“நான் ஒரு நல்ல சம்பளம் என்று சம்பாதித்து இந்த குடும்பத்திற்கு கொடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. ஏதோ இன்று நீ ஒரு தொகை நிரந்தரமாக சம்பாதிப்பதால்தான் குடும்பம் ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நம் குழந்தையின் மனதில் ஆகாத கனவுகளை வளர்ப்பது நல்லதல்ல. ஆனந்த் நன்றாகத்தான் படிக்கிறான் என்றாலும் பல லட்சங்களை கொட்டி அவனை மருத்துவம், தொழில் நுட்ப்பம் போன்ற உயர் கல்விகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பது என்பது நம்மால் இயலாத ஒன்று. அவன் திறமைக்கும் தகுதிக்கும் எந்த உயர் கல்வி அமைந்தாலும் அதனையும் சரஸ்வதி தேவியின் திரு அருளால் அமைந்த கல்வி வாய்ப்பு என்று படித்தால் முன்னேற்றம் தானாக வரும்” என்று தன் இயலாமையை சால்ஜாப்புகளால் நியாயப்படுத்தி மனைவியை மட்க்க முயன்றான் ஹரிஹரன்.
லக்ஷ்மியும் “எனக்கு குடும்ப நிலை புரியாமல் அவனை நான் செல்லம் கொடுத்து ஒன்றும் குட்டிச்சுவர் ஆக்கவில்லை. அவன் திறமைக்கு ஒரு நல்ல உயர் கல்விக்கு அவன் முயற்சி செய்ய பெற்றோர்களான நாம் உதவி செய்யவில்லை என்றால் பின் அவனுக்கு யார்தான் உதவி செய்வார்கள்?” என்று விட்ட பிரம்மாஸ்திரத்திற்க்கு ஹரியிடம் பதில் இல்லை என்றாலும் “உன் சக ஊழியர்கள் யாரோ தன் குழந்தைகளை பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதை உன் காதில்ப் போட்டு உன்னை சரியாக உசுப்பேற்றி விட்டிருக்கிறார்கள். நீயும் உன் அலுவலகத்தில் பேசும் வம்பால் வீட்டில் வல்லடி பண்ணுகிறாய்” என்று குறுக்கில் பாய்ந்து தலைக்கு வந்த அஸ்திரத்திலிருந்து தப்பிக்க வாதாடினான் ஹரிஹரன். பக்கத்து அறையில் படித்துக் கொண்டிருந்த ஆனந்திற்கு இவர்கள் சற்றே குரல் உயர்த்தி வாதடியது படிப்பிலிருந்து கவனத்தை சிதறடித்தது. தன் அரையாண்டுத் தேர்வின் தேர்ச்சி அறிக்கையில் அப்பாவின் கையொப்பம் வாங்க வேண்டியது நினைவுக்கு வரவே அதனை எடுத்துக்கொண்டு முன் அறைக்குள் நுழைந்தான்.
“அப்பா. காலாண்டுத் தேர்வில் சருக்கிய நான் இந்த அரையாண்டுத் தேர்வில் பள்ளி முதல் மாணவன் என்று மட்டுமல்லாமல் முக்கியமான நான்கு பாடங்களில் முழு மதிப்பெண்ணும் பெற்றதற்கு முக்கிய காரணமே நீங்கள் சென்ற மாதம் முழுவதும் எனக்கு அளித்த பயிற்சிதான். பயிற்சி வகுப்புகள் செல்பவர்கள் யாரும் இதை சாதிக்கவில்லை. நாம சரியான டீமாக டீ வி’யில் சினிமாவும் பார்த்தோம், கிரிக்கெட் ஆட்டமும் பார்த்தோம் என்பதால் டென்ஷன் இல்லாமல் படிக்கவும் செய்தோம். நீஙகள் அன்று ஒரு இஞ்சினீயராகி சாதித்தது போல நானும் ஏதாவது சாதனை உயர் படிப்பு படிக்கனும்னு அம்மாக்கிட்ட நான்தான் சொன்னேன். நீங்களே எனக்கு ஏன் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியையும் அளிக்கக் கூடாது? நாம சாதிக்கிற டீமுப்பா” என்று தேர்ச்சி அறிக்கையை நீட்டிய பேச்சு கிண்டலோ என்று ஹரிஹரன் சந்தேகப்பட்டான்.
“உனக்கு நோகாமல் நுங்கு தின்ன வேண்டும். டீ வி, விளையாட்டு, நண்பர்களுடன் கூத்து என்று எதையும் தியாகம் செய்ய தயாரில்லாமல் அப்பாவின் தலையை உருட்டுகிறாய். மயிலாப்பூரில் இருக்கும் என் நண்பனின் மகள் அண்ணா நகருக்கு தினமும் சென்று பயிற்சி வகுப்புகளில் படிப்பதால் அவளின் தந்தை அவளுக்கு படிப்பைத் தவிர இதர எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டான். அவளும் டான்ஸ் பாட்டு என்று எல்லாவற்றையும் விட்டதோடல்லாமல் வீட்டிலும் டீ வி கனெக்ஷன் கட் என்று படிப்பாளியாகி விட்டாள். இதெல்லாம் உனக்கும் உன் அம்மாவிற்க்கும் கசக்கும் என்பதால் இப்படி சதி செய்கிறீர்களாக்கும்? நான் இஞ்சினீயரிங் படிப்பு படித்து இருபத்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. போன வருடம் முழுவதும் ஏதோ ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்யலாம் என்று முயன்றேன். இப்பொழுது ஏதாவது இன்சுரன்ஸ் சம்பந்தமாக செய்யலாமா என்று தகவல் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். என் தலைதானா கிடைத்தது உங்கள் விளையாட்டிற்கு? என்று ஹரி சற்று கலக்கத்துடன் புலம்பிக் கொண்டே தேர்ச்சி அறிக்கையில் கையொப்பமிட்டான்.
“அப்பா. அண்ணாநகர் பயிற்சி வகுப்பில் பாதி நாட்க்களுக்கு மேல் ஆசிரியர்கள் வருவதில்லை என்பதால் மாணவர்கள் அங்கு அருகில் இருக்கும் நண்பர்கள் வீட்டிற்கு சென்று டீ வி’தான் பார்க்கிறார்கள். பயிற்சி வகுப்பில் மாணவ மாணவியரை ஆசிரியர்கள் வரும் வரை மொட்டை மாடியில் சென்று படித்துக் கொண்டிருங்கள் என்று கூறி அனுப்பி விடுகிறார்களாம். அந்த மொட்டை மாடிகளில் நடப்பதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கும் நிலை எனக்கு வேண்டாம். பல லட்சம் வாங்கும் பத்தில் ஒன்றில் கூட ஐ ஐ டி போன்ற தரமான உயர் கல்விக்கு தேறியவர்களை காண்பது கடினம். ஆனால் நீங்கள் பயிற்சி அளித்தால் நான் சாதிப்பேன்” என்று கூறிய ஆனந்தின் குரலில் பணிவும் பரிவும் இருப்பதை தம்பதியர் இருவரும் உணர்ந்தனர்.
“ஆமாங்க. நீங்க எதுக்குங்க நல்ல படிப்பு படிச்சுட்டு ரியல் எஸ்டேட், இன்சுரன்ஸ் என்று நாலு காசுக்கு நாய் பொழைப்பு பார்க்கணும். வீட்டுல இப்போ நீங்க இருப்பது நம்ம ஆனந்துக்கு தெய்வம் செய்யும் அனுக்கிரகம். நீங்க அவனுக்கு நுழைவுத் தேர்வு பயிற்சிக்கு உதவியா இருந்தா பல லட்சம் வீட்டுக்கு சம்பாதித்ததாகதான் கணக்கு. இந்த நல்ல வேலையை வீட்டிலிருந்து செய்துக் கொண்டே அதையும் விட வேறு நல்ல வேலை வெளியில் கிடைக்குமான்னு இந்த ஒரு வருடம் முயற்சிப் பண்ணுங்களேன். நாங்களும் உங்க தலையை உருட்டாமல் வேறு யார் தலையைப் போய் உருட்டுவோம்? ஆனந்தின் கூட்டணியில இப்போ உங்க தலையை உருட்டினா அதிர்ஷ்டம்மா தாயமும் பன்னிரெண்டுமால்ல விழுது” என்று பரிந்து பேசிய லக்ஷ்மியின் பேச்சில் ஏதோ ஞானம் பெற்றது போல் ஹரிஹரன் உணர்ந்தாலும் உஷாராக “நாளைக்கே ஆரம்பிக்கலாமே. ஆனால் அடுத்தடுத்த தேர்ச்சி அறிக்கைகளும் நான் கையெழுத்து போடும் தரத்தில் இல்லை என்றால் உங்க ரெண்டு பேரையும் கொன்று போட்டு இன்சுரன்ஸ் பணம் பார்த்திடுவேன்” என்று சீரியஸான ஜோக்கடித்து தூங்குவதற்கு திரும்பி படுத்துக் கொண்டான் ஹரி. ஒரு வருடமாக தூங்காத தூக்கத்தை இன்று தூங்குவார் என்று உணர்ந்து லக்ஷ்மியும் கண் மூடினாள்.