(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘அகிலாண்டம்…அகிலாண்டம்!’ என அவசரமாக, அன்பு வழியும் குரலில், கூப்பிட்டுக் கொண்டே நுழைந்தார் சிதம்பரம் பிள்ளை.
அடுப்பங்கரையிலே ‘கர கர’வென்று பாத்திரங்களை அலம்பும் பொழுதே கோர நாதங்களை ஒலி பரப்புவதில் ஈடுபட்டிருந்த அகிலாண்டத்தின் காதுகளில் அவரது அன்பழைப்பு விழ வில்லை. ஒரு பதிலும் வராததைக் கண்ட பிள்ளை, மறுபடியும் கத்தினார், கொஞ்சம் கடுமையான குரலில்.
‘என்னா?’ என்ற பதிலை வீட்டினுள்ளிருந்து எல்லா அறைகளையும் தாண்டி அவர் காதில் வந்து விழுவதற்கும், ‘சவம், கூப்பிட்டா உடனே வந்து தொலையறதில்லை’ என அவர் முணு முணுப்பதற்கும் சரியாக இருந்தது.
அம்மாளும் வழக்கம்போல் ‘இந்தா வந்துட்டேன்’ என்று முன்னறிவிப்புக் கொடுத்து விட்டு வந்து சேர்வதற்குக் கால் மணி நேரம் பிடித்தது. தம் முன்னால் வந்து நின்றவளை முறைப்பாக விழித்தார் பிள்ளை. ‘என்னா கூப்பிட்டேளே? எனக்கு வேலை கிடக்கு’ என்றாள் அகிலாண்டம்.
‘ஹும். உனக்கு எப்பவும் வேலை தான், எப்பவும் அவசரந்தான்?’
‘இந்த வீட்டுக்கு வேலை செஞ்சு சாகணும்னு தான் வந்தாச்சே. பிறகு அழுதா முடியுமா? அதிருக்கட்டும்…இப்ப கூப்பிட்டேளே என்னத்துக்காம்?’ என்று சிடுசிடுப்பாகக் கேட்டாள்.
‘சரிதாங் கேள், ஆரம்பிச்சுடாதே உன் பாட்டை! ஆமா, நீ ஸ்ரீவைகுண்டத்துக்கு சொர்க்க வாசல் பார்க்கப் போகணும் னியே, போறயான்னு கேட்கத்தான் கூப்பிட்டேன்.’
‘அம்மாடி, உங்க மனசு இளகிட்டுதா?’ என்று ஏகத்தாளமாகக் கேட்டாள் அவள்.
‘சரி, சும்மாகிட! நம்ம பெரிய வீட்டு அண்ணாச்சி, மதனி, நடு வீட்டு ஆச்சி, அவ இவ எல்லோரும் போறா! நீயும் வேணும்னா போறியான்னு கேட்டா…’
அவள் அவரை மேலே பேச் விட வில்லை. ‘ஏன், நீங்க வரலையா? நம்ப ரெண்டு பேரும் போனா எடுப்பா இராதோ?’ என்றாள். ‘எள்ளும் கொள்ளும் வெடிக்கும்’. அவள் முகத்திலே ஆனந்தம் துள்ள ஆரம்பித்தது.
‘அதல்லா மில்லே, எனக்கு ஜோலி நிறையக் கிடக்கு’ என இழுத்தார் பிள்ளை.
‘என்ன ஜோலி! என்னைக்குமா போறோம்? ஏதோ வருஷத்திலே ஒரு நாள்…’
‘ஆமாமா? மூந்நூத்தி அனுபத்தஞ்சு நாளிலே ஒவ்வொரு கிழமையும் வருஷத்திலே ஒரு நாள் தான். நீ போறதானாப் போ. இல்லைன்னா வெட்டிக் கதை ஏன்?’ என்றார் பிள்ளை, கண்டிப்பாக.
அவர் குணத்தை அறிந்த அகிலாண்டம் எதற்காக வீண் கதைகள் பேசப் போகிறாள்? ‘சரி, போயிட்டு வாறேன்’ என முனங்கினாள். அக்குரலிலும் மகிழ்வு கலந்து ஓடியது.
‘சரி, அப்படின்னா அண்ணாச்சியிடம் போய் சொல்லிட்டு வாறேன்!’ என்று அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே எழுந்தவர், அங்கு தெளிந்த புன்னகையைக் கண்டதும் ‘அட சிரிப்புத்தானா’ என நைசாக அவள் கன்னத்திலே ஒரு தட்டுத் தட்டினார்.
‘சும்மா இருங்கன்னா’ என நாணங் கலந்த குரலில் கூறினாள் அவள், அதற்காகப் பிள்ளை அவளுடன் விளையாடாது போய் விடுவாரா! வாலிபப் பருவம் முழுவதையுமா இழுந்து விட்டார் அவர்! இல்லை, நான்கு வருடக் குடும்ப வாழ்வ, மனதில் ஊறிய அன்பில் வளரும் குறும்புத் தனத்தை அழித்து விட முடியுமா?
2
ஸ்ரீவைகுண்டம் சொர்க்கவாசல் திருநாள் வந்தாலும் வந்தது; அவ்வூர்க் குடும்பஸ்தர்களின் வீடுகளில் இட நெருக்கடி ஏற்படவும் காரணமா இருந்தது. பக்கத்து ஊரில் உள்ள உறவினர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், படைப்படையாக வந்து ஒவ்வோர் வீட்டிலும் முகாம் போட்டு விடுவது வழக்கம். அவ்வூரில் ஜனசங்கியை எதிர்பாராவகையில் ஏறுவது இரண்டே இரண்டு நாட்களில் தான். ஒன்று, சொர்க்க வாசல் திறக்கப்படும் வைகுண்ட் ஏகாதசி அன்று. பிறகு ஐந்தாம் திருவிழா அன்று, என்றோ வரும் ஐந்தாம் திருநாளில் எங்கிருந்தோ வரும் பிரபல நாதஸ்வர வித்வான்களின் வாசிப்பைக் கேட்கக் கூடுவார்கள். ஏகாதசி யனறோ புண்ணியம் சம்பாதிக்கக் குழுமுவார்கள்!
அத்தகைய ஏகாதசி யன்று, புண்ணியம் சம்பாதிக்கக் கிளம்பிய ‘ பட்டாளம்’ ஒன்று அழகு சேரியிலிருந்து வந்து ஸ்ரீவையில் ஓர் விட்டில் முகா மிட்டது. மறுநாள் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கு முன்பு கல் வீட்டிலேயே நரகத்தின் வாசல் திறக்கப்பட்டு விட்ட்து. ஐந்தாறு ‘குழந்தை குட்டிகள் ‘, மூன்று ‘ வாண்டுப் பயல்கள் ‘, நாலு வனிதா மணிகள் ஆகியோர் அத்திருப்பணியை ஆற்றினர். அவர்களில் அகிலாண்டமும் கலந்து கொண்டாள்.
அவள் படிப்பிலே ‘பிரைமரி ‘யைத் தாண்டி விட்டாள் என்பதனால், அழகு சேரியில் அவளுக்கோர் தனி மதிப்பு. அவளுக்கோ முழுத் தேர்ச்சியும் இல்லாத நாகரிகத்தில் அவ்வூருக்கே ‘அத்தாரிட்டி’ அவள் தான்! அந்த லட்சணத்திலே, எடுத்ததற் கெல்லாம் லகானைச் சுண்டி இழுக்க, அவள் கணவன் இங்கு இல்லை. கேட்க வேண்டுமா அவள் ஆர்ப்பாட்டத்தை!
அவளுக்கு உதவிக்கு வந்து சேர்ந்தாள் மீனாட்சி. பக்கத்துப் பட்டிக்காடுகளில் எதையோ ஒன்றைச் சேர்ந்தவள் தான் அவள். நாகரிகக் கலையிலும், கல்வியிலும் தனக்கு நிகர், தானே என்று தலை நிமிர்ந்து திரியுங் குட்டி. அவ் வாடை பட்ட அகிலாண்ட்ம், அவளுடன் சேராமல் இருப்பாளா? ஆகவே, இரண்டு பேரும் கூடினார்கள், கூடினார்கள் ‘கூண்டு வண்டிக் காளை போலே!’
இவர்கள் இருவரும் தனிக் கட்சியானதும் அழகு சேரி அம்மாமிகள், அவர்களைப் பற்றி வம்பளக்க ஆரம்பித்தனர். அவர்களை ‘மேய்த்து அடக்க’ வந்த அண்ணாச்சி, தமது கடமையைச் செய்து முடித்தாயிற்று என்ற தைரியத்தில் எங்கோ மறைந்து விட்டார். தட்டிப் பேச ஆள் இல்லாததால் அவர்கள் பாடு ஒரே தொம்பப்பாளையம் தான்!
ஸ்ரீவைகுண்டம் கண்ணபிரான் சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பன்று அமர்க்களத்திற்குக் குறைவா? நல் திருப்பதி என்று சொல்லிக் கொண்டு அங்கு மிங்கும். எல்லோரும், இங்கேயே சொர்க்கத்தில் சீட் ரிசர்வ் செய்ய் அடிகோல முயல்பவர்களும் போக, சின்னப் பயல்களின் அட்டகாசமும் கூடி ஊரே சலசல வென்றிருக்கும்.
அத்துடன் கண்ணுக்கினிய விஷயங்களும் இல்லாமலா போகும்! வானவில்லிலும் காண முடியாத வர்ண வேறுபாடுகளையுடைய சேலைகளை அணிந்து, அப்படியும் இப்படியும் திரிபவர்கள் அழகை வர்ணிக்க ஒரு கம்பராகவோ, சுவாரஸ்ய் மாகப் பேசி மகிழ ஒரு வம்பராகவேர் தான் இருக்க வேண்டும்.
இக் கூட்டத்திலே தீவிரமாகக் கலந்து கொண்டனர் அகிலாண்டமும், மீனாட்சியும். தங்கள் திறமையைக் கொட்டித் தங்களை அலங்கரித்து, ஏராளமாக நகையணிந்து திரிந்தனர்.
சொர்க்க வாசல் திறக்கும் நேரம். மேளம் அலறுகிறது. எங்கும் கோஷம். கதவு திறப்பதைக் காண ஓடி வந்தனர் பக்தர்கள். அவர்களிடையே நின்ற அகிலாண்டம், சாமி தரிசனம் செய்யத் தலை நிமிர்ந்ததும், தன்னையே கூர்ந்து கவ்னிக்கும் இரு கண்களை நோக்கினாள். ஆச்சர்யத்தால் மீண்டும் கவனித்தாள்.
ஆம்! சந்தேகமேயில்லை. கோபக் கனல் பறக்கும் விழிகள், அவள் கணவர் சிதம்பரம் பிள்ளையினுடையவை தான். சாக்ஷாத் அவரே தான் அங்கு நின்றார். அம்முகம். திறக்கப் போகும் சொர்க்கவாசலையோ, பக்தர்களுக்கு மோக்ஷம் தருவதாக உறுதி கூறி நின்ற சாமியையோ, கூட்டத்தையோ கவனிக்க வில்லை. வேண்டாத அழகெல்லாம் செய்து கொண்டு, அடுக்கடுக்காக நகையணிந்து ஆடித் திரிந்த அகிலாண்டத்தை எரித்து விடும் பாவனையிலே குத்திட்டு நின்றன அவர் கண்கள்!
பாவம், அகிலாண்டம்! இளமையின் துடிப்பிற்கு, இயற்கையின் தூண்டுதலுக்கு இணங்கி விட்டாள். அழகு செய்ய விரும்புவது பெண்ணின் குணந்தானே? எனினும், அவள் மனம் துடித்தது. அவர் போக்கு அவளுக்குத் தெரியும். தான் வர வில்லை என்று சொல்லி விட்டு இன்று வந்திருக்கிறாரே! ஏன்! தன்னைச் சோதிக்கலா?..,என்று எண்ண எண்ண அவள் தேகம் பதறியது. அங்கு முழங்கிய வாத்திய கோஷங்கள் அவளை வதை செய்தன. தலை நிமிர முடியவில்லை அவளால். அவ்வளவு கடுமையான பார்வை! அதை அவளால் மறக்க முடியவில்லை. அங்கு நிற்கவே நிலை கொள்ள வில்லை அவளுக்கு.
இன்னும் சொர்க்க வாசல் திறக்க வில்லை; திறந்தால் தான் என்ன? அவள் உள்ளத்திலே புகுந்த அந்தகாரத்தைத் துரத்தக் கூடிய ஜோதியா தோன்றிடப் போகிறது அங்கே!
அகிலாண்டம் கவலையுடன் தளர் நடையில் வீடு சேர்ந்தாள். அவசரம் அவசரமாகத் தன் நகைகளைக் கழற்றினாள். மணிக்கணக்காக-பாடுபட்டு செய்த அலங்காரத்தை வெறுப்பாகக் கலைத்தாள். அழகை எடுத்துக் காட்டிய் நாகரிக முறைச் சேலைக் கட்டைக் குலைத்துச் சாதாரண முறையில் உடுத்துக் கொண்டாள். இருந்தும் அவள் மனதில் அமைதி சூழவில்லை. இதயத்திலே துடித்த கலவரத்தின் சாயை அவள் முகத்தில் பிரதிபலித்தது.
3
சிதம்பரம் பிள்ளை சொர்க்க வாசல் திறந்தவுடன் அதன் வழியாகப் போய் மோட்சத்தை எட்டிப் பிடிக்கப் போய்விட வில்லை. அவர் மனம் பூலோக விஷயங்களிலே சுழன்று குழம்பியது. அற்ப விஷயத்தையும் பிரமாதமாகக் கருதும் பேர் வழி அவர். யார் மீதும் இலகுவில் அவரது நம்பிக்கை பதிந்து விடாது.
அதிலும் பெண்கள் விஷயத்திலே, அவரது கொள்கை அசைக்க முடியாதபடி பத்தாம் பசலியாக இருந்தது. பெண்களுக்கு உரிமை யென்று அவரிடம் சொல்லி விட்டால், அவரால் பொறுக்க முடியாது: ‘அடுப் பூதுபவர்களுக்கு உரிமையாவது! ஹும், பெண்களை விழியாலேயே ஆட்டி வைக்க வேண்டும்’, என்பார். தன் மனைவி விஷயத்தில் அவ்விதியையும் மிஞ்சி விட்டார் அவர். மனஸ்தாபமோ கோபமோ எழுந்தால், அவரது கை தான் அவளை அடக்க முன் வரும்.
இயற்கையான குதூகலத்துடன் குதித்து வந்த அகிலாண்டத்தைக் கண்டதும் சிதம்பரம் பிள்ளையின் ஆத்திரம் அளவு கடந்தது. கண்களில் கோபக் கனல் ஜொலித்தது. மனமோ முனங்கிய்து. ‘மூதேவி, மாடு மாதிரி வளர்ந்தும் மூளையில்லை. அலங்காரத்தைப் பாருங்க, தேவடியாள் மாதிரி! குடும்பப் பெண்ணா, லட்சணமா இருக்க வேணாம்?… தூ!’
அவரது உள்ளக் கொதிப்புடன், கை துறு துறுததது. அவளுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டு மென்று. ஆனால் காலமும், இடமும் சரியில்லையே! உற்சவம் முடிந்ததும் ஒருவரையும் சந்திக்க விரும்பவில்லை. பெரிய வீட்டு அண்ணாச்சியையோ, அழகுசேரிப் படைகளையோ கண்டு பேச வேண்டாம், அகிலாண்டம்?
‘அவள் ஊருக்கு வரட்டும்’ என மனம் பதைத்தது. அவளை எதற்காக இப்பொழுது பார்க்க வேண்டும்? சவம் தானாக வருது. வழி தெரியாதா என்ன?. அந்தப் பட்டாளத்தைக் கூட்டி வரத்தான் அண்ணாச்சி இருக்காகளே!’ என்று மசாதானம் செய்து கொண்டு, ரயிலைப் பிடிக்கக் கிளம்பினார் பிள்ளை .
4
அவர் வருவார், வருவார் என்று பயந்து கொண்டே காத்திருந்தாள், அகிலாண்டம். மணி ஓடியதே தவிர, சிதம்பரம் பிள்ளை வர வில்லை. அவள் மனக் கலவரம் அதிகரித்தது. வந்தவர் ஏன் தன்னைப் பார்க்க வர வில்லை? ஊருக்குப் போகும் போது தன்னையும் அழைத்துச் சென்றிருக்கலாமே!
அவள் மன வட்டத்திலே மிதந்த கேள்விகளுக்குப் பதில் தான் கிடைக்க வில்லை. பகலைத் துரத்திச் சென்ற இருள் அவள் பற்றுக் கோடாகப் பிடித்திருந்த ‘வருவார்’ என்ற நம்பிக்கை யையும் ஓட்டி விட்டது . அவள் மனதிலும் இருள் சூழ்ந்தது.
அவர் குணம் அவளுக்கு நன்கு தெரியும். தன் முன்னாலேயே அதிக அழகு செய்து திரிவதைக் கண்டாலும் ‘நீ என்ன தேவடியாளா, இப்படிக் குலுக்கி மினுக்க!?’ என்று கூசாது கேட்பாரே! அன்று ஏன் அவ்விதம் அலங்காரம் செய்து அலையும் நினைவு பிறந்தது..!
அகிலாண்டத்தின் மனம் பல புதிர்களை விட்டெறிந்து அவற்றிற்கு விடை தேட ஆரம்பித்தது. அன்றைய நிகழ்ச்சிகளைத் தன் போக்கிலேயே விமர்சனம் செய்யத் துணிந்தால், பழய கேள்வி தான் பிறந்தது – அவள் ஏன் அலங்காரம் செய்து கொண்டாள் ? என்று.
அதற்குப் பதில் மன மூளையி லிருந்து சூட்டான வினாவாக எழுந்தது, ஏன் அழகு செய்யக் கூடாது? அவளும் ஒரு பெண் தானே! என்று.
ஆனால், அவள், கணவர்…அவர் குணமா, விருப்பு வெறுப்புக்கள்…தண்டனை?
கணவர் என்றால் என்ன? அவள் பெண்! அவளுக்கு உரிமையில்லையா? இன்பத்தை நாடுவது இயல்பு தானே?
ஆனாலும், அவள் அவர் மனைவி. அவள் கடமை…
இவ்விதம் அலை மோதின, எண்ணங்கள் அவள் மனதிலே. அவள் ‘குறு குறு’ வென அமர்ந்து விட்டாள். பெரிய வீட்டு அண்ணாச்சி வந்ததும் ‘உங்க தம்பி போயாச்சோ?’ என்று கேட்டாள்.
‘தம்பியா, அவன் இங்கு எங்கே வந்தான்.’ என ஆச்சரியமாக வினவினார் அவர்.
‘வந்திருந்தார்களே; நீங்க பார்க்கலையா?’
‘இல்லையே. எங்கிட்ட வரலைன்னு சொன்னானே. ஊருக்கு எப்போ போகலாம்?’
‘இங்கே வரலை. கோவிலிலே பார்த்தேன். கூட்டத்திலே ……’ என்றதும் அவர் சிரித்தார். ‘போ பைத்தியக்காரி ! யாரைப் பார்த்தியோ!’ என ஓங்கி யடித்தார்.
‘இல்லை. அவுக தான்’ என்றாள் அவள். அதற்குள் துக்கம் தொண்டையை அடைத்தது களி மொத்தை போல.
‘இங்கே வராமலா போய் விடுவான்? என்ன வேடிக்கை!’ என அண்ணாச்சி முணு முணுத்தார். அவளோ ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. தன்னுள்ளேயே சாம்பிக் குவிந்தாள்.
மறு நாள் நன்கு விடியு முன்னரே அழகுசேரிப் பட்டாளம் நடையைக் கட்டிய தால் ‘பல பல’ வெனப் புலரும் வேளையில் அவரவர் வீடு அடைந்தனர். வழியெல்லாம் அகிலாண்டம் மௌனமாகவே நடந்தாள். அவள் மனம் எண்ணததெல்லாம் எண்ணி ஏங்கிற்று. அவள் முகம் சோகச் சித்திரமாகத் திகழ்ந்தது. வீட்டு நடையில் கால் வைக்கும் பொழுதே அவளுக்குத் ‘திக் திக்’ கென்றது. இதயம் துடித்தது. கக்கும் எரிமலையை எதிர்பார்த்தே மெதுவாக நுழைந்தாள்.
திண்ணையில் அமர்ந்து வெற்றிலை மென்று கொண்டிருந்த சிதம்பரம் பிள்ளை கனைத்தார். வரப் போகும் கொந்தளிப்பின் எச்சரிக்கையா, அது? அவள் ஒன்றும் பேச வில்லை. ‘என்ன, திருவிழா ஆட்ட பாட்டம் எல்லாம் முடிஞ்சுட்டு தா’ என்று அவர் குரலில் தொனித்த பரிகாசத்தை அவள் உணராமல் இல்லை. அவள் தேகம் குலுங்கியது; வெகு பிரயாசையுடன் கேட்டு விட்டாள், ‘நீங்க நேற்றே திரும்பி விட்டேளா?’ என்று.
கண்களிலே கேலிக் குறிப்புத் துள்ள ‘எங்கிருந்து?’ என்று கேட்டார்.
“சொர்க்க வாசல் பார்த்துட்டுத் தான்.’
‘ஹ ஹ, யார் சொன்னா நான் வந்தேன்னு?’
‘நான் தான்..பார்த்தேன்’ என மென்று விழுங்கினாள் அவள்.
‘பார்த்தியா? சரி தான்!’
‘நீங்க ஏன் வீட்டுக்கு வரலை?’ எனும் கேள்வி சம்மிய தொண்டையிலிருந்து கிளம்பிய்து.
‘எதற்காக வரணும்? உன் ஆட்டத்தைத் தான் அம்பலத்திலேயே பார்த்தாச்சே. வீட்டிலே வேறே பார்க்கணுமா? ஹூ…ம்’
அவள் எதிர் நோக்கிய வரவேற்புப் பிரசங்கம் தொடங்கியது. அவர் கோபம் எவ்வ, எவ்வ, குரலும் உயர்ந்தது. முடிவாகக் கர்ஜித்தார். ‘அகிலாண்டம், உன்னை அங்குப் போக அனுமதித்ததே தவறு’.
அவள் என்ன சொல்வாள்? கால் விரலால் தரையில் கோடு கீறி, அதைப் பார்த்தபடியே தலை கவிழ்ந்து நின்றாள்.
‘நிற்கா பாரு, மண்ணாந்தை மாதிரி. மூதி! உள்ளே தொலையேன், என் முன்னாலே நில்லாதே! ஹும். உன் மூளை இப்படியா போகணும்? சதிர் தாசி போல குலுக்கி மினுக்கித் திரிஞ்சியே, வெட்கமில்லே?’ என்று அவர் வாய் அக்னிச் சொற்களைக் கக்கியது.
அவள் மௌனமாக நின்றாள். கண்கள் நீர் சொரிய, மெதுவாக வீட்டிற்குள் நுழைந்தாள். அவர் வாயோ பொரிந்து தள்ளியது ‘இன்னமே நீ வீட்டை விட்டு நகரு, சொல்றேன். உனக் கென்னத்துக்குத் திருவிழா! ‘ என்று..
‘சொர்க்க வாசல் கண்ட் பலன் இது தானா?’ என அவள் மனம் பொங்கியது. அவளுக்கு இன்பத்தின் ரேகை இம்மி கூடக் கிட்டாதபடி ஆனந்த வாசல் அடைக்கப்பட்டு விட்டது .
அகிலாண்டம் பெரு மூச்செறிந்து வழக்கமான அலுவல்களில் ஈடுபட்டாள். தனது உரிமைக்காகப் போரிட முன் வர வில்லை அவள்.
போய்விடவாவது! அவள் அவர் மனைவி. அவர் வார்த்தைகளின்படி தானே நடக்க வேண்டும்!
கணவனுக்கு அடங்கி நடக்க வேண்டும்! கடமை எனும் பெயரால் சமூகம் பெண்களுக்கு விதித்துள்ள கட்டளை தானே அது?
– கல்யாணி முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, சினிமா நிலையம் வெளியீடு.