கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2021
பார்வையிட்டோர்: 3,512 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நடந்ததெல்லாம் நடந்த பிறகு …

என்னினைவின் முகட்டில் தோன்றுவது ஒரு பெரும் நிலைக்கண்ணாடி, கோவிலில் அம்பாள் சன்னதிக்கெதிரில் இருப்பது போல் நான் என்னைக் காண்கிறேன்.

நீறு துலங்கும் என் வெண்ணெற்றியின் இருமருங்கிலும் கருமை செழிந்த மயிர் , சுருட்டை சுருட்டையாய் விழுகின் றது. நான் அதை வெட்டவுமில்லை, வழிக்கவுமில்லை. நேரே தூக்கிப் பின்புறமாய் சீவி விட்டிருக்கிறேன். நீண்டு வங்கி வங்கியாய் வளைவுகொண்ட கேசம். எனக்கு ரொம்ப வும் பிடிக்கும்.

நீறு துலங்கும் என் வெண்ணெற்றியில் புருவங்களுக்கு மத்தியில் சிவப்பு திகழ்கின்றது.

– நான் அழகன்.

– நான் பிரம்மசர்யன்.

– ஆம், நான் வீணாகவில்லை. என் மனைவியைக் கல்யாணத்தில் ஓமப் புகையில் கண்ட பிறகு மறுபடியும் நான் கண்டதில்லை. நாங்கள் சின்னஞ்சிறு வயது.

ஆயினும் நான், அவள் என்னிடம் வரும் நாளை எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கல்யாணமானதிலிருந்து நான் அவளைக் காணாததால் என் மனைவிமேல் நான் வெகுவாய் ஆசை கொண்டிருந்தேன்.

– நான் புத்திசாலி.

– நான் படித்தவன்.

படிக்கப் படிக்க சந்தேகந்தான். புத்தி அதிகமாக ஆகக் குழப்பந்தான்.

புத்தியைவிட உணர்ச்சிதான் உயர்ந்தது. மூளையை விட இதயம் தான் பெரியது. ஞானத்தைவிட பக்தி தான் உயர்ந்தது.

என் தகப்பனுக்கு அவர் தொழும் தெய்வத்தினிடம் பக்தி இல்லை .

இத்தனைக்கும் நாலு தலைமுறையாய் நாங்கள் கோவில் குருக்கள்.

அவருக்குப் பக்தியிருந்ததோ என்னவோ, அவர் பூஜை செய்யும் தினுசில் இல்லை. சுவாமி நெற்றியில் காய்ந்து போயிருக்கும் முந்திய நாள் சந்தனத்தைக் கிள்ளக்கூட மாட்டார். அப்படியே ஒரு செம்பு ஜலத்தை, சாட்டை மாதிரி சுவாமி முகத்தில் அடிப்பார்.

நான் கூட இருப்பேன்.

“அப்பா, சுவாமி உடம்பெல்லாம் நனையவில்லையே?” என்பேன்.

“எனக்கு இடுப்புத்தான் பிடிப்பு. காது செவிடில்லை, இன்னமும் கொஞ்சம் மெதுவாய்க் கத்தலாம்” என்று மண்டையிலடிப்பார். நான் அழுது கொண்டே நிற்பேன்.

அப்புறம் சாவகாசமாய் “நீ, பெரியவனாய்ப் போய் என் வேலையைச் செய்யறப்போ, கோவில் கிணற்றையே தூறெடுத்துச் சுவாமி தலையில் கொட்டு. வேண்டாம் என்கவில்லை. எனக்கு வயசாயிடுத்து. இடுப்புப் பிடிப்பு.ஒரு தவலை மொள்ளுவதற்குள் உசிரே போய்த் திரும்பி வரது…”

கோவில் நைவேத்திய சாமான்களில் அப்பா கவலை யில்லாமல் திருடுவார். சிவசொத்து எனும் கவலையே கிடையாது. வீட்டுக் கவலைகூட கிடையாது. ‘அம்மாளு’ கவலை தான்.

“அம்மாளுவுக்கு அது. அம்மாளுவுக்கு இது” என்று ஒவ்வொன்றிலும் கொஞ்சம் ஒதுக்கிவைத்துச் சின்ன மூட்டை கட்டுவார்.

“அம்மாளு யார் அப்பா?” என்று நான் வியப்புடன் கேட்பேன்.

‘உனக்கென்ன அதைப்பத்தி?’ என்று முதுகில் அறைவார்.

அவரிடமிருந்து அம்மா என்னை அணைத்து ஒரு அறையில் பிடித்துத் தள்ளுவாள். பிறகு அப்பாவும் அம்மாவும் சண்டை போடுவார்கள்.

“மானம் போறதே. நம்ப சந்தி நம்ப பிள்ளைகிட்டக் கூட சிரிக்கணுமா?” என்று அம்மா அழுவாள்.

“மூடு வாயை, கழுதை!” என்று அப்பா கர்ஜித்து விட்டு கட்டின மூட்டையுடன் வெளியே போய்விடுவார்,

அப்பா வீட்டில் சாகவில்லை.

ஒருநாள் அம்மாளு வீட்டிலிருந்து அப்பாவின் பிணத்தைக் கொண்டு வந்தார்கள்.

அதற்கப்புறம் நான் தான் குருக்கள்.

அதற்கு முன்னாலேயும், அப்பா வீட்டிலோ ஊரிலோ இல்லாதபோதும் அவருக்கு உடம்பு சரியில்லாதபோதும் நான் தான் குருக்கள்.

எனக்கு லிங்கத்தைக் கண்டால் அவ்வளவு பிடிக்கவில்லை .

ஆட்டுக்கல்லில் குழவியை வைத்தாற்போல்.

தேவி அப்படியல்ல. அவள் உருவமும் ஆராதனையும் மனத்தில் பக்தியை உண்டாக்குகிறது.

ஆசை, அன்பு, பக்தி, பாசம், பட்சம் – இத்தனைக்கும் வித்தியாசங்களின் அத்தனை நுணுக்கங்களும் நான் அறிவேன்.

கல்யாணத்துக்குப் பிறகு என் கண்ணால் காணாத என் மனைவி, இன்னும் ஏன் என்னிடம் வரவில்லை என்று எனக்கு வயது ஆக ஆக நாளுக்கு நாள் – நான் அதிசயித்த துண்டு.

எனக்கு வயதாக ஆக, அவள் உருவம் இப்பொழுது எப்படியிருக்கும் என்று நான் அதிசயித்ததுண்டு.

அம்பாளைப்போல் இருப்பாளா? அம்பாளை நான் நன்கு அறிவேன். அம்பாளுக்கு நான் அபிஷேகம் செய்கிறேன். அர்ச்சிக்கிறேன். தீப ஆராதனை செய்கிறேன். அம்பாளை நான் பக்தி பண்ணுகிறேன்.

ஓர் இரவு நான் சாப்பிட உட்கார்ந்தேன். அம்மா என்னிடம் என்னவோ சொல்ல வந்தாள். அவள் முகம் வெளுத்துப் போயிருந்தது. அதில் நான் கண்டது பயமா, துக்கமா, வெறுப்பா, குரூரமா? என்று என்னால் நிச்சயமாய்க் கண்டு பிடிக்க முடியவில்லை. அத்தனையுமிருந்தது.

“அம்பி, உன் ஆம்படையாள் செத்துப்போயிட்டாள் என்று சமாச்சாரம் வந்தது. என்னமோ மூணுநாள் ஜுரமாம்…”

“ஹா?–” என்று என்னிடமிருந்து ஒரு மூச்சு திணறிய ஞாபகமிருக்கிறது.

அம்மாவின் முகம் இன்னமும் கூரிட்டது.

“நாம் இனி அங்கே போயும் பிரயோசனமில்லை. எல்லாம் எடுத்திருப்பார்கள். ரொம்ப தூரம் பார்”

ஆசை எல்லாவற்றிற்கும் எவ்வளவு மகத்தான ஆரம்பமோ, அதே மாதிரி சாவும் அவ்வளவு மகத்தான முடிவு.

என் கண்ணால் காணாத என் மனைவியைப்பற்றி என் கற்பனையில் நான் எழுப்பிக் கொண்டிருந்த உருவம் என் மனத்துள் நீறாவதை நான் உணர்ந்தேன்.

நாளடைவில் நான் வெளியில் நடமாடுகையில் என்னை ஒரு மாதிரியாக எல்லோரும் கவனிப்பதாக எனக்குத் தோன்றிற்று. ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் புறைசல்…அம்மா சொன்னது பொய். என் மனைவி சாகவில்லை.

அவள் சாகவில்லை என்று கேள்விப்பட்டதும், அவள் உருவம் மறுபடியும் ஒன்று கூடி புது சிருஷ்டி போல், என் மனதை உதைத்துக் கொண்டு கிளம்புகையில், அந்தப் பரவ சத்தில், என் உயிர் தொண்டைவரையில் எழுந்து அமுங்கி யாது. எனக்கே உள்ளூர அதைப்பற்றி சந்தேகமாயிருந்தது. ஏனெனில் மற்ற ஈமக்கிரியைகள் நடக்கவில்லை. நடத்த வேண்டுமென்று அம்மா சொல்லவுமில்லை. அந்த வீட்டா ரும் இங்கு வரவில்லை. நாங்களும் அங்கு போகவில்லை. எல்லாம் கிணற்றில் கல் போட்ட மாதிரியிருந்தது.

என் மனைவி சாகவில்லை. ஆனால் –

அந்த இடத்தில் தான் எல்லோரும் மென்று விழுங்கி விடுகிறார்கள்.

விஷயத்தைக் குறைவாய்ச் சொல்லி உலகம் ஒளிமறைப் புக்கும் பொய்க்குமே இடமாய் இருக்கிறது.

ஒருநாள் மாலை தேவிக்கு அபிஷேகம் செய்வதற்கு, கர்ப்பக்ருஹத்திலிருக்கும் அண்டாவிற்கு ஜலம் கொட்டிக் கொண்டிருந்தேன்.

கோவில் வெளிப்பிரகாரத்தில், நந்தவனத்தின் நடுவில் கிணறு. சுற்றி, முழங்கால் உயரத்துக்குப் புதர். பாம்பு பூச்சி வெடுக்கென்று பிடுங்கினாலும் தெரியாது.

கிணற்றில் அப்பொழுது தான் தவலையைப் போட்டிருந்தேன்.

ரோட்டில் வைத்திருக்கும் சோடாக் கடைக்காரன், மேல் துண்டை இடுப்பிலும், கைகளைத் தோளிலும் கட்டிக் கொண்டு வெகு பயபத்தியுடன் வந்து நின்றான்.

“அம்மனுக்கு என் பேரிலே ஒரு அர்ச்சனை பண்ணுங்க…” என்றான்.

எனக்கு ஏன் இவர்களையெல்லாம் கண்டால் அருவருப்புத் தோன்றுகிறதோ தெரியவில்லை. இவர்களுடைய பக்தியும், அர்ச்சனைகளும், கைகளை உயரத் தலைக்குமேல் தூக்கிக் கொண்டு, தொந்தி சரிந்துக்கொண்டு, தொண்டை கிழிய இவர்கள் பாடும் தோத்திரங்களும்! தேவி இவர்களுடைய பக்தியையும் தோத்திரங்களையுமா விரும்புகிறாள்?

“செய்தால் போகிறது -” என்றேன். தண்ணீரை இழுத்துக்கொண்டே.

“கொஞ்சம் அவசரங்க, பக்கத்தூரிலே இன்னிக்கு “கோவலன்’ நாடகம். சுருக்கப் போவணுங்க….”

எனக்குப் படபடவென்று கோபம் வந்துவிட்டது.

நான் – கோபி .

“உன் கூத்துக்கும் கொம்மாளத்துக்குமிடையில், சுவாமி கண்ணில் மண்ணைப்போட ஒரு அர்ச்சனையாக்கும்!”

நான் சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமலே,

“இன்னிக்கு மாதவி ஸ்திரீ பார்ட்டுங்க; புதிசுங்க…” என்றான்.

“அப்படியானால் இப்பவே போ – வழியைவிட்டு எட்டி நில்…”

“குருக்களய்யாவுக்கு ரொம்பக் கோபம் வருதே!”

“இல்லை கோபம் வராது. சுவாமி கைங்கர்யத்தில் உனக்கு இருக்கும் சிரத்தைக்கு, உன்னைக் கட்டியணைத்துக் கொஞ்சணுமாக்கும் -“

அவன் முகத்தில் தோன்றிய புன்னகை எனக்குக் கரிப்பெடுத்தது.

“என்னையேன் கொஞ்சணுங்க? மாதவியம்மாளைக் கொஞ்சுங்க…”

அவன் கன்னத்தில் சுழற்றி ஒரு அறை விட்டேன்.

“மரியாதை கெட்ட நாயே, என்ன குடித்துவிட்டு வந்திருக்கியா? உன்னைத் தொட்டதற்கு நான் மறுபடியும் ஸ்னானம் வேறு பண்ணவேண்டியிருக்கு -“

அவன் அப்படியே கீழே சாய்ந்தான். அவனுக்கு ஆத்திரம் மூண்டு விட்டது. இருந்தாலும் கோவில் குருக்கள் மேல் கைவைக்க முடியுமா? ஆனால் அடியைப் பட்டுக் கொண்டும் வாய் சும்மா இல்லை.

“உங்களுக்கு அந்த மாதவியம்மாளைக் கொஞ்சறதுக்கு முறையிருக்குதுங்க…”

அவன் விலாவில் காலாலேயே உதைத்தேன்.

வயிற்றைக் செட்டியாய்க் கையால் பிடித்துக் கொண்டு, “நிசமாத்தான். உங்க பெண்சாதிங்க!” என்று தொண்டையைக் கிழித்துக் கொண்டு கத்தினான். என் வெறி சட்டென விட்டது.

இடி விழுவதென்றால் இப்படித்தானா? தலை சுற்றிற்று. மடேரென்று கீழே விழுந்துவிட்டேனேன்றே நினைக்கிறேன். நான் கிணற்றுள் விழாதபடி. நான் உதைத்தவனே என்னைத் தாங்கினான்.

என் அகமுடையாள் செத்துப்போனாள் என்று அம்மா சொன்ன அர்த்தம் இப்பொழுது தான் எனக்குப் புரிந்தது.

உண்மையை அப்பவே அம்மா சொல்லியிருந்தால்… ஒரே தடவை நஞ்சைக் கொடுத்தால் ஒருவழியாய் காயம் மடிந்து போகும். கொஞ்சம் கொஞ்சமாகப் பிரயோகம் செய்வதால் நெஞ்சு. உடல் எல்லாம் நஞ்சாகி விடுகிறது. என் ஆசையின் அஸ்தியிலிருந்து உருவான பிண்டம் கோர ஸ்வரூபமாய்த் தாண்டவமாடியது. அது ஆடிய ஆட்டத்தில், என் வயிறும் குடலும் குமட்டிற்று தழல் புழுப்போல்

என் மூளையில் நெளிவது எனக்குத் தெரிகிறது.

என் மண்டை யெரிச்சலைத் தணித்துக்கொள்ள, ஒரு குடம் தண்ணீரைத் தலையில் கொட்டிக்கொண்டு. சொட்டச் சொட்டப் போய் அம்மன் சன்னதியில் நின்றேன்.

என் முதல் அடைக்கலமும் கடைசி அடைக்கலமும் அவள் தான்.

“தேவி, உனக்கு இது அடுக்கிறதா?” அவள் என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். மாலை பூஜை நேரம். அம்மனின் ஆடையைக் களைந்தேன்.

கர்ப்பக்ருகத்தில், மேல் கொக்கியிலிருந்து தொங்கும் அகண்டம் ஆடிற்று. சுடர் சற்று மங்கியது. தூண்டினேன், குதித்தது.

“ஹா!” என்ன அற்புதமான அழகு! கல்லைப்போன்ற முலைளும், குறுகிய இடையினின்று சரிந்தாற்போலேயே அகன்ற வயிறும் உடனே அகன்ற இடுப்பும் அடிவயிற்றில் தொப்புளும் –

“அம்பா! இத்தனை நாளாய் உன்னை நான் இப்படிக் கண்டதுண்டோ?”

அவள் என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்.

அவளுடைய அபயஹஸ்தம் என்னை வாவென்று அழைத்தது.

“தேவி!” என் கைகளை அகல விரித்துக்கொண்டு நான் அவளிடம் ஓடினேன்…

மூர்ச்சையில் நான் மூழ்கிப் போனேன்.


அன்று வெள்ளிக்கிழமை.

அம்பாளை நான் நன்கு அலங்காரம் பண்ணினேன். பொற்கவசம் மகுடத்திற்கும் ஹஸ்தங்களுக்கும் பாதங்களுக்கும் பதித்தேன். பட்டுப்புடவை யுடுத்தினேன். ஒட்டியாணம் பூட்டினேன். பாத கமலங்களில் குங்குமத்தை இறைத்தேன். நானும் இட்டுக்கொண்டேன்.

சகலலோக நாயகி அவள். மாலையை அணிவித்தேன். சகலலோக நாயகி. என் நாயகி.

அவள் என்னை அறிவாள். நான் அவளை அறிவேன். என் பக்தி எனக்கும் என் தேவிக்கும் இடையில் ஒரு ரகஸயம்.

சன்னிதானத்தில் மற்றவரெல்லாம் புடைசூழ்ந்திருக்கையில் நான் அவளுக்குத் தீபாராதனை செய்கையில், தேவி என்னை மாத்திரம் ஓரக்கண்ணால் பார்க்கிறாள். அவளுடைய வைர மூக்குத்தி எனக்காகத்தான் மின்னிடுகிறது. இத்தனை அலங்காரங்களுடன் எல்லோரும் அவளைத் தரிசிக்கையில், ஒருவிதமான அணியுமில்லாமல் அவளை நான் அறிவேன். எனக்கும் என் அம்பாளுக்கு மிடையில் ஒருவிதமான மறைப்பும் கிடையாது. மறைக்க என்ன இருக்கிறது?

மூன்று கால பூஜையை நானே ஆறு சாலமாக்கினேன். நான் பணிவிடை செய்யும் அம்பாள் என்றும் என்னேரமும் பளிச்சென்றிருப்பாள். என் உள்ளத்தில் படர்வாள் அவளை நான் நினையாத நேரமில்லை.


இருந்தும் என் மனைவிமேல் இருந்து புழுத்துப்போன ஆசை என் மூளையைக் குடைகையில் நான் தவிக்கிறேன்.

துரோகி.

நான் அம்பாளைத் துரோகம் செய்யேன். நானே அவள். அவளே நான். நான் முக்தன்.

நான் தெளிந்த பிறகும் எனக்கு ஏன் உடலும் உள்ள மும் குளிரவில்லை?

இன்னேரம் நாடகம் நடந்து கொண்டிருக்கும்.

“கழுத்தில் விழுந்த மாலை கழற்ற முடியவில்லை
நற்காரிகையே வகையறியேனே …”

‘அம்பா! என் நெஞ்செல்லாம் நெருப்பாய் எரிகிறது. நீ இதற்கு ஒரு வழி சொல்லு!”

அவள் என்னை மௌனமாய் நோக்குகிறாள். என்னெஞ்சில் எரிவது நஞ்சு. நான் நஞ்சுண்டவன். சிவன்,


மறுபடியும் மாலை நேரம்.

தீபாராதனைக்கு இன்னமும் கொஞ்ச நேரமிருக்கின்றது. நெஞ்சக் கனலைத் தணிக்கவேண்டி நந்தவனத்தில் போய் நின்றேன்.

புதர்கள் முழங்கால் உயரம் நின்றன.

செடிகள் ஆள் உயரம். அவைமேல் பூக்கள் அடர்ந்து ஆடின.

‘கிளுக்’ யாரோ சிரிக்கிறார்கள்.

இப்பூக்களா சிரிக்கின்றன? உற்று நோக்கினேன் யாரோ ஓடும் சப்தம். ஒரு கூந்தல் தலை தெரிந்தது.. எடுத்துக்கட்டிய பின்னலில் சிவப்பு ரிப்பன் துருத்திக் கொண்டு நின்றது.

பின்னாலேயே ஒரு கிராப்புத் தலை.

நான் இன்னமும் முகத்தைப் பார்க்க முடியவில்லை. செடிகள் மறைத்தன.

ஒருகண நேரம் ஒரு பூவின் அடித்தண்டில், ஒரு கரம் தயங்கி நின்றது. ஆண் கரம். மறுகணம் கரமும் பூவும் மறைந்தன.

கூந்தலைக் கிராப்பு துரத்தியது. இருவர் சிரிப்பும் என் நெஞ்சைச் சுறீலெனச் சுட்டது.

எடுத்துக் கட்டிய பின்னலில், துருத்திக்கொண்டிருக்கும் சிவப்பு ரிப்பனை ஒட்டினாற்போல், கொய்த பூ ஏறுவதைக் கண்டேன். அம்பாளின் பூ…

தீபாராதனைக்குக் கோவில் மணி அடிக்க ஆரம்பித்து விட்டது .


நான் ஒன்று மூன்றானேன்.

என் கைகள், என் கண்கள், நான்.

என் கைகள் தீபங்களை எடுத்துத் தேவிக்குக் காட்டுகின்றன.

என் கண்கள் குழுமியிருக்கும் கூட்டத்தில் அவ்விருவரையும் தேடுகின்றன.

நான் என்னிடம் இருக்கிறேன்.

அவர்கள் சற்று நேரம் பொறுத்து வந்தார்கள். இன்ன மும் இருவர் முகத்திலும் சிரிப்பு. ஒரு சிறு கள்ளத்தனம், பெண்கள் நிற்கும் பக்கமாய் அவள் போய்ச் சேர்ந்தாள்.

கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு முன்னால் வந்து அவன் நின்றான், கைகளை வெகு பக்தியுடன் கட்டிக்கொண்டு.

அவனை என் கண்கள் நன்றாய்க் கவனிக்கின்றன. அவன் முக லக்ஷணங்களைத் தனித் தனியாய்ச் சோதிப்பதில் ஒருவிதமான ஆவலும் நேரிடுகின்றது. அச்சோதனை என் உள்ளத்தில் ஒரு புதுப் பொறியையும் வைக்கின்றது

அவனைப் பார்த்துவிட்டு அம்பாளை நோக்குகிறேன். அம்பாள் என் உடலில் ஒரு சக்தியைப் பாய்ச்சுகிற மாதிரி நான் உணர்கிறேன். என் மனப் பிராந்தியோ என்னவோ என் உடல் பரபரக்கிறது. என் உடல் தழல்போல சிவக் கிறது. அவளிடமிருந்து நான் ருத்ராம்சத்தைப் பெறுகையில், நான் தேஜோமயமாகி விடுகிறேன்.

நான் இப்பொழுது பீமன்.

வேறு உணர்ச்சிகளின் கலப்பற்ற சுத்தமான கோபா வேசத்திற்குள் நான் புகுகையில், அதுவே ஓர் ஆனந்தமாய்த் தான் இருக்கிறது; ஒரே பரவசம்…..

தாம்பாளத்தையெடுத்துக்கொண்டு கர்ப்ப க்ருஹத்துள் நுழைகிறேன். மளமளவென்று தேவியின் நாம மந்திரங்கள் என் வாயினின்று கொட்டுகின்றன. கற்பூரத்தை ஏற்றிக் காண்பித்து விட்டு, குங்குமத்தை இட்டுக் கொள்கிறேன். அப்படியே கூட்டத்தின் பக்கம் திரும்புகிறேன். என் உடலில் புதிதாய்க் கண்டிருக்கும் வெறி சஹிக்க முடியாத ஆனந்தமாயிருக்கிறது. அவனை என் கண்கள் தேடு கின்றன. அங்கு தான் நிற்கிறான், கையைக் கூப்பிக் கொண்டு கழுத்தை நீட்டிக்கொண்டு, பலி மாதிரி.

தாம்பாளத்தை வீசுகிறேன்…

நான் இப்பொழுது கிருஷ்ணன்.

சக்கரம் போல் சுழன்று கொண்டே போய் அது அவன் கழுத்தில் போய் இறங்குகிறது.

ரத்தம்…

ஒரே கலவரம். அவன் பக்கமாய்ப் பத்துபேர் ஓடுகின்றனர். பலபேர் கத்திக்கொண்டு வெளியே ஓடுகின்றனர். என்னை நோக்கிப் பத்தாயிரம்பேர் ஓடிவந்து என் மேல் விழுகின்றனர்.

நான் இறந்து போனேன்…


நான் எங்கு போகிறேன் என்று எனக்குத் தெரிய வில்லை. ஏதோ சுழல் என்னை வெகு வேகமாய் இழுத்துச் செல்கிறது. ஒரு சமயம் ஒரே பாதாளம், ஒரு சமயம் ஒரே ஆகாயம், கடல்கள், மலைகள், மேகங்கள்…

திடீரென்று என்னைச் சுற்றிலும் ஒரே வெண்மை. ஆட்டு ரோமம்போல், தூய, மிருதுவான வெண்மை.

நான் கைலைக்கு வந்திருக்கிறேன். மலைமேல் சுவாமி. வெகு வேகமாய் நான் மேலே மிதந்து செல் கிறேன். லிங்கத்துக்கெதிரில் என்னை ஏதோ நிறுத்து கிறது. என்னால் அசைய முடியவில்லை, அசைக்க முடிய வில்லை .

மலை போன்ற லிங்கத்தைத் தேவி ஆலிங்கனம் பண்ணிக் கொண்டு இருக்கிறாள். என் அம்பாள்.

“அம்பா …!”

அவளிடம் என் கைகளை நீட்ட முயல்கிறேன். முடிய வில்லை .

ஆனால் அவள் முகத்தில் கனிவில்லை . அதில் நான் காணும் கோபமும் கொடூரமும் என்னைத் திடுக்கிடச் செய் கிறது.

“இதோ இவன் தான்!” என்று அவள் என்னைப் பார்த்துச் சீறுகிறாள். அந்த லிங்கம் வேரோடு பெயர்ந்து என் மேல் சாய்கிறது. அந்தப் பயங்கரம் தாங்க முடியவில்லை. என் வாயிலிருந்து கத்தல் வரமாட்டேனென் கிறது. மூச்சுத் திணறுகிறது. கையையும் காலையும் உதைத்துக்கொள்கிறேன். என் கண்கள் மூடிக்கொள் கின்றன. ஒரே இருட்டு. நான் எங்கோ படு ஆழத்துக்குப் போகிறேன்…

என்னினைவு என்னிடம் வந்தபோது, என்னை ஒரு கட்டிலில், தோல்வார் போட்டுக் கட்டியிருக்கிறது. என்னைச் சுற்றி நாலைந்துபேர் நிற்கின்றனர். அவர்கள் பார்வையும் கைகளும் பயமாயிருக்கின்றன. கண்ணை மூடிக் கொள்கிறேன்.

என் செவியில் மாத்திரம் சில வார்த்தைகள் விழு கின்றன.

“ஆபத்தான கேஸ்…இப்போதைக்கு, கம்பிபோட்ட அறையில், சங்கிலி போட்டுக் கட்டிவையுங்கள்…”

– அலைகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *