தயவு செய்து கை போடாதீர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 10,565 
 
 

இரண்டு மணிக்குப் பிறகான இந்த நேரம்தான் சற்று ஓய்வாயிருக்கும் – ஓய்வு எனக்கல்ல.. கடைக்குச் சாப்பிட வருபவர்கள் தொகை குறைவாயிருக்கும் என்று அர்த்தம். கதிரை மேசைகளை ஈரத்துணியினாற் துடைத்துக் கடையைக் கூட்டித் துப்பரவு செய்யத் தொடங்கினேன். காலையில் ஒருமுறை கடை திறப்பதற்குமுன் கூட்டினால்.. பிறகு இப்பொழுது.

‘வயித்தி…! என்னப்பா அனுங்கிக்கொண்டு நிற்கிறாய்…? கெதியாய் அலுவலைச் செய்துபோட்டு… வடையை எடுத்தந்து அலுமாரியிலை போடன்!” – இது முதலாளி. அவரது பாணியே அதுதான்.. அதட்டல்.

எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. அவர் வயித்தி என்று கூப்பிடுவதிலேயே நக்கல் இருக்கிறது. வயித்தி என்பதில் வயிறு என்ற பதம் அடங்கியிருக்கிறதாம்! முதலாளிதான் சொல்லுவார் – நல்ல பேர் வைச்சாங்களடா உனக்கு…! வயித்தியெண்டு…! நீ சாப்பாட்டைக் குறைச்சுப் பிடிச்சியெண்டால் உந்த வயிறு குறையும்! – எனக்கு ஊதியமாக நூற்றிமுப்பது ரூபாயும் மூன்றுவேளைச் சாப்பாடும் கிடைக்கிறது. தெரியாதா… அந்த மூன்றுவேளைச் சாப்பாட்டுக்காகத்தான் இந்தக் கதையெல்லாம்! ஆனால் அதை ஒரு கதையாகப் பெரிசுபடுத்தக்கூடாது.

வடைகளை எடுத்துவர பின்கட்டிற்கு ஓடினேன். முதலாளி… பெரிய முதலாளி… என மனசு எரிந்தது. எதையும் அவர் சொல்லுமுன்னரே செய்து நல்ல பெயர் எடுக்கவேண்டுமென்று நினைக்கிறவன் நான். அடுத்ததாக நான் செய்ய இருந்த அலுவலே இதுதான். ஆனால் அந்த மனுசன்… ஏதோ தான் இல்லாவிட்டால் இங்கு வேலையே நடவாது என்பதுபோலத்தான் கத்தும்.

சமையற்காரன் மணியம் மாவைத் தட்டையாக உருட்டி நடுவிலே துளையிட்டு… அவன் வடை சுடுவதில் வலு விண்ணன்! நின்ற நிலையில் ஒவ்வொன்றாக மாவை உருட்டி உருட்டி எண்ணெயில் போட்டு நூற்றுக்கணக்கான வடைகளைச் சுட்டுத்தள்ளுவான். எவ்வளவு சுறுக்காகச் செய்தாலும் அளவு பிசகாது. ஒரு கையாற் பொத்திப் பிடிக்கக்கூடிய சைஸ். ஒரு புளுகம் வந்தால்… மணியம் ஒவ்வொரு வடையிலும் இம்மியளவு மாவைக் குறைத்து உருட்டி வடைகளின் எண்ணிக்கையைக் கூட்டுவான். பிறகு முதலாளியிடம் போய் இவ்வளவு மாவில் இத்தனை வடை சுட்டேன் எனக் கூறி நல்ல பெயர் சம்பாதிப்பான். பந்தக்காரன்! இது எனக்கு எரிச்சலையூட்டினாலும் அவனோடு ஒன்றும் பேசுவதில்லை. மணியம் வயதிற் குறைவானவனானாலும் கொஞ்சம் தோற்றமான ஆம்பிளை. மட்டு மரியாதையில்லாமற் கதைப்பான். அவன் கதைப்பதைப் பார்த்தால் சிலவேளைகளில் கையைக் காலை மாறிவிடுவானோ என்றும் தோன்றும்.

வடைகளைக் குவியலாகக் கண்டதும் அடி மனதில் அமிழ்ந்து போயிருக்கும் ஆசையொன்று கொதியெண்ணெயிலிட்ட அப்பளமாகப் பொங்கியெழுந்தது – வடைகள்… சின்னச் சின்ன குண்டு குண்டான… குண்டு மணியைப் போன்ற வடைகள்…

ஒரு நாளைக்கெண்டாலும் அதுகளுக்குக் கொண்டுபோய்க் குடுக்கவேணும்.. சுப்புறு நினைவில் வந்தான். (எனது ஒரே மகன்.. ஐந்து வயது.)

‘என்னப்பா… யோசிச்சுக்கொண்டு நிற்கிறாய்…? எடுத்துக் கொண்டு போவன்!” மணியம் அடுப்புவெக்கையை என்னோடு தீர்த்தான். இவங்களுக்கு கொஞ்சமென்றாலும் அன்பு ஆதரவாகப் பேசவராதோ?

வடைகளை கூடையிற் சுமந்துகொண்டு வந்தபொழுது… மீண்டும்… ஒரு நாளைக்கெண்டாலும் அஞ்சாறு வடை கொண்டுபோய் அதுகளுக்குக் குடுக்கவேணும்.. – மனசு… மன்றாட்டமாக… பயபக்தியாக – சரி… பாப்பம்! – ஒவ்வொரு நாளும்தான் இந்த பார்க்கலாம் என்று பதில் கிடைக்கிறது. எப்பொழுதுதான் பார்க்கலாம் – என்கிற மனசு.

நெடுநாளாகத்தான் இந்த ஆசை மனசைப் போட்டு அலைக்கிறது. ஒரு வடைப் பார்சலை கனகமும் சுப்புறுவும் கண்டால் கண்கள் எப்படி ஆச்சரியத்தால் விரிந்து பிரமிக்கும்! ஆனால் ஐந்தாறு வடை வேண்டுவதென்றால் சாதாரண காரியமா? இப்பொழுது வடையின் விலை முன்னரை விட இரண்டு மடங்காகிவிட்டது. வெளியே பெற்றோலின் விலை ஏறியதால் இங்கு வடைகளின் விலையும் ஏறியது. இந்த விசித்திரத்தில் சொட்டைத் தீன்களுக்குச் செலவு செய்வதைப்பற்றி நினைக்கத்தான் முடியுமா? அதற்குக் கொடுக்கிற காசிற்கு ஒரு நாளையச் சீவியத்தைக் கொண்டுபோகலாம். பரவாயில்லை.. என நினைத்துக்கொண்டு ஒரே ஒரு நாளைக்கு வேண்டலாம். ஆனால் இதற்குள்ளேயே கிடக்கிறவன்… எத்தனை பேருக்கு இந்தக் கையாலே வடை பார்சல் பண்ணிக் கொடுக்கிறவன்… காசு கொடுத்து வேண்டுவதென்றால் மனசு பின் வாங்குகிறது.

முதலாளியிடமாவது வாயை விட்டுக் கேட்கலாம். விடிந்தாற் பொழுதறுதியும் அவருக்கென்றே உழைத்துக் கொடுக்கிறேன். (இது கனகத்தின் குற்றச்சாட்டு) கேட்டால் இல்லையென்றா சொல்லிவிடுவார்? கனகம் அடிக்கடி ஏசுவாள் – உங்களுக்கு ஒரு நேரகாலம் இல்லையோ? வீடுவாசல் இல்லையோ? – “பெண்டில் பிள்ளையில்லையோ..? விடிஞ்சாற் பொழுதறுதியும் அந்தக் கடையே கதியெண்டு கிடக்கிறியள்.. அந்த மனிசன் உங்களுக்கு என்னத்தை அள்ளிக் கொட்டுது?”

அவள் மடைச்சி. அவளுக்கு என்ன தெரியும்? முதலாளி எவ்ளளவோ நல்லவர். சந்தர்ப்பங்களில் சீறிச் சினந்தாலும் அவருக்கு எவ்வளவோ நல்ல மனசு! இல்லாவிட்டால் மூன்று வருடங்களுக்கு மேலாக என்னை நிரந்தரமாக இந்த வேலையில் வைத்திருப்பாரா? இந்தச் சாப்பாட்டுக்கடைக்கு வேலைக்கு வரும் பெடியள் வந்த சுவடு தெரியாமல் திரும்புகிற (அல்லது திருப்பப்படுகிற) சங்கதியெல்லாம் அவளுக்கு எப்படித் தெரியும்?

ஆனால் எனக்கென்னவோ அவரிடம் கேட்கவே மனசு வராது. அவரது கண்டிப்பான பேச்சுக்களாலும் அதட்டல்களாலும் அவரிடம் ஒரு பயம் கலந்த மரியாதையே ஏற்படுகிறது. கையை நீட்டிச் சம்பளம் வேண்டும் மனிசனிடம் எப்படி இதையெல்லாம் போய்க் கேட்டுக்கொண்டு நிற்பது என்ற எண்ணமும்.

ஒரு நாளைக்கு எப்படியும் கேட்கத்தான்வேண்டும். இதிலே கூச்சப்பட என்ன இருக்கிறது? இன்றைக்குக் கேட்கலாம்.. இன்றைக்குக் கேட்கலாம் என்று ஒவ்வொரு நாளும் நினைத்துக்கொண்டாலும் அலுவல் முடிந்து போகும் நேரத்தில் அநேகமாக வடை முடிந்து போயிருக்கும். வடை முடியாவிட்டால் முதலாளியின் மூட் குழம்பிப்போயிருக்கும்.

கூடையிற் கொண்டுவந்த வடைகளை கடையின் முன்பக்கத்திலிருந்த கண்ணாடி அலுமாரியிற் கொட்டியபோது சில வடைகள் கால் முளைத்த கோழிக்குஞ்சுகள் போல கீர்ர்..ரென மறுபக்கத்திற்கு உருண்டோடின. இதைப் பார்க்கும்பொழுது தப்பிப் பிழைப்பதற்காக அவை கைகளை விட்டு ஓடிப்போவதைப்போலிருந்தது. வருடக்கணக்காக அவற்றோடு உள்ள பரிச்சயம்தான் இப்படி உயிருள்ள சீவன்களோடு பழகுவதைப்போன்ற உணர்வைத் தருகிறதுபோலும். அல்லது ஒரு பார்சலை பிள்ளைக்குக் கொண்டுபோய்க் கொடுக்கவேண்டுமென்ற ஆசைதான் நாளுக்கு நாள் வளர்ந்து அப்படி அவற்றின்மேல் ஒருவித ஆசையும் பிரமையும் ஏற்படுகிறதோ என்றும் புரியவில்லை.

ஆனால் முதலாளி கதவின்மேல்.. தயவு செய்து கை போடாதீர்கள் என்ற வாசகத்தைப் பொறித்துவிட்டிருக்கிறார். யாராவது சிலர் வடையை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் நழுவிவிடுவார்கள்! கடையில் வேலை செய்யும் சில பெடியளும் கை போட்டு அமுக்கக்கூடும் என்ற சந்தேகம் முதலாளிக்கு! அந்தக் கட்டுப்பாடு எனக்குப் பொருந்தாது என்பதும் கதவைத் திறந்து கை போடும் உரிமை எனக்கு மட்டும் இருப்பதும்.. நினைக்கையில் ஏதோ கொம்பு முளைத்த மாதிரி உற்சாகம்!

இந்த யோசனையில் நின்றபொழுது முதலாளியின் அதட்டற் குரல் மீட்டது. ‘வயித்தி..! எங்கையப்பா ஏமலாந்திக்கொண்டு நிக்கிறாய்..? வந்த ஆக்களைக் கவனியாமல்?”

அப்பொழுதுதான் கவனித்தேன்.. இராமச்சந்திரன் ஐயா வந்திருந்தார். அவரிடம் என்ன வேண்டும்? என்று கேட்டு நேரத்தைச் சுணக்காமல் ஓடிப்போய் தட்டிலே வடைகளை எடுத்து வந்தேன். எனக்குத் தெரியும்.. இப்படி ஆட்களையும் அவர்கள் வருகிற நேரத்தையும் கொண்டே அவர்களது தேவையை அனுமானிக்க. என்றாலும் ஒரு சம்பிரதாயம்போல வருபவர்களிடமெல்லாம் முகத்தை மலர்த்தி.. – ஐயாவுக்கு? – என்று கேட்கவேண்டும்.

ஆட்கள் வருகை ஓரளவு கூடிக்கொண்டிருந்தது. அலுவலகங்கள் முடிகிற நேரமாதலால் சற்று அதிகமாகத்தான் இருக்கும். எல்லோரையும் முகம் கோணாமல் சுழன்று சுழன்று கவனிக்கவேண்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாய்ச்சலை என்னிடத்தில் தீர்த்துவிட்டுப் போகிறவர்களும் உண்டு. அதனால் சற்றும் சுணக்கம் ஏற்படாமல் சுழலவேண்டும். இப்படி – வாடிக்கையாக வருபவர்கள்.. எப்போதாவது ஒரு நாளைக்கு வருபவர்கள்.. கிராமப்பக்கத்திலிருந்து ரௌனுக்கு அலுவலாக வரும்பொழுது சாப்பாட்டுக்கு வருபவர்கள்.. எல்லோருக்கும் முகத்தைச் சுளிக்காமல் சேவை செய்யவேண்டும்.

இதற்குள்ளே மணியம் வந்து.. சீனி இல்லை என என்னிடம் முறைப்பாடு செய்தான். முதலாளியிடம் சொல்லிவிட்டு பக்கத்திலுள்ள கடைக்குச் சீனி வேண்டுவதற்காக ஓடினேன். இது எனக்குச் சந்தோஷத்தைத் தருகிற விஷயம். இதில் எனக்கு ஏதோ வெட்டு இருப்பதாக மணியம் சந்தேகப்படுவான். ஆனால் பக்கத்துக் கடையில் கடனுக்குத்தான் சாமான் வேண்டுவது. பிறகு முதலாளிதான் கணக்குத் தீர்ப்பது. ஒரு வெட்டுக் கொத்துக்கும் இடம் கிடையாது. சக தொழிலாளர்களுள் என்னையே ஒரு பெரியவனாகக் கணித்து முதலாளி அலுவல்களைக் கூறுவதுதான் சந்தோஷத்தைத் தருகிற விஷயம். இதனால் குசினிப் பக்கத்தை அடிக்கடி கவனித்து முதலாளியிடம் கூறி தேவையானவற்றை நேரத்துக்கு நேரம் வேண்டிப் போடுவேன். இப்படிச் செய்வதால் இந்தச் சாப்பாட்டுக் கடையை நானே நிர்வகிப்பது போன்ற திருப்தியும் ஏற்படுகிறது.

ஆனால் மணியம் சில வேளைகளில் நேரே முதலாளியிடம் போய்.. இன்ன சாமான் வேண்டும் என்று கூறிவிடுவான். எனது தலைமையைப் பறிப்பதற்குத்தான் அவனுக்கு இந்தக் குறுக்கால் போகிற புத்தி வருகிறது. ஆனால் யார் என்ன சொன்னாலும் முதலாளி என்னையே கூப்பிட்டு அனுப்புவார். இது அவருக்கு என் மேலேயே நிறைந்த நம்பிக்கை இருக்கிறது என்பதைத்தானே காட்டுகிறது?

இதனாற்தான்.. மறந்தும்கூட.. கடையிலிருந்து எதையும் ஒருபோதும் சுருட்டிக்கொண்டு போனதில்லை. அது பெரிய துரோகமான செயல். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது போல. சில சமயங்களில்.. – அஞ்சாறு வடையை தெரியாமல் எடுத்துக்கொண்டு போனால் என்ன.. – என்ற சபலமான எண்ணமும் தோன்றும். அடுத்த கணமே என்னை நினைத்துக் கூசிப்போவேன். சீ! என்ன மனசப்பா இது! என்று அடங்கிப்போவேன்.

ஒரு வடைப் பார்சலைக் கொண்டுபோய் சுப்புறுவிடம் கொடுக்க அவன் காணாததைக் கண்டவன்போல அந்தப் பார்சலைப் பிரித்து ஆவலோடு ஆசையோடு சாப்பிடுவதை மனசார நினைத்து.. நினைத்து..

எப்படியாவது ஒரு நாளைக்குக் கொண்டுபோய்க் குடுக்கவேணும்.. காசைக் குடுத்தெண்டாலும் வேண்டவேணும்.. காசைக் கொடுத்துக் கேட்டால் முதலாளி – என்னடா..? என்னட்டையே காசு நீட்டி வேண்டிற அளவுக்கு நீ பெரிய ஆளாகியிட்டியோ? – என்று நினைக்கவும்கூடும். அதைத் தவறாக தன்னை அவமதிப்பதாகக் கருதவும்கூடும்.

ஐந்து மணியளவில் கனகேந்திரன் ஐயாவும் சிற்றம்பலம் ஐயாவும் வந்தார்கள். முதலாளியைப் பார்த்து முகஸ்துதிச் சிரிப்புடன் படியேறினார்கள்.

‘என்ன..? சம்பளமெல்லாம் கூட்டியிருக்கிறாங்களாம்..?” என முதலாளி அவர்களிடம் கேட்டார்.. பெரிய மகிழ்ச்சியை முகத்தில் காட்டிக்கொண்டு.

‘என்னத்தை.. எழுபது ரூபாவைத்தானே கூட்டியிருக்கிறாங்கள்.. அது எந்த மூலைக்குக் காணும்?” எனக் கனகேந்திரம் ஐயா கூறியவாறு உள்ளே வந்து கதிரையில் அமர்ந்தார்.

என்ன.. எழுபது ரூபாய் கூட்டப்படுகிறதா? தட்டிலே வடையை எடுத்துவந்து அவர்கள் முன்னால் வைத்துவிட்டு அவர்களது கதைக்குக் காது கொடுத்துக்கொண்டு நின்றேன்.

‘வைத்தி..! ரெண்டு டீ கொண்டு வா!” – வடைகளைச் சாப்பிட்டுக்கொண்டே சிற்றம்பலம் ஐயா ஓடர் தந்தார்.

‘ரெண்டு.. கப் டீ!” எனது கத்தலைக் கேட்டதும் கனகேந்திரன் ஐயா காதைப் பொத்தினார். ‘பயப்பிட வேண்டாம்.. இனிக் கத்தமாட்டன்.. ஒருக்கால் கத்தினாலே அவனுக்குக் கேட்டிடும்..” என்றேன். ‘என்ன டீ மேக்கர் பக்கத்துக் கடையிலேயா நிக்கிறான்?” என்ன சிற்றம்பலம் ஐயா பகிடி விட்டார். சிரிப்பைக் காட்டினேன்.

டீயை அவர்கள் முன் கொண்டுவந்து வைத்துவிட்டு மனதுக்குள் குமைந்துகொண்டிருந்த ஒரு சந்தேகத்தைக் கேட்டேன்..

‘ஐயா..! எல்லோருக்கும்தான் சம்பளம் கூட்டுறாங்களோ.. அல்லது உங்களைப்போல பெரிய உத்தியோகத்தருக்கு மட்டும்தானோ?”

‘ஆர் சொன்னது எங்களுக்கு மட்டுமெண்டு..? எல்லாருக்கும்தான்..! சாதாரண ஒரு லேபரருக்கும் இது கிடைக்கும்.”

ஒரு சாதாரண லேபரராக என்னை நினைத்துக் கணக்குப் போட்டுப் பார்த்தேன். அப்பாடி! எனது சம்பளத்தில் சரி அரைவாசியளவு சடுதியாகக் கூடுமானால்..? அதிசயமாக இல்லையா? அதைக் கற்பனை செய்து பார்க்கவே இன்பமாக இருந்தது. அதற்குப் பிறகு நான் நினைத்தபடி வடைப் பார்சல் வேண்டலாம். கனகத்துக்கும் சுப்புறுவுக்கும் வயிறு நிறையச் சாப்பிடக் கொடுக்கலாம்.. உடுதுணிகள் வேண்டிக் குடுக்கலாம். இப்பொழுது கிடைக்கும் நூற்றுமுப்பது.. அதிலும் கழிவுகள் போக நூறு அளவில் கிடைக்கும். இதை வைத்துக்கொண்டு அன்றாடச் சீவியத்தைக் கொண்டுபோகிற ரகசியம் என்னைவிட கனகத்திற்குத்தான் தெரியும். இந்த அளவிற்காவது புருஷலட்சணத்தைக் காப்பாற்ற முடிகிறதென்றால்.. அது முதலாளியின் புண்ணியம்தானே?

என் முகத்தை கவனித்துக்கொண்டிருந்த கனகேந்திரன் ஐயா என்ன நினைத்தாரோ.. ‘ஏன் வைத்தி.. தனியார் துறைக்கும்தான் சம்பளம் கூட்டுறாங்களாம்.. உனக்கும் கிடைக்கும்.” என்றார்.

அந்தக் கணத்தில் ஒரு தலைகால் புரியாத சந்தோஷம் தோன்றியது. எனக்கு இது புதுமையாகவும் இருந்தது. உண்மையாக இருக்குமோ? பிறகு நினைத்தேன்.. கனகேந்திரன் ஐயா என்னோடு பகிடிதான் விடுகிறார். எனக்குச் சம்பளம் கூட்டப்படுவதென்றால் அது நம்பக்கூடிய கதையா? ஒருவேளை அப்படியும் நடந்தால்..? இந்த முறை சம்பளம் எடுக்கும்பொழுது முதலாளி அதையும் சேர்த்து இருநூறு ரூபாயாகக் கணக்குப் போட்டுத் தருவாரோ? ஓ! அப்படியென்றால் எவ்வளவு அருமை! ஒரு நாளைக்குச் சுடுகிற அவ்வளவு வடைகளையும் வேண்டிக்கொண்டு போய் வீட்டிற் படைக்கலாமே!

ஆனால்.. பொய்! அப்படி ஒருபோதும் நடக்காது. அதை நினைத்து வீணே மனக்கோட்டை கட்டுவானேன்? முன்னரும்தான் சம்பள உயர்வு.. சம்பள உயர்வு என்று கடைக்கு வந்து போகிறவர்களெல்லாம் கதைத்தார்கள். ஆனால் எனது சம்பளத்தில் ஒரு வெள்ளைச் சல்லியும் கூடவில்லையே? நான் இதற்கெல்லாம் லாயக்கானவனில்லை. விடியற்காலை ஐந்து மணிக்கே வேலைக்கு வந்து.. இரவு பத்துப் பதினொரு மணிவரை வேலை செய்கிறேனே.. நல்லநாள் பெருநாள் என்றுகூட இல்லாமல்.. சனி ஞாயிற்றுக் கிழமைகள் பாராமல்.. உழைக்கிறேனே.. இதைப்பற்றி யார் கவனிக்கிறார்கள்? – நினைப்பதோடு சரி. அதற்குமேல் மூச்சு வெளிப்படாது. கடையில் ஒரு வெத்திலை பாக்கு எடுத்தாலே கணக்கில் குறித்துவிடுவார் முதலாளி. பிறகு சம்பளத்தில் கழிக்கப்படும். இந்த விசித்திரத்தில் சம்பள உயர்வா?

எனக்குப் பெரிய கவலையாயிருந்தது. பத்து வயதிலேயே ஆச்சி இறந்துபோக அப்பு இன்னொருத்தியை மணந்துகொள்ள.. வீட்டைவிட்டு வெளியேறியவன் நான். பல கடைகளில் எடுபிடி வேலைக்காரனாக.. சைக்கிளில் சென்று கொமிசனுக்கு வியாபாரம் செய்பவனாக.. மிட்டாய் ஐஸ்கிரீம் விற்பவனாக.. இப்படிப் பல விதமான தொழில்கள். எல்லாமே நிரந்தரமற்ற தொழில்கள். நாற்பது வயதுக்குப் பிறகு.. இருபது வயது அழகியாக.. ஏழ்மையின் பிடியிலிருந்த கனகம்மாவைச் சந்திக்க நேர்ந்தது.. அவளைக் கைப்பிடித்து.. இப்பொழுது ஐந்து வயதில் சுப்புறு!

இதையெல்லாம் நினைத்துக்கொண்டிருந்த பொழுது இனம்புரியாத வேதனையொன்று நெஞ்சை அலைக்கத் தொடங்கியது. கனகத்தையும் சுப்புறுவையும் நினைக்கையில் அழுகையே வந்துவிடும்போலிருந்தது. அநாதையாக ரோட்டு நாய் போலத் திரிந்த எனக்கு வந்து சேர்ந்த பந்தங்கள்! அதுகளோடு எப்பொழுதுதான் சந்தோஷமாக இருந்திருக்கிறேன்?

காலையில் சுப்புறு எழுவதற்கு முன்னரே வெளிக்கிட்டால் பிறகு அவன் உறக்கத்திற்குப் போன பின்னரே வீட்டுக்குப் போகிறேன். படுக்கையில் கனகம் குறை நிறைகளைச் சொல்லுவாள்.. மௌனமாகவே கிடப்பேன். அந்தப் பிரச்சினைகளுக்கு அவள்தான் தீர்வு காணவேண்டும். நான் கொடுக்கும் சொற்ப பணத்தை வைத்துக்கொண்டு எப்படித்தான் சமாளிப்பாளோ?

பொழுது இருட்சியடைந்து கொண்டிருந்தது. கடைக்கு எத்தனையோ பேர் வந்து போகிறார்கள். எல்லோரையும் கவனிக்கிறேன். ஆனால் வேதனைச் சுமையொன்று நெஞ்சை அழுத்திக்கொண்டிருக்கிறது. என்னவென்று தெரியாத வலி. ஏதோ ஒரு பயம். அது பயமா? அல்லது கவலையா? எதுவோ இல்லாமற் போய்விட்டமாதிரி.. ஏதோ ஒரு தவறு செய்துவிட்டமாதிரி.. எதையோ இழந்துவிட்ட மாதிரி..

எவ்வளவோ முயன்று பார்த்தும் கவலையை அடக்க முடியவில்லை. பிறகு.. ஒரு முடிவெடுத்துக் கொண்டு முதலாளியிடம் போனேன்.

காசு மேசையில் இருந்த முதலாளிக்கு அண்மையாகச் சென்று.. கதைக்கத் தோன்றாததால் பேசாது நின்றேன். எனது வித்தியாசமான தோற்றத்தைப் புரிந்துகொண்டு போலும்…

‘என்ன வயித்தி..? ஒரு மாதிரி நிக்கிறாய்?” எனக் கேட்டார் முதலாளி.

பதில் பேசமுடியாமல் இருந்தது. தலையையும் நிமிர்த்த முடியாமலிருந்தது. துக்கம் முட்டிக்கொண்டு நின்று தொண்டையில் நோவெடுத்தது. கதைப்பதற்காக வாயைத் திறந்தால் அழுகை பொத்துக்கொண்டு வந்துவிடுமோ என்றும் தோன்றியது.

‘என்ன வேணும்..? சொல்லு..! பயப்படாமல் கேள் வயித்தி!”

அப்பொழுதுதான் முதலாளியை நிமிர்ந்து பார்த்தேன். கண்ணீர் முந்திக்கொண்டு வந்தது.

அவர் – பயப்படாமல்! – என்று சொன்னதுதான் கண்ணீரை வரவழைத்தது. வழக்கத்திற்கு மாறாக.. நினைத்ததற்கும் மாறாக அவர் ஆதரவாகப் பேசியதுதான் என்னை உருக்கியது.

‘என்ன வயித்தி.. என்ன நடந்தது..? மணியத்தோடை ஏதாவது புடுங்குப்பாடே?” முதலாளியும் பதற்றப்படத் தொடங்கினார்.

என்னையறியாமலே தலை திரும்பவும் குனிந்துகொண்டது. அவரது முகத்தை எதிர்கொள்ள முடியவில்லை. தலைமுடியூடு கைவிரல்களை விட்டுக் கோதினேன். அப்படிச் செய்வதால் நான் உணர்ச்சிவசப்படாமல் நிற்பதற்கு முயன்றேன்.

‘வயித்தி! நிமிர்ந்து என்னைப் பார்..! விசயத்தை என்னெண்டு சொல்லடாப்பா!”

நிமிர்ந்து பார்க்காமலே சொன்னேன். ‘சரியான நெஞ்சு நோவாய் இருக்குதையா!” நெஞ்சைக் கையினால் அழுத்தத் தொடங்கினேன்.

‘அதென்ன..? இருந்தாப்போலை நெஞ்சுக்குத்து?”

‘இல்லை ஐயா.. கொஞ்சநாளாய் இருந்தது.. நீங்கள் ஏசுவியளெண்டு தான் சொல்லயில்லை.. இப்ப கடுமையாயிருக்குது.”

‘எனக்கென்ன விசரே.. ஏசுறதுக்கு..? நெஞ்சுக் குத்தெண்டால் கவனமாயிருக்க வேணும்.. டொக்டரிட்டைக் காட்டினனீயே?”

‘இல்லை ஐயா..” தலையைச் சொறிந்த கையால் நாடியைச் சொறிந்துகொண்டு ஏதோ பிழை செய்தவனைப்போல முதலாளியை அரை குறையாகப் பார்த்தேன்.

‘வயித்தி.. நெஞ்சில வருத்தமெண்டால் சும்மா விட்டுக்கொண்டிருக்கக்கூடாது.. டொக்டரிட்டைக் காட்டினால்.. அவையள் சோதிச்சுப் பார்த்து என்ன வருத்தம் எண்டு சொல்லுவினம்..”

‘எங்கை ஐயா நேரம் கிடைக்குது?”

‘நீ என்னப்பா மடைக்கதை பேசிறாய்..? என்னட்டைக் கேட்டால் விடமாட்டேனே..?” அவர் கடிந்துகொண்டதும் அடங்கிப்போய் நின்றேன்.

எனது குடும்பத்தைப்பற்றி முன்னரே ஓரளவு தெரிந்திருந்தும் இப்பொழுது திரும்பவும் கனகத்தைப் பற்றியும் மகனைப் பற்றியும் அக்கறையாக சுகநலன்களை விசாரித்தார்.. பிறகு கேட்டார்:

‘நீ.. இப்ப வீட்டுக்குப் போகப் போகிறாயோ?”

‘போனால் கொஞ்சம் ஆறுதல் எடுத்திட்டு நாளைக்கு விடிய வரலாம்!”

‘சரி..! இப்ப போயிட்டு நாளைக்குக் காலமை சுகமாய் இருந்தால் வா..! இல்லாட்டில் டொக்டரிட்டைக் காட்டி மருந்து எடுத்திட்டு.. மத்தியானத்துக்குப் பிறகு வா!”

‘சரி ஐயா.”

முதலாளி என்மேல் இவ்வளவு கரிசனையும் வைத்திருப்பதை நினைக்கப் போகாமல் நிற்கலாமா என்று தோன்றியது. நன்றி பெருகியது. அவர் போகச் சொன்ன பின்னரும் போகாமல் நின்றேன். அவரை நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்தேன்.

‘பிறகென்ன யோசனை..! போவன்!”

‘இல்லை ஐயா.. ஒரு அஞ்சு வடை தந்தியளெண்டால் நல்லது..”

‘நெஞ்சுக்குத்துக்கு ஏனப்பா வடை?”

இதற்கு என்ன காரணத்தைச் சொல்லலாம் என்று தெரியாமல் ஒரு புதுமணப் பெண்ணைப் போல நாணினேன். பிறகு சமாளித்துக்கொண்டே.. ‘பிள்ளைக்கு கொண்டுபோய்க் குடுக்கலாமெண்டு..” என மென்று விழுங்கினேன்.

முதலாளி மணியத்தைக் கூப்பிட்டார். ஓடிவந்தான்.

‘இவனுக்கு ஒரு அஞ்சு வடை பார்சல் பண்ணிக் குடு!”

குண்டு குண்டாக முழியைப் பிதுக்கிக் கொண்டு கிடக்கும் வடைகளை ஒரு முறை பார்த்தேன்.

மணியம் என்னை விசித்திரமாகப் பார்த்தான். அவனை ஏறிட்டுப் பார்க்க முடியாதபடி கூச்சமாயிருந்தது.

எத்தனையோ பேருக்கு.. எத்தனையோ வடைகள் பார்சல் பண்ணிக் கொடுத்திருக்கிறேன்.. எனக்கு மணியம் வடை பார்சல் பண்ணுவதைப் பார்க்கையில் அவனிடமே பணிந்து போய்விட்டதைப் போன்ற ஆற்றாமையுணர்வு குற்றியது. அவன் பார்சல் பண்ணிக்கொண்டு வரும்வரையும் யாருக்கோ மௌன அஞ்சலி செலுத்துபவனைப்போல நின்றேன்.

‘இந்தா..!”

மணியத்தை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் பார்சலை வேண்டினேன். முதலாளியைப் பார்த்து நன்றியோடு ‘அப்ப.. வாறன் ஐயா..”

முதலாளி சரி என்பது போலத் தலையை ஆட்டினார்.

வடைப்பார்சல் கைக்கு வந்துவிட்டது! நேரத்தோடு வீட்டிற்குப் போகவும் கிடைத்திருக்கிறது! சந்தோஷம் பெருகியது! வீறு நடை போடப்போகிறேன்.

எனக்கு நெஞ்சுக்குத்தும் இல்லை.. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. தலை கால் புரியாத மகிழ்ச்சியில் நடக்கத் தொடங்கினேன். பிறகு ஒரு சந்தேகத்தில் முதலாளியைத் திரும்பிப் பார்த்தேன்.

முதலாளி எனது கணக்குக் கொப்பியில் கை போடுவது தெரிந்தது.

இப்பொழுது உண்மையிலேயே நெஞ்சுக்குத்து வந்துவிடும் போல.. ஏதோ எரிவு.. ஏதோ.. அடைப்பு.. ஏதோ இழப்பு நேர்வது போன்ற உணர்வு..

(சிரித்திரன் சஞ்சிகையிற் பிரசுரமானது. – 1981)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *