கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 1,973 
 

நாலு நாளைக்கு முந்தியே கல்யாண அழைப்புக் கடிதம் அவனுக்குக் கிடைத்துவிட்டது. அதோடு இருந்த கடிதத்தில், “உன்னை நிச்சயமாய் எதிர்பார்க்கிறேன்” என்று ஒரு தடவைக்கு இரண்டு மூன்று தரம் வற்புறுத்தி எழுதியிருந்தது.

கடிதம் திடுதிப்பென்று கிடைத்தபோதிலும், விஷயம் அவனைப் பிரமிக்க வைக்கவில்லை. சொல்லப் போனால் இந்தச் சம்பவத்தை இன்னும் வெகு சீக்கிரமாகவே அவன் எதிர்பார்த்திருந்தான். அது இயற்கையான துங் கூட. வாழ்க்கையின் நீண்ட போக்குக்குத் தடையாக இருக்கும் ஓர் இக்கட்டான, சந்தேகாஸ்பதமான நிலையை ஒருவிதமாக நிவர்த்தி செய்து கொள்ளாமல் ஒருவன் எத்தனை காலம் இருக்கச் சாத்தியப்படும்?

ஆகவே அது தான் புத்திசாலித்தனமான காரிய முங் கூட. முடிவில்லாத ஒரு துன்ப வேதனையை, வலியை, அது தணித்து ஏதோ ஆறுதல் கொஞ்சம் அளிக்கக்கூடியது என்ற நினைவில் அவன் அதைச் செய்யத் துணிந்து விட்டதில், அவன் மீது கொஞ்சங் கூடக் கோபமோ ஆத்திரமோ படுவதற்கு இல்லை.

இந்த விதமான நினைவுகளே அந்த அழைப்பைப் படித்ததும் சந்திரன் மனத்தில் தோன்றின. உதடுகளை அமிழ்த்திக் கிளம்பிய ஓர் அரைப்புன்னகையுடன், சுகமாக விட்டதென்றோ வெகுவாகத் தடுமாறிக் கிளம்பியதென்றோ சொல்ல முடியாத ஒரு சிறு பெரு மூச்சு விட்டுக்கொண்டு அந்த அழைப்புக் கடிதத்தை மடித்து வைத்தான். மறுபடியும் அந்தக் கடிதத்தின் வரிகளில் கண்ணைச் செலுத்தியபோது, “உன்னை நிச்சயமாக எதிர்பார்க்கிறேன்; அதற்குள் வந்து பார்க்கிறேன்” என்ற வரிகள் அவன் மனத்தில் இறுகப் பதிந்தன.

கல்யாணத்துக்கு முந்திய நாள் காலை, கடிதப் பிரகாரம் ராமசாமி சந்திரனை வந்து பார்த்தான். அழைப்போடு கடிதம் எழுதியிருந்தும், சந்திரன் வராமல் இருப்பதற்குச் சாதகமான காரணங்கள் தாம் வலுத்து இருக்கும் என்ற பயம் கடிதம் அனுப்பியபோதே ராமசாமிக்கு இருந்தது. இருவரிடையேயும் இருந்த பழக்கப்போக்கு ஸமீப ஸம்பவத்தின் பயனாக நெகிழ்ந்து போய்க் கிடந்த நிலைமையில், அவை போதாவென்று நிச்சயமாக “நம்பினான். நேரில் சென்று அழைப்பது உசிதம், பொருத்தம் என்று அவனுக்குப் பட்டது.

“என் கடிதம் கிடைத்ததா?” என்று கேட்டான் ராமசாமி.

“கிடைத்தது. அது போதாதா எனக்கு? இதற்காக இந்த அவசரத்தில் நீ வரவேண்டுமா?”, என்றான் சந்திரன்.

“நேற்றும், முந்தாநாளுங் கூட வந்திருந்தேன். அறை பூட்டி இருந்தது.”

“தினமுமா வந்தாய்?” என்று அவனைக் கொஞ்சம் அதிசயத்தோடு பார்த்துக்கொண்டே, “இரண்டு நாளும் ‘லைப்ரெரி’க்குப் போயிருந்தேன்” என்றான் சந்திரன்.

“எப்படியாவது பார்த்து அழைத்து விட வேண்டும் என்று தீர்மானம்.”

சந்திரன் லேசாகச் சிரித்துக்கொண்டான்; “நீ வராவிட்டாலும் நான் வருவதாகத்தான் இருந்தேன்” என்றான்.

வாஸ்தவம்! அவன் உதடுகள் வார்த்தைகளை வெளிக்கிளப்பின. ஆனால் மனப்பூர்வ மாகச் சொல்லப் பட்டவை தாமா அவை? இல்லை – நிச்சயமாய் அவன் இருதயம் பேசவில்லை அப்போது. ஓர் அழைப்புக்கு அவன் பதில் சொல்லுகையில் ஒப்புக்கு அவனால் வேறு எவ்விதம் பதில் சொல்ல முடியும்? முகூர்த்தத்துக்குப் போவதைப்பற்றி அவன் யோசித்து யோசித்துப் பார்த்து இம் முடிவுக்கு வந்திருந்தான்: ‘அவன் கல்யாணம் செய்துகொள்வதில் எனக்குச் சந்தோஷம்தான்; என் ஆசீர்வாதம் அவர்களுக்கு. ஆனால் நான் போகப்போவதில்லை.’

ஆகையால் நேரில் வந்து கூப்பிட்டாலும் ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லித் தட்டிக்கழித்து விடுவதென்று தான் யுக்தி பண்ணியிருந்தான். ஆனால் நேரில் வந்து கூப்பிட்டபோது அவன் மனம் கொஞ்சம் குழப்பம் அடைந்தது. போவதா, வேண்டாமா என்ற வேதனைக்கு இடையில் அலைந்தது. இரண்டுங்கெட்டான் நிலைமையில் படும் அவஸ்தையைப்போல வேறு ஒன்றும் இருக்க முடியாது; அவ்வளவு நரக வேதனை அது.

“இல்லை, சந்திரா! ஒப்புக்கு உன் பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. உன்னை நேரில் வந்து இப்போது அழைத்து விட்டதில் பாதி திருப்தி எனக்கு. இன்னும் பாதி நீ……”

இதைச் சொல்லும்போது அவன் குரலில் ஏற்பட்ட தழுதழுப்பைச் சந்திரன் கவனிக்காமல் இல்லை. அவன் குழப்பத்தை அதிகரிக்கச் செய்யும் ரீதியில் அவை வெளிவந்தன. ராமசாமி அவ்வாக்கியத்தைத் தயங்கி முடிக்குமுன் இடைமறித்து வேறு ஏதோ கேள்வி கேட்கப்போன சந்திரன், ராமசாமி மீண்டும் பேச வாயெடுப்பதைக் கண்டு அடக்கிக்கொண்டான்.

அவன் நினைத்த கேள்விக்குப் பதில் போல் அதே சமயம், “சந்திரா, இப்போது வரும் வண்டியில் அண்ணாவோடு ராதா வருகிறாள்” என்றான் ராமசாமி.

சந்திரன் கண்கள் அதைக் கேட்டதும் விரிந்து முகம் மலர்ந்தது. “வருகிறாளா? பார்த்து ரொம்ப நாளாச்சு!” என்று ஆவலும் கவலையும் கலந்து தொனிக்கும் குரலில் கேட்டான்.

“நீ பார்க்கவேண்டாமா அவளை?”

“ஆமாம், பார்க்கணும்” என்று முனகிக்கொண்டான் சந்திரன். சில விநாடிகளுக்கு அவன் பார்வை கீழ்நோக்கி இருந்தது.

“அதற்குத்தான், இன்று சாயந்திரமே வந்துவிடு; காளை முழுதும் இருக்கலாம்” என்று ஆசையைக் கொட்டி அழைத்தான் ராமசாமி. சந்திரன் வருகையைப்பற்றிய நம்பிக்கை கொஞ்சம் ராமசாமிக்கு ஏற்பட்டது.

சந்திரன் மனமோ ஒருவித நிர்ணயமும் செய்ய முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்தது. வெகு நாளைக்குப் பிறகு ராதாவைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. ஆனால்-? அவன் கண்களை மூடி ஒரு விநாடி யோசித்தான். என்ன செய்வது? உடனே ஒரு பதில் சொல்லியாக வேண்டும்; அதுவும் செய்யக் கூடியதாக இருக்கவேண்டும்.

சட்டென்று ராமசாமியின் பக்கம் திரும்பினான்; “ராமு, கட்டாயம் வருகிறேன் முகூர்த்தத்துக்குநிச்சயமாய்” என்றான். ஒரு ஹிதமான சிரிப்பு அவன் உதடுகளிலும், மனம் விட்டுச் சொன்ன நிச்சயக்குறி காட்டும் பார்வை அவன் கண்களிலும் உண்டாயின.

அந்த வார்த்தைகளைச் சந்திரன் வாயிலிருந்து கேட்பதற்கு எவ்வளவு திருப்தியாக இருந்தது ராமசாமிக்கு! அவனுக்கு அது போதும். தன் ஆசை நிறைவேறும் அமைதியுடன் மனப்பூர்மாக எழுந்த அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொண்டான். ஆனாலும், “இன்று சாயந்திரம் வரமாட்டாயா?” என்று கேட்டான்.

“ராமு! கட்டாயம் முகூர்த்தத்துக்கு வருகிறேன், பாரேன்” என்று மறுபடியும் அழுத்தினான் சந்திரன். அவன் அழுத்திய மாதிரியில் தொனித்த அர்த்தத்தை ஊகித்த ராமசாமிக்கு அதற்குமேல் அவனை வற்புறுத்தத் தோன்றவில்லை. இவ்வளவு மனசு இணக்கம் அவன் கொள்வானென்றே ராமசாமி எதிர்பார்க்கவில்லை. இன்னும் கசக்கி மோந்து பார்க்கப்போனால்?-“சரி, சந்திரா. உன் இஷ்டம்! வற்புறுத்தவில்லை. முகூர்த்தம், சாப்பாடு இரண்டுக்குந்தான். சாக்குச் சொல்லக்கூடாது. மாட்டாயே?” என்று கூறி விஷமமாகவும், உறுதி கேட்கும் ரீதியிலும் பார்த்துக் கொண்டே எழுந்தான்.

அவர்கள் உதடுகளுக்கு வெளியே கிளம்பின வார்த்தைகள், மனத்தில் அப்போது பரவி ஓடிக்கொண்டிருந்த உணர்ச்சி வேகத்தின் அளவை அப்படியே படம் பிடித்துக் காட்டவில்லை. ஒவ்வொரு வார்த்தை பேசும் போதும் ஒட்டிப்போய்க் கிடந்த நாக்கைப் பலவந்தமாக இழுத்துப் பேசும் உணர்ச்சிதான் அவர்களுக்கு இருந்தது. ஆனாலும் அவர்கள் பிரிந்தபோது, பரஸ்பரம் இருவர் மனநிலைகளையும் விண்டு ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டு விட்ட ஒரு சோகப்புன்னகையின் அடையாளம் இருவர் முகத்திலும் தோன்றியது.

இப்போது கட்டாயம் தான் வருவதாக உறுதி … றி விட்டதால் அதை நிறைவேற்றுவ தற்காகவாவது அவன் போகவேண்டாமா? மறுபடியும் ஒரு சிறு யோசனைக்குப் பிறகு திடசித்தம் ஏற்பட்டது: “சரி, போய்விட்டுத்தான் வருகிறேனே. முக்கியமாக நான் அவளைப் பார்க்க முடியும்” என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டான். அதன் பிறகு அவன் குழம்பிக்கொண்டு இருக்கவில்லை. மன அலைப்புக்குத் தற்காலச் சாந்தி கிடைத்தது.

ஆனாலும் கல்யாண வீட்டை நோக்கி எடுத்து வைத்த ஒவ்வோர் எட்டும் கனத்து விழும்போது, அவன் ஹிருதய பாரத்தின் பிரதிபலிப்பாகத் தோற்றியது. அதைத் தணித்துக்கொள்ள அவன் வேகமாக எட்டு வைக்க வைக்க அந்தப் பாரமும் அதிகரித்தது போல் இருந்தது. அதற்கு இடையிலும் ஒரு முகம் அவனை முன்னுக்குத் தள்ளிச் சென்றது. அவன் அதை ஆவலோடு எதிர்பார்த்தான்: அந்த ஆவல் அவனை விரட்டியது.

விலகி விலகிப் போவதுபோல் உணர்ச்சி ஊட்டிய நரம்புகளை இழுத்துச் சரிப்படுத்திக்கொண்டு ஒருவிதமாகச் சந்திரன் படியேறி விட்டான். வாசல் திண்ணையில் நாதஸ்வரமும் தவிலின் சப்தமும் கொஞ்சம் அவன் மனத்தைத் தம்மிடம் திருப்பிக்கொண்டன. அவனுக்கு ஊக்கம் கொடுப்பதுபோல் அதே சமயம், “சந்திரா, வா வா” என்று சொல்லிக் கொண்டே ஒரு பழகின குால் அவன் தோள்களை நெருக்கியதும், கவனம் வந்து திரும்பிப் பார்த்தான். அவனுக்கு மிகவும் அறிமுகமான உருவம்.

அந்த வரவேற்பை அங்கீகரிக்கும் ஒரு சிரிப்புடன் அவன் பேசுமுன், இன்னும் பல குரல்கள் அதேவிதப் பழக்கத்துடன் முன்வந்து அவனை வரவேற்று உள்ளே இழுத்தன. “நேற்றே வரக் கூடாதா, சந்திரா?” என்று ஒரு குரல் கேட்டது. பல குரல்கள் அதற்குப் பதில் எதிர்பார்த்தன.

“வேலை இருந்தது.”

“சரி, முகூர்த்தத்துக்காவது வந்தாயே, ரொம்ப ஸந்தோஷம். ராமு! இதோ சந்துரு” என்று சொல்லிக் கைகளைப் பிடித்து அவனை முன்னுக்கு இழுத்துச் சென்றார்கள். சந்திரன் கைகளை இழுத்துக்கொண்டு நின்று, “இல்லை, இங்கேயே உட்கார்ந்து கொள்கிறேன். சௌகரியமாக இருக்கு” என்று மணைப்பக்கம் போகாமல் எட்டியே உட்கார்ந்து கொண்டான். சந்தனம், குங்குமம் அவன் முன்பு நீட்டப்பட்டன. மோதிர விரலைச் சந்தனக் குழம்பில் தோய்த்துக் குங்குமத்தைத் தொட்டுக்கொண்டே தலையை நிமிர்த்திப் பார்த்தான்: .மிகவும் அன்னியமாக இருந்தபோதிலும், பழக்கம் கொண்டாடிச் சிரித்து வரவேற்கும் ஒரு முகம்.

“இவர்தாம் நம் ராமுவின் மைத்துனர்” என்று சந்திரன் அருகில் உட்கார்ந்து இருந்த ஒரு பழக்கமான குரல் அவனுக்கு அறிமுகப்படுத்தியது: அதை ஏற்றுக் கொண்டு சந்திரன் குங்குமம் தீட்டிய விரலை நெற்றி மத்தியில் பதித்துக்கொண்டே கண்களை மணைப்பக்கம் திருப்பினான். அவன் திரும்புவதையே ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த ராமு லேசாகச் சிரித்துத் தலையை அசைத்து அவனை வரவேற்றான். அவனைப் பார்க்க ராமுவுக்குத் திருப்தியாக இருந்தது.

எத்தனை குரல்கள் சந்திரனை வந்து சுற்றிச் சூழ்ந்து கொண்டு குசலப் பிரச்னம் வினவின! ஒரு வார்த்தையும் அரை வார்த்தையுமாக எல்லோருக்கும் பதில் கொடுத்துச் சம்பாஷணையில் கலந்து கொள்ளச் சந்திரன் முயற்சி செய்தான். வந்து விட்ட பிறகு ஒட்டாமல் ஒதுங்கி உட்கார்ந்து கொள்வதோ, சுபாவமாகவும் சகஜமாகவும் நடந்து கொள்ளாமல் இருப்பதோ, எல்லோருக்கும் – முக்கியமாகத் தனக்கு – எவ்வளவு ஈதிபாதையாக இருக்கும்? அப்படி இராமல் கூட்டத்தில் சேர்ந்து இருக்க நிச்சயித்துக் கொண்டான்.

முகூர்த்த கால அவசரத்தில் ராமு சந்திரனை மணைக்கு அழைத்துப் பேச முடியவில்லை. சந்திரன் சற்றுத் தள்ளியே உட்கார்ந்து கொண்டிருந்தான். அந்த அவசரத்திலும் ராமு ஒருவரைக் கூப்பிட்டு ஏதோ சொல்லிச் சந்திரன் பக்கம் திரும்பியபோது மறுபடியும் பார்வை கலந்தது. அப்படியே சந்திரன் கண்கள் ராமுவுக்கு அடுத்தாற்போல் மாறின. ஒரு விநாடி உற்றுப் பார்த்தான்; பிறகு சாதாரணமாகக் கண்களைத் திருப்பிக்கொண்டான். ஒன்று, இரண்டு …… பல முகங்கள் சந்திரன் முன் எழுந்து அவைகளுக்கும் ராமுவுக்கும் ஏற்பட்டுள்ள புது உறவை அழுத்தித் தெரிவிப்பனபோல் அவனையே பார்த்து விழித்தன. அவர்கள் ஏன் அப்படிப் பார்க்கவேண்டும்? ஆனால் அப்படிப் பார்த்ததில் தான் என்ன தப்பு? இம்மாதிரிக் குழப்ப நினைவுகள் தோன்றின. பரபரப்பு அடையாமல் இருக்க முடியவில்லை. சரேலென்று பார்வையைத் திருப்பி யாராரோ கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஒரு விதமாகப் பதில் சொல்ல முயன்றுகொண்டே குறிப்பு இல்லாமல் மேலும் கீழும் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆனால் ராதா எங்கே? அவளைப் பார்க்கத்தானே அவன் வந்திருந்தான்! தலை குனிந்து இருந்தவன், சரேலென்று நிமிர்த்தி ஒரு குறிப்புடன் கண்களைச் சுழற்றிக் கூடத்தை ஆராயத் தொடங்கினான். மிகவும் பெரிய இடம் அது. தூணுக்குத் தூண் கட்டி, விரிந்து மறைத்து நின்ற வாழை மரங்கள் அவன் கண்களுக்குக் கொஞ்சம் வேலை கொடுத்தன. இன்னும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சில புதிய முகங்களையெல்லாம் பார்வையிலிருந்து ஒதுக்கிக் கொண்டே வந்தான்; ஆனால் அவன் தேடிய பொருள் அங்கே இல்லை. ஏமாற்றத்துடன் தலையைத் தணிக்கப் போகும் சமயம், “ஐயோ, நான் வரமாட்டேன்! என்னை விட்டு விடு!” என்ற கீச்சுக் குரல் சமீபத்தில் கேட்டது.

“சீ, அசடே!ஐயோ சொல்லாதே” என்று குழந்தையின் வாயைப் பொத்தினார்கள்.

“அதோ பாரு, உன் சந்துருமாமா” என்றன பல குரல்கள் சேர்ந்தாற்போல.

“இதோ இருக்காளே – ராதா – அவன் தேடின பொருள்.”

சந்திரன் ஆசையின் வேகத்துடன் அந்தப் பக்கம் திரும்பினான். ஒரு விநாடி தயங்கி அவனை உற்றுப் பார்த்த ராதா, “என்னை விட்டுடேன். விளையாடப் போகணும்!” என்று தன்னைத் தூக்கி வந்த கைகளினின்று திமிறி நழுவிவிடப் போராடிக்கொண்டிருந்தாள். அவள் கையில் அரைகுறையாகச் செய்யப்பட்ட வாழையிலை ஊதுகுழல் கலைந்து தொங்கிக்கொண்டிருந்தது. நடுவில் அவளைத் தொந்தரவு பண்ணி மாமாவைக் காட்டுவதற்குத் தூக்கிவந்துவிட்டார்கள். “இதோ பாரு! சந்துருமாமா” என்று தூக்கிவந்தவர் அவளை அவன் பக்கமாகத் தள்ளினார்.

“ராதா, வாடியம்மா இங்கே” என்று ஆவலோடு கைகளை நீட்டிச் சந்திரன் அவளைத் தன்னிடம் அழைத்தான். அவன் கைகள் அவளை வாங்கப் பறந்தன. குழந்தை முரணுவதைப் பார்த்துப் பலபேர் அவளை நெருங்கி, “போ அம்மா, மாமா கிட்டே. சந்துரு மாமா தெரியாதா உனக்கு?” என்று சிபார்சு செய்தனர்.

“ஊஹும்! போகமாட்டேன் போ! விட்டுடு. என் ஊதல்” என்று அழுது கத்திக்கொண்டே சந்திரன் கையில் ராதா இறங்க மறுத்து வில்லாக வளைந்து கொடுத்தாள். சந்துரு சட்டெனக் கைகளைப் பின்னரித்துக்கொண்டு, “சரி! சரி! அழவிட இது சமயமல்ல. அவளை இஷ்டப்படி விட்டு விடுங்கள். சரி போடியம்மா” என்று அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கூறினான்.

ராதா கீழே சுதந்திரமாக விடப்பட்டாள். அவள் பிடிவாதத்தைக் கண்டு கூட்டத்திலிருந்து ஒரே சிரிப்புக் கிளம்பியது. ருசியான வார்த்தை ஒன்றும் அப்போதைக்குப் பயன்படவில்லை. “தானே வராள் பாருங்கள், இன்னுங் கொஞ்ச நாழிகையில்”, “குழந்தை குணம் அப்படித்தானே?”, “அடையாளம் தெரியாமே என்ன அவளுக்கு?”, “மாமா வரப்போகிறாரென்று காலமே கூடச் சொல்லிக்கொண்டு இருந்தாளே?” – இந்த மாதிரிப் பல சமாதானங்கள் சந்திரன் காதருகில் கலகலத்தன.

சந்திரன் கொஞ்சம் சிரித்து விட்டு மௌனமாக இருந்தான். ராதா தள்ளிப்போய் வாயைக் கோண வைத்துக்கொண்டு சிதைந்த ஊதுகுழலைச் சரிப்படுத்திக்கொண்டு இருந்தாள்; அடிக்கடி ஒரு கடைக்கண் பார்வை மட்டும் தன் பக்கம் திரும்பும்போது சந்திரன் பார்வையில் படும்.

மணையில் உட்கார்ந்து ஜாடையாக இதைக் கவனித்த ராமு ராதாவைக் கூப்பிட்டு, “ராதா, மாமா கிட்டப் போ” என்றான், கொஞ்சம் அதட்டிய குரலில். சந்திரனிடம் ராதா போகவேண்டும் என்று அவன் மனம் ஆத்திரப்பட்டது.

இது சந்திரன் காதுகளில் விழுந்தது. “இல்லை, ராமு. அவளை அதட்டாதே, தானே வருவாள் பாரு” என்று தொனியை உயர்த்திப் பேசினான். இன்னும் சில குரல்களும் கலந்தன.

எட்டி நிற்கும் ராதாவையே சந்திரன் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் நன்றாக வளர்ந்து விட்டாள். ஒரு வருஷ வளர்ச்சி! கடைசியாகப் பார்த்தபோது இப்போது இருப்பதில் பாதியாக இருந்தாள். இப்போது அவள் தோற்றம், அவளை உற்றுப் பார்க்கப் பார்க்க அவனைக் கலவரப்படுத்தியது. அவள் மூக்கு, கன்னம், வாய் எல்லாம் சேர்ந்து அவனுக்கு எதை ஞாபகமூட்டின? அதேதான், தத்ரூபம்!. க்ஷணமே வாய் திறந்து, “ராதா” என்று கூப்பிட்டான்.

போகிறதா வேண்டாமா என்ற நினைப்பிலோ என்னவோ ராதா அங்கேயே நின்று கொண்டு இருந்தாள். பார்த்து நாளானபோதிலும் முதல் பார்வையிலேயே மாமாவை அறிந்துகொண்டு விட்டாள். மெதுவாக ஓர் எட்டு முன்னால் கள்ள அடி எடுத்து வைக்கவும், அது தான் சமயமென்று சந்திரன் தான் எழுந்து அவள் திரும்புமுன் அவளைத் தூக்கித் தன் இடத்துக்கு வந்தான். ராதா பாசாங்குக் கோபமாக, “போ மாமா.. விடு மாமா!” என்று அவன் தோளை விரல்களால் தள்ளிக்கொடுத்தாள்.

சந்திரன் மனம் உற்சாகத்தால் துள்ளிக் குதித்தது. அவனை எல்லோருக்கும் தெரிய, “மாமா” என்று கூப்பிட்டு விட்டாள் ராதா! இருவருக்கும் உள்ள உறவை ஸ்திரப்படுத்திக் காட்டி விட்டாள். “அப்படி வா, மாமா கிட்டே” என்று கிளர்ந்த மனத்துடன் அவளை அணைத்து நெருக்கிக்கொண்டான்.

“பார்த்தாயா, மாமா வந்து தூக்கவேண்டுமாம் அவளை, போக்கிரி!”.

ராதாவை அணைத்துக்கொண்டு என்னவெல்லாமோ? அவளுக்குக் கேள்விகள் போட்டான். தன்னைச்சுற்றி அவள் பார்க்கவேயில்லை. இதுவரை குறிப்பு இல்லாமல் பார்வை செலுத்தியது போக இப்போது ஒரு குறிப்புப் பொருள் கிடைத்து விட்டது. ஆனால் ராதாவை அவன் கேள்விகேட்டு நெருக்க நெருக்க அவன் கலவரம் அதிகரித்தது. தேகம் அவனை அறியாமல் நடுக்க மெடுத்தது. உள்ளூற அலைத்த பரபரப்புடன், ‘நான் ஏன் இங்கே வந்தேன்? வந்தது பிசகு. என் முதல் தீர்மானப்படி நடத்தி இருக்கவேண்டும்’ என்று நொந்து கொண்டான். அதேசமயம் அவன் வேதனையைத் தூண்டி விடுவதுபோல் மாமாவைப்பற்றிப் பீத்திக் கொள்ளவோ என்னவோ ராதா எழுந்து வாசலுக்கு ஓடி விட்டாள்.

முகூர்த்தம் ஆகி விட்டது, தாம்பூலம் கொடுப் பதில் ஏற்பட்ட தடபுடல், தன் மன நெகிழ்ச்சியைப் பிறர் அறியாமல் மறைத்துக் கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது போல் இருந்தது. ஆனால் உள்ளூற எழுந்த ஒருவிதச் சித்திரவதை, அவன் எப்படி மறைக்க நினைத்தாலும் முடியாமல் எழுந்து, மன நிலையை எப்போது முகம் வெளிக்காட்டி விடுமோ என்ற பயத்திடையே ஹிம்ஸை செய்துகொண்டிருந்தது. அவன் அங்கே வந்த பிசகை நினைத்து நினைத்து மனம் ஓயாது ஓலமிட்டது. ஆனால் இப்போது நினைத்துப் பிரயோஜனம்?

“சந்திரா, சந்தனம் பூசிக்கொள். ஷர்ட்டைக் கழற்று”.

“இல்லை, வேண்டாம். உடம்பு சரியாக இல்லை.”

“அதெல்லாம் முடியாது, பூசித்தான் ஆகணும்”

“ஸ் …. விட்டு விடு; மல்லுக் கட்டாதே” என்று சாதக பாதகக் குரல்கள் எழுந்தன.

சந்திரன் சந்தனத்தைக் கையில் பூசிக்கொண்ட போது உண்டான தமாஷ்ப் பேச்சில், அவன் மன நெருக்கடி கொஞ்சம் தளர்ந்து கொடுக்க, பரிகாசங்களை ரஸித்துப் பதில் கொடுத்துக்கொண்டிருந்தான். முகூர்த்த அடையாளமாக வந்த தாம்பூலத்தை அமைதியாகப் பெற்றுக்கொண்டு கீழே வைக்கும்போது அவன் தோளில் ஒரு கை விழுந்தது; திரும்பிப் பார்த்தான்: ராமு!

“சந்திரா, எங்கே வரமாட்டாயோ என்ற பயந்தான் எனக்கு. நல்ல வேளை: வந்து விட்டாய்.”

சந்திரன் லேசாகச் சிரித்துக் கொண்டான்; “இவ்வளவு சொன்ன பிறகு வராமல் இருப்பேனா?” என்றான் அமைதியாக.

“ராதாவைப் பார்த்தாயா?” என்று ராமு அடுத்த கேள்வி கேட்டான்.

“பார்த்தேன்; இப்போதான் அந்தப் பக்கம் போனாள்”.

இருவரும் உணர்ச்சி வசப்பட்டுப் போய் இருந்த நிலைமையில், அவர்களுக்கு இடையே அந்தக் கேள்விக்கு மேல் ஏற்பட்ட மௌனம், மேலே என்ன பேசுவதெனத் தெரியாமல் அவர்கள் தவித்ததுபோல் இருந்தது. மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்ப்பதும் தள்ளி விழிப்பதுமாகக் கொஞ்ச நேரம் ஆயிற்று. ஆனால் ராமு அந்த நிலையை நீடிக்க விடாமல் தவிர்த்துத் தன் புது உறவினர்களைச் சந்திரனுக்குக் காட்ட ஆரம்பித்தான்.

“இவர் தாம் மாமனார், மைத்துனர், மாமியார், மைத்துனி.”

சந்திரன் கண்கள் இந்தப் பரிசயத்தை ஆ லுடன் ஏற்றுக்கொள்ளும் குறிப்பை அவ்வளவாகக் காட்டவில்லை என்றாலும், ராமு காட்டியவாறே ஊமையாகத் தொடர்ந்தன. எத்தனைப் புது முகங்கள் இன்னமும் அவனையே உற்றுப் பார்த்தன! மாப்பிள்ளை இவ்வளவு கருத்தாகப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கும் ஓர் உருவம் எப்படி அந்த இடத்தில் கவனத்தை இழுக்காமல் இருக்க முடியும்? ஆனால் சந்திரனுக்கு அந்தப் பார்வைகள் உறுத்தின; முள் குத்தியதுபோல் இருந்தது. பதிலுக்கு உறுத்துப் பார்க்கவே அவனுக்குத் தைரியம் வரவில்லை. ‘உம்’ கொடுத்து விட்டுச் சரேலெனக் கண்களை மறுபுறம் திருப்பிக்கொண்டான்; மனக் குழப்பத்தை அவன் மறைக்கப்பட்ட பாடு!

வழி தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கும் போது திடீரென அவன் மடியில் பொத்தென்று யாரோ விழும் சப்தம் கேட்டுத் திரும்பினான். ராதா ஓடி வந்து அவன் மடியில் உட்கார்ந்துகொண்டாள். அம்மா! அவளை அப்படியே அணைத்துக்கொண்டு சிரித்தான்.

“முந்திக்கு இப்போ ராதா ரொம்ப மாறி இருக்கிறாள்; இல்லையா?” என்று பேச்சைத் தொடர்ந்து கேட்டான் ராமு; “ராதா! என்ன, மாமா கிட்டவர இன்னுமா இவ்வளவு ஸங்கோசம்?” என்றான்.

“ஆமாம். அவள் முகபாவமே பொம்ப மாறி இருக்கிறது” என்று சந்திரன் ராமு பக்கம் திரும்பினான். அடுத்து ஏதோ கேட்கப் போன ராமு அந்த முகத்தைப் பார்த்ததும் சட்டென்று அதை அடக்கிக் கொண்டு விட்டான். ‘ஐயோ, அந்த நினை வெல்லாம் இப்போது கிளறி விடாதேயேன்’ என்று கெஞ்சி, உத்தேசக் கேள்விக்குத் தடை கட்டுவது போல் இருந்தது சந்திரன் முகத்தோற்றம். உடனே சனிந்து ராதாவிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான். இடையிடையே ராமுவின் கேள்விகளுக்கு ஒன்றிரண்டு வார்த்தைகளிலே பதில் சுருக்கமாகச் சொல்லி விடுவான்.

ராமுவுக்கு அப்போது தள்ளி இருந்து ஓர் அழைப்பு வர, “இதோ வந்து விட்டேன்” என்று போயிருந்தான்.

கொஞ்ச நேரத்தில் சந்திரன் காட்டிய அன்புப் போக்கில் ராதா மாமாவோடு பழைய உறவு கொண்டாடத் தொடங்கி விட்டாள். இந்த இடைக் காலத்தில் அவள் தன்னை மறந்து விடாதது சந்திரனுக்கு ஆறுதலாக இருந்தது. அவள் குழந்தைக் கேள்விகள் கொஞ்சம் சுற்றுணர்ச்சியை மறக்கச் செய்ய உதவி புரிந்தன. ஆனால் அதுவுங்கூட அதிக நேரம் நிலைக்க வில்லை.

திடீரென்று ராதா மாமாவின் முகத்தைத் தன் சிறு கைகளால் திருப்பி, “மாமா, எனக்கு அம்மா வந்திருக்காளே” என்று ஊதுகுழலை வாயில் திணித்துக்கொண்டே பேசினாள்.

மின்னல் வேகத்தில் பாய்ந்த அந்த வார்த்தைகள் அவனை ஒருதரம் உலுக்கி எடுத்தன. ராதாவுக்கு ஓர் அம்மா வந்திருக்கிறாள்; வாஸ்தவம்!

அப்போது தான் வந்து சேர்ந்த ராமுவின் காதிலும் அது விழுந்தது, சந்திரன் முகத்திற்கு அவன் கண்கள் தாவின.

சந்திரன் வாயிலிருந்து ஒரு பலத்த சிரிப்புக் கிளம்பியது. “அப்படியா! அம்மாவா? எங்கே காட்டு” என்று சொல்லிக்கொண்டே ராமுவின் பக்கம் திரும்பினான். அவன் உதடுகளிலும் ஒரு சிரிப்பு! என்ன நினைவுகள் அவர்கள் மனத்தில் அலறிப் புடைத்து ஓடின அப்போது!

“அதோ பாரு அம்மா” என்று ராதா கூடத் தோரம் காட்டினாள்.

அங்கிருந்தாள் அவள் அம்மா!.

ஆனால் சந்திரன் அவள் காட்டிய பக்கம் பார்க்கவில்லை. ஏற்கனவே பார்த்திருந்தான். ராதாவின் கன்னத்தோடு கன்னமாகச் சேர்த்து, “நீ இனிமேல் அம்மா சொன்னபடி கேட்டுச் சமர்த்தாக இருப்பாய்; இல்லையா?” என்று கேட்டான். சந்திரன் முகத் தோற்றத்தை அப்போது ராமுவால் பார்க்க முடியவில்லை.

“இருப்பேன்” என்று கொஞ்சிக் குழறினாள் ராதா.

“அழுது தொந்தரவு பண்ணமாட்டாயே?”

“மாட்டேன். எங்கம்மா எனக்குப் புதுப் பாவாடை – சட்டை எல்லாம் வாங்கிக் கொடுப்பாளே. பின்னிச் சாதம் போடுவாளே” என்று ஒரு தாய் குழந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிர்ணயித்துக் கூறினாள். குழந்தை பாவம்! எல்லோருக்கும் போல இப்போது தனக்கும் ஓர் அம்மா கிடைத்துவிட்டதாகப் பெருமை கொண்டாள்!

இதற்குமேல் சந்திரனால் சம்பாஷணையைத் தொடர முடியவில்லை; குழந்தையோடு பேச்சுக் கொடுக்கக்கூட அவனால் முடியவில்லை. இந்த ரீதியில் எவ்வளவு நாழிகைதான் அவன் பேசிக்கொண்டிருக்க முடியும்? அவன் மறைக்கப் பார்த்த நினைவுகள் எல்லாம் வேகமாக எழுந்து அவன் மனநிலையைக் குழப்பிவிட்டன. நிதானித்து, பொறுத்துச் சமாளிக்கும் எல்லையைக் கடந்து விட்ட நினைவு தான் ஏற்பட்டது. திடீரெனக் கண்களை உயர்த்தி ராமுவின் பக்கம் திரும்பினான்.

“சந்திரா, ராத்திரியும் இங்கேதான் இருக்கணும் நீ.”

“இல்லை ராமு, கட்டாயப்படுத்தாதே. நான் தான் சொன்னபடி முகூர்த்தத்துக்கு வந்து விட்டேனே.”

“அது போதுமா? கல்யாணம் முழுதும் இருக்க வேண்டியவன் நீ. சரி! இப்போதாவது சாப்பிட்டு விட்டுப் போ.”

‘இல்லை இல்லை! இந்தச் சித்திரவதையை இங்கிருந்து ஒவ்வொரு விநாடியும் அனுபவித்துக் கொண்டிருக்க முடியாது. நான் போய் விடுகிறேன்’ என்று தனக்குள் சந்திரன் முணுமுணுத்துக் கொண்டான். ஆனால், “மணி என்ன இட்போது?” என்று வாய் கேட்டது.

“எட்டரை. பதினொரு மணிக்குச் சாப்பிட்டு விடலாம்.”

இன்னும் மூன்று மணி நேரம்! அதுவரையில் என்ன செய்வது? இதற்குமேல் அவனால் சமாளிக்க முடியாது. அவன் திடம் இது வரையில் நிலைத்து நின்றதே அபூர்வம். ஆனால் இப்போது எப்படித் தப்புவது? யோசித்தான். “ராமு! அதற்குள் அடுத்த தெருவுக்குப் போய்விட்டு வருகிறேன், நண்பரைப் பார்க்க” என்று சொல்லிக் கொண்டே எழுந்தான். ராமுவின் சந்தேகப் பார்வைக்கு உறுதி கூறுவதுபோல், “நான் வருகிறேன்” என்றான் மறுபடியும்.

என்னது இது? அந்த வார்த்தைகளையும், உறுதியையும் எப்படி எடுத்துக்கொள்வதென்று ராமுவுக்குப் புரியவில்லை. திகைத்துப் போய்விட்டான். “ராதா, மாமா வெளியே போய்விட்டு வரப்போகிறாராம், உன்னை விட்டுவிட்டு” என்று தனக்கே நிர்ணயம் இல்லாமல் பேசினான்.

“போய்விட்டு இதோ ஒரு நிமிஷத்தில் வந்து விடுகிறேன், ராதா” என்று அவளை இழுத்துக் கால்களில் அணைத்துச் சொன்னான்.

“போகக்கூடாது போ!” என்று அவன் வேஷ்டியைப் பிடித்து ராதா இழுத்தாள்.

சந்திரன் மனவமைதி ஏற்கனவே குலைந்து போய் விட்டது. தன் வேதனை நிலை, குழந்தையின் அழைப்பு இரண்டுக்கும் இடையில் ஒரு தவிப்பு உள்ளூறச் சில க்ஷணங்களுக்கு இருந்தது. வெளியே வாய்விட்ட சிரிப்பு; குறிப்பு, அர்த்தம், தெளிவு இல்லாமல் மேலெழுந்த ஒப்பு வார்த்தைகள்.

“சரி! சந்திரா, போய்விட்டுச் சீக்கிரம் வந்து விடு.. ராதா, விட்டு விடு மாமாவை. போய்விட்டு வரட்டும்” என்று அவளைத் தன் கையில் இழுத்தான் ராமு; “சந்திரா, கட்டாயம் வந்துவிடு” என்றான். வெளியே விளக்க முடியாத ஒரு சந்தேகம் ராமுவின் மனத்தில் அலைத்தது. அவன் வருவானா மறுபடியும்? ஆனால் எப்படி அவனை வற்புறுத்துவது?

“என்ன, அதற்குள் புறப்பட்டு விட்டாய்?”

“யாரோ சிநேகிதரைப் பார்த்து விட்டு வருகிறானாம்.”

“அப்பொ சரி! சீக்கிரம் வந்து விடு” என்று பல குரல்கள் எதிரொலித்தன.

“ராதா, போய்விட்டு வரேன். வந்து விடுகிறேன். இங்கேயே இரு” என்று குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான் சந்திரன்.

“நானும் வருவேன்.”

“ஸ்……. அசடு” என்று ராமு அவளை இழுத்துக் கொண்டான்.

சந்திரன் வாசலை நோக்கி இரண்டு மூன்று அடி எடுத்து வைத்துவிட்டான். அவனை அழுத்திக் கொண்டிருந்த ஒரு பாரம் குறைவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. இன்னும் படி இறங்கி மறைவதற்குச் சில எட்டுகளே இருந்தன.

“சந்திரா, சீக்கிரம் வா. உனக்காகக் காத்துக் கொண்டிருப்போம். ராதா, மாமாவைச் சுருக்க வரச் சொல்லு?”

“சுருக்க வந்துடு, மாமா.”

சுரீரென்ற ஒரு வலியுடன் சந்திரன் திரும்பினான். “ஆகட்டும், ராதா” என்று வேகமாக அவன் கூறின போது ஓடும் சிரிப்பு ஒன்று உதடுகளில் தோன்றியது. ‘எனக்கு இப்போது திருப்தி. அவளைப் பார்த்தாகி விட்டது’ என்பதுபோல் ஓர் அர்த்தமுள்ள பார்வையை ராதா மீது மறுபடியும் செலுத்திவிட்டுத் திரும்பினான். அவன் ஆகட்டும் என்றதில் முன்போல அழுத்தம் இல்லை; உறுதி கூறும் தோரணை இல்லை. அவன் கால்கள் காற்றில் சுலபமாக நெட்டித் தள்ளிக் கொண்டு போவது போலச் சுளுவாக விரைந்து எட்டுப் போட்டன.

– ஸரஸாவின் பொம்மை (கதைகள்), முதற் பதிப்பு: 1942, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *