சொந்த ஊர்

9
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 10,201 
 
 

எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது சொந்த ஊருக்குப் போய் ? எப்படியும் இந்த முறை தமிழ் நாட்டுக்குப் போகும் போது ஊருக்குச் சென்று விட்டு வந்து விடுவது என்று முடிவு செய்து கொண்டார் ராஜகோபாலன். அவரின் மனதில் கடந்த கால நினைவுகள் நிழலாடத் துவங்கின . இருபத்தைந்து வயதில் வேலை கிடைத்து சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு தில்லிக்கு வந்தது. வேலையில் சேர்ந்த பின் தில்லியிலேயே தொடர்ந்து வசித்துக் கடந்த முப்பது வருடங்களில் அவர் “தில்லிவாலா”…ஆகிவிட்டிருந்தார் .

வேலை கிடைத்த புதிதில் வருடத்துக்கு ஒருமுறை தீபாவளி, பொங்கலுக்கோ அல்லது வாய்ப்பு கிடைக்கும் போதோ தவறாமல் சொந்த ஊருக்குப் போய் வருவார். சில வருடங்களில் சகோதரன் மோகனுக்கு மும்பையில் வேலை கிடைத்து அவர் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். தங்கை மைதிலிக்கு அமெரிக்க மாப்பிளை கிடைத்து திருமணமாகி அவர் அமெரிக்காவில் குடியேறியது. எதிர்பாராமல் நிகழ்ந்த பெற்றோர் மறைவு. இப்படித் தொடர் நிகழ்வுகளுக்குப்பின் ஊரில் உறவுகள் யாருமில்லாமல் போக ஊருக்குச் செல்ல வேண்டிய அவசியம் எதுவும் இல்லாமல் போய் விட்டது அவருக்கு.

கடைசியாக 23 வருடங்களுக்கு முன் ஊரிலிருந்த சொந்த வீட்டை விற்க நேர்ந்த போது அங்கு சென்று வந்ததோடு சரி . அதற்குப் பின் அவ்வப்போது ஊரின் நினைவுகள் மட்டுமே வந்து போகும் அவருக்கு. பெருநகரத்தின் நெரிசல் மிகுந்த சாலைகள் ஆரவாரங்கள் அலுத்துப்போக ஊரின் அமைதியான சூழல், சுத்தமான காற்றுடன் மரங்கள் நிறைந்த சோலையாய் இருக்கும் காட்சிகள்…என ஊரைப்பற்றி நினைத்துக் கொள்வார்.

ஒரு நாள் மகன் விக்னேஷ்…

“அப்பா… நான் கம்பெனி மீட்டிங் விஷயமா அடுத்த வாரம் சென்னைக்கு போகணும்…” என்றவனிடம்

” நானும் தமிழ் நாட்டுக்கு உன் கூட வரேண்டா . சொந்த ஊருக்கு போகணுன்னு ஆசை….” என்றார்.

“அப்பா என்னால உங்க கூட ஊருக்கு வரமுடியாது. சென்னையிலேயே வேலை சரியா இருக்கும். நீங்க மட்டும் ஊருக்கு போயிட்டு வந்துடுங்க…” என்றான் விக்னேஷ்.

ஒருவழியாகச் சென்னையில் மகனுடன் ஒரு நாள் ஹோட்டலில் தங்கியவர் மறுநாள் தான் மட்டும் சொந்த ஊருக்குப் புறப்பட்டார் . பேருந்து நிலையத்தில் புறப்டத் தயாராக நின்றிருந்த பஸ் பலகையில் சொந்த ஊரின் பெயரை தமிழில் படித்தவர் அதை ஆவலுடன் இரண்டு மூன்று முறை திரும்ப திரும்பப் பார்த்தார்.

இருக்கையில் அமர்த்தபின் ஒரு சிறுவனைப் போல் எழுந்து நின்று ஒருமுறை சகபயணிகளைக் கவனித்தார் தெரிந்தவர்கள் யாரவது கண்ணில் தென்படுகிறார்களா என. சிலர் தங்கள் கைகளில் செல் பேசிகளை ஏந்திக்கொண்டு எதையோ பார்த்த படியும் சிலர் காதுகளில் ஏர் போன்களில் பொருத்தி யாரிடமோ பேசிக் கொண்டுமிருந்தனர் . பேருந்து புறப்பட்டவுடன் அவருக்கு சரித்திரக் கதை நாயகன் ஒருவன் சோழ நாட்டுக்குக் குதிரையில் பயணிப்பது மாதிரியான காட்சி ஏனோ நினைவுக்கு வந்தது .

இரவு முழுதும் பயணித்து விடிந்ததும் கண் விழித்த போது ஊரின் எல்லை கண்களில் பட்டது . எங்கு இறங்குவது? கோயில் நிறுத்தத்திலா… கடை வீதியிலா… அல்லது இறுதியாகப் பேருந்து நிறுத்தத்திலா.. . கோயில் நிறுத்ததிலிந்து அவரின் வீடு பக்கம் என்பதால் எப்போதும் அங்கு இறங்குவதுதான் பழைய வழக்கம் .

பசி வயிற்றைக் கிள்ள கடை வீதியில் உள்ள லாட்ஜ்ல் ஒரு நாளுக்காக அறை எடுத்துத் தங்கி காலைச் சிற்றுண்டி முடித்துக் கொண்டு ஊர் சுற்றி பார்க்கலாம், என முடிவு செய்தார் .

முன்பு சிறிய லாடஜ் ஆக இருந்தது இப்போது மிகப் பெரிய ஹோட்டல் ஆகியிருந்தது . அறையிலிருந்து தயாராகி புறப்பட்டவருக்கு “வெங்கடேசன் கபே” நினைவுக்கு வந்தது. அங்கு ரவா தோசை ஸ்பெஷல். கெட்டி சட்னியுடன் சின்ன வெங்காய சாம்பார்… அவ்வளவு ருசியாக இருக்கும். ஒரு தோசையும் பில்டர் காப்பியும் சாப்பிட்டால் வயிற்றைவிட அதிகமாக மனமும் நிறைந்து விடும். மாலையில் கோதுமை அல்வாவுடன் காரா சேவ், பில்டர் காபி மணக்க….கூட்டம் அதிகமாகவே இருக்கும். இப்போது அங்கு வேறு ஒரு ஓடடல் இருந்தது. அங்கு முன்பெல்லாம் வாழை இலைகளில் உணவு பரிமாறப்படும் , இன்று பச்சை நிறம் பூசப்பட்ட பீங்கான் தட்டுகளில் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டபின் பழைய சுவை இல்லை என நினைத்துக் கொண்டார்.

கடை வீதியில் நடக்கையில் ஊர் முற்றிலும் மாறி இருப்பதைப் பார்த்தார். புதிய புதிய கட்டிடங்கள் கடை வீதியின் அமைப்பையே மாற்றி இருந்தது . சிறு வயதில் சைக்கிளில் சுற்றிய இடம் இப்போது வாகன நெரிசல் மிகுந்த சாலை ஆகியிருந்தது .

கடை வீதியைக் கடந்து வந்தவர் தான் படித்த பள்ளிக்கூடத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் அந்தப்பக்கம் சென்றார். பள்ளிக்கூட வளாகத்தில் புதிய கட்டிடம் ஒன்று கூடுதலாக கட்டப்பட்டிருந்தாலும் அவர் படித்த அந்தப் பழைய கட்டிடம் அதிக மாற்றமில்லாமல் அப்படியே இருந்தது.

பள்ளி நாட்களில் இளைஞனாக நண்பர்களுடன் உலாவியது. ஆண்டு விழா மேடை நாடகத்தில் ஒரு நாட்டின் அரசனாக நடித்தது…. என பால்ய நினைவுகள் வந்தது. மீண்டுமொரு முறை எந்த கவலைகளுமற்ற பள்ளிமாணவன் ராஜகோபாலனாக தான் மாற முடியாதா… என நினைத்துக் கொண்டார்.

ஊரில் அவருக்குப்பிடித்த இடங்களில் பூங்காவும் ஒன்று. கல்லூரியில் படித்த நாட்களில் மாலையில் பூங்காவிற்கு செல்வது வழக்கம். அங்கு ஒலிப்பெருக்கியில் ரேடியோ செய்திகளைக் கேட்பதற்கு நிறைய பேர் கூடுவர். அங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்தவெளி இலக்கியக் கூட்டங்களும் நடைபெறும். அப்போது சிறந்த எழுத்தாளர்களின் கதைகள் நாவல்கள் பற்றியெல்லாம் விவாதிக்கப்படும். அந்தப் பூங்காவும் இன்று வெறிச்சோடிக்கிடந்தது. இப்போதெல்லாம் கதைகள் நாவல்கள் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறதென்று தோன்றியது அவருக்கு.

பின் அந்தப் பெரிய கோயில் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தார் சன்னதித்தெருவென்ற பெயர் மட்டுமே எஞ்சி விட அதுவும் ஒரு சின்ன கடைத் தெரு மாதிரி மாறி இருந்தது .

கோயில்கள் அதிகம் நிறைந்த ஊர் என்பதால் பெரும்பான்மையான நாட்களில் ஏதாவது ஒரு கோயிலிருந்து உற்சவர் புறப்பாடு இருக்கும். வண்டிகளில் அலங்கரிக்கப்பட்ட தெய்வங்கள் உலாவரப் பூக்களின் மணம், சந்தன மணம் என தெய்வீக கலையோடிருக்கும் தெருக்கள் இன்று மாறியிருப்பதாகத் தோன்றியது அவருக்கு. ஊர் மத்தியில் இருந்த தெப்பக்குளம் துளி நீருமில்லாமல் வெறுமையாக இருந்தது.

நீளமான திண்ணைகளுடன் இருந்த அழகான ஓட்டு வீடுகள் அதன் வாசல்களில் போடப்பட்டிருக்கும் பெரிய கோலங்கள் என இருந்த காட்சிகள் எதையும் காண முடியவில்லை. மரங்கள் நிறைந்த ஊர் மாறிப்போய் எங்கு பார்த்தாலும் கட்டிடங்களாகவே காட்சி அளித்தது.

தங்களது சொந்த வீடு இருந்த தெருவுக்குள் நுழைந்தவருக்கு ஏமாற்றமே எஞ்சியது. அவரின் சொந்த வீடு இருந்த சுவடு தெரியாமல் பக்கத்து வீட்டு இடத்தையும் சேர்த்துக்கொண்டு மிகப் பெரிய கட்டிடம் ஒன்று அங்கு முளைத்திருந்தது . தெரு முனையில் இருந்த மளிகைக்கடையும் சிறு காய்கறிக்கடையையும் அங்கு இல்லை. அவருக்குத் தெரிந்த சில குடும்பங்களும் வெளி ஊர்களுக்குக் குடியேறி விட்டதால் தெரிந்த முகங்களையோ பழகிய மனிதர்களையோ காண முடியவில்லை . ஏமாற்றங்களால் சொந்த ஊரிலேயே அவர் அன்னியமாக உணரத் தொடங்கினார் .

“யாராவது முகம் பாரத்து சிநேகமாகச் சிரிக்க மாட்டார்களா? யாராவது, நீங்க கோபால் தானே… எப்படி இருக்கிங்க…இப்பத்தான் ஊரு நினைப்பு வந்ததா….” என்று கேட்கமாட்டார்களா என கொஞ்சம் ஏங்கினார். எங்கு சென்று உரிமையாக அமர்வது…. யாரிடம் அன்னியோன்னியமாகப் பேசுவது…. என்று தெரியவில்லை அவருக்கு.

இப்படி சொந்த ஊரிலேயே அன்னியமாக அலைவது இதுவரை அவர் உணர்ந்திராத ஒன்று. சொந்த ஊர் என்பது என்ன … நிலமா, இடமா, கட்டிடங்களா உறவுகளா, நட்புகளா, முகம் தெரிந்த மனிதர்களா….அல்லது நினைவுகளா…அவர் மனதில் எண்ணங்கள் ஓடின.

எதிரி நாட்டு மன்னனிடம் போரில் தோற்று விடுகிற ஒரு மன்னன் தன் சொந்த நாட்டிலேயே ஒரு அகதியாய் நிற்கும் போது… இப்படித்தான் இருக்குமோ என்று சில விநாடிகள் நினைத்துக் கொண்டார்.

இறுதியாகக் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்து அந்த மண்டபத்துக்குள் அமைதியாக அமர்ந்ததும் கொஞ்சம் ஆசுவாசமாகவும் மன நிறைவாகவும் இருந்தது அவருக்கு.

லண்டன் மாநகர் எவ்வளவு நவீன வளர்ச்சி அடைந்திருந்தாலும் பழமையும் மரபும் மாறாமல் பாதுகாக்கப்படுவது பற்றி நினைத்துக் கொண்டார்.

கால மாற்றங்களால் தன் சொந்த ஊர் வளர்ச்சி அடைந்து இருந்தாலும் மரபுகளை அடையாளங்களை இயற்கையைக் கொஞ்சம் தொலைக்காமல் இருந்தால் நன்றாக இருக்குமே …. என்று அவர் நினைத்துக் கொண்டார்.

அன்று இரவு சென்னைக்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தவர் ஜன்னல் வழியாக ஊரை ஒரு முறை பார்த்தார். சற்றுத் தொலைவில் பயணிகள் காத்திருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் தன்னை உற்றுப் பார்ப்பது மாதிரி இருந்தது அவருக்கு. பார்வை மங்கிப் போயிருந்த அந்த முதியவரை எங்கோ என்றோ பார்த்த மாதிரி இருந்தது. அவரைப் பார்த்து ராஜகோபாலன் லேசாகப் புன்முறுவல் செய்ய அந்த முதியவருக்கு அது தெளிவாக தெரிந்ததா எனத் தெரியவில்லை. பேருந்து சென்னையை நோக்கிப் புறப்பட்டது.

– 11 பிப்ரவரி திண்ணை இதழில் வெளியானது

Print Friendly, PDF & Email

9 thoughts on “சொந்த ஊர்

 1. என் சொந்த ஊருக்கு பல வருடங்கள் கழித்து நான் சென்ற பொழுது எனக்கு இதே சிந்தனையும் இதே வருத்தமும் ஏற்பட்டது யாரவது என்னை அடையாளம் காண்பர்களா என்று ஏங்கினேன் பழையவை எதுவும் மாறாமல் இருந்திருக்கலாமே என்றும் ஏங்கினேன் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையையே மனம் விரும்புகிறது எப்போதும் தங்களின் கதை என்னை பிரதிபலித்தது மிக்க நன்றி…….
  மனோகரன் , சென்னை

 2. சொந்த ஊர் சிறுகதை ஒவ்வொருவருக்கும் ஏற்படும் மலரும் நினைவுகள் ஏக்கங்கள் அருமை

  பூ.சுப்ரமணியன், வந்னியாம்பாட்டி ஸ்ரீவில்லிபுத் தூர் வட்டம்

  1. தங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி. இச்சிறுகதையில் ஊரின் பெயர் குறிப்பிடாமல் பொதுவாக எழுதினால் எல்லோருக்கும் பொருந்தும் என முயன்றுள்ளேன். இது வரவேற்பை பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா. நன்றி.
   நிலாரவி.

 3. அருமையான கதை, தன் சொந்த அடையாளத்தை இழந்து விட்டு வாழ்வது தான் நவீனத்துவம் என்றால், பட்டிக்காடாகவே இருந்து விடுவேன்,

  1. தங்களின் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
   நிலாரவி.

 4. தங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றி.
  நிலாரவி.

 5. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
  நிலாரவி.

  1. சொந்த ஊருக்குச் சென்று வருவதே தனி மகிழ்ச்சி மன அமைதியைத் தருகிறது கதையின் போக்கு அதைப் புரிய வைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *