கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 3,061 
 
 

பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4

”ஆமா, உங்கம்மா எங்கடி? கூட்டிண்டு வரலையா?” என்று கேட்டவாறே தட்டில் கை முறுக்குகளை வைத்துப் பேத்திக்கு கொண்டு வந்தாள் தைலாவின் பெண் மங்களம்.  ”இல்ல, பாட்டி, அம்மா அநாதை இல்லத்துக்கு சாப்பாட்டுப் பொட்டலம் எடுத்துண்டு போயிருக்கா. இன்னிக்கு எங்க அந்தப் பாட்டிக்கு திதி. நாளைக்கு சுமங்கலி ப்ரார்த்தனை. யாராவது தெரிஞ்சவா கஷ்டப்படற நெலமைல இருக்கிற ஒரு மாமியைக் கூப்பிட்டு வடை, பாயசத்தோட சாப்பாடு போட்டு 6 கஜப் புடவை, ரவிக்கைத் துணி வெத்தலை பாக்கோடு தக்ஷிணையும் வெச்சுக் குடுத்துடுவா,” நிம்மி கூற, மங்களம் கேட்டாள், ”ஏண்டி, இது எப்ப தீர்மானம் ஆச்சு? எங்கிட்டே சொல்லவே இல்லியே?”

”இல்ல பாட்டி, உங்க கிட்டே சொன்னா இப்படி எல்லாம் பண்ணாதே, குடும்பத்துக்கு ஆகாதுன்னு சொல்லுவேளோன்னு நெனச்சு அம்மா சொல்லல. நாம் செய்யும் வேலைக்கு ஒரு அர்த்தம் இருக்கணும். சும்மா எல்லாரும் பண்றான்னு யோசிக்காம செய்யறது வேஸ்ட் இல்லயா? அம்மா என்ன சொன்னா தெரியுமா? செத்துப் போயாச்சுன்னா உடம்பை எரிச்சுடறோம். அந்த உடம்பில இருக்கிற ஆத்மாக்கு அழிவில்லை. அது வேறு பிறவி எடுத்துடும்னு சொல்றா. அப்ப நாம பண்ற ச்ரார்த்தம் ஆத்மாவுக்கு இல்ல அழிஞ்சு போன உடம்புக்குத் தானே. அப்படியிருக்கச்சே கண்ணெதிரில் தெரியும் ஜீவனுக்கு உணவளிப்பது தானே ச்ரார்த்தம். இருக்கற வரைல கவனிக்காம் போனப்புறம் எதுக்கு இந்தக் கூத்தெல்லாம்? இதைக் கேட்டவுடன் அப்பாவுக்கே அம்மா சொல்றது நியாயம்னு புரிஞ்சுது. என்ன கொள்ளுபாட்டி, எங்கம்மா செய்தது சரி தானே?” என்று கேட்ட நிம்மியிடம், ”நீ முதல்ல பாட்டி குடுத்த முறுக்கைத் தின்னுட்டு காஃபி குடி. உனக்கு அப்புறமா விளக்கம் சொல்றேன்” என்றாள் தைலா. முறுக்கை வாயில் போட்ட நிம்மி மங்களத்திடம், ”என்ன பாட்டி ஒண்ணு குண்டா சவுக்குன்னு, இன்னொண்ணு மெலிசா மொறு மொறுன்னு இருக்கு?” என்று கேட்க, ”மெலிசா சீரா சுத்தினது கொள்ளுப்பாட்டி, குண்டு நான்,” என்றாள் மங்களம். ”வாவ், கொள்ளுப் பாட்டி யூ ஆர் க்ரேட். இந்த வயசிலும் துளிக் கூடக் கோணாம கை நடுங்காம மெலிசா சுத்தியிருக்கேளே?” என்று நிம்மி ஆச்சரியப்பட, ’அதுக்கு என் மாமியாருக்கு தான் மெடல் குடுக்கணும். ஏன்னா அஞ்சு, ஏழு சுத்து கல்யாணச் சீர் முறுக்கே வீட்ல தான் சுத்துவா. என்னையும் சுத்தச் சொல்லுவா. எனக்கு வராது. குத்திக் காட்டிண்டே இருப்பா. ரோஷம் வந்து திரும்பத் திரும்பச்  சுத்திப் பார்த்துக் கத்துண்டுட்டேன்,” என்றாள் தைலா. 

வேலையை முடித்து விட்டு வந்து உட்கார்ந்த மங்களம், ”நிம்மி , நீ இதைப் பெரிசாச் சொல்றியே, எங்கம்மா அந்தக் காலத்துல ஸ்வெட்டர் போடுவா, இத்தனைக்கும் இப்ப மாதிரி ஸ்வெட்டர் ஊசி கிடையாது, கொடக்கம்பி தான். க்ரோஷா போடுவா. தன் ரவிக்கையை வெட்டித் தானே தெச்சுப்பா, தையல் மிஷினும் கிடையாது. ஆனால் கையாலேயே மணிமணியாய் தைப்பா. மளிகைக் கடையில மட்ட ரக கம்பளி நூல் மற்றும் க்ரோஷா நூலும் கெடக்கும் அதை வெச்சுத் தான் போடுவா. பாட்டில்ல மணி பொம்மை எல்லாம் கம்பி வைத்து இறக்கி அழகா பண்ணுவா,” என்று சொல்ல அதைக் கேட்டு நிம்மி, ”ஏன் பாட்டி உங்கம்மா கிட்டேந்து நீங்க எதுவும் கத்துக்கலையா?” என்றாள். ”எனக்கு அதிலெல்லாம் ஆர்வம் இல்ல, எங்கப்பாவுக்கு நான் பெரிய பாடகியாவோ அல்லது வயலின் வித்தகியாவோ வரணும்னு ஆசை. வாத்தியார் ஏற்பாடு பண்ணி வயலினும் வாங்கி குடுத்தார். எனக்கு அதிலும் ஆர்வம் இல்லை. எனக்குப் படிக்கணும்னு ஆசை. அம்மாவும் தான் பட்ட கஷ்டம் தன் குழந்தைக்கு வேண்டாம்னு நான் படிக்கிறதை ஊக்குவிச்சா. எங்கம்மா அந்தக் காலத்துல தப்பிப் பொறந்துட்டா. இந்தக் கால ஐடியாவெல்லாம் அப்பவே எங்கம்மாவுக்கு தோணியிருக்கு. அதனால தான் கைவேலையெல்லாம் தெரியாவிட்டாலும் பரவாயில்லன்னு வற்புறுத்திக் கத்துக் குடுக்கலை ஏன்னா கைவினை பொருள்கள் கடையில் விலைக்கு கிடைக்கும். படிப்பை அப்படி வாங்க முடியுமா?” என்றாள் மங்களம். நிம்மி, ”ஸூப்பர், கொள்ளுப் பாட்டி”, என்று தைலாவைக் கட்டிக் கொண்டாள்.

நிம்மி, ”கொள்ளுப் பாட்டி நான் உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்டேனே, பேச்சு திசை மாறிப் போனதுல மறந்துட்டேளா?” என்றாள். ”மறக்கலடி கண்ணு. அதைத் தான் சொல்ல வறேன். உங்கம்மா இப்ப செஞ்சது ரொம்ப கரெக்ட். நான் அந்தக் காலத்து மனுஷியா இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமா சிந்திக்கிறவ. அந்தக் காலத்தில் பட்ட பாடுகள் எனக்கு பாடம் புகட்டிடுத்து. என் மாமியாருக்கு மாமியார் தெவசம், அடுத்த நாள் பொண்டுகள், அதாவது ஸுமங்கலி ப்ரார்த்தனை. கிராமமாக இருந்ததால் தாயாதி, பங்காளின்னு நெறைய பேர் வருவா. பொண்டுகளுக்கும் அப்படித்தான். பொண்டுகளாவது பரவாயில்ல. பண்டிகை சமையல் மாதிரி தான். ஆனால் தெவசத்துக்கு மிளகு ஜீரகம் போட்ட சமையல். ஐட்டங்கள் நெறைய இருக்கும். பரிமாறினதுல பாதிச் சாப்பாடை இலைல ஒதுக்கி வெச்சுடுவா. அதுக்கு காலையிலிருந்து கஷ்டப்பட்டு செஞ்சது வீணாகிறதேன்னு வருத்தமா இருக்கும். இந்த மூட நம்பிக்கையிலிருந்து என்னிக்கி வெளியே இவா வரப் போறான்னு எனக்குத் தோணும்  குதிரைக்கு ஒரே பாதையில் போகறதுக்கு கண்ணுக்கு ரெண்டு பக்கமும் தடுப்பு போட்டிருப்பா. அது போலத்தான் அந்தக் காலத்து மனுஷாளும். யோசிக்க மாட்டா. பொம்மனாட்டிகள் சொல்லும் எடுபடாது. அதனால் நான் என் சிந்தனைகளை மனசுக்குள்ளேயே பூட்டி வெச்சுப்பேன்.”

மங்களம், ”அம்மா, நம்ம தெருக் கோடியில் செல்லம்னு ஒருத்தி இருந்தாளே” என்று கூற தைலா, ”ஆமா, அவ புருஷன் கூட ஏதோ கார் விபத்தில செத்துப் போனான் இல்லையா? அவ தான் ரொம்ப நாள் முன்னாடி வீட்டைக் காலி பண்ணிண்டு போயிட்டாளே?” என்றாள். ”கரெக்ட் அவ தான். நேத்திக்கி அவளை மார்கெட்ல பாத்தேன். காரும் கலப்பையுமா இப்ப ஜம்முனு இருக்கா. அவ வேலைக்குப் போய் பிள்ளையை டாக்டருக்குப் படிக்க வெச்சிருக்கா. அவன் மேற்படிப்பு படிச்சு ஸர்ஜனாக வேலை பாக்கறானாம். வீடு இருக்காம். அம்மாவை தாங்கறானாம். கேட்கவே நன்னாயிருந்தது. அவ சொல்றச்சே அந்த ஸந்தோஷத்த பாக்கணுமே!” என்று வியந்து மங்களம் சொன்னவுடனே தைலா தொடர்ந்தாள்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *