தாத்தாவின் உபாயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 7,162 
 

காஞ்சனாவுக்கு அவளது அப்பா எப்படி இருப்பார் என்று தெரியாது . அவளுக்கு மூன்று வயதாக இருக்கும் போதே அவளது அப்பா அம்மாவை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று மட்டுமே தெரியும் . அவர் ஏன் பிரிந்து சென்றார், அதன்பின் அவருக்கு என்னவாயிற்று என்ற விபரத்தை எல்லாம் அவளுக்கு யாரும் சொல்லியதில்லை . அவளுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து அவள் அம்மாவுடனும் தாத்தாவுடனும் மட்டுமே வாழ்ந்து வந்திருக்கிறாள். இப்போது அவள் இருபத்துமூன்று வயதை அடைந்துவிட்ட பருவ மங்கை . அவளுக்கு வாழ்க்கையின் எல்லா ஆசாபாசங்களும் நன்கு தெரிந்தே இருந்தது.

அவள் சில வருடங்களுக்கு முன்பு காந்தனை சந்தித்தபோது அவன்தான் தனக்கு கணவனாக வரப் போகிறவன் என்று ஒருபோதும் எதிர்பார்த்திருக்க வில்லை . அவள் வேலை செய்யும் அந்தத் தனியார் நிறுவனத்தில் காந்தனும் வந்து வேலைக்கு சேர்ந்தபோது அவர்கள் இருவரும் சில வேலைகளை சேர்ந்து செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்கள் . அத்தகைய சந்தர்ப்பங்களில் இருவரும் சேர்ந்து சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டி யிருந்தது . இதனாலெல்லாம் பல்வேறு விடயங்களைப் பற்றி மனம்விட்டு கலந்துரையாட வேண்டியிருந்தது . சில விடயங்களை இணைந்து தீர்மானிக்க வேண்டியிருந்தபோது பல முரண் பாடுகளை கலைய வேண்டியிருந்தது. இதனால் அவர்கள் பல வாத விவாதங்களில் எல்லாம் ஈடுபட வேண்டியிருந்தது . காலகதியில் அவர்களுக்கிடையே ஒரு சுமுகமான உறவும் புரிந்துணர்வும் ஏற்பட்டிருந்தது.

எனவே விரைவிலேயே அவர்கள் மத்தியில் காதல் உணர்வு ஏற்பட்டு வாழ்க்கையில் ஒன்றாக இணைவது என தீர்மானம் எடுத்தனர்.

இருந்தாலும் இந்த முடிவை அவள் தன் அம்மாவிடம் தெரிவிக்கும் துணிச்சல் அவளிடம் இருக்கவில்லை . அவளை அவளது அம்மா ஆரம்பம் முதலே மிகக் கண்டிப்புடன் வளர்ந்திருந்தாள். இதனால் அவளுக்கு தன் அம்மா மீது பய பக்தியும் மரியாதையும் இருந்ததே தவிர தாய் சேய் பாசப்பிணைப்பு இருந்ததில்லை. என்ற போதும் காஞ்சனாவுக்கு எந்தவிதமான மனக்குறையும் இல்லாத விதத்திலும் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவள் கண் கலங்கி விடக்கூடாது என்பதிலும் மிக கவனமாக அவளது அம்மா நடந்து கொண்டாள்.

இதற்கு எதிர்மாறாக காஞ்சனா அவளது தாத்தா விடத்தில் அன்பு , பரிவு , பாசம் , நட்பு எல்லாவற்றையும் ஒருங்கே கொண்டிருந்தாள் . தாத்தாவும் அப்பாவின் அரவணை ப்பு இல்லாமல் வளர்ந்த பிள்ளை என்பதால் அப்பா ஸ்தானத்தில் தான் இருந்து அவளது எல்லா பயங்களையும் , சந்தேகங் களையும் , ஐயப்பாடு களையும் தீர்த்து அவள் தன்னை நாடி வந்த போதுகளில் எல்லாம் அன்பு செலுத்தி ஆறுதல் அளித்தார். இந்த அன்பையும் அரவணைப்பையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட காஞ்சனா தான் அம்மாவிடத்தில் ஏதாவது சாதிக்க விரும்பினால் அதனை தாத்தா ஊடாகவே நிறைவேற்றிக் கொண்டாள் . ஆனால் இந்த காதல் விவகாரத்தை தன் தாத்தாவிடம் தெரிவிப்பது என்பதுகூட மிகப்பெரும் பாடாகவே இருந்தது . இருந்தாலும் பல்வேறு ஒத்திகைகளின் பின்னர் , நூறுமுறை ” தாத்தா , தாத்தா ” என்று அழைத்ததன் பின்னர் ஒருவாறு தன் காதல் விவகாரத்தை தாத்தாவிடம் கூறி அதற்கான அனுமதியை அம்மாவிடம் பெற்றுத்தருமாறு காஞ்சனா கேட்டு விட்டாள்.

என்னதான் பேத்தி மீது அன்பும் பரிவும் பாசமும் வைத்திருந்தாலும் இந்த விடயம் காஞ்சனாவின் தாத்தாவுக்கு அதிர்ச்சியை தந்தது . பருவமடைந்த பிள்ளைகளை கண்டித்து பொத்தி பொத்தி வளர்த்தாலும் அவர்களுக்கிடை காதல் உணர்ச்சி ஏற்படுவதை தடுத்துவிட முடியாது என்பது தாத்தா நன்கு அறிந்த விடயம்தான். ஆனால் இந்த அதிர்ச்சி செய்தியினை இவ்வளவு விரைவாக தன் பேத்தி தனக்கு வழங்குவாள் என அவர் எதிர்பார்த்திருக்க வில்லை. அதற்குக் காரணம் இந்த விடயத்தை காஞ்சனாவின் அம்மாவிடம் தெரிவித்து அவளிடம் சம்மதம் வாங்குவது என்பது ஆகக் கூடிய காரியமல்ல . அவள் பெண் பிள்ளைகள் இவ்வாறு தாய் தந்தையருக்கு எதிராக சென்று தங்கள் போக்கில் தான்தோன்றித்தனமாக காதலித்து திருமணம் செய்து கொள்வ தற்கு அடியோடு எதிரானவளாக இருந்தாள்.

அதற்குக் காரணம் அவளது வாழ்க்கை அவ்வாறு அமைந்து போய் விட்டமையாகும் .

அவளும் கூட தன் தாய் தந்தையரை எதிர்த்து காதலித்து வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவள் தான் . ஆனால் அப்படி அவர்கள் திருமணம் செய்து சுதந்திரமாக வாழ ஆரம்பித்த அந்த முதல் மாதத்தி லேயே அவர்களுக்கிடையில் மிகுந்த இடைவெளி ஏற்பட்டுவிட்டது. காஞ்சனாவின் அம்மாவின் கணவன் அவள் எதிர்பார்த்தபடி ஒரு அன்புள்ள கணவனாக நடந்துகொள்ள வில்லை. அவர்களுக்கிடையில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்ட போதெல்லாம் சண்டை சச்சரவுகள், விவாதங்கள் என்பன ஏற்பட்டு இறுதியில் அடிதடியில் போய் முடிவடைந்தன. இப்படி வாழ்க்கையை தொடர முடியாத காஞ்சனாவின் அம்மா விரைவிலேயே விவாகரத்துக்கு விண்ணப்பித்து கணவனிடமிருந்து பிரிந்து வாழத் தொடங்கினாள். அதன் பின்னர் அவருக்கு ஆண்கள் மீது வெறுப்பும் துவேஷமும் ஏற்பட்டுவிட்டது. அதனால் தனது மகள் காஞ்சனாவுக்கும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அவள் மிகக் கவனமாக இருந்தாள். இந்த விடயம் தொடர்பில் அவள் பலமுறை தன் தந்தையுடன் கலந்துரையாடி இருக்கிறாள்.

இப்போது காஞ்சனா அதே விஷயத்தை தாத்தாவிடம் வந்து கூறி தனது காதல் விடயத்துக்கு அம்மாவிடம் அனுமதி பெற்று தருமாறு கோரிக்கை விடுப்பது அவருக்கு விசித்திரமாகப் பட்டது . எனவே இந்த விடயத்தை நேரடியாக காஞ்சனா வின் அம்மாவிடம் கேட்காமல் ஒரு உபாயத்தை பயன்படுத்துவது என்று தீர்மானித்தார் . அதன் பிரகாரம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் லீவு நாட்களிலும் காஞ்சனாவின் அன்புக்குப் பாத்திரமான காந்தனை வீட்டுக்கு வரச்சொல்லி காஞ்சனாவின் அம்மாவின் கண்ணெதிரிலேயே அவர்களை நண்பர்களாக பழக விட்டார் . ஆரம்பத்தில் இங்கு என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாது காஞ்சனாவின் தாயார் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் காந்தன் அம்மா இல்லாத பையன் என்று தெரிந்து கொண்டபோது அதற்கு ஆட்சேபனை அளிக்கவில்லை . வீட்டில் உணவுகள் தயாரிக்கப்பட்ட போது காந்தனுக்கும் சேர்த்தே உணவுகளும் பானங்களும் தயாரிக்கப்பட்டன . இவ்வாறு காந்தன் படிப்படியாக காஞ்சனாவின் வீட்டிலும் அவளின் அம்மா மனதிலும் இடத்தையும் நன் மதிப்பையும் பெற்றுக் கொண்டான். ஒருநாள் தருணம் பார்த்து காஞ்சனாவின் தாத்தா காந்தனுடனான காஞ்சனாவின் காதல் விவகாரத்தை பற்றி நாசுக்காக காஞ்சனாவின் தாயாரிடம் எடுத்துரைத்த போது அவள் அதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை இப்படித்தான் காஞ்சனா காந்தன் காதல் விவகாரம் கல்யாணத்தில் முடிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *