செல்லாச்சியம்மா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 18, 2018
பார்வையிட்டோர்: 7,420 
 
 

செல்லாச்சியம்மா செத்துப் போனாராம். பிரான்சிலிருக்கும் நேசன் போயிருப்பானோ? நேசன் அவர் மகன். ஒருகாலத்தில் வவுனியாவிலிருந்தபோது எங்கள் அயல் வீட்டிலிருந்த அன்பான ஜீவன். இன்று அவர் இல்லை. அவரின் இறப்புச் செய்தியை கேட்கிறதுக்கு எங்கள் மத்தியில் தொடர்புகள் தொடரவில்லை. கால ஒட்டத்தில் கணிசமான மாற்றங்கள். ஒவ்வொருத்தரின் பிரச்சனைகளின் தாக்கம் எல்லோரையும் தனிமைப்படுத்தி விட்டிருந்தன.

செல்லாச்சியம்மா, மெல்லிய சருகு போன்ற காய்ந்த தோற்றம் உடையவர். சுமாரானவர். அவரின் வாழ்வு எழுதினாலும் எழுதாட்டியும் ஒரு காவியம் தான். நெஞ்சுரம், அன்புள்ளம் இவற்றை மூலதனமாகக் கொண்ட மண்ணின் மகள் அவர்.
காலச்சக்கரம் எத்தனை விரைவாக சுழன்று விடுகிறது! மணல், கல் கலந்த அந்த மண் பகுதியில், காடாகவிருந்த போது கந்தர் உடன் அங்கே கால் எடுத்து வைச்சார். அப்ப அவர் புதுமணப்பெண்ணாக இப்பவிருந்ததைவிட பொலிவாகவும் இருந்தார். கந்தர் இளமைக் காலத்தில் புரளிக்காரர். ஊரிலேயே சேட்டைகள் மோசமாக போனதால் பல பேரோடு அவரின் பெயரும் கெட்டிருந்தது. அப்ப அவருடைய அப்பர் செல்லாச்சியை அவருக்கு கட்டி வைச்சிருந்தார். அவள் அவருக்கு மச்சாள் முறையான பெண்.

கந்தருக்கு ஆரம்பத்தில் அவரிலே பிடிப்பில்லாதிருந்தது. பிறகு வாழ்க்கை ஒட்டத்தில் இயல்புக்கு வந்துவிட்டார். அவர் ஒருத்தரே வீட்டிலே அரைப்படிப்பையும் சரியாய் படியாது விட்டவர். அந்த நேரத்தில் ரைவிங் பழகி லொரி ஒடக்கூடியவராக இருந்தார். வவுனியாவிலிருந்து லொரி ஒடுகிறதுக்காக அங்கே பெஞ்சாதியோடு காலடி எடுத்து வைத்தார்.

காடாகவிருந்தது அப்பகுதி.

அவர்களைப் போல ஒரு சிலர் காடு திருத்தி கொட்டில் வீடு போட்டிருந்தார்கள். மண் குந்துகளுடன் கூடிய சுவர்களை உடைய அவ்வீடுகள் துப்புரவாக காணப்பட்டன. ஒலைக்கூரை. கந்தர் ஒரளவு விவசாயம் தெரிந்து வைத்திருந்தார். அவளுக்கும் நாற்று நடுகை தொட்டு எல்லா வேலைகளும் தெரிந்திருந்தன. அவர் பிரளிப்பட்டதால் ஊரிலே வாழ இருவருக்குமே பிடிக்கவில்லை.
அவரிலேயும் பிழையிருந்தது!

அது கிராமத்தில் நடக்கிற இளவட்ட லீலைகளில் ஒன்று. பெடியளாக சென்று சேட்டை விடப்போய். ஊரால் கையும் மெய்யுமாக பிடிபட்டிருந்தார். மானம் பறந்திருந்தது. அதனால் அவர் மனம் உடைந்து போயிருந்தார். மச்சான் முறையான அவரிலே வளர்கிற காலத்திலேயே ஒரு மையலை வைத்திருந்த அவளைப் புரிந்திருந்த தாத்தா, இருவரையும் கட்டி வைச்சு விட்டார் அவரின் தலையிறக்கம் அவளையும் பாதித்தது. எனவே வவுனியாவிற்கு வேலை கிடைத்தபோது கந்தருடன் துணிஞ்சு வெளிக்கிட்டு விட்டார்.

மன்னார் ரோட் பக்கமான அந்த காட்டில் அரச விடுதிகள் சில கட்டியிருந்தார்கள். அதை அண்மித்த பகுதிகளில் காட்டை அழித்து குடியேறல்கள் நடந்தன. அவர்கள் வந்த போது பொதுக்கிணறு வெட்ட வேண்டியிருந்தது. கந்தர் லொறிச்சம்பளமும் சரீர உழைப்பும் கடனாக பெற்றும் காரியங்கள் நடந்து கொண்டிருந்தன. அந்த நேரம் அங்கே அரசாங்க தரப்பு தமிழ் ஆள் ஒருத்தர் எம்.பியாக வந்திருந்தார். குணசேகரம். காட்டை வெட்டுங்கள் உங்களுக்கு கொஞ்ச செலவிலே உறுதிகள் எடுத்து தருகிறேன் என்று வவுனியாவிற்கு புதிதாக வருகிறவர்களை உற்சாமூட்டினார்.

அப்போதைய கோசம் ஒன்று இப்படியிருந்தது: “வென்று விட்டால் குணசேகரன் ஒற்றையடிப்பாதையை திருத்தி வைப்பார்”

கந்தர் வீட்டோடு சேர 15 பரப்பு காணித்துண்டை அடைச்சு வேலி போட்டார். நிலத்தை பயன்படுத்தி நாளைக் கழிச்சதில் அவளின் உழைப்பே கணிசமாகவிருந்தது. ஊரிலே பழகிப்போன அவர் பெண் என்று பின் நிற்காமல் சமையல் நேரம் போக காணியிலேயிருந்தார். வவுனியா வெய்யிலில் கறுத்த தோற்றத்தை இன்னும் பெற்றார்.

லொரி ஒடுற பொழுதை விட கந்தரும் கூடமாட காணியிலே உதவியாயிருந்தார். தண்ணிர் பம்ப் இறைப்பதில் தண்ணிர் கட்டுவதில் ஈடுபடுவார். அயல் அட்டையும் உதவிக்கரம் தந்ததால் காணி திருத்தல் வேலை இலகுவானது. பதிலுக்கு இவர்களும் மற்றவர்கள் காணிகளில் போய் உதவி செய்தார்கள். ஒரளவு கூட்டுக்கைகளாக செயல்பட்ட மனிதாபிமானம் நிலவிய காலம்.

பிரம்மனும், செல்லமுத்துவும், காட்டன்றியின் குடும்பமும், அவர்களும் நண்பர்களாக தொடர்ந்த வாழ்வு. காட்டு பன்றிக்கு காவல் இருந்த பொழுதுகள். பிரம்மன் காட்டுத்துவக்கு திருத்திற ஆளாக அவர் விவசாயம் செய்து கொண்டு துவக்கு திருத்திறதையும் தொழிலாக வைத்திருந்தார். காட்டுப்பன்றி துரத்த அவரின் துவக்கே பெரிதும் பயன்பட்டது. துவக்குக்கு காட்ரிஜ்கள் அடைப்பது, எண்ணெய் போடுவது போன்ற எல்லா வேலைகளையும் செய்தார்.

கந்தர் வீட்டுக் காணியில் மரக்கறி பயிரிட்டார்கள். யாழ்ப்பாண நிலவிலையைப் பார்த்தால் அதிருஸ்டம் என்று தான் இதை சொல்ல வேணும். கடுமையான உழைப்பை கொடுக்க வேண்டியிருந்தது. குணசேகரன் சொன்னது போல எல்லாருக்கும் விரைவிலே உறுதியை எழுதி கொடுக்க வைத்தார். ஒரு ஆள் 3 ஏக்கர் காணி வைத்திருக்கலாம். அடுத்த முறையும் அவர் தான் எம்.பி.

மெல்ல மெல்ல அந்த சிறுமண் காட்டுப் பகுதி விசாலமாகி தார் ரோட்டாகி வருகிற போது. லைட் வருகிற போது ஒரளவு நகர நிலைக்கு உயர்ந்து விடும்.

அவர்கள் காணியில் வசந்தம் பூக்க செல்லாச்சிக்கு வயிற்றில் உண்டாகியிருந்தது. 58ம் ஆண்டு கலவரம் சிங்களப்பகுதியில் நடந்த போது மூத்த மகன் செல்லன் பிறந்தான். சில செவிவழிச் செய்திகள் வந்தன. ஐயர் ஒருவரின் பூணுால் அறுக்கப்பட்டதும். அவர்களின் பெண் பிரசைகள் கெடுக்கப்பட்டதும் பாதிப்பைச் சுமந்தவர்களை நரகாசூர அவதாரத்திற்கு தள்ளியது. ஒன்றோ இரண்டு பேர் கொதிக்கிற தார் ஊற்றப்பட்டும் கொல்லப் பட்டார்கள்.

துவேசங்கள் கண்ணை மறைக்கின்ற போது கொடூரங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு போய்விடுகின்றன.

எப்படியிருந்தபோதும், அவர்கள் தோட்ட காணியில் உற்பத்தியான விளைந்த மரக்கறிகள் பல்வேறு இடங்களுக்கு லொரியில் அனுப்பப்பட்டதால் காசுப்புழக்கமும் இருந்தது. வயற்செலவு கணிசமாக இறைபட்டது. வானம் பொய்க்கின்ற போது புளுதி விதைப்பு நடத்திய அவர்கள் காணிகள் எதிர்பார்த்த பலனை அளிக்காமல் போய் விடுவதுமுண்டு.

செல்லாச்சி வயது முதிர்ந்தவர் போல ஒரு களைத்த தோற்றத்தைப் பெற்றிருந்தார். வவுனியா வெய்யிலும் பொருளாதாரப் பிரச்சினைகளும் மாறி மாறி ஆப்பு வைக்கிறபோது மகிழ்ச்சி என்பது வரைகோடாகி விடுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்த நெற்காணிகளை சகோதரங்களுக்கு எழுதி வைச்சுவிட்டு, காசை மாறிப் போட்டு வவுனியாவில் கல்வீடு கட்டத் தொடங்கியிருந்தார்கள்.
கல்வீடு கட்டுறது வவுனியாவைவிட யாழ்ப்பாணத்தில் கொஞ்சம் மலிவு மணல் சீமேந்து எல்லாம் கொண்டு வாற செலவு மட்டுமே, இங்கே ஒடு எடுக்கிறது கொஞ்சம் மலிவு. லொறி ஒடியபடியால் போய் வாறபோது அவர் வீட்டுச் சாமான்களைச் கொஞ்சமாக கொண்டுவரக் கூடியதாக யிருந்தது.

இந்த விபரங்களை எல்லாம் செல்லாச்சி அம்மாவைக் கேட்டும் எங்க அம்மாவைக் கேட்டும் நான் அறிஞ்சுகொண்டேன்.

செல்லண்ணை தலையில் துணியைக் கட்டிக்கொண்டு வயலில் உழைக்கிற கடும் உழைப்பாளியாக மாறிய போது ரமணி, சுரேஷ் எல்லோரும் ஒரளவு வளர்ந்த கட்டத்தில் அவர்கள் வீட்டுக்கு அயல்வீடாக நாங்கள் வந்திருந்தோம்.
நேசன் என் வயசுக்காரன். எனவே அவனோடு சினேகிதமாகவிருந்தேன். அதைவிட என் அண்ணனும் அக்காவும் அவர்கள் வீட்டோடு ஐக்கியமாகியிருந்தார்கள். ரமணி அக்காவின் சிநேகிதி. இப்படியே குடும்ப நண்பர்களாக மாறியிருந்தோம்.

பள்ளிக்கூடம் போக மிகுதிநேரம் எல்லாம் நான் அவர்கள் வீட்டிலேயே இருப்பேன். ரமணி டீ போட்டு கொடுக்க அதைக் காவிக்கொண்டு போகிற வேலையை பெரும்பாலும் நேசன் செய்தான். நானும் அவன்கூட இழுபட்டேன். அவர்கள் வயற்காணியில் வேலை நடக்கிறபோது காட்டுவழியில் போறது நல்லாயிருக்கும்.

“டேய் பாபு இதைக் கொஞ்சம் பிடி’ என தேத்தண்ணிப் பானையை என்னிடம் தந்துவிட்டு மைனா குருவிகளை அவன் கட்டபோலால் அடிப்பான் ஒரளவுக்கு பொயின்ற் பண்ணி அடிக்கக்கூடியவன். கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருப்பேன். அடிப்பட்டு விழுந்து ரத்தக்காயத்துடன் துடிக்கிறதைப் பார்க்கிறபோது கண்கள் சிறிது கலங்கும். அதே சமயம் என்னால் அடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கமும் இருக்கும். எனக்கு கூட கட்டபோல் அவன் கட்டித் தந்தான்.

மாறிமாறி அடிப்போம். என் கல்லுகள் விர் விர்ரென பக்கத்தாலேயே பறந்துபோகும். நேசனின் ஒரிரண்டு அடி பதுங்கி மெனக்கெட்டு அடிச்சதிற்கு பலன் இருக்கும்.

இருவரும் புளுகப்படுவோம்.

எங்களோடு அவர்கள் வளர்த்த லக்கி, ஜிம்மி, டைகர் என்ற மூன்று நாய்களும் சமயங்களில் வரும். லக்கி மட்டுமே வெள்ளை நிறம். நேசனுக்கு அதன்மேல் பிரியம் அதிகம். அவன் சின்னக்குழந்தையாயிருந்தபோது ஒரு தடவை மிகக் கிட்டடியில் பாம்பு ஒன்று சுருண்டு கிடந்ததாம். அப்ப லக்கியே குலைத்து பாம்பை சீண்டி துரத்தியடிச்சதாம். மற்ற இரு நாய்களும் வயலில் அவர்களோடு தங்க லக்கி மட்டுமே பெரும்பாலும் எங்களோடு இழுபடும்.

காடு நாய்களுக்கு வேட்டைக்களமாகயிருந்தது.

பின்னேரங்களில் செல்லண்ணை, சுரேஷ், நேசன், நான், என் அண்ணா எல்லோரும் வேட்டைக்கு நாய்களோடு போவோம். அன்டன், ராசா என்று இரு பெடியன்களும் எங்களோடு வருவார்கள். இருவரும் சகோதரர்கள். கஷ்டப்பட்டு இருக்கிற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் சகோதரி எங்க வீட்டிலே சமயத்திலே உதவிக்கு வந்து அம்மாவோடு சமைப்பாள். தகப்பன் ஒரு முனிசிபாலிட்டி எலக்ரிசன். குடிகாரன். சின்னப் பொடியன்களாகவிருந்தபடியால் அவர்கள் குடும்பம் முன்னேறவில்லை. அவர்களுக்கு விவசாயமும் தெரியாது.

ஜிம்மி, லக்கி, டைகரோடு போனால், முயலோ, உடும்போ, மரஅணிலோ ஏதாவது ஒன்றைப் பிடிச்சே திரும்புவார்கள்.ஒரு தடவை உடும்பு பிடிக்கிறபோது நானும் இருந்தேன். உடும்பை நிலத்திலிருந்து துரத்திக்கொண்டு நாய்கள் ஒட தடிகளோடு சப்தம் போட்டுக்கொண்டு நாங்களும் அதைத் துரத்தினோம்.
அது பத்தைகள் புதர்களுக்கூடாக ஒடியது. ஒடமுடியாத கட்டத்தில் மரத்தில் ஏறி பட்டையோடு பட்டையாக நின்றது.

நாங்கள் கல்லை எறிந்து கலைத்தோம். கடைசியில் மரத்தை விட்டு இறங்குகிற போது டைகர் பாய்ந்தது. லக்கி ஜிம்மி பாதுகாப்பு கொடுத்து கடித்தன. அந்த போராட்டத்தில் அவற்றிற்கு சிறிது சிறிது காயங்கள் கூட ஏற்பட்டன. ஒரு வன்மத்தோடு உடும்பின் தடிச்ச தோலில் பல்லை பதிக்கிறபோது உடும்பால் அசையமுடியாது போனது. அந்த நேரம் கயிற்றால் காலை, தலையைக் கட்டிக்கொண்டு வெற்றியோடு திரும்பினோம். அன்ரன் ராசாவுக்கு பங்குபோக நேசன்ர வீட்டிலே ஆக்கிறது நடந்தது.

அப்ப, எங்கள் வீட்டார்க்கு மாட்டிறைச்சி சாப்பிடுறதே பெரிய தலைகுனிவு போல ஒரு நினைப்பு. நாங்கள் மச்சம் சாப்பிடுறது குறைவுதான். செல்லாச்சியம்மா சுடுற பெரிய வட்டரொட்டியும் சம்பலும் கலக்கும். இறைச்சி சாப்பிட பஞ்சிப்படுவதால் அவ்வளவு வற்புறுத்த மாட்டார். எங்க அம்மா சுத்த சைவம் என்பது எல்லார்க்கும் தெரிந்திருந்தது. நாங்கள் அப்படி யில்லை. ஆனால் சாப்பிடுறதில் அவ்வளவு ரசனையிருக்கவில்லை.

பிரம்மன் வீட்டிலேயும், வேட்டை நாய்களான ஜோசி, பார்லி, கரியன் இருந்தன. துவக்கு சகிதம் வேட்டைக்கு இன்னொரு குரூப்பாக போவார்கள். சமயங்களில்.பல தடவை வெறுங்கைகளோட திரும்பினார்கள். பிரமனிடமிருந்த நல்ல மனசில் சிறுக.சிறுக வெறுப்பு சேரத்தொடங்கியது.

நாளடைவில்.கூட்டுக்கைகள், உதவிக்கரம் எல்லாம் வலுவிழந்துபோயின.

எங்க வீட்டுக்கு முன்னாலே மாலினி, சுவர்ணா என்ற சிங்களக் குடும்பம் ஒன்று இருந்தது. சுவர்ணாவுக்கு கல்யாணம் கட்டமுதல் மாலினி பிறந்தவள் என என்னவோ கதைகள். சுவர்ணாவின் புருஷன் தச்சுவேலைகள் செய்பவர், அதனால் எல்லாரும் அவரைப் “பாஸ்” என கூப்பிடுவது வழக்கம். பாஸ் செய்த கட்டில்கள் அலுமாரிகள் அவ்விடத்து எல்லார் வீட்டிலேயும் இருந்தன.

அங்கேயே மரம் அரிஞ்சு ஒரளவு நியாயவிலையில் செய்து தருவதால் அவருக்கு நல்ல பேர். சிங்களவராகவிருந்த போதும் கலந்து பழகினார். செல்லாச்சி வீட்டுப் பெடியளும் நாங்களும் இவர்களோடேயே பண்டாரிச்சு புளியங்குளத்திற்கு குளிக்கப் போவோம். குளத்திலே குளிக்கிறதிலே எல்லாருக்கும் சந்தோசம். ஞாயிற்றுக் கிழமையிலே பெரும்பாலும் போவோம்.

பாஸ், மாலினி ஆட்கள் நல்லாய் நீந்துவார்கள்.

சுவர்ணா, நாங்க எல்லாரும் கரையிலே படியிலேயிருந்து குளிப்போம். தத்துத் தண்ணியில் குளிக்கிறபோதும் சமயத்தில் படியை விட்டு தவறி விழுந்து விடுவோம். அப்ப அவர்களே கரை எடுத்து விடுவார்கள்.

பாஸ் வீட்ட எங்களுக்கு நேசம் வளர ஒரு சம்பவம் காரணமாகவிருந்தது. குளத்திலே இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திப்போய் வாறதே போட்டியாய் இருந்தது. அதைப் பார்க்கிற என் அண்ணனுக்கும் நீத்திப் போய் வர ஆசை. அவன் தத்து நீச்சல் காரன். வாழைக்குத்தியை குளத்தில் மிதக்க விட்டு அதைக் கட்டிப்பிடித்துக் கொண்டு நீந்தப் பழகுவான்.

அன்டன் ராசா தாமரைக் கொடிக்கூடாக விலாசமாக நீந்திப் போவார்கள்.

வாழைக் குத்தியோடு அவர்களுக்கு பின்னால் நீந்த ஆரம்பித்தான் என் அண்ணன். நடுவில் போன போது கால் சட்டை கழன்று விடவே அதைப் பிடிக்க வாழைக்குத்தியை விட்டுவிட்டான். அப்ப அவனோடு முன்னுக்கு போன அன்டன், ராசாவே குரல் கொடுக்க, பாஸ், வேகமாக பாய்ஞ்சு நீந்தி போனார்.

அன்று பாஸ் இல்லாவிட்டால் அண்ணரை இன்று நாங்கள் பார்க்க முடியாது!

எங்கக்கா மாலினியோடு பழகியதில் சிங்களம் நல்லாய் பேசுவாள். சிங்களம் என்றது மொழியில் மட்டம் தான். மிச்சப்படி நல்லவர்கள்.

எங்கள் பகுதியில், இன்னொரு சிங்கள குடும்பமும் இருந்தது. குசுமா ஆட்கள்; அவர்கள் வீட்டிலே பன்றி வளர்த்தார்கள். சிங்களப் பகுதியில் வளர்ப்பது போல சேற்றை வைத்து வளர்த்தது எங்களுக்கு அரியண்டமாக விருந்தது. சிறிய கொட்டில் போட்டு மண்சுவர் எழுப்பி வேலி நல்லாய் அடைச்சு அவர்கள் இருந்தார்கள். வவுனியாவிலிருந்து போகிற கண்டி ரோட் முழுவதும் இப்படி. சிங்களவர்கள் நெடுக வாழ்வதைக் காணலாம். அப்படியான கஷ்டப்பட்ட குடும்பங்களில் ஒன்று .

அங்கேயிருக்கையிலே ஒரு தடவை பெரும் புயல் அடிச்சது. வெட்டி வீழ்த்த முடியாத மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ஞ்சிருந்தன. சில பகுதிகளில் போடப்பட்ட அஸ்பெஸ்ரஸ் கூரைகளைக் காணவில்லை. பல வீட்டுக் கூரைகள் சேதம். தண்ணிர் வெள்ளத்தால் எங்கட வீட்டிலே பாஸ் குடும்பம் ஒதுங்கியிருந்தது. நேசன் வீட்டார்கள் பிரம்மன் வீட்டிலே ஒதுங்கினார்கள்.

இயற்கையின் விளையாட்டு முடிந்ததும் சில நாட்களின் பின் செயற்கையின் விளையாட்டு நடைபெற ஆரம்பித்தது. எங்கள் மத்தியில் எல்லாம் அதுவே புதிய செய்திகளாக பேச்சாக விளங்கியது.

இதிலே, சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் யாரோ நீலச்சட்டைக்காரர்களாம். சிங்கள இளைஞர்கள் சிலர் அரசின் பிழையான பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தினார்கள்.

அனுபவக்குறைவோ அல்லது அரசின் பலம் அதிகமோ நின்று பிடிக்க முடியவில்லை.

வவுனியா டவுன் பக்கம் நீலச்சட்டையோடு பிரேதங்கள் ரோடு வழிய கிடந்ததாக கதைத்தார்கள். சேகுவேரா.? என்ற புதிய பெயரை ஆச்சரியத்தோட எல்லாரும் உச்சரித்தோம்

இது நடந்த போது “தமிழ் பெடியன்களையும் சேர்ந்து சுடுகின்றாங்களோ” என்று செல்லாச்சியம்மா கேட்டார். எங்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. பிறகு அவர்கள் கிளர்ச்சி தோல்வியடைந்ததாக செய்திகள் பேப்பரில் வந்தன. கிட்டத்தட்ட பத்தாயிரம் இளைஞர்களுக்கு மேல் அரசு சுட்டுக் கொன்றிருந்தது.

இப்பவும் நாம். ‘வேதம் படிப்பது’ போலத்தான் போராட்டத்தைப் பார்க்கிறோம். இயக்கப் போர்ட்டுகளையும் சாதி போர்ட்டுக்களையும் காவிக் கொண்டிருப்பதால் எங்கள் நிலை பற்றி எங்களுக்கே இன்னமும் சரிவரத் தெரியவில்லை.

ஒருநாள் பிரமன் வீட்டுக்கும் நேசன் வீட்டுக்கும் சண்டையாகி தெறித்துப்போனார்கள். இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஜிம்மியும், டைகரும் தோட்டத்தில் செத்துக்கிடந்தன. லக்கி, நுரை தள்ள நேசனுக்கு அருகில் வந்து நாங்கள் எல்லாம் பார்க்க துடிதுடித்துச் செத்துப்போனது.

பிரமன் வீட்டார், நாய்கள் திரிகிற போது சாப்பாட்டோடு எலிபாசாணத்தை கலந்து வைத்துவிட்டிருந்தார்கள் நாய்களின் அருகே வாடையுடன் கக்கலுமிருந்தன. நேசன் கவலையடைந்தான். செல்லாச்சி வயிற்றெரிச்சலுடன் அரற்றினார்.

பிறகு, அம்மாவுக்கு யாழ்ப்பாணத்திற்கு மாற்றம் கிடைக்க, நாங்கள் வெளியேறி விட்டோம். அதற்கு அவர்களே நிரம்ப கவலைப்பட்டார்கள். யாழ்ப்பாணத்திலும் சிறிது தொலைவு தள்ளியிருந்த ஒரு கிராமத்தில் எங்கள் புதிய குடியிருப்பு அமைந்தது. பிறகு நேசன் ஒரிரு தடவை எங்கவீட்ட வந்துபோனான். ஒரு தடவை நேசன் வந்தபோது நானும் அவனோடு சேர வவுனியாவுக்கு போனேன். இப்ப, நேசன் கால்நடைப் பண்ணையில் வேலையில் இருந்தான்.

நிறைய மாற்றங்கள். பாஸ் குடும்பம் இனக்கலவரத்திற்குப்பிறகு பாதிக்கப்பட்டுவிட்டது.சிங்களவர்கள் என்றபடியால் இவர்கள் வீட்டை ஆமி வந்து பழகத்தொடங்கியது. சுவர்ணா வேறு வடிவான பொம்பிளை. அவர் தாயாராக இருந்த போதும், ஆமி நடத்தைகளிலிருந்து தப்பமுடியவில்லை.

இயக்கங்களின் சந்தேகத்திற்குள்ளான அவர்கள் குடும்பம் அனைவரும் பெடியளால் சுட்டுக் கொல்லப் பட்டிருந்தார்கள். மாலினி எப்படியோ தப்பி சிங்களப் பகுதிக்கு போய்விட்டாள். குசுமா குடும்பமும் வெளியேறி விட்டது.

பிரம்மன் செத்திருந்தார்.

திரும்ப ஒரு தடவை சென்றபோது நேசன் அனுப்பிற பணத்தால் டி.வி. வந்திருந்தது. அதைத்தவிர, உசத்திகளைக் கண்டுவிட்டதுபோல ஒரு சிறிய பட்டாளம். சந்தோசமாக விருந்தார்கள் இவர்கள் மத்தியிலும் சீதனப்பிரச்சனை பெரியதாக விருந்தது. செல்லாச்சியின் அன்பில் கடின உழைப்பில் மரியாதை வைச்சிருந்த என்னால் அவர் அப்பாவித்தனத்தையும் புரிஞ்சுகொள்ள முடிந்தது. மகளுக்கு இறைச்ச சீதனத்தை மகன்மாரை வைச்சு மனதை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணத்திற்கு மீண்டேன். எத்தனை காலம் கூடவே தனிமையாக்கல். மாற்றங்கள். வாழ்வின் அர்த்தம் அவ்வளவாக விராது போல திரும்ப திரும்ப சுற்றும் ஒரே வட்டம். செல்லாச்சியம்மா, செத்துவிட்டாராம், இப்ப எங்கேயோ ஒரு மனிதரிடமிருந்து செய்தி கிடைத்திருந்தது. நாமும் முழுமையான தனிமையாக்கலுக் குள்ளாகிவிட்டோம்.

—————-
‘தாயகம்’பத்திரிகையில் கடைசியாக‌ வந்த சிறுகதை.

இதை விட இரண்டு தொடர்களும் ‘தாயகம்’பத்திரிகையில் வெளியாகின.தாயகத்தில் வந்தவையை அனைத்தும் “வேலிகள்”என்ற பெயரில் குமரன் வெளியீடாக புத்தகமாக வந்தது.நூலகம் இணையத்தளத்தில் வேலிகளை வாசிக்கலாம்.

பதிவுகளிலும் இந்தியனாமி இருந்த ,பவான் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருந்த காலகட்டத்தை உடைய “சலோ,சலோ”என்ற தொடரும் வெளியாகி இருக்கிறது.
—————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *