(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கந்தாயி உஸ்ஸென்று வாயால், வெளியிலில்லாத காற்றைத் தனக்குத் தானே ஊதிக்கொண்டாள். ஆனால், வழிந்த வியர்வை குறையவேயில்லை. குடிசையிலிருந்து வெளியே வந்த அவள் குடிசையை விட்டுத் தள்ளியிருந்த சாலையினருகில் தழைத்துப் பெரியதாய் வளர்ந்திருந்த பெரிய மரத்தை நோக்கிச் சென்றாள். முடிச்சு, முடிச்சாக இருந்த வேர்களையே தன்னுடைய சிம்மாசனமாகக் கொண்டு, நிதானமாய்ச் சாய்ந்த கந்தாயியின் மேடிட்ட வயிறு, உள்ளே துள்ளி வளையமிட்டாடிய சிசுவினால் அசைந்தது. சட்டென்று தூக்கம் கலைந்தாள் கந்தாயி. துள்ளிய குழந்தையைத் தன் கைகளால் தடவிப் பார்த்தாள். உடல் சிலிர்த்தது.
“என் கண்ணே.. நீ ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, உன்னை எப்பாடு பட்டாவது படிக்க வைப்பேன். ஆமாம், நீ நல்லாப் படிக்கணும், படிப்பியா என் செல்லமே.’
மீண்டும் வளைய வந்த குழந்தையின் சுழற்சியையே அதனுடைய சம்மதமாக நினைத்து மகிழ்ச்சியுடன் தன் வயிற்றைக் கையால் தொட்டுத் தொட்டு முத்திட்டாள் கந்தாயி. கண்கள் துளித்தன. மூக்கு விடைத்தது. நினைவுகள் சுழன்றன.
“ஏய்,கந்தாயி, எங்கேடி பொறப்புட்டே. தம்பி அழுவறான் பாரு. தூளியை ஆட்டித் தூங்க வையி, இரவு சாப்பிட்ட பாத்திரங்கள் கழுவாமக் கெடக்குது. அதையெல்லாம் சுத்தமாக் கழுவி. வீட்டையும் கூட்டு. அப்பாலே நீ பள்ளிக்குப் போவலாம். சோறு துண்ணப் போறவளுக்கு, இப்பவே புடிச்சு என்னடி அங்கன வேலை. மத்தியானந்தானே சோறு போடறாங்க. அப்பப் போனாப் போவுது. போடி உள்ளாறே!”
ஆணையிட்ட வள்ளியை நிமிர்ந்து முழுமையாய்ப் பார்த்தாள் கந்தாயி. ஆத்திரமும், அழுகையும் அவளுடைய முகத்தை உப்பச் செய்திருந்தன. உதடு விம்மி வெடிக்க வேகம் வேகமாய் மூச்சு விட்டபடி வள்ளியையே பார்த்தாள் கந்தாயி.
“இன்னாடி, பாம்பு போலச் சீறிக்கினு புஸ்புஸ்ஸுனு மூச்சு விடறே. அப்பனாட்டம் கோவத்தைப் பாரு. நீ படிச்சு ஒண்ணும் குப்பை கொட்டப் போறதில்லே. பொட்டைப் புள்ளையா, இலச்சணமா வீட்டுல வேலையை முடிச்சிட்டுத், தம்பியைத் தூங்க வச்சிட்டுப் பள்ளிக்குப் போய்ப் படி. படிக்கிறாளாம் பெரிய்ய படிப்பு. என்னமோ ஒரு வேளைச் சோறாச்சும் வவுறு ரொம்பக் கிடைக்குதேன்னு தானே போண்றேன் அதை வுட்டுப் படிக்கிறேன், படிக்கிறேன்னு இன்னடி தொணதொணப்பு. சே… என்ன தெனாவெட்டு..’
முணுமுணுத்தபடியே வெளியே வந்தாள் வள்ளி.
தொண்டையை அடைத்த துயரத்தை விழுங்கிவிட்டுத் தம்பி படுத்திருந்த தூளியை வேகம் வேகமாய் ஆட்டினாள். முதலில் தொண்டையைக் கிழித்துக்கொண்டு கத்திய சிசு ஐந்தே நிமிடங்களில் அழுத சோர்விலேயே கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தது.
பளபளவென்று பாத்திரங்களைத் தேய்த்து, வீட்டைச் சுத்தம் செய்தாள். வீடு என்ன பெரிய வீடு. பங்களாவா? குடிசைதானே. ஒரு மணி நேரத்திலேயே அத்தனையையும் முடித்துப் பக்கத்து வீட்டு ஆயாவைத் தம்பிக்குத் துணையிருக்கச் சொல்லிவிட்டுப் புத்தகப் பையைத் தோளில் மாட்டியபடிக் கால்களுக்கு வேகத்தைக் கூட்டியபடி ஒட்டமாய்ப் பள்ளிக்கூடத்திற்கு ஓடினாள் கந்தாயி.
தாமதமாய் வந்ததற்கு, ஆசிரியையின் கைப் பிரம்பினால் உள்ளங்கையில் அடி வாங்கி, அந்த எரிச்சலுடனேயே பாடங்களை எழுதினாள். கவனித்தாள். கை எரிச்சல் மறந்தே போனது.
தினந்தோறும் இதே கதைதான். இரண்டு உள்ளங்கைகளிலும் தாமதத்திற்கான அடிகளை வாங்கி வாங்கிக் கைகள் மறத்துக் காய்ப்புகள் உண்டாகிவிட்டன.
பள்ளிக்கூடம் கோடை விடுமுறையின்போதுதான் அந்தக் கைகளுக்கு அடியிலிருந்து விடுதலை கிடைக்கும். ஆனால், அக்கம் பக்கம் வீட்டு வேலைகளில் அம்மா சேர்த்து விடுவாள். விடுமுறை முடிந்து பள்ளி திறந்ததோ.. மறுபடியும் கந்தாயிக்குப் போராட்டம்தான். வளரும் தம்பியைச் சமாளித்துத் திட்டும் அம்மாவைக் கெஞ்சி, எப்படியோ தன் படிப்பை மட்டும் தொடர்ந்தாள்.
ஐந்தாம் வகுப்பில் வெற்றிபெற்று ஆறாம் வகுப்பில் ஓர் ஆறுமாதம் சென்றிருப்பாளா? இயற்கையும் அவளைச் சதி செய்து மூன்று நாள் தொல்லையைக் கொடுத்து மூலையில் உட்கார வைத்து, அத்தோடு பள்ளிக்கும் ஒரு பெரிய முற்றுப்புள்ளியையும் வைக்க வைத்தது.
அழுத அழுகை, கிடந்த பட்டினி, செய்த பிடிவாதம் எதுவுமே பலிக்காமல், பலிகடா ஆனாள் கந்தாயி. ஆறே மாதங்களில் உறவுக்காரப் பையனுக்கும், இவளுக்கும் கல்யாணமாகிக் கந்தாயி என்னும் சின்னஞ் சிறிய மொட்டு கசக்கி முகரப்பட்டது. இப்போது அந்தச் சின்னஞ் சிறிய பெண்ணின் சிறிய குந்துமணி வயிற்றில் ஒரு சிசுவும் புரண்டுகொண்டிருக்கிறது.
“ம்… ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்தது கந்தாயியிடமிருந்து. கண்கள் நிறைந்து வழிந்தன. சமயத்தில் பள்ளிக்கூட இடைவேளை மணி கணகணவென ஒலிக்கத் துள்ளிய குழந்தைகள் பொங்கிய பாலில் நீரைத் தெளித்தாற்போல அடங்கினர். கண்களை மூடியவள் அப்படியே தூங்கிப் போனாள்.
“ஏய் கந்தாயி! இங்கன இன்னாடி பண்றே. வீட்டாண்ட போடி.. மாசமானபுள்ளே, பச்சை மரத்துங்கீழே நட்ட நடு வெயில்லே குந்திக்கினு கீறியே.. காத்து, கறுப்பு புடிச்சுக்கிடப் போவுறது எழுந்திருடி.”
வயதான கிழவி பொங்காயி அவளை எழுப்பிக் குடிசைக்கு அனுப்பினாள். மீண்டும் இயந்திர கதியில் வீட்டு வேலைகள்.
கல்யாணம், கணவன், இரவில் அவனுடைய ஆக்கிரமிப்பு. அதன் விளைவாய் வயிற்றில் உருளுகின்ற சிசு. இத்தனையும் உண்மையில் நடந்துகொண்டிருக்கின்றபோது, அவள் பிஞ்சு மனம் மட்டும், தாமரையிலைத் தண்ணீராய் எதிலும் ஒட்டாமல் பள்ளிக்கூடம், படிப்பு என்ற பாதையையே சுற்றிச் சுற்றி வந்தது.
மாலை வள்ளியும், அவள் கணவனும், பழம், பூ, காராபூந்தி, இனிப்புச் சேவு என ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு வந்தார்கள் கந்தாயியைப் பேறுக்குக் கூட்டிப் போக. இரவு கோழியடித்து விருந்து சமைத்தார்கள். மறுநாள் காலை இட்டிலி, வடைகறி எனச் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டுப் பெற்றோர்களுடன் கிளம்பிய கந்தாயி, மாமியாரின் கால்களில் விழுந்து வணங்கினாள்.
“கந்தாயி நல்ல ஆம்பளப் புள்ளையாகக் கை நிரம்பப் பெத்து எடுத்துக்கிட்டு வா. பொட்டையாய்ப் பெத்தே ஆத்தா வூட்லேயே இருந்துக்க. இல்லே அதை என்ன செய்யணுமோ செஞ்சுட்டு வா.. புரிஞ்சுக்கிட்டியா” நீட்டி முழக்கினாள் மாமியார்க்காரி, கேவிக் கேவி அழுத கந்தாயியைப் பார்த்து.
திடுமென ஒரு நெருப்புக் கோளம் அவள் அடிவயிற்றிலிருந்து புறப்பட்டு மார்பைத் தாக்கியதில் கண்கள் மிரண்டு விரிந்தன.
கணவனையும், மாமியாரையும் மாறி மாறிப் பார்த்தாள் கந்தாயி “இதோ பாரு, எனக்கும் சரி, எம் பொண்ணுங்களுக்கும் சரி, மொத மொதல்ல பொறந்தது சிங்கக் குட்டிக் கணக்கா ஆம்பளைப் பயதான். நம்ம வீட்டு வழக்கம் அதுதான். பொட்டையைப் பெத்தா அது நமக்குத் தரித்திரியம்தான். சரி, சரி, நல்ல நேரத்துல பொறப்பட்டுப் போயிட்டு வா, கந்தாயி. மாரியாத்தாளை வேண்டிக்க. எல்லாம் நல்லாவே நடக்கும். போயிட்டு வாம்மா.”
வாய் திறவாமல் மனத்தின் கொந்தளிப்போடு பெற்றோருடன் நடந்தாள் கந்தாயி.
எந்தவிதமான மகிழ்ச்சியும் இன்றி எப்போதும் கூம்பிய முகத்துடன் சுருண்டு படுத்திருக்கின்ற மகளைப் பார்க்கப் பார்க்க வள்ளியின் மனம் கவலையுற்றது.
“கந்தாயி, உம் மனசுல இருக்கறதைச் சொல்லு கண்ணு. பேறு நல்லாகணுமேன்னு பயமாயிருக்குதா, ரொம்ப வலிக்குமா,என்னாகும்னு கவலையா, சொல்லும்மா.’
அவள் தலையைக் கோதியபடியே வள்ளி கேட்கவும், அப்படியே தாயின் மடியில் முடங்கிக் கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள் கந்தாயி.
“அம்மா, அம்மா, என் மாமியார் சொன்னாப்புல எனக்குப் பொட்டைப் புள்ளை பொறந்தாச் சாகடிச்சுடுவியாம்மா, சொல்லும்மா, சொல்லு.”
நீர் நிறைந்த கண்களுடன், கலைந்த தலையுடன், துடிக்கும் இதயத்துடன் கந்தாயி வள்ளியை உலுக்கிக் கேட்கவும் அவளிடம் பொய் சொல்லவும் முடியாமல், மெய்யைக் கூறவும் முடியாமல் தவித்தாள் வள்ளி. கந்தாயியைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு உச்சி மோந்தாள்.
“கந்தாயி, பொட்டைப் புள்ள பொறந்தாத்தானேடி அந்தக் கவலையெல்லாம். நீ தான் இராசாக்கணக்கா ஆம்பளப் பிள்ளையைப் பெத்துக்கப் போறியே, அழுவாதே, கண்ணு, எழுந்திரும்மா”
“இல்லேம்மா, நீ இப்பவே சொல்லு, பொறக்கப் போறது ஆம்பளையாயிருந்தாலும் சரி, பொம்பளையாயிருந்தாலும் சரி, எனக்கு வேணும்.”
“அம்மா, நானும் பொட்டைப் புள்ளைதானே. ஏம்மா, உன் கொழந்தையை மட்டும் நீ சாவடிக்கலே?”
“என்கொழந்தை எனக்கு வேணும்மா. சாவடிக்க மாட்டேம்மா. அது என் கொழந்தைம்மா. எனக்கு என்கொழந்தை வேணும்மா…”
விக்கி விக்கி அழுதாள் கந்தாயி. முட்டிக்கொண்டு வந்த அழுகைகைய அடக்கிய வள்ளி, சமாதானம் சொன்னாள்.
”முடியாதும்மா, எனக்குக் கையடிச்சுச் சத்தியம் செய்யி. இல்லே இந்தச் சாமி படத்துக்கு முன்னே கற்பூரம் ஏத்தி அணைச்சுச் சொல்லு, பொம்பளையாயிருந்தா சாவடிக்கமாட்டேன்னு”
“கொழந்தை பொறக்கறதுக்கு முன்னேயே இன்னாடி தொல்லை. ஆவட்டும் நீ மொதல்ல உம் புள்ளைய வவுத்துலேருந்து வெளியே தள்ளு. பெறவு யோசனை செய்யலாம், என் கண்ணு. ! கண்டதை நினைச்சு மனசைக் கொழப்பிக்காதேம்மா.”
தேம்பியபடியே தூங்கிப் போனாள் கந்தாயி.
திடீரென்று, “யம்மாடீ… உசுரு போகுதே.. யம்மா…” பெரிய கூக்குரல் எழுந்தது கந்தாயியிடமிருந்து. வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் வள்ளி. “கந்தாயி..வலி எடுத்துருக்குது போல வலிக்கத்தாம்மா செய்யும். பொறுத்துக்க கண்ணு. தம்பியை விட்டு அன்னம்மாக் கிழவியைக் கூட்டியாரச் சொல்றேன். நல்ல கைராசிக் கிழவி. டேய்! அடே! ஓட்டமா ஓடுடா. அன்னம்மாக் கிழவியைக் கையோடு கூட்டி வாடா. அக்காளுக்கு வலி எடுத்துருக்குதுன்னு சொல்லு. ஓடு ஓடுடாங்கறேன்.”
இதோ… கசாயம் வச்சித் தரேன். குடி, கண்ணு. சாமியைக் கும்பிட்டுக்க. ஒரு சங்கடமுமில்லாம, நல்ல கொழந்தை பொறக்கட்டும்னு வேண்டிக்க, கந்தாயி.”
எழுந்திருக்கவே சக்தியின்றி அப்படியே சாமி படத்தைக் கூப்பிய கைகளுடன் தொழுதாள் கந்தாயி. மீண்டும் வலி பெரிதாய்த் தோன்ற “அம்மா” என்று கூவியபடிப் படுக்கையில் விழுந்தாள்.
கசாயத்தைச் சிறிது சிறிதாய் மகளுக்குப் புகட்டினாள். ஓங்கரித்து அழுதாள் கந்தாயி,
அப்படியே குமட்டித் தாயின்மீதே வாந்தியெடுத்த கந்தாயி மயக்கமாகச் சரியவும், அன்னம்மா வரவும் சரியாக இருந்தது.
முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தைத் தெளிவித்தாள். வலியின் தீவிரம் அதிகமாக அதிகமாகப் புழுவாய்த் துடித்த கந்தாயி, இறுதியில் பெரியதாய்க் கூக்குரலிட்டபோது, கூடவே வெளியே வந்து விழுந்த சிசுவின் சின்னஞ்சிறிய குரலும் கலந்தது.
அவ்வளவு வலியிலும், “என்ன குழந்தை?” என்று அறியும் ஆவலுடன் அன்னம்மா பாட்டியின் முகத்தையே. களைத்துச் சிவந்த முகத்துடன், இன்னமும் மீதமிருந்த வலியுடன் உலர்ந்துபோன வாயுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கண்கள் மட்டும் பளபளத்துக் கொண்டிருந்தன.
“ஊம்… பொட்டைப் புள்ளடி, வள்ளி..”
சட்டென்று குழந்தையைத் தன்னருகில் சேர்த்து அணைத்து இறுக்கிக் கொண்டாள் கந்தாயி. கண்களில் ஒரு விதப் பயம் பரவியது. அந்தப் பதினாறு வயதுச் சிறுமியின் உடம்பு பேற்றின் தீவிரத்தைத் தாங்கச் சக்தியற்று நடுங்கிகொண்டிருந்தது. ஆனாலும், குழந்தையைப் பிடித்திருக்கின்ற பிடியை விடவில்லை.
அன்னம்மாவை வெளியே அழைத்துச் சென்ற வள்ளி, மெதுவாகப் பேசினாலும், கந்தாயி முடியாமல் நகர்ந்து வந்து ஒரு வார்த்தை விடாமல் கவனித்துக்கொண்டாள். மீண்டும் சுவரோடு சுவராய்ச் சாய்ந்தாள்.
எருமை கலக்கிய குட்டையாய் இருந்த மனதைத் தெளியவிட்டாள். சலனமின்றியான பின் யோசிக்கின்ற சக்தி வந்தது. தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்ட குழந்தையோடு படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். ஆனால், இதயம் திறந்துதானிருந்தது.
தூங்குகின்ற கந்தாயியைப் பார்த்துப் பொங்கி வந்த அழுகையை அடக்கி, நிதானமாய் அவளருகில் உட்கார்ந்தாள் வள்ளி. நிதானமாய் அவள் கையை விலக்கிக் குழந்தையை எடுக்கப் போனபோது, கந்தாயியின் பிடி இறுகியது. சடேரென்று எழுந்து உட்கார்ந்தாள்.
”அம்மா என்கொழந்தையை எப்படியிருந்தாலும் சாவடிக்கத்தான் போறீங்க. எனக்கு நல்லாவே தெரியும். என் விதி அப்படீன்னா என்னம்மா செய்ய முடியும். ஆனா, சாகப்போற என்கொழந்தையை இரண்டு நாள், இரண்டே இரண்டு நாள் என்கூட இருக்க விடும்மா. பத்து மாசம் என் வவுத்துல பொத்திப் பொத்தி ஆசையோட சுமந்துகிட்டிருந்த என் கொழந்தையைப் பாலு கொடுத்து, அதோட கொஞ்சி என் மனசுல இருக்கிற ஆசையைத் தீத்துக்கறேம்மா. என்கொழந்தையோட மூஞ்சியை என் நெஞ்சுல பதிஞ்சு வச்சுக்கவாவது இரண்டு நாளு வேணும்மா. அம்மா. நான் ஒண்ணு கேட்டா எம் மேலே கோவப்படமாட்டியே.. ம்…
“மாட்டேன்” என்பது போல் தலையை இப்படியும், அப்படியும் அசைத்தாள் வள்ளி.
“அம்மா, நானும் பொட்டைப் புள்ளைதானே. ஏம்மா, உன்கொழந்தையை மட்டும் நீ சாவடிக்காமல் வச்சுக்கிட்டே. என்கொழந்தையை மட்டும் நீ சாவடிக்கலாமாம்மா ? இது நியாயமாம்மா. என்னைச் சாவடிச்சிருந்தா எல்லாமே முடிஞ்சிருக்குமேம்மா.. ஏம்மா… என்னைச் சாவடிக்கலே. சொல்லும்மா, சொல்லு”
கேட்டுவிட்டுக் கேவிக் கேவி அழுத கந்தாயியைப் பார்த்துக் கூடவே வள்ளியும் தலையிலடித்துக் கொண்டு அழுதாள்.
மூன்றாம் நாள் காலை எப்போதும் போல எழுந்த வள்ளி, பக்கத்தில் பார்த்தபோது கந்தாயி, குழந்தை இருவரையும் காணாமல் திகைத்தாள். குடிசையின் மூலை முடுக்கு, வெளியே எல்லாம் பரிதவித்துத் தேடி ஓடினாள். எங்கேயும் காணவில்லை. வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு பெரிதாய் ஒப்பாரி வைத்த வள்ளியைச் சுற்றிச் சிறிது சிறிதாய்க் கும்பல் கூடியது.
இரண்டு மணிக்கு எழுந்த கந்தாயி, வள்ளி அசந்து தூங்கியதை உணர்ந்து குழந்தையை அணைத்து எடுத்துக்கொண்டு சத்தமின்றிப் பூனைபோலப் பாதம் பதித்துக் குடிசைக்கு வெளியே வந்தாள். அவ்வளவுதான், தன் சக்தியனைத்தையும் திரட்டிக் கால்களுக்குக் கொடுத்தாள்.வேகம், வேகம், ஓட்டம், ஓட்டம்…
நாக்கு உலர்ந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. “சாமி, எனக்குப் பலத்தைக் கொடு தைரியத்தைக் கொடு. நான் என் கொழந்தையோடக் கண்காணாத தேசத்துக்குப் போயிடணும்… சாமி…”
உதிரப்போக்கு அதிகமாக ஆரம்பித்திருந்தது. மரத்தின் மறைவில் நின்று உடையைச் சரிசெய்து கொண்டாள். அழுத குழந்தைக்குப் பால் கொடுத்துச் சமாதானப்படுத்திக் கையோடு கொண்டு வந்திருந்த ரொட்டியைப் பிய்த்து, அங்கிருந்த குழாய் நீரில் நனைத்து, நனைத்துத் தின்று நீர் குடித்தாள். கொஞ்சம் தென்பு வந்தது.
சாலையில் வந்து கொண்டிருந்த பேருந்தைக் கைகாட்டி நிறுத்தி அதில் ஏறிக்கொண்டாள். கையில், வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த அம்மாவின் சுருக்குப் பையிருந்தது. அதைத் திறந்து காசை எடுத்துப் பேருந்து கடைசியாகப் போகின்ற இடத்திற்கே பயணச்சீட்டு வாங்கினாள். இருக்கையின் பின்னே சாய்ந்து கொண்டாள்.
அவ்வளவுதான். பிறகு, அவளுக்கு எதுவுமே தெரியாது பேருந்து ஒரே சீராகக் காலைப் பொழுதின் தண்ணெண்ற காற்றில் உற்சாகமாய்ப் போய்க்கொண்டிருந்தது.
தடக்கெனப் பேருந்து நின்றது. அனைவரும் அவரவர் மூட்டை முடிச்சைச் சரி பார்த்து எடுத்து வைத்துக்கொண்டிருந்த போதுதான் பெரிதாய் ஓர் அலறல் சத்தம் கேட்டது. அத்தனைபேரும் ஒரு கணம் அசையாமலிருந்து அவறல் ஓசை வந்த திசையை நோக்கினார்கள்.
அலறிய பெண்ணின் மடியில் அரைகுறை நினைவோடு சாய்ந்திருந்தாள் கந்தாயி. அவள் பிடியில் குழந்தை அழுதுகொண்டிருந்தது.
அவளை நோக்கிக் குனிந்த முகங்களை மிக முயன்று திறந்த கண்களோடு பார்த்தாள். நடுங்கிய கரங்களை இணைத்துக் கூப்பினாள். மிகுந்த தடுமாற்றத்துடன் வார்த்தைகள் வலிமையின்றி அவள் வாயிலிருந்து ஒன்றொன்றாய் வெளிப்பட்டன.
“இது என்கொழந்தை, பொட்டைன்னு சாகடிக்கிறேன்னாங்க. என்னாலே… என்னாலே… தாங்க முடியலே…”
கந்தாயியின் கண்கள் அருவியாயின. மூக்கு விடைத்துச் சிவந்தது.” தயவு செஞ்சு, யாராச்சும்… என்கொழந்தையைக் காப்பாத்தி வளர்த்துக்குங்க அவளை நல்லாப் படிக்க வையிங்க எனக்குப் படிப்புன்னா உசுரு, என்கொழந்தை படிக்கணும், படிக்க வைக்கணும்…”
கையால் கழுத்தில் நிரடிக்கொண்டிருந்த கயிற்றிலிருந்த தங்கத் தாலியைக் கயிற்றோடு கழற்றினாள். இடுப்பிலிருந்த சுருக்குப் பையிலிருந்து சின்னத் தங்கத் தோட்டையும், தங்க மூக்குத்தியையும் எடுத்தாள்.
“இதையும் எடுத்துக்குங்க… என்கொழந்தையைச் சாவடிக்காதீங்க.. அவளைப் படிக்க வையிங்க.. பள்ளிக்கு அனுப்புங்க, சாவடிக்காதீங்க, யாராச்சும் காப்பாத்திப் படிக்க வையிங்க… கும்பிட்டுக் கேக்கறேங்க.. யாராச்சம்… என்கொழந்தையைக் காப்பாத்திப் படிக்க வையுங்க…”
சொல்லியபடியே அனைவரையும் நோக்கிக் கெஞ்சிய கந்தாயியின் கண்கள் குத்திட்டு நிற்கக், கூப்பிய கைகள் சரிந்து குழந்தையின் மேல் விழக் குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்தது.
அருகிலிருந்து பெண் கந்தாயியை அணைத்து முத்திட்டுக் கண்களில் நீருடன், அந்தக் குழந்தையை மட்டும் தன்னோடு எடுத்துக்கொண்டு, தன் உடைமைகளுடன் கீழிறங்கித் தன் முன் விரிந்திருந்த பாட்டையை நோக்கித் தன் நடையைத் தொடர்ந்தாள்.
– திருமதி. சியாமளா இராவ், சென்னை.
– மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005, சிங்கைத் தமிழ்ச் செல்வம், சிங்கப்பூர்