விமலாவின் உயிர் தோழி வத்சலாவை பெண் பார்த்து சென்றார்கள் . இரு பக்கமும் சம்மதம். அடுத்த மாதம் கல்யாணம் …..
ஏய் என்னடி இது….. ஜோடி பொருத்தமே சரி ….இல்லையே…… என்றாள் விமலா .
என்னடி சொல்லுற ? நானும் டிகிரி ; அவரும் டிகிரி. ரெண்டு பேருமே நல்ல கலர் .. ஆள் பார்க்கவும் நல்லாதானே இருக்கார் …?
நல்லாத்தான் இருக்கார் ? ஆனா நீ அநியாத்துக்கு ஒல்லி அவர் இப்போவே ரொம்ப குண்ட இருக்காரே !..
இதுதான் பிரச்சனையா? இப்பல்லாம் ஆம்பிளைங்க இப்படிதான் …கண்டதையும் சாப்பிட்டு குண்டாயிடுறாங்க . கல்யாணம் ஆகட்டும் அப்புறம் பார் ! வாக்கிங்,டயட்னு ஸ்டரிக்டா அவரை வறுத்தெடுத்து ஆறே மாசத்துல என் சைசுக்கு கொண்டுவந்துடுவேன் … அப்புறம் நீயே பார்த்துட்டு ஜோடி பொருத்தமாய் இருக்குன்னு சொல்லுவ……….
கல்யாணம் முடிஞ்சி ஆறு மாதம் கழித்து இப்போ தான் ஊருக்கு வந்திருந்தாள் வத்சலா…… ஏய்! அம்மா வீட்டுக்கு வந்து இருக்கேன் .. இன்னைக்கு என் சமையல் வீட்டுக்கு வாயேன் … என் விமலாவை அழைத்தாள் ….
மனதில் பிளாஷ்பேக் டயலாக் ஒட …ஆர்வத்தோடு போனாள் விமலா ….ஆறு மாதத்தில் கணவனை டயட்டில் வைத்து ஒல்லியாக்கி இருப்பாளோ !….
வாடி விமலா…. வாசலிலே ஓடிவந்து வரவேற்றாள் வத்சலா…
எப்படி எங்க ஜோடி பொருத்தம் இப்போ ஓகேவா ..? என்றவளைப் பார்த்து அதிர்ந்து போனாள் விமலா ….காரணம் இப்போது அவள் ரொம்ப குண்டாகி இருந்தாள்…