ஞானப்பிரவேசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 7, 2022
பார்வையிட்டோர்: 3,401 
 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவள் கதையைக் கேட்டதும் கருநாகம் தீண்டியது போல் அவன் உடலெல்லாம் விஷம் ஏறியது…

அந்த அப்பாவித் தந்தை துடித்தான். குமுறினான். சித்தம் கலங்கினான். அவனுள் கொந்தளித்த உணர்வுகள் குமிழியிட்டுச் சிதறின.

அந்தச் சூழ் நிலையில்,

gnanaprave-picவெறும் தேயிலைச் செடியைத் தவிர வேறு உலகமே தெரியாத ஒரு தோட்டத் தொழிலாளி நூறு மைல்களுக்கப்பால் வெளியே வந்து பாஷை புரியாத ஒரு சிங்கள நாட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டால் என்ன பண்ணுவான்? அவனுக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. வெறும் ஜடமாக நின்று கொண்டிருந்த அவன் ஆத்திரம் ஆற இப்படி ஒரு வார்த்தையை மட்டும் கேட்டுத் தீர்த்தான்.

“ஏண்டா…தடியா! இதுக்காடா என் புள்ளையை அனுப்பி வைச்சேன்…?”

இந்த ஆவேசமான வார்த்தையைப் புரிந்துகொள்ளாத அந்த மனிதனும் மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை முனியாண்டியிடம் நீட்டினான். அதை ‘சடக்’ கெனப் பிடுங்கிச் சுக்கு நூறாய்க் கிழித்து அவன் முகத்திலே திருப்பி அடித்தான் முனியாண்டி. ஆத்திரமடைந்த அந்த ஆள் வேகமாகத் திரும்பித் தன் காரை நோக்கிச் சென்றான்.

“இன்னைக்கு என்னா நடந்தாலும் பரவாயில்லே…அவனுக்கு ஒரு அறையாவது என் கையாலே குடுக்கணும்… என்று வெறியில் அந்த ஆசாமியின் பின்னால் ஓடினான் முனியாண்டி.

வண்டி பசக்கென இழுத்துப் பறந்தோடியது. முனியாண்டி வண்டி சென்று மறையும் வரை வைத்த விழி வாங்காது பார்த்துக்கொண்டேயிருந்தான்.

அறியாத ஊரில்…புரியாத பாஷையில் … தெரியாத மனிதரோடு சகவாசம்…..

தென்னையும் பலாவும் அடர்ந்து படர்ந்து இருள் கவ்விக் கிடக்கும் அந்த நாட்டுச் சூழலிருந்து, மகளைக் கூட்டிக் கொண்டு பஸ் பிடிக்க நெடுஞ்சாலைக்கு வந்தான் முனியாண்டி. கந்தானை வரை நடந்து வந்துவிட்ட அவர்களை, நீர் கொழும்பிலிருந்து ஓடி வரும் ‘ கோட்டை பஸ்’ ஏற்றிக் கொண்டு வந்தது கொழும்பை நோக்கி.

கோட்டைப் புகையிரத நிலையம் தன் நெற்றியில் பதித்திருக்கும் கடிகாரமுள்ளை ஐந்துக்கு நேரே காட்டியது.

அட்டனைக் கடந்து புறப்படும் பதுளை வண்டியும் நான்காம் மேடையில் காத்திருந்தது. வண்டிக்குள் ஏறிய முனியாண்டி தன் மகளின் முகத்தைப் பார்க்க விரும்பாது ஜன்னலுக்கு வெளியே தலையைப் போட் டுக் கொண்டான்.

– வண்டியும் ஓடியது.

அவமானத்தை-இழிவை-மனித சேட்டையின் ஈனச் செயலை- அசுத்தத்தைக் கண்ணார, மனமார விலை கொடுத்து வாங்கிச் செல்லும் தனது சுயபுத்திக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்ற ஏக்க நினைப்புக்கு விடை காண முடியாதவனாய்ச் சமைந்திருக்கும் அவனை வெகுவேகமாக இழுத்துச் சென்றாள் ‘மெனிக்கே’.

“இந்த வண்டி இங்கேயே தடம் புரண்டு விடக்கூடாதா…? நானும் இவளும் இப்படியே அழிந்து போனாலும் ஊர் உலகத்துக்கும் ஒன்றுமே தெரியாமல் போகும்! நடந்து விட்ட பழியை விபத்தின் மேலே போட்டு மறைத்துக் கொள்ளலாம்…”

முனியாண்டியின் மூளை கொதிக்கக் கொதிக்கச் செயல்பட்டுக்கொண்டிருந்தது.

அவன் வாடிக்கை வைத்திருக்கும் செலவு கடை முதலாளி செய்த சிபார்சில் வீட்டு வேலைக்காரியாகத் தனது பன்னிரண்டு வயது மகளை, மாதச் சம்பளம் பத்து ரூபாய் ‘ ரேட்’ டோடு ஜாஎலையிலிருக்கும் ஒரு பணக்காரத் துரையின் பங்களாவுக்கு அனுப்பிவைத்திருந்தான்.

பெற்ற தாய்க்கு அணைந்த அடுப்பை ஊதிவிடக் குழல் எடுத்துக் கொடுக்கக் கூட உதவமுடியாத குழந்தைகள் அந்நிய வீடுகளுக்கு அடிமைகளாக விற்கப்படுவதுபோல் ‘வலும் பல்வேலை’ செய்ய நிர்ப்பந்திக்கப் படுகின்றன. சீமாட்டிகளின் தீட்டுச்சேலை கழுவவும், அவர்கள் கொஞ்சிக்குலாவிய படுக்கைகளைத் துப்புறவு செய்யவும், எச்சிக் கோப்பைகளைச் சுத்தஞ் செய்யவும், விடியவிடியக் கிணற்று நீர் இழுக்கவும், மாடு மேய்க்கவும் அந்தச் சிறுசுகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

–காரணம்.

அவைகள் அடிமைகளாய் அங்கு அனுப்பப்பட்டு சுதந்திரமாக அவர்களால் நடத்தப்படுகின்றார்கள்.

இந்தக் குறுகிய இடைவெளி நினைப்பில் முனியாண்டி திளைத்துக் களைத்தான். இப்படி ஒரு நிலையில் ‘ஊழியம்’ செய்யும் தன் மகளை மூன்று வருசத்திற்கு இது மூன்றாது தடவையாக அவன் பார்க்கப்போய்… நடந்து விட்ட நாடகம்தான் இது..

“தோட்டத்தில் மாரியம்மன் திருவிழா நடக்கப் போகிறது…. போய் மகளைக் கூட்டிக்கிட்டு வாங்க…புள்ளை கண்ணுக்குள்ளே கெடக்குது ” என்று ‘கரைச்சல்’ பண்ணிய மனைவியின் வாஞ்சையை மடியில் கட்டிக்கொண்டு கொழும்புக்குப் பயணம் செய்த முனியாண்டிக்குத்தான் இந்தக் கொடுவினை காத்திருந்தது.

அவனது அனுபவ ரீதியில் பத்திரிகைகளின் செய்திகள் எப்படியெப்படியெல்லாமோ பயமுறுத்தின. ”…வேலைக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் நடக்கின்ற மோதல்கள்…” “வேலைக்காரப் பெண் கொலை செய்யப்பட்டாள்” “வேலைக்காரியைக் காணவில்லை” இப்படியான எத்தனையோ மர்மச் சம்பவங்கள் பங்களா வாசிகளின் ‘விளையாட்டுக்களில்’ நடக்கின்றன….? எல்லாவற்றையும் ஓடும் றயிலுக்குள்ளேயே அசை போட்டுக்கொண்டு செல்லும் முனியாண்டி நீண்டவொரு பெருமூச்சுவிட்டான்.

“ஏழையாய்ப் பொறந்திட்டா என்னென்ன அநியாயமெல்லாம் காத்துக் கெடக்குது…பட்டினியாய்ப் போராடி நலிஞ்சாலும் மானத்தோடு வாழக்கூட – எவ்வளவு எடைஞ்சலா இருக்கு…” அவன் மனம் வேதனையால் வெதும்பியது. “ச்சை! இனி ஒரு ஜென்மத்துக்கு இந்த மாதிரி நடந்துக் கக்கூடாது’ முனியாண்டியின் ரத்த நரம்புகள் விண் விண்ணென்று தெறித்தன.

gnanaprave-pic2வீட்டையும், தோட்டத்தையும் அவனுக்கு வேண்டிய நாலு நல்ல மனுசர்களையும் நினைக்கும் போதெல்லாம் அவன் நெஞ்சில் நெருப்பெரிந்தது.

எந்த முகத்தோடு இன்றைக்கு இந்த நிலையில் மகளைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்குப் போவது என்று சஞ்சலப்பட்டு முடிவு காணத் துடிக்கும் முனியாண்டியை அதற்கு மேலும் சுமக்க மறுத்தது, அட்டனுக்கு வந்து விட்ட வண்டி.

பிள்ளையைக் கூட்டிக் கொண்டு இறங்கியவன், கர்ண கடூர இருளையும் பொருட்படுத்தாமல், தனக்கு நன்கு பழகிப்போன அந்தக் குறுக்குப்பாதையில் இறங்கி நடந்தான்.

பக்கத்துத் தோட்டத்து ‘பவுண்டரி’ யைப் பிரித்துக்காட்டும் சடை சவுக்கு மரங்கள் காற்றில் அசைந்து பேயாட்டம் ஆடின.

தோட்டம் நெருங்கிவிட்டது. மாரியம்மன் கோவிலில் வெளிச்சம் தெரிந்தது. இன்றைக்கு நாடகம் போடுகிறார்கள்… முனியாண்டிக்குத் திக் திக் என்று அடித்துக்கொண்டது. எல்லா லயத்துச் சனங்களும் இப்போது கோவிலில் தான் இருப்பார்கள். அந்தளவுக்கு அவன் தப்பித்துக் கொண்டான். பிள்ளையை யாருக்கும் தெரியாமலேயே வீட்டுக்குக் கொண்டு போய் ஆகவேண்டியதைக் ‘கப்சிப்’ பென்று முடித்துக் கொள்ளவேண்டும்…..

போக வேண்டிய பாதையை விட்டுவிட்டு, கோவிலுக்கு மேலே போகும் சின்ன ரோட்டைக் கடந்து மருந்துக்காரன் லயத்து நாய்களுக்கு அகப்படாமல் பிரட்டுக் களத்துக் குறுக்குப்படியில் இறங்கும் படியாகப் போய்க் கொல்லைப் புறத்துக் கதவைத் தட்டினான். – கதவு திறந்தது.

வீட்டுக்குள் நுழைந்தும் நுழையாமலும் முத்தம்மா முழுகாமல் இருக்கிற விசயத்தை ‘ஒன்னு ரெண் டாக’ச் சொன்னான். பாம்பை மிதித்தவளாய் விளக்கு மாற்றைத் தூக்கிக் கொண்டு நஞ்சைத் தின்னவளே! அவளே!! இவளே!!’ என்று அவள் குய்யோ முறையோ வென்று கத்தி முடிவதற்குள் அவளைச் சமாதானப்படுத்தி நடந்த உண்மை களை விளக்கமாகச் சொன்னான் முனியாண்டி.

“செலவு கடை மொதலாளி சொன்னமாதிரியே அவன் ஒரு கோட்டும் சூட்டும் போட்ட தொரைதான்…. கட்டிய பொம்பளையே ‘சீ’ன்னு தொரத்துர அளவுக்கு அவ காலை சுத்திக்கிட்டுத் திரியிற ஒரு எச்சிப்பயலாம்… குடிச்சிப்போட்டு ரவு ஒரு மணிக்கும் ரெண்டு மணிக்கும் வந்து கதவைத் தட்டு வானாம்… அவன் வரும் வரையும் தூங்காம காத்திருந்து கதவைத் தொறப்பது தான் நம்ம புள்ளைக்கு வேலை… அந்தப் பாம்பு நம்ப புள்ளையையும் ஒரு ராத்திரி கொத்தியிருக்கிறது! …… நல்ல நேரம் பார்த்து நான் போயும் வெஷத்தோட தான் திரும்பி வந்திருக்கேன்…”

“செலவுகடை கணக்கன் நாசமா போக! என் புள்ளைய கெடுத்தவன் வூட்டுல் இடி வுழுக” என்று அவன் மனைவி கதறிப் புலம்பினாள்.

“…மத்தவங்களை ஏசிப் பேசி என்னா பிரயோசனம்…? நம்ம மத்தியில அடிமைப் புத்தியும் அடிமை மனப்பான்மையும் இருக்கிறபோது மத்தவங்க ஆதிக்கத்தையும் அக்கிரமத்தையும் ஒழிச்சுக்கட்ட முடியுமா ….? வயித்துச் சோத்துக்காக இந்தமாதிரி ஈனத் தொழிலுக்கு புள்ளைய அனுப்பி வைச்ச என் தலையில் உன் கைலிருக்கிற வௌக்கு மாத்தால ரெண்டு சாத்து…”

சுயமரியாதையால் சுட்டெரிக்கப்பட்ட முனியாண்டியின் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கொதி நீர் கொட்டியது.

அவன் மனைவி மருந்து அரைத்தாள்.

– அஞ்சலி மாத சஞ்சிகை – மார்ச் 1971

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *