செக்ரட்டரி மாமா..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 8,442 
 

நான் சிவக்குமார்..மனைவி சித்ரா.. ஒரே மகன் கணேஷ்.. ஏழு வயது!

எங்க வீடு இருந்தது அந்த அப்பார்மெண்டுல.. ! சொந்த ஊர் ராஜ பாளையம் பக்கத்துல .. செட்டில் ஆனது கோயமுத்தூர்..! அப்பா அம்மா தம்பிலாம் ஊர்ல இருக்காங்க. தோட்டம் இருக்கு..

எங்க அப்பார்ட்மெண்ட்ல மொத்தம் அறுபத்து நாலு வீடு..! எல்லாருமே மிடில் க்ளாஸ்.. அதற்கும் சிறிது மேற்பட்ட குடும்பங்கள்தான்..!

எனக்கு நிறைய தெரிந்த முகங்கள் இருக்கிற குடியிருப்புதான்.. என்னடா தெரிஞ்ச முகம்னு சொல்ரானேன்னு யோசிக்காதீங்க… காலைல வேலைக்கு போனா சாயந்திரமா திரும்ப வீட்டுக்கு வந்ததும்.. டிவி பாக்கத்தான் டைம் இருக்கே தவிர.. மற்றவர்களோட கலந்து வாழ இப்பல்லாம் யாருக்கும் நேரம் இருக்கர்தில்லன்னு உங்களுக்கும் தெரியும்தானே..?!

சில பல முகங்கள் எனக்கு நல்ல பரிச்சயம். ஆனா பல பேரை வெளியில எங்கியாவது பார்த்தா கூட அடையாளம் தெரியாத அளவுதான் சிநேகம்… கவலப்பட ஒன்னுமில்ல… அவங்களுக்கும் நான் அப்படித்தான்.!

ஆனா என் மனைவி சித்ரா அப்படியில்ல.. காம்பவுண்டுக்குள்ளயே எல்லா பெண்களும் சேர்ந்து ஒரு அசோஸியேஷன்.. லெண்டிங் லைப்ரரி.. புடவை .. கவரிங் சாமான் விற்பனைன்னு பலதும் செய்யராங்க ஒவ்வொருவரும்.. பொழுது போகணும்ல..! காசு வருதோ இல்லையோ.. சில பல வம்புகள் அப்ப அப்ப வரும்.. அது பரவால்ல..!

எங்க பில்டிங் செக்ரட்டரி.. சாமிநாதன் மாமா.. சுருக்கமா சாமா மாமா ன்னு கூப்டுவோம்..! அவரும் அவர் மனைவி சரோஜா மாமியும் தனியா இருக்காங்க.. எனக்கு எதிர் ஃப்ளாட்டுதான்.. முதல் மாடி..! மகன் ஒருத்தன் இருக்கானாம்.. ஆஸ்திரேலியாவில்… எல்லாரையும்போலத்தான் ஐடி கம்பெனில வேலையாம்.. பல நேரம் பார்சல்ல சாக்லேட்லாம் வரும்.. எல்லாருக்கும் குடுப்பாங்க சரோஜா மாமி..!

மாமா ஏதோ பேங்க்ல உத்தியோகமா இருந்தாராம்.. ஸ்ரீரங்கம் பக்கத்துல சொந்த ஊரு..! நல்லா இங்கிலீஷ் பேசுவார்.. “நீர் தான் ஜாக்சன் துரை என்பவரோ” ன்னு அந்த கால வெள்ளக் காரன்கிட்ட கேக்கரது மாதிரி இருக்கும் உச்சரிப்பு..!

மாமா ரொம்ப ஆக்டிவ்… ஆக்டிவ் ங்கரதோட தொண தொண.. ன்னும் சொல்லலாம் ! பல நேரங்களில் நம்மள நாம விக்கிரமாதித்தனா நினைச்சுக்கர அளவுக்கு நம்ம முதுகுல ஏறி தொங்குவார்..! வயசாய்டுச்சில்ல அதான்..!

காலைல எல்லாரும் ஸ்கூல் ஆபீஸ் போற நேரத்துல அப்பார்ட் மெண்ட் ஆபீஸ் முன்னாடி மெய்ன் கேட்டுக்கு நேரா சேரப் போட்டுகிட்டு உக்காந்திருப்பார்… எல்லாரையும் பேர் சொல்லிக் கூப்பிட்டு ” குட் மார்னிங்..ஆபிஸுக்கா .? போய்ட்டு வாங்கோ” ன்னு பை பை சொல்லுவார்… சின்னப் பசங்க ஸ்கூல் வேன் வந்தா கேட் பக்கத்துல நின்னுகிட்டு வேன் சரியான எடத்துல நிற்கிறதா.. ட்ரைவர் இன்ஜினை ஆஃப் செஞ்சிட்டானான்னு பார்ப்பார்.. ஒவ்வொரு பசங்களும் வேன்ல கரெக்டா ஏறினதும் வேன் கதவைத் தானே மூடுவார்.. போலாம் ரைட் னு சொல்ரவரை அவர் வேலதான்.! இதெல்லாம் இவருக்கு எதுக்கு முந்திரிக் கொட்டத்தனம் னு நான் பல தடவை நினைச்சிருக்கேன்.!

அதே மாதிரி குழந்தைகள் சாயந்திரம் காம்பவுண்டுக்குள்ள கூட்டமா சேர்ந்து விளையாடும் போது..பக்கத்துலயே நின்னுகிட்டு” நீ அப்படி விளையாடாத, நீ இத செய், அங்க ஏறாத, இங்க தாவாத, செவுத்தல கிறுக்காத “ன்னு ஒரே அதட்டல் அறிவுரைதான்..!

என் பையனே” என்னப்பா சாமா அங்கிள் ரொம்ப திட்டராரு”ன்னு அழுவான்.. பல சமயம் சில பல லேடிஸ் சரோஜா மாமிகிட்ட கம்ப்ளெய்ன்ட் பண்ணியிருக்காங்க.! ஆமா மாமா அடங்க மாட்டார்.. மிஞ்சிப்போனா ரெண்டு நாள்தான் வாய மூடிண்டு இருப்பார்!அப்புறம் பழைய குருடி கதவத் தொறடி தான்.!

இந்த மூனாவது ஃப்ளோர் ஆப்ரஹாம் சார் இருக்காரே.. அவர் எக்ஸ் மிலிட்டரி மேன்..மேஜராவோ.. கர்னாலாவோ இருந்தவர்.. சாயந்திரம் ஆச்சுன்னா.. அப்பார்ட்மெண்ட் ஆபீஸ் பக்கத்துல பெஞ்ச் சுல உக்காந்துகிட்டு சிகரெட் பிடிப்பார்..!

சாமா மாமா சும்மா இருப்பாரா..!

” சார்..! இங்க உக்காந்து சிகரெட் பிடிக்கிறீங்களே இது உங்களுக்கே சரியா இருக்கா .? ” னு ஒரு நாள் கேட்டார்.!

ஒரு மாதிரி அசிங்கமா போய்டுச்சு ஆப்ரஹாம் சாருக்கு..!

” ஏன் சார்.! என்ன விஷயம்.!” வெளிய தானே பிடிக்கரேன்? என்ன தப்பு ?” னு கேட்டார்..

இல்ல சார்.! இங்க பிடிச்சாலும்.. புகை நேரா மாடி ஜன்னல் வழியாதான் வர்ரது.. இந்த விங்க் ல இருக்கிற மாடி வீட்லலாம் ஒரே சிகரெட் வாசன . ன்னார்.

” அதுக்கு நான் என்ன பண்ண முடியும்சார்.. காத்தடிச்சா அது என் தப்பா ” ன்னார் ஆப்ரஹாம் சார்!

சாமா மாமா வும் விடரதாயில்ல . “காத்தடிச்சா நம்ம தப்பில்ல சார்.. ஆனா காத்தடிக்கும்னு தெரிஞ்சு இங்கயே உக்காந்து புகை பிடிக்கர்து நம்ம தப்பு தானன்னு கேட்டார் .!

இதக் கேட்ட ஆப்ரஹாம் மாமாவுக்கு மூஞ்சி வெளுத்துப் போச்சி.!

“அது மட்டுமில்ல சார்… அங்க பாருங்க நம்ம வீட்டு சின்ன பசங்கல்லாம் சேர்ந்து விளையாடராங்க. அவங்களுக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கத்த நாமே மனசில விதைக்கணுமா.! நீங்க அணைச்சு ப் போடர சிகரெட்லாம் அவங்க கால்ல மிதிக்கணுமா “ன்னு சர மாரியா கேள்வி கேட்க ஆரம்பிச்சதும்.. ஆப்ரஹாம் மாமா வுக்கு கோபம் வந்திருச்சி.. “சரிசார் இனிமே நான் வீட்லயே பிடிக்கரேன்” னார் கோபமா.!

மாமா அப்படியும் அடங்கல… ” சார் வீட்லயும் பிடிக்காதீங்க.. பக்கத்து வீடெல்லாம் நாறும்..வேணும்னா கடை பக்கத்துலதான இருக்கு.. வர்ர வழியிலயே மரத்தடி கீழ கூட நின்னு பிடிக்கலாமே”ன்னு ஐடியா குடுத்தார் சாமா மாமா..!

சடார்னு பாதி சிகரெட்ட வாய்க்கால்ல தூக்கி எறிஞ்சிட்டு முணு முணுத்துகிட்டே போய்ட்டார்.. ஆப்ரஹாம் சார்..!

ஒரு மிலிட்டரி மேனுக்கு கிடைச்ச மரியாதையப் பாத்தீங்களா சார்..!

அதே மாதிரி என்னோட பக்கத்து பார்க்கிங் ஸ்ரீராம் காரை ஹோஸ் பைப் வெச்சு அலம்பிகிட்டிருந்தார்.. நேரா அவர்கிட்ட வந்தார் சாமா மாமா.

” சார்.. எப்படி இருக்கீங்க..கார் அலம்புரீங்க போல்ருக்கு”னு பேச்சை ஆரம்பிச்சார் சாமா மாமா.

” ஆமாசார்.. வாங்க வாங்க..!” ஸ்ரீராமுக்கு இப்பவே கையில் இருந்த ஹோஸ் பைப் நடுங்குவது தெரிஞ்சது.. நான் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிகிட்டு பேச்சை கவனிச்சேன்!

“இது மாதிரி தண்ணிய ஹோஸ் பைப்புல அடிக்காதீங்கசார்.! தண்ணி நெறைய வேஸ்ட் ஆகும் . கரண்டும்செலவு ..நெறைய தண்ணி தரையெல்லாம் வழிஞ்சு போகுது பாருங்க! பசங்க ஓடியாடி விளையாடர இடம்”னாரு சாமா மாமா.!

ஆ.. னா ஊ னா பசங்கள துணைக்கு இழுத்துப்பாரு. யாரும் எதிர்த்து பேச மாட்டாங்கல்ல. அதான் டெக்னிக் போல!

“இதற்கு பதிலா பக்கெட்ல தண்ணி வெச்சுகிட்டு வண்டிய துடைங்க சார்! தண்ணி செலவு அதிகமா ஆகாது”ன்னு அட்வைஸ் குடுத்தார் சாமா மாமா.!

அதே போல ஏதாவது தட்டு முட்டு சாமான் கார் ஷெட்லயோ..வீட்டு வாசல்லயோ இருந்தா மாமாவுக்கு பொறுக்காது.. வந்து தொண தொணம்பாரு.. “அத எடுத்திருங்க சார். பாம்பு பூச்சி வரும். பாக்க நல்லாயில்ல..வீடா கோடவுனான்னு தெரியல” ன்னு டிசைன் டிசைனா எதையாவது சொல்லி நச்சரிப்பார்..!

எங்க அப்பார்பெண்ட் காம்பவுண்ட ஒட்டியே ஒரு கமெர்ஷியல் காம்ப்ளக்ஸ் ரொம்ப நாளா யாரும் வராம காலியா இருந்தது.. இதே ரியல் எஸ்டேட் கம்பெனிதான் அதையும் கட்டியிருந்தாங்க. பேங்க் ஏதாவது வரும்னு முன்னாடி சொல்லி இருந்தாங்க.. ஆனா பார்த்தா ஒரு நாள் ஒரு ஆர்த்தோ ஆஸ்பத்திரி வந்திருச்சு அங்க.! யாரும் எதிர்பார்க்கவேயில்ல!

எங்க அப்பார்மெண்ட் மெய்ன் ஹைவே ஓரமா இருந்ததால ஏகப்பட்ட ஆக்ஸிடெண்ட் கேஸ்கள் வர ஆரம்பிச்சுது.. நல்ல பிசினஸ்..

பிசினஸ் ஏற ஏற பைக்கு காருன்னு நெறைய வர ஆரம்பிச்சிது அந்த ஆஸ்பத்திருக்கு.. அடிபட்டு வரும் நோயாளிகள் கூட சொந்தக் காரங்களும் கும்பல் கும்பலா வருவாங்க..! கலர் கலரா துண்டுகளும், கறை வேட்டிகளும் கூட அந்த கும்பல்ல இருக்கும்!

வர்ர கும்பல் சும்மா இருக்குமா.? எங்க அப்பார்மெண்ட் கேட்லயே வந்து உக்காருவாங்க சிமெண்ட் தரையில.. பைக்கு காரல்லாம் எங்க அப்பார்மெண்ட் வாசல மறைச்சுதான் நிறுத்துவாங்க!

சும்மா விடுவாரா சாமா மாமா.? விடு விடுன்னு நேரா ஆஸ்பத்திரி ரிஸப்ஷனுக்கே போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணுவாரு. பத்தாததுக்கு எங்க கிட்டல்லாம் கையெழுத்து வாங்கி நேரா பக்கத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணுவாரு.. அவங்களும் “இதோ வர்ரோம் சார்.. பாக்கிறோம் சார்”ம் பாங்க..!

சில சமயம் போலீஸும் வரும்.வந்து மருத்துவ மனை ஓனர்கிட்ட சொல்லிட்டு போவாங்க. ஆனா தெனம் வர்ர ஜனம் கேட்கணுமே..! ஆஸ்பத்திரி நிர்வாகத்தோட தினம் தகராறுதான் சாமா மாவுக்கு.!

இவரோட தொல்ல தாங்க முடியாமலேயே ஆஸ்பத்திரில தனியா ஒரு கார் பார்க்கிங் வாங்கினாங்க பக்கத்து தெருவில.! தனியா ரெண்டு.செக்யூரிட்டி போட்டு கூட்டத்த சரி பண்ணினாங்க.. ஆனாலும் பல நேரங்களில் கண்டுக்காமதான் இருந்தாங்க. வருமானம் முக்கியமாச்சே அவங்களுக்கு?

ஒரு நாள் காலைல என் மனைவி என்ன எழுப்பினாள்..!

“என்னாங்க. என்னாங்க. எந்திரிங்க.. சரோஜா மாமி விடியகாத்தால இறந்துட்டாங்களாம்! ஹார்ட் அட்டாக்காம்” னா என் மனைவி.!

எனக்குத் தூக்கி வாரிப் போட்டிச்சி! “என்னடி சொல்ர.. ரொம்ப நல்லவங்களாச்சே . வயசு கூட அதிகமில்லையேடி.?”

உடனே சட சடன்னு பல்ல தேய்ச்சிட்டு மூஞ்ச அலம்பிகிட்டு மாமா வீட்டுக்கு போனேன்..!

எல்லாரும் கூட்டமா இருந்தாங்க! மாமிய நடு ஹால்ல படுக்க வெச்சிருந்தாங்க..

தல மாட்டுல சேர்ல மாமா உக்காந்திருந்தாரு.. வழக்கம் போல இல்ல.. அமைதியா மாமிய வெறிச்சு பாத்து கிட்டு.!

மெல்ல பக்கத்துல போய் உக்கார்ந்தேன்..!

“வருத்தப் படாதீங்க சார்.. வேதனையாத்தான் இருக்கு. ஆனா என்ன பண்ரது . கடவுள் சித்தம் எப்படியோ.. அப்படித்தானே நடக்கும்” என்றேன் நான்.!

“இதில பெருசா எனக்கு வருத்தம் இல்ல சார்.. நாங்க ரெண்டு பேருமே ரொம்ப நாளா எதிர்பார்த்த நாள்தான சார் இது..? என்ன நான் முதல்ல போகறதுக்கு பதிலா அவ போய்ட்டா” என்றார் சாமா மாமா!

சுரிர்னு ஏதோ உறைச்சுது உள்ள.! ரிட்டயர் ஆனதுக்கு அப்புறம் பசங்க இல்லாம ரெண்டு வயசானவங்க வாழர வாழ்க்கைங்கரது. அவங்க தனக்கான நாள் எப்ப வரும்னு எதிர்பார்க்கிற வெய்ட்டிங் நாட்கள் தான் கர உண்மை புரிஞ்சுது. வேற என்ன சந்தோஷம் இருக்கு அவங்க வாழ்க்கையில.?

சாமா மாமா பையன் ஓடி வந்தான் ஆஸ்திரேலியாவில இருந்து .மனைவி ரெண்டு சின்ன சின்ன பசங்களோட..!

முடிஞ்சுது எல்லாம் . சரோஜா மாமியை தகனம் செஞ்சாச்சு. மாமியை உள்ள தள்ளி ஷட்டரை மூடின உடனே டப்புனு கனவு கலைஞ்ச மாதிரி ஒரு நினைப்பு . ஒரே கத்திரியில் டக்குனு மனித உறவை ஆண்டவன் வெட்டி எறியிற தன்மை புரிஞ்சுது. பிறப்பின் போது தொப்புள் கொடியை டாக்டர் வெட்டி எறியிற மாதிரி.. வெட்டியான் இறப்பின் போது உறவ வெட்டி எறியிறான் இல்லையா .?

ரெண்டு நாள் ஆச்சு முழு அப்பார்மெண்ட்டே இறுக்கமா அமைதியா இருந்தது.. ஆனா பசங்க மட்டும் வழக்கம் போல விளையாடிகிட்டு இருந்தாங்க..! ஆனா சாமா மாமா கிட்ட மட்டும் வராம தள்ளியே இருந்தாங்க..

மாமா வழக்கம் போல அப்பார்ட்மெண்ட் ஆபீஸ் முன்னாடி சேர போட்டுகிட்டு விளையாடர பசங்களயே வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தாரு.. சுத்தியும் கூட்டம்.. நாங்க எல்லாரும்தான்.!

” மாமாவோட பையன் சீனிவாசன் ஆரம்பிச்சான். “அப்பா போதும்பா வந்திருங்க எங்களோட ஆஸ்திரேலியாவுக்கு . இனிமே தனியா என்ன பண்ணப் போறீங்க ” ன்னான்.

“ஆமாம் மாமா. அத்தையும் இல்லாம இனிமே சொந்த பந்தமில்லாம எதுக்கு இங்க தனியா இருக்கணும். வந்திடுங்கோ” என்றாள் மருமகள்.. சீனிவாசன் மனைவி.

“ஆமாம் மாமா.. பேரன் பேத்திகளோட இனி நிம்மதியா ஆஸ்திரேலியாவில இருந்துடுங்க” என்றேன் நான்!

மாமா பேச ஆரம்பிச்சார்..!

“இல்ல வாசா.. எனக்கு ஊருன்னா அது இதுதான்! இதுதான் என்னோட அடையாளம் . ஆஸ்திரேலியா தரும் தனிமைல என்னால வாழமுடியாது .! வேணும்னா நீ இங்க வந்திடு ” ன்னாரு..!

மருமகளோட முகம் லேசா வெளிறி போச்சு. முகத்துல ஒரு அவசரம் தெரிஞ்சது.!

“என்னப்பா சொல்ரீங்க .. நான் எப்படி வர முடியும். நீங்க ஒருத்தர் தான இங்க இருக்கீங்க.? நீங்க எங்களோட வந்திரலாம்ல! யார் இருக்கா இங்க உங்களுக்கு? ” என்றான் ..சீனிவாசன்

மருமகள் முகத்தில ஒரு நிம்மதி திரும்ப வந்திடுச்சு இப்ப.!

“என்னப்பா சொல்ர? யார் இருக்கா ன்னா கேட்டே.. இங்கதான்டா எனக்கு எல்லாருமே இருக்காங்க.! செத்துப் போன உன் அம்மாவும இங்கதான் இருக்கா.! இதோ விளையாடாங்களே இவங்கல்லாம் கூட என் பேரன் பேத்திகதான்.! இதோ நிக்கராஙளே ( எங்ளையெல்லாம் கை காட்டி) இவங்க தான் என் பசங்க,பொண்ணுங்க.. இந்த அப்பார்ட்மெண்ட்ல மொத்தம் அறுபத்தி நாலு வீடு இருக்குன்னு எல்லாரும் நினைக்கராங்க.. ஆனா எனக்கும் உன் அம்மாவுக்கும் இந்த மொத்த அப்பார்ட்மெண்ட்டே எங்க வீடுதான்டா.. இத்தன பெரிய அடையாளத்த விட்டுட்டு என்னால வர முடியாதுடா வாசா. என்ன இன்னும் கொஞ்ச நாள்தான.!? அப்புறமா நானும் போய்ட்டா உனக்கு இவங்க தகவல் சொல்லுவாங்க. முடிஞ்சா ஒரு நட வந்துட்டு போ ” ன்னாரு சாமா மாமா! அழுத்தமா சொன்னாரு.!

வேற ஒன்னும் பேசல.. தூரத்துல விளையாடிட்டருந்த குழந்தைகளை நோக்கி நடந்து போனாரு சாமா மாமா!

தலையக் குனிஞ்சிகிட்டே வீட்டுக்கு போய்ட்டான் சீனிவாசன் .

மறு நாள் நைட் விமானத்துல சீனிவாசன் அவன் மனைவிலாம் ஊருக்கு போய்ட்டதா என் மனைவி சொன்னா.!

மறுநாள் காலைல வழக்கம் போல ஆஃபீஸ் கிளம்பினேன் காரை எடுத்துகிட்டு வெளிய வரும்போது ஆஸ்பத்திரியில ஏதோ எமர்ஜென்ஸி கேஸ் போல..வழக்கம் போல கேட் டை அடைச்சிகிட்டு ஒரே கும்பல்..!

” நகருங்க சார்.. ப்ளீஸ் நகருங்க வழி விடுங்க.. இப்படி கேட்டை அடைச்சிகிட்டு உக்காந்திருநதா நாங்கல்லாம் எப்படி வெளிய போறது வர்ரது ” ன்னு அவங்கள விலக்கிகிட்டிருந்தார் நம்ம சாமா மாமா..!

நீங்க வாங்க சார்.. வழி இருக்கு ன்னு என் காரை முன்ன வரச் சொன்னார் சைகையினால..!

மெள்ள வண்டியை உருட்டிகிட்டு அவர் பக்கத்தில போய் நிறுத்தி கண்ணாடியை எறக்கினேன்.. ” சார் சாயந்திரம் ஃப்ரீயா.. மார்க்கெட் போலாமா.. சித்ரா வேற காய்கறி வாங்கிட்டு வச் சொன்னா எனக்கு பழக்கமில்ல . கூட வந்து ஹெல்ப் பண்ரீங்களா? ” ன்னு கேட்டேன்.

“அதுக்கென்ன சார் . பேஷா வர்ரேன்.. சாயந்திரம் நான் ஃப்ரீதான்”ன்னு சொன்னார் சாமா மாமா.. முகத்தில ஒரு சந்தோஷம் ..!

“வர்ரேன் சார் “னு சொல்லிட்டு வண்டியை மெல்ல நகர்த்தி மெய்ன் ரோட்டுக்கு வந்தேன்.

செல் போன்ல என் மனைவியைக் கூப்பிட்டேன் !

” என்னங்க.. ஏதாவது மறந்துட்டீங்களா? இப்பதான போனீங்க?” என்றாள் என் மனைவி”

“இல்லம்மா.. சாயந்திரம் மார்க்கெட்டு போலாமான்னு சாமா மாமா கேட்டாரு..போய்ட்டு வரலாம்னு பாக்கிறேன் . உனக்கு என்ன வாங்கணுமோ லிஸ்ட்டு போட்டு வை” என்றேன் என் மனைவியிடம்.!

” என்னாங்க இது புதுசா இருக்கு.? நீங்க மார்க்கெட் போறீங்களா நெஜமாத்தான் சொல்ரீங்களா”ன்னு கிண்டலடித்தாள் சித்ரா .

“இல்லம்மா. சரி அத விடு.. நம்ம அப்பார்ட்மெண்ட்ல லேடீஸ் அசோஸியேஷன் இருக்கில்ல.?” என்றேன் நான்.

“ஆமாங்க அதுக்கென்ன இப்ப.?”

“நீங்கல்லாம் சேர்ந்து சாமா மாமா வ இனி பாத்துக்கிறீங்களா.. காபி டிபன்லாம் அவருக்கு இனிதர யார் இருக்கா நாமதான பாத்துக்கணும் ?. ” என்றேன் நான்..!

சற்று நேரம் அமைதியா இருந்த என் மனைவி சொன்னா.. அவளுக்கு புரிஞ்சிடுச்சு ..!

” சரீங்க..புரியுது.! நீங்க சொன்னபடியே நாங்க பாத்துக்கறோம்” னு சொன்னாள் சித்ரா .

சந்தோஷமா ஃபோன அணைச்சிட்டு பின்னால ரிவ்யூ மிரர்ல பார்த்தேன்.. சாமா மாமா இன்னும் அந்த கும்பலோட கைய ஆட்டி ஆட்டி பேசிட்டு இருந்தார்..!

“இந்த வாரம் ராஜபாளையம் போய்ட்டு வரணும்.குடும்பத்தோட… இனி அடிக்கடி போகணும்” என நினைத்துக் கொண்டேன்.!

திருப்தியாக கியரை மாற்றி வண்டியை மெய்ன் ரோட்டில் நகர்த்தினேன் நான் ..!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *