சொட்டைப் பூனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 16, 2020
பார்வையிட்டோர்: 4,627 
 
 

(இதற்கு முந்தைய ‘சிலிர்ப்பு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது).

கண் விழித்துப் பார்த்தபோது நான் ஆஸ்பத்திரியில் இருந்தேன். பலவிதப் பரிசோதனைகள் செய்த பிறகு, இருதயத்தில் வால்வு ஒன்றில் கோளாறு என்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

என் படிப்பு பாதியிலேயே நின்றது. ஒரு வருட காலத்திற்கு கட்டிலை விட்டு இறங்காத கட்டாய ஓய்வு. மருந்து, மாத்திரை, உப்பில்லாத சாப்பாடு, செய்யக் கூடியவை எவை எவை; செய்யக் கூடாதவை எவை எவை என்ற பட்டியல்களுடன் வாழ்க்கை வேறொரு திசையில் திருப்பி விடப்பட்டது.

திருமணமாகியிருந்த என் அக்காவும் அவரது கணவரும், என்னை அவர்களின் மானசீகப் புதல்வியாகப் பாவித்து தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். அக்காவின் பராமரிப்பில் என் உடல்நிலை தேறத் தொடங்கியது. வருடங்கள் ஓடின…

வீட்டில் லவ்பேர்ட்ஸ் வளர்க்கத் தொடங்கினோம். லவ்பேர்ட்ஸ்களுக்கு பூனைகளால் ஆபத்து என்பதால் பூனைகளைக் கண்டாலே காததூரம் விரட்டி விடுவோம். லவ்பேர்ட்ஸ்கள் வளர்க்கத் தொடங்கியும் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவைகளுக்கு உணவு கொடுப்பது, அதுகளின் கூண்டை சுத்தம் செய்வது, அவைகளுக்கு விளையாட்டு காண்பிப்பது என்று வாழ்க்கை சுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருந்தது.

இந்த வீட்டைச் சுற்றி நான்கு பக்கமும் உள்ள காம்பவுண்டு சுவர்களின் மீது பூனைகள் அவ்வப்போது போய்க் கொண்டிருக்கும். வீட்டின் வெளிப்புற கதவுகளுக்குக் கம்பிவலை அடித்திருப்பதாலும், ஜன்னல் கம்பிகளின் இடைவெளிகள் குறுகலாக இருப்பதாலும், பூனைகளால் உள்ளே நுழைய முடியாது என்ற போதிலும் தப்பித் தவறிக்கூட பூனைகள் உள்ளே வந்து விடாதபடி மிகுந்த கவனத்துடன் இருப்போம்.

சில சமயங்களில் ஒரு கறுப்புப் பூனை சமையலறை பக்கமாகக் காம்பவுண்டு சுவரின் மீது போய்க் கொண்டிருக்கும். அப்படிப் போனது சும்மா போகாமல் எங்களைப் பார்த்து ‘மியாவ்’ என்று குரல் கொடுத்துவிட்டுப் போகும். அது பெயருக்குத்தான் கறுப்புப் பூனையே தவிர, அதன் உடலில் ஆங்காங்கே முடி கொட்டிப்போய் பார்க்கவே ரொம்ப அசிங்கமாக இருக்கும். அதற்குப் பார்வை வேறு ஒன்றரைக் கண் பார்வை.

திடீரென்று ஒருநாள் அந்த சொட்டைப் பூனை எங்கள் வீட்டு சமையலறைக்கு வெளியே உட்கார்ந்துகொண்டு ‘மியாவ் மியாவ்’ என்று ஏதோ தொடர்ந்து சொல்லியது. “சூ போ” என்று விரட்டினாலும் பயந்து ஓடாமல் மறுபடியும் மறுபடியும் “மியாவ்… மியாவ்” என்று கத்திக் கொண்டேயிருந்தது.

உடனே என் அக்கா, “பாவம் இது பார்க்க அசிங்கமா சொட்டையா இருக்கு. அதனால இது எங்க போனாலும் எல்லாரும் இத சூ சூன்னு விரட்டிண்டுதானே இருப்பா” என்று பரிதாபப் பட்டுக்கொண்டே ஒரு ப்ளாஸ்டிக் மூடியை எடுத்து கொஞ்சம் பாலை ஊற்றி அதனிடம் வைத்தாள். அது அதை வேகமாகக் குடித்துவிட்டு மறுபடியும் ஒரு மியாவ் சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டது. போகும்போது பார்த்தால் அதன் அடிவயிறு ரொம்பவும் உப்பலாக இருந்தது. “ஒருவேளை அது சினையாக இருக்கு போலிருக்கு, அதான் பசி பொறுக்க முடியாமல் பால் கேட்டிருக்கு…” என்று நானும் என் அக்காவும் பேசிக்கொண்டோம்.

அதன்பிறகு என்னையறியாமல் அந்தப் பூனை மீது ஏனோ எனக்கு ஒரு இனம் புரியாத பாசம் பொங்கியது. அப்புறம் எப்போது அந்தப் பூனையைப் பார்த்தாலும் எனக்குள் உண்டாகும் அந்தப் பயமும், அசூயையும் முதன் முறையாக அன்று ஏற்பட்டிருக்கவில்லை என்பதும் என் கவனத்தில் வந்தது.

சில நாட்கள் சென்றன. ஒருநாள் காலையில் தூங்கி எழுந்து காபி போட சமையலறைக் கதவைத் திறந்தால், பூட்டியிருக்கும் கம்பிக் கதவிற்கு வெளியே சமையலறை வாசலையே ஏக்கமுடன் பார்த்தபடி சிமென்ட் நடை பாதையில் அந்த சொட்டைப் பூனை இரண்டு அழகான குட்டிகளுடன் உட்கார்ந்திருந்தது.

ஒரு குட்டி தேன் நிறத்திலும்; மற்றொன்று வெள்ளையில் ஆங்காங்கே ஆரஞ்சு நிறமுமாக இருந்தன. குட்டிகள் இரண்டும் பச்சை நிறக் கண்களுடன் கொட்ட கொட்ட எங்களை முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் பயம் தெளிந்து துள்ளி துள்ளி விளையாட ஆரம்பித்தன. எனக்கு அவைகளைப் பார்க்க பார்க்க அதுகளிடம் வாஞ்சை பெருக்கெடுத்தது.

கொஞ்சம் பால் ஊற்றி வைத்தோம். அம்மா பூனை ஆசையுடன் அந்தப் பாலைக் குடிக்க, குட்டிகள் அம்மாவிடம் பால் குடித்தன. பால் குடித்தபடியே ஒன்றின் மேல் ஒன்று தாவுவது, கட்டிப் புரள்வது, அம்மாவின் வாலை பிடித்து இழுப்பது என்று விளையாடிக் கொண்டிருந்தன. குட்டிகள் பால் குடித்ததும் அம்மா பூனை குட்டிகளை அங்கேயே விட்டுவிட்டு சுவரேறி எங்கோ போய்விட்டது.

அம்மா பூனை அந்த இடத்தைவிட்டு போனவுடன், குட்டிகளின் கவனம் நாங்கள் தொட்டிகளில் வளர்த்து வரும் செடி கொடிகளின் பக்கம் திரும்பியது. ஓடிப்போய் தொட்டிகளின் அருகில் நின்றுகொண்டு மேலும் கீழுமாய் ஆராய்ந்தன. தொட்டிகளின் விளிம்பில் கழுத்தைச் சாய்த்து தேய்த்துக்கொண்டன. தொட்டிகளின் மேலேறிக்கொண்டு செடிகளை பிஞ்சுக் கைகளால் தடவி தடவிப் பார்த்தன. பார்க்க பார்க்க எல்லாமே அவைகளுக்கு ஆச்சர்யமாக இருந்தது போலும். ஒவ்வொரு தொட்டியாகத் தாவுவதும், செடிகளின் கிளைகள் காற்றில் மேலும் கீழுமாக ஆடினால் அதை இரண்டு முன்னங் கால்களால் பிடிக்கப் பார்ப்பதும், அதற்குள் என் அக்காவின் கணவர் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற குழாயைத் திறக்க, தண்ணீர் கொட்டுவதை வேடிக்கைப் பார்க்கவும், நாங்கள் யாராவது அருகே போனால் பயந்துகொண்டு ஓடுவதும், பிறகு நாங்கள் போய்விட்டோமோ என்று தொட்டிகளின் பின்னே ஒளிந்துகொண்டு பார்ப்பதும், நாங்கள் உள்ளே வந்துவிட்டால் சமையல் அறை வாசல்வரை ஓடிவந்து கம்பிக் கதவை சுரண்டுவதுமாக விளையாடிக் கொண்டிருந்தன.

அதிலிருந்து அம்மா பூனை அவ்வப்போது வரும், குட்டிகளுக்குப் பால் கொடுத்துவிட்டு சிறிது நேரம் இருக்கும். பிறகு போய்விடும். குட்டிகள் வழக்கம்போல் விளையாடுவதும், தூக்கம் வந்தால் ஆளுக்கொரு தொட்டியின் மேல் ஏறி அரை வட்டமாக உடலை வளைத்து வைத்துக்கொண்டு தூங்குவதுமாக பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தன. திடீரென்று என்றைக்காவது வீட்டுக்குள்ளே வந்து பார்க்கவேண்டும் என்ற ஆசை எழ, வீட்டிற்குள்ளே வர முயற்சி செய்யும். ஆனால் ரொம்பவும் உள்ளே வந்துவிடாது. வாசல்கதவு அருகில் போடப்பட்டிருக்கும் மிதியடியில் நின்றபடி, தன் முன்னங் கால்களால் ஏழெட்டு முறை மிதியடியைப் பிறாண்டுவதைப் பார்த்தால் மனிதர்கள் ‘டிரெட்மில்’ லில் உடற் பயிற்சி செய்வதுபோல் இருக்கும்.

சிறிது நாட்கள் போயின. திடீரென்று ஒருநாள் அம்மா பூனை வரவேயில்லை. குட்டிகளுக்கு ஒரே பசி போலும். மேங் மியாங் என்று கத்த ஆரம்பித்தன. எங்களுக்கு முதலில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. நாங்கள் கவனித்த வரையில் இதுவரை நாங்கள் அம்மாவுக்கு ஊற்றும் பாலையோ, சாதத்தையோ குட்டிகள் இதுகாறும் சாப்பிட்டிருக்கவில்லை. ஆனாலும் வேறு வழி தெரியாமல் கொஞ்சம் பாலை ஊற்றி வைத்தோம். ஆனால் குட்டிகளுக்கு அந்தப் பாலை குடிக்கணும் என்று தெரியாமல் எங்கள் முகத்தையே பார்த்து பார்த்து கத்திக் கொண்டிருக்கின்றன. கதவைத் திறந்துகொண்டு வெளியேபோய் பால்தட்டை அதுகளின் மூக்கிற்கு நேரே நீட்டி, தட்டை அப்படி இப்படியாக அசைத்து அசைத்து அதுகளின் பார்வையை பால் பக்கமாகத் திருப்பி தட்டை கீழே வைத்தோம்.

முதலில் லேசான தயக்கத்துடன் ‘தேன்’ பாலை நக்கிப் பார்த்தது. பிறகு பாலின் ருசி தெரிந்து கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கத் தொடங்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *