சொல்லியிருந்தால் சாவு வந்திருக்காதா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2019
பார்வையிட்டோர்: 7,529 
 
 

தனது வீட்டின் படுக்கையறையில் கட்டிலில் சுகந்தி கால்களை விறைத்து நீட்டியபடி மல்லாந்து படுத்து முகட்டு வளையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அண்மைக்காலமாக அவள் வாழ்வில் என்னவெல்லாமோ நிகழ்ந்துவிட்டன. அவளது அன்புக் கணவன் ஆனந்தன் அப்படியொரு பாறாங்கல்லைத் தூக்கித் தன் தலையில் போடுவான் என்று ஒருபோதும் கனவு கண்டிருக்கவில்லை.

கொஞ்சக் காலமாகவே அவள் அனுபவித்துவரும் அந்தப் பெருந்துன்பத்தை அவள் யாருக்கும் தெரியாமல் மறைத்துக் கொண்டிருந்தாள். குறிப்பாக, அந்த விடயம் தன் கணவனுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் அவள் கண்ணும் கருத்துமாக இருந்தாள். ஆனால், அது இப்போது இரட்டிப்புத் துன்பமாக வந்து விசுவரூபம் எடுத்துவிட்டது என்பதை நினைக்கும்போது அவளால் தாங்கிக்கொள்ள முடியாத வேதனையாக இருந்தது.

ஆனந்தனும், சுகந்தியும் திருமண வாழ்வில் இணைந்து ஒரு தசாப்தம் பூர்த்தியாகிவிட்டது. இந்த பத்து வருட காலத்தில் அவர்களின் வாழ்வு சுமுகமாகவும், அமைதிக் கடலாகவுமே இருந்து வந்தது. அவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகனும் இருந்தான். ஆனந்தன் தனியார் கம்பனியொன்றில் உயர் பதவி வகித்து வந்தான். அவளைப் பொறுத்தவரையில் ஆனந்தன் சற்று முன்பு வரையில் நல்ல கணவனாகவே இருந்து வந்தான். ஆனால், சில காலமாக அவர்களுக்கிடையில் சில மனக்கசப்புகள் தோன்றியவண்ணம் இருந்தன. அவை அவளால் வேண்டுமென்று ஏற்படுத்திக் கொண்டவைகள் அல்ல. அவை அவளது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவைகளாக இருந்தன.

அன்றொரு நாள் சுகந்தி தனது காலை வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு மிகக் களைப்புடன் தலை நிமிர்ந்தபோது தலை இலேசாக சுற்றுவது போலவும், கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போலவும் உணர்ந்தாள். மகனை பாடசாலைக்கு அனுப்பியாகிவிட்டது. கணவனும் வேலைக்குப் புறப்பட்டுப் போய்விட்டான். சுகந்தி ஒருவிதமான தனிமையையும் சூனிய உணர்வையும் உணர்ந்தாள். அவள் முகம், கை, கால்களை கழுவிக்கொண்டு சற்றே கட்டிலில் சாய்ந்திருக்கலாம் எனக் கருதி கட்டிலில் சென்றமர்ந்தாள். அந்தத் தலைவலி ஆரம்பித்தது. அதிகரித்து தலை விண், விண் என தெறிக்க ஆரம்பித்தது.

அவளது வீட்டுக்குச் சமீபமாகத்தான் கொழும்பின் அந்தப் பெயர் பெற்ற வைத்தியசாலையின் கிளை மருத்துவ நிலையம் இருந்தது. அங்கு போய்விட்டு வந்தால் என்னவென்று நினைத்தாள். அந்த மருத்துவ நிலையமும் அங்கிருந்த மருத்துவர்களும் அவளுக்கு பரிச்சயமானவர்கள்தான். மருத்துவர் அவளைப் பரிசோதித்துவிட்டு வலி நிவாரணிகளை வழங்குவதாகவும் சில மருத்துவ பரிசோதனைகளைச் செய்தபின் தான் என்ன பிரச்சினை என்று தீர்மானிக்க வேண்டும் என்று கூறி இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளைப் பெற்றுக்கொண்டார். தலையையும் ஸ்கேன் பரீட்சைக்கு உட்படுத்தினார். பின் அடுத்த நாள் வரும்படி கூறி அனுப்பிவிட்டார். அந்தக் கணத்தில் இருந்தே சுகந்தி யோசனையில் ஆழ்ந்துவிட்டாள். எனினும், அது விடயம் தொடர்பில் ——இப்போதைக்கு கணவனிடம் ஒன்றும் பேச வேண்டாம் எனக் கருதினாள்.

அன்று மாலை அவள் கணவன் வேலையில் இருந்து வந்ததும் ‘‘என்ன முகம் வாடியிருக்கிறது’ என்று கேட்டபோது ‘ஒன்றுமில்லை, கொஞ்சம் களைப்பா இருக்கிறது’ என்று மழுப்பி விட்டாள். அவளது எல்லாக் கவலைகளும் அடுத்த நாள் டொக்டர் என்ன சொல்லப் போகிறார் என்பதிலேயே நிலைகுத்திக் காணப்பட்டது. அடுத்த நாளும் காலையில் எழுந்து வழமையாக தன் வேலைகளைச் செய்தாள். சற்றே தலைக்கிறக்கம் இருந்தபோதும் வலி நிவாரணி குடித்திருந்ததால் தலைவலி இருக்கவில்லை.

அன்றும் அவள் சற்றே பகலானதும் தன் மருத்துவ பரிசோதனை பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள அந்த வைத்தியசாலைக்குச் சென்றாள். அப்போதுதான் அந்த அதிர்ச்சியான தகவலை டொக்டர் அவளிடம் கூறினார். அவளது மூளைப்பகுதியில் கட்டி ஒன்று தோன்றியிருப்பதாகவும் அது புற்றுநோய் கட்டியின் மிக ஆபத்தானது என்றும் கூறினாள். அடுத்து வரும்போது அவளது கணவனை அழைத்து வருமாறும் கூறினார்.

இந்தச் செய்தி சுகந்தியை தலை கீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. அவள் பலமுறை தன் கணவனிடம் இந்தச் செய்தியைச் சொல்ல முற்பட்டபோதும் அவன் துக்கமடைவானே என்று நினைத்து நினைத்து அவள் அதனை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தாள். இதற்கிடையில் அவள் உடல் மெலிந்து பல கிலோக்களால் எடை குறைந்து போனாள். அவளது அழகும் சிரித்த முகமும் எங்கோ ஓடிச்சென்று ஒளிந்துகொண்டு விட்டன. அவளால் கணவனுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லை. கணவனுக்கும் அவளுக்குமிடையில் மனத்தாங்கலும் கசப்பும் ஏற்பட்டது. அப்போதுதான் அவன் மனது அவன் வேலைசெய்யும் நிறுவனத்தில் தொழில் பார்த்த சுலக் ஷனா என்ற பெண் மீது திரும்பியது. சில விடுமுறை தினங்களிலும், சனி, ஞாயிறு, வார இறுதி நாட்களிலும் ஆனந்தன், வீட்டுக்கு வராமல் சுலக் ஷனாவின் வீட்டில் தங்க ஆரம்பித்தான். ஒருநாள் அவர்களது அன்பு மகன் விஜய் ‘எனம்மா அப்பா வீட்டுக்கு வருகிறார் இல்லை’ என்று சோகமாக கேட்டபோதுதான் விளைவு எவ்வளவு பாரதூரமானது என்பதை சுகந்தி உணர்ந்தாள்.

எனினும் நிலைமையை உள்ளது உள்ளபடி தன் கணவனிடம் புட்டுப் போட்டுவிட ஏனோ சுகந்தியால் முடியாமல் இருந்தது. அப்போதுதான் முக்கியமான விடயம் ஒன்றைப் பேச வேண்டும் என்று கூறிக்கொண்டு தனிமையில் இருக்கும் அவளைத் தேடிக்கொண்டு ஆனந்தன் வந்தான். அவனை ஏறிட்டுப் பார்க்கக்கூட அவளுக்கு என்னவோ மாதிரி இருந்தது. அவன் தயங்கித் தயங்கி அந்த விடயத்தை அவளிடம் தெரிவித்தான். அவளிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென தாழ்ந்த குரலில் அவன் கோரிக்கை விடுத்தான். அவனது அந்த வார்த்தைகள் இரும்புக் கம்பியை பழுக்கக் காய்ச்சி காதில் செருகியது போல சடுதியாக பெரும் வலியை அவளுக்குள் ஏற்படுத்தின. அவள் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடுமோ என்று தவித்தாள். அவளிடம் அந்தச் செய்தியைச் சொன்னதும் அவள் எவ்வளவு அதிர்ச்சியடைவாள் என்பது ஆனந்தனுக்குத் தெரியாததல்ல. அவன் அவள் துன்பப்படுவதைப் பார்க்கும் மனநிலையில் இல்லை. அவன் உடனேயே அங்கிருந்து வெளியேறி விட்டான்.

அவள் மிக நீண்ட நேரமாக அந்த முகட்டு வளையையே வெறித்துப் பார்த்தவாறு அழுது கொண்டிருந்தாள். அவளது கணவன் இவ்வளவு விரைவில் மனம் மாறிவிடுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அவளை விரைவிலேயே மரணம் வந்து தழுவிவிடும் என்று அவள் ஏற்கனவே நன்கு தெரிந்துதான் வைத்திருந்தாள். தன் தலையில் ஏற்பட்டிருக்கும் கட்டி சாதாரணமான கட்டியல்ல. அது உயிரைப் பறிக்கும் புற்றுநோய்க் கட்டிதான் என்பதையும் அவள் அறிந்துதான் இருந்தாள். அந்த நோய் குணப்படுத்தக் கூடியதல்ல என்பதும் அதனால் ஏற்படும் மரணம் இயல்பானதாக இருக்கட்டும் என்றும் அவள் மனதைத் தேற்றிக்கொண்டிருந்தாள். அழுது அழுது அவள் கண்கள் வற்றிப் போய்விட்டன.

அவளது தலைவலி இப்போது நான்கு மடங்காகப் பெருகி தலையில் யாரோ சம்மட்டி கொண்டு அடிப்பது போல் இருந்தது. வெளியில் மெதுமெதுவாக இருள் கெளவத் தொடங்கியிருந்தது. குருவிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும்போது ஏற்படுத்தும் மெல்லிய கீச்சுக் குரல்கள் மாத்திரமே கேட்டுக்கொண்டிருந்தன. சுகந்தி அதற்கு மேலும் தலைவலியைத் தாங்க முடியாமல் மருத்துவர் கொடுத்திருந்த தலைவலி மருந்தை ஒன்றுக்கு நான்காக வாயில் போட்டு விழுங்கினாள். அன்றைய இரவு அவளுக்கு இறுதி இரவாக இருக்கும் என்று அப்போது அவளுக்குத் தெரியாது.

அடுத்த நாள் அதிகாலையிலேயே சுலக் ஷனாவின் வீட்டில் இருந்து புறப்பட்ட ஆனந்தன் நேராக தனக்குத் தெரிந்த சட்டத்தரணி ஒருவரின் காரியாலயத்துக்குச் சென்றான். சட்டத்தரணியிடம் தனது விவாகரத்து வழக்குப் பற்றி பேசிவிட்டு தன் மனைவிக்கு தனது சொத்தில் இருந்து என்னவெல்லாம் அவன் கொடுக்கப்போகிறான் என்று விரிவாக ஓர் ஒப்பந்தப் பத்திரத்தையும் தயாரித்துக்கொண்டு அதில் அன்றே சுகந்தியிடம் இருந்து கையெழுத்துப் பெற்றுக்கொள்வதற்காக வீடு நோக்கிச் சென்றான். ஆனால், அவன் வீட்டை அடைந்தபோது அவனுக்கு அந்த விவாகரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுக்கொடுக்க சுகந்தி உயிருடன் இருக்கவில்லை.

இலங்கையின் மூத்த தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் கவிஞருமான இரா.சடகோபன் அவர்கள் நாவல் நகர் என்று சிறப்பாக அழைக்கப்படும் மலையகத்தின் மத்தியில் இருக்கும் சிறு நகரமான நாவலபிட்டியின் அருகில் அமைந்துள்ள மொஸ்வில்ல தோட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர். மொஸ்வில்ல தோட்ட பாடசாலை,நாவலப்பிட்டிய கதிரேஷன் கல்லூரி ஆகியவற்றில் கற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புப்பட்டத்தை பெற்றதோடு இலங்கை சட்டக்கல்லூரிக்கும் பிரவேசித்து சட்டத்தரணியாகி தன் உழைப்பால் உயர்ந்தவர். கவிஞராக,பத்திரிகை ஆசிரியராக,மொழி பெயர்ப்பாளராக,சமூக…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *