சூட்சும இடைவெளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2022
பார்வையிட்டோர்: 6,856 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்க வேண்டுமென்ற தணியாத ஆசை எனக்கு. ஆனால் படுக்கையில், இருக்கையில், நடக்கையில், பயணிக்கையில்… எந்நேரமும் மரண பயம் என்னை மீசை முறுக்கி ஓங்கிய அரிவாளுடன் துரத்திக் கொண்டிருக்கிறது.

பள்ளிவாசலில் போகும்போது பயானில் (சொற்பொழிவு) மவுலவியும், தெருவில் நடக்கையில் மதப் பிரச்சாரம் செய்வோரும் எதிர்வரும் மரணத்தைச் சொல்லியே பயமுறுத்துகிறார்கள். அவ்வளவுக்குப் பெரிய உருவமா மரணம் என்ற கேள்வி அடிக்கடி எனக்குள் கலவரத்தோடு எழுந்து அடங்கும்.

என் உம்மாவும் வாப்பாவும் மரணித்துப் போனவர்கள். மரணம் கிழித்த கோட்டைத் தாண்டுவதற்கு முன்பும் தாண்டியதற்குப் பிறகும் அவர்களுடைய முகங்கள் அமைதியாகவே காணப்பட்டன. பயமுறுத்தப் பட்டுப் பயந்துவிட்ட பாவனை, அவர்களுடைய முகங்களில் இல்லவே இல்லை. உறங்கிக் கிடப்பதாகவே காணப்பட்டனர்.

பக்கத்து வீட்டு மூத்தும்மா (பெரியம்மா) எப்பவும் ‘அல்லா! மவுத்தை (மரணத்தை) தா’ என்று கையேந்திய வண்ணமாகவே இருப்பார். மூத்தும்மா வரவேற்பதும் மதப் பிரச்சாரகர்கள் பயமுறுத்தக் கூடியது மான மரணம், எந்த வடிவில் இருக்குமென்று தொலைவில் நின்று தெரிந்து கொள்வதற்கு, வெளியே சொல்ல விரும்பாத ஒரு வகை ஆசை, காலடி ஓசை கேட்பிக்காமல் எந்த வாசல் வழியாக நுழைந்து ஆயுதப் படைகளின் மத்தியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மன்னர் களை, ஜனாதிபதிகளை, பிரதமர்களை, அமைச்சர்களை எவ்வாறு அணுகி, சங்கைக் குத்தித் துளைபோட்டு உள்ளிருந்து புடைக்கும் கோழிக்குஞ்சை இராஞ்சிக் கொண்டு மாயமாய் மறைகிறது? இராஞ்சிச் செல்லும் அந்த மரணத்தின் வடிவமைப்புதான் என்ன? பருந்தா, கழுகா, ஈயா, கொகவா?

மதரஸாவில் குர்ஆன் ஓதச் சென்றிருந்த போதும், குழந்தைகளான எங்களுக்கு மரணத்தைப் பற்றி லெப்பை சொல்லித் தந்தார். ஒவ்வொருவருடைய ஆயுட்கால அளவு இவ்வளவுதான் என்று அல்லா, அவனு டைய பக்க முடிவில்லாத நாட்குறிப்பில் குறித்து வைத்திருக்கிறான். ஆயுட்காலம் நெருங்கியதும் அவனுடைய வானவர் படையில் உயிரைப் பிடிக்கும் பிரிவைச் சார்ந்த ‘இஸ்ராயில்’ என்ற வானவரை ஏவி உயிரைப் பிடிப்பான். ‘கபரில்’ புதைத்து விட்டு உறவினர்கள் வீடு திரும்பியதும் ‘முன்கர்-நக்கீர்’ என்ற இரு வானவர்கள் மனித கண் களுக்குப் புலப்படாமல் பறந்து வந்து கபருக்குள் (புதைகுழிக்குள்) நுழைந்து விடுவார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான விடை சொல்ல வேண்டும். சொல்லா விட்டால், கபருக்குள் நாலா பக்கங்களிலிருந்து தேளும் பாம்பும் போன்ற விஷப் பிராணிகள் பாய்ந்து வந்து அவனை உலக முடிவு நாள் வரை கொத்திக் கொண்டே இருக்கும்.

இதைக் கேள்விப்பட்டபோதே எனக்கு மரண பயம் ஏற்பட்டது. கேள்விகளுக்குப் பதில் சொல்வது எப்படி? பேசத் தெரியாத குழந்தைகள், ஊமைகள் எப்படிப் பதில் சொல்வார்கள்… போன்ற பற்பல கேள்விகள், அந்நேரமே எனக்குள் குமிழிட்டது. சிறு வயசு முதற்கொண்டு மனம் குழம்பித் திரிந்த என் காதில் மரணச் செய்திகள் வந்து விழும் போ தெல்லாம் ஓர் உள்நடுக்கமும், மரணமடைந்தோரைப் பற்றிய கவலையும்.

இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லத் தெரியுமா?

மாங்காய் திருட மாமரத்தில் ஏறிய ரஹீம், கொம்பு ஒடிந்து, விழுந்த இடத்திலேயே செத்துப் போனான். பாவம் ஏதும் செய்யாதவர்களுக்குக் கபருக்குள் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தானாகவே பதில் வந்து விடும். ஆனால் மாங்காயும் தேங்காயும் திருடி நடந்த குடிகார ரஹீம் எப்படிப் பதில் சொல்வான் என்று தெளிவு ஏற்படவில்லை. கேள்விகள் எப்படிப்பட்டவையாக இருக்கும்? பதில்கள் எப்படி அமைய வேண்டும்?

ரஹீமை அடக்கம் செய்யத் தூக்கிச் சென்றபோது, பாலிய நண்பன் என்ற முறையில் நானும் இறுதி ஊர்வலத்தின் பின்னால் நடந்தேன். திருட்டுப் பயல் என்பதால், சொல்லும்படியான கூட்டம் சேரவில்லை. இதுவே அவனுக்கு ஓர் இறைத்தண்டனை என்று பிற்பாடு சிலர் சொல்லக் கேட்க முடிந்தது. மிகச் சிலரைக் கொண்ட ஊர்வலம் ஆனதால் நழுவ முடியாமல் பீதியோடு மயானத்திற்குள் கால் பதித்ததும், ஒரு நடுநடுக்கம் நெஞ்சிற்குள். மயானப் பரப்பில் வளர்ந்து காணப்பட்ட காட்டில், ஆடு மாடுகள் மேய்ந்து திரிந்து கொண்டிருந்தன. மரக்கிளை களிலும் மயானச் சுவர் மீதும் சலம்பாமல் உட்கார்ந்து கொண்டிருந்தன பறவைகள்.

சடலத்தை எடுத்துக் கொண்டு மயான வாசலை அடைந்ததும் புல் மேய்ந்து கொண்டிருந்த ஆடு மாடுகள் அலறி அடித்துக் கொண்டு திசை தெரியாமல் மிரண்டு ஓடியதும் பறவைகள் கல்லடி பட்டது போல் கத்திக் கொண்டு சிதறிப் பறந்தோடியதும் எதற்கென்று புரியவில்லை.

‘அடக்கம் செய்ய வந்தவர்கள் அமைதியாகச் சோக முகங்களோடு நிற்கையில் ஏன், எதற்காக இவை வெருண்டு ஓட வேண்டும்? அதுதான் அப்பவே எனக்குள் ஒரு புதிராக இருந்து வந்தது. புரியாமையுடன் நின்றிருந்தபடி மயான விரிவில் பார்வையை ஓட்டித் திரிகையில், பின்னிட்டுப் போன அரைமணிக்குள் ரஹீமின் சடலத்தை மண்ணிட்டு மூடிவிட்டார்கள். தூரத்து உறவினர்கள் மயானத்தை விட்டு வெளியேறிய பிறகு, சில நெருங்கிய உறவினர்கள் கபரைச் சுற்றி நிற்கையில் புகை உமிழும் ஊதுபத்தியைத் தலைமாட்டில் நாட்டிக் கொண்டு லெப்பை அங்கேயே குந்தி உட்கார்ந்து கொண்டார். அவருடைய வாயைக் கபரோடு நெருக்கமாக வைத்துக் கொண்டு, சப்தம் வெளியே கேட்காதவாறு புதைக்கப்பட்டவருக்கு மட்டும் கேட்கும்படி, ரகசியமாக அரபி மொழி யில் ஏதோ சொன்னார். பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் வினவிய பொழுது ‘தல்கீன்’ என்று பதில் கிடைத்தது.

புரியாமையைச் சிறு புன்னகை வாயிலாக உணர்த்திய போது, ஒரு பெரியவர் பக்திப் பரவசத்தோடு பதில் தந்தார்.

‘இப்பம் மலாயிக்கத்துக்கள் (வானவர்கள்), கபருக்குள் கேள்வி கேட்கும் நேரம். அங்குக் கேட்கப்படும் கேள்விகளுக்கு, இங்கிருந்து லெப்பை இறந்தவர்களுக்குப் பதில் சொல்லிக் கொடுக்கிறார்.

மீண்டும் ஒரு மேக மூட்டம் என்னைச் சூழ்ந்தது. வெளியே உட்கார்ந்து கொண்டு, புதைகுழிக்குள்ளே கிடக்கும் சடலத்திற்குப் பதில் சொல்லிக் கொடுக்கும் லெப்பைக்கு உள்ளே கேட்கப்படும் கேள்விகள் எப்படித் தெரியும்? இவர் சொல்லும் பதிலை உள்வாங்குவதற்கான கேள்விப் புலன் அந்த மய்யித்திற்கு (சடலத்திற்கு) உண்டா? கேட்கக் கூடாத இப்படிப்பட்ட சில சந்தேகங்கள் எனக்கு. அத்துடன் கேள்விகள் எப்படிப்பட்டவை என்றும்.

புரியாமையுடனான என் பார்வையின் அர்த்தங்களை ஊகித்துக் கொண்டு பெரியவர் தொடர்ந்தார்.

‘ஒவ்வொரு கேள்வியையும் அதற்குரிய பதிலையும் சொல்லிக் கொடுக்கிறார் லெப்பை.’

‘ஒரே மாதிரியான கேள்விகளும் அதற்கு ஒரே மாதிரியான பதில் களும்தானா?’ என்று கேட்டதற்கு ஆமாவென்றார்.

‘அப்படியானால் கேள்வி பதில்களை ஒவ்வொருவரும் மனனம் செய்து கொள்ளலாமே?’என்றேன்.

‘இல்லை. துனியாவில் (உலகில்) நன்மை செய்தவர்களுக்கு மட்டுமே. கேள்விகளுக்கு உடன் பதில் சொல்ல முடியும். அப்படிச் சொல்பவர்களுக்குச் சொர்க்கப் பதவியும் கிடைக்கும். பதில் சொல்ல முடியாத பாவிகள் நரக நெருப்பில் கிடந்து எரிய வேண்டும். பாவி களை கியாமம் (உலக முடிவு நாள்) வரை விஷப்பாம்புகள் தீண்டிக்கொண்டேயிருக்கும்.’

இவ்வளவு காலமும் இறந்தவர்களுக்கு, அவர்களுடைய புதை குழிகளுக்குச் சென்று கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்த லெப்பை, அவருடைய படுக்கையிலேயே இறந்து கிடந்தார். சிறு பருவத்தில் எனக்கு குர்ஆன் ஓதித் தந்தவரானதால் அந்த ஈம ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமலிருக்க முடியவில்லை. அவரைப் புதைத்த கபரின் தலைமாட்டில் வாயை நெருக்கமாக வைத்துக் கொண்டு, பெரிய பள்ளிவாசல் லெப்பை தல்கீன் (சொல்லிக் கொடுப்பது) எதற்கென்று விளங்கவில்லை .

இறைநெறிப்படி வாழ்ந்து வந்த லெப்பைக்குமா சொல்லிக்கொடுக்க வேண்டுமென்று வினவியபோது ஒருவர் சொன்னார்.

‘யார் பாவி, யார் பாவி இல்லை என்று யாருக்குத் தெரியும்?’

தந்த பதில் என் மூளையைக் குடைந்து கொண்டிருந்தது. குர்ஆனை ஓர் அளவு மனனம் செய்து கொண்ட லெப்பையையும் மரணம் விட்டு வைக்கவில்லை என்றபோது, எனக்கு இன்னும் மரண பயம் அதிகரித்தது. இராப்பகல் என்றில்லாமல் மனைவியை, படிப்பு முடிவுறாத பிள்ளை களை, உடன் பிறப்புகளை எல்லாம் விட்டுச் செல்ல நேருமே என்ற துயரச் சிந்தனைகள், லெப்பையின் மரணத்திற்குப் பின் எனக்கு.

மரணத்தோடு மல்லுக்கட்டித் தோல்வியுற்றாலும், புதை குழிக் குள்ளாவது நிம்மதி கிடைக்குமா என்றால் அங்கேயும் கேள்விக் கணக்குகள்! உரிய பதில்கள் சொல்ல நா உயரவேண்டும். இல்லையேல், விஷப் பிராணிகளின் இடைவிடாத தீண்டல்கள் உலக இறுதி நாள் வரை! உலக முடிவிற்குப் பிறகு உலக ஆரம்பம் முதல் பிறந்து இறந்த அனைத்து மனிதர்களையும் இறைவன் உயிர்ப்பித்து எழுப்பி மஹ்சர் என்ற திடலில் அனைவரையும் ஒன்று கூடச் செய்வான். அங்கு இறைவனே நேரடியாகத் தோன்றிப் பல கேள்விகள் கேட்டுச் சொர்க்க வாசிகளையும் நரகவாசிகளையும் தனித்தனியாகப் பிரிப்பான். இந்தப் பிரிவினை நடக்கவிருக்கும் உலக முடிவு நாள் வரை, புதைகுழிக்குள் வேறு தண்டனைகள் அனுபவிக்க நேருமே என்ற தீராத கவலை.

விபத்தில் மாட்டிய மூத்தும்மாவின் மரணத்திற்குப்பின் காற்று, தண்ணீர், நெருப்பு, மரங்கள், மிருகங்கள், கார்கள் எல்லாமே திகிலூட்டிக் கொண்டிருந்தன. எந்த உருவத்தில், எந்த நேரத்தில், எந்த இடத்தில் வைத்துத் தாக்குமென்று அறிய முடியாத மனச்சஞ்சலம். கொந்தளித்துக் கொண்டிருக்கும் மனத்தோடுதான் படுப்பதும், நடப்பதும் பயணம் செய்வதும்.

இப்படியெல்லாம் குழம்பிக் குலைந்து போன மனத்தோடு கண் மசங்கிக் கொண்டிருக்கையில் என் மரணம் நிகழ்ந்தது.

ஒரு வெள்ளைத் துணியால் நான் மூடப்பட்டிருந்தேன். என்னைச் சுற்றி உறவினர்கள் உட்கார்ந்துகொண்டு, நான் செய்யாத பல நல்ல காரியங் களை நான் செய்ததாகப் புகழ்ந்து சொல்லிச் சொல்லி அழுது கொண்டி ருந்தது என் காதில் விழுந்து கொண்டிருந்தது. நான் இறந்து விட்டது எனக்கே தெரியவில்லை. அப்படியிருக்க, எதற்காக அழுகிறீர்கள் என்று உரக்கக் கேட்டது, அவர்களுடைய காதில் போய் எட்டவில்லை.

வெளியூரில் வேலை பார்க்கும் தம்பி வந்ததும் அடக்கம் செய்வோம் என்று கூறியது என்னை நடுங்க வைத்தது. எதற்காக என்னை அடக்கம் செய்யவேண்டுமென்று உரத்த குரலில் கத்தினேன். கிடத்தப்பட்டு துணியால் மூடப் போட்டிருந்த எனக்கெதிரில் சுவர் மீது நகராமல் ஒட்டியிருந்த ஒரு பல்லி நான் போட்ட சத்தத்தில் ஓடி ஒளிந்தது எங்கே என்று தெரியவில்லை . எல்லோரும் ‘சஹாதத் கலிமா’ என்ற மூல மந்திரம் உருப்போட என்னைக் கட்டிலோடு தூக்கிச் சென்றது, குளியலறைக்கு. தினமும் சுத்தமாகக் குளித்துக் கொண்டிருக்கும் என்னை வலுக்கட்டாயமாகக் குளிப்பாட்டத் தூக்கிச் செல்ல வேண்டிய தேவை என்ன ஏற்பட்டது? பிள்ளைகளின் திருமணங்கள் சிறப்பாக நடத்திவிடவும், மேலும் கொஞ்ச காலம் வாழவும் விரும்பும் என்னை இறந்துவிட்டதாக எண்ணிக் குளிப்பாட்டி எங்குக் கொண்டு செல்லப் போகிறார்கள்.

நான் இறக்கவில்லை என்று போட்ட கூப்பாடு, துக்கம் கேட்க அங்குக் குழுமியிருந்தவர்களில் ஒருவருடைய காதில்கூட விழவில்லை . ஒவ்வொருவரும் என்னை மறந்து அவர்களுடைய தனிப்பட்ட விஷயங் களைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குளிப்பாட்டிய பிறகு என் ஈடேற்றத்திற்காக என்னைச் சுற்றி உட்கார்ந்து குர்ஆன் ஓதிக் கொண்டி ருந்தார்கள். என்னுடைய எதிர்ப்புக் குரலை மீறிப் பலவந்தமாக ஒரு கோடித் துணியில் என்னைச் சுற்றி மூன்று கட்டுகள் வரிந்து இறுக் கினார்கள். மூன்றாவது மனைவி, மக்கள் கதறக் கதற, சந்தூக்கில் (சடலத்தை எடுத்துச் செல்லும் பெட்டி வைத்து வீட்டுக்கு வெளியே எடுக்கும்போதே உரக்கக் கத்தினேன். ‘என்னைப் புதைக்காதீர்கள். நான் இறக்கவில்லை.’

பள்ளிவாசலுக்குள் எடுத்துச் சென்றதை உணர்ந்து கொண்டேன், லெப்பையையும் மூத்தும்மாவையும் ரஹீமையும் முன்னால் வைத்துத் தொழுதது போல், என்னையும் வைத்து ஒரு பெரும் கூட்டம் எனக்காக ஒரு தொழுகை நடத்தியது. தொழுகை நடக்கும்போதே சந்தூக்கில் கிடந்து கொண்டு உரக்க உரக்கச் சொன்னேன். ‘நான் இறந்துவிட்டதாக நினைத்து நீங்கள் என்னை அடக்கம் செய்யப் போகிறீர்கள். நான் இறக்க வில்லை. நீங்கள் தொழுகையில் என் ஈடேற்றத்திற்காக வேண்டுவதெல்லாம் என் காதால் கேட்க முடிகிறது. ஆனால் நான் எவ்வளவோ உரக்கக் கத்தியும் என் குரலை உங்களால் கேட்க முடியவில்லை . என் கத்தல், உங்களில் யாராவது ஒருவருடைய செவியில் விழுமேயானால் அவருடைய கபாலம் சுக்கு நூறாகிப் போயிருக்கும். என் அலர்ச்சை ஏற்படுத்தும் பூமி அதிர்வில், நீங்கள் என்னைப் போட்டு விட்டு ஓடி விடுவீர்கள். அதனால்தானோ என் குரல் உங்கள் காதில் எட்டாதபடி உங்களுக்கும் எனக்கும் இடையே ஒரு சுவர் வளர்க்கப்பட்டிருக்கிறது. உயிர் உடையவர்களையும் உயிரற்றவர்களையும் பிரிக்கும் அதி சூட்சும மான தடுப்புச் சுவர்!

பள்ளிவாலுக்கு வெளியே எடுத்துச் செல்லும் போதும் கத்தினேன்என்னைப் புதைக்காதீர்கள் என்று. இருந்தும் விடாப்பிடியாக , சஹாதத் கலிமா என்ற மூல மந்திரம் உருப்போட்ட வண்ணம் , பள்ளிவாசலுக்குத் தென்பகுதியிலுள்ள மயான வாசலில் நுழையும் நேரம்தான் பல முறை பார்த்தும் புதிராக இருந்த அந்த அற்புதம் நிகழ்ந்தது. மயானக் காட்டில் புல் மேய்ந்து கொண்டிருந்த விலங்குகள் என்னைப் பார்ப்பதை நான் பார்த்தேன். என்னைப் புதைக்காதீர்கள் என்று நான் கத்திய கத்தலின் தாக்குதலால் கபால எலும்புகள் நொறு நொறுங்கிப்போகுமென்ற அதிர்ச்சியில் அவை மிரண்டு ஓடி வெளியேறின. பாசி பிடித்துக் கறுத்துப்போன கல் சுவர்களிலும் மரக் கொம்புகளிலும் உட்கார்ந்து கொண்டிருந்த பறவைகளின் குருத்து எலும்புகள் ஒடிந்து தூளாகாமல் இருக்க, வானவீதியில் சிறகடித்துத் தப்பி ஓடின. என் சடல வாடையை மோப்பம் பிடிக்க நின்று கொண்டிருந்த நாய்களும் கல்சுவரை எகிறித் தாவி மறைந்தன.

நான் எழுப்பிய கத்தலைச் செவியுற, கேள்விப் புலன் வழங்கப் படாத மனிதர்கள், ஆழமாகத் தோண்டிப் போடப்பட்டிருந்த குழிக்குள் என்னைத் தூக்கி வைத்ததும், வரிந்து கட்டிய மூன்று கட்டுகளை அவிழ்த்து விட்டதும், மேல் பலகையைக் கொண்டு மூடியதும் கண் மூடித் திறப்பதற்குள் நிகழ்ந்தன. அடக்க இடத்தில் நின்று கொண்டிருந் தவர்கள், மூன்று பிடி மணலைக் கையால் அள்ளி என்மேல் போட்டார்கள். உன்னால் ஏற்பட்டுக் கொண்டிருந்த தொல்லைக்கு முடிவு கிடைத்து விட்டது என்று கூறி என் மீது மண் போட்டவர்களும் அக்கூட்டத்தில் பெரும்பான்மையினராக இருந்தனர்.

திமிறி நான் வெளியே குதித்துத் தப்பித்துக் கொள்ளாமல் இருக்க, ஏராளம் மண்ணை என் மீது போட்டு மிதித்தனர். பிறகு என் தலை மாட்டில் உட்கார்ந்து கொண்டு லெப்பை சொல்லித் தந்த கேள்வியும் பதிலும் தெள்ளத் தெளிவாகக் கேட்டது.

உன் இறைவன் யார்?

அல்லாஹ்!

உன் நபி யார்?

முகம்மது நபி

உன் மார்க்கம்?

தீனுல் இஸ்லாம்!

கேள்விகளும் அவற்றுக்குரிய விடையும் சொல்லி முடிக்கு முன் கபரின் பக்கவாட்டில் இருந்து இரு வாசல்களைத் திறந்து கொண்டு திடுமென இரு வானவர்கள் தோன்றினார்கள். பறந்து வர அவர்களுக்குச் சிறகுகள் இல்லாமலிருந்தன. கபர் சுவரைத் துளைத்து வந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. அவர்களுடைய முகங்கள் எலி முகம் போல் கூரிய தாகவுமில்லை துளைத்து வர. எனக்கு முன் உள்ளே நுழைந்து பதுங்கிக் கொண்டார்களேயானால் வெளியேறுவதற்கான வழி? சிபிஐ அதிகாரி களின் கடுப்பான முகத் தோற்றமாக இருந்ததால் வந்தவர்கள் வானவர் களான முன்கர் நக்கீர் என்று தெரிந்து கொள்வதற்கு அறிவுப் புலன் எனக்கு இருந்தது.

லெப்பை சொல்லித் தந்ததை ஒருமுறை திருப்பிச் சொல்லி நினைவில் நிறுத்திக் கொண்டேன். ஏனென்றால் என்ன முயன்றாலும் இனி வெளியே வரமுடியாது. உள்ளே போட்டு மூடி விட்டார்கள். கேள்வி களுக்குப் பதில் சொல்லியாக வேண்டுமே என்ற கட்டாயம். வானவர் களானாலும் அவர்கள் மனிதர்களைப் போல் காட்சி தந்தனர்.

என்னைக் கூர்ந்து நோக்கிவிட்டு முதல் கேள்வி எழுப்ப அவர்கள் தயார் ஆவதற்குள், முதற்கேள்விக்குண்டான விடையை வெடுக்கென்று கூற ஆயத்தமானேன். ‘முன்கர்’ என்ற வானவர் தொடுத்த முதல் கேள்வியே என்னை ஆட்டம் காண வைத்துவிட்டது.

1. ‘பஞ்சாயத்துத் தலைவராக இருந்த போது, கணபதியா கடவில் பாலம் கட்டினாய். மறுவாரமே பாலம் இடிந்து இரண்டு பெண்களும் மூன்று குழந்தைகளும் இறந்து போனதற்கு நீ குற்றவாளி என்பதை ஒப்புக் கொள்கிறாயா?’

பதில் சொல்ல நா எழவில்லை. எதிர்பாராத கேள்வி. பினாமி பெயரில் பாலம் கட்ட அடங்கல் எடுத்து, சாம்பல் கலந்த சிமெண்டு கொண்டு கட்டிய பாலம் இடிந்து போனது. 20 ஆண்டுகளுக்கு முன் என்ஜினியர்களை மாட்டிவிட்டுத் தப்பித்துக் கொண்ட என்னிடம் இப்போது அதைப் பற்றிக் கேட்க வேண்டுமா?

2. ஊர்க் காரியதரிசியாக இருந்த போது பைத்துல்மால் பணத்தை (பொதுப்பணத்தை) கையாடி, பொய்க் கணக்குகள் ஜோடித்து சொத்து சேர்த்தது நீ செய்த குற்றம் என்பதை ஒப்புக் கொள்கிறாயா?’

இதற்குப் பதில் சொல்ல நா எழவில்லை. ஊர் மக்கள் இது வரையிலும் தெரியாத ஒரு ரகசியத்தை, 15 ஆண்டுகளுக்குப் பின் இப்போது கிளற வேண்டுமா? ஊரில் பெரிய மனிதர், மானி என்றெல்லாம் பெயர் பெற்றவன் நான்.

3. ‘குழந்தை பெறாத உன் முதல் மனைவி உன் கொடுமை தாங்காமல் இறந்து போனாள். நீ இரண்டாவது திருமணம் செய்து கொண்டாய். உன் மூலம் கர்ப்பமான அவள் மீது அபாண்டம் சுமத்தி, அவளை நீ தலாக் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை நீ ஒப்புக் கொள்கிறாயா?’

பதில் சொல்ல நா எழாத கேள்வி. அவள் அழகில்லாதவள். அதனல் அவளைத் தலாக் சொல்வதற்கென்று அப்படி ஓர் அபாண்டம் போட்டுத் தலாக் சொன்னேன். இப்போது இருக்கும் மூன்றாவது மனைவியில் தான் பிள்ளைகள்.

‘கேள்விகள் போதும். ஒரு கேள்விக்குக் கூட இவனால் பதில் தர முடியவில்லை. இந்தப் பாவியைப் பற்றிய நமது அறிக்கையை அல்லாஹ் விடம் சமர்ப்பிப்போம்’ என்றார், இறைபுகழ் வார்த்தைகளை உருப் போட்டுக் கொண்டிருந்த ‘நக்கீர்’ என்ற வானவர்.

சொல்லி முடிக்குமுன் கபரின் பக்கவாட்டுச் சுவர்களில் இருவாசல்கள் தானாகத் திறந்தன. வானவர்கள் அதுவழியாக மறைந்ததும், அதுவரை கபருக்குள் வானவர்கள் முகங்களிலிருந்து சுடர் விட்டுக் கொண்டி ருந்த ஒளி மங்கித் தேய்ந்து இருட்டு பரவியது. உடனே கபர் சுவரை ஆங்காங்கே பொத்துக் கொண்டு வந்த கொடிய பாம்புகளின் தீக்கங்குகள் உமிழும் கண்களிலிருந்து பரவிய சிவந்த ஒளிச் சுடரில் படம் விரித்து, நச்சுப் பற்களை ராவித் தீட்டிய பல பாம்புகள் வாலில் ஊன்றி நின்று என்னை ஆய்ந்து கொத்த வருவதைக் கண்டதும் ‘என்னைக் கொத்தாதே’ என்று அலறினேன். என் அலர்ச்சையின் மேல் நோக்கிய அழுத்த வேகத்தில் என்னை மூடியிருந்த பலகையும் மணலும் வெடித்துச் சிதறிப் பஞ்சு போல் பறப்பதைக் கண்டு திடுக்கிட்டேன்.

கை கால்கள் நடுங்க, உச்சி முதல் உள்ளங்கால் வரை வேர்த்துக் கொட்ட, படபடத்த நெஞ்சுடன் கட்டிலில் உட்கார்ந்து பரக்கப் பரக்க முழித்துக் கொண்டிருந்த என்னைச் சுற்றி மனைவி, பிள்ளைகள். மனைவி என் நெஞ்சைத் தடவிக் கொண்டிருந்தாள்.

‘வாப்பா, உங்களுக்கு என்ன?’ பிள்ளைகள் பதறிப்போய்க் கேட்டனர்.

‘ஒண்ணுமில்லப்பா, நீங்கெல்லாம் போய்ப் படுங்க!’ என்றேன்.

– ஓம் சக்தி, தீபாவளி மலர் 1997

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *