கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2024
பார்வையிட்டோர்: 311 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சக்திக்கு, இது ஒரு லட்சித்தியத்தின் வெற்றித் திருநாள் என்றால் அவனைப் பத்துமாதம் சுமந்து பெற்ற தாய்க்கோ ஒரு மாபெரும் வேள்வியின் வெற்றித் திருநாள்.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் பாலகனாக இருந்த சக்தியை அவள் தன் மாமனாராகிய சக்திவேலரிடம் தூக்கித் கொடுத்து ஆசி பெற்ற போது அவர் சொன்ன வார்த்தைகளே அந்த ஆத்ம வேள்வியை வளர்க்கத் தொடங்கியது.

“வள்ளியம்மே இவனை உனக்கு மட்டும் உதவற பிள்ளையா.. உன் குடும்பத்தை மட்டும் காப்பாத்தக் கூடிய பிள்ளையா.. உன் பரம்பரைக்கும் குடும்பத்துக்கும் நல்ல பேர் வாங்கற பிள்ளையா நீ வளர்த்தா போதாது.

இந்த நாட்டுக்கு நல்ல குடிமகனா, நாட்டு நலனைக் காக்கிறவனா.. நாட்டுக்காகத் தன்னையே தந்து நல்ல பேர் வாங்கற பிள்ளையா நீ வளர்க்கணும்.. எனக்கு மருமகளா இந்த குடும்பத்துக்கு நீ வந்து விளக்கேத்தி என் குலம் விளங்க வாரிசையும் கொடுத்த பெருமைக்கு அப்பத்தான் உண்மையிலேயே மரியாதை கூடும்.. என் ஆசையை நீ நிறைவேத்தி வெப்பியாம்மா!’

ஒரு ரிடையர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் மருமகளான வள்ளியம்மைக்கு ஒரு சாதாரண தமிழ்ப்பள்ளி ஆசிரியையான இருபத்தேழு வயது வள்ளியம்மைக்கு, அந்தக் கோரிக்கை அப்போது சாதாரண விஷயமாகத்தான் தெரிந்தது. அதிலும் தலைப்பிள்ளையே ஆண் பிள்ளையாய் பிறந்துவிட்ட ஆனந்த வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்தவளுக்கு அது ஒன்றும் பெரிய காரியமாய்த் தோன்றவில்லைதான். அவளுக்கு அது ஒரு சோதனைக் கூடமாய் அமைந்த போதுதான் அவள் தடுமாறிப் போனாள்.

அடடா… இன்றைக்கு மாவீரன் போல் தன் முன்னால் நிற்கும் தன் தவப்புதல்வன் இந்த வெற்றியைப் பெற அவள் கொடுத்த விலைதான் எத்தனை எத்தனை கோடி.

அவளது முப்பத்தாறாம் வயதில் அவளுடைய மாமனார் காலமாகிப் போனார். அவரது நினைவாகப் பேரனுக்கும் பேர் விளங்க வேண்டும் என்பதற்காக அவள் அருமைப் புதல்வனுக்கு சக்திவேல் என்றே பெயர் வைத்தார்கள். அந்தச் சக்திவேல் தன் தாத்தாவுக்கு நெய்ப்பந்தம் பிடித்து வழியனுப்பிய வயதில்தான் பள்ளிப்படிப்பைத் தொடங்கியிருந்தான். அவன் பள்ளியில் சேர்வதற்கு முன்பே தாத்தா அவனுக்குத் தமிழையும், அதன் இனிமையையும், அழகையும் நன்றாய்க் கற்றுக் கொடுத்திருந்தார்.

பாரதியின் சுதந்திர வேட்கை ததும்பும் பாடல்களை அந்த மழலைப் பருவத்திலேயே தாத்தாவிடம் சக்தி ஆசை ஆசையாய் கற்றுக் கொண்டு வந்தான்.

நேதாஜிபோல் உடையணிந்து கையில் வீரவாளும் தலையில் தொப்பியுமாய் நடந்து.

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே…

என்று தாத்தாவிடம் அவன் பாடும்போது அந்த வீரமறவன் தன் கனவெல்லாம் நிஜமாகிவிட்டதாக எண்ணிப் பூரித்துப் போனார். அவருக்குக் கொடுத்து வைத்ததெல்லாம் அந்த மழலைப்பருவ விளையாட்டுகள்தான். அதற்கு மேல் நடந்ததை, நடக்க வேண்டியதை எல்லாம் தாங்கிச் சுமந்தவள் இந்த வள்ளியம்மைதான்.

வள்ளியம்மை கதிர்வேலுவைக் கல்யாணம் செய்து கொண்டபோது கதிர்வேலு நல்லவனாகத்தான் இருந்தான். நாள்கள் செல்லச் செல்ல அவன் போக்கில் மாறுதல் தென்பட்டது. ஐ.என்.ஏ பட்டாளத்தில் இருந்து எதை எதையோ சமாளித்து வந்த சக்திவேலருக்கு. வீட்டிலே இருந்துகொண்டு மகன் செய்யும் அடாவடித்தனங்களையும். அசிங்கமான நடவடிக்கைகளையும் அடக்கி ஒடுக்க முடியவில்லை.

தோளுக்குமேல் வளர்ந்து விட்டதால் தோழன் என்ற நிலைக்கு வந்துவிட்ட மகனைக் கைநீட்டவா முடியும்? தன் கண்ணியத்தைக் காப்பாற்ற மனதுக்குள்ளேயே அழுது அழுது அவர் போய்ச் சேர்ந்து விட்டார். அந்த கடைசி நேர மூச்சில் கூட.

“நான் சொன்னதை மறந்துவிடாதே வள்ளியம்மை. என்னோட ஆவி அலைஞ்சுகிட்டே இருக்கும். என்னோட ஆசைகளை என் பிள்ளை நிறைவேத்தி வெப்பான்னு இராப்பகலா கனாக்கண்டேன். ஆனா அவன் என் ஆசையில மண்ணை அள்ளிப் போட்டுட்டான். நிறைவேறாமப் போன ஆசையை நிறைவேத்தி வெக்கத்தான் உன் பிள்ளையை ஆண்டவன் கொடுத்திருக்கான், மறந்துடாதே… மறந்துடாதே தாயி…”

என்று சொல்லி விட்டுத்தான் அவர் உயிரை விட்டார். தந்தையின் மறைவுக்குப் பின் கதிர்வேலன் தகப்பன் வைத்துப் போனதை எல்லாம் வீட்டில் உட்கார்ந்தே தின்று தீர்த்தான். தஞ்சம்பகார் மூவறை வீட்டையும் விற்றான். மனைவியைப் பற்றியோ பிள்ளையைப் பற்றியோ அவன் கொஞ்சமும் கவலைப்பட்டதில்லை. அவனது போய்க் பொழுதெல்லாம் புகைப்பதிலும், குடிப்பதிலுமே கொண்டிருக்கிறது.

ஒரு மரியாதைக்குரிய பெரிய மனிதரின் மருமகள் என்ற பெருமையையும், நல்ல அறிவான பிள்ளையின் தாய் என்ற சந்தோஷமும் மட்டுமே வள்ளியம்மைக்கு இருந்தது. அவளின் சொந்த சம்பாத்தியத்தைக் கொண்டு ‘தங்களின் ஹால்ட்’ பகுதியில் இரண்டு அறையுடைய வீட்டை வாங்கினாள். அவள் கணவன் கதிர்வேலனின் மூர்க்கத்தனமான செயல்கள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. அவளது ஊதியத்தில் பாதியைப் பிடுங்கிக் கொண்டு அவன் குடிப்பதற்குப் போய்விடுவான். இருப்பதைக் கொண்டு குடித்தனத்தை நடத்திக் கொண்டு பிள்ளையின் படிப்பையும் கவனித்துக் கொண்டு வந்தவளை ஒருநாள் கதிர்வேலன் செம்மையாய் போட்டு உதைத்தான்.

‘என் சிநேகிதன் அவன் கடைக்கு ஆளில்லேன்னு சொல்றான். கை நெறைய சம்பளம் தர்றேன்னு சொல்றான். அவன் படிச்சது போதும். போய் அந்த வேலையைப் பார்க்கச் சொல்லுடி…’ என்றான்.

கணவனின் காலைக் கட்டிக் கொண்டு அவள் அழுதாள். அவளின் நீண்ட கூந்தல் அவன் கைகளில் சிக்கி அவள் சின்னாப் பின்னமானதுதான் மிச்சம்.

குவின்ஸ் டவுன் தொடக்கப் பள்ளியிலிருந்து வீடு வந்ததும் அம்மாவைப் பார்த்து சக்தி அழுவான். இந்த தொல்லைகளில் இருந்து விடுபட்டு தன்னுடைய ஆசைகளுக்கேற்ப தன் மகனை வளர்க்க வேண்டுமானால் முதலில் அந்த மனிதன் கண்ணில் படாமல் அவன் தப்பிக்க வேண்டும். அதற்கான வழியைத் தேடினாள். ஆகவே அவன்தன் உறவுகள் கண்களுக்குத் தென்படாது மறைந்தது. தன் பள்ளித்தோழி கமலாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன் மகளை ஒப்படைத்து. அவனது பராமரிப்புத் தேவைக்கான பணத்தை தந்துவிடுவதாகக் கூறினாள். தோழியோ அதை மறுத்து அவனைத் தன்பிள்ளைபோல் பார்த்துக் கொள்கிறேன். என்று சொல்லி விட்டாள்.

சக்தி உயர்நிலைப் படிப்பைத் தொடங்கியபோது தேசிய சேவைகளைப் பற்றித் நிறையத் தெரிந்து கொண்டான். அம்மாவின் கனவுகளை நெஞ்சில் சுமந்துகொண்டு தன்னைப் புடம் போட்டுக்கொண்டான். வீட்டிலோ தாயின் நிலை மிகவும் மோசமாகிக்கொண்டிருந்தது.

பிள்ளையைக் காணாமல் அவளை அவள் கணவன் நேரம் காலம் பாராது அடித்துத் துன்புறுத்தினான். அவளை வேலைக்குப் போகாதபடி கஷ்டங்களை கொடுத்தான். சில சமயங்களில் பள்ளியில் போய் தொந்தரவு கொடுத்தான். எல்லாவற்றையும் அவள் தாங்கிக் கொண்டாள்.

ஒரு நாள் இரவில் யாரோ நான்கு பேர்கள் வந்து அவளை அழைத்தார்கள். விபரம் கேட்டு ஓடினாள். வீட்டருகே உள்ள காப்பிக் கடையின் வெளியில் கொட்டும் மழையில் உட்கார்ந்துகொண்டு போதை உண்டாக்கும் சாராயத்தைக் குடித்துக் கொண்டு பைத்தியம் போல உளறிக் கொண்டிருந்தான் அவள் கணவன். அங்கிருந்த ஆண்களின் துணையோடு அவனை வீட்டுக்குக் கொண்டு சேர்த்தாள்.

வீட்டுக்கு வந்ததிலிருந்து வாந்தியெடுத்தவன். கடைசியாய் ரத்த வாந்தி எடுத்தான். பொது மருத்துவமனைக்குக் கொண்டு போனார்கள். அங்கே மருத்துவர்கள் கைவிட அவன் வாழவேண்டிய வயதில்! போக வேண்டிய இடத்துக்கு மிக வேகமாய் போய்ச் சேர்ந்தான். கொள்ளி போட வந்தான் பிள்ளை. தேசியக் கொடிக்கு முன்னால் ஒரு வீரனாய் வாளேந்தி நின்று வீரவணக்கம் செய்யும் தாத்தாவைப் பல தடவை பார்த்துப் பார்த்து மிகவும் பெருமைப்பட சக்தி ஒரு தெரு ஓரக் குடிகாரானாய் கிடந்து சீரழிந்து செத்துப் போய்விட்ட தன் தந்தையின் முகத்தைப் பார்க்கவே கூசினான்.

தந்தையின் காரியங்களை முடித்து விட்டுப் போகும்போது தாயிடம் உறுதியாய் ஒன்றைச் சொல்லி விட்டுப் போனான்,

“உன் கண்ணீர் இனிமே தரையில் விழக்கூடாதும்மா! அது ஆனந்தக் கண்ணீரா வந்துதான் என் கையில விழணும்.

சக்தி உயர்நிலைத் தேர்வில் முதல் மாணவனாகத் தேர்வு பெற்றான். சிறந்த கல்வித் தேர்ச்சியின் காரணமாய் அரசு உதவிப்பணம் கிடைத்தது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஹெரியட் – வாட் எனும் பல்கலைக்கழகத்தில் ராணுவக் கல்வி பயின்று பட்டமும் விருதும் பெற்று வந்தான்…

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து

என்று வள்ளுவர் கூறியிருக்கின்ற உண்மையை நிரூபித்த தன் மகனைக் கண்டு

வள்ளியம்மைக்கு, அந்த ஆனந்தக் கண்ணீர் வெள்ளமாய்ப் பெருகி அவள் கன்னத்தில் வழிகின்றது. சக்தி அம்மாவின் கன்னத்தைத் தன் கையினால் துடைக்கிறான்.

இன்றைக்கு நடக்கப் போற தேசிய தின அணிவகுப்பில் நம்ம நாட்டு அதிபருக்குப் பக்கத்தில் நடந்து அணிவகுப்பு மரியாதைக்குத் தலைமை தாங்குகிற பாக்கியம் எனக்குக் கெடைச்சிருக்கும்மா. நீயும், என்னை ஆளாக்கிய கமலா அம்மாவும் வந்து கண்டிப்பா பார்க்கணுமா.. புறப்படு…அழகா… ராணி மாதிரி உடுத்திக்கிட்டுப் புறப்படுங்கோமா..

வள்ளியம்மை பேச்சுவராமல் திணறிப் போனாள். கண்ணெதிர ராணுவ உடையில் கம்பீரமாய் நிற்கும் தன் மாமனாரின் திருவுருவப் படத்தைப் பக்தியோடும். பரவசச்தோடும் பார்க்கிறாள்! அன்றைக்கு அவளிடம் அவர் சொன்ன அந்த வார்த்தைகள் இப்போது வானத்திலிருந்து விழும் மழைத்தூவலாய் வள்ளியின் மனத்திரையில் வந்து விழுகின்றன. அத்தனைக்கும் மொத்த உருவமாய் மகனைப் பார்க்கும்போது அங்கே மாமனாரின் உருவம் உயிர் பெற்று மகன் வடிவில் தோன்றுகிறது!

இந்த நாட்டு மக்கள் எல்லோரும் உற்சாகத்தோடும். உல்லாசத்தோடும் கொண்டாடிக்கொண்டிருக்கும் தேசிய தினத்தில் எனக்குக் கிடைத்திருக்கும் இந்த பெருமையும், சந்தோஷமும் அந்தப் பெரிய மனிதரின் தூய மனதின் ஆசீர்வாதம்தானே. மகனைப் பார்த்து நிற்கிறாள். தாயின் விழிகளில் தன்னைப் பார்க்கிறான் சக்தி. இருவர் பார்வையிலும் ஒரே பூரிப்பு! ஒரே வெற்றியின் பிரதிபலிப்பு! தாயின் கனவை நனவாக்கிய பெருமையோடு மகன் நிற்க. தன் வீட்டிற்கும் நாட்டுக்கும் ஒரு நல்ல புதல்வனைத் தந்துவிட்ட பெருமையில் தாய் நிற்கிறாள். வாம்மா போகலாம்… எனக்கு அழைப்பு வந்து வெகு நேரமாச்சுதுல்ல…”

தாயின் கைப்பற்றி நடந்தவன் கண்களில் கம்பீரமாய் பறக்கும் தேசியக்கொடிபடுகிறது. ராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர். அவர்களுக்கு தேசிய கீதம் முழங்கிச் செல்கிறது. தெருக்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது! சக்தியின் புறக்கண் முன்னே தாத்தா சொன்ன வீரக்கதைகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றுகிறது. தாத்தாவின் உருவம் லெஃப்டினன்ட் ஜெனரலாக. மாவீரனாக சட்டென்று நிமிர்ந்து நின்று அவருக்கு வணக்கம் சொல்கிறான்! அதே கம்பீரத்துடன் காரில் ஏறி அமர்கிறான்! பெற்றவள் நெஞ்சிலும் அந்தக் கம்பீரம் குப்பென்று எழுகின்றது!.

– செவ்வந்திப் பூக்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2007, வெளியீடு: சிங்கை தமிழ்ச்செல்வம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *