கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 26, 2022
பார்வையிட்டோர்: 11,272 
 

கிராமத்திலுள்ள குமரிப்பெண்டுகளுக்கு அங்குப்பிள்ளையைக்‌ கண்டுவிட்டாலே ஒருவித குஷி வந்துவிடும்‌.

ஜாடை செய்து – ஒவ்வொரு வார்த்தைக்குமே ஜாடை செய்து – ‘னைக்கு (அங்குப்பிள்ளையைக்‌ காட்டி) கலியாணம்‌ (தாலி கட்டுவதைப்போல கழுத்துப்பக்கம்‌ கைகளைக்‌ கொண்டுபோய்‌) எப்போ? (விரல்களை முஷ்டி மடக்கிக்‌ குலுக்கவேண்டும்‌.)

இந்த ‘அபிநய முத்திரை’களோடு முகபாவமும்‌ சேர்ந்துகொள்ளும்‌.

ஊமைகளோடு ‘பேசுவது’ என்பது எல்லோருக்கும்‌ அவ்வளவு லேசு இல்லை. வேத்துமொழி தெரிந்தவன்தான்‌ அதைப்‌ பேசமுடியும்‌ என்பதுபோல ‘ஊமை பாஷை’ தெரிந்தவன்தான்‌ அவர்களோடு சரளமாசப்‌
பேசமுடியும்‌.

‘பெண்‌’ என்று சொல்லவேண்டுமானால்‌ மஞ்சள்‌ பூசுகிறதைப்போலக்‌ கன்னத்தில்‌ தேய்த்துக்‌ காண்பிக்கவேண்டும்‌ அல்லது விரலால்‌ மூக்கின்மேல்‌ தொட்டுக்‌ காண்பித்து மூக்குத்தியைத்‌ தெரியப்படுத்தவேண்டும்‌. பருவப்பெண்ணைக்‌ குறிப்பிட வேண்டுமென்றால்‌, விரல்களைக்‌ குவித்து மாரில்‌ வைக்கவேண்டும்‌.

ஊமைகள்‌ நம்மிடம்‌ பேசும்போது அவர்களுடைய நாக்குக்குப்‌ பதில்‌ முகமே பாவங்களால்‌ பேசும்‌. அதோடு கைஜாடைகள்‌ ஒத்துழைக்கும்‌. தொண்டையிலிருந்து வாய்‌ வழியாகவும்‌ மூக்கின்‌ வழியாகவும்‌ முக்கல்‌ கலந்த ஒருவித ஒலி அவர்கள்‌ நம்மோடு ‘பேசும்‌’ போது கசிந்துகொண்டிருக்கும்‌.

கால்ப்பேச்சு, அரைக்கால்பேச்சு, ஊமைகளும்‌ உண்டு. நம்முடைய அங்குப்பிள்ளை அரைக்கால்‌ பேச்சுளமை. என்னை அவன்‌ ‘ஹாமா’ என்று தெளிவல்லாத தேய்ந்த ஒலியால்‌ குறிப்பிடுவான்‌. இதற்கு ‘மாமா’ என்று அர்த்தம்‌ !

என்னைக்‌ கண்டுவிட்டால்‌ அங்குவுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்‌. ‘ஹாமா’ என்று சொல்லிக்கொண்டே பக்கத்தில்‌ வருவான்‌. பிரகாசத்தால்‌ கண்கள்‌ மின்னும்‌.

அவன்‌ எப்பவும்‌ துவைத்து நிழலில்‌ உலர்த்திய ஒரு புழுங்க வாடையுள்ள பளுப்புநிற வேட்டியையே உடுத்திக்‌ கொண்டிருப்பான்‌. துண்டுக்குப்‌ பதிலாக மேலே போர்த்திக்‌ கொண்டிருப்பதும்‌ ஒரு வேட்டிதான்‌. அதை ரெண்டாக மடித்துக்‌ குறுக்கு வசத்தில்‌ மேலே போட்டு இடது கக்கத்துக்குள்‌ அதன்‌ மல்க்கோடிகளை இடுக்கிக்கொண்டிருப்பான்‌.

தங்கப்பூண்‌ கட்டிய ஒற்றை ருத்ராட்சக்‌ கொட்டை சிகப்புக்‌ கயறுவில்‌ கோர்த்துக்‌ கட்டப்பட்டுள்ள கழுத்து. அணிலின்‌ முதுகிலுள்ள வெண்கோடுகளைப்‌ போலுள்ள மூன்று திருநீர்க்‌ கீற்றுகளும்‌, அர்ச்சனைக்‌
குங்குமமும்‌ அணிந்த குறுகிய நெற்றி. முன்நெற்றியில்‌ சிரைக்கப்பட்டு கமான்‌ வளைவு வைத்த விட்டல்‌ கிராப்‌. சிறு வயசிலேயே தலை முழுவதும்‌ விரவிய பித்த நரை. எப்பவும்‌ மயிர்‌ கலையாமல்‌ பின்பக்கம்‌ சீவியமாதிரியே இருக்கும்‌. அடிக்கடி அதனையறியாமலேயே சரிசெய்து கொள்வதுமாதிரி இடது கை தலையை தடவி விட்டுக்கொண்டே இருக்கும்‌.

அவனுக்கு நான்கு முன்னத்தம்‌ பற்கள்‌ மிகவும்‌ நீளம்‌. பெரியவர்களின்‌ பக்கத்தில்‌ உட்கார்ந்திருக்கும்போது பற்கள்‌ தெரியாமல்‌ மரியாதைக்காக மூடிக்கொள்ளவேண்டும்‌ என்று நினைத்து உதடுகளால்‌
மறைத்துக்கொண்டு ‘ஊ’ என்று இருப்பதைப்‌ பார்க்கப்‌ பரிதாபமாக இருக்கும்‌. இதைப்‌ பார்த்து யாராவது சிரித்தால்‌ ‘ம்‌, சிரிக்காதே. மாமா அடிப்பார்‌’ என்று ஜாடையால்‌ சொல்லுவான்‌. எங்கள்‌ அப்பா பக்கத்தில்‌ அவன்‌ இருக்கும்போது இந்தக்‌ ‘காட்சி’யை அடிக்கடி பார்க்கலாம்‌.

கிராம முன்சீப்‌ பிள்ளையின்‌ வீட்டில்‌ மூத்த மகன்‌ அங்குப்பிள்ளை இளையவன்‌ ஆதிலிங்கம்பிள்ளை. தம்பியைத்‌ ‘தப்பி’ என்று சொல்லுவான்‌

அங்கு. தம்பிக்குத்தான்‌ விசேஷ சலுகை வீட்டில்‌. அங்குவைக்‌ கண்டால்‌ வீட்டில்‌ யாருக்கும்‌ பிடிக்காது; பெற்ற தாய்க்கும்கூட. சாப்பாடு நேரம்‌ மட்டிலும்‌ அவனைச்‌ சாப்பிட அனுமதிப்பார்கள்‌. பிறகு போ போ என்று ஜாடை செய்து வெளியே துரத்திவிடுவார்கள்‌.

தங்கள்‌ வீட்டில்‌ ஒரு ஊமை இருப்பது அவர்களுக்கு கெளரவக்‌ குறைச்சலாகப்பட்டது. ‘எங்க பரம்பரையிலேயே ஊமை என்று யாரும்‌ கிடையாது. இவன்‌ எங்கிருந்து பிறந்தானோ’ என்று சொல்லுவார்கள்‌.
ஆனால்‌ ஊருக்குள்‌ மற்ற எல்லார்‌ வீடுகளிலும்‌ அவனும்‌ ஒரு பிள்ளை என்று நினைத்து நடத்தி வந்தார்கள்‌. நாயக்கமார்களின்‌ வீடுகளில்‌ எவ்வளவு பசியோடு இருந்தாலும்‌ அவன்கை நனைக்கமாட்டான்‌.
அவனுக்குத்‌ தன்‌ ஜாதி உசத்தி என்ற நினைப்பு. அதோடு அவர்கள்‌ சைவம்‌.

‘இண்ணைக்கு எங்க வீட்லெ, (பறவை தானியத்தை தரையில்‌ கொத்துவதுபோல சைகைகாட்டி) கோழிக்‌ கறி சாப்பிடுறியா?’ என்று என்‌ தம்பி கேட்பான்‌. உடனே அங்குப்‌ பிள்ளைக்கு சிரிப்புக்‌ கலந்த
பொய்க்கோபம்‌ வந்து, அவனை அடிக்கப்போவதுபோல பாவனை செய்வான்‌. அப்புறம்‌ எங்களைப்‌ பார்த்து ‘இவன்‌ சுத்த மோசம்‌; சுத்த மோசம்‌’ என்று முகத்தை வெறுப்பாக வைத்துக்கொண்டு விரல்களைத்‌ தண்ணீரில்‌ நனைத்து உதறுவதுபோல உதறி உதறிக்‌ காட்டுவான்‌.

இதே கேள்வியை எங்கள்‌ தங்கச்சி கேட்டிருந்தால்‌, ‘அய்‌’ என்று மூக்கைப்‌ பிடித்துக்கொண்டு அருவெருப்படைவதுபோல்‌ முகத்தை மட்டும்‌ சுளிப்பான்‌.

குமரிப்பெண்டுகள்‌ தனியாக்‌ கூடியிருக்கும்‌ இடங்களில்‌ அங்குப்‌ பிள்ளை வந்து சிக்கிக்கொண்டால்‌ அவர்கள்‌ அவனிடம்‌ கேட்கும்‌ முதல்‌ கேள்வி, ‘என்னைத்‌ தாலி கட்டுகிறாயா?’ என்று அபிநயித்துக்‌ கேட்பார்கள்‌ ! அங்கு அதற்குச்‌ சட்டென்று மறுத்துவிடுவான்‌.

‘சரி; இவளை?’

அவன்‌ தனது தோளைத்‌ தட்டிக்‌ காண்பித்து, ‘அவள்‌ எனக்குத்‌ தங்கச்சி, அப்படிச்‌ சொல்லாதே’ என்று கண்களால்‌ ஆட்சேபிப்பான்‌. (ஊமை பாஷையில்‌ தோள்களைத்‌ தொட்டுக்‌ காண்பித்தால்‌, உடன்‌ பிறப்பு, சகோதரம்‌ என்று அர்த்தம்‌.)

அந்த ஊரிலுள்ள பிள்ளைமார்‌; செட்டியார்‌, நாயக்கமார்களோடு சம்மந்தவழி செய்துகொள்ளாவிட்டாலும்‌ பெரியப்பா, சித்தப்பா, மாமா என்றெல்லாம்‌ உறவுமுறை கொண்டாடி வந்தார்கள்‌. ஊமையான
அங்குப்பிள்ளை அந்த ஊரில்‌ தனக்கு யார்‌ யார்‌ அண்ணன்‌ தம்பி முறை, சம்மந்தகார முறை என்று தெளிவாகத்‌ தெரிந்து வைத்துக்கொண்டிருந்தது ஆச்சரியம்தான்‌.

நல்ல இளவட்டமான அங்குவைக்‌ குமரிப்பெண்டுகள்‌ விஷமில்லாத தண்ணிப்‌ பாம்புபோல்‌ நினைத்து நடத்தி வந்தார்கள்‌.

ஒருநாள்‌ நான்‌ மாடியில்‌ உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தேன்‌. கீழே ஒரே கலகலப்பு. பெண்டுகளின்‌ கெக்கொலி அலை அலையாக வந்து துளைத்துக்கொண்டிருந்தது. அன்று எங்கள்‌ வீட்டில்‌ புதுமணத்தம்பதிக்கு விருந்து. ஊர்‌ அழைத்திருந்தோம்‌, இதில்‌ ஆண்களுக்கு அவ்வளவாக உற்சாகமிராது. பெண்‌ எப்படி இருக்கிறாள்‌; என்ன புடவை; என்னென்ன நகை பொட்டுக்கொண்டிருக்கிறாள்‌ என்பதிலெல்லாம்‌ ஊர்ப்‌ பெண்களுக்குத்தான்‌ அக்கறை. இந்தமாதிரிக்‌ காரியங்களுக்கு அழையாமலேயே வந்து கூடிவிடுவார்கள்‌. ஆனால்‌ இவ்வளவு கலகலப்புக்கு என்ன காரணம்‌ என்றுதான்‌ முதலில்‌ விளங்கவில்லை எனக்கு. திடீரென்று ‘ஹாமா, ஹாமா’ என்ற அங்குவின்‌ அபயக்குரல்‌ கேட்டதும்தான்‌, ‘சரி பயல்‌ வந்து மாட்டிக்கிட்டான்‌ போலிருக்கு’ என்று நினைத்துக்கொண்டேன்‌.

மொள்ளக்‌ கீழே இறங்கி அவனை அவர்கள்‌ படுத்துகிறதைப்‌ பார்க்கவேண்டும்‌ என்று போனேன்‌.

பக்கத்து அறைக்குள்‌ புகுந்து அடைத்துக்கொண்டு ஊடுசுவரின்‌ ஒரு ஜன்னல்‌ கதவைத்‌ திறந்து ஒருச்சாய்த்து வைத்துக்கொண்டு பார்த்தேன்‌. நானிருந்த அறைக்குள்‌ வெளிச்சம்‌ இல்லாததால்‌ அவர்கள்‌ யாரும்‌ என்னைப்‌ பார்க்கமுடியவில்லை.

தடிச்சி சுப்பு அவனை வெளியேவிடாமல்‌ வழியை மறித்துக்‌ கொண்டு அவனைப்பார்த்து ஜாடை செய்து கேட்கிறாள்‌; ‘என்னைக்‌ கல்யாணம்‌ பண்ணிக்கோ?’ என்று.

உனக்குத்தான்‌ கலியாணம்‌ ஆய்விட்டதே என்று சொல்லி அவளுடைய கழுத்தில்‌ கிடக்கும்‌ கயிற்றைக்‌ காண்பிக்கிறான்‌.

அவள்‌ தன்‌ பக்கத்தில்‌ நின்றிருந்த இளம்‌ விதவை வெங்கடம்மாளைக்‌ காட்டி, ‘அப்போ இவளைக்‌ கட்டிக்கோ?’ என்று சொல்லுகிறாள்‌.

அங்கு, மேலே கையைக்‌ காட்டி, ‘அப்படிச்‌ சொல்லாதே. சாமி கண்ணுமுழியைத்‌ தோண்டிவிடுவார்‌’ என்கிறான்‌.

‘சரி, தள்ளிக்கோ, வழியைவிடு நான்‌ போகணும்‌ என்கிறான்‌’ அவன்‌.

அவளோ நிலையில்‌ சாய்ந்துகொண்டு ஒரு காலை நீட்டி நிலையின்‌ மறுபக்கத்தில்‌ மிதித்துக்கொண்டு அவனுக்குப்போக வழிவிடாமல்‌, மீண்டும்‌ ‘என்னைக்கட்டிக்கோ; உன்னைப்‌ பிரியமா வச்சிக்கிடறேன்‌’ என்று சொல்லுகிறாள்‌. உடனே அங்கு அவள்மீது ஒரு ‘குண்டு’ போடுகிறான்‌! ‘உனக்குத்தான்‌ – மீசையைத்‌ திருகிவிடுவதுபோல்‌ செய்து காட்டி இரண்டு புருஷன்கள்‌ இருக்கிறார்களே இது போதாதா! நான்‌ வேறு வேணுமா உனக்கு?’ என்று சொல்லவும்‌ பாயில்‌ உட்கார்ந்து கொண்டிருந்த பெண்டுகள்‌ கூட்டம்‌ தரையில்‌ உருண்டு சிரிக்கிறது.

‘இது’வெல்லாம்‌ இவனுக்கு எப்படித்‌ தெரிந்தது என்று அங்குள்ளவர்‌ ஒருவருக்கொருவர்‌ பார்த்து புருவத்தை மேலே ஏற்றிச்‌ சிரிக்கிறார்கள்‌. நானும்‌ அசந்து போனேன்‌! அவள்‌ மீசைக்கார நாயக்கரைத்‌ தொடுப்பாக வைத்துக்கொண்டிருப்பது இவன்‌ எப்படி அறிந்தான்‌? ‘ஊருக்குள்‌ நடப்பது ஊமைக்குத்‌ தெரியும்‌’ என்பது சொலவடை.

ஆனால்‌ சுப்பி விடுவதாக இல்லை. அவள்‌, ‘நிறையக்‌ குளிச்சாக்‌ கூதல்‌ இல்லை’ என்பதைச்‌ சேர்ந்தவள்‌. ‘எனக்கு ரெண்டு காணாது: மூணு வேணும்‌ எனக்கு’ என்று சொல்லுகிறாள்‌. ஆர்ப்பாட்டத்துக்குக்‌
கேக்கணுமா. ஒருத்தி மற்றவளின்‌ முதுகில்‌ ‘படார்‌ படார்‌’ என்று அடித்துக்கொண்டே சிரித்தாள்‌; அடி வாங்கியவள்‌ அடித்தவளின்‌ புஜத்தைப்பற்றி அவளைக்‌ கீழே தள்ளிவிட்டுச்‌ சிரித்தாள்‌.

அங்குவைக்‌ கோபமும்‌ அவமானமும்‌ பிடுங்கியது. அந்தக்‌ கூட்டத்தில்‌ மூத்த, வயதான பெண்கள்‌ இருக்கிறார்களா என்று கண்களால்‌ தேடுகிறான்‌; அவர்களிடம்‌ இந்தக்‌ ‘கொடுமை’யைப்‌ பற்றி ஆவலாதி
சொல்லவேண்டும்‌ என்று. ஆனால்‌ அப்படிப்‌ பட்டவர்கள்‌ யாரும்‌ அங்கே இல்லை. அவன்‌ மாடி இருக்கும்‌ திசையில்‌ மேலே பார்த்து ‘ஹாமா’ ‘ஹாமா’ என்று கூவுகிறான்‌.

தற்செயலாய்‌ அப்பாவின்‌ ‘நிழல்‌’ அந்தப்பக்கம்‌ தெரிந்தது. பூவரசு மரத்தில்‌ அந்திநேரத்தில்‌ கூடும்‌ ஊர்க்குருவிகளின்‌ கெச்சட்டம்‌, ஒரு கைதட்டால்‌ அடங்குவதுபோல அடங்கிவிட்டது. சுப்பியை அங்கு கோமாகப்‌ பார்த்து அவள்‌ மாருக்கு நேராக ஒரு விரலை நீட்டி இளநியைப்போல கைகளைக்‌ குவித்துக்காட்டி, பன்னறுவாளால்‌ கறகறவென்று அறுக்கவேண்டும்‌ என்று ஒரு கையின்மீது மற்றொரு கையை வைத்துக்‌ கடுமையாக அறுத்துக்‌ காட்டிவிட்டு ஒரே தாவில்‌ வெளியே பாய்ந்து ஓட்டம்‌ பிடித்தான்‌.

ஊரிலிருந்து எங்கள்‌ மாமனார்‌ வந்திருந்தார்‌. அவர்‌ வந்துவிட்டால்‌ அங்குப்பிள்ளை எங்கேயும்‌ பிதுங்கமாட்டான்‌. சாப்பிடுகிற நேரம்‌ தவிர சதா எங்கள்‌ வீட்டில்தான்‌ கிடப்பான்‌. சாப்பிட்டாச்சா? என்று கேட்டால்‌, தன்‌ கையை நம்‌ மூக்குக்கு அருகே கொண்டுவந்து வாசம்‌ காட்டுவான்‌.

அப்படிக்‌ காட்டும்போதெல்லாம்‌ ரசத்தின்‌ வாசனை ஜம்மென்று அடிக்கும்‌.

அங்குவுக்கு மோரின்‌ மணம்‌ பிடிக்காது. கடுங்காப்பிதான்‌ சாப்பிடுவான்‌. பிரிவு தெரியாததற்கு முன்னால்‌ தாய்ப்பால்‌ சாப்பிட்டிருப்பானோ என்னவோ !

விசேஷ நாட்களில்கூடச்‌ சாப்பிட மறுத்துவிடுவான்‌. அப்பா சொன்னால்‌ மட்டும்‌ ஒரு மடக்கு கடுங்காப்பி குடிப்பான்‌.

எங்கள்‌ தொழுவுக்கு முன்னுள்ள வேப்பமரத்தடியில்‌ மாமா ஈஸிசேரில்‌ சாய்ந்துகொண்டிருந்தார்‌. அது கோடைக்காலம்‌. தரையெல்லாம்‌ வேப்பம்பூக்கள்‌ உதிர்ந்திருந்தன. கோழிகளுக்கு அம்மா
இரைபோட்டுக்கொண்டிருந்தாள்‌. அண்ணா மாடுகளில்‌ பால்‌ கறந்துகொண்டிருந்தான்‌.

அங்கு ரொம்ப பவ்யமாக மாமாவின்‌ பக்கத்தில்‌ நின்று கொண்டிருந்தான்‌.

அப்படி அவன்‌ நிற்கும்போதெல்லாம்‌ தொடைகளுக்குள்‌ வேட்டியை அமுக்கி அமுக்கிச்‌ சொருகிக்கொள்வான்‌. அது மரியாதைக்கு அடையாளம்‌.

மாமா ஈஸிசேரில்‌ படுத்துக்‌ கைகளைத்‌ தலைக்குமேலே வைத்துக்கொண்டு கால்களை வேகமாக ஆட்டிக்கொண்டே அங்குவைக்‌ குறும்புக்‌ கண்களால்‌ பார்த்துக்கொண்டிருந்தார்‌.

பெண்கள்‌ ஜன்னல்‌ வழியாக “மாமாவிடம்‌, அதைக்‌ கேளுங்கள்‌ அதைக்‌ கேளுங்கள்‌; என்று தூண்டிக்கொண்டிருந்தனர்‌.

என்னத்தைக்‌ கேட்க? ஆயிரம்‌ தடவை கேட்ட பழைய கேள்விதான்‌. மாமா மட்டும்‌ அதை ஒரு நூறுதரமாவது அங்குவிடம்‌ கேட்டிருப்பார்‌.

அக்கா ஜடையைப்‌ பின்னிக்கொண்டே அது சரியாக விழுந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே ஜன்னல்‌ அருகே வந்து ‘அதைக்‌ கேளுங்களேன்‌’ என்று சொன்னபிறகு மாமா கேட்டார்‌ அங்குவிடம்‌.

‘கல்யாணம்‌ எப்போ உனக்கு?’

அங்குவுக்கு முதலில்‌ வெட்கம்‌ வந்தது. அப்புறம்‌ ஒரு சந்தோசம்‌. பிறகு வழக்கம்போல்‌ பதில்‌. முதலில்‌ வடக்கே தொலைவில்‌ கையைக்‌ காண்பிக்கிறான்‌; சாத்தூர்‌. அந்த ஊரில்‌ தனக்குச்‌ சொந்தமுள்ள ‘ஹாமா’ என்று ஒரு மாமனார்‌ இருக்கிறார்‌. அப்புறம்‌ கன்னத்தில்‌ மஞ்சள்‌ பூசகிறதுமாதிரிக்‌ காட்டி, விரல்களைக்‌ குவித்து மார்பில்‌ ஒட்ட வைத்து முகத்தில்‌ நாணத்தைக்‌ காட்டி, அந்தப்‌ பெண்ணைத்தான்‌ நான்‌ கட்டிக்கொள்ளவேண்டும்‌ என்று சொல்கிறான்‌. ஜன்னலுக்கு அந்தண்டை நிற்கும்‌ பெண்டுகள்‌ ஒருவரை மற்றவர்‌ முழங்கையால்‌ இடித்துப்‌ புன்னகைகிறார்கள்‌.

‘கல்யாணம்‌ செய்தா எப்படிப்‌ பெண்டாட்டி பிள்ளைகளுக்குச்‌ சாப்பாடு போடுவே?’ மாமனார்‌ ஜாடையால்‌ தொடர்கிறார்‌.

‘நான்‌ மாவு ஆட்டிக்கொடுப்பேன்‌. அவள்‌ தோசை சுட்டுக்‌ கொடுப்பாள்‌. நான்‌ பெட்டியில்‌ எடுத்துக்கொண்டுபோய்‌ விற்று துட்டு சம்பாதித்துக்கொண்டு வந்து அவளிடம்‌ கொடுப்பேன்‌.

‘ஊமையனாக இருந்தாலும்‌ எவ்வளவு வினயம்‌ இருக்கிறது’ என்று மாமா வியக்கிறார்‌.

புஸ்தகம்‌ பிரித்துவைத்துக்கொள்வதுமாதிரிக்‌ காட்டி அதில்‌ எழுதுவதுபோல்‌ செய்து, நீ கிராம முன்சீப்‌ வேலை பார்க்கலையா?’ என்று கேட்கிறார்‌. ‘இல்லை, தம்பி நல்லாப்‌ படிக்கிறான்‌’ என்று பரம திருப்தியோடு சொல்லுகிறான்‌ அங்கு. தான்‌ ஊமையாக இருப்பதால்‌ அந்த வேலை பார்க்கமுடியாது என்று தெரிந்தே வைத்திருக்கிறான்‌.

அங்கு எவ்வனவுக்கு சாதுவோ அவ்வளவுக்கு மூர்க்க மானவன்‌. அவனை ஊமையாக இருக்கிறாயே நீ என்று கேலி செய்யக்கூடாது. மூக்கைச்‌ சொறிந்து காட்டினால்‌ இப்படி அர்த்தம்‌. ஒருதடவை தலையாரித்‌ தேவரின்‌ மகன்‌ தெரியாத்தனமாய்‌ அங்குப்பிள்ளைக்கு எதிரில்‌ மூக்கைச்‌ சொறிந்து காண்பித்துவிட்டான்‌. அவ்வளவுதான்‌. விறகுக்‌ கம்பால்‌ ஒரே போடு.

பையன்‌ பிழைத்தது மறு பிழைப்பு. அதிலிருந்து யாரும்‌ மறந்தும்‌ மூக்கை அவன்‌ எதிரில்‌ – ஊறல்‌ எடுத்தாலும்கூட ! – சொறிந்துகொள்ள மாட்டார்கள்‌.

‘வடக்கே இப்படி ஓர்‌ ஊரில்‌ தனக்கு வாக்கப்பட ஒரு பொண்‌ இருக்கிறாள்‌’ என்ற விபரம்‌ அங்குப்பிள்ளையின்‌ தம்பி கல்யாணம்‌ வரைக்கும்‌ நாங்கள்‌ உண்மை என்றே முச்சூடும்‌ நம்பி இருந்தோம்‌ அங்குப்பிள்ளையைப்‌ போலவே.

தம்பி ஆதிலிங்கம்‌ பிள்ளையின்‌ கலியாணத்தின்போதுதான்‌ அது இல்லை என்று தெரியவந்தது. அங்குவின்‌ சிறிய வயசில்‌ அவனுடைய தகப்பனார்‌ கற்பனையாக அவனுக்கு வேடிக்கைக்காகச்‌ சொன்னது அது! அதை அவன்‌ உண்மை என்றே மனதார நம்பிவிட்டான்‌.

ஆதிலிங்கத்துக்குக்‌ கலியாணம்‌ என்றபோது தனக்கும்‌ சேர்த்தே கலியாணம்‌ என்று நம்பி இருந்தான்‌ அங்கு.

கல்யாண ஏற்பாடுகள்‌ நடந்துகொண்டிருந்தபோது எங்கள்‌ அப்பாவிடம்‌ வந்து அங்கு தனக்குக்‌ கலியாணம்‌ என்று பெருமையோடு சொன்னான்‌. நாங்கள்‌ எல்லோரும்‌ அது நிஜம்‌ என்றே நினைத்தோம்‌. (ஆனால்‌ பொதுவாக ஊமைகள்‌ யாருக்கும்‌ அநேகமாகக்‌ கல்யாணம்‌ ஆவது இல்லை.)

அப்பா அம்மாவிடம்‌ பெரிய கிராம முன்சீப்‌ பிள்ளையை ரொம்ப சிலாகித்துப்‌ பேசினார்‌. ‘பிராயம்‌ அடைந்தபிறகு ஆண்‌ ஆனாலும்‌ பெண்ணானாலும்‌ கலியாணம்‌ ஆகாமல்‌ இறந்து போவது இந்த உலகத்தில்‌ பெரிய பாவம்‌’ என்று சொன்னார்‌. ஆணுக்கும்‌ கன்னி கழிந்த பிறகே மரணம்‌ சம்பவிக்கவேண்டும்‌ என்று சொன்னார்‌. அப்பா இப்படிப்‌ பேசியது அம்மாவுக்குப்‌ பிடிக்கவில்லை. அவர்‌ விஷயத்தின்‌ முற்பகுதி
அவளுக்கு உடன்பாடுதான்‌. ஆனால்‌ அச்சானியமாகச்‌ சாவு அது இது என்று அவர்‌ சொல்லியிருக்க வேண்டாம்‌. ஆனால்‌ அம்மா முகத்தைத்‌ தொங்கப்‌ போட்டுக்கொண்டிருந்தது, இதுக்காக இல்லை என்று
யூகித்தேன்‌. ஒருவேளை அங்குவைக்‌ கல்யாணம்‌ செய்யப்போகும்‌ பொண்ணுக்குப்‌ பரிதாபப்பட்டு அப்படி இருந்திருக்கலாம்‌. ஆனால்‌ அம்மா அடிக்கடி சொல்லுவாள்‌ அப்பாவுக்குக்‌ கறுநாக்கு என்று. அது சரியாகிவிட்டது.

கிராம முன்சீப்‌ பெரியபிள்ளை, கல்யாண சம்மந்தமான ஏதோ ஒரு விஷயமாக அவசரமாக அப்பாவைப்‌ பார்க்க வந்திருந்தார்‌. அப்போது பெரிய பிள்ளையை அப்பா பாராட்டினார்‌. அதைக்‌ கேட்ட பிள்ளைவாள்‌ முகத்தில்‌ ஒரு கலவரம்‌ பரவிப்‌ பிறகு அது சிரிப்பாக வந்தது. ‘அந்தக்‌ கோட்டிச்‌ சுடுகாட்டுக்கு அது ஒண்ணுதான்‌ குறைச்சல்‌’ என்று சொல்லிவிட்டுப்‌ போய்விட்டார்‌. கல்யாணவீட்டு வாசலில்‌ ஒரு பெட்டி வண்டி வந்து நின்றது. அதிலிருந்து ஒரு பொண்தான்‌ இறங்கியது; இரண்டு இல்லை.

அங்கு அவனுடைய தகப்பனாரிடம்போய்‌ ‘என்ன விஷயம்‌ ஒரு பொண்‌ வந்திருக்கிறதே’ என்று விசாரித்தான்‌.

‘போடா உள்ளே, மூச்சுக்காட்டினால்‌ அறைஞ்சு தள்ளிடுவேன்‌’ என்று கையை ஓங்கினார்‌.

அங்கு அம்மாவிடம்‌ போய்‌ விசாரித்துத்‌ தெரிந்துகொண்டான்‌. தனக்குக்‌ கல்யாணம்‌ இல்லை; தம்பிக்கு மட்டும்தான்‌ என்று, ‘வடக்கே ஊரிலிருக்கும்‌ மாமாவின்‌ பொண்‌ என்னாச்சு’ என்று கோபமாய்க்‌ கேட்டான்‌.

அப்போதுதான்‌ அந்தத்‌ தாய்‌ திடுக்கிட்டாள்‌. அவளுக்கு ஒருபக்கம்‌ துக்கம்‌ பொங்கி வந்தது. குடும்பத்தோடு சேர்ந்து செய்த தப்பிதங்களுக்காகப்‌ பச்சாதாபப்பட்டாள்‌.

அங்கு அந்தக்‌ குடும்பத்தில்‌ பிறந்த பாவம்‌ ஒன்றுதான்‌. அவன்‌ ஊமை என்று தெரிந்த நாளிலிருந்து வெளியூருக்குக்கூட அவனைக்‌ கூட்டிக்கொண்டு போகமாட்டார்கள்‌. அவன்‌ சாப்பிட்டான்‌! ஊருக்குச்‌ சொன்னபடி கேட்டான்‌. தேருக்கும்‌, திருவிழாவுக்கும்‌, நடந்து போயே திரும்பி வந்துவிடுகிற வெளியூர்களுக்கெல்லாம்‌ மற்ற குடும்பத்தாரோடேயேதான்‌ போய்வந்தான்‌.

எவ்வளவுக்கெவ்வளவு அவனுடைய குடும்பத்தார்‌ அவனை அலட்சியப்படுத்தினார்களோ, தள்ளிவைத்தார்களோ அவ்வளவுக்கு அவன்‌ தன்‌ குடும்பத்தாரை நேசித்தான்‌, போற்றினான்‌, விசுவாசமாக இருந்தான்‌.

அங்கு அழுதுகொண்டே எங்கள்‌ அப்பாவிடம்‌ ஓடி வந்தான்‌. இதற்கு முன்னால்‌ ஊமைகள்‌ அழுது நான்‌ பார்த்ததில்லை. அவன்‌ தொண்டையிலிருந்து சப்தமே வெளிவரவில்லை. வெறும்‌ காற்றுதான்‌
வந்துகொண்டிருந்தது; சிலசமயம்‌ ஒரு கோரமான ஒலி வெளிவந்தது. ஆவென்று வாயைத்திறந்துகொண்டு கண்களை இறுக்க மூடிக்கொண்டே அழுதான்‌. அவனைச்‌ சுற்றி ஒரு வேடிக்கை பார்க்கும்‌ கூட்டம்‌. அது எங்கள்‌ அப்பாவுக்கு பயந்து கொண்டு தெருவோடு நின்றுகொண்டது. எங்கள்‌ அம்மாவைப்‌ பார்த்ததும்‌ அங்குவின்‌ அழுகை அதிகமாயிற்று.

அப்பாவுக்கு என்ன செய்கிறதென்று தெரியவில்லை. அவர்‌ அம்மாவைப்‌ பரிதாபத்தோடு பார்த்தார்‌. அம்மா முந்தானையால்‌ தன்‌ கண்களைத்‌ துடைத்துக்கொண்டாள்‌. அப்பா அங்குவிடம்‌ ஜாடை செய்து ‘அழாதே; அழாதே’ என்றார்‌.

நீ அங்கே போகவேண்டாம்‌. அவர்கள்‌ சுத்த மோசம்‌ இங்கேயே என்‌ வீட்டில்‌ இரு’ என்று சொன்னார்‌.

‘உனக்குக்‌ கலியாணம்‌ நான்‌ செஞ்சிவைக்கிறேன்‌; வருத்தப்‌ படாதே. அழாதே, கோட்டிப்பிள்ளை, இதுக்கு ஏன்‌ அப்படி அழுறே?’ என்றெல்லாம்‌ சொன்னார்‌.

ஆதரவோடு அவனுடைய புஜத்தைத்‌ தடவிக்கொடுத்த எங்கள்‌ அப்பாவின்‌ கையை அவன்‌ அலட்சியமாகத்‌ தள்ளினான்‌. ‘என்னைத்‌ தொடாதே, என்கிறமாதிரிப்‌ பார்த்தான்‌. ‘நீயும்‌ எங்க அப்பாவோடு சேர்ந்தவன்தான்‌, தெரியும்‌ எனக்கு’ என்று சொல்லுகிறது போலிருந்தது.

அழுதுகொண்டேயிருந்தவன்‌ அவனாகவே சட்டென்று அழுகையைப்‌ பாதியிலேயே நிறுத்திவிட்டு முகத்தைத்‌ துடைத்துக்‌ கொண்டு எங்கள்‌ யாரிடமும்‌ சொல்லாமல்‌, யாரையுமே பார்க்காமல்‌ ‘விறு விறு’ என்று புறப்பட்டுவிட்டான்‌.

அப்பா என்னைப்‌ பார்த்துத்‌ தலை அசைத்து அவர்‌ அருகே கூப்பிட்டார்‌. ‘அவன்‌ கூடவே போ; அவனைத்‌ தனியே விட்டுராதே’ என்று வேகமாகவும்‌ மெதுவாகவும்‌ சொன்னார்‌.

அங்கு ஒரேசீராய்‌ நடந்து போய்க்கொண்டிருந்தான்‌. தரையில்‌ அவன்‌ எடுத்து வைத்த காலடி வழக்கமாக இல்லாமல்‌, பதித்து நடந்த மாதிரி இருந்தது.

அவர்கள்‌ வீட்டுக்குள்‌ நுழைந்ததும்‌ அங்கு ஒரு பெரிய தடியான விறகுக்கட்டையை எடுத்துக்கொண்டு சமையல்ப்‌ பிறை சட்டி பானைகளையெல்லாம்‌ அடித்து நொறுக்க ஆரம்பித்தான்‌. பெண்டுகள்‌
பயந்து கூப்பாடு போட்டுக்கொண்டு வெளியே ஓடினார்கள்‌.

அங்குவின்‌ தகப்பனார்‌ பெரிய பிள்ளை ஓடிவந்தார்‌. ‘கிட்டே வந்தாயோ ஒரே போடுதான்‌’ என்று அவரிடம்‌ விறகுக்கட்டையைக்‌ காண்பித்தான்‌ அவன்‌.

நான்‌ போய்‌ அவனைப்‌ பிடித்தேன்‌. ஒரே தள்ளு, தூரப்‌ போய்‌ விழுந்தேன்‌, ‘அடே பாவி; எவ்வளவு பலம்‌ இருக்கிறது இவன்‌ உடம்பில்‌ !’

கல்யாண வீடு கலக வீடாகிவிட்டது ஒரு நிமிட்டில்‌. கிராமத்து இளவட்டங்களில்‌ சிலபேர்‌ வந்து அங்குவை லாவகமாகப்‌ பிடித்து தூக்கிக்கொண்டு வந்தார்கள்‌. அவன்‌ கையிலுள்ள விறகுக்கட்டையைத்‌
திறுக்கிப்‌ பிடுங்கக்‌ கொஞ்சம்‌ சிரமப்பட்டார்கள்‌. அப்படியே அவனை ஒரு அறைக்குள்‌ தள்ளிக்‌ கதவைப்‌ பூட்டிவிட்டார்கள்‌.

கல்யாணம்‌ சுபமாக முடிந்தது. முகூர்த்தத்துக்கு வந்திருந்த அப்பாவிடம்‌ தனியாக நான்‌ நடந்த இதையெல்லாம்‌ சொன்னேன்‌. அப்பா திடுக்கிட்டுப்போனார்‌. ‘இப்போ அவன்‌ எங்கே? என்று அவசரமாய்க்‌
கேட்டார்‌. ரூமுக்குள்‌ அடைப்பட்டிருப்பதைக்‌ காட்டினேன்‌. அப்பாவின்‌ முகம்‌ வாடிவிட்டது. பெரிய பிள்ளையைக்‌ கூப்பிட்டுக்‌ கதவைத்‌ திறக்கச்‌ சொன்னார்‌. அங்கு அலங்கோலமாகத்‌ தரையில்‌ விழுந்துகிடந்தான்‌. அவன்‌ இறந்து போய்விட்டானா, மயங்கிக்கிடக்கிறானா என்று தெரியவில்லை. வேட்டி பூராவும்‌ முன்பக்கத்தில்‌ ரத்தத்தால்‌ நனைந்து இருந்தது. உடம்பில்‌ எங்கும்‌ காயம்‌ தட்டுப்படவில்லை எங்களுக்கு.

கொஞ்சம்‌ விலகியிருந்த நனைந்த வேட்டியை நீக்கிப்‌ பார்த்தபோது தான்‌ தெரிந்தது. ஏதோ ஒரு கழிப்பட்ட இரும்புத்‌ தகட்டினால்‌ அங்கு தன்னுடைய “உயிர்த்‌ தலத்‌’தை அறுத்து விட்டான்‌.

‘பாவீ, கெடுத்திட்டியேடா காரியத்தை’ என்று பதறினார்‌ அப்பா.

அவர்‌ அப்படிச்‌ சொன்னது அங்குவைப்‌ பார்த்தா, பெரிய பிள்ளையைப்‌ பார்த்தா?

பெரியபிள்ளையைப்‌ பார்த்துச்‌ சொன்னதாகத்தான்‌ பட்டது எனக்கு.

– அக்‌-ஜூன்‌, 1972

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *