சுந்தரம் அன்று காலையிலிருந்தே முடிக்கு டை அடித்து, ஷேவ் செய்து ‘பிரஸ்’ ஆக யாருக்காகவோ காத்திருந்தார்.
அவருக்கு தொந்தி இல்லாததால், டி சர்டை இன் செய்து, லேசாக சென்ட் அடித்துக் கொண்டார். முகத்திற்கு கிரீம் தடவி அதன் மேல் பவுடர் மணக்க பூசியிருந்தார்.
ஹாலில் அமர்ந்து நயன்தாரா – ஆர்யா கிசுகிசுவை ஒரு சினிமா பத்திரிகையில் சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டே, யாரையோ எதிர் பார்த்து காத்திருந்தார்.
அடிக்கடி எழுந்து தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டார். இருபது வருஷங்களுக்கு முன் ஆபிஸூக்கு பைக்கில் போகும் பொழுது எப்படி இருந்தாரோ அப்படியே தன் தோற்றம் இருப்பதைப் பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டார். அவருக்கு அறுபத்தி ஐந்து வயசு ஆகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்!
அன்று காலையில் அவர் மனைவி சகுந்தலா பேரனுக்கு உடம்பு சரியில்லை என்று ஆர்.எஸ். புரம் இளைய மகள் வீட்டிற்குப் போயிருந்தாள். இனி இரவு சாப்பாட்டிற்குப் பிறகு தான் அவள் வீடு திரும்புவாள்.
சகுந்தலா தலை நரைத்தவுடன், கோயில், குளம், பூஜை என்று தன்னை ஈடு படுத்திக் கொண்டாள். சுந்தரம் பேஸ் புக், இண்டர் நெட் என்று பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட அந்த வீட்டில் இருவரும் இரு தீவுகளாக காட்சியளித்தார்கள்!
கல்யாணம் ஆன அவர்களுடைய மூன்று பெண்களில் யார் வீட்டிற்கு வந்து போனாலும் சரி, அப்பொழுது மட்டும் அந்த வீடு கலகலப்பாக இருக்கும்!
. அவர்கள் வீட்டு வேலைக்காரி நிர்மலாவின் கணவன் வேறொருத்தியோடு ஓடிப் போய் விட்டான். கடந்த பத்து வருடங்களாக, நிர்மலா அந்த வீட்டில் நம்பிக்கைக்கு உரியவளாகவும், எல்லோரிடமும் பிரியத்தோடும் பழகி வந்தாள். அந்த வீட்டில் அவளையும் ஒருத்தியாகவே சகுந்தலாவும், அவர்களின் மூன்று பெண்களும் அவளிடம் பாசத்தோடு நடந்து கொண்டார்கள்.
நிர்மலாவுக்கு முப்பத்தைந்து வயசு என்று யாரும் சொல்ல முடியாது. நல்ல கட்டான உடல் வாகு. பார்க்க தளதள என்று அம்சமாக இருப்பாள். அவள் எல்லோரிடமும் ஒட்டுதலோடு சிரித்துச் சிரித்துப் பழகுவதைப் பார்த்து சுந்தரத்திற்கு நீண்ட நாளாக ஒரு சபலம்! சுந்திரத்திடம் அவளுக்கு ரொம்ப மரியாதை! அதனால் அவள் அனுசரித்துப் போய் விடுவாள் என்று அவருக்கு ஒரு நம்பிக்கை! அதற்கான சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தார்.
அவர் எதிர் பார்த்த சந்தர்ப்பம் அன்று வந்து விட்டது. நிர்மலா சிரித்துக் கொண்டே தான் அன்று வேலைக்கு வந்தாள். ஒவ்வொரு ‘ரூம்’களாகப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டே வந்தாள். சுந்தரம் ஹாலில் காத்திருந்தார். நிர்மலா பெட் ரூமைப் பெருக்கப் போனாள்.
சுந்தரம் மெதுவாக அவள் பின்னழகைப் பார்த்துக் கொண்டே பெட் ரூமிற்குள் மெதுவாகப் பின்னால் போனார். கீழே கிடந்த சாமானைக் கவனிக்காததால் தடுக்கி விழப் போனார்.
சத்தம் கேட்டுத் திரும்பிய நிர்மலா உடனே ஓடிவந்து அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
“ அப்பா!…பார்த்து வரக்கூடாதா?.இந்த ரூமில் எதை எடுக்க வந்தீங்க?…என்னிடம் கேட்டால் நான் எடுத்து தர மாட்டேனா? என்னப்பா!…வயசாகியும் இன்னும் நீங்க சின்னப் பிள்ளையாட்டவே நடந்துக்கிறீங்க?….நாங்க எல்லாம் எதுக்கு இருக்கிறோம்?…”
என்று சுந்தரத்தின் கைகளை உரிமையோடு கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அவரை ஹாலுக்கு அழைத்துப் போய் சோபாவில் உட்கார வைத்தாள் நிர்மலா!
தன்னுடைய மூன்று பெண்களைப் போலவே அவளும் நொடிக்கொரு முறை “அப்பா!~…….அப்பா!” என்று நிர்மலாவும் அழைத்துப் பேசியதால், சபலத்தால் ஏற்பட்ட சுந்தரத்தின் தடுமாற்றம் போன இடம் தெரிய வில்லை!
குட் story