ஜோடி மரப்பாச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2022
பார்வையிட்டோர்: 2,050 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“உங்களுக்கு மரப்பாச்சி விற்கும் கடை.. ஏதாவது தெரியுமா?” என்று கேட்டாள் கோமதி.

அப்போதுதான் சங்கரன், காரியாலயத்திலிருந்து வந்தவன் சட்டையைக் கழற்றிக் கொண்டிருந்தான்.

“ஏன்? எதற்காகக் கேட்கிறாய்? நம் வீட்டில் இருக்கிற மரப்பாசிகள் போதவில்லை என்று கேட்கிறாயா? நேற்றுத்தானே பெட்டி நிறையக் கொலுச் சாமான்கள் ஊரிலிருந்து வந்திருக்கின்றன? அதில் ஊர்ப்பட்ட மரப்பாச்சி இருக்குமே; பார்த்தாயோ?”

“இன்றைக்குத்தான் பெட்டியை உடைத்துப் பார்த்தேன். ஒரு மரப்பாச்சிக்கு ஏற்ற ஜோடி வேண்டும். அதற்காகத்தான் கேட்டேன்.”

“ஜோடி வேண்டுமென்று சொல்கிறாயே; அது ஒற்றை மரப்பாச்சியாக இருக்கக்கூடாதோ?”

சங்கரன் சட்டையைக் கழற்றிவிட்டுத் துண்டை மேலே போட்டுக்கொண்டான். முகத்தை அலம்பிக் கொண்டு வந்து நாற்கலியில் உட்கார்ந்தான். கோமதி சுடச்சுடக் காபியைக் கொண்டுவந்து ஆற்றினபடியே பேசினாள்.

“ஜோடி மரப்பாச்சிகள் இருக்கின்றன. ஆனால் அந்த ஜோடியில் ஒன்று கால்பக்கம் கரிந்திருக்கிறது. முதல் முதலாகக் கொலு வைக்கிறோம். அந்தக் கரிந்த மரப் பாச்சியை வைக்கலாமா? பெரிய மரப்பாச்சிகள் அவை; ஆணும் பெண்ணுமாக இருக்கின்றன. ஆணுக்குப் பாசிச் சல்லடம் போட்டிருக்கிறது. பழைய காலத்தில் இந்த மரப்பாச்சிகளுக்குத்தான் மதிப்பு.”

ஒரு தம்ளரில் காபியைச் சங்கரன் கையில் கொடுத் தாள். அவன் அதைக் குடித்தான். தன் கையில் இருந்த டபராவிலிருந்து மிச்சக் காபியைக் கொஞ்சம் கொஞ்ச மாகத் தம்ளரில் விட்டாள்.

“என்ன யோசிக்கிறீர்கள்? மரப்பாச்சி விற்கிற கடை ஞாபகத்துக்கு வரவில்லையா?”

சங்கரன் நெற்றியைச் சுருக்கிக்கொண்டான். “நீ சொன்னாயே, அந்த மரப்பாச்சியில் ஒன்று ஆண்; மற்றொன்று பெண்; இல்லையா?” என்று அவன் கேட்டான்,

கோமதி சிரித்தாள். “அதைத்தானே நான் சொல் கிறேன்? நீங்கள் வேறு எங்கேயோ ஞாபகமாக இருக் கிறீர்கள் போலிருக்கிறது. இப்போது சாப்பிடுவது காபி என்றாவது தெரிகிறதா, இல்லையா?” என்றாள்.

சங்கரன் காபியின் கடைசிப் பகுதியைக் குடித்து விட்டுத் தம்ளரை அவள் கையிலே கொடுத்தான்; அதோடு புன்னகை பூத்தபடியே அவள் கன்னத்தை லேசாகத் தட்டி விட்டு, “அடே. நான் காபியா குடித்தேன்? அது தெரியவில்லையே! அமிர்தத்தையல்லவா ரம்பை கொடுத் துச் சாப்பிடுவதாக நினைத்துக் கொண்டிருந்தேன்?” என்றான்.

“போங்கள்; உங்களுக்கு எப்போதும் வேடிக்கை தான்” என்று கொஞ்சலாகச் சிணுங்கினாள் கோமதி.

“அந்தப் பொம்மைகளையெல்லாம் எங்கே வைத்திருக்கிறாய்? எல்லாவற்றையும் பார்த்துவிட்டாயா?” என்று கேட்டான் சங்கரன்.

“அடேயப்பா! ஒரு நாளில் முடிகிற காரியமா அது? ஒரே குப்பை, தூசி, அழுக்கு மண்டிக் கிடக்கின்றன. சோழி வகையராவே ஒரு கூடை இருக்கும். உங்கள் அப்பா எத்தனை தரம் ராமேசுவரம் போனார்?”

“என்னைப் பெறுவதற்கு முன்பு ஒரு தடவை போயிருக்கலாம்.”

“இல்லை, இல்லை. மாசத்துக்கு ஒரு தடவை போய், ஒவ்வொரு தடவையும் சோழி, சங்கு, ராவணன் விழி எல்லாம் வாங்கி வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இத்தனை சோழி எப்படி வரும்?”

“இருக்கலாம். எனக்கு அவ்வளவு தூரம் துப்பறியும் திறமை இல்லை. ஆனால் ஒரு விஷயம் எனக்குத் தெரியும். எங்கள் அப்பா ராமேசுவரம் போய்த் தவம் கிடந்து என் னைப் பெற்றார். உங்கள் அப்பா வேண்டாம் வேண்டாம் என்று இருக்கிறபோதே நீ பிறந்தாய்.”

கோமதிக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. “உங்களுக்கு ஞான திருஷ்டி உண்டோ?”

“இதற்கு ஞானதிருஷ்டி எதற்கு? நீ உங்கள் வீட்டில் ‘நாலாவது பெண். உன் அக்காவுக்குச் சம்பூர்ணம் என்று பெயர் வைத்திருக்கிறாரே உன் அப்பா. அதுவே சொல் லாதா, நீ வரவேற்பில்லாமலே உலகிற் குடி புகுந்தவள் என்று?

“அதற்காக, நான் பிறந்தவுடன் என் கழுத்தை முறித்துப்போடவில்லை என்று குற்றம் சுமத்துகிறீர்களோ?” கோமதியின் தொனியில் அழுகை கூடக் கலந்துவிடும் போல் தோன்றியது.

“சீ, பைத்தியம்! உன்னை யார் வரவேற்றாலும் வர வேற்காவிட்டாலும் எங்கள் வீடும் என் உள்ளமும் வர வேற்றன, ராணியாக ரம்பையாக ஏற்றுக்கொண்டு விட்டன என்பதை மறந்துவிட்டாயோ?”

“போதுமே உங்கள் ஸ்தோத்திரம்! கிள்ளுகிறது, பிறகு தொட்டிலை ஆட்டுகிறது. இந்தக் கலையில் நீங்கள் கெட்டிக்காரர்கள் தாம்.”

“அப்படிச் சொல்லாதே ! இதெல்லாம் இட்டிலிக்குச் சட்டினி போல, அல்வாச் சாப்பிட்ட வாய்க்கு மிக்ஸ்சர் தருவது போலே!” என்று சொல்லிச் சிரித்தான் சங்கரன்.

“ரொம்ப அழகு தான் போங்கள். கரிந்துபோன மரப்பாச்சியை மாற்றவேண்டுமென்று ஆரம்பித்தேன். பதில் மரப்பாச்சி வாங்கிவர வக்கில்லை. இட்டிலியாம் சட் டினியாம், அல்வாவாம் மிக்ஸ்சராம்”

“கோபங்கொள் ளாதடி மானே உன்றன்
குறிப்பை அறிந்து நான் ஏவல்செய் வேனே”

என்று முதல் நாள் பார்த்த சினிமாவில் இருவரும் கேட்டு ரசித்த பாட்டைப் பாடினான் சங்கரன். கோமதிக்கு இருந்த கோபமெல்லாம் எங்கேயோ போய்விட்டது. களுக்கென்று சிரித்துவிட்டாள்.

“சரி, விளையாடாதீர்கள். மரப்பாச்சி அகப்படுமா, அகப்படாதா, சொல்லுங்கள்” என்றாள் கோமதி.

மறுபடியும் சங்கரன் சிறிது யோசனையில் ஆழ்ந்தான். பிறகு, “எங்கே, அந்த இரண்டு மரப்பாச்சிகளையும் எடுத் துக்கொண்டு வா; பார்க்கிறேன்” என்றான்.

அவள் இரண்டு பெரிய மரப்பாச்சிகளையும் எடுத்துக் கொண்டு வந்தாள். ஒவ்வொன்றும் ஒரு முழ உயரம் இருந்தது. ஒன்று ஆண் ; ஒன்று பெண். ஆண் மரப் பாச்சியின் பீடத்திலும் காலிலும் நெருப்பில் எரிந்து பொக்கையான இடங்கள் இருந்தன. “பார்த்தீர்களா? இந்த ஆண் மரப்பாச்சிக்குப் பதில் ஒன்று கிடைத்தால் நன்றாக இருக்கும்; கிடைக்குமா?” என்று கோமதி கேட்டாள்.

சங்கரன் அந்த இரண்டையும் பார்த்தான். கருகிய மரப்பாச்சியை வாங்கினான். கொஞ்ச நேரம் கையில் வைத்துக்கொண்டிருந்தான். ஏதோ யோசனையில் ஆழ்ந் தவனாய்ப் பிறகு பெருமூச்சுவிட்டான்.

“என்ன, இப்படி அடிக்கடி யோசிக்கிறீர்களே?” என்று கோமதி கேட்டாள்.

“ஒன்றும் இல்லை. இந்த இரண்டு மரப்பாச்சிகளையும் பிரிக்கக்கூடாது. இது கரிந்திருந்தாலும் குற்றம் இல்லை. ஆடை அலங்காரத்தால் பார்க்கிறவர் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்துவிடலாம்” என்று சங்கரன் சொன்னான்.

“அதை மறைக்கலாம்; ஆனால் மூளி மூளிதானே?” என்று கேட்டாள் கோமதி.

“அது பார்க்கிறவர் கண்ணுக்கு மூளியாகத்தான் இருக்கிறது. ஆனால் அது வாழ்க்கையில் பெரிய மூளியை மறக்கச் செய்தது என்பதை உணர்ந்தால் மூளியாகத் தோன்றாது.”

“என்ன இது? புதிர் போடுகிறீர்களே!”

“ஆமாம். விஷயம் தெரிகிறவரைக்கும் அது புதிர் தான். எங்கள் அம்மா இந்த மரப்பாச்சியைக் கண்போல் பாதுகாத்து வந்தாள். இதையே கொலுவில் வைத்துக் கொண்டாடினாள். இதுதான் அவள் பிற்கால வாழ்க்கை யில் ஆறுதல் தந்தது. க்தையைக் கேட்கிறாயா?”

“சொல்லுங்கள்; கேட்கிறேன்.” கோமதி அப்படியே கீழே உட்கார்த்துகொண்டாள்.

எங்கள் அப்பாவை நீ பார்த்ததில்லை. எனக்கே அவர் ஞாபகம் சரியாக இல்லை ; கனவில் கண்டது போல இருக் கிறது. எங்கள் ஊரில் அம்மா பிறந்த வீடும் எங்கள் வீடும் பக்கத்தில் பக்கத்தில் இருந்தன. இரண்டு குடும்பத்தின ரும் பந்துக்கள். சின்ன வயசு முதற்கொண்டே இரண்டு குடும்பத்துக் குழந்தைகளும் பழகி வந்தன. அப்பா பெரிய குழந்தையாக இருந்தாலும் விளையாடுவதில் அதிக ஆசையாம். ஒரு நாள் இரண்டு வீட்டுக்காரர்களும் மரப் பாச்சி வாங்கினார்கள். ஒரு ஜோடி மரப்பாச்சியை வியா பாரி கொண்டு வந்திருந்தான். ஆண் பொம்மையை எங்கள் அப்பா வீட்டில் வாங்கினார்கள். பெண் பொம்மையை அம்மா வீட்டில் வாங்கினார்கள். இரண்டு குழந்தைகளும் அந்த மரப்பாச்சிகளை வைத்து விளையாடினார்கள். இரண் டையும் வைத்துக் கல்யாணம் செய்வது, விருந்து வைப் பது இப்படியாக விளையாடினார்கள்.

ஒரு நாள் என்ன தோன்றிற்றோ என்னவோ, இரண்டு குழந்தைகளும் மரப்பாச்சியை மாற்றிக்கொண் டார்கள். ஆண் பொம்மையை அம்மா வாங்கிக்கொண் டாள். பெண் பொம்மை அப்பாவிடம் போயிற்று ஒன்று சொல்ல மறந்து விட்டேனே: எங்கள் அம்மா வைப் பெற்ற ஒரு வருஷத்தில் பாட்டி காலமாகிவிட்டாள். ஆகவே தாத்தா இரண்டாந்தாரம் கல்யாணம் பண்ணிக்கொண்டார். அம்மாவிடம் அந்தச் சித்திக்கு அவ்வளவு பிரியம் என்று சொல்ல முடியாது. ஒரு நாள் அந்தச் சித்திப் பாட்டி அம்மாவைக் கூப்பிட்டிருக்கிறாள். அம்மா, மரப்பாச்சியை வைத்துக் கூடத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள். இரண்டு மூன்று முறை கூப்பிட்டும் விளையாட்டில் ஈடுபட்டிருந்த குழந்தையின் மேல் சித்திக்குக் கோபம் வந்தது. ஏதோ அடுப்பில் காரியமாக இருந்தவள், வந்தாள். நறுக்கென்று அம்மா தலையில் ஒரு குட்டுக் குட்டி விட்டு, அந்த மரப்பாச்சி யைப் பிடுங்கிக்கொண்டு போனாள். அதை என்ன செய்தாள் தெரியுமோ? அப்படியே அடுப்பில் வைத்துவிட்டாள்.

“ஐயோ! அடுத்த வீட்டு மாப்பாச்சி!” என்று குழந்தை கத்தினாள். சித்தி அதைக் காதிலே வாங்கிக் கொள்ளவில்லை. தற்செயலாக ஒரு பாட்டி அப்போது வீட்டுக்குள் வந்தாள். குழந்தை அழுவதைப் பார்த்துவிட்டு உள்ளே போனாள். மரப்பாச்சி அடுப்பில் இருப்பதைப் பார்த்தாள்.

“அடி பாவி! என்ன காரியம் செய்துவிட்டாய் மரப்பாச்சியை அடுப்பில் வைப்பார்களோ? உனக்குக் குழந்தை குட்டி பிறக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லையோ?” என்று சொல்லி அதைப் பிடுங்கித் தண்ணீரைக் கொட்டி அவித்தாள். மரப்பாச்சியின் அடிப்பாகந்தான் எரிந்தது. அந்தப் பக்கத்தை அடுப்பிலே வைத்திருந்ததனால், நல்ல வேளையாக முகம் தீப்படவில்லை.

”இனிமேல் இந்த மாதிரி காரியம் செய்யாதே. உயிருடன் குழந்தையைக் கொளுத்துவதும் சரி; மரப்பாச் சியை எரிப்பதும் சரி” என்று சொல்லிவிட்டுப் போனாள் பாட்டி.

அது முதல் சித்திக்குப் பயம் பிடித்துக்கொண்டது. தான் செய்த அசட்டுக் காரியத்தால் என்ன கெட்ட பலன் உண்டாகுமோ என்று அஞ்சினாள். பாட்டி சொன்னது போலக் குழந்தை குட்டி பிறக்காமல் போய்விட்டால் -? அவள் மனசு தவியாய்த் தவித்தது. அந்த மரப்பாச்சியைப் பார்த்தாள். என் அம்மா மூலையில் விக்கி விக்கி அழுது கொண்டிருப்பதையும் கவனித்தாள், மரப்பாச்சியை நன்றாகத் தேய்த்து அலம்பி அம்மாவிடம் கொடுத்து, “அழாதே அம்மா; கூப்பிட்டால் உடனே வரவேண்டாமோ? அதனால் தான் சித்தி கோபித்துக்கொண்டாள். இனிமேல் கோபித்துக்கொள்ள மாட்டாள்” என்று சொல்லிக் குழந்தையைச் சமாதானப்படுத்தினாள். அது முதல் சித்தி அம்மாவைத் தன் குழந்தையைப் போலவே சீராட்டி வர ஆரம்பித்தாளாம்.

பகவானுடைய சோதனையைப் பார். பிறகு சித்திக் குக் குழந்தையே பிறக்கவில்லை. அம்மாவே அவளுக்குக் குழந்தையாய் விட்டாள். இந்தப் பொம்மைதான் சித்தியின் மனசை மாற்றக் காரணமாக இருந்தது. அதனால் அம்மா வுக்கு இதனிடம் ஒரு தனியான விசுவாசம்.

முதலில் அம்மா, இந்த மரப்பாச்சியை அப்பாவிடம் கொடுத்து விடலாமென்று தான் எண்ணியிருந்தாள். இது மூளியாகப் போனவுடன், அவரிடம் கொடுக்காமல் தானே வைத்துக்கொண்டாள். அவர்கள் விளையாட்டு மாத்திரம் எப்போதும் போலவே நடந்துகொண்டிருந்தது.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் ஆயிற்று. பெரியவர்களாகிக் குடித்தனம் நடத்தினார்கள். அப்பாவும் சரி , அம்மாவும் சரி, இந்தப் பொம்மை இரண்டையும் பிரிக்காமல் சேர்த்தே வைக்க வேண்டுமென்று நினைத்தார்கள். மூளி என்று மாற்றவில்லை. குழந்தைப் பருவ விளை யாட்டுகளையும், கிடைக்காத அன்பைக் கிடைக்கப் பண்ணின சிறப்பையும் அவர்கள் எண்ணி எண்ணி மகிழ இந்தப் பொம்மைகள் காரணமாயின.

அப்பாவைவிட அம்மாவுக்கு இந்தப் பொம்மையிடம் பிரேமை அதிகம்; பிரேமை என்று சொல்வதைவிடப் பக்தி என்று தான் சொல்லவேண்டும். இரண்டு பொம்மைகளையும் அழகாக அலங்கரித்துக் கொலுவில் வைப்பாள். பார்க்கிறவர்களுக்கு இது மூளி மரப்பாச்சி என்று தெரியாது.

அம்மாவுக்கு இந்த மரப்பாச்சியினிடம் இருந்த பற்று ஆயிரம் மடங்கு அதிகமாவதற்கு ஒரு காரியம் நடந்தது. முன்னே நடந்தது சந்தோஷமான காரியம்; சித்தியின் அன்பைப் பெறக் காரணமாக இருந்தது அது. இதுவோ துக்கம் தரும் காரியம். சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன் எங்கள் ஊரில் நடந்த ஒரு பொருட்காட்சியில் திடீரென்று தீப்பற்றிக்கொண்டது. அதில் உயிர்ச் சேதங்கூட நேர்ந் தது. நான் பிறந்து ஐந்து வருஷங்கள் ஆகியிருந்தன. என் தகப்பனார் அந்தப் பொருட் காட்சியில் ஒரு கடை வைத்திருந்தார். தீ விபத்தில் அவர் சிக்கி உயிரிழந்தார். அம்மா எப்படித் துக்க சாகரத்துள் ஆழ்ந்திருப்பாளோ! அதை அறிந்துகொள்ளும் வயசு அப்போது எனக்கு இல்லை. இந்த மரப்பாச்சி தீப்பிடித்து வெந்ததையும், அப்பா தீ விபத்தில் இறந்ததையும் முடி போட்டுப் பார்த் தாள் அம்மா. பின்னாலே நடக்க வேண்டியதை முன்னாலே சித்தி காட்டினாளோ? அப்பா முதலில் வைத்திருந்த பொம்மை அது; அவராகத் தந்த ஆண் பொம்மை. அதா வது அவருடைய பிரதிநிதியாக இருந்த பொம்மை அது. அதை முதலில் வழங்கின அவர், பிறகு வாழ்க்கையில் தம் மையே அம்மாவுக்கு வழங்கினார். ஆனால் தெய்வம் இரண்டு பொருள்களுக்கும் ஊனத்தை உண்டாக்கிவிட் டது. அவருடைய பிரதிநிதியாக இருந்த பொம்மை தீப்பட்டு மூளியாயிற்று; அவரோ தீக்குப் பலியாகிவிட்

அம்மா அந்த நிலையில் எப்படி யெல்லாம் தத்தளித்தாளோ! யார் உதவி செய்தார்களோ! எங்கள் சிற்றப்பாவின் உதவியால் குடும்பம் குடும்பமாயிற்று, நானும் வளர்ந்து பெரியவனானேன்.

அப்பா காலமான பிறகு அம்மாவுக்கு இந்தப் பொம்மையிடம் அளவற்ற பற்று உண்டாகிவிட்டது. “கடவுள் ஒரு ஜோடியைப் பிரித்துவிட்டார். இந்த ஜோடியை நாம் பிரிக்கவேண்டாம்” என்று எண்ணி இந்த இரண்டையும் காப்பாற்றி வந்தாள். கொலுவில் இந்த இரண்டும் இல்லா விட்டால் அவளுக்குக் கொலுவாகவே இராது. என் சிற் றப்பா பெண்கள் என்ன என்னவோ சொல்லிப் பார்த்தார் கள். அம்மா கேட்கவே இல்லை. என்னிடம் ஒரு நாள் கதை கதையாக இந்த விஷயங்களையெல்லாம் சொன்னாள். எனக்கும் உபதேசம் செய்தாள். “நீ அப்பா அம்மாவைச் சேர்த்துப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. இந்த இரண் டும், நன்றாக இருந்தபோது நானும் அப்பாவும் எப்படி இருந்தோமோ அதை நினைப்பூட்டுகின்றன. ஆகையால் இந்த இரண்டையும் பிரிக்காதே” என்று எனக்குச் சொன்னாள். அந்த வார்த்தையை நாம் காப்பாற்ற வேண்டாமா?

கோமதி யோசனையில் ஆழ்ந்திருந்தாள். கதையோடு அவள் உள்ளம் ஒட்டி அதனால் ஏற்பட்ட உணர்ச்சியில் மிதந்தது. “என்ன, இப்பொழுது எனக்குப் பதில் நீ யோசனையில் ஆழ்ந்துவிட்டாயே!” என்றான் சங்கரன்.

“நீங்கள் மரப்பாச்சிக் கடைக்குப் போக வேண்டாம்” என்று தூக்கத்திலிருந்து விழித்தவளைப் போலப் பதில் சொன்னாள் கோமதி.

“ஓகோ! மறுபடியும் அம்மா வந்து பிறக்கப்போகி றாள். அவள் வந்து, எங்கே என் பொம்மை என்று கேட்டால் என்ன செய்வது என்ற விசாரமோ?” என்று புன் சிரிப்புப் பூத்தபடியே பேசினான் சங்கரன்

“உங்களுக்கென்ன? எப்போதும் விளையாட்டுத் தான்” என்று எழுந்தாள் கோமதி.

– பவள மல்லிகை (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1951, அமுத நிலையம் லிமிடெட், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *