சிலிர்ப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 5,710 
 

(இதற்கு முந்தைய ‘பெரிய டாக்டர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

ஆனால் அக்கம் பக்கத்திலுள்ள மாமிகள் எங்களை அழைத்து வைத்துக்கொண்டு வம்பு பேசுவார்கள்.

“ஏண்டி பசங்களா, உங்க அம்மா எங்கேடி?” என்று கேட்பார்கள். நாங்களும் அப்பாவியாக உள்குத்து புரியாமல், “அம்மா மானத்து ஆஸ்பத்திரியில் இருக்கா என்று ஆரம்பித்து அத்தையும் பாட்டியும் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த கதைகளை எல்லாம் சீரியசாகச் சொல்லுவோம். அவர்களும் ரொம்ப அனுதாபத்துடன் கேட்டுக்கொண்டு “பாவம் குழந்தைகளுக்கு அம்மா செத்துப்போனது கூடத் தெரியலை… ம் சொர்ண விக்கிரம மாதிரி இந்த ரெண்டையும் பெத்துப் போட்டுட்டு இப்படி அல்பாயுசில் போய்ச் சேர்ந்துட்டாளே” என்று பரிதாபப் படுவார்கள்.

சிலசமயம் ரொம்பவும் நெகிழ்ந்து போய் எங்களை இழுத்து அணைத்துக் கொள்வதும் உண்டு. அப்போதெல்லாம் ‘அம்மா இல்லை’ என்பதே ஏதோ மற்ற குழந்தைகளுக்கெல்லாம் கிடைக்காத ஒரு கூடுதல் தகுதி எங்களுக்கு கிடைத்திருப்பது போல நினைத்து பெருமிதத்துடன் மிதந்து கொண்டிருப்போம். அப்போது எங்கள் முகத்தைப் பார்க்க வேண்டுமே…

அம்மா இல்லாத குழந்தைகள் என்கிற அனுதாபத்துடன் வளர்ந்ததால் ஒரு கட்டத்தில் ‘அம்மா இறந்துவிட்டாள்’ என்ற உண்மையை நாங்கள் நேர் கொண்டபோது அது எங்களைப் பெரிதாக பாதிக்கவேயில்லை. அத்துடன் ‘அம்மா இருந்திருந்தால்’ ஏக்கம் எந்தவொரு சின்ன விஷயத்திலும்கூட ஏற்பட்டு விடாதபடி தாத்தா எங்களை மிகவும் செல்லமாக வளர்த்தார். அதனால் ‘அம்மா இல்லையே’ என்ற குறையே எங்களுக்கு இருந்ததில்லை. என்பதோடு ‘அம்மா’ என்ற நினைப்பே எழுந்ததில்லை என்று கூடச் சொல்லலாம்.

‘அம்மா’ என்ற நினைப்பு என்னுள் முதன் முதலாக எழுந்த நாள் இன்னும் என் நினைவுத் திரையில் பசுமையாகப் பதிந்து இருக்கிறது. நான் பள்ளிப் படிப்பை முடிக்கும் தறுவாயில் என் தாத்தா இறந்துவிட்டார். அதன் பின்னர் நாங்கள் சென்னைக்கு வந்து அப்பாவுடன் குடி பெயர்ந்தோம். அப்பாவின் கஸ்டடியில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தேன்.

ஒருநாள் மாம்பலம் ரங்கநாதன் தெருவில் எங்கள் ஊரைச்சேர்ந்த ஆனால் பெங்களூரில் வசித்துக் கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியைச் சந்தித்தேன். அவர் என் அம்மாவின் நெருங்கிய சினேகிதியாம். அவர் என்னிடம் என் அம்மாவைப் பற்றி நிறைய விஷயங்களை நினைவு கூர்ந்தார்.

அப்போது என்னுள், ‘நம் அம்மா இருந்திருந்தால் அம்மாவுக்கும் இவங்க வயசுதானே ஆகியிருக்கும்? அம்மாவுக்கும் இவங்களைப் போலவே முன் நெற்றியில் இப்படி லேசாக நரைத்திருக்குமா?’ என்றெல்லாம் எண்ணங்கள் ஓடின.

உடனடியாக வீட்டிற்குப் போய் அம்மாவின் போட்டோவை எடுத்துப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் எழ, அவர்கள் என்னிடம் விடை பெற்றுக் கொண்டவுடன், நேராக வீட்டிற்கு விரைந்தேன். அப்பாவின் பெட்டியைத் திறந்து துணிமணிகளுக்கிடையில் பத்திரமாக வைக்கப் பட்டிருந்த பழுப்பு நிறக் கவரை வெளியில் நிதானமான எடுத்தேன்.

அந்தக் கவரை தொடும்போதே விரல்களில் ஒரு சிலிர்ப்பு ஓடுவதை உணர்ந்தேன். சில நிமிடங்கள் வரை அந்தக் கவரை அப்படியே மார்போடு அணைத்துக் கொண்டிருந்தேன். பிறகு ஜாக்கிரதையாக மிகவும் ஜாக்கிரதையாக அம்மாவின் போட்டோவை வெளியில் எடுத்துப் பார்த்தேன். கறுப்பு வெள்ளைப் போட்டோ. சற்று மங்கலாக இருந்தது.

அந்தப் போட்டோவில் என் அம்மா ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அந்த நாற்காலிக்கு இடது புறம் நாற்காலியைப் பிடித்தவாறு என் அக்கா நின்று கொண்டிருக்க, அம்மாவின் மடியில் சின்னக் குழந்தையாக நான் உட்கார்த்திவைக்கப் பட்டிருப்பேன். நான் அம்மாவின் மடியைவிட்டு இறங்கி விடாதபடி அம்மா தன் இரு கைகளாலும் என்னை அழுத்திப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்.

அதையே உற்றுப் பார்த்தேன். அம்மாவின் முகம் ரொம்பவும் சாந்தமாக பொலிவுடன் இருந்தது. அம்மாவுக்கு பெரிய கண்கள். அந்தக் கரிய பெரிய விழிகளிலிருந்து கருணை பெருகி வழிந்து கொண்டிருந்தது. அந்தப் போட்டோவை கையில் ஏந்திக்கொண்டு, ‘அம்மா இப்போது இருந்தால் எப்படி இருப்பார்கள்?’ என்று யோசித்தபடியே முன் நெற்றியில் சற்றே நரையுடன் நாற்பது நாற்பத்தியிரண்டு வயது அம்மாவை கற்பனை செய்ய முயன்றேன். ஹூம்… என்ன முயன்றும் என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.

மறுபடியும் அம்மாவை உற்றுப் பார்த்தேன். அம்மா என்னைப் பார்த்து குறும்புடன் சிரிப்பதைப் போல இருந்தது. எனக்குக் கண்களில் நீர் திரண்டது. “ஓகே ஓகே உங்களுக்கு வயசே ஆகலை அம்மா… ஒத்துக்கிறேன் என்று சோகமாகச் சிரித்தபடி அம்மாவின் போட்டோவிற்கு மென்மையாக ஒரு முத்தமிட்டு போட்டோவை கவரினுள் பழையபடி பத்திரமாக வைத்துத் திரும்பவும் பெட்டியில் வைத்துவிட்டேன்.

இது நடந்து ஏறக்குறைய ஒரு மாதக் காலத்திற்குள் பாட்டியைப் பார்க்கப் போனபோதுதான் பாட்டி, ‘அம்மாவிற்கு பூனைகளைக் கண்டாலே பிடிக்காது பயம்’ என்று என்னிடம் சொன்னது. அம்மாவிற்கு பூனைகளையே பிடிக்காது என்ற தகவலைத் தெரிந்துகொண்ட ஒருவார காலத்திற்குள்ளாகவே எனக்கும் பூனைகளைக் கண்டாலே காத தூரத்திற்கு ஓடி விடும்படியான ஒரு அனுபவம் நிகழ்ந்தது. அதுதான் என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது.

அந்தக் கால கட்டத்தில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களெங்கும் திரையிடப்பட்ட அனைத்துத் திரையரங்குகளிலும் அனேகமாக நூறு நாட்களையும் தாண்டி பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்காக, ஒரு விடுமுறை நாளன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள திரையரங்கு ஒன்றிற்கு என் தோழியுடன் சென்றிருந்தேன். நாங்கள் அங்கே போய்ச் சேரும் முன்பே டிக்கட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. வீட்டிற்கு திரும்பிப் போய்விடலாம் என்ற என் முடிவை நிராகரித்து என் தோழி அந்தத் திரையரங்கு வளாகத்திலேயே இருந்த மற்றொரு திரையரங்கின் வேறொரு திரைப்படம் பார்க்கலாம் என்று என்னை வற்புறுத்தவே, வேறு வழியில்லாமல் சம்மதித்தேன். கமல்ஹாசன் நடித்து பாரதிராஜா டைரக்ஷனில் பரபரப்பாக பேசப்பட்ட படம் அது. அப்போது அது ஒரு திகில் காட்சிகள் நிறைந்த திரைப்படம் என்பது எனக்குத் தெரியாது. பொதுவாக சண்டைக் காட்சிகள் என்றாலே காதுகளை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு தலையையும் குனிந்துகொண்டு விடுபவள் நான்…

அந்தத் திரைப்படத்தின் தொடக்கத்திலேயே பூனை ஒன்று பாலுக்குப் பதிலாக ரத்தம் குடிப்பது போன்ற திகில் காட்சியைப் பார்த்தவுடனேயே என்னை என்னவோ செய்ய ஆரம்பித்துவிட்டது. நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த என்னால், அந்தப் பூனை கதாநாயகியின் ரத்தத்தை குடிப்பதற்காக துரத்திக்கொண்டு போவது போன்ற காட்சியைக் கண்டதும் மேலும் படம் பார்க்க முடியாமல் பயந்து எழுந்து வெளியே வந்துவிட்டேன்.

அன்று இரவு தூக்கத்தில், ஒரு பூனை என்னைத் துரத்துவது போலவும், என் தொண்டையை கவ்விப் பிடிப்பது போலவும் கனவு கண்டு வீறிட்டு அலறிக்கொண்டு படுக்கையில் இருந்து எழுந்தேன். தண்ணீர் குடித்துவிட்டு படுக்கலாம் என்று தண்ணீர் குடிக்கப் போனால், நிஜமாகவே என் வாயிலிருந்து ரத்தம் ரத்தமாக வாந்தியெடுக்க ஆரம்பித்து பிறகு மயங்கி விழுந்ததுதான் தெரியும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *