கையில் ஏந்திய குழந்தையை மார்போடு அணைத்தவாறே தேசிகர் நடந்தார். அவர் மனைவி, பழைய துணிகளும், தண்ணீர் பாட்டிலும் வைத்திருந்த ஒயர் கூடையைத் தூக்கியவாறு, சோர்வாய்ப் பின் தொடர்ந்தார்.
அழுக்கு உடையும், பரட்டைத் தலையுமாய், கணவன் – மனைவி இருவரும் அகதிகள் போல் இருந்தனர். மார்கழி மாதப் பனி, அந்த முன்னிரவிலேயே இறங்க ஆரம்பித்தது. அதைப் பொருட்படுத்தாமல், குழந்தையை இறுக அணைத்தவாறே வேகமாய் நடந்தார் தேசிகர்.
சீக்கிரம் நடந்தால்தான் கடைசிப் பேருந்தைப் பிடிக்க முடியும். இல்லாவிட்டால் காலை வரை, இந்தக் கொட்டும் பனியில் பேருந்து நிலையத்திலேயே உட்கார்ந்திருக்க வேண்டும். சேந்தங்குடி செல்லும் இரண்டாம் நம்பர் பஸ் கிடைத்தால் நல்லது. வீட்டு வாசலிலேயே இறங்கிக் கொள்ளலாம்.
13&ஏ கிடைத்தால் திருவண்டுதுறை சுற்றி, வடபாதிமங்கலம் வரை செல்லும். அங்கிருந்து இந்த இரவில் மூன்று கிலோ மீட்டர் நடந்தால்தான் மணமங்கலம் போகலாம். வேகமாக நடந்து கொண்டே திரும்பிப் பார்த்தார்.
அவர் மனைவி லொங்கு லொங்கென்று பாதி நடை, பாதி ஓட்டமாய் இவரைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தாள். பாவம், அவளுக்குத்தான் எத்தனைக் கஷ்டம்! என்று கழிவிரக்கம் தோன்ற நடையைச் சற்றுத் தளர்த்தினார். அவர் மனைவி வந்து சேர்ந்ததும் இருவரும் மீண்டும் நடந்தனர்.
பேருந்து நிலையம் வந்தது. கூட்டத்தையே காணோம். இரண்டாம் நம்பர் பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்தனர். மேல் துண்டால் தரையை இரண்டு தட்டுத் தட்டிவிட்டு உட்கார்ந்தார் தேசிகர்.
அவர் மனைவி கூடையை வைத்துவிட்டுக் கைகளை முறித்தாள். இங்கே உட்காரு என்று அவர் சொன்ன இடத்தில் உட்கார்ந்தாள். துண்ட விரிச்சுக் கெடத்தலாமே! என்று அவர் கைச் சுமையைப் பார்த்து அவள் சொன்னதை அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பசி, தாகம் என்று எதுவும் தோன்றவில்லை. வயித்துக்குள் முழுச் செங்கல்லைப் போட்டது போல் கம்மென்றிருந்தது.
சீக்கிரம் பஸ் வந்துவிட்டால் தேவலை; ஊரில் போய் ஏகப்பட்ட வேலை பாக்கி இருக்கிறது; பணம் புரட்ட வேண்டும். அதை நினைத்தால் பகீரென்றது. யார், யாரிடம் ஏற்கெனவே வாங்கி இருக்கிறோம்? யாரிடம் புதிதாகக் கேட்பது? அதில் மனமிரங்கிக் கொடுக்கக் கூடியவர் யார், யார் என்று ஒரு பட்டியல் போட்டு யோசித்தார்.
பேருந்து வந்துவிட்டால் தேவலை; என்ன இன்னும் காணவில்லை? என்று சுற்றிலும் பார்வையைச் சுழற்றினார்.
பேருந்துக்குக் காத்திருக்கும் கூட்டத்தையே காணோம். என்னாயிற்று? இந்தப் பேருந்துக்கு எப்பொ-ழுதுமே அலாதியான கூட்டம் காத்திருக்கும். அது நிலையத்திற்குள் வந்து நுழையும் பொழுதே, நாலாபுறமும் கூட்டம் மொய்க்கும். வெளியிலிருந்து இடம் போடுவார்கள். பயணிகள் இறங்குவதற்குள், ஏற முயன்று ஒரே தள்ளுமுள்ளாய் இருக்கும். அதுவும் இரவு கடைசிப் பேருந்து என்றால், இன்னும் சொல்லவே வேண்டாம். எங்கே போயிற்று அந்தக் கூட்டம்? பூக்கடையில் தூங்கி வழிந்தவாறு உட்கார்ந்திருந்தவரைப் பார்த்தார்.
சேந்தங்குடி போற ரெண்டாம் நம்பர் பஸ் இப்ப வந்திருமா?
அது போயி முக்கா மணி நேரம் ஆவுது. மணி பதினொண்ணு ஆவப் போவுதே? இனிமே காலம்பற அஞ்சரை மணிக்குத்தான் பஸ்சு!
தேசிகருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அடுத்தடுத்து நடந்த நிகழ்ச்சிகளில், அவருக்கு நேரம் குழம்பிவிட்டது. மணி எட்டரை இருக்கும் என்றே இத்தனை நேரம் தவறாக எண்ணிக் கொண்டிருந்தார். இந்த மூத்திர நாற்றத்தில், கொசுக்கடியில், மார்கழிக் குளிரில், விடியும் வரை எப்படி உட்கார்ந்திருப்பது? அதுவும் கையில் குழந்தையுடன்!
என்னங்க அது, கையில துணி மூட்டை மாதிரி? என்றாள் ஒரு வயதான மூதாட்டி. ரொம்ப நேரமா கையவிட்டு எறக்காம வச்சிருக்கீங்களே?
எம் பொண்ணும்மா! ஒரே பொண்ணு! பேச்சே வரவில்லை அவருக்கு.
ஏ… இப்படி மூடி வச்சிருக்கீங்க?
குளிரு கடுமையா இருக்குல்ல? ஏற்கனவே அதுக்கு ஜூரம்; குளுந்த காத்துப் பட்டா, காச்சல் இன்னும் அதிகமாகும்ல? அதான்!
அதுக்குன்னு, மூஞ்சி, மூக்கெல்லாமா மூடுவாங்க? மூச்சிவுட வேணாம்!? என்றாள் அந்தக் கிழவி விடாமல். தேசிகர் முகத்தைச் சுற்றி மூடி இருந்த பழந்துணியைத் தளர்த்தினார். உதடு உலர்ந்து போய் வெடித்திருந்தது; மூக்கில் சளி உறைந்து போய்ப் பொறுக்குத் தட்டி இருந்தது. நடுங்கும் கரங்களால் குழந்தையின் முகத்தை அழுந்தத் துடைத்தார். கன்னமெல்லாம் மென்மை இழந்து அழுத்தமாய் இருந்தது. குழந்தையின் முகத்தைத் தன் பக்கம் திருப்பி, அணைத்தாற் போல் வைத்துக் கொண்டார்.
கொழந்தய கீழதான் கெடத்துங்களேன்! என்றாள் அந்த மூதாட்டி.
இல்லம்மா, இருக்கட்டும்!
கொண்டாங்க; இல்லாட்டி நானாச்சும் வச்சுக்கறேன்; எத்தினி நேரம் நீங்களே நீட்டின கையும், சொமையுமா இருப்பீங்க! என்று அவள் கையை நீட்டவும் தேசிகர் பதறிவிட்டார்.
அய்யய்ய, வேண்டாம், வேண்டாம்; குழந்தைய வெச்சுக்கிறது என்ன பெரிய சுமையா; பொறந்ததுலேர்ந்து இது என் ஒடம்பு சூட்டுக்குப் பழகிடுச்சு; இந்த சூடுன்னா அதுக்கு அலாதி ஒணக்கை; வேற யாரு தூக்கினாலும், ஒரே அழுகையும், ரெகளையும்தான்; அழுகைல புடிச்சா, லேசுல ஓயாது; பல்லு கிட்டி, கண்ணு ரெண்டும் சொருகி, உடம்பு நீலம் பாரிச்சு, பெரிய பாடாப் போயிடும் என்று அவர் நீளமாகச் சொல்லிக் கொண்டே போக, அந்தக் கிழவி ஆச்சரியத்தில் வாய் பிளந்தாள்.
அம்மாடி, அப்ப நீங்களே வச்சுக்கங்க, ஆமா, அது என்னா கோளாறுன்னு டாக்டர்ட்ட காமிக்கப் புடாது?
காமிக்கறோம்; பிரைமரி காம்ப்ளக்ஸ் வயது ஆக ஆக, அது தன்னாலேயே சரியாப் போயிடும்; சில குறிப்பிட்ட ரத்த வகை உள்ள குழந்தைங்க அழும்போது, இப்படி விகாரமா போறது இயல்புதான். ரொம்பத் தேம்பி, விக்கி அழறாப்ல உட்றாதீங்க; படிப்படியா சரியாயிடும்; ஒண்ணும் கவலைப்படாதீங்கன்னு சொல்லி இருக்கார்.
தேசிகர் நீண்ட வியாக்கியானம் கொடுக்க, அந்தக் கிழவியின் கவனம் அடுத்து, அவர் மனைவி மீது பாய்ந்தது. அவர் மனைவி சுலோச்சனா, ஒயர் கூடை மீது முகத்தைப் புதைத்து மடிந்து கவிழ்ந்திருந்தாள்.
இதாரு, உங்க சம்சாரமா?
ஆமாம்!
அவங்களுக்கும் ஒடம்பு ஆவலையா?
இல்லையே!
பின்ன இப்படி கவுந்தடிச்சு படுத்திருக்காங்க?
நாலு நாளா ஒரே அலைச்சல்; கண்விழிப்பு; சரியாத் தூங்கி ஒரு வாரமாச்சு; வீட்டுக்குப் போயி, குளிச்சி, முழுகி, சாப்புட்டு, தூங்கினாத்தான் கலகலப்பா இருக்கும்.
அப்ப சரி, செத்த சாஞ்சிருக்கட்டும்; இப்புடி வந்து செத்த கால நீட்டி படுத்துக்கட்டுமே! என்றாள், தான் உட்கார்ந்திருந்த சாக்குப் படுதாவைக் காண்பித்து. அவித்த சோளம், நிலக்கடலை, கொடுக்காப்புளி எல்லாம் விற்பவள் போலிருக்கிறது.
வேண்டாம், வேண்டாம்! என்பது போல் தேசிகர் கையைக் காட்டவும், அதற்கு மேல் பேச ஏதுமில்லை என்பது போல், அவள் வெற்றிலைப் பாக்கைக் கசக்கிப் போட ஆரம்பித்தாள்.
தேசிகருக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் குழந்தை இல்லை; அடுத்து ஐந்தாவது வருடம்தான் உண்டாயிற்று. முதல் இரண்டு குழந்தைகளும் தங்கவில்லை. குறைப் பிரசவத்தில் ஒன்றும், பிறந்து மூன்றாவது மாதத்தில் ஒன்றும் இறந்துவிட்டன. அதனால் மூன்றாவது பெண் பிறந்த பொழுது அதற்கு மூக்குக் குத்தி, தடை போட்டு, கோயிலுக்கு நேர்ந்து கொடுத்து, பிச்சையம்மா என்று அம்மன் இட்ட பிச்சை என்ற அர்த்தத்தில் பெயர் வைத்தனர்.
குழந்தை மகாசூட்டிகை; நல்ல புத்திக்கூர்மை; ஆனால் உடம்புதான் ங்கை என்று பூஞ்சையாய் இருக்கும். அடிக்கடி உடம்புக்கு வந்து படுத்தி எடுத்துவிடும்.
தேசிகருக்கு மாரியம்மன் கோயில் பூசை. வழி வழியாய் அவர் மூதாதையர்கள் செய்து வந்த தொழில் அது. வருடத்திற்கு இருபது கலம் நெல் வர வேண்டும் இவருக்கு. ஆனால், ஆறு கலம் வந்தாலே பெரிது. சிறிய கிராமமாதலால், பெரிய அளவில் வேறு வரும்படியும் கிடையாது. அர்ச்சனைத் தட்டு ஆடிக்கு ஒன்று, அமாவாசைக்கு ஒன்று என்று வரும். பூசைத் தட்டில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு மேல் யாரும் போட மாட்டார்கள்.
சில சமயம், இந்தக் கோயில், கிராமம், எல்லாவற்றையும் உதறிவிட்டு, சென்னையைப் பார்க்கப் போய் விடுவோமா? என்று தோன்றும். அவரும் போய்விட்டால், வேம்படியாள் பாடு திண்டாட்டம்தான்; கிடைக்கும் ஒரு வேளை உணவும் இல்லாமல் போய்விடும். அவருக்கு அடுத்து எடுத்துக் கட்டி செய்ய மனிதரில்லை. அதற்காகவே அவர் அந்தக் கிராமத்தில் வறுமையில் உழன்று கொண்டிருந்தார்.
கருமாதி, கல்லெடுப்பு என்று மாதத்திற்கு இரண்டு மூன்று வரும். அன்று ஓரளவு வரும்படி வரும். பச்சரிசி, தேங்காய், காய்கறிகள், நவதானியம், இலை, சொம்பு, விசிறி, மளிகைச் சாமான்கள் என்று மூட்டை கட்டிக் கொண்டு வருவார். ஒருமுறை போய் வந்தால் பத்து நாள் பாடு கவலை இல்லை.
அவரது மனைவி விளையாட்டாய் அடிக்கடி அவரிடம் சொல்வாள். அங்கு காடு புகைஞ்சாத்தான், இங்க நம்ம வீடு புகையுது! என்று சுடுகாட்டைக் காண்பித்துச் சிரிப்பாள்.
கோவிலுக்கு, யாராவது வெளியூர் மனிதர்கள் & இந்த அம்மனைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள், டெல்லி, மும்பை, பெங்களூர், செக்கந்தராபாத் என்று பெரிய ஊர்களிலிருந்து, கார் எடுத்துக் கொண்டு வருவார்கள். அப்பொழுது தட்டில் கணிசமாய்க் காணிக்கை வரும். அர்ச்சனைக்குக் கொடுக்கும் போது வெல்லம், நெய், எண்ணெய் என்று வளப்பமான சாப்பாடு கிடைக்கும். அவ்வளவுதான். பணம், காசு தாராளமாய்ப் புழங்காது.
திடீரென்று செலவு வந்துவிட்டால் காரைக்கால் பிள்ளையிடம் போய்த்தான் நிற்க வேண்டும். அவர், தேசிகர் அப்பா காலத்திலிருந்து பழக்கம். அந்தப் பழக்கத்தில் இன்றும் அவசரம், ஆபத்தென்றால் இருநூறு, முன்னூறு என்றால் அவரிடம்தான் வாங்கிக் கொள்வது. பிறகு எப்படியோ சிக்கனம் பண்ணிக் கடனைத் திருப்பிக் கொடுத்து விடுவார். இப்பொழுதும் கூடப் பாப்பாவுக்கு முடியவில்லை என்று, முந்தா நாளுக்கு முதல் நாள் அவரிடம் போய் ஐநூறு ரூபாய் கடனாய் வாங்கி, அவர் வீட்டு வாசலில்தான் பஸ் ஏறினார்.
ம்…! என்று பெருமூச்செறிந்த தேசிகர்; அந்த இரவு நேரத்திலும், இரண்டு மூன்று ஈக்கள் வந்து குழந்தையின் வாயோரம் அமர்ந்திருந்ததைத் தட்டி விரட்டி விட்டு, குழந்தையை நன்றாகப் போர்த்தி அணைத்துக் கொண்டார். கைகள் இரண்டும் கெஞ்சின. கடுகடுவென சூவை ஏறுவது போல் கடுத்தன. குழந்தையை யாரிடமாவது கொடுத்துவிட்டு இரண்டு கைகளையும் ஓங்கி உதறினால் தேவலாம் போலிருந்தது.
யாரிடம் கொடுப்பது? அவர் மனைவி அப்படியே கவிழ்ந்திருந்தாள். பார்ப்பவர்கள் அவள், அயர்ந்து உறங்குவதாக நினைக்கக் கூடும். கூர்ந்து அவதானித்தால் மட்டுமே முதுகுத்தண்டு மின்னலாய்ச் சொடுக்கி அதிர்வதையும், உடல் லேசாய்க் குலுங்குவதையும் உணர முடியும்; இன்னும் சற்றே கூர்ந்து காது கொடுத்தால், சன்ன விசும்பலும் விதிர் விதிர்ப்பும் கூடக் கேட்கும்.
மனைவியை நினைத்தால் துக்கம் தொண்டைய அடைத்தது, தேசிகருக்கு. சிரமப்பட்டுப் பார்வையை வேறு புறம் திருப்பினார். டீக்கடையில் நான்கைந்து பேர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். இனிப்புக் கடையில் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தார் & அந்த மனிதர். ஹோட்டலைக் கழுவிவிட்டுக் கொண்டிருந்தனர் இருவர். இன்னொரு டீக் கடையிலிருந்து பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.
ஆங்காங்கே மனிதர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். தேசிகருக்கு அயர்வாய் வந்தது. அந்த நேரம் இரண்டாம் காட்சி விட்டு மக்கள் வர ஆரம்பித்தனர். அட, மாரியம்மங் கோயில் சாமியா? என்னா இந்த நேரத்துல பஸ்டாண்டுல ஒக்காந்திருக்கீங்க?
தேசிகர் திரும்பிப் பார்த்தார்; வடிவேற்குடி நாகராஜ்.
எங்க சினிமாவுக்கு வந்தீங்களா? என்று கேட்டதும், சிரிப்பதா, அழுவதா என்று புரியவில்லை தேசிகருக்கு. இல்லையப்பா; பாப்பாவுக்கு ஒடம்பு சரியில்லை; ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு வந்தோம். பஸ் போயிடுச்சு, அதான்!
இப்ப தேவலியா…?
ம்… ம்! என்றார்.
டீ சாப்புர்ரீங்களா சாமி? வாங்கிட்டு வரட்டுமா?
வேண்டாம்ப்பா! என்று இவர் சொல்லவும், அவன் பீடி பற்றவைக்க நகர்ந்துவிட்டான். சினிமாவுக்கு வந்த மக்களின் ஆரவாரம் அடங்கிய பத்து நிமிடங்களுக்கெல்லாம், இரண்டு காவலர்கள் லத்தியைத் தட்டிக் கொண்டே வந்தனர். தேசிகருக்குத் திக்கென்றது. வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தார்.
சந்தேகத்திற்கு இடமாக அமர்ந்திருந்த ஓரிருவரை விசாரித்தனர். இவரிடம் நெருங்கி வந்து நின்றனர். வேயுறு தோளி பங்கன், விடமுண்ட கண்டன்… என்று சம்பந்தர் தேவாரத்தைக் கண்மூடி உச்சரித்துக் கொண்டிருந்தார் தேசிகர்.
குழந்தையை அணைத்தவாறே கண்மூடி அமர்ந்திருக்கும் அவரையும், குழந்தையையும், அவர் மனைவியையும் பார்த்தனர். என்ன நினைத்தார்களோ தெரியவில்லை; லத்தியைத் தட்டிக் கொண்டே போய்விட்டனர். குடைந்து, குடைந்து கேட்காமல் அவர்கள் சென்றதும், ஒரு கண்டம் தப்பியது போல் இருந்தது தேசிகருக்கு.
இரவு மணி இரண்டு இருக்கும். இன்னும் மூணரை மணி நேரத்தைக் கழிக்க வேண்டும். ஊருக்குச் சென்ற பிறகு? பெரும் கேள்விக்குறியாய் பதிலில்லாமல் நீண்டது கேள்வி. கையைக் கடுத்தது. திரும்பவும் கண்களை மூடிக் கொண்டு தனக்கு மனப்பாடமான தேவாரங்களை மனசுக்குள் சொல்ல ஆரம்பித்தார்.
அதிகாலைப் பேருந்துகள் ஒவ்வொன்றாய் வர ஆரம்பித்தன; சாமி, நம்ம பஸ் வந்துடுச்சு; வாங்க, எந்திரிங்க! என்ற நாகராஜின் குரல் கேட்டது. குழந்தையை அணைத்தவாறே எழுந்தார் தேசிகர்; கூடையை எடுத்துக் கொண்டு அவர் மனைவி பின் தொடர்ந்தார். பேருந்தில் தாராளமாய் இடமிருந்தது.
இடது கையால் குழந்தையை அணைத்துக் கொண்டே, வலது கையால் சட்டைப் பையைத் துழாவி, சில்லரைக் காசுகளை எடுத்தார். இரண்டு முழு டிக்கட்டும், ஓர் அரை டிக்கட்டும் எடுத்தார். பேருந்து ஓட ஆரம்பித்தது. நல்ல குளிர் இறங்க ஆரம்பித்தது. ஜன்னல் பட்டையைக் கீழே இறக்கிவிட்டாள் அவர் மனைவி. அவள் முகம் வீங்கிக் குமுத்திருந்தது.
இருள் பிரியாத நேரம், கொடி மரம் நிறுத்தத்தில் இறங்கினார்கள். ஊர் மண்ணை மிதித்ததுமே, ஆத்திரமும் துக்கமுமாக வந்து தொண்டையை அடைத்தது. வெறி கொண்டவர் போல் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தார். பின்னாலேயே அவர் மனைவியும் ஓடினாள்.
என்னாச்சு தேசிகர்? கொழந்தைக்கு ஒடம்பு தேவலையா? என்று கேட்டுக் கொண்டே காரைக்கால் பிள்ளை, தேசிகர் கொடுத்துச் சென்றிருந்த அவர் வீட்டுச் சாவியை எடுத்துக் கொண்டு வந்தார்.
கையில் பணமில்லை; காரு வச்சுக்க வழி இல்லை; பஸ்சுல தெரிஞ்சா ஏத்தமாட்டாங்கன்னு, வெளீல காமிச்சுக்காம கையிலேயே வச்சிகிட்டு ஒக்காந்திருந்தேனே; ராத்திரியே எம்பொண்ணு செத்துப் போச்சே; வாய்விட்டு அழுவக் கூட முடியலையே; மரத்துப் போச்சே; எம் பொண்ணு என்னை விட்டுப் போயிடுச்சே; நான் கும்புட்ட தெய்வம் என்னைக் கைவிட்டுடுச்சே; நான் என்னா பண்ணுவேன்? என்று துணியில் சுற்றப்பட்டிருந்த குழந்தையின் உடலைக் கூடத்தில் கிடத்திவிட்டு, மடக்கிய கைகளை நீட்ட முடியாமல் தேசிகர் கதற, அவர் மனைவி குழந்தை மேல் விழுந்து, ஓங்கிக் குரலெடுத்து அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.