ஜெகனின் வீடு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 10,342 
 

அது ஒரு ரயில்வண்டி அமைப்பு கொண்ட குடியிருப்பு காலனி. மாரிமுத்துப்பிள்ளை ஸ்டோர் என்றால் ஊரில் பலருக்கும் தெரியும். அதுவும் அந்த விபத்துக்கு பின்னால் ஊரில் ஏறக்குறைய எல்லாருக்குமே தெரிந்துவிட்டது.

மாரிமுத்துபிள்ளை ஸ்டோரின் மூன்றாவது எண் வீடுதான் ஜெகனுடையது. நீண்ட நாட்களுக்கு பிறகு.. அதாவது சில மாதங்கள் ஆகியிருக்கும். இப்போதுதான் வீட்டுக்கு போகிறான். திருப்பஞ்சலி முடக்கில் பஸ் இறங்கி, வானத்தையே சதா பார்த்துக்கொண்டிருக்கும் அந்த சாக்கடையை குதித்துத் தாண்டி, தண்டபாணி தாத்தா கடையை கடக்கும்போதுதான், அவனுக்கு நியாபகமே வந்தது… வீட்டு சாவி எங்க?, பேன்ட் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டு தேடினான்.. சாவி இல்லை. சாவி இல்லாமல் வீட்டுக்கு போகமுடியாதுதான், ஆனால் ஜெகன் அதற்காக தயங்கி, நிற்கவில்லை. ‘சாவிய காணோம்ம்மா…’ என ஜெகனும், அவன் அக்காவும் அம்மாவை பார்த்து, பயந்துக்கொண்டே சொல்ல, கொஞ்சமும் தாமதிக்காமல், நங்கு நங்கென்று அக்காவுக்கு தலையில் கொட்டு விழும். பிறகு பக்கத்து வீட்டு ஆட்கள் யாராவது வெளியே இருக்கிறார்களா என்று பூனையின் சுபாவத்தோடு பார்த்துவிட்டு, அம்மா, ஹேர் பின்னை எடுத்து காருக்கு கீர் போடுவதுபோல அங்கிட்டும் இங்கிட்டும் ஆட்டி, பூட்டை திறந்துவிடுவாள். வலியில் அக்கா கண்கள் கலங்கி நிற்க, அடக்கமுடியாமல் ஜெகன் சிரிப்பான். ஆனால் அது அக்காவுக்கு மட்டும் தெரிவதுபோல பார்த்துக்கொள்வான். ‘இருவது ரூபா பூட்டு அத வாங்க இந்த மனுஷனுக்கு துப்பு இல்ல.. என்ன ஆம்பளையோ, என்ன பொழப்போ.. தத்தேரி மாத்ரட்சம்…’ அம்மா அப்பாவை திட்டும்போதெல்லாம் ஜெகனுக்கு கோபம் வரும். பிறகு அம்மா திட்டுவது சரிதான் என சமாதானம் செய்துக்கொள்வான்.

இன்னைக்கு ஹேர்பின் கூட ஜெகனிடம் இல்லை. ஜெகன் பிறந்ததில் இருந்து ஓடியாடி, வளர்ந்த தெரு அது. ஏறக்குறைய எல்லாருக்கும் ஜெகனை தெரியும். ஆனால் இன்று யாருமே அவனை கண்டுக்கொள்ளவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் வந்தபோதுக்கூட இப்படிதான் நடந்தது. அன்று கார்த்திகை தீபம் என்பதால் வாசல் முழுக்க தீபங்கள் ஏற்றப்பட்டிருக்க, என்னமோ மனசு மாறி அவன் வீட்டுக்கு போகாமல் பாதியிலேயே திரும்பிவிட்டான். இரண்டு ஆள் போகும் சந்துக்குள் நுழைந்து, வெளியே வந்தால் அந்த எட்டு வீடுகள் கொண்ட ரயில்பெட்டி குடியிருப்பு ஆரம்பமாகும்.

கடந்த சில மாதங்களாகவே ஜெகனுக்கு உடல்நிலை சரியில்லை. கண்ணெல்லாம் வெள்ளை படிந்ததுபோல, உடல் எடை குறைந்து.. ரொம்பவே பலவீனம் ஆகிவிட்டான். முதல் வீட்டு கண்ணம்மா பாட்டியும், கடைசி வீட்டு முரளி அண்ணனும் வெளியே அமர்ந்திருந்தார்கள். கீர்த்தி, யுவன், விநோத்தோடு இன்னும் சில குழந்தைகளும் நொண்டி ஆடிக்கொண்டிருந்தார்கள். இந்த ஸ்டோர் ஓனருக்கு நொண்டி ஆடுவது கொஞ்சம் கூட, பிடிக்காது. ஜெகனும் அக்காவும் செங்கலில் கோடு கிழித்து ரைட்டா… ரைட்டா… என ஆடிக்கொண்டிருக்கும்போதே…. வேட்டியை மடக்கிக்கட்டிக்கொண்டு, நாக்கை மடித்து… ‘’சனியனுங்கு.. எத்தன வாட்டி சொன்னாலும் கேக்காம… வழிப்பூரா கிறுக்கி வக்கிதுங்க…’’ என அடிக்க வருவதுபோல ஓடிவருவார்.. ஜெகனும் அக்காவும் வீட்டுக்குள் ஓடி ஒழிந்துக்கொள்ள.. அம்மா வாசலுக்கு வந்து.. ‘’இனிமே செங்கல்ல கிறுக்காம பாத்துக்குறேங்க’’ என கெஞ்சும். ‘’வாடகை கொடுக்கவும் துப்பில்ல… இதுல நொண்டி ஆட்டம் கேக்குதா.. எங்க உன் புருஷன்.. மயிரா.. மூணு மாசமா இந்தா தரேன்… அந்தா தரேன்னு ஏமாத்துறான்’’. அம்மா கண் கலங்கிப்போய் நிற்க, ஜெகன் கதவு வழியே அம்மா அழுவதை பார்த்துக்கொண்டிருப்பான். அந்த வீட்டு ஓனர் சிலோன்காரர். அம்மா எப்போதும் ‘’அவங்கலாம் புளிச்சக்கீர..’’ என சொல்ல, ஜெகன் கண்கள் சுருக்கி புளிச்சக்கீரையின் சுவையை மண்டைக்குள் உணர்ந்துக்கொள்வான்.

கண்ணம்மா வீட்டை தாண்டும்போதெல்லாம் கறுப்பி குரைக்க ஆரம்பித்துவிட்டது. ஜெகனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘’கறுப்பி… கறுப்பி…‘’ என பிடிக்க ஓடினான். ஆனால் கறுப்பி அவனுக்கு சிக்காமல்… வெறித்தனமாக குரைக்க.. ஜெகன் கொஞ்சம் அரண்டு போனான். மேலும் சில காக்கைகள் மேலே வட்டமடிக்க ஆரம்பிக்க.. எதுவும் புரியாமல் சுவரோரம் ஒதுங்கி கண்ணம்மா பாட்டியையும், முரளி அண்ணனையும் ஜெகன் பார்த்தான். இவன் வந்ததோ, நாய் இவனை பார்த்து குரைப்பதோ.. எதுவும் தெரியாததுபோல அவர்கள் அமர்ந்திருந்தார்கள். கண்ணம்மா பாட்டி கறுப்பியை வெறித்துப்பார்த்துவிட்டு ‘’இதுக்கு என்ன சனியன் பிடிச்சதோ… எப்ப பாரு ஓயாம குலச்சுக்கிட்டே… கம்னாட்டி வா இங்க’’ என சலித்துக்கொள்ள.. கறுப்பி குரைப்பதை நிறுத்த தயாராய் இல்லை. வீட்டு சாவி இல்லை. கதவை மெதுவாக உலுக்கி பூட்டை இழுத்துப்பார்த்தான். கெட்டியாக இருந்தது. இன்னொரு முறை இழுத்தான்.. எந்த தடையும் இல்லாமல் பூட்டு திறந்துக்கொண்டது. ஆனால் அதை வெளியே காண்பித்துக்கொள்ளாமல் அப்படியே சிரித்துக்கொண்டே நின்றான். கொஞ்ச நேரத்தில் முரளி அண்ணன் வீட்டுக்குள் போய்விட, கண்ணம்மா முரத்துக்குள் தீவிரமாக, மெதுவாக கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். கறுப்பி குரைத்துக்கொண்டே இருந்தது. வேகமாக உள்ளே வரும்போது, கதவு திறந்த சத்தம் கேட்டு கண்ணம்மா பாட்டி பார்த்தது போல தோன்றியது. இரண்டாவது கதவு எப்போது திறந்துதான் இருக்கும். சில மாதங்களாக வீடு பயன்படுத்தாமல் இருப்பதால் முழுக்க ஒட்டடை பிடித்து, அழுக்கேறி கிடந்தது. வீட்டு பொருட்கள் எல்லாம் துணி மூடி வைக்கப்பட்டிருக்க… நேராக கிச்சனுக்கு சென்றான். பார்ப்பதற்கு குடோன் மாதிரி இருந்தது. ஹார்லிக்ஸ் பாட்டிலை நோண்டிக்கொண்டிருந்த எலி, நோண்டுவதை விட்டுவிட்டு இவனையே பார்க்க.. எலியின் கண்களை கூர்ந்து கவனித்தான். அடுத்த நொடியே தாவிகுதித்து.. திரும்பி பார்க்காமல் எலி தெரித்துக்கொண்டு ஓட… ஜெகனுக்கு பயங்கரமாக சிரிப்பு வந்தது. அடக்கமுடியாமல் சிரித்தான். கொஞ்சம் சத்தம் போட்டு சிரித்தான். ஜன்னல் வழியே யாரோ எட்டி பார்ப்பது போல தெரிந்தது. சிரிப்பதை குறைத்துக்கொண்டு கதவு வழியே வெளியே எட்டி பார்த்தான். முரளியும், கண்ணம்மாவும் வாசலில் நின்றுக்கொண்டு வீட்டை பார்த்துக்கொண்டே தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.

அமைதியாக டி.விக்கு அருகில் வந்தவன். டி.வி போர்த்தப்பட்டிருந்த துணியை விலக்கிவிட்டு ரிமோட்டை தேடினான். அப்போது அவர்கள் குடும்ப ஆல்பம் ஒன்று கீழே கிடக்க… இதெல்லாம் ஏன் இப்படி கிடக்கு என யோசித்துக்கொண்டே அதன் மேல் இருந்த தூசியை தட்ட… சின்ன புழுதி படலமே கிளம்பி அவன் பார்வையை கொஞ்ச நேரத்துக்கு மறைத்தது. வெளியே சில காகங்களும், கறுப்பியும் கத்திக்கொண்டே இருப்பது கேட்டது. அக்கா வயதுக்கு வந்தபோது எடுத்தப்படம். அம்மா, அக்கா, ஜெகன் மூன்று பேரும் இருந்தார்கள். அப்பா மட்டும் எந்த படத்திலும் இல்லை. அவர் வீட்டுக்கு வந்தால்தானே.. எப்போதாவது இரவு ரெண்டு மணிக்கு வருவார். தொடர்ந்து மூன்று நாட்கள், நான்கு நாட்கள் என்று சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்கிவிட்டு கிளம்பிவிடுவார். அம்மாதான் நகைகளுக்கான ஜெம் கட்டிங் செய்யும் வேலைக்கு சென்று அக்காவையும், ஜெகனையும் வளர்த்தது.

ஒட்டடை, தூசி, பொருட்கள் எல்லாம் துணி போர்த்தி,ஜெகனுக்கு அது என்னமோ பேய் வீடு மாதிரி தெரிந்தது. கொஞ்ச நாட்களாகவே பசி எடுப்பது இல்லை. டி.வியை ஆன் செய்து டென் ஸ்போர்ட்ஸுக்கு மாற்றினான். ஜெகனுக்கு WWF பார்ப்பது என்றால் அவ்வளவு ப்ரியம். ஜான் சீனாவோ, ரே மிஸ்ட்டீரியோவோ அடிவாங்கினால் சேனலை மாற்றிவிடுவான். இல்லையென்றால் அழ ஆரம்பித்துவிடுவான். அக்காவுடன் சண்டை என்றால்…. முகத்துக்கு நேராக ஐந்து விரல்களையும் ஜான் சீனா மாதிரி காண்பித்துவிட்டு, சுவரில் மோதி எழும்பிவந்து அக்காவை அடிப்பதில் ஜெகனுக்கு அலாதி ப்ரியம். கையிலிருந்த ஆல்பத்திலேயே ஜெகனின் கண்கள் நிலைக்குத்தி நிற்க, கொஞ்சமாக அழ ஆரம்பித்தான். அக்காவையும், அம்மாவையும் பாக்கணும் போல இருந்தது. அப்பாவையும் தான். சீக்கிரமே அதில் இருந்து வெளியேவந்தவன். டி.விக்கு தாவினான். அன்று நடந்த சண்டை இரண்டு பெண்களுக்கு, அரை நிர்வாணத்தோடு இருவரும் குதித்துக்கொண்டே சண்டைக்கு தயாராக, கொஞ்சம் குஜாலாகி, யாராவது வந்துவிட்டால் என யோசித்து, மெதுவாக வாசலுக்கு போய் கதவை சாத்திவிட்டு வந்து சேரில் கால்கள் இரண்டையும் தூக்கி குத்துகாலிட்டு அமர்ந்துக்கொண்டான். இன்னமும் முரளியும், கண்ணம்மாவும் வாசலில்தான் நிற்பதுபோல இருந்தது. கூடவே இன்னும் இரண்டு மூன்று பேர். கறுப்பியின் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.

வீட்டுக்குள் இருந்து டி.வி சத்தம் கொஞ்சம் அதிகரிக்க… வாசலில் எல்லார் முகமும் வியர்க்க ஆரம்பித்து, இதயம் படபடக்க, ‘’அந்த நாய்ங்க செத்த அன்னைக்கே, வீட்ட காலி பண்ணி.. கணபதி ஹோமம் பண்ணுங்கன்னு தலையால அடிச்சுக்கிட்டே.. இப்படி மாசக்கணக்கா போட்டு வச்சுருந்தா… நைட்டுல நிம்மதியா தூங்கக்கூட முடியல’’ கண்ணம்மா பாட்டி பயத்தில் பிதற்றிக்கொண்டிருந்தாள்.

‘’போலீஸ் கேஸு பாட்டி… உடனேலாம் காலி பண்ணமுடியாது’’. வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தான் முரளி.

கொஞ்ச நேரத்தில் WWF சத்தம் மாறி, டாம் அண்ட் ஜெர்ரி ஓடும் சத்தம் கேட்க ஆரம்பித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *