கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 13,525 
 
 

எங்கேயாவது கண்ணில் பட்டுவிடுவாரோ என்றிருந்தது. வெளி வேலையாகக் கிளம்புகையில் கண்கள் பரபரவென்று தேடத்தான் செய்கின்றன. அதற்குள்ளேயுமே யாரேனும் வாசலில் சத்தம் கொடுத்தால் இவர்தான் வந்து விட்டாரோ என்று நினைக்க வைத்தது. நிச்சயமாக விசாரித்துக் கொண்டு அவரால் வர முடியும். தன் பெயர் சொல்லி, வேலை விபரம் சொல்லித் தேடி வந்துவிடுவார்தான். அந்த அளவிற்கு மட்டுமான தெளிவு அவரிடம் இப்பொழுதும் உண்டுதான். நல்ல நாளிலேயே காரியக்காரர் என்று பெயர் எடுத்தவர். கண்ணும் கருத்துமாய் எல்லாம் செய்து வீட்டிற்கே எல்லாமாய் இருந்தவர்.

மனசு கிடந்து சில நாட்களாய் இப்படித்தான் படபடத்துக் கொண்டிருக்கிறது. சியாமளாவிடம் சொன்ன போது அவள் எவ்விதப் பதட்டமும் காட்டவில்லை. வந்தா வரட்டுமே என்று நினைக்கிறாளோ

என்னவோ. நிச்சயமாய் அவளால் சமாளிக்க முடியாது. பயந்து போய் தன்னை உடனே லீவு போடச் சொல்லுவாள். அதுதான் அடுத்தபடி நடக்கும்.

தான் இல்லாதபோது வந்து கதவைத் தட்டி விடக் கூடாதே என வெளி வராண்டா கேட்டைப் பூட்டி வைத்துக் கொள் என்று கூறியிருந்தான். கொஞ்ச நேரத்தில் திரும்பி விடலாமே என்கிற எண்ணத்தில்.

ஆள் வீட்டை விட்டுக் கிளம்பி ஒரு வாரமாயிற்று என்று அப்பா சென்னையிலிருந்து தகவல் சொன்ன போது மனது அதிர்ந்துதான் போனது. நிச்சயம் அவர் இங்குதான் வருவார். இந்த மதுரைதான் அவருக்குத் தெரிந்த ஒரே இடம். இதை விட்டால் சொந்த ஊரான வத்தலக்குண்டிற்குத்தான் போயாக வேண்டும். அங்கு சித்தப்பாதான் இருக்கிறார். இங்கெல்லாம் இருக்க முடியாது என்று ஒரே வரியில் சொல்லி அனுப்பி விடுவார். அவர் இருக்கும் நிலையில் இவரை வைத்தெல்லாம் சமாளிக்க முடியாதுதான். மேலும் அவர் சொன்னால் எல்லாம் இவர் கேட்க மாட்டார். அப்பா பேச்சிற்கு மட்டும்தான் மடங்குவார். அதுவும் இப்போது இல்லாமல் போயிற்று.

அதை விட்டால் அவர் வேலை பார்த்த பெரியகுளத்திற்குத்தான் போயாக வேண்டும். அந்த ஊர் அவர் நினைவில் இருக்கிறதா என்று தெரியவில்லை. கடைசியாக அந்தக் கடை முதலாளி இவரைக் கொண்டு வந்து விட்டுப் போன பின்பு இதுவரை ஒரு முறை கூட அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. ஆள் ஆளாக இருந்தால்தானே…! முன்பு நடந்தது எதுதான் அவரின் நினைவிலிருக்கிறது? என்னவோ இருக்கிறார் அவ்வளவுதான். பரப்பிரும்மம் என்பார்களே…அதுபோல்.

என்னைக்கானாலும் காமேசு மாதிரி ஒருத்தர் எனக்குக் கிடைக்காது…அவரச் சரி பண்ணித் திரும்ப எங்கிட்டயே கொண்டு வந்து விட்டுடுங்க….நானே வச்சிக்கிறேன்…. – இதுதான் அந்த முதலாளி சொல்லிச் சென்றது.

அண்ணாவின் முழுப் பெயர் காமேஸ்வரன். அதைத்தான் அவர் அப்படி அழைத்தார். இரக்க குணம் கொண்ட அவரின் கரிசனம்தான் இப்படி அவரே அழைத்து வந்து கொண்டுவிட்டது.

ஒரு வேளை அந்த மேலப் பொன்னகரம் ஏரியாவிற்குப் போயிருப்பாரோ என்று தோன்றியது. அங்கு சென்றால் நாயுடுவைத்தான் பார்க்க வேண்டும். நேரே அங்கேதான் போய் நிற்பார். தகவல் கேட்கலாமென்றால் அவரின் ஃபோன் நம்பர் கூட இல்லை. போயிருந்தால் நிச்சயம் விபரம் சொல்லி ஆளை டைரக்ட் பண்ணி அனுப்பியிருப்பார். அருமையான மனிதர். இப்படி ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்தும் வீடு வாடகைக்கு விட்ட மகான்.

அதனாலென்ன சாமி…நம்ம பிள்ளை மாதிரி…பார்த்துக்கிடலாம்…என்ற பொதுவான வார்த்தைகளில்தான் எவ்வளவு அனுபவங்களையும், முதிர்ச்சியையும் உள்ளடக்கியவர்.

கருணை பொங்கும் உள்ளம்…அது கடவுள் வாழும் இல்லம்…..

நாயுடு கடவுளைப் போன்றவர்தான்.

இப்டி நேரங்கெட்ட நேரத்துல வந்தீங்கன்னா வீட்டுல எல்லாரும் தூங்க வேண்டாமா? நாள் பூரா வேலை செய்திட்டு தூங்குறவுக…யாரு உங்களுக்கு எழுந்திரிச்சி சாப்பாடு போடுறது? காம்பவுன்ட் கேட்டை யாரு திறக்கிறது? பத்து மணிக்கெல்லாம் கேட்டைப் பூட்டிடுவேன்…இனிமே இப்டி வந்தீங்கன்னா திறக்க மாட்டேன்…தெரிஞ்சிதா…?

சொன்னதோடு மட்டுமில்லை….வாங்க சாப்பிடலாம்…என்று தன் வீட்டினுள் அழைத்துப்போய் வயிற்றை நிரப்பிப் படுக்க வைத்தார்.

மாமி பாவம்…அசந்து தூங்கிட்டிருப்பாங்க….அவுங்கள எழுப்பக் கூடாது…பேசாம இங்க படுங்க….என்று தன் அருகிலேயே படுக்கவும் வைத்துக் கொண்டார்.

காம்பவுன்டின் முன் பகுதியின் ஒரு பாதி ஒர்க் ஷாப். அது அவர் தன் மகனுக்கு வைத்துக் கொடுத்த டூ வீலர் ரிப்பேர் கடை. முன்னால் ஷட்டரை இறக்கிவிட்டுவிட்டு பின் புறமும் பூட்டி காவலுக்கு இவர்.

அந்தக் காம்பவுன்டின் எட்டு வீட்டு ஆட்களும் காமேஸ் அண்ணாவை அன்பாய் வைத்துக் கொண்டார்கள். நாயுடம்மாவுக்கும், அம்மாவுக்கும் இடையில் அப்படி ஒரு இஷ்டம். அம்மா கதை கதையாய்ச் சொல்ல கண்ணில் நீர் மல்கக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். சுற்றமும் சூழலும் சுகமாய் அமைந்தால் வாழ்க்கைதான் எத்தனை ஆரோக்கியம்.

மாமி நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க…உங்க பிள்ளை காமேசைச் சரி பண்ணிடலாம்…ஒரு பூசாரி இருக்காரு…அவர்ட்டச் சொல்லி வரச் சொல்றேன்…என்றார் நாயுடம்மா.

பூசாரி வந்தான். அருள் வந்து ஆடினான். அப்படித்தான் சொன்னார்கள். கையில் எடுத்த சூடத் தட்டை வளைத்தான். ஊருக்கு ஒதுக்குப் புறமாய் நாலு ரோடு சந்திக்கும் இடத்தில் சென்று கோழி வெட்டச் சொன்னான்.

நீயே செய்திடு…என்று காசைக் கொடுத்து அனுப்பி வைத்தார் அப்பா. அத்தோடு போய்ச் சேர்ந்தான் அவன். காமேஸ் அண்ணா எப்பொழுதும்போல்தான் இருந்தார். அவரைக் கண்டு அவன் பயங்கொள்ளாமல் இருந்தானே என்றிருந்தது எங்களுக்கு.

காம்பவுண்டை விட்டு வெளியே எங்கும் போகக் கூடாது என்று நாயுடு சொல்லியிருந்தார். அவருக்கென்று கொடுத்த நாற்காலியில் அமர்ந்திருக்கச் சொன்னார். சரி என்று தலையாட்டிவிட்டு வெறுமே அமர்ந்து கொண்டிருந்தார் அண்ணா. தனியே பேசிக் கொண்டிருந்தார். இடையிடையில் சிரித்துக் கொண்டார். திடீரென்று அழுது கொண்டார். பற்களை நற நறவென்று கடித்தார். கீழே, மாடியில் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். சிரித்தார்கள். வருத்தப் பட்டார்கள். சிலர் கண் கலங்கினார்கள். குழந்தைகள் பயமின்றி இருந்தன அவரிடம். அதுதான் அதிசயம்.

கல்யாணம் ஆயிச்சிருச்சாம்ல இவருக்கு. அந்தம்மா எங்கிருக்குது….?

அது டீச்சராமுல்ல….விழுப்புரம் பக்கத்துல ஏதோ ஒரு ஊர்ல வேல கெடச்சுப் போயிருச்சாம். ரெண்டு பேரும் சேரவே இல்லைன்னுல்ல சொல்றாக…பெரியகுளத்துல இவுக இருந்த வீட்டுலதான் ஏதோ ஒருத்தி நாண்டுக்கிட்டு செத்திருந்தாளாம்… அது தெரியாம, ரெம்ப நாளாப் பூட்டிக் கெடந்த வீட்டுக்கு வாடகைக்குப் போயிருக்காக…ராத்திரி தூங்கைல இவர மட்டும் அந்த ஆவி அடிச்சிருச்சின்னு …மாமிதான் சொன்னாக…என்ன கண்றாவி பாருங்க…

அடப் பாவமே…கலியாணம் கட்டின பெறவா இப்டி வரணும்…ஒரு பொம்பளப்புள்ள வாழ்க்கை வேறல்ல வீணாப் போச்சு….?

கொஞ்ச நாளைக்கு இங்கயே இருக்கட்டும்னும், நீ மட்டும் போயிட்டு வாரா வாரம் வந்துட்டுப் போன்னு அவுக அப்பாரு சொல்லியிருக்காரு… கேட்கலையாம்…அந்தம்மா ரெம்ப அளகா இருக்குமாம்….அதுல அப்டியே மயங்கிப் போயி ஒடனே கூட்டிட்டுப் போயிடணும்னு தனிக்குடித்தனம்தான் போவேன்னு ஒத்தக் கால்ல நின்னாராம். தாங்க மாட்டாம எப்டியோ ஒழிஞ்சு போன்னு சொல்லி அனுப்பியிருக்காரு….அப்டிப் போனவர்தானாம்….ரெண்டே மாசத்துல இப்டித் திரும்பிட்டாகளாம்….பாவம்….

எல்லோரும் இரக்கப்பட்டுத்தான் பேசினார்கள். அம்மாவுக்காக ரொம்பவும் பரிதாபப்பட்டார்கள்.

இந்தக் கிறுக்குப் பிள்ளைய வச்சிட்டு இந்த மாமிதான் என்னா லோல்படுது….வீட்டுக்கு மூத்தவருக்கா இந்த நெலமை வரணும்…?

ஊரில் இதுநாள் வரை பட்ட கஷ்டங்களையெல்லாம் அங்குள்ளோர் யாரும் அறிந்திருக்க நியாயமில்லை. இது இருபதாண்டு காலம் கழிந்த பொழுது. எல்லாம் பட்டு ஓய்ந்திருந்த நேரம். எல்லோருக்கும் ஆவி அத்துப் போன காலம்.

இரண்டாவது அண்ணனுக்கு வேலை கிடைத்து நாங்கள் மதுரை குடி பெயர்ந்திருந்தோம்.

கொஞ்சம் புத்தி சரியில்லாத பிள்ளை ஒருத்தன் இருக்கான்…என்று உண்மையைச் சொல்லித்தான் அப்பா வீடு வாடகைக்கு விசாரித்தார். அந்த உண்மைதான் அந்தப் பகுதியில் அவரின் மரியாதையை நிலை நிறுத்தியது.

அதனாலென்னங்க….பக்கத்துல இருக்கிறவுகளுக்கு இடைஞ்சல் இல்லாமப் பார்த்துக்குங்க…என்று சொன்னார்கள் எல்லோரும். யாரும் வீடு இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் காமேஸ் அண்ணா படுத்தும் பாடு தாங்காமல்தான் அடிக்கடி வீடு மாற்றிக் கொண்டே இருக்க வேண்டி வந்தது. அதிக பட்சம் ஆறுமாசம்தான். ராத்திரியெல்லாம் தூக்கமில்லாமல் கத்தினால்? கன்னா பின்னாவென்று உளறினால்? தெருவில் குறுக்கும் நெடுக்குமாகச் சம்பந்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தால்? நேரங்கழித்து வீடு திரும்புபவர்களை பயமுறுத்தினால்…?

அந்தப் பகுதியின் அத்தனை பேருக்கும் அவரைத் தெரியும்தான். இருந்தாலும் எத்தனை நாளுக்குத்தான் சகிப்பார்கள்?

மெயின் ரோடில் ஒரு கட்சி ஆபீஸ் இருக்கும். அங்கே போய் உட்கார்ந்திருப்பார். அவர்கள் டீ வாங்கிக் கொடுத்தால் குடித்துக் கொள்வார். கிடக்கும் தினசரிகளைப் புரட்டுவார். என்ன புரியுமோ, என்னவோ…! சாயங்காலம் ஏதேனும் மீட்டிங் நடந்தால் அவர்களே முதல் வரிசையில் கொண்டு அமர்த்தி விடுவார்கள். வி.ஐ.பி. அந்தஸ்துதான். இருக்கட்டுங்க, பாவம் என்பார்கள். அத்தனை கரிசனம் அவர் மேல்.

அவருக்கென்று சொந்தமான பொருட்களை எல்லாம் வீட்டு வாசலில் ஒரு கிழிந்த வேட்டியை விரித்துப் பரப்பி விற்க ஆரம்பித்து விட்டார் ஒரு நாள். யார் என்ன சொல்லியும் கேட்கவில்லை. அம்மா குரலை உயர்த்திச் சத்தம் போட்டால் திரும்பிப் பார்த்துப் பல்லைக் கடித்தார். அந்தக் கோரக் காட்சியைக் கண் கொண்டு காண முடியாது. பிசாசு உள்ளே இருக்கிறது என்பது உண்மைதானோ என்று தோன்றி நடுங்க வைக்கும்.

பேசாமப் போறியா இல்லியா…..ம்ம்ம்….

பழைய கிராம ஃபோன் பெட்டி, ஒலி பெருக்கிக் குழாய், பாட்டு ரெக்கார்டுகள், பெட்ரோமாக்ஸ் லைட், கந்தகம் போட்டு அடிக்கும் வேட்டுக் குழாய். தகரப் பெட்டிகள், அவர் ஆசையாய்த் தைத்துப் போட்டுக் கொண்டு வீணே வைத்திருந்த கோட்டு, சூட்டு, பரமபத சோபானப் படம், அதற்கு உருட்டும் பகடைகள், டிரேட் விளையாடும் பலகை, அதற்கான கார்டுகள், தண்டால் எடுக்கும் பொருட்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாவற்றையும் ஒத்த ரூபாய்க்கும், ரெண்டு ரூபாய்க்கும் என விற்றுத் தள்ளி விட்டார். கடை விரித்தேன் கொள்வாரில்லை என்கிற பேச்சே இல்லை. அத்தனையும் தூள் தட்டி விட்டார். டப்பாவில் ஒரே சில்லரை மயம். வெறும் ஒன்றுக்கும், ரெண்டுக்கும் விற்றால்?

வாங்குபவர்கள் என்ன இந்த ஆள், கிறுக்கா என்பதாய்ப் பார்த்துக் கொண்டே, சந்தேகத்தோடே கிடைத்த பொருட்களை அவசர அவசரமாக வாங்கிக் கொண்டு கம்பி நீட்டி விட்டார்கள். நிச்சயம் அவர்கள் மறுமுறை அந்தப் பக்கம் வந்தே இருக்க மாட்டார்கள்.

டேய் சங்கரா, போய் நீ அப்பாவைக் கூட்டிண்டு வா…உங்க அண்ணா இப்டிச் செய்திண்டிருக்கார்…சொன்னாக் கேட்க மாட்டேங்கிறார்னு சொல்லி இழுத்திண்டு வா…என்று அம்மா என்னை அனுப்ப…நான் போய் அப்பாவிடம் விபரம் சொன்னேன். இ.பி. கேன்டீனில் நெருப்பின் முன் வெந்து கொண்டிருந்த அப்பா தீப்பிழம்பாய் வெளி வந்தார். திங்கு, திங்கு என்று அவர் கோபாவேசத்துடன் நடந்து வந்த காட்சி இன்னும் என் மனக்கண் முன்னே…!

ஏண்டா தாய்ளி….சும்மா சோத்தத் தின்னுட்டு சிவனேன்னு கெடடான்னா கலகமா பண்ணின்டிருக்க…இன்னைக்கு உன்னைக் கொன்னு போட்டுடறேம் பார்…ஒண்ணு நீ இந்த வீட்ல இருக்கணும்…இல்ல நா இருக்கணும்….என்று ஆவேசமாக வந்து காமேசண்ணாவைப் போட்டு மிதி மிதி என்று மிதிக்க ஆரம்பித்தார். கண்மண் தெரியாத அடி அது.

எப்டி என்னை வேலைக்கு நடுவுல கூப்டப் போச்சு என்கிற கோபமோ என்று அம்மா பயந்தாள்.

அய்யோ, அவனை அடிக்காதீங்கோ….அடிக்காதீங்கோ…என்னால பார்க்க முடிலை…போரும் விட்டிடுங்கோ….நீங்க சொன்னாக் கேட்பான்னு நினைச்சுக் கூட்டிண்டு வந்தா இப்டிப் பண்றேளே….என்று அம்மா கதறித் துடித்தாள். படாத எடத்துல பட்டுடப் போறது. அப்புறம் உயிர் போயிடுத்துன்னா அந்தப் பாவம் வேறே. சித்த எடுத்துச் சொல்லுங்கோன்னு சொன்னா இப்டியா? போரும் நீங்க கௌம்புங்கோ…இனிமே எது வந்தாலும் நானே பார்த்துக்கறேன்….போதும்…அவனைக் கொன்னு போட்டுறாதீங்கோ…

காமேஸ்வரன் அண்ணாவால் பட்ட பாடுகள் ஒன்றா இரண்டா….? வீடே எத்தனை காலம் அலமந்து ஆட்டம் கண்டு போனது? எங்கள் வீடு கடனாளியானதே அவரால்தான். அது அந்த வத்தலக்குண்டு ஊரில். ஏற்கனவே சோற்றுக்குத் திண்டாட்டம். வறுமை. இதில் இம்மாதிரியெல்லாம் எதிர்பாராதவை நடந்தால். அதுதானே வாழ்க்கை என்று அனுபவித்தார் அப்பா. அவரைப் போல் சகிப்புத்தன்மையோடு எவனாலும் இருக்க ஏலாது. நீ எவ்வளவு கஷ்டம் வேணாலும் கொடு, அனுபவிச்சுக் காட்டறேனா இல்லையா பார் என்று கடவுளுக்கே சவால் விட்டவர் அவர். தரித்திரக் கஷ்டம்தான். ஆனால் வறுமையில் செம்மை. அது அப்பாவின் தாரக மந்திரம்.

வீட்டில் காலம் காலமாயிருந்த பண்ட பாத்திரங்களெல்லாம் வரிசையாக நடந்து வெளியேறி விட்டன. பாட்டன், முப்பாட்டன், கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா என்று பரம்பரையாய்க் கிடந்த கனம் கனமான மொக்கை மொக்கையான அண்டா, குண்டா, தவலை, பானை, இலுப்பச் சட்டி, போணி, கட்டில், பீரோ, தொட்டில், என்று எல்லாமும் வெளியேறி விட்டன.

இடி செக்கா இருக்கே என்பார்கள் அந்தக் காலத்தில். எல்லாவற்றிற்கும் பாட்டிதான் பிரதானம். ஒவ்வொரு வைத்தியத்தின் போதும் செலவிற்காகப் பாட்டிதான் அவைகளைச் இடுப்பில் சுமந்து செல்வாள். கடையில் போட்டு விட்டு என்னவோ அவனிடம் சாமர்த்தியமாய்ப் பேரம் பேசியதாய் நினைத்துக் கொண்டு அவன் கொடுத்ததைக் கும்பிடு போட்டு வாங்கி வருவாள். முதலில் அடகு வைத்தல் என்று ஆரம்பித்து பின்னர் ஒரேயடியாக விற்றல் என்று துவங்கிற்று. அடகு வைத்த ஒன்றைக் கூட வாழ்நாளில் அப்பா திருப்பியதில்லை. என்னத்தைத் திருப்ப? வாழ்க்கையேதான் திரும்பி, முறுக்கிக் கொண்டு நிற்கிறதே? அப்புறம் இந்தப் பண்ட பாத்திரங்களா பெரிசு? அத்தனையும் ஸ்ருதி சுத்தமாய் காமேஸ்வரன் அண்ணாவின் வைத்தியத்திற்கு என்று பறந்தது. மலையாள வைத்தியர் ஒருவர் வந்து படாத பாடெல்லாம் பட்டு, அவர் கொஞ்சம் பிடுங்கிக் கொண்டு போனார். அவர் இருக்கும் போதெல்லாம் நன்றாய் இருப்பதைப் போல இருந்தார் அவ்வளவுதான். பின்னர் எல்லாமும் வழக்கம்போல் மாறி விட்டன.

பரமேஸ்வரன் அண்ணா செய்ததைக் கேட்டால் அதிர்ந்தே போகும் மனது. திடீரென்று ஊர் ஊராய்ப் போய் பிச்சை எடுத்துக் கொண்டு வந்து நிற்பார். மடி நிறையச் சில்லரைக் காசுகள் கலகலக்கும். அடி பின்னி விடுவார் அப்பா. அப்படியே கொண்டு கோயில் உண்டியலில் போடச் சொல்லுவார்.

இருந்தாற்போலிருந்து ஒருநாள் மேல மந்தையில் நின்று கொண்டு தலையில் மண்ணை வாரிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார். யானைதான் தன் தலையில் மண் போட்டுக் கொள்ளும். பார்த்திருக்கிறோம். இவர் செய்தார் அதையும்.

வாங்கோண்ணா…இப்டியெல்லாம் பண்ணக் கூடாது. வாங்கோ ஆத்தங்கரைக்குப் போவோம். குளிக்கலாம்…என்று சொல்லி நானும் எனது நண்பர்களும் அவரை இழுத்துக் கொண்டு போனோம். மஞ்சளாற்றுத் தண்ணியில் முக்கி முக்கி எடுத்தோம்.

இதுவாவது வரவாயில்லை. ஒரு நாள் யாரும் சற்றும் எதிர்பாரா வகையில் ஏதோவோர் பையில் நிறைய நரகலை அள்ளிக் கொண்டு வந்து விட்டார். நேரே வீட்டுக்குள் வராமல், பக்க வழியாகக் கொல்லைப் புறம் வந்து நின்று (அது மட்டும் எப்படிக் கரெக்டாகச் செய்தாரோ) அம்மாவிடம் இந்தா என்கிறார். என்ன அநாச்சாரம்…! சொல்லி மாளாது அவர் செய்தவைகளை. அப்படியெல்லாம் இருந்து கழித்த சொந்த ஊரிலிருந்துதான் மதுரைக்கு இடம் பெயர்ந்தது. , சொந்த ஊர் என்ன சொந்த ஊர், சொத்து சுகம் இருப்பவனுக்குத்தான் சொந்தஊர், பந்த ஊர் எல்லாம். ஒன்றுமே இல்லாத ஓட்டாண்டிகளுக்கு? உலகமே சொந்த ஊர்தான். நாடோடிகள் போல் போய்க் கொண்டிருக்க வேண்டிதானே…!

அந்த மேலப் பொன்னகரம் பகுதியில் இனி வாடகைக்கு வீடே கிடைக்காது என்பதான ஒரு கட்டத்தில்தான் சென்னைக்கு மாறியது. அப்படியான ஒரு நெருக்குதலான நேரமும், அண்ணனின் பதவி உயர்வு மாறுதலும் ஒரு சேர அமைய, தான் போய் அந்த ஒய்.எம்.சி.ஏ. கட்டிடத்தில் அறை எடுத்துக் கொண்டு தங்க நேர்ந்த அந்தக் காலங்கள்…!

ஒரு வேளை அங்கு போயிருந்தாரானால்…? யாருக்குத் தெரியும் அவரை? அடையாளம் சொல்ல எவருமில்லை. ஏறக்குறைய எல்லோரும் மாறியிருப்பார்கள். வேண்டுமானால் அந்த அசோசியேஷனின் கேர் டேக்கர் அங்கு இருக்கலாம். அவரும் இரண்டொரு முறையோ என்னவோதான் பார்த்திருக்கிறார் அவரை. மேலும் தான் இப்போது எங்கே இருக்கிறோம் என்பதும் அவருக்குத் தெரியாதே…! ஆண்டுகள் உருண்டோடி விட்டனவே…!

நினைத்துக் கொண்டே அந்த இடத்திற்கு வந்தவன், வண்டி தானாகவே நின்று போனதை உணர்ந்தான். அந்தப் பேருந்து நிலையத்திற்கு எதிர்த்தாற்போலிருந்த காலனியில்தான் இவன் முன்பு குடியிருந்தான். பிறகுதான் வீடு கட்டித் தற்போது இருக்கும் வினோபா நகரில் இருக்கிறான். அந்த வீட்டிற்கு வந்திருக்கிறார் காமேஸ் அண்ணா. சியாமளாவைப் பிரசவத்திற்கு அனுப்பியிருந்த நேரம் அது.

அலுவலகம் முடிந்து வீடு வந்தபோது கதவு அருகே படுத்துக் கிடந்தார். இடுப்பில் கட்டியிருந்த வேட்டியை அப்படியே இழுத்துப் போர்த்தி மூட்டை போல் கிடந்தார்.

யாருங்க அது….இங்க வந்து படுத்திருக்கிறது…? என்று சத்தமிட்டுக் கொண்டே கதவைத் திறந்த இவனுக்கு அடித்துப் பிடித்து எழுந்த அவரைப் பார்த்தபோது மனம் திடுக்கிட்டுப் போனது.

உள்ளே அழைத்து, முதலில் அவரைக் குளிப்பாட்டி, புதிய உடை கொடுத்து, வயிராறச் சாப்பிட வைத்தான். சாப்பிட்ட மறு நிமிடம் மறுபடியும் மலையாய்ச் சாய்ந்து போனார் காமேசண்ணா. எதுவுமே பேசவில்லை.

என்னத்தைப் பேசுவது? எது பேசினாலும் பதில் சரியாக வராது. தலையைத் தலையை ஆட்டுவார். சம்பந்தமில்லாமல் சிரிப்பார். எதையோ நினைத்தவராய் அழுவார். கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருப்பார். ரொம்பப் போனால் மனைவியின் பெயரைச் சொல்வார்.

நந்தினி…நந்தினி….எங்க போயிட்டா…..எங்க போயிட்டா…என்ன விட்டு எங்க போயிட்டா…? என்பார்.

பொழுது புலர்ந்த நேரம் திறந்து கிடந்த கதவைப் பார்த்து, அடித்துப் பிடித்து வெளியே வந்தால், ஆள் எங்கே போனார்? அப்பாவுக்குச் செய்தி சொன்னதோடு அன்றைய பொழுது முடிந்தது. ஊர் ஊராய் இப்படியே சுற்றிக் கொண்டிருப்பார். எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. வந்த அன்றைக்குத்தான் நிஜம்.

வண்டியை ஓரங்கட்டியவாறே நின்று நிமிர்ந்து காலனியின் உள்ளே “சி“ ப்ளாக்கின் அந்த இரண்டாவது மாடி வீட்டையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தக் காலனியின் எதிர் பஸ் ஸ்டாண்டில்தான் பெரியம்மாவின் பிள்ளை நாரம்பூவை ஒரு முறை பார்த்திருக்கிறான். கழுத்தில் அழுக்கேறிய குற்றாலம் துண்டோடு மடித்துக் கட்டிய கைலியோடு பஸ்ஸின் பின் படிக்கட்டில் ஏறிக் கொண்டு வண்டியைத் திருப்ப, ரைட், ரைட் சொல்லிக் கொண்டிருந்தான். வீட்டையும் அடியோடு மறந்து விட்டு, பெற்ற தாயையும் விட்டு விட்டு, ஊர் சுற்றியாய், தத்தாரியாய், இத்தனை ஜாலியாக எப்படி இவனால் இருக்க முடிகிறது. அவனையும் ஊர் ஊராகப் பார்த்திருக்கிறான் இவன். பழநியிலும், திருச்சியிலும், வதிலையிலும், சென்னையிலும் என்று இடம் மாறிக் கொண்டேயிருக்கிறான். யாதும் ஊரே யாவரும் கேளீர்…எல்லா இடத்திலும் இவனுக்கென்று ஆட்கள் இருந்து கொண்டேயிருக்கிறார்கள். எவனையாவது பிடித்து, என்னமாவது செய்து, ஏதாச்சும் ஒரு வேலை வெட்டியைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். வயிற்றைக் கழுவிக் கொண்டுதான் இருக்கிறான். பஸ்-ஸ்டான்ட் வேலைதான் பெரும்பாலும். அப்படியான எல்லா இடங்களையும் சொந்தம் கொண்டாடிக் கொண்டு இவனும் தன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறான். கண்டக்டர் ஆக வேண்டும் என்கிற அவனின் ஆசை என்றுதான் நிறைவேறுமோ? இப்படி இவனைப் போலவாவது காமேஸ்வரன் அண்ணா இருந்திருக்கக் கூடாதா?

இப்படி புத்தி சரியில்லாமல் போக வேண்டுமா? என்ன பாவம் செய்தார்கள் அப்பாவும், அம்மாவும்? வாழ்நாள் பூராவும் வறுமையும், கஷ்டமும், , சோகமும், துக்கமும், அல்லலும், அவலமும், சே…! இப்படியும் ஒரு வாழ்க்கையா? யாரிட்ட சாபமிது? எவரிட்ட பொல்லாங்கிது? எந்த ஜென்மத்துப் பாவமிது?

மனம் கனத்துப் போய் மறுபடியும் இவன் வீடு வந்து சேர்ந்தபோது அந்த அஞ்சலட்டைக் கடிதம் எதிர் கொண்டது இவனை. மௌனமாக சியாமளா அதை இவனிடம் நீட்டிய போதே ஏதோ விபரீதம் என்று புரிந்து கொண்டான் இவன். என்ன என்கிற கேள்வியோடே அதை வாங்கிப் படிக்க ஆரம்பித்தான். காமேஸ்வரன் அண்ணா கன்னாபட்டி என்கிற கிராமத்தில் இறந்து போயிருந்தார். யாரோ தகவல் சொல்லி போலீஸ் வந்து கூட்டிப் போயிருக்கிறது. கிராமத்து மக்களின் கருணையில் கடைசிக் காரியங்கள் நடந்தேறியிருக்கின்றன. முகவரியைப் பார்த்தான். அடித்துத் திருத்தியிருந்தது. எங்கெங்கோ சுற்றி எப்படியெப்படியோ போய்க் கடைசியில் இங்கு வந்து சேர்ந்திருக்கிறது. இதேபோல் தகவல்கள் எல்லாருக்கும் போயிருக்கும் என்று நினைத்துக் கொண்டான். அமைதியாய்ச் செய்த காரியம் அமர்த்தலாய்த் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அளவில் ஆறுதல் கொள்ளுங்கள் என்பதைப்போல். இப்படித்தான் தோன்றியது இவனுக்கு.

சித்தப்பாவின் அந்தக்கடிதத்தைப் படித்து முடித்தபோது உடம்பில் மெல்லிய நடுக்கம் பரவுவதை உணர்ந்தான் இவன். ஆதரவாக அருகே வந்து சியாமளா அவன் கைகளைப் பற்றிக் கொண்டபோது கண்களில் நீர் சொரிய, அடக்க முடியாமல் அப்படியே அவள் மடியில் விழுந்து குலுங்கி அழ ஆரம்பித்தான் சங்கரன்.

– 16.2.2014 தினமணிகதிரில் வெளிவந்தது.

தன் குறிப்பு இயற்பெயர்: கி.வெங்கட்ரமணி தகப்பனார் பெயர்:ஆ.ப.கிருஷ்ணய்யர் பிறந்த தேதி: 10.12.1951 கல்வித் தகுதி: பி.யு.சி. பிறந்த ஊர்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பணி: தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து பின்னர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவிக் கணக்கு அலுவலகராகப் பணி புரிந்து ஓய்வு. புனை பெயருக்கான காரணம் திரு. நா. பார்த்தசாரதி, அவர்களின் தீபம் இலக்கிய இதழின் மீதான வாசிப்பு அனுபவத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *