சுவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2020
பார்வையிட்டோர்: 4,376 
 

சென்னை இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் எல்லாம் முடிந்து ரோஹித்தும் ஒரே மகன், இளம் மனைவி மாயாவுடன் வெளியே வந்தபோது மணி காலை பத்து.

சென்னை வெயில் சுட்டெரித்தது. நங்கநல்லூருக்கு கால் டாக்ஸி புக் செய்துவிட்டு ரோஹித் அப்பாவை தொடர்புகொள்ள முயற்சி செய்தான். அப்பாவின் மொபைல் ஒலித்தபடியே இருந்ததே தவிர, அவர் அதை எடுக்கவில்லை. ‘சரி இன்னும் பதினைந்து நிமிடங்களில் வீட்டுக்குத்தானே போகப் போகிறோம்’ என்று மனதை சமாதானம் செய்துகொண்டான்.

நங்கநல்லூர் அபார்ட்மென்டை அடைந்து லக்கேஜ்களை டாக்சியிலிருந்து இறக்கி லிப்டில் மனைவி, மகனுடன் நான்காவது தளத்தை அடைந்து வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினான். இரண்டு மூன்று முறைகள் அடித்தும் கதவு திறக்கப்படவில்லை. அமெரிக்காவில் இருந்து பயணித்து வந்த அலுப்பு வேறு….

ஒருவேளை வீடு பூட்டி இருக்கிறதோ என நினைத்து மறுபடியும் அப்பாவை மொபைல் போனில் கூப்பிட்டான். மாயா அவனிடம் மேலும் இரண்டுமுறை முயற்சிக்கச் சொன்னாள். ரிங் போய்க்கொண்டே இருந்ததே தவிர அப்பா எடுக்கவில்லை.

வேறு வழியில்லாமல் எதிர்வீட்டு காலிங்பெல்லை அடித்தான். இரண்டு நிமிடங்கள் கழித்து வெளியேவந்தார் அந்த சர்தார்ஜி. அவரை ரோஹித்துக்கு அறிமுகம் உண்டு. தவிர, அமெரிக்காவில் அவருடைய மகன் வீட்டிற்கு ஒருமுறை சென்றிருக்கிறான்.

“அங்கிள் அம்மா, அப்பா வெளியே போயிருக்காங்களா? போன் பண்ணா அப்பா எடுக்கவில்லை..”

“உனக்கு விஷயமே தெரியாதா ரோஹித்? அப்பா உன்கிட்ட சொல்லலையா?”

“இல்லையே அங்கிள், என்ன விஷயம்?”

“ஒனக்கு இது தெரியாதது ஆச்சர்யமா இருக்கு. உன்னோட அம்மாவும் அப்பாவும் முதியோர் இல்லத்தல இருக்காங்க. யாராவது வந்தா கொடுக்கச்சொல்லி அட்ரஸ் கொடுத்திருக்காரு உன்னோட அப்பா… உள்ள வந்து உட்காருங்க, நான் எடுத்துட்டு வரேன்..”

உள்ளே சென்றார். ரோஹித்தும், மாயாவும் உள்ளே வந்து அமர்ந்தனர். சர்தாரிணி இருவருக்கும் சுடச்சுட டீ போட்டுக் கொடுத்தாள். உள்ளே வந்து அமர்ந்த இருவருக்கும் பெற்றோர்களின் மீது உள்ளூர கோபம் மூண்டது.

‘இந்தப் பெரிசுகளுக்கு என்னாச்சு? எல்லா வசதிகளும் நிறைஞ்ச அப்பார்ட்மென்ட் இருக்கும்போது ஏன் முதியோர் இல்லத்தில் போய்த் தங்கணும்?’ என்று குழம்பினார்கள்.

டீயைக் குடித்துவிட்டு இருவரும் எழுந்து கொண்டனர். லக்கேஜை சர்தார்ஜியின் வீட்டிலேயே விட்டுவிட்டு “தேங்கஸ் அங்கிள் நான் திரும்பிவரேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

மாயா, “ஒய் திஸ் ஹாப்பன்ஸ் ரோ?” என்று அலுத்துக்கொண்டாள்

“நான் என்னத்தைச் சொல்ல மாயா? வா அங்கேயே போய்ப் பார்க்கலாம்”

“அது எப்படி இவ்வளவு பெரிய வீட்டை விட்டுவிட்டு முதியோர் இல்லம்? போன வருஷம்தானே ரெண்டு கோடி குடுத்து வாங்கி அம்மா அப்பாவுக்கு கொடுத்தீங்க?”

அபார்ட்மென்ட் வளாகத்தை விட்டு வெளியேவந்து கால் டாக்ஸியில் ஏறியதும், “கீழ்க்கட்டளை போப்பா” என்று சொன்ன ரோஹித், மீண்டும் தன் அப்பாவை மொபைலில் தொடர்புகொள்ள முயன்றான். அவர் அப்போதும் எடுக்கவில்லை என்றதும், அவன் முகம் கோபத்தில் சிவந்தது.

கீழ்க்கட்டளையை அடைந்து அந்த முதியோர் இல்லத்தை தேடிக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஒருவழியாக அதைக் கண்டுபிடித்து மகனையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான் ரோஹித்.

வரவேற்பறையில் இருந்த பெண்மணி, “யார் நீங்க? என்ன வேணும்?” என்று கனிவுடன் கேட்டாள்.

“சுந்தரேசன், மாலதி தம்பதியினரைப் பார்க்கணும்” வழிந்த வியர்வையை கர்சீப்பினால் துடைத்தபடியே சொன்னான். மாயாவும், மகனும் தங்கள் கையில் இருந்த மொபைலை சுவாரசியமாக நோண்டிக் கொண்டிருந்தனர்.

“நீங்க?”

“அவங்களோட மகன்…” என்றான் தயக்கத்துடன்.

அவனை சற்று பொறுமையாக உட்காரச் சொன்னவள், “உள்ளே ஒரு சின்ன நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது சார் … பெரியவங்களோடு நேரம் செலவழிக்கிறதுக்காக ஒரு பெரிய மல்டிநேஷனல் கம்பெனியிலிருந்து வந்திருக்காங்க..” சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அடுத்த பத்து நிமிடங்களில் மகிழ்ச்சியுடன் அங்கு வந்தனர் ரோஹித்தின் பெற்றோர்கள். வெறுப்பு, கோபம் இரண்டும் சேர்ந்து அவர்களை வெறித்துப் பார்த்துவிட்டு, “என்னப்பா இந்தக் கண்றாவி எல்லாம்? என்ன நினச்ச்சிகிட்டு இங்க வந்தீங்க?” என்றான்.

“இப்பல்லாம் சாப்பிட்ட உடனே மூச்சு வாங்குதப்பா, ஒண்ணும் முடியல” என்று சொல்லியபடி அவன் அம்மா அவனருகில் அமர்ந்தாள்.

“அம்மா முதல்ல இங்க இருந்து நீங்க ரெண்டுபேரும் கிளம்புங்க… என்ன மடத்தனம் இது…” என்று கர்ஜித்தான்.

மாயா ரோஹித்தின் அப்பாவிடம், “ஏன் மாமா உங்களுக்காகத்தானே எல்லா வசதிகளும் இருக்கிற மாதிரி ஒரு நல்ல அபார்ட்மென்ட் வாங்கிக் கொடுத்திருக்கோம். சொல்லாம கொள்ளாம நீங்க பாட்டுக்கு முதியோர் இல்லத்துல வந்து தங்கிட்டீங்களே… உங்க மகன் எவ்வளவு ஷாக் ஆயிட்டார் தெரியுமா?” என்றாள்.

“என் மானத்தை வாங்கனும்னே இங்கே வந்து இருவரும் தங்கி இருக்கீங்க… ரிசப்ஷன்ல இருந்தவள் கிட்ட, நான் உங்களோட மகன்னு சொல்றப்ப எப்படிக் கூனிக்குறுகி போயிட்டேன் தெரியுமா? உங்களுக்கு அபார்ட்மென்ட்ல வசதி குறைவுன்னா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லைன்னு வேற வசதியான பிளாட் வாங்கி அதுல உங்கள ராஜா, ராணி மாதிரி தங்க வச்சிருக்க மாட்டேனா?” பொரிந்தான்.

“……………………..”

அம்மாவைப் பார்த்து கோபத்துடன், “அப்பாதான் மடத்தனமா ஏதோ சொன்னார்ன்னா உனக்கு மூளை வேண்டாமா? ச்சே… எதிர் ப்ளாட்ல குடியிருக்கிற சர்தார்ஜி உனக்கு விஷயமே தெரியாதான்னு என்கிட்ட கேட்டபோது அந்த இடத்ல என்னால நிக்கவே முடியல…”

“உன் கோபம் புரியுதுப்பா… ஆனா…”

“என்னப்பா ஆனா…” கோபமாக ஆரம்பித்த ரோஹித்தை அமைதியாக இருக்கும்படி சைகையினால் கட்டளை இட்டவர், “உன்கிட்ட சொல்லாம நாங்க இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாதுதான்; ஆனா முதல்ல ஒண்ணு நல்லா புரிஞ்ச்சுக்க, நாங்க இங்க வந்தது மாற்ற முடியாத முடிவுன்னே சொல்லலாம்…”

அதிர்ச்சியுடன் அப்பாவைப் பார்த்தான்.

“ஆமாம் ரோஹித். உன்கிட்ட முதல்ல ஏன் சொல்லலன்னு கேட்ட இல்லையா, சொன்னா அது உனக்குப் புரியாது; ஒத்துக்க மாட்ட; எங்களிடம் தர்க்கம் செய்வ.. நீ கேட்டே அந்த அபார்ட்மென்ட்டில் என்ன குறைன்னு. வாஸ்தவம்தான் வசதியில் எந்த ஒரு குறையும் இல்ல…ஆனா எங்களால எதிர் வீட்டுக்காரரைக் கூட சந்தித்துப் பேச முடியலைங்கறதுதான் பெரிய குறை. மாசத்துக்கு ரெண்டுமுறை ‘ஹலோ சார் சவுக்கியமா’ அவ்வளவுதான் எங்களிடையே பேச்சு; எதிர் ப்ளாட்காரர்தான் இப்படின்னா, மத்த ப்ளாட்ல எல்லாம், யார் இருக்காங்கன்னே எங்களுக்குத் தெரியாது. நாங்ககூட சிலபேர்கிட்ட பழக முயற்சி செய்தோம். ஆனா யாரும் எங்களிடம் ஈடுபாடு காட்டவில்லை. நானும் உன் அம்மாவும் மட்டும் நாள் முழுக்க எங்களுக்குள்ளேயே என்னத்தப்பா எத்தனை நாள் பேசிக்கிறது?”

“…………………”

“இங்கே ஏன் வந்தேன்னு கேட்டியே… இங்கே எல்லோரும் எங்க வயசுக்காரங்க. மனம் விட்டு பேசறோம். சண்டை சச்சரவுகளும் வரும். வரத்தான் செய்யும்; அதுவும் வாழ்க்கைக்குத் தேவைதானே? பேசிப் பழக மனுஷங்க இல்லாதது என்ன வாழ்க்கை?

நீ உனக்கு வேலை கிடைச்சுதுன்னு அமேரிக்கா போயிட்ட. உன்னை போகதேன்னு சொல்ல எங்களுக்கு உரிமை இருக்கான்னு தெரியல; ஏன்னா அது உன் விருப்பம், உன் வாழ்க்கை. ஆனா எங்க கதி? வெறும் கட்டடம் மட்டும் வாழ்க்கையாகி விடுமா? இங்க எங்களோட பேசிப்பழக நிறைய பேர் இருக்காங்க. எங்க மனசுக்கு அது நிறைவா இருக்கு…”

“…………………………..”

“நீ மறுபடியும் இங்கேயே வந்து செட்டில் ஆகறேன்னு சொல்லு… நம்ம எல்லோரும் ஒண்ணா இருக்கிறதா இருந்தா, மறுபடியும் வீட்டுக்கு திரும்பி வறோம். அதுக்கு உன்னால சாத்தியப்படலேன்னா நாங்க இங்கேயே இருந்துடறோம். வெறும் சுவர்கள் மத்தியில் இருக்கிறது கொடுமைப்பா… அப்புறம் ஜெயில் வாசத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? எங்களுக்கு அப்பார்ட்மென்ட் வாழ்க்கை ஒத்துவரலை ரோஹித்…” அப்பாவின் கண்கள் கலங்கியது.

“ரோஹித், இந்த முடிவை எடுத்ததுல எனக்குத்தான் மிகப்பெரிய பங்கு இருக்கு.” அம்மா சொன்னாள்.

அவளே தொடர்ந்தாள்: “செங்கல், சிமென்ட், கதவு, ஜன்னல், மாடுலர் கிச்சன், ஏசி, ஸ்மார்ட் போன் இதெல்லாம் மட்டும் வீடு இல்லப்பா… வீடுன்னா அதுல மனுஷங்க நிறையப்பேர் இருக்கணும். அதனாலதான் அந்தக் காலத்ல எல்லா வீடுகளிலும் கூட்டுக் குடும்பம் இருந்தது. இனிமே இதுதான் எங்கவீடு ரோஹித்…”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *