தனி மரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2023
பார்வையிட்டோர்: 2,206 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தப் பெரிய வீட்டின் முன் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த பெரியவர் வெற்றிலை, பாக்கை மென்று கொண்டிருந்தார். அறுபது வயதைக் கடந்த பின்னரும் பார்ப்பதற்கு ஐம்பது வயதுள்ளவர் போல் தோற்றமளித்தார். தெம்பான உடல், கூர்மையான பார்வை, சாந்தமான முகம், தேய்ந்துபோன பற்கள், வைரமும் வைராக்கியமும் நிறைந்த நெஞ்சு. அந்த மனிதரின் வாழ்க்கையே ஒரு சரித்திரமாகும். அவர் ஏனோ அன்று ஒரு மாதிரியாக இருந்தார்.

அது பெரிய வீடு என்று சொல்வதை விட மாளிகை என்றால் பொருத்தமாக இருக்கும். சுமார் முப்பதாயிரம் சதுர அடிக்கு மேல் பரப்பளவைக் கொண்டது. அம்மாளிகையின் ஒரு பக்கம் நீச்சல் குள மும், மறுபக்கம் பூப்பந்து விளையாடும் திடலும் உள்ளன. வீட்டின் முன்பக்கம் பெரிய புல் திடல். அதில் பல்வகைப்பட்ட பூச்செடிகள் வீட்டை அழகு செய்தன. அதே போல் வீட்டின் பின்பக்கமும் மலர்ச் செடிகளும் மாலையில் உலாவுவதற்கு இடமுமிருந்தது.

அந்த வீடு 1942ல் கட்டப்பட்டது என்பதை வீட்டின் முன் எழுதியி ருந்ததிலிருந்து அறிந்து கொள்ளலாம். அந்த வீட்டைக் கட்டியவர்களும் இந்தியர்கள் தாம் குறிப்பாகத் தமிழர்கள் தாம் என்பதை வீட்டுச் சொந்தக் காரரின் பேச்சிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

அந்த மாளிகையின் இரண்டாவது தோட்டவேலைக்காரர் வேலப்பன். ஆம். அதுதான் அந்தப் பெரியவரின் பெயர். இவர் அரசாங்கத்தில் வேலை செய்கிறார். அரசாங்க வேலை முடிந்த பின் புக்கித்திமா சாலையில் இருந்த அந்த மாளிகைக்கு மதிய உணவை முடித்த உடன் தனது ஈருருளை வண்டியில் புறப்பட்டு விடுவார்.

பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு வேலையை ஆரம்பித்தால் எப்படி ஓடியாடிச் செய்தாலும் ஆறு மணியாகிவிடும். வேலப்பன் இளம் வயதாக இருந்த 1956 ஆம் ஆண்டில் அவர் ஒருவரே மாதம் ஒரு முறை புல் வெட்டி விடுவார். இரு கைகளாலும் தள்ளி புல் வெட்டும் அந்த இயந்திரத்தோடு வேலப்பன் பட்டபாடு வேலப்பனுக்குத் தான் தெரியும். அந்த வீட்டைச் சுற்றிப் போட்டிருந்த வேலியில் படர்ந்திருந்த கொடிகளை எல்லாம் கத்தரித்து அழகுபடுத்துவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

தினமும் வீட்டைக் கூட்டிச் சுத்தப்படுத்துவார். நாய்க் கூண்டைக் கழுவித் தூய்மையாக்குவார். ஒவ்வொரு நாளும் மலர்ச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிடுவார். தனக்கு உடல் நலக்குறை ஏற்பட்டாலும் பொறுத் துக் கொள்வார். ஆனால் அந்த அழகுச் செடிகள் சற்றும் வாடாமல் எப்போதும் தளதள என்று இருக்க வேண்டும் என்பதில் தான் எத்தனை ஆர்வம்? அந்தக் கடமையிலிருந்து அவர் சற்றும் தவறியதே இல்லை. அந்த அழகிய மாளிகைக்கு மேலும் அழகூட்டிய பெருமை அந்த வேலப்பனையே சாரும்.

ஆனால் அதே வேளையில் வேலப்பன் தான் வசித்து வந்த அந்த அரசாங்க குவாட்ரஸ் வீட்டைக் கூட்டிச் சுத்தப் படுத்துவாரா? கழுவுவாரா? துடைத்துத் தூய்மைப்படுத்துவாரா? தான் வசித்து வந்த அந்தச் சிறிய அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்திருப்பாரா என்றெல்லாம் கேட்கவே கூடாது. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பது போலத் தன் வீடு சுத்தமாக இருக்கும் என்ற நினைப்பு அவருக்குண்டு. அந்த நினைப்போடு ஓடியாடி வேலை செய்து துரையின் வீட்டைக் கவனித்து வந்தார்.

சரியாக ஐந்து மணிக்கு வீட்டின் நுழைவாயிலின் முன் மல்லிகை மலரைப் போன்ற அழகான ஜாகூவார் வந்து நிற்கும். ஓடிச் சென்று இரும்புக் கம்பிகளைத் திறந்துவிடுவார். இராணுவ வீரரைப் போல நேராக நிமிர்ந்து நின்று ‘சல்யுட்’ அடிப்பதுடன் வணக்கம் துரை என்றும் சொல்லுவார். அந்த ஆங்கிலேயரும் பதிலுக்குத் தலையாட்டிக் கொண்டே சிரிப்பார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்பதுதான் தத்துவம். ஆனால் செல்வச் செழிப்புள்ள அந்த ஆங்கிலேயரின் புன்னகையில் வேலப்பன் அகம் மகிழ்ந்து பூரித்துப் போவார்.

சற்று நேரத்தில் வாளி தண்ணீர் கொண்டு வந்து வண்டியின் மீது ஊற்றி ஊற்றித் துடைப்பார். வண்டியின் எந்த இடத்திலாவது அழுக்கோ, தூசியோ இருக்கிறதா என்று உற்று உற்றுப் பார்ப்பார். இருந்தால் பட்டுப் போன்ற அந்தச் சுத்தமான துணியால் துடைத்துத் தூய்மை யாக்குவார். வண்டி அழகாக இருப்பதைப் பார்த்துப் பரவசம் அடைவார்.

அதற்குள் குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு வந்த வெள் ளைக்கார துரை ‘வெரிகுட்’ என்று சொன்னால் போதும் வேலப்பனுக்கு எத்தனை பற்கள் இருக்கின்றன என்று எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு மனம் மகிழ்ந்து போய்விடுவார்.

துரையின் வீட்டில் தொங்கிய அந்தப் பெரிய சுவர்க் கடிகாரம் டாங்! டாங்! என்று அடித்து ஒலி எழுப்பும். அப்போது மாலை மணி ஆறு என்று வேலப்பனுக்குத் தெரியும். இருந்தும் இன்றும் அந்தச் செடிக்குத் தண்ணீர் ஊற்றினோமா? நாய்க் கூண்டைக் கழுவிட்டோமா? தண்ணீர்க் குழாயை நன்கு மூடிட்டோமா? என்று சுற்றிச் சுற்றிப் பார்ப்பாரே தவிர தன் வீட்டிற்கு அவ்வளவு சீக்கிரமாகப் புறப்பட மாட்டார்.

சில வேளைகளில் துரையே வந்து வேலா வீட்டிற்குப் போகவில் லையா? என்று கேட்ட பிறகே பிரிய மனமில்லாமல் அங்கிருந்து தனது வாகனத்தில் ஏறி அமர்வார்.

வேலப்பனின் மிதி வண்டி லொட லொட என்று சத்தம் கேட்கும். சில நேரத்தில் அதன் சங்கிலி விலகி விழும். சில சமயம் பிரேக் வேலை செய்யாது. அதைப் பற்றியெல்லாம் வேலப்பன் கவலைப்படுவதே இல்லை. அந்த வண்டி வேலப்பனை வீட்டில் கொண்டு போய் விட்டால் போதும்.

ஒரு வழியாக வீட்டை அடைந்ததும் அணிந்திருந்த அந்த அழுக்கு நிறைந்த பனியனைக் கழற்றித் துவைக்காமல் அப்படியே காய வைத்து விட்டுக் கிழிந்து போன அந்தப் பழைய துண்டைக் கட்டிக் கொண்டு குளிக்கப் போவார்.

அதற்குள் அவருடைய நண்பர்களும் வந்து விடுவார்கள். ஊர்க் கதை, உலகக் கதையைப் பற்றிக் கொஞ்ச நேரம் பேசுவார்கள். கதை சோர்வு தட்டத் தொடங்கினால் தட்டு நிறைய சோற்றை நிரப்பி அதில் பழைய மீன் குழம்பையோ அல்லது சாம்பாரையோ ஊற்றிப் பிசைந்து ஒரு பிடி பிடிப்பார்கள். சாப்பிட்ட பின் ஒரு பெரிய குவளை நிறைய உள்ள தண்ணீர் கட கட என்று வயிற்றுக்குள் ஓடிவிடும்.

வேலை செய்த களைப்பை விட உண்ட களைப்புக் கூடுதலாகத் தெரியும். மணியும் கிட்டத்தட்ட பத்து, பதினொன்று ஆகிவிடும். உடனே பாயை விரித்துப் போட்டுப் படுத்தால் போதும். சற்று நேரத்தில் புகை வண்டியின் சத்தம் ஒலிக்கும். அதன் பின் பக்கத்தில் என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாமல் கும்பகர்ணனைப் போலத் துயில்வார்கள். பாடுபட்டு உழைக்கும் அந்தப் பாட்டாளிகளின் சொர்க்கமே உறக்கத்தில் தான் இருக்கிறது. மணியாகி விட்டது. வேலைக்குப் போக வேண்டும் எழுந்திருங்கள் என்று நண்பரின் சத்தம் கேட்கும் போதுதான் இசை யொலி நிற்கும்.

மாதம் முடிந்ததும் வெள்ளைக்கார துரை நூறு வெள்ளிக் கொடுப்பார். அரசாங்கச் சம்பளம் நூற்று ஐம்பது வெள்ளி கிடைக்கும். அதில் மாதச் செலவிற்கு ஐம்பது வெள்ளியை வைத்துக் கொண்டு மீதமுள்ள இருநூறு வெள்ளியை ஊரிலுள்ள மனைவி மக்களுக்கு தவறாமல் அனுப்பி வைத்தார்.

ஒரு நாள் வெள்ளைக்காரத் துரை ‘வேலா’ என்று சற்று சோகத்தோடு அழைத்தார். வேலப்பனும் வேகமாக ஓடிப் போய் ‘என்ன துரை?’ என்று கேட்டார். ‘அடுத்த மாதம் நானும் என் மனைவி மக்களும் இங்கிலாந்திற்குச் செல்கிறோம்’ என்று ஏதோ ஒரு வித வருத்தத்தோடு கூறினார்.

அவர்களின் பிரிவைத் தாங்க முடியாத வேலப்பன் சின்னப் பிள்ளையைப் போல வாய்விட்டு அழுதே விட்டார். வேலப்பனைப் பார்த்த போது துரைக்கும் வேதனையாகப் போயிற்று. சற்று நேரம் கழித்து ‘வேலா, அடுத்த மாதத்திலிருந்து திரு.டான் இங்கு குடி வந்திடுவார். இதே சம்பளத்தைக் கொடுக்குமாறு சொல்லி விட்டேன்’ என்று கூறி விட்டுப் போய் விட்டார். பழகியவர்கள் பிரிவதென்றால் எல்லோருக்கும் வேதனை தானே.

வேலப்பனுக்கு வேலையே ஓட வில்லை. அதனால் அன்று சீக்கிரமாகவே வீட்டிற்குப் புறப்பட்டார். வண்டியில் சென்ற போதே வேலப்பனின் எண்ணங்கள் சுற்றிச் சுற்றிச் சுழன்றன.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக மாட்டைப் போல உழைத்து அந்த மாளிகையைச் சுத்தமாக வைத்துக் கொண்டிருக்கிறார். சளி காய்ச்சல் என்று கூட ஒரு நாள் ஓய்வு எடுக்க மாட்டார். காய்ச்சல் அடித்தாலும் அதோடு சென்று வேலை செய்து விட்டு துரையின் மனைவியிடத்தில் காய்ச்சல் அடிப்பதாகக் கூறுவார். அந்த அம்மா இரண்டு மாத்திரைக ளைக் கொடுப்பார். வேலப்பன் அப்படியே வாயில் போட்டு விழுங்கி விடுவார். அந்த அம்மா, ‘வேலை செய்ய வேண்டாம்; ஓய்வு எடுத்துக் கொள்’ என்று சொன்னாலும் வேலப்பன் கேட்க மாட்டார். சற்று நேரத்தில் குணமாகி விடும் என்று சொல்லி விட்டு எஞ்சிய வேலைகளையும் ஓடியாடி செய்து முடித்து விட்டு வீட்டுக்குப் புறப்படுவார். வீட்டுக்கு வந்ததும் அணிந்திருந்த உடையைக் கூட அகற்றாமல் அப்படியே படுத்திடுவார்.

துரையின் வீட்டைச் சுத்தப்படுத்துவதிலேயே வேலப்பனுக்கு அவ் வளவு பொறுப்பு. வேலப்பனின் கடமை உணர்வையும், உழைப்புணர் வையும் வீட்டுக்காரர்கள் பாராட்டினார்கள். துரையும், துரையின் மனைவியும், பிள்ளைகளும் வீரப்பன் மீது மிகுந்த அன்பு காட்டினர். வேலப்பன் அந்த அன்பை நினைந்து உருகினார். சில நாட்களில் துரையின் குடும்பத்தினர் வெளியே சென்றால் வரும் வரை காத்திருப்பார். அதற்காக துரை ஐந்தோ, பத்தோ பணம் கொடுப்பார். மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு செல்வார்.

மனைவியிடமிருந்து ஊருக்கு வருமாறு கடிதம் வரும். ஊருக்குச் செல்ல ஆசை தான். ஆனால் ஊருக்குச் சென்றால் இந்த வேலை போய் விடுமே. அப்புறம் மாதா மாதம் சுளையாக நூறு வெள்ளியும் இடை இடையே ஐந்து, பத்து கிடைப்பதும் போய் விடுமே, என்று நினைக்கிற போது பிற்பாடு பார்த்துக் கொள்வோம் என்று ஊர்ப்பயணத்தைத் தள் ளிப் போடுவார்.

அவர் சிங்கப்பூருக்கு வந்த போது மூத்தப் பையனின் வயது ஐந்து. அடுத்தப் பிள்ளையின் வயது மூன்று. மூன்றாவது ஒரு வயது சிறுவன். இப்போது பெரிய பிள்ளைகளாக இருப்பார்கள்! அவர்களைப் பார்க்க வேண்டும் என்று அளவற்ற ஆசை. ஆனால் வருமானம் போய்விடுமே என்ற பயத்தில் பாசத்திற்கு அணை போட்டுக் கொண்டே வந்தார்.

வேலப்பன் சிங்கப்பூருக்கு வந்த அந்த இளமைப் பருவத்தில் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருந்தார். கூரான மூக்கும், அகன்ற கண்களும், ஏர் நெற்றியும், சுருட்டை முடியும், வாட்டசாட்டமான உடலும் சிவந்த மேனிக்கு அழகூட்டின.

வேலப்பன் வீட்டிற்கு எதிர் வரிசையில் கடைசி வீட்டில் வாழ்ந்து வந்த செல்லமாளுக்கு வேலப்பன் மீது ஒரு கண். செல்லம்மாள் வேலப் பன் வீட்டில் இருப்பதைப் பார்த்துவிட்டால் அடிக்கடி துணி காயப் போடுவதைப் போல வெளியே வருவாள். காயும் துணிகளுக்கு இடையே நின்று வேலப்பனைப் பார்ப்பாள். வேலப்பன்பார்த்துவிட்டால் சிரித்துக் கொண்டே சென்று விடுவாள்.

செல்லம்மாளின் பார்வையும், சிரிப்பும் நாளாவட்டத்தில் வேலப்ப னுக்குப் புரிந்தது. சில வேளைகளில் வேலப்பனுக்குப் புரிந்தது. சில வேளைகளில் வேலப்பனும் அக்கம் பக்கம் பார்த்து விட்டு யாருக்கும் தெரியாமல் சிரிப்பார். உணர்ச்சி வசப்பட்டு கையையும் அசைப்பார்.

செல்லம்மாளின் அழகிய கண்களும் மதி போன்ற முகமும் ரோஜாப் பூவின் வண்ணமும் வேலப்பனைக் கவர்ந்தது. ஆயினும் தான் திருமணம் ஆனவன் என்பதையும் செல்லம்மாளும் திருமணமாவனவள் என்பதையும் எண்ணிப் பார்த்தான். இந்த விபரம் வெளிப்பட்டு விட்டால் பலரும் தன்னைத் தப்பாக நினைப்பார்களோ என்று ஊர், உலகத்திற்குப் பயந்து கொண்டிருந்தான்.

செல்லம்மாளுக்கும் வேலப்பனை விரும்புவதில் அச்சந்தான். இருந்தும் இளமைத் துடிப்பும், அக்கம் பக்கத்தில் நடக்கின்ற நிகழ்ச்சிகளும் செல்லம்மாளுக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப் போல் வேலப்பனிடம் அன்பு வளர்ந்தது.

இருப்பத்தைந்து வயதில் விதவையாகிவிட்ட செல்லம்மாள் கணவனை எண்ணி எண்ணி அழுதாள். கணவனின் பிரிவினால் வருந்தினாள்; வாடினாள். பெற்றோரும், மற்றோரும் ஆறுதல் கூறினர். ஆனாலும் கணவனிடத்தில் இருந்து காக்க யாராலும் இயலவில்லை. நாட்கள் மாதங்களாயின… ஆண்டுகளாகிவிட்டன. இல்லற வாழ்வில் ஈடுபட்ட இரண்டே மாதத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவனை பலி கொடுத்தாள். அந்நிகழ்ச்சி அழகிய பொம்மையைச் சிறுமியிடத்தில் கொடுத்து விட்டுப் பின் வெடுக்கென பிடுங்கிக் கொண்டால் எப்படி இருக்கும்.? அப்படித்தான் செல்லம்மாளின் இல்லற வாழ்க்கை இருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தான் வேலப்பன் செல்லம்மாளின் கண்ணில் பட்டார். பார்வை மொழியில் தொடங்கி கையசைத்துச் சிரிக்கும் அள விற்கு வளர்ந்தது. அன்று செல்லம்மாள் குளித்து விட்டுச் சிகையை உளர விட்டுக் கொண்டிருந்தாள். அப்போது தபால்காரர் கடிதத்தைக் கொண்டு வந்து நீட்டினார். உணர்ச்சிக்குக் கட்டுப்பாடு போட்டுவிட்டு ஆவலோடு பிரித்துக் கடிதத்தைப் படிக்கிறார்.

‘அன்புள்ள அத்தானுக்கு, பிள்ளைகளும் நானும் நலமாகவே இருக்கிறோம். எப்போதும் உங்கள் நினைவாகவே இருக்கிறேன். இரவில் தூக்கம் கூட வருவதில்லை.

பிள்ளைகள் சதா உங்களைப்பற்றிக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். விரைவில் ஊருக்கு வாருங்கள். ஒரே ஒரு முறை வந்து விட்டுச் செல்லலாம்.

நமது தோட்டக்காரர் திரு. அழகப்பன் மூன்று ‘மா’ நிலத்தை விற்கப் போவதாகக் கூறுகிறார். அந்த இடத்தையும் வாங்கி விட்டால் நமக்கு ஒரே கட்டமாக அமைந்துவிடும். அதன் பின் அந்தப் பக்கம் உள்ள நிலம் முழுவதும் நமக்குச் சொந்தமாகிவிடும். அதற்கு மேல் உங்கள் விருப்பம்.

இப்படிக்கு
உங்கள் அன்பு மனைவி
கல்யாணி.

கடிதத்தைப் படித்ததும் எதிர் வீட்டுப் பெண்ணிடம் எழுந்த இரக்கம், பாசம், அன்பு எல்லாம் மறைந்து விடுகிறது. மாறாக மனைவி, பிள்ளைகள் என்ற எண்ணமும் குறிப்பாக அழகப்பனின் மூன்று மா நிலத்தை வாங்குவதிலும் உள்ள ஆர்வமும் கண் எதிரே மலை போல் காட்சியளிக்கிறது. காதல், அது, இதெல்லாம், தள்ளிப் போட்டு விட்டுப் பணந் தேடுவதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குகிறார்.

அடுத்த மாதத்தில் இந்த வீட்டை வாங்கியவர் குடி வருகிறார். அவருக்கு என்னைப் பற்றித் தெரியாது. இந்த நேரத்தில் ஊருக்குச் சென்றால் அப்புறம் இந்த வேலை கிடைப்பது குதிரைக் கொம்புதான் என்ற எண்ணம் வந்ததும் ஊர்ப்பயணத்தை மேலும் தள்ளிப் போட்டார்.

டான் என்பவர் யாரோ? எப்படிப்பட்டவரோ? அன்பானவரோ அல்லது கடுகடுப்பானவரோ? தொனத்தொன என்று பேசுவாரோ அல் லது நம்ம துரை மாதிரி பெரிய மனதோடு நடந்து கொள்வாரோ என்று பலவாறு நினைத்தபடியே வீட்டை அடைந்தார்.

நாட்கள் ஓடின. வெள்ளைக்கார துரை விடைபெற்றுக் கொண்டு இங்கிலாந்திற்குச் சென்று விட்டார். அடுத்த சில தினங்களில் ஒரு நாள் மாளிகையை நோக்கி ஒரு பெரிய உந்துவண்டி வந்தது. அது குங்கும வண்ணத்தில் அழகாக இருந்தது. அந்த உந்து வண்டியிலிருந்து பலர் இறங்கி வந்தனர். அதைத் தொடர்ந்து பல உந்து வண்டிகள் வந்தன.

வேலப்பன் வண்டியைக் கண்டதும் ஓடிச் சென்று ‘வணக்கம் தவக்கே’ என்றார். தவக்கேயும் பதிலுக்கு ‘நீதான் இங்கு வேலை செய்கிறாயா?’ என்று கேட்டார். ஆமாம் தவக்கே என்ற வேலப்பன், ‘நீங்கதான் இந்த வீட்டை வாங்கினீர்களா? எவ்வளவுக்கு வாங்கினீர்கள்?’ என்று பேச்சோடு பேச்சாக கேட்டு விட்டார்.

‘ஏன் நீ வாங்கப் போகிறாயா?’ என்று கேட்ட தவக்கே ‘முப்பதாயிரம் வெள்ளி’ என்று சொன்னபோது எல்லோரும் ‘கொள்’என்று சிரித்துவிட்ட னர். வேலப்பனுக்கு ஏன் கேட்டோம் என்று வேதனையாக இருந்தது. அதை மாற்ற விரும்பிய தவக்கே, ‘என் பிள்ளைகள் சேர்ந்து வாங்கினார்கள். வயதான நாம் இனி அவர்களோடு சேர்ந்து வாழ வேண்டியது தானே’ என்று கூறி வேலப்பனைச் சமாளித்தார்.

டான் என்பவர் வேலப்பனுக்குத் தெரிந்தவர்தான், என்று தெரியாமல் கடந்த ஒரு மாதமாக கவலைப்பட்டுக் கொண்டு இருந்தார். வேலப்பன் வசித்து வந்த வீட்டின் சற்று தூரத்தில் தான் டான் கடை வைத்திருந்தார். டானுக்குப் பல பிள்ளைகள் இருந்தனர்.

எல்லாப் பிள்ளைகளும் பள்ளி செல்லும் வயது வரை கடையில் வேலை செய்து கொண்டும் படித்துக் கொண்டும் இருந்தார்கள். மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க தேவையில்லாதது போல டானின் பிள்ளைகள் எல்லோரும் வியாபாரம் செய்யும் முறையை இயல்பாகவே நன்கு அறிந்திருந்தனர்.

பள்ளி செல்லும் அகவையை அடைந்ததும் படிக்கத் தொடங்கினர். என்றாலும் பள்ளி முடிந்ததும் கடையைக் கவனித்துக் கொள்வதைத் தவறவே இல்லை. அந்தப் பிள்ளைகளின் கருத்தையும், பொறுப்பையும் கண்டவர்கள் பாராட்டாமல் இருக்க முடியாது.

எந்தப் பிள்ளை கணிதத்தில் சிறந்து விளங்குகிறதோ, அந்தப் பிள்ளை எல்லாத் துறைகளிலும் சிறப்புற்றுத் திகழும் என்பது ஆய்வின் முடிவு. அதனால் தான் ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்றும் ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப’ என்றும் நமது முன்னோர்கள் எண்ணுக்கு முதலிடம் கொடுத்து வந்தார்கள் போலும்.

டானின் பிள்ளைகள் வியாபாரத்தில் ஈடுபட்டதாலோ என்னவோ அவருடைய பிள்ளைகள் கணிதத்திலும் மற்ற எல்லா பாடத்திலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்று சிறந்து விளங்கினர்.

வேலப்பன் கடைக்கு வந்தால் டானின் பிள்ளைகள் கருத்தோடு படிப்பதையும் அதே வேளையில் பொறுப்போடு வியாபாரம் செய்வ தையும் கவனிப்பார். அப்போது அவரின் எண்ணம். ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து தமிழ்நாட்டிற்கு ஓடிவிடும்.

மூன்றாவது பையனைத் தவிர மற்ற இருவரும் படிப்பதாக கல்யாணி எழுதும்போது குறிப்பிட்டுள்ளாள். பிள்ளைகள் படிக்கிறார்களோ? அல்லது சுற்றித் திரிகிறார்களோ? மனைவி, மக்கள் ஓரிடம்; நான் ஓரிடம். என்ன வாழ்க்கை? என்ன சுகத்தைக் கண்டோம்? என்று நினைக்கும் போது வேலப்பனுக்கு வாழ்க்கையில் வெறுப்புக் கூட ஏற்படும்.

மயான வைராக்கியம் போல் தோன்றிய எண்ணம் சற்று நேரத்தில் மறைந்துவிடும். அதன் பின் வேலப்பன் தனக்குத் தேவையான உப்பு, அரிசி, வெங்காயம் போன்ற பொருட்களை வாங்கிக் கொண்டு சென்று விடுவார். சில நேரத்தில் வேலப்பனையும் அறியாது மகிழ்ச்சியோடு இருப்பார். அப்போது தவக்கேயிடத்தில் ஏதாவது வேடிக்கையாகப் பேசுவார்.

அந்தத் தவக்கே தான் டான் என்பதை அறிந்த போது வேலப்பனுக்கு வியப்பும் ஆச்சரியமும் மேலிட்டது. அவர்களா இவ்வளவு பெரிய வீட்டை வாங்கினார்கள்? தவக்கே அவ்வளவு பெரிய பணக்காரரா? என்று வியப்புற்ற வேலப்பன் ஒரு கணம் திகைத்துப்போய் நின் றார்.

அதற்குள் மூட்டை முடிச்சுக்களைத் தூக்கிக் கொண்டு இரண்டு பெரிய (லாரிகள்) பாரம் தூக்கும் வண்டிகள் வந்து சேர்ந்தன. தவக்கே சொல்லாமலே வேலப்பன் ஓடிச் சென்று பொருட்களை இறக்கினார்.

இறக்கிய பொருட்களை வீட்டிற்குள் கொண்டு போய் வைத்தார். வேலப்பன் உடலில் உள்ள நீரெல்லாம் வியர்வையாகக் கொட்டக் கொட்ட ஓடியாடி வேலை செய்தார்.

தவக்கேயின் மூத்த மகன் வேலப்பனை அழைத்தான். இரண்டு பத்து வெள்ளித் தாள்களைக் கொடுத்தான். வேலப்பன் ஒன்றும் புரியாமல் விழித்தார். இன்றோடு வேலை முடிந்ததோ இனிமேல் மாதம் நூறு வெள்ளியைச் சுளையாக பார்க்க முடியாதோ, இனிமேல் மாதம் இரு நூறு வெள்ளியை ஊருக்கு அனுப்ப முடியாதோ என்றெல்லாம் ஒரே ஒரு வினாடியில் எண்ணங்கள் தோன்றி மறைந்தன.

அதற்குள் தவக்கேயின் மூத்த மகன் வேலப்பா”இனிமேல் உனக்கு மாதச் சம்பளம் நூற்று ஐம்பது வெள்ளி. இடைஇடையே சொல்லுகின்ற வேலையைச் செய்தால் தனிப்பணம்” என்றான்.

வேலப்பன் தான் கேட்பது கனவா? அல்லது நினைவா? இவர் சொல்வதைப் பார்த்தால் மாதம் இருநூறு வெள்ளி கிடைக்கும் போல் இருக்கிறதே என்று கணக்குப் பார்க்கத் தொடங்கினார். அடுத்த மாதத்தி லிருந்து ஊருக்கு முந்நூறு வெள்ளி அனுப்பலாம் என்று நினைத்த போது வேலப்பனுக்கு ஒரு சுவீப் ‘டிக்கெட்’ பரிசு கிடைத்ததைப் போல இருந்தது.

முட்டாள்தனமாக இப்போதைக்கு ஊர்ப்பயணம் வைக்கக்கூடாது. இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து தவிக்கேயிடத்தில் ஊர்ப்பயணத்தைப் பற்றிச் சொல்லிப் பார்க்கலாம்; அப்போது தவக்கே சம்மதித்தால் ஊருக்குப் போய் வரலாம். இப்போது நமக்கு நல்லநேரம் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்று வேலப்பன் தனக்குள். முடிவு எடுத்துக் கொண்டார்.

மனைவியிடத்திலிருந்து கடிதம் வந்தது. ஆனால் அக்கடிதத்தில் முன்பு போல ஊருக்கு வரும்படி எழுதுவதே இல்லை. வீட்டை உயர்த்திக் கட்ட வேண்டும்; மாடு வாங்க வேண்டும்; கிணறு வெட்ட வேண்டும்; பெரிய வயலை ஒட்டினால் போல உள்ள நிலத்தைத் தருவதாகச் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் பணம் தேவை. யோசித்துச் செய்யுங்கள். கடைசி மகன் கிட்டப்பாவும் படிப்பில் அவ்வளவு குணமில்லை. அவன்தான் வீட்டு வேலைகளைப் பொறுப்பா கவனிக்கிறான் என்ற தகவல்களைத் தாங்கிக் கொண்டு கடிதங்கள் வந்தன.

சலிப்போடு இருந்த வேலப்பன், தமிழ்நாட்டின் பேராசிரியர் தேசிய அரங்கத்தில் நிகழ்த்தவுள்ள பேருரையைக் கேட்கப் பேருந்து நிற்குமிடத்திற்குச் சென்றார். அப்போது ஒட்டுக்கடை முகம்மதுடன் செல்லம்மாள் வாடகை வண்டியில் ஏறியதைத் தற்செயலாகக் கண்ட வேலப்பன் திடுக்கிட்டார்.

செல்லம்மாளைப் பார்த்ததையும், சிரித்ததையும் தவிர வேறு பழக்கமில்லை. இருந்தும் செல்லம்மாள் மீது ஆத்திரமும் ஆவேசமும் வந்தது. வேலப்பன் கோபித்துக் கொண்டதில் அர்த்தமே இல்லை. ஏனெனில் வேலப்பன் வெளிப்படையாகத் தன் விருப்பத்தைக் காட்டிக் கொள்ள துணிவில்லை. அதே வேளையில் ஊரில் உள்ள மனைவி பிள்ளைகளின் நினைப்பு ஒரு பக்கம். செல்லம்மாள் மீதுள்ள ஆசை மறுபக்கம். வேலப்பன், தான் இரண்டுங்கெட்டானாக வாழ்ந்த வாழ்வை நினைத்துப் பார்த்துக் கொண்டே தேசிய அரங்கத்தை அடைந்தார்.

பேராசிரியர் ஒழுக்கத்தின் உயர்வைப் பற்றியும் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பைப் பற்றியும் அலசி ஆராய்ந்தார். தமிழ்ப் பண்பாட்டிற்கும் ஒழுக்கத்தின் சிறப்புக்கும் எடுத்துக்காட்டாகச் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மகாபாரதம் போன்றவற்றிலிருந்து ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போனார்.

பேராசிரியரின் பேச்சு வேலப்பன் மனதைத் தொட்டுவிட்டது. அப் பேச்சை எண்ணிப் பார்த்த வேலப்பன், தான் பெரிய தவறு செய்வதிலி ருந்து தப்பிவிட்டதாக நினைத்துப் பெருமைப் பட்டார். இனி மறந்தும் இதுபோன்ற தவற்றைச் செய்யக்கூடாது என்று மனதில் உறுதி கொண்டார். செல்லம்மாள் தன்னை மறந்ததும் நன்மைக்கே என்று நினைத்த வேலப்பன். இன்னும் அதிகமாகச் சம்பாதித்துக் கொண்டு ஊருக்குச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டார்.

அதனால் வேலப்பன் முடிந்த அளவு வயிற்றை வாயைக் கட்டிச் சம்பாதித்து அனுப்பிக் கொண்டே இருந்தார். ஆண்டுகள் ஒன்று. இரண்டு என்று இருபது ஆண்டுகளுக்கு மேல் ஓடி மறைந்தன. ஒரு நாள் அரசாங்கத்திலிருந்து வேலப்பனுக்கு அறிக்கை ஒன்று வந்தது. அதில் என்ன எழுதியிருக்கிறது என்று ஆங்கிலம் படித்தவரிடம் கொடுத்துக் கேட்டார். 1979 டிசம்பர் மாதத்துடன் உங்களுடைய அரசாங்க வேலை முடிகிறது என்று எழுதியிருப்பதாகக் கூறினார்.

அப்போதுதான் வேலப்பன் தனக்கு ஐம்பத்தைந்து வயதாகிவிட்டதை உணர்ந்தார். மறுநாள் தவக்கேயிடத்தில் கடிதத்தைக் காட்டி வேலை முடிந்ததும் ஊருக்குப் போகப் போவதாகக் கூறினார். உண்மையாக உழைத்த வேலப்பனுக்கு பலவிதமான பொருட்களைக் கொடுத்தார். சம்பளத்துடன் மேற்கொண்டு ஆயிரம் வெள்ளியைக் கொடுத்துப் போய்வா என்றார்.

நன்றிப் பெருக்கில் வேலப்பனால் பேச முடியவில்லை. கண்கள் கலங்கின. உதடுகள் தடுமாற வீட்டில் உள்ள எல்லாரிடமும் சொல்லி விட்டுப் பிரியா விடை பெற்றுக் கொண்டு சென்றார்.

1980ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் நாள் ஊருக்கு வருவதாக வேலப்பன் முன்பே கடிதம் எழுதிவிட்டார். சிங்கப்பூருக்குக் கப்பலில் வந்த அவர் அன்றுதான் முதன் முதலில் விமானத்தில் கால் எடுத்து வைத்தார். வேலப்பன் மனதில் எண்ணற்ற கற்பனைகள் எழுந்தன. மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என்று சுற்றிச் சுற்றி வந்தன. வேலப்பன் விமானத்தில் பறந்தார் என்பதைவிட கற்பனையில் மூழ்கிவிட்டார் என்பதே பொருத்தமாக இருந்தது.

வந்த அன்று வாழை இலை; அடுத்த நாள் தையெலை; மூன்றாம் நாள் கையெலை என்பது கிராமங்களில் வழங்கும் பழமொழியாகும். அதைப் போல வேலப்பன் மனைவியும் மக்களும் அன்போடு வரவேற்றனர். அவர்கள் காட்டிய பாசம் எனும் கயிற்றில் சிக்கித் தவித்தார்.

வேலப்பனின் மடியில் கனமில்லை என்பதை வெகு சீக்கிரத்தில் கண்டு கொண்டனர். அவ்வளவுதான் அன்பு படிப்படியாகக் குறைந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வம்பு வளரத் தொடங்கியது.

“ஏன் இவ்வளவு அவசரமாகப் புறப்பட்டு வந்தீங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு இருந்து சம்பாதித்துக் கொண்டு வந்தால் என்ன? அரசாங்க வேலை முடிந்துவிட்டால் வேறு வேலையே கிடைக்காதா? இங்கே வந்து என்ன செய்றீங்க? சும்மாதானே இருக்கிறீங்க. சிங்கப்பூ ருக்குப் போனாலும் நாலு காசு சம்பாதிக்கலாம்” என்ற தொணதொணப்பு ஓய்ந்தபாடில்லை.

எந்த மனைவி பிள்ளைகளுக்காக இருபதாண்டுகளுக்கு மேல் சம்பாதித்து அனுப்பினேனோ; அந்த மனைவி பிள்ளைகளா இப்படிப் பேசுகிறார்கள்? வெயில், மழை என்று பாராது உழைத்துத் தேடிய என்னையா மீண்டும் சம்பாதிக்கச் சொல்கிறார்கள்? நல்ல உணவு, உடையைப் பற்றிக் கவலைப்படாமல் சொத்து சேர்த்த என்னையா விரட்டுகிறார்கள்? வேலப்பனின் நெஞ்சம் வேதனையால் வெம்பியது.

ஒருநாள் இரவு தூக்கம் வராமல் துக்கத்தால் துடித்துக் கொண்டிருந்தார் வேலப்பன். அப்போது ஏதோ பேச்சுச் சத்தம் கேட்டது. வேலப்பன் காது கொடுத்துக் கேட்டார். ‘இந்தா இந்த மருந்தை நாளை இரவு உணவில் போட்டுக் கொடுத்துவிடு. அதோடு எல்லாம் சரியாகிவிடும்’ என்ற குரல்தான் அது.

அந்த மருந்து தனக்குத்தான் என்பது வேலப்பனுக்குப் புரிந்தது. இரத்தம் துடித்தது. இரத்த நாளங்கள் புடைத்தன. ஆத்திரம் அறிவை மங்கச் செய்தது. அந்த இரவில் ஒரு முடிவோடு எழுந்தார். அந்த நீண்ட பெரிய அறிவாளைத் தேடினார். அப்போது எதையோ தட்டிவிட்டார். சட்டி, பானைகள் தவறி விழுந்தன. எல்லோரும் திடுக்கெட்டு எழுந்தனர். கல்யாணி வேலப்பனைக் கண்டபடி பேசினாள்; திட்டினாள். வேலப்பன் ஒன்றும் பேசாத ஊமையானார்.

வேலப்பனுக்குத் தூக்கம் வேப்பங்காயாயிற்று. சுவற்றில் சாய்ந்து கொண்டே இரவைக் கழித்த வேலப்பன் காலையில் எழுந்து தோட்டத்துப் பக்கம் சென்றார். நரைத்த தலை, மெலிந்த உடல், கிழிந்த உடையுடன் ‘மாமா’ என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். அவள் ஒரு பெண் அடையாளம் தெரியாது வேலப்பன் விழித்தார். என்னைத் தெரியவில்லையா? நான்தான் சுமதி. சிங்கப்பூரில் என்னைத் தூக்கிக் கொண்டு கடைக்குச் செல்வீர்களே. வேண்டாம், வேண்டாம் என்றாலும் கேட்காமல் ரொட்டி வாங்கித் தருவீர்களே அந்த சுமதி தான் நான் என்றவள் கண்ணீர் சிந்தி நின்றாள்.

வேலப்பனின் கண்கள் அகன்றன; நெற்றி சுருங்கியது; நெஞ்சம் வருந்தியது. ‘ஏம்மா இப்படி இருக்கிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார். அந்தக் கதையை ஏன் மாமா கேட்கிறீர்கள்? என்றவள் சுருக்கமாகச் சொல்லி முடித்தாள். பேச்சின் இறுதியாக ‘மாமா’ எனக்கு ஒரு பழைய சேலை இருந்தால் தருகிறீர்களா? சுமதி தான் கேட்டாள்.

வேலப்பனுக்கு நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது. சுமதியின் கதை வேலப்பனின் கண்களில் நீர் கசியச் செய்தது. வேலப்பன் இப்போது தன் நிலைக்காக அழுவதா? சுமதிக்காக அழுவதா? ஒன்றுமே புரியாத வேலப்பன் தன் கையிலிருந்த நோட்டுக்களைக் சுமதியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.

குப்புசாமி தம்பதியினரின் ஒரே வளர்ப்பு மகள் குணவதி. குணவதியைப் பொன்னாலே அலங்கரித்தனர். விதவிதமான உடைகளை உடுத்தி அழகு பார்த்தனர். வறுமை, துன்பம், தொல்லை என்றால் என்ன வென்றே தெரியாமல் வளர்த்தனர். வேலை முடிந்ததும் குப்புசாமி தம்பதியினர் ஊருக்குச் சென்றனர். சில ஆண்டுகளில் ஒருவர்பின் ஒருவராகக் குப்புசாமியும் அவரது மனைவியும் மண்டையைப் போட்டனர். அதன்பின் யாருக்கோ வாழ்க்கைப்பட்ட சுமதியின் நிலைமை இப்படி ஆயிற்று என்பதை உணர்ந்தார்.

வேலப்பன் நேராகத் தம்புசாமியின் வீட்டிற்குப் போனார். அவரிடத்தில் ஐயாயிரம் ரூபாயைக் கடனாக வாங்கிக் கொண்டு மற்ற ஏற்பாடுகளை அவசரம் அவசரமாகச் செய்து முடித்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் சிங்கப்பூருக்குப் புறப்பட்டார்.

விமான நிலையத்திலிருந்து நேரே புக்கித்திமா சாலையில் இருந்த தவக்கையின் வீட்டிற்கு வாடகை வண்டி சென்றது. வேலப்பனைக் கண்ட தவக்கையும் குடும்பத்தினரும் ஆச்சரியத்துடன் வரவேற்றனர்.

தவக்கே, நான் சாகும்வரை அல்லது உடலில் தெம்பு உள்ளவரை இங்கே தங்கிக் கொண்டு வேலைசெய்ய விரும்புகிறேன். வாய்ப்புத் தருவீர்களா? ஊருக்குப் போய் நொந்து போய் வந்த எனக்கு உதவுவீர்களா? வேலப்பன் தாழ்மையுடன் கேட்டார். வேலப்பனின் உண்மையான விசுவாசத்தை அறிந்திருந்த அவர்கள் இணங்கினர்.

அன்று முதல் வேலப்பன் அந்த வீட்டிலேயே தங்கிக் கொண்டு நாயை விட மிகுந்த விசவாசத்துடனும் நன்றியுடனும் வேலைசெய்து கொண்டு வந்தார். நாட்கள் ஓடி மாதங்களாயின.

வேலப்பன் கைக்கு ஓர் ஊர்க்கடிதம் கிடைத்தது. அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்க்கவே பிடிக்கவில்லை. கிழித்துப் போட நினைத்த வேலப்பன் மனதில் ஓர் அற்ப ஆசை. பிரித்தார்; படித்தார்.

அன்புள்ள கணவருக்கு, நலம். நலங்காண நாட்டம். கோபதாபத்தில் கணவன் – மனைவி பேசிக் கொள்வது கிடையாதா? அதற்காக இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் போகலாமா?

நடந்ததை மறந்துவிடுங்கள். பெரிய மகனுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்கிறேன். நம்ம வீட்டின் முதல் திருமணம் சிறப்பாகச் செய்ய வேண்டும். உடனடியாக பணம்… அதற்கு மேல் வேலப்பனால் படிக்க முடியவில்லை.

ஆத்திரமும் ஆவேசமும் அவரையும் அறியாமலே அதிகமாகியது. கடிதத்தைச் சுக்குநூறாகக் கிழித்துப் போட்டுவிட்டுக் காறித் துப்பினார்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக மழை என்றும் வெயில் என்றும் பாராமல் உழைத்துப் பல்லைக் கடித்துக் கொண்டு சம்பாதித்து மனைவி மக்களைக் காப்பாற்றினேன். அந்த மனைவி மக்கள் எனக்குத் துரோகம் செய்ததும் அல்லாமல் இப்போது திருமணமாம். சிறப்பாகச் செய்ய வேண்டுமாம். அதற்குப் பணம் வேண்டுமாம்.. ச்சே இவர்களுக்கு எல்லாம் மானம் மரியாதை இல்லையா? உடலில் கொஞ்சங்கூட நல்ல இரத்தம் ஓடவில்லையா? நன்றி கெட்டவர்கள்.

இந்த மாளிகையை முப்பதாயிரம் வெள்ளிக்கு வாங்கியதாகத் தவக்கே கூறினார். நான் வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி சம்பாதித்த பணத்தை எல்லாம் இந்த நாட்டில் முதலீடு செய்திருந்தால் இந்த அழகிய மாளிகையைப் போல இரண்டு வாங்கியிருப்பேனே! செய்தேனா! எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன்.

செல்லம்மாள் அழகும் அன்பும் நிறைந்தவள். அவள் என்னோட வாழ எவ்வளவு ஆசைப்பட்டாள்? எவ்வளவு காலம் முயற்சி செய்தாள்? ஆனால் அவளின் அன்பையும் ஆசையையும் மனைவி மக்கள் மீது கொண்ட கைக்கிளையாலும், ஊர் உலகத்தின் மீது இருந்த பயத்தாலும் ஒதுக்கித் தள்ளிவிட்டேன். செல்லம்மாள் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள்? எவ்வளவு வருந்தியிருப்பாள்?

…ம்ம்.. என்ன கொடுமை? வயதான இன்று யாருமில்லாத ஒரு தனிமரமாக இருக்கிறேன். இறந்தபின்தான் தனியாகப் போக வேண்டும். ஆனால் உயிரோடு இருக்கும் போதே தனியாகிவிட்டேன். இது விதியா? அல்லது மதியை ஒரு வட்டத்திற்குள் சுழல விட்டதின் சதியா? என்றெல்லாம் அந்தப் பெரியவரின் உள் மனம் எண்ணி எண்ணிக் குமுறிக் கொண்டிருந்தது.

– தனிமரம் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஏப்ரல் 1990, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *