கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2018
பார்வையிட்டோர்: 5,824 
 
 

ட்ரம்ஸ் அடிப்பின் அதிர்வில் செவிப்பறை கிழிந்தது. வீட்டுக்கு முன் வீதி நடுவில் செத்தை, குப்பைகளை எரித்து, சுற்றி வட்டமாக நின்றவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் இளைஞர்கள். கட்டுப்படி பாண்டு செட் என்று கோணல் மாணலாக நீல பெயிண்டில், வட்ட வடிவமான எல்லாப் பறை வாத்தியங்களிலும் எழுதியிருந்தது. இரண்டு கைகளிலும் குச்சி வைத்து, ரிதத்துடன் அடித்து, வெளுத்துக் கொண்டிருந்தார்கள். எழுந்து, அந்தப் பறை இசைக்கு, சுயம் மறந்து ஆடலாம் எனக் கால்களும், கைகளும், உடம்பும் பரபரத்தன. கூடவே, மனசும். என்னமாய் வாசிக்கிறார்கள்?

தெரு முனையில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. நடுத்தர வயதுத் தம்பதி இறங்கினார்கள். அவர்களில் சட்டையை இன் செய்து பேண்ட் அணிந்திருந்த ஆண், தன் கையில் ஏந்தி வந்த மாலையைச் சுற்றியிருந்த தாளை அகற்றினார். ரோஜாக்களால் தொடுக்கப்பெற்ற பெரிய மாலை, ஜிகினா இழை சுற்றி பளபளத்தது. வாத்தியக் கோஷ்டியினரில் பாதிப் பேர் தெரு முனைக்கு விரைந்தார்கள். வந்தவர்களுக்கு வரவேற்பு கொடுக்கும் நோக்கில் வாசித்தபடியே வீடு வரை அழைத்து வந்தார்கள். மாலையுடன் வந்தவர்கள் வீட்டுக்குள் நுழைந்து, சிறிது நேரத்தில் திரும்பினார்கள். அவர்களை எதிர்நோக்கிக் காத்திருந்த வாத்தியக் கோஷ்டியிடம், பேண்ட் சட்டைக்காரர் ஒரு நூறு ரூபாய்த் தாளை நீட்ட, சலாம் செய்தபடி ஒருவன் பவ்யமாகக் குனிந்து வாங்கிக் கொண்டான்.

பாண்ட் கோஷ்டி, இப்போது வேறு ஒரு லயத்தில் வாசிக்க ஆரம்பித்து அனைவர் கவனத்தையும் இழுத்தது. ரிதமான அந்த இசை, பலமான செவிப்பறை கிழிக்கும் தன்மையோடு, சுற்று வட்டாரத்தை உண்டு இல்லையென்று ஆக்கியது.

சிலுப்பன் மொபைல் ஃபோனில், “காலை பத்து மணிக்கு எடுத்துடலாம்னு இருக்கோம்டா குமரேசா.. கே.ஜி.எஃப்.பிலேர்ந்து பெரிய மச்சான் வர்றதுக்காகத்தான் வெயிட்டிங்!” என்று சொன்னதால் இவன் மனைவியுடன் சாதுகார மடத் தெருவுக்கு ஒன்பது மணிக்கெல்லாம் வந்து விட்டான். மணி இப்போது 11. இன்னும் எடுத்தபாடில்லை!

கண்ணாடிப் பேழையில் நிரஞ்சனா புன்னகை விரிந்த முகத்துடன் துயில் கொண்டிருந்தாள். எப்போது நண்பன் சிலுப்பன் வீட்டுக்குப் போனாலும் வாய் கொள்ளாச் சிரிப்புடன் “வாங்கண்ணே! வீட்டுல அண்ணி, கொழந்தைகள் சௌக்கியம் தானே?” என்று கேட்டபடியே முதலில் ஜில்லென்று தாகத்துக்குத் தண்ணீரும், தொடர்ந்து பிஸ்கட், தேநீரும் கொண்டு வந்து உபசரிப்பாள் நிரஞ்சனா.

அப்படியே எதிரில் நின்றுகொண்டு கணவனைப் பற்றிய சில புகார்களையும், கொட்டுவாள். சிலுப்பன் ராய வேலூருக்கே பெரிய போக்கிரி என்று பெயரெடுத்தவன். இந்த மாடர்ன் யுகத்திலும் தலைமுடியை பாகவதர் போன்று வளர்த்து பின் கழுத்தின் பிடரி வரை தொங்கவிட்டிருப்பதோடு, எம்.ஜி.ஆர். படங்களின் வில்லன்கள் போன்று அடர்த்தியான மீசையும் வைத்திருந்தான். ஆனால் இவை ஒட்டாத மாதிரியில் ஒல்லியான உடம்பு! இவனுக்குப் பலமே, நெருப்பாய் ஜொலிக்கிற கண்களும், கரடு முரடாய் மிரட்டுகிற கட்டையான குரலும்தான்!

எந்நேரமும் விருதம்பட்டு தனவேல், காட்பாடி லூயிஸ், வேலப்பாடி சௌந்தர், சாயிநாதபுரம் ஜனா என்று தன் ஜமாவுடன் புல்லட் மோட்டார் சைகிளில் நகரை வலம் வருவான் சிலுப்பன். நிறையப் பேர் இவனைத் தேடி வருவார்கள், எல்லாம் வல்லடி வழக்குகளுக்கான உதவி கோரித்தான். தேடி வந்து உதவி கோரியவர்களுக்கு, அவர்கள் தரப்பில் நியாயம் இல்லா விட்டாலும் துணை நிற்பான். வேலை முடிந்ததும் அவர்களிடம் படி போட்டுவிடுவான் சிலுப்பன். படி என்றால், பில் என்றும், செய்த வேலைக்கு கட்டணம் என்றும் அர்த்தம் கொள்ளலாம்!

“என்னிய மதிச்சுத் தேடி வந்தவன் கச்சிதான் நானு. அவனுக்கு உண்மையா இருப்பேன். அவனுக்காகக் கொலை கூடச் செய்வேன்!” என்று அடிக்கடி அவன் திருவாய் மலர்வது வழக்கம்.

சிலுப்பனோட பெரிய மச்சான் கே.ஜி.எஃப்.பிலேர்ந்து வந்தாச்சு! என்று யாரோ, யாருக்கோ கத்தினார்கள்.

பாண்டு வாத்திய முழக்கம் உச்சஸ்தாயியில் ஒலிக்க ஆரம்பித்து அந்தப் பிராந்தியத்தையே அதிர வைத்தது. வீட்டு முன் போட்டிருந்த ஷாமியானா பந்தலையும் மீறி உச்சி வெய்யிலின் கொடூரம் கீழே பிளாஸ்டிக் சேர்களில் உட்கார்ந்திருந்தவர்களைத் தாக்கியது. பெண்கள் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் கலைந்த தலையுடனும், அழுது சோர்ந்த கண்களுடனும் காணப் பட்டார்கள்.

தெருமுனை டீக் கடையிலிருந்து ஒரு வட்டத் தட்டு நிறைய கப்புகளில் தேநீர் வந்தது. பந்தலின் கீழ் அமர்ந்திருந்தவர்களுக்கு தேநீர் வழங்கபட்டது. சிலர் நாசூக்காக வேண்டாம் என்று சைகை காட்டினார்கள். தெருவோர சாக்கடையிலிருந்து ஒருவித கழிவுநீர் வீச்சம் நாசியைத் தாக்கியது.

“ஒரு வருசமாவே பிரச்சினைதாங்க மச்சான். சக்திக்கு மீறி தனியார் ஆஸ்பத்திரியிலதான் பாத்தோம். கிட்னியில பிராப்ளம் னாங்க. யூரினுக்குத் தனியா ஒரு டியூப் செருகினாங்க. கர்ப்பப் பையிலேயும் ஏதோ பிரச்னை…ஆப்பிரேசன் பண்ணினாங்க. நிரஞ்சனாவுக்கு ராத்திரி பகல் அவஸ்தை தான். பாத்ரூம் போகணும்னா நாந்தான் படுக்கையிலேர்ந்து தூக்கிட்டுப் போய் விட்டுத் திரும்பக் கொண்டாறணும். திடீர் திடீர்னு வலிக்குதேன்னு கத்துவா. அடி வயித்தைப் புடிச்சுகிட்டு அலறுவா. எதுக்கும் அஞ்சாத நானு ஆடிப்போயிடறது அப்பதான் மச்சான்! அவளுக்கு ஆறுதல் சொல்லிகிட்டு உள்ளுக்குள்ளாற நான் அழுவேன். கொஞ்ச நேரத்துல வலி குறைஞ்சதும் பூ மாதிரி சிரிப்பா பாருங்க மச்சான், பழையபடி நக்கலும், கேலியும் கிண்டலும்..அப்பப்பா!” சிலுப்பன் தன் கே.ஜி.எஃப் மச்சானிடம் பேசியது இவன் காதில் விழுந்தது.

நிரஞ்சனாவிடம் இவனுக்குப் பிடித்ததே கள்ளங் கபடமற்ற அந்தச் சிரிப்புதான். சிலுப்பன் பண்ணுகிற அட்டகாசத்தை எல்லாம் இவனிடம்தான் உரிமையாகச் சொல்லிக் கண்டிக்க வற்புறுத்துவாள்.

சிலுப்பனுக்கு இவன் நெருங்கிய நண்பன். இவன் பேச்சு ஒன்றுக்குத்தான் சிலுப்பன் கட்டுப்படுவான். காரணம், பள்ளிக்கூடக் காலம் முதல் இருவரும் சிநேகிதர்கள். இவன் படித்து சர்வீஸ் கமிஷன் தேர்வில் பணி கிடைத்து, அரசு தலைமை மருத்துவ மனையின் நிர்வாகப் பிரிவுத் தலைவராகப் பணிபுரிந்து வந்தான். சிலுப்பன், அடாவடியில் ஜமா சேர்த்துக்கொண்டு ஊரை வலம் வந்தான். என்றாலும் ஏதோ ஒன்று இருவரையும் தொடர்பில் இருத்தி வைத்திருந்தது.

“அண்ணே! நீங்க வரட்டும்னுதான் காத்துகிட்டிருந்தேன். இவரு பண்ணுகிற அக்குருமம் தாங்க முடியல்லே. போன வாரம் மாதனூருல திருவிழான்னு எங்க அப்பா கூப்பிட்டனுப்பிச்சாங்க. போயிருந்தமா, ஊர் நாட்டாமை ஏதோ சத்தமாப் பேசிட்டாருன்னு அவரை இவரு அடிச்சுப்புட்டாரு. போலீஸ் கீலீஸ்னு வந்து பெரிய ரகளையாப் போச்சு. இவ்ளோ கோவம் இவருக்கு ஏன்னு கேளுங்கண்ணே! கொஞ்சம் கண்டிச்சுட்டுப் போங்கண்ணே!” என்று முறையிட்டாள் நிரஞ்சனா. சிலுப்பன் இவனைப் பார்த்து மெல்லச் சிரித்தான்.

“முதல்ல டயாலிஸிஸ் பண்ணறோம்னு சொன்னாங்க. அப்புறம் சர்ஜரின்னாங்க. ஆஸ்பத்திரி, அட்மிஷன், டெஸ்ட்டு அது இதுன்னு ஏகப்பட்ட அலைச்சல். வீட்டை அடமானம் வெச்சுச் செலவு பண்ணேன். செலவு கெடக்கு சனியன். எம் பெண்டாட்டி எழுந்திரிச்சி மின்னே மாதிரி நடப்பாளாங்கறதுதான் என்னோட கவலை! கடைசிவரை சிரிச்சுகிட்டேயிருந்து என்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டா குமரேசா!” – இப்படிச் சொல்லும்போது கண் கலங்காமல், ஏதோ இறுகிய முகத்தோடு அவன் சொன்னதில், இவன் கண்கள் மடை திறந்து அழுகையை வெளிப்படுத்தின.

தெருவை அடைத்துப் பல்லக்கு கட்டினார்கள். வாழை மரப்பட்டையில், காகிதத்தில் செய்த பூக்களைச் செருகி வளைவு வளைவாக அலங்காரம் செய்தார்கள் ஆள்காரர்கள். நீர்மாலை முடிந்து நிரஞ்சனாவைப் பல்லக்கில் ஏற்றிப் படுக்க வைத்தார்கள். அதிர் வேட்டுகளுடனும், தௌசண்ட் வாலா பட்டாசுச் சர வெடிப்புச் சத்தத்துடனும் பல்லக்கு புறப்பட்டது. தெருவுக்கு மேலே குறுக்கே போன வயர்கள் தடுக்க, நீண்ட குச்சியால் அதை விலக்கி பல்லக்கு முன்னேறியது. சாலையை அடைத்துப் பல்லக்கு அலங்கரிக்கப்பட்டிருந்ததால் அது தடுக்கும் இடங்களில் நிறுத்தி, தடைகளை விலக்கிப் போய் மயானம் அடைய வெகு நேரமாகியது.

இந்த மயானத்துக்கு இவன் வெகுகாலத்துக்கு முன் வந்திருக்கிறான். அடர்ந்த புதர்களும் மரங்களும் காடாய் மண்டிக் கிடக்க, இரண்டு எரியூட்டுக் கொட்டகைகள். ஈமச்சடங்கு முடிந்து அலுவல் செய்தவர்களுக்கு பணப்பட்டுவாடா நிகழ்த்த ஒரு சிமெண்டு மேடை. இப்போது எல்லாவற்றையும் நவீனப் படுத்தியிருக்கிறார்கள். வேலை முடிந்து திரும்பும்போது குளிக்க, உடை மாற்ற தனித் தனி அறைகள்,

“வாய்க்கரிசி போடறவங்க போடலாம்!” என்று வெட்டியான் குரல் கொடுக்க, கூட்டத்தாரில் ஒருவனாய் இவனும் கண்ணீருடன் வாய்க்கரிசியைப் போட்டான். பிற்பகல் இரண்டு மணிக்கு எல்லாம் முடிந்தது. வந்திருந்த கூட்டம் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொள்ளாமலே கலைந்து திரும்பினார்கள். கடைசியாக சிலுப்பனுடன் இவன் மயானத்தை விட்டுக் கிளம்பினான். பின்னால், சிலுப்பனின் ஜமா தலை குனிந்தபடி வந்தது.

சிலுப்பனைக் கைத்தாங்கலாகப் பிடித்து நடத்திச் சென்ற குமரேசனை ஊருக்குள் நுழையும் இடத்தில் ஒரு மர நிழலில் நிற்கும்படி சைகை காட்டினான் சிலுப்பன். “குமரேசா, நான் படிக்காத தற்குறி. எனக்கு ஒரு விசயம் புரியவேயில்லைடா..” என்றான்.

“சொல்லு சிலுப்பா!”

“ஊருல அநியாயம், அக்குருமம்னு செஞ்சு பலபேரோட வயித்தெரிச்சலயும் சாபத்தையும் வாங்கிக் கட்டிகிட்டவன் நானு. பல நல்ல மனுசங்களை அடிச்சு ஒதைச்சு, கை காலை முறிச்சு அவங்க குடும்பத்தையே அழ வெச்ச பாவி.. ஆனா, எனக்கு ஒரு கஷ்டமும் வரல்லை. நாசகாரப்பாவி .நீ நல்லா இருப்பியா, நாசமாப் போயிடுவேன்னு என்னியப் பாத்து எத்தினியோ பேர் மண்ணை அள்ளித் தூத்தியிருக்காங்க. ஆனா என் பொண்டாட்டி நிரஞ்சனா யாருக்கும் ஒரு தீங்கும் நினைக்காதவ. எல்லோருக்கும் நல்லதே நினைப்பா. நல்லதே பண்ணுவா. அவளுக்கு ஏன் இப்படி வேதனை? வியாதி? ஆப்பரேஷன், டயாலிஸிஸ், ஆஸ்பத்திரி, இஞ்செக்ஷன், இப்படி உடம்புக்கு வேதனை, கஷ்டம்? எனக்குப் புரியல்ல. கடவுள் கணக்கை ஏன் மாத்திப்போட்டுக் குழப்பிட்டாரு?” என்றான் சிலுப்பன்.

குமரேசன் சிலுப்பனின் முதுகில் பரிவுடன் தட்டிக் கொடுத்தான்.

“நல்ல கேள்விதான். இதை இப்படி மாத்தி யோசிச்சுப் பாரு சிலுப்பா. உன் ஒய்ஃபுக்கு வந்த கஷ்டமெல்லாம் உனக்கு வந்திருந்தா ஆஸ்பத்திரிக்கு அலைஞ்சு, ராத்திரி பகலா உன் கஷ்டத்தைக் கண்ணால பார்த்து, சிகிச்சைகள் செஞ்சு, உன்னைப் பாத் ரூமுக்குத் தூக்கிக் கொண்டு விட்டு, அழைச்சு வந்துன்னு உன் மனைவி எத்தனை கஷ்டப்பட்டிருப்பா? இப்ப உன் மனைவிக்கு உடம்பு சரியில்லாம ஆக்கி, உன்னைத்தானே கடவுள் கஷ்டப்பட வெச்சிட்டாரு? அப்ப தண்டனை அவளுக்கா உனக்கா?”

குமரேசா… திடுக்கிட்டு நின்றான் சிலுப்பன்.

(நெல்லை தினமலர் – ஞாயிறு மலர்)

ஜே.வி.நாதன்,பொறுப்பாசிரியர்,‘ஜன்னல்’ மாதமிருமுறை இதழ்,சென்னை. ஜே.வி.நாதன் சிதம்பரத்தில் பிறந்தவர். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வேலூரில் வாசம். ‘ஆனந்த விகடன்’ நிறுவனத்தில் ஆசிரியர் இலாகா செயல் அலுவலராகவும், அப்போதைய விகடன் எம்.டி.யான திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நேர்முக உதவியாளராகவும் பணியாற்றியவர். விகடனுக்குப் பிறகு, ‘ஜன்னல்’ மாதமிருமுறை இதழில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தார். சக்தி விகடன் மாதமிருமுறை இதழில் பிற மாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற ஆலயங்களை நேரில் தரிசித்து, அவை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *