கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 16, 2023
பார்வையிட்டோர்: 2,877 
 
 

பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5

”ஆமாம், மங்களம் படிப்புங்கறது ஒரு தெம்பு குடுக்கும். அந்தக் காலத்தில பெண்கள் அதிகம் படிக்க மாட்டா. .அதுக்குத் தான் காலம் எப்படி இருக்குமோன்னு நெனச்சு கஷ்டகாலம் வந்தால் சமாளிக்க நகை, வெள்ளிப் பாத்திரம்னு குடுத்தா. ஆனால் இல்லாதவா எங்க போவா? தன் பெண்ணை விடக் கிட்டத்தட்ட இரு மடங்கு பெரியவருக்கு இரண்டாந்தாரமா கட்டிக்குடுப்பா. அந்தக் காலத்தில் படிக்காததால பொம்மனாட்டிகளுக்கு வாய்ஸே கிடையாது. ‘மேல் ஷாவனிஸம்’ அதனால அதிகம். அவாளா எதுவும் செய்யக் கூடாது. ஒரு பிள்ளைத் தாய்ச்சி தன் குழந்தைக்கு வீட்டு நெல்லை கொஞ்சம் குடுத்து பிஸ்கெட் வாங்கித் தந்தான்னு கொழுந்தன் கோள் மூட்டிக் குடுத்து அடிச்சே கொன்னுட்டான் அவ புருஷன். இன்னொரு கேஸ்ல ஒரு பொண்ணுக்கு லூகோடெர்மா, அதான் ஒடம்பெல்லாம் வெள்ளையாகுமே, அது வந்துடுத்துன்னு தள்ளி வெச்சுட்டான் அவ புருஷன். அவ தையல் வேலை பண்ணி வயத்தை கழுவிண்டிருந்தா.

அந்தக் காலத்தில் வீட்டுக்கு வந்து உட்கார்ந்துட்டா பெண்ணை வாழாவெட்டின்னு சொல்லிடுவாளோன்னு பயந்தே கல்யாணம் பண்ணிப் புக்ககம் போகும் போதே, ’கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னு அனுசரிச்சுப் போகணும். நீ அங்கே தான் இருக்கணும். ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் கண்ணைக் கசக்கிண்டு இங்கே வந்து நிக்கப்படாதுன்னு சொல்லித் தான் அனுப்புவா. அதனால வாழ்க்கை சரியில்லைன்னா பெண்கள் பாடு திண்டாட்டம் தான். இந்தக் காலத்தில புக்ககம் அல்லது கணவன் சரியில்லேன்னா விவாகரத்து பண்ணிட்டு அவா பாட்டுக்கு வேலைக்குப் போயித் தன் வயித்துப் பாட்டை கவனிச்சுக்கறா. நல்ல இடமா கெடச்சா மறுமணம் பண்ணிக்கறா.  பெண்களுக்கு இந்தத் தைரியம் குடுத்ததே படிப்பு தான்.

வாழ்க்கையில் என் பால்ய சிநேகிதி ஒருத்தி இருந்தா. வெள்ளை வெளேர்னு சுருட்டை தலை முடியோட ரொம்ப அழகா இருப்பா. அவளோட அப்பாவுக்கு கஷ்ட ஜீவனம். அதனால அவ கல்யாணத்துல அவ அம்மா, அப்பா  சீரெல்லாம் ஒண்ணும்  தரலை. அவ அழகைப் பாத்து மாப்பிள்ளை வீட்டார் கல்யாணம் பண்ணிண்டா. ஆனால்  புருஷன் அல்பாயுசுல பாம்பு கடிச்சு செத்துப் போயிட்டான். அந்தப் பொண்ணைத் தலை முடியை நீக்கி 9 கஜக் காவிப் புடைவையைக் கட்ட வெச்சு ரவிக்கையும் போட விடாம அலங்கோலம் பண்ணிட்டா அவள் புக்காத்துக்காரா. எந்த சுப காரியத்திலும் அவள் தலை காட்டக் கூடாது. செக்கு மாடு மாதிரி அவ உழைப்பையும் வாங்கிண்டு மாமியார் எப்ப பாத்தாலும் துக்கிரி, துடைகாலின்னு திட்டிண்டே இருப்பா. ஒரு சாண் வயத்துக்காக அந்தப் பெண் படும் பாடு பாக்கிறவாளைக் கலங்க வெக்கும். பாவம், படிச்சிருந்தா அவ்வளவு கஷ்டம் வந்திருக்குமா? கடைசியில் அந்தப் பெண்ணுக்கும் யார் மூலமோ விடிவு காலம் வந்தது. அதே ஊர்ல  ஒரு வசதியான வயசான தம்பதி தங்களுக்கு ஒத்தாசையா இருக்கும்னு அவளை அழைச்சுண்டு போயிட்டா. அப்போ எல்லாம் இந்தக் கஷ்டமெல்லாம் வேண்டாம்னு சில பேர் உடன்கட்டை ஏறிடுவா. அதாவது அவளையும் படுக்கச்சொல்லி ஒண்ணா எரிச்சுடுவா, அப்படித்தான் ஒருத்தி உடன்கட்டை ஏறச் சம்மதிச்சு எரிச்சல் தாங்காம எல்லாரும் போனதுக்கப்புறம் அறைகுறையா எரிஞ்ச உடம்போட வீட்டுக்கு வந்து அவ தோட்டத்து மரத்துல உக்காந்துட்டாளாம். மாடு கறக்க வந்த அவளோட பொண்ணு, ’அப்பா தான் போனா, அம்மாவும் போயிட்டாளே’ன்னு சொல்லி அழறதக் கேட்டு அந்த அம்மா மரத்திலேந்து ’ நா போகலடி. இதோ இருக்கேண்டி கொழந்தேன்னு’ சொல்றதக் கேட்டு அம்மாவின் எரிஞ்ச உடம்பை பாத்து அதிர்ச்சியாகி அந்தப் பொண்ணு செத்துப் போச்சாம். அப்புறமா ஊர்க்காரா அந்த அம்மாவை மறுபடியும் இழுத்துண்டு போய் எரிச்சாளாம். அந்தக் கதை பொய்யோ நெஜமோ தெரியாது. ஆனால் நான் கேள்விப் பட்டிருக்கேன். பெண்டிங்னு ஒரு வெள்ளக்கார கவர்னர் இது மாதிரி உடன்கட்டை ஏற ஒரு பெண்ணை வலுக் கட்டாயமா இழுத்துண்டு போறதைப் . பாத்து அதைத் தடுத்து நிறுத்தித் தானே அந்தப் பெண்ணைக் கல்யாணமும் பண்ணிண்டான். அந்த வழக்கத்தையும் ஒழிச்சான். அதுலேருந்து தான் விதவை மறுமணம் செஞ்சுக்கிறதும் வந்தது. உடன்கட்டை ஏறுவதும் ஒழிஞ்சுது.

”இந்தக் காலத்துல பாரு, எல்லாத் துறைகளிலேயும் பெண்கள் நுழைஞ்சுட்டா. ஆம்பிளைக்குச் சமமா ஸ்கூட்டர், பைக், பஸ், ரயில், ப்ளேன்னு எல்லாம் ஓட்டறா. கல்பனா சாவ்லா, ஸுநிதா வில்லியம்ஸ் மாதிரி விண் வெளியைக் கூட விட்டு வெக்கல. படிப்பு அவாளுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்திருக்கு. படிக்கலைன்னாலும் சில பேருக்குக் காலம் துணிச்சலைக் கொடுத்திருக்கு. யாரோ ஒரு பெண் தன் கணவனுக்கு ஒத்தாசையாக பிணம் எரிக்கும் வேலையைச் செஞ்சுண்டிருந்தா. அவன் வியாதி வந்து படுத்தவுடனே இவளே எல்லாத்தையும் பாத்துக்க ஆரம்பிச்சுட்டா. அந்தப் பொண்ணு கிட்டே ஒருத்தர் கேட்டார், ’ஏம்மா, இந்த வேலை பண்ணறியே, பயமா இல்லயான்னு அதுக்கு அந்தப் பொண்ணு, “பயத்தைப் பாத்தா என் கொழந்தைகளோட வயிறு எப்படி ரொம்பும்? எனக்கு வேற வேலையும் கெடக்கல, அதனால தான் இந்த வேலை பாக்கறேன், மொதல்ல கொஞ்சம் பயமா இருந்தது, போகப் போக சரியாப் போச்சு. உசுரோட இருக்கறவா கிட்ட தான் பயம்னு,” சொன்னாளாம். மேலும், ‘அந்தக் காலத்துல பொம்மனாட்டிகள் சுடுகாட்டுக்கு போகப்படாதுன்னு விதிச்சிருந்தா. அந்த அசட்டுத் தடைகளைத் தகர்த்துண்டு வெளியே வர காலம் கத்துக் கொடுத்திருக்குன்னு,’ சொல்லி முடிச்சாளாம். ”

வாசலில் ஸ்கூட்டர் சப்தம் கேட்டது. நிம்மி, ”அம்மா, வந்துட்டாப்போல இருக்கு,” என்று எழுந்து கதவைத் திறந்து பார்த்தாள். ஆம், நிம்மியின் அம்மா ப்ரியா தான் வந்திருந்தாள். உள்ளே வந்து உட்கார்ந்தவள், ”ஏண்டி, வந்தா வந்த இடம், போனா போன இடம்னு அங்கேயே உக்கந்துடறதா? அம்மா கவலப்படுவாளே, ஃபோன் பண்ணுவோம்னாவது தோணித்தா? அதனாலத் தான் பொறப்பட்டு வந்தேன். ரொம்ப நாளாச்சு. இவாளையும் பாத்தாப்பல இருக்கும்” என்றாள்.  நிம்மி, ”அம்மா கொள்ளுப்பாட்டி பழங்கதையெல்லாம் சொல்லிண்டிருந்தா, டைம் போனதே தெரியலை,” என்றாள்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *