டீக்கடை மோகினி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 31, 2024
பார்வையிட்டோர்: 2,126 
 
 

(1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குட்டைக்கரையில் இருந்த டீக்கடையிலிருந்து தேநீரின் மணம் ‘கம்’ மென்று எழுந்தது. காஸ் விளக்கின் ஒளியில் ‘ஸ்பெஷல் டீ.’ யில் பாலை ஊற்றி, சர்க்கரை போட்டு ஆற்றிக் கொண்டிருந்தாள் நப்பின்னை. அந்த அதிகாலையில் பூக்கடைக் கதம்பம் சூடி, பிறை போன்ற நெற்றியில் குங்குமப் பொட்டுடன் அவள் டீயை ஆற்றும் அழகைப் பார்த்துக் கொண்டே அவள் எதிரில் உட்கார்ந்திருந்தான் துரைவேலு. பதமான சூட்டுடன் கண்ணாடி டம்ளரில் தேநீரை ஊற்றித் தன் கணவனிடம் கொடுத்தாள் நப்பின்னை. 

“நீ சாப்பிடவில்லைய?” என்று விசாரித்தான் துரைவேலு. 

“நீங்க முதல்லே சாப்பிடுங்க. அப்படித் தானே தினமும் இங்கே நடக்குது. இன்றைக்கு மட்டும் எனக்கு முதல்லே சாப்பிட மனம் வருமா?” நப்பின்னை அவனைக் கடைக் கண்ணால் பார்த்தவாறு கூறினாள். 

துரைவேலு அவள் கொடுத்த தேநீரை வாங்கி உறிஞ்சிக் குடித்தான். அதன் இனிமையிலே அவனுக்குப் பழைய நினைவுகள் கிளைத்துக் கொண்டு எழுந்தன. அப்படியே அந்த இன்ப நினைவில் ஆழ்ந்து போனான் துரைவேலு. 


முதல் மின்சார வண்டி “குய்ங்ங்” என்ற சத்தத்துடன் பரங்கிமலை ரயில் நிலையத்தை விட்டுக் கிளம்பியது. விடியற்காலம் மணி சுமார் நாலரை இருக்கும். பனிப்படலம் ரயில் நிலையத்தையும். அண்மையில் இருந்த வேப்ப மரங்களையும் இலேசாகத் திரை போட்டாற் போல் மறைத்துக் கொண்டிருந்தது. ‘லெவல் கிராஸிங் கேட்’ அருகில் இருந்த குட்டைத் தண்ணீர் சலனமற்றுத் தேங்கிக் கிடந்தது. அதைச் சுற்றிக் கோரைப் புற்கள் புதர்போல் வளர்ந்திருந்தன. அடுத்து நெருப்பு மேடைக்கருகில் ஊராரின் எருமை மாடுகளில் பல கட்டப்பட்டிருந்தன. குட்டைக் கரையைச் சுற்றித் தெற்கு பார்த்தாற் போல் ஒரு வெற்றிலைக் கடை , உலைக் கூடம், தையற் கடைகள் இரண்டு, மெத்தை தைக்கும் சாயபுவின் கடை ஆகியவை இருந்தன. இப்படி ஒரு சிறு கடைத் தெரு அங்கு பத்து வருஷங்களாக எழும்பி இருந்தது. காலை நேரத்தில், அந்தக் கடைக்காராகளின் பசியைத் தணிப்பதற்கு ஒரு பலகாரக் கடையை யாரும் போடாமல் இருந்தது. அந்தக் குட்டைக்கரைக் கடைத் தெரு வியாபாரிகளுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. 

அப்பொழுதுதான் முனியம்மாளின் மகள் நப்பின்னைக்குத் தானே சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முனியம்மாள் அரிசிக்கடை ஒன்றில் அரிசி அளந்து போட்டுத் தினம் எட்டணாவும் இரண்டு படி அரிசியும் சம்பாதித்து வந்தாள். மூட்டைக் கணக்கில், குனிந்த இடுப்பை நிமிர்த்தாமல் அரிசி அளந்து போட்டு அவளுக்கு இடுப்பே வளைந்து விட்டது. தாயும், மகளும் அந்த வருமானத்தில் வயிறாரச் சாப்பிட்டு சீட்டுக் கட்டி, ஒரு எருமை மாட்டையும் வாங்கிப் பால் வியாபாரம் செய்து வந்தார்கள். நப்பின்னை மாட்டைத் தேய்த்துக் கழுவி (குட்டையில்தான்!) ஆலந்தூர் ஹோட்டல் ஒன்றில் பாலைக் கறந்து விட்டு, துட்டு வாங்கித் தவிடும் பிண்ணாக்கும் வாங்கி வருவாள். அரிசிக்கடையில் வேலை செய்து களைத்து வரும் தாய்க்கு மீதிப் பாலில் காப்பி போட்டு வைத்து விட்டு, சமைத்தும் வைத்து விடுவாள். உழைப்பாளியின் மகளாக இராமல், சுத்தமாகத் தோய்த்து உடுத்திய சிற்றாடையும், தலை சீவிப் பின்னிப் பூச்சூட்டியும் ‘பளிச்’ சென்று இருப்பாள் நப்பின்னை. பூ என்றால் அவளுக்கு உயிர். தவிடு, பிண்ணக்கு வாங்கும்போது தினமும் ஒரு அணாவுக்குப் பூ வாங்கத் தவற மாட்டாள். அந்த வட்டாரத்தில் இருந்த வாலிபர்களுக்கு அவள் மீது ஒரு கண். 

சுறுசுறுப்பாக முதல் வண்டி போகும் போது எழுந்து மாட்டுக்குத் தீனி வைத்து, கிழக்கு வெளுப்பதற்கு முன் ரயில் தண்டவாளத்தைத் தாண்டி ஆலந்தூருக்குப் போகும் அவள் மீது எல்லோருக்கும் ஒருவித அன்பு ஏற்பட்டிருந்தது. பெரியவர்கள் அவள் திறமையை மெச்சிக் கொண்டார்கள். பெண்கள் அவளைப் போலத் தங்களால் இருக்க முடியவில்லையே என்று அசூயைப் பட்டார்கள். வாலிபர்களின் மனத்தில் பல கனவுகள் எழுந்தன. 


ஒரு நாள் முனியம்மாள் பொழுது விடிந்த பிறகும் படுக்கையை விட்டு எழுந்திருக்க வில்லை. நப்பின்னை கடைத்தெருவிலிருந்து திரும்பி வந்த பிறகுதான் தாய்க்கு உடம்பு சரியில்லை என்பதைத் தெரிந்து கொண்டாள். அடுத்த சில நாட்களுக்கு எப்படி ஜீவனம் நடத்துவது என்று யோசியாமல் இருந்து விட்டாள் அவள். பதினைந்து தினங்களுக்கு அப்புறம் தான் வீட்டில் உப்பிலிருந்து அரிசி வரையில் தட்டிப் போயிருப்பது தெரிந்தது. முனியம்மாளுக்குப் பாரிச வாயு நோய் வந்து படுக்கையில் கிடந்தாள். மகளை அரிசிக்கடை வேலைக்கு அனுப்ப அவள் இசையவில்லை. பால் வியாபாரத்தில் ஒரு நாளைக்கு எட்டண லாபத்துக்கு மேல் வரவில்லை. 

நப்பின்னை யோசித்தாள். கடைசியில் இட்டிலிக்கடை போடுவது என்று தீர்மானம் ஆயிற்று. அண்டை அயலாரிடம் சொல்லாமல் கொள்ளாமல், முதல் நாளே மாவரைத்துப் பண்டங்கள் சேர்த்து, அடுத்த நாள் கருக்கலில் குடிசை வாசலில் பலகாரக்கடை போட்டாள் நப்பின்னை. விடிவதற்கு முந்தியே பலகாரக்கடையின் பிரதாபம் ஊர் முழுவதும் பரவிவிட்டது. பஞ்சு போன்ற தோசைகளும் பூப்போன்ற இட்டிலிகளும், ‘கமகம’ வென்று மணக்கும் வடைகளும், அவைகளுக்கு வேண்டிய உபகரணங்களுடன் வியாபாரத்துக்குத் தயாராகத் தட்டுகளில் அடுக்கி வைத்தாள் நப்பின்னை. வியாதிக்காரியான தாய்க்குத் தன் கையால் செய்த இட்டிலியைக் காலை ஆகாரமாகக் கொடுத்த போது முனியம்மாளே மகளின் கை வண்ணத்தைக் கண்டு அதிசயப்பட்டாள். ‘கமகம்’வென்று அத்தனை மணம் அந்த இட்டிலிகளுக்கு எங்கிருந்துதான் வந்ததோ? 

கடை வாசலில் கூட்டம் சேர்ந்தது. காலை ஒன்பது மணிக்குள் பலகாரத் தட்டுகள் காலி ஆகிவிட்டன. போட்ட முதலுக்கு லாபம் அதிகமாகத்தான் இருந்தது. 

“குழந்தை! கொஞ்சம் சூடாகக் காப்பித் தண்ணியும் காய்ச்சி வைச்சுடு. பறந்து போகும்'” என்றார் மெத்தைக்கடை சாயபு. அங்கிருந்த வியாபாரிகளுக்கு மிகவும் சந்தோஷம். நடந்து சென்று பலகாரம் சாப்பிட்டு வராமல், சுடச்சுட நப்பின்னை சுட்டுக் கொடுக்கும் பலகாரம் அவர்களுக்கு அமுதமாக இருந்தது. 

வியாபாரம் செழித்து நப்பின்னை லாபம் சம்பாதித்து நகையும் நட்டுமாக விளங்கும் சமயம், இடைத் தெருவில் புதிதாக வெளியூரி லிருந்து ஒரு ஆசாமி கையில் ரொக்கத்துடன் வந்து சேர்ந்தான். துரைவேலு ஒரு தினுசான பேர்வழி. மல் ஜிப்பாவும் மைனர் செயினும் கைக் கடிகாரமும், விரல்களில் பளிச்சிடும் மோதிரங்களும்தான் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதவை என்று கருதுபவன். அது மாத்திரமல்ல; தன்னைச் சுற்றி நாலு சகாக்கள் வளைய வர வேண்டும் என்பதும் அவன் விருப்பம். வெல்லத்தை ஈ மொய்ப்பது போல நாலு நண்பர் குழாம் அவனைச் சுற்றி வந்தது. 

ஒரு நாள் அதிகாலையில் அவன் வீட்டை விட்டுக் கிளம்பிக் குட்டைக்கரைப் பக்கமாக வந்து கொண்டிருந்தான். 

நப்பின்னை தெருவில் கோலம் போட்டு விட்டு. பலகாரக்கடையின் பொருள்களை எடுத்து வந்து ஒவ்வொன்றாக வாசலில் வைக்க ஆரம்பித்தாள். அப்பொழுது புதி தாக மார்க்கெட்டில் விற்பனையான வாயில் புடவையை உடுத்தி, கைத்தறி ரவிக்கை போட்டிருந்தாள் அவள். தலையில் ரோஜாக் கதம்பம் மணத்தது. நெற்றியில் தற்கால நாகரிகப்படி திலகம் இட்டிருந்தாள். காலை யில் குளத்தில் மலர்ந்த செந்தாமரையைப் போல இருந்தது அவள் தோற்றம். 

அந்த அதிகாலைப் பொழுதில் அவளுடைய தோற்றம் துரைவேலுவைக் கவர்ந்தது. பர பரவென்று பலகாரங்களைச் சுட்டு வைக்கும் அவள் திறமையை வியந்தவாறு கடை அருகில் வந்து அங்கிருந்த குத்துக்கல் ஒன்றின் மீது உட்கார்ந்து கொண்டான் அவன். தன் வேலையில் சுருத்தைச் செலுத்திய நப்பின்னை தலை நிமிராமல் “என்ன ஐயா வேணும் உங்களுக்கு?” என்று கேட்டாள். 

“சூடாக இரண்டு தோசை கொடு…”

புதுக் குரலாக இருக்கவே தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள் அவள். கிழக்கு வெளுக்காத நேரத்தில், தெருவில் சந்தடி இல்லாத போது ஒரு வாலிபன் தனக்கு வெகு சமீபத்தில் உட்கார்ந்து பலகாரம் சாப்பிடுவதை அவள் விரும்பவில்லை. மந்தாரை இலையில் இட்டிலிகளை வைத்துக் கட்டி, “இந்தாங்க, இட்டிலிதான் இருக்கு. இதை எடுத்துக்கிட்டு எந்திரிச்சுப் போய் எதிர்வீட்டுத் திண்ணை யிலே உட்கார்ந்து சாப்பிடுங்க” என்றாள். 

கண்டிப்பும், கறாரும் நிறைந்த அவள் அதிகாரத்துக்குப் பயந்து துரைவேலு எதிர் வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்தான். 


கிழவி முனியம்மாள் உடம்பாகப் படுத்த பிறகு மகளைப் பற்றிய கவலையில் மூழ்கிப் போனாள். அவள் இட்டிலிக் கடை போட்டு வியாபாரம் செய்வது, கடைத் தெருவுக்குப் போய்ப் பால் ஊற்றுவது எதுவுமே அவளுக்குப் பிடிக்கவில்லை. தகுந்த இடமாக வந்தால் அவளைக் கட்டிக் கொடுத்து விட்டு அவளுடன் தானும் போய் நிம்மதியாக இருக்க விரும்பினாள் அந்தக் கிழவி. அப்படிப் பட்ட இடமாக வாய்க்க வேண்டும் என்பது தான் அவள் கவலை.

அவளுக்குத் தூரத்து உறவினர் நான்கு மாதங்களுக்குமுன் ஆரணியிலிருந்து நப்பின்னையைப் பெண் கேட்க வந்தார்கள். கல்யாணப் பிள்ளை அவர்களுடன் வரவில்லை. பெண்ணை அவர்களுக்குப் பிடித்துப் போயிற்று. பரிசம் போடத் தயாராக இருந்தார்கள்.கிழவி தன் விருப்பத்தை அவர்களிடம் தெரிவித்தாள். மகளுக்குக் கல்யாணம் ஆன பிறகு அவளுடன் தான் வந்து இருக்கப் போவதாக அறிவித்தாள். நப்பின்னைக்கும் வயது சென்ற தன் தாயைத் தனியாக விட்டுப் போக விருப்பமில்லை.பிள்ளை வீட்டார் தயங்கினார்கள். நப்பின்னையின் அழகு அவர்களைக் கவர்ந்து விடவே, சீர்சிறப்பில் சற்றுக் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று கல்யாணத்துக்கு அவர்கள் இசைந்தார்கள். ஆனால் வயது சென்ற கிழவி ஒருத்தியைத் தங்கள் குடும்பத் துக்குப் பாரமாகச் சேர்த்துக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை. சீரும் சிறப்புடனும் மருமகள் வருவது ஒன்றைத் தான் அவர்கள் எதிர்பார்த்தார்கள். 

பிள்ளை வீட்டார் தட்டிக் கழித்துவிட்டுப் போனதும் கிழவி மகளை அழைத்தாள். “குழந்தை! நான் எப்படியோ இங்கே இருந்து சமாளித்துக் கொள்கிறேன். நல்ல பசையுள்ள குடும்பம். உன்னைக் கட்டிக் கொடுத்து விட்டால் போதும்” என்று கூறினாள். 

நப்பின்னையின் கண்களில் நீர் சுரந்தது. பெற்ற தாயை, அவளைத் தவிர வேறு நாதி இல்லாதவளை வயது சென்றவளைத் தனியாக விட்டு விட்டு அப்படிக் கல்யாணம் செய்து கொண்டு பிரிந்து போக வேண்டியதில்லை; முடிந்த வரையில் பார்த்துக் கொள்ளலாம். என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருந் தது அவளிடம். 

“கிடக்கிறது போ அம்மா. என் கல்யாணத் துக்கு என்ன அவசரம் இப்போ?” என்று கூறி விட்டுப் போய் விட்டாள். நாளடைவில் பலகாரக்கடையில் வியாபாரம் வலுக்கவே தேநீர்க் கடை ஒன்று வைத்தால் வருமானம் அதிகமாகும் என்கிற நம்பிக்கை அவளுக்கு உண்டாயிற்று. அதற்காக அவள் தெரிந்த ஒரு இடத்தில் மாதச் சீட்டு கட்டி வந்தாள். ஆரணியில் கல்யாணப் பிள்ளை இந்தப் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவள் செட்டும், கட்டுமாகக் குடும்பம் நடத்துவதைப் பற்றியும், பலகாரக் கடை வைத்துச் சம்பாதிப்பதைப் பற்றியும் அவன் உறவினர் அவனிடம் அளந்தார்கள். “அந்தக் கிழவி இல்லாவிட்டால் ராசாத்தி மாதிரி இருக்கிற அந்தப் பெண்ணை நாங்கள் விடுவோமா?” என்று வேறு, கூறி அங்கலாய்த்தார்கள். வீட்டாருக்குத் தெரியாமல் அவன் அவளைக் காண வந்து விட்டான். 


தினம் அதிகாலையில் நப்பின்னையின் கடைக்கு வந்து துரைவேலு பலகாரம் வாங் கிச் சாப்பிடுவான். பகல் வேளைக்கும் வாங்கிக் கட்டிக்கொண்டு போவான். அவன் மூலமாக எப்படியும் அவள் கடைக்குத் தினம் ஒரு ரூபாய்க்குக் குறையாமல் வியாபாரம் நடந்து கொண்டு வந்தது. 

நல்ல வியாபாரம் நடக்கவே கடையை விஸ்தரிக்க ஆசைப்பட்டாள் நப்பின்னை. எதிரில் இருக்கும் காலி மனையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, அதில் கீற்றுக் கொட்டகை போட்டு நடத்தும்படி எல்லோரும் சொன்னார்கள். தாயின் ஆயுட் காலம் வரையில் அவள் ஓர் ஆண்பிள்ளையைப் போலப் பாடுபடவே ஆசைப்பட்டாள். சீட்டுக் கட்டி வந்த இடத்தில் அந்த மாதம் சீட்டெடுத்துக் கடை போடுவதென்று ஏற்பாடாயிற்று. 

“மாட்டை விற்று விடேன்” என்றாள் முனியம்மாள் அவளிடம். 

”என்னம்மா இது? நல்ல கறவை மாடு. கள்ளிச்சொட்டு போல் இருக்குது பால் படிக்குப் படி தண்ணி ஊற்றினால் கூடக் கட்டி வரும். அதோடு, அதைக் குழந்தையிலிருந்து நான் வளர்த்தேன்..” என்று மறுத்து விட்டாள் நப்பின்னை. 

“ஏலம் அதிகமாய்ப் போனால் வந்துவிடு. அடுத்த மாசம் பார்த்துக் கொள்ளலாம்” முனியம்மாள் இவ்விதம் கூறி நப்பின்னையைச் சீட்டுக்காரர் வீட்டுக்கு அனுப்பி வைத்தாள்.

பலகாரம் தின்று கொண்டே பேச்சை ஜாடையாகக் கவனித்த துரைவேலு சீட்டுக்காரர் வீட்டில் அவளுக்கு முன்பாகப் போய் உட்கார்ந்திருந்தான். நப்பின்னை அங்கு போய்ச் சேர்ந்ததும் சீட்டுக்காரர். தொண்டையைக் கனைத்துக் கொண்டார். 

“என்ன ஆரணிக்காரரே! ஏலம் ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டார். 

“ஆரம்பியுங்க அண்ணே!” என்றான் துரைவேலு, நப்பின்னையைக் குறிப்பாகப் பார்த்துக் கொண்டு. 

சீட்டுக்காரர் கைகளைக் குவித்துக் கடவுளைக் கும்பிட்டுவிட்டு, “ஏலம் ஒரு ரூபாய், ஒரு ரூபாய், ஒரு ரூபாய்” என்று மூன்று தடவைகள் கூறினார். 

படிப்படியாக, அங்கு கூடியிருந்த பத்துப் பேர்களும் இருபது ரூபாய் வரையில் மாறி ஏலம் கேட்டார்கள். இருபதுக்கு மேல் துரைவேலு, “இருபத்தொன்று” என்று ஆரம்பித்தான். நப்பின்னை “இருபத்திரண்டு” என்றாள். அடுத்ததாக யாரோ இருபத்தைந்து வரையில் ஏற்றி விட்டார்கள். மறுபடியும் துரைவேலு “இருபத்தியாறு” என்றான். நப்பின்னை முகத்தை ஒரு திருப்புத் திருப்பி “இருபத்தேழு” என்றாள். தொடர்ந்து நாற்பத்தைந்து வரையில் இருவரும் போட்டி போட்டார்கள். “சீட்டுக்கார ஐயா! இவர் என்ன ஏழைகள் வாயிலே மண்ணைப்போடவா சீட்டிலே சேர்ந்தாரு? நூற்றி ஐம்பது ரூபாய் சீட்டுக்கு ஐம்பது ரூபாய் தள்ளி எடுப்பதா? அநியாயங்க….” என்றாள் நப்பின்னை துரைவேலுவைக் கோபத்துடன் விழித்துப் பார்த்து. 

“ஏலச்சீட்டு என்றால் அப்படித்தான் இருக்கும்னு சொல்லுங்க, அண்ணே!” என்றான் துரைவேலு. 

கடைசியாக முனியம்மாளுக்குப் பயந்து சீட்டைத் துரைவேலுவுக்கு விட்டுக்கொடுத்து விட்டுக் கோபத்துடனும் துயரத்துடனும் நப்பின்னை வீடு திரும்பினாள். 

தாயிடம் அங்கு நடந்தவைகளைக் கூறி, அந்த மனுசன் ஏதோ முடைக்கு வந்து அப்படிக் கேட்கவில்லை. அம்மா! வேண்டு மென்றே போட்டியில் ஏலத்தை எடுத்திட்டாரு” என்றாள். 

“கிடக்குது விடு. அடுத்த மாசம் பார்த்துக்கலாம்” என்றாள் கிழவி. 

“விடவாவது? பெண்பிள்ளை கடை வைத்துச் சம்பாதிப்பதா என்று அந்த மனுசனுக்கு ஆத்திரம். அதுக்கு நான் பணிய மாட்டேன். மாட்டை நாளைக்குப் பல்லாவரம் சந்தையிலே விற்றுவிடப் போகிறேன்…”

படுக்கையில் கிடக்கும் கிழவியால் மகளை அதட்ட முடியவில்லை. அதட்டினாலும் அவள் பணிந்து போகமாட்டாள் என்பதும் தெரியும். 

அன்று விளக்கு வைத்த பிறகு, நப்பின்னை மாட்டுக்குத் தவிடும், பிண்ணாக்கும் பிசிறி வைத்தாள். கையிருப்பில் இருந்த நாலு வைக்கோல் பிரிகளில் இரண்டை இரவுக்காக வைத்துக்கொண்டு அண்டையில் மாடு வைத்திருக்கும் ஒருவரிடம் மீதி இரண்டு பிரிகளையும் கொடுத்து விட்டாள் நப்பின்னை. 

“என்ன இது?” என்று அதிசயித்தாள் அந்த வீட்டுக்காரி. 

“அப்படித்தான் அண்ணி! விடியற்காலம் சந்தையிலே மாட்டை விற்றுவிடப் போகிறேன்…” என்றாள் நப்பின்னை. 

“தே…சும்மா கதை விடாதே…” 

“இல்லை. அண்ணி! நிசமாத்தான் விற்கப் போகிறேன். அந்த ஆரணிக்காரரு என்ன இந்தப் பரங்கிமலைக்கே ராசாவா!” 

அடுத்த வீட்டுக்காரிக்கு விஷயம் புரிந்து விட்டது. நப்பின்னை சென்ற பிறகு தன் கணவன் கலத்தில் குழம்பை ஊற்றிக் கொண்டே இந்தச் செய்தியை அவன் காதில் போட்டு வைத்தாள். அந்தச் செய்தி காற்றினும் கடி வேகத்தில் துரைவேலுவுக்கு ஒலிபரப்பப்பட்டது.


பல்லாவரம் சந்தையில் ஒரு புளிய மரத்தடியில் எருமையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள் நப்பின்னை. அவள் கண்கள் கலங்கியிருந்தன. நொடிக்கொருதரம் அதன் முகத்தையும், கழுத்தையும் பரிவுடன் தடவிக் கொடுத்தாள் அவள். அதன் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகிக் கொண்டே யிருந்தது. 

சந்தை ஆரம்பித்து இரண்டு மணி நேரம் வரையில் யார் யாரோ வந்து விலை கேட்டார்கள். சிலர் நியாயமாகக் கேட்டார்கள். சிலர் அநியாயமாகப் பேரம் பேசினார்கள். நப்பின்னை, அத்தனை சடுதியில் பிரிய மனமில்லாமல் பொழுதைக் கடத்திக் கொண்டே வந்தாள். 

கதிரவன் உச்சி வானத்துக்கு வந்து கொண்டிருந்தான். மைதானத்தில் அனல் காற்று வீசத் தொடங்கியது. இனிமேல் பொழுதை ஓட்டக் கூடாதென்று நப்பின்னை சுற்று முற்றும் பார்த்தாள். 

“என்ன தங்கச்சி? மாட்டை விற்க வந்துட்டாயாமே?” என்று கேட்டுக் கொண்டே பரங்கிமலைக் கதிரேசன் அவள் எதிரில் நின்றான். அந்த ஊரில் யாரும் அவனுக்குத் தெரியாமல் மாடு பிடிக்கவோ, விற்கவோ மாட்டார்கள். வாரம் தவறாமல் சந்தைக்கு வருவான் கதிரேசன். 

“ஆமாம், அண்ணாத்தை! விற்கத்தான்.”

“நல்ல கறவை மாடாச்சே! எதற்கு அம்மா அதை விற்கணும் இப்போ?” 

“அப்படித்தான், அண்ணாத்தை! அதை விற்றுத்தான் ஆவணும் !” 

“சரி! இந்தா பிடி நூற்றைம்பது ரூபாய், மாட்டை நான் வாங்கிக்கிறேன்…” 

“நீயா வாங்கிக்கறே? உன் வீட்டிலே யாரு இதைக் கவனிப்பாங்க?” 

கதிரேசன் ஒண்டி ஆள், ‘சத்திரத்திலே சாப்பாடும் மடத்திலே தூக்கமும்’ என்று கூறுவது போல் கிளப்பில் சாப்பாடும் ரயில் நிலையத்தில் வாசமும் வைத்துக் கொண்டிருந்தான். 

“ஏன் தங்கச்சி! நான் மாடு வாங்கக் கூடாதா?” என்று கேட்டான் அவன். 

“அப்படிச் சொல்லலையே நான்? உனக்கு மாடும் கன்றும் என்னாத்துக்கு அண்ணாத்தை? உனக்கு ஒரு வேளை கல்யாணம் ஆவப் போவுதோன்னு சந்தேகம் எனக்கு….”

கதிரேசன் சிரித்துக் கொண்டே பணத்தை எண்ணி அவள் கையில் கொடுத்து விட்டு மாட்டை வாங்கிக் கொண்டான். 

தூரத்திலே மாடும் கதிரேசனும் போவதைப் பார்த்துக் கொண்டே ஒரு பெருமூச்சு விட்டாள் நப்பின்னை. 

அன்று, அவள் வீட்டை அடைந்தபிறகு வேறு வேலை ஒன்றும் செய்யத் தோன்ற வில்லை. அவசரத்தில், ரோசப் பட்டுக் கொண்டு, பல வருஷங்களாக ஊட்டி வளர்த்த மாட்டை விற்றது அவளுக்குச் சரியாகத் தோன்றவில்லை. பிரமை பிடித்தவள் போல் அடுப்படியில் உட்கார்ந்திருந்தாள். 

“இட்டிலிக்கு மாவு அரைக்கலியா?” என்று முனியம்மாள் மகளைக் கேட்டாள். 

“த்சூ..” என்று சூள் கொட்டினாள் நப்பின்னை. கொல்லைப்புறம் திரும்பிப் பார்த்த பொழுது மாட்டுக் கொட்டில் ‘வெறிச்’ சென்று கிடந்தது. நப்பின்னையைக் கண்டால் தன் தலையை ஆட்டி வரவேற்கும் அந்த மாடு இல்லாமல் வாழ்க்கையே வெறிச்சோடிப் போன மாதிரி இருந்தது அவளுக்கு. எருமையாக இருந்தாலும் அதற்கு அறிவு அதிகம். நப்பின்னை தன் தோழி ஒருத்தியுடன் பேசுவது போல, அதன் கழுத்தைக் கட்டிக் கொண்டு பல செய்திகளைப் பேசியிருக்கிறாள் 

அடுப்பிலே இருந்த சுக்குத் தண்ணீரை இறுத்து வெல்லம் போட்டுத் தாய்க்குக் கொடுத்துத் தானும் சாப்பிட்டாள் அவள். தன்னால் அன்று மாவு அரைக்க முடியவில்லை என்கிற பொய்யைச் சொல்லி விட்டு விளக்கு ஏற்றியதும் படுத்து விட்டாள் அவள். 


கீழ்வானம் வெளுத்துக்கொண்டு வந்தது. அன்று கருக்கலில் எழுந்து 

செய்ய எந்த வேலையும் அவளுக்கு இல்லை. மாட்டுக்குத் தீனி வைக்க வேண்டாம். பலகாரக் கடையும் வைக்க மாவு அரைக்கவில்லை. கனத்த இதயத்துடன் மெதுவாக எழுந்து நப்பின்னை கொல்லைப் பக்கம் சென்றாள். 

அங்கே அவள் மாடு கொட்டிலில் கட்டப்பட்டிருந்தது. துரைவேலு அதற்கு வைக்கோலை உதறிப் போட்டுக் கொண்டிருந்தான். அவள் அதிசயத்தால் கண்களை மலர்த்தி அவனைப் பார்த்தாள். 

“என்ன பார்க்கிறாய்?” என்று குறும்புத் தனமாகக் கேட்டான் துரைவேலு. 

“இந்த மாடு இங்கே….”

“இது என் மாடு. நான் தான் கதிரேசனை உன்னிடம் விலை பேசி வாங்கச் சொன்னேன்.”

”சொன்னீங்க! மாடு வாங்க மூன்றாவது ஆள் தேவையா உங்களுக்கு! நீங்களே வருகிறதுக்கு என்ன?” 

“வந்தால் நீ கல்லை விட்டு அடிப்பியே… ஆமாம்… இன்னிக்குச் சூடா ஒண்ணும் இல்லையா?…” 

 “இருக்கு… இருக்கு…” – நப்பின்னை ஆத்திரத்துடன் பற்களைக் கடித்தாள். 

உள்ளேயிருந்து கிழவி குரல் கொடுத்தாள்.

“ஏ பொண்ணே! விடிஞ்சதும் யாருகிட்டே சண்டை?'”

“நீ சும்மா இரு அம்மா! இவரு விவகாரத்தைத் தீர்த்துப்பிடணும்…”

“நானும் அதுக்காகத்தான் ஆரணியிலிருந்து வந்து நாலுமாசமா கிளப்பிலே சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன். விஷயம் இன்னிக்குத் தீர்ந்து போகணும்…”

துரைவேலு சிரித்தான். கிழவி மறுபடியும் பேசினாள். 

“யாரு தம்பீ! இப்படி வாயேன்…ஆரணி பெரியசாமி வீட்டுப் பிள்ளையா நீ?…” 

“ஆமாம், அத்தை! பரிசம் போடவந்தால் உங்கள் மகள் கல்லை விட்டு எறியுது…” 

“அது ஒரு பைத்தியம்! நீ உள்ளே வா தம்பி!” வியாதிக்காரியான முனியம்மாள் மகிழ்ச்சியே வடிவாக உரக்கக் கூப்பிட்டாள். 

“அத்தை கூப்பிடறாங்க, நீ வா உள்ளே…” என்றவாறு துரைவேலு உள்ளே நுழைந்தான்.

நப்பின்னையின் முகம் காலைக் கதிரவனின் போல் ஒளியில் செழிக்கும் செந்தாமரை சிவந்து காணப்பட்டது.

சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். பதினொரு வயதில் தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940-ல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். எழுத்தாளர் து. ராமமூர்த்தியை ஜனவரி 28, 1943-ல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *