளியே வரும்போது, இரண்டு பொட்டலங்களுடன் தாத்தா காத்திருப்பார். எப்போது வந்திருப்பார் என்று நாங்கள் கேட்டதே இல்லை. ஆனால் எல்லா நாட்களிலும் தாத்தா எங்களுக்கு முன் வந்து காத்திருப்பார். தினமும் காலை வீட்டிலிருந்து பள்ளியில் எம்.ஐ.டியில் டிராப் செய்வது அப்பாவின் வேலை என்றால், பள்ளியிலிருந்து எங்களை வீட்டுக்கு அழைத்து செல்வது தாத்தாவின் வேலை. சைக்கிள் கேரியரில் முதலில் என்னை தூக்கி அமரவைத்து, பின் அண்ணனை அமர வைப்பார்.

“குஞ்சுப் பையன். கீழ விழுந்திருவான். பெரிய பையன், நீ தான் பின்னாடி உக்காந்து புடிச்சுக்கனும்” அண்ணனிடம் சொல்வார். உண்மையில் எனக்கும் அண்ணனுக்கு ஒரு வயதுதான் வித்தியாசம். ஆனால் தாத்தாவை பொறுத்த வரை நான் குஞ்சுப் பையன், இன்றளவும்.

அப்போதே தாத்தாவிற்கு எழுபத்தைந்து வயதிற்கு மேல் இருக்கும். அவர் வாங்கி வரும் இரண்டு பொட்டலங்கள் தான் எல்லா எதிர்ப்பார்ப்புகளுக்கும் காரணமாய் இருந்திருக்க வேண்டும். அந்த பொட்டலங்களை பிரிக்கும் போது, அற்புத விளக்கை தேய்த்துவிட்டு ஜீனிக்காக காத்திருக்கும் அலாவுதீன் கணக்காக காத்திருப்பேன். கடலை பர்பி, வெண்ணை பிஸ்கட், க்ரீம் இல்லாத வித்தியாசமான ஏதோவொரு கிரீம் பிஸ்கட், தீனிகளின் பட்டியலுக்கு முடிவேயில்லை. இப்போது இத்தனை வருடங்கள் ஓடிவிட்ட பின், தொண்ணூற்றைந்து வயதை தொட்டுவிட்ட தாத்தா படுக்கையில் விழுந்துவிட்ட பின், தாத்தா எம்பது வயதிலும் எங்களுக்காக சைக்கிள் மிதித்திருக்கிறார் என்று எண்ணும் போது அவர் மீதான பாசம் அதிகமாகிறது.

தாத்தாவிற்கு ஏராளமான வேலைகள் இருந்திருக்கின்றன. அந்த வேலைகளுக்கு மத்தியில் தான் பள்ளிக்கு வந்து எங்களை அழைத்துச் சென்றிருக்கிறார். தொண்ணூற்றி நாலு வயது வரை அவர் ஏதோ வேலை செய்து கொண்டே இருந்தார். கடந்த ஒரு வருடமாக தான் அவருடைய நடமாட்டம் குறைந்துவிட்டது. அப்படியும் தன் வேலைகளை தானே செய்து கொள்வார். அவருக்கு தினமும் சவரம் செய்துக் கொள்ள வேண்டும்.

“நான் மிலிட்டரிகாரன்டா. தினைக்கும் ஷேவ் பண்ணி பழகிடுச்சு” என்பார்.

நான் இரவு தாமதாமாக உறங்கினாலோ, பகலில் தாமதமாக எழுந்தாலோ “லைப்ல டிசிப்ளின் இருக்கணும். டைமுக்கு தூங்கி டைமுக்கு எழுந்திருக்கணும்” என்றுக் கடிந்துக் கொள்வார். மற்றபடி தாத்தா எனக்கு நெருங்கிய நண்பர். நான் ஏதேதோ படித்தேன். செலவு செய்ய முடியாத அளவிற்கு சம்பாதித்தேன். இன்று ‘சினிமா சினிமா’ என்று சம்பத்திக்காமல் சுற்றிகொண்டிருந்தாலும், போகிற போக்கில் பலரும் என்னை ‘பைத்தியக்காரன்’ என்று சொன்னாலும், தாத்தா மட்டும் “புடிச்சத செய், எல்லாம் ஜெயம்” என்று சொல்வார். இதை என்னிடம் பல முறை மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார். அவர் சொல்லும்போதேல்லாம், அவருக்கும் எனக்குமான நெருக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. படுக்கையை விட்டு எழ முடியாத, வாய் குழறி பேசும் இந்த தருவாயிலும், தாத்தாவின் நற்பண்புகள் எதுவும் குறையவில்லை. இன்று வரை யாரையும் முகம் சுளித்து பேசியதில்லை. இப்போதெல்லாம் தாகம் என்றால் ஒரு ஸ்பூன் தண்ணீர் மட்டுமே அவரால் குடிக்க முடிகிறது. “முழுங்க முடியில…” என்பார். வெறும் ஒரு ஸ்பூன் தண்ணீரை குடித்துவிட்டு, “தண்ணீ குடுத்ததுக்கு தாங்க் யூ” என்பார். எதற்காக நன்றி சொல்கிறார். செய்வது கடமை ஆயிற்றே. ஆனால் அவர் அப்படிதான்.

தாத்தா விநாயகர் பக்தர். ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஒரு விநாயகர் கோவிலை கட்டி ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை நிர்வகித்து வந்தார். பல லட்சங்களை அந்த கோவிலிலுக்காக இறைத்திருக்கிறார். ஆனால் கோவில் வருமானத்தில் எதையும் தனக்கென்று அவர் எடுத்துக் கொண்டதில்லை. கோவில் வரவு செலவு கணக்கை ஒரு சிறு நோட்டில் எழுதி வைத்திருப்பார். பின்பு அவர் சொல்ல சொல்ல பெரிய லெட்ஜரில் நான் எழுதுவேன். பால் வாங்கியது, பூ வாங்கியது, வஸ்திரம் வாங்கியது என்று ஒவ்வொரு செலவையும் தேதியிட்டு தெள்ளத் தெளிவாக எழுதி வைத்திருப்பார். ஐம்பது வருடக் கணக்கும் வரிசையாக பத்திரமாக வைத்திருக்கிறார். ஏன் இவ்வளவு பிரயத்தனப் பட வேண்டும்? நான் அவரைக் கேட்டதுண்டு.

“நாளைக்கு யாரும் கேள்வி கேட்டுறக் கூடாது!” என்பார்.

தன் வாழ்வின் பெரும்பகுதியை, தன் சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை அந்த கோவிலுக்காக செலவழித்த மனிதனை யார் கேள்விக் கேட்கக்கூடும் என்று எண்ணுவதுண்டு. அதை புரிந்து கொண்டவராய்,

“கோவில் பொது சொத்து. அதனால யாருக்கும் கேள்வி கேட்குற உரிமை இருக்கு” என்பார்.

“நீங்க தான கட்டினீங்க !”

“அப்படிலாம் பேசக்கூடாது. சாமிக்கு தொண்டு பண்றோம். அவ்ளோதான்”

இதற்கு மேல் அவரிடம் பேசமுடியாது. மேம்பாலம் கட்டுவதற்காக கோவிலையும் சுற்று புறத்தில் இருந்த கடைகளையும் இடிக்க போகிறோம் என்று வந்தவர்கள், கோவிலை மட்டும் விட்டுவிட்டு மேம்பாலத்தை கட்டிவிட்டு போனார்கள்.

“எல்லாம் விநாயகர் அருள்” என்று சொல்லிவிட்டு தாத்தா அடுத்த வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டார். ஆனால் கோவிலை இடிக்கப்போகிறார்கள் என்று தெரிந்ததும், ஏராளாமான மனுக்களை போட்டு, பல அரசு அலுவலங்கள் ஏறி இறங்கி போராடி கோவிலை காப்பாற்றினார் என்பது பலருக்கும் தெரியாது. இன்று ஒரு டிரஸ்ட்டை அமைத்து அதனிடம் கோவிலை ஒப்படைத்து விட்டு எனக்கும் கோவிலுக்கும் சம்மந்தமில்லை என்று ஒதுங்கிக்கொண்டார். எப்படி ஒருவரால் இப்படி சுயநலமின்றி இருக்கமுடியும் என்று எண்ணி ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். இதெல்லாம் போதாதென்று, ஒருநாள் என்னை அழைத்து, “என் பென்ஷன் அக்கௌன்ட்ல எவ்வளவு இருக்கு பாரு. கோவில்ல சிவலிங்கம் ஒன்ன பிரதிஷ்டை பண்ணிறலாம்” என்று சொல்லி மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். எதற்காக கோவிலுக்கு இவ்வளவு செய்ய வேண்டும் என்று என் பகுத்தறிவு எட்டிப்பார்க்கும் போதே, “என் மிச்ச காசெல்லாம் எடுத்து டெபாசிட் பன்னிரு. வர வட்டில பசினு வரவங்களுக்கு சோறு போடு” என்றுக் கூறி என் வாயை அடைத்திருக்கிறார்.

“ஓ தர்மகர்த்தா பேரனா நீ!. உங்க தாத்தா மனசுலாம் யாருக்கும் வராதுப்பா” என்று பலர் என்னிடம் சொன்னதுண்டு. ஹீரோக்கள் சினிமாவில் மட்டுமில்லை என்று நான் எண்ணி மகிழ்ந்த தருணங்கள் அவை. தாத்தா வாக்கிங் சென்றபோது அவருக்கு துணையாக சென்ற நாட்களிலெல்லாம் எதிர்கொண்டவர்கள் பலரும் தாத்தாவை நலம் விசாரிப்பதை பார்த்திருக்கிறேன். இவ்வளவு மனிதர்களை சம்பாதித்து வைத்திருக்கிறாரே என்று வியந்திருக்கிறேன். உண்மையில், அவரை எண்ணி வியக்க இன்னும் ஏதேதோ நிகழ்வுகள் இருக்கின்றன.

இரண்டாம் உலகப் போரில் பணிபுரிந்த தாத்தா, பின்பு சுங்கவரி துறையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். முதல் நாள் முடிவிலேயே ‘உங்க பங்கு’ என்று லஞ்சத்தை நீட்டியிருக்கிறார்கள் சக ஊழியர்கள். அதை வாங்கமறுத்தவர் அடுத்த நாளிலிருந்து வேலைக்கு போகவில்லை.

“நான் காந்தியாவதி. லஞ்சம் வாங்குறதுலாம் அசிங்கம். அதான் மறுநாளே ராஜினாமா கடுதாசி அனுப்பிட்டேன். ஒருநாள் வேலை பாத்த சம்பளம் ஒரு ரூவாய் ஒருமாசம் கழிச்சு வந்துச்சு. அதுக்கப்பறம் ரெண்டு வருஷம் வேலையே இல்ல. குடும்பத்துல ரொம்ப கஷ்டம் தான். ஆனா கைசுத்தம்னு நினச்சு இன்னைக்கும் சந்தோஷ படலாம்” இதை நான் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை வந்த நாளில் சொன்னார். ‘இதை ஏன் இப்போது சொல்கிறார்’ என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அவரிடம் எதையும் கேட்கவில்லை. “நீலாம் கஷ்டம் தெரியாம வளந்தவன். எந்த சூழ்நிலை வந்தாலும் கையும் மனசும் சுத்தமா இருக்கணும்” என்று அவரே சொல்லி முடித்தார்.

இப்போது தாத்தாவை பார்க்க யார் யாரோ வருகிறார்கள். தாத்தாவிற்கு உடல் நலிந்துவிட்டாலும், நினைவு தவறவில்லை. எல்லோரையும் நினைவுவைத்து பேசுகிறார். எல்லோருமே தாத்தாவைப் பற்றி என்னிடம் உயர்வாக பேசுகிறார்கள். தாத்தா யார் யாரையோ படிக்க வைத்திருக்கிறார். வளர்த்துவிட்டுருக்கிறார். யார்யாருக்கோ பணம் கொடுத்து உதவி இருக்கிறார்.

“எனக்கு கேன்சர்னு திருச்சில கை விரிச்சிடாங்க தம்பி. உங்க தாத்தா தான் மெட்ராஸ் ஹாஸ்பத்திரில வச்சு பாத்தாரு. இன்னைக்கு உசிரோட இருக்கேனா… அவர நினச்சு பாக்கணும்” என்று நேற்று தாத்தாவை பார்க்க வந்த ஒரு தாத்தா சொல்லிவிட்டு அழுதார். தாத்தாவை போல் வாழ வேண்டும் என்ற எண்ணம் இப்போதெல்லாம் அதிகம் வருகிறது. ஆம். ஹீரோக்கள் சினிமாவில் மட்டும் இருப்பதில்லை. அத்தகைய ஹீரோ தன் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை இவை தாத்தாவின் கடைசி நாட்களாக இருக்கலாம். என் பகலும் இரவும் தாத்தாவிற்காக தாத்தாவிற்கு அருகிலேயே கழிகிறது. தாத்தா ஏராளமான கதை சொல்கிறார். தொண்ணூற்றைந்து வருட வரலாறு அந்த கதைக்குள் ஒளிந்திருக்கிறது. தாத்தாவின் கதைகளில் நேதாஜி வருகிறார், காந்தி வருகிறார், வெள்ளைக்கார துரைமார்கள், இரண்டாம் உலகப் போர், ஸ்டீம் என்ஜின், சிலோன், இன்னும் யார்யாரோ, ஏதேதோ. ‘என் கதைய தம்பி எழுதுவான்’ என்று வருபவர்களிடம் சொல்லிவிட்டு சிரிக்கிறார். எனக்கு அழுகை வருகிறது.

– February 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *