சோறு போடும் சாமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2024
பார்வையிட்டோர்: 476 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

இராமன், பண்ணையார் வீட்டுத் தோட்டக்காரன். அவனைப் போல இன்னும் ஐந்து பேர் தோட்டத்தில் வேலை பார்க்கிறார்கள். சம்பளம் நான்கு ரூபாய். அவனுடைய மனைவி செல்லம்மாள் யாரோ ஒரு பெரிய மனிதர் வீட்டில் மேல் வேலைகளைப் பார்த்து வருகிறாள். அவளுக்கு மாதம் இரண்டு ரூபாய் கொடுக்கிறார்கள். இவர்களிருவருக்கும் அருமையாகப் பிறந்த பையன் வேலையா; அவனுக்கு வயது நான்காகிறது. இந்தக் குடும்பத்தின் மொத்த வரும்படி ஆறு ரூபாய். அவர்களுடைய வாழ்க்கை எப்படிக் கழியுமென்று பார்த்துக்கொள்ளுங்கள். 

செல்லம்மாள் தெய்வ பக்தி மிகுதியாக உடையவள். நாள்தோறும் விளக்கேற்றி வைத்து வணங்குவாள். ‘என்றைக்காவது சீதேவி கண்ணைத் திறந்து பார்க்கமாட்டாளா’ என்று அவள் அடிக்கடி சொல்லிக்கொள்வாள். அவளுடைய ஆசையெல்லாம் அருமையான பிள்ளை வேலையன் துன்பமில்லாமல் வளர்ந்து படித்துவிட வேண்டும். படித்துவிட்டால் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவான். பிறகு கவலை ஏது..? 

தினமும் தன் தாய் விளக்கைக் கும்பிடு கிறது எதற்காக என்று வேலையனுக்குத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆவல். வெளிச்சங் கொடுக்கிற விளக்கைக் கும்பிடுவதன் அர்த்தமே அவனுக்கு விளங்கவில்லை போலும்! 

“ஏம்மா, தினமும் விளக்கைக் கும்பிட வேணும்? பெரியவங்களைக் கும்பிட்டா ‘நல்லாயிருக்கணும்’ என்றாவது சொல்வாங்க. விளக்கைப் போயி யாராவது கும்பிடுவாங்களோ?” 

“அடே வேலையா, அப்படியெல்லாம் சொல்லாதேடா கண்ணு. அது வெறும் விளக்குன்னா நெனச்சிக்கிட்டிருக்கே! சாமிடா! இப்படியெல்லாம் சொன்னால் கோவிச்சுக்குண்டா!” 

“கோவிச்சுக்கிடுமா? விளக்கா கோவிச்சுக்கிடும் ?…”

“வெளக்கில்லைடா, அது சாமிடா, சாமி. நாமெல்லாம் தினந்தினம் கும்பிட்டமிண்ணா நமக்கு வேண்டிய தெல்லாம் கிடைக்கும். அதுக்குத்தாண்டா நான் தினந் தினம் விளக்கு லச்சுமியைக் கும்பிடுகிறேன்.” 

“ஆமா, நமக்கு வேணுமிங்கிற தெல்லாம் குடுக்கு மிண்ணயே. இந்தச் சாமி நமக்கென்ன குடுத்திருக்கும்மா?” 

“நமக்குக் கிடைக்கிறதெல்லாம் சாமி கொடுத்ததுதாண்டா, கண்ணு. சாமியில்லை யிண்ணா சாப்பாடு கிடைக்குமா? நம்ம சாப்பிடுற கஞ்சி யெல்லாம் இந்த லச்சுமி யாத்தா கொடுத்ததுதானே?” 

“ஆமாம்மா, இந்தச் சாமி நமக்குக் கஞ்சி கொடுத்தா, பெரிய வீட்டிலே எந்தச் சாமியம்மா சோறு கொடுக்குது? நாம்கூட அந்தச் சாமியைக் கும்பிட்டா நல்லதில்லையா’ம்மா? அவங்க வீட்டிலே யெல்லாம் மேலேருந்து தொங்குற வெளக்கைத்தாம்மா பார்க்கிறோம். அதைத்தான் கும்பிடுவாங்க போலிருக்கு ! பள பளண்ணு வெள்ளையா இருக்கும்மா-கண்ணாடி யாம் அவ்வளவும் அப்பாகிட்டச் சொல்லி அது மாதிரி வெளக்கு நம்ம வீட்டிலேயும் வாங்கி வைச்சுட்டா அந்தச் சாமியைக் கும்பிடலாமேயம்மா. அப்புறம் தினம் சோறு சாப்பிடலாமில்ல ….”

“சரிடா கண்ணு, அப்பா வர நேரமாச்சு. கொஞ்சம் படுத்திரு. நான் போயிக் கஞ்சி காய்ச்சிவிட்டுக் கூப்பிடுறேன். சாப்பிடலாம்….” 

குழந்தை வேலையன் மனம் என்னென்ன எண்ணங்களை யெல்லாமோ எண்ணியது. கஞ்சி கொடுக்கிற சாமி, சோறு கொடுக்கிற சாமி, காப்பி கொடுக்கிற சாமி……. இப்படி எத்தனையோ சாமிகளை அவன் மனம் படைத்து விட்டது. சாமியைப் பற்றி அந்தக் குழந்தை மனத்தில் பதிந்துவிட்ட எண்ணம் பலவிதக் கற்பனைகளை உண்டாக்கிவிட்டது. எத்தனையோ பல புதுக் கேள்விகளும் எழுந்தன. ஏன் ஒரே சாமியாக இருக்கக்கூடாது? எல்லாச் சாமியும் ஒன்றாக இருந்தால் எல்லோரும் ஒரே மாதிரியாகச் சாப்பிடலாமல்லவா? அன்றைக் கொருநாள் பண்ணையார் வீட்டுப் பையன் என்னென்னமோ தின்பண்டங்களைத் தின்றானே……..அந்தத் தின்பண்டங்களைக் கொடுக்கிற சாமி எது? 

அதை ஏன் தானும் கும்பிடக் கூடாது?….இப்படியாக எத்தனையோ கேள்விகள். 

செல்லம்மாளால் குழந்தையின் கேள்வி களுக்கு விடை சொல்லி முடியவில்லை. வேலையிலிருந்து வீட்டுக்கு வந்த இராமனையும் வேலையன் விடவில்லை. இராமனுக்கு இந்த மாதிரியான புதுச்சாமிகளைப்பற்றிக் கேட்பதே புதிதாக இருந்தது. என்னவென்று அவனுக்குப் புரியவில்லை. 

“என்னடா கண்ணு, கஞ்சிச் சாமி, காப்பிச் சாமி…… இப்படி யெல்லாம் யாருடா சொன்னது?”

“அம்மாதானே சொன்னாங்க. வௌக்கை ஏன் கும்பிடணுமிண்ணு கேட்டேன். அந்த வெளக்குத்தான் நமக்குக் கஞ்சி ஊத்துற சாமிண்ணு சொன்னாங்க. நம்ம வீட்டிலே கஞ்சிண்ணா, பெரிய வீட்டிலே சோறுதானே’ப்பா சாப்பிடுறாங்க? அப்படிண்ணா அவங்க சாமி சோறு போடு’ற சாமி தானப்பா?” 

“அடடே, அப்படியா செய்தி……. சரிதான். அப்படியில்லைடா கண்ணு. ஒரே சாமிதாண்டா எல்லாருக்குமா இருக்காரு. அவரு இல்லேண்ணா எங்கேயும் வயித்துக் கில்லாமல் திண்டாட வேண்டியதுதான்..” 

“என்ன’ப்பாநீ கூடப் பொய் சொல்றே? ….ஒரு சாமிதான் இருக்குண்ணா எல்லாருக்கும் சோறு போடாதா’ப்பா? எனக்குச் சோறு தான் சாப்பிட ஆசையாயிருக்கு. பெரிய வீட்டிலேமட்டும் சோறு ; நம்ம வீட்டிலே கஞ்சி…. ….அப்படிண்ணா எப்படி ஒரு சாமிதான் இருக்கும்?” 

இராமனுக்கு என்ன வகையாகக் குழந்தைக்குப் பதில் சொல்வதென்று தெரியவில்லை. உலக நடப்புகளெல்லாம் குழந்தைக்குத் தெரியுமா ? உழைத்து வந்த அவனுக்கு வேலைய னுடைய அறிவைக் கண்டு மகிழ முடிந்ததே தவிர, விடை கூறிச் சமாதானப் படுத்துவ தென்பது முடியாத காரிய மாகிவிட்டது. ஆனாலும் என்னென்னவோ சொல்லிப் பார்த்தான். ஒன்றும் முடியாமல் கடைசியாக வேலையனைப் பார்த்து, “சரி’டா, கண்ணு, உனக்கு. இப்ப என்ன வேணுங்கிறே….? அப்பாவுக்குத் தூக்கம் வந்திருச்சு….” 

“என்ன’ப்பா, நீ எப்படியானாப் போ. நாளைக்கு வர போது சோறு போடுற சாமியை வாங்கிக்கிட்டு வா. கஞ்சி ஊத்துற சாமி நமக்கு. வேண்டவே வேண்டாம்… “

நாளைக்கு படும் பாடு அப்புற மிருக்கட்டு மென்று இராமன் ‘சரி’ என்று சொல்லி வைத்தான். வேலையன் இரவெல்லாம் சோற்றுச் சாமிக் கனவையே கண்டுகொண்டிருந்தான். கூரை வீட்டின் நடுவில் கம்பி வழியாகத் தொங்குகிற மின்சார விளக்குகள் எத்தனையோ அவன் கனவுகளில் வந்தன. அவைதாம் அவனுக்குச் சோறு போடுகிற சாமிகள்!

– இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *