கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2021
பார்வையிட்டோர்: 4,992 
 

மூட்டையை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வரும் துரும்பனை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார் காயலான் கடைக்காரர். கடைக்குள் வந்து தோளில் இருந்த சிறிய மூட்டையை மெதுவாக கீழே இறக்கினான். பிறகு மூட்டைக்குள் இருந்து ஒவ்வொரு காலி மது பாட்டிலையும் எடுத்து வெளியில் வைத்தான். கடைக்காரர் பார்வையாலேயே கணக்கு போட்டார், மொத்தம் பத்து பாட்டில்கள்.

டேய்.. இந்தா முப்பது ரூபா..

காயலான் கடைக்காரர் நீட்டிய பணத்தை வாங்காமல் அமைதியாக அவர் முகத்தையே பார்த்து கொண்டு நின்றான் துரும்பன். அசையாமல் நின்றவனை பார்த்து “சீக்கிரம் வாங்கிட்டு இடத்தை காலி செய்..” என்றார் கடைக்காரர்.

ஐம்பது ரூவா..

என்னடா.. சரியா சொல்லு.

பத்து பாட்டில் குடுத்தேன், இன்னும் இருபது ரூபா சேத்து குடுங்க..

சிரித்து கொண்டே ஐம்பது ரூபாயை கொடுத்தார் கடைக்காரர்.

பணத்தை வாங்கி ட்ரவுசருக்குள் போட்டு கொண்டு இருப்பிடத்தை நோக்கி நடக்க தொடங்கினான். “பாவம்.. ரொம்ப சின்ன பையன்.. ஒரு ஆறு அல்லது ஏழு வயது தான் இருக்கும்..” என்று கடைக்காரர் நினைத்து கொண்டார்.

அந்த நகரின் முதன்மை கல்வி அலுவலகத்திற்கும் அதன் அருகில் இருக்கும் இடைநிலை பள்ளிக்கும் நடுவில் ஒரு ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தினடியில் ஒரு பழைய தார்ப்பாயை கட்டிக் கொண்டு வெயிலுக்கு மறைவாக தங்கியிருந்தார்கள் துரும்பனும் அவனது குடும்பத்தாரும். இவர்கள் அனைவரும் விளிம்பு நிலை மனிதர்கள், இரை தேடுவதே இவர்களது அன்றாட தொழிலாக இருந்தது. துருவனின் தந்தை ஒரு முழு நேர குடிகாரன் என்பதால், கிடைத்த அனைத்து வேலைகளையும் செய்து பிள்ளைகளை காப்பாற்றி வந்தாள் துரும்பனின் தாய். துரும்பனும் அதிகாலையில் எழுந்து ஆங்காங்கே கிடைக்கும் காலி மது பாட்டில்களை சேகரித்து, காயலான் கடையில் போட்டு விட்டு, கிடைத்த பணத்தை கொண்டு வந்து அவனது அம்மாவிடம் கொடுப்பான்.

இதோ டெலிபோன் ஆபீஸ் வந்து விட்டது, நேராக சிறிது தூரம் நடந்தால் அவர்களின் இருப்பிடம் வந்து விடும். “டேய்.. இன்னைக்கு மாட்டுனியா..” குரல் வந்த திசையை நடுக்கத்துடன் திரும்பி பார்த்தான். துரும்பனின் தந்தை நின்று கொண்டிருந்தான். எவ்வளவுடா பொறுக்குன இன்னைக்கு.. என்று கூறி கொண்டே துரும்பனின் கையை பிடிக்க வந்தான். அவன் கைக்கு அகப்படாமல் லாவகமாக குனிந்து ஓடத் தொடங்கினான் துரும்பன். “டேய்..நில்லுடா..” என்று இரையை வேட்டையாடும் ஓநாயை போல் அவன் தந்தை துரத்த தொடங்கினான். ஆனால் உயிரை காப்பாற்ற ஓடும் முயலை போல, பணத்தை காப்பாற்றும் பொறுப்பு இருந்தது துரும்பனுக்கு. பணம் அவன் அம்மாவிடம் போய் சேர்ந்தால் தான் அனைவருக்கும் சோறு என்பதால், துரும்பனால் சற்று வேகமாக ஓட முடிந்தது. துரும்பன் தலை தெறிக்க ஓடி வருவதை தூரத்தில் இருந்து பார்த்து விட்டாள் மாரி. நேராக ஓடிச்சென்று அம்மாவிற்கு பின்னால் நின்று கொண்டான் துரும்பன். “தினம் இதே ரோதனயா போச்சு.. சம்பாதிக்க துப்பு இல்ல.. சின்ன பையன்கிட்ட இருந்து காச புடுங்க பாக்குறியே, உனக்கு வெக்கமா இல்லை..” வசை பாடிய மாரியை முறைத்து பார்த்து கொண்டே சென்று விட்டான் துரும்பனின் தந்தை.

சற்று நேரத்தில் பொருட்களை வாங்கி வந்து அடுப்பை பற்ற வைத்தாள் மாரி. உலையில் அரிசியை போட்டு விட்டு திரும்பி பார்த்தாள், துரும்பன் மண் தரையில் நன்றாக உறங்கி கொண்டிருந்தான். அவனது சக வயது குழந்தைகளை விட மிகவும் ஒல்லியாக இருந்ததால், துரும்பன் என்று அழைக்க தொடங்கினார்கள். நாளடைவில் அதுவே அவனது பெயராகி போனது. நேற்றிரவு மழை பெய்ததால் அனைவரும் ஒரு கடையின் வாசலில் வெகு நேரம் உறங்காமல் உட்கார்ந்து இருந்தார்கள். அதிகாலை ஐந்து மணிக்கே துரும்பனை எழுப்பி பாட்டில்களை சேகரிப்பதற்கு அனுப்பி விட்டாள் மாரி.

“யார் எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ, நாம் இந்த வாழ்க்கை வாழ்கிறோம்” என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள். அவளுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ரோட்டோர வாழ்க்கை தான். சொந்த ஊர், சொந்த பந்தங்கள் என்று எதுவும் அவளுக்கு தெரியாது. அவளுக்கு தெரிந்தது எல்லாம், பொழுது விடிந்தால் உணவுக்காக அலைய வேண்டும்.

“ஏம்மா … இங்க வா..” குரல் வந்த திசையை நோக்கி திரும்பினாள் மாரி. ஒரு வயதானவர் இரண்டு கட்டை பைகளுடன் நின்று கொண்டிருந்தார்.

இதுல எங்க குழந்தைகளோட பழைய துணியெல்லாம் இருக்கு.. நீங்க எடுத்துக்குங்க.. என்று பைகளை கீழே வைத்து விட்டு போய் விட்டார். சட்டென்று எங்கிருந்தோ வந்த துரும்பனின் தந்தை துணி பைகளை எடுத்து கொண்டான். “யோவ். சின்ன பொண்ணுக்காவது நாலு பழையதை வச்சிட்டு போ.. மழை பெய்ஞ்சு எல்லா துணியும் ஈரமா இருக்கு..” என்றாள். ஒரு கட்டை பைக்குள் கை விட்டு கிடைத்த சில துணிகளை அவளருகில் எறிந்து விட்டு போய் விட்டான்.

மறுநாள் தாமதமாக சென்றதால் துரும்பனுக்கு பாட்டில்கள் எதுவும் கிடைக்கவில்லை. பல இடங்களில் தேடி திரிந்து சோர்வாக ஆலமரத்தடியில் வந்து உட்கார்ந்து கொண்டான். “துரும்பா.. அந்த கடைசியில இருக்குற சிமெண்ட்டு கடைக்காரர் வீட்டுக்கு போய் பழையது ஏதாவது இருந்தா, அம்மா சாப்பிட கேட்டான்னு வாங்கியா..” என்றாள் மாரி. துரும்பன் ஒன்றும் பேசாமல் தட்டை வாங்கி கொண்டு கிளம்பினான்.

நில்லுய்யா.. என்று துரும்பனை தடுத்தவள், “இந்த புது சொக்காய போட்டுக்கிட்டு போ..” என்று முந்தைய நாள் கிடைத்த பழைய துணிகளில் ஒரு சட்டையையும் ட்ரவுசரையும் அணிவித்து விட்டாள். “கிழிஞ்ச துணிய போட்டுக்கிட்டு அங்க போனா, சிமெண்ட்டு கடைக்காரம்மா திட்டும்..” என்றாள். பிறகு ஏதோ நினைத்தவள், அவன் முகத்தை ஈரத்துணியால் துடைத்து விட்டு, தலையை வாரி விட்டாள். பிறகு சிரித்து கொண்டே, சீக்கிரம் போய்ட்டு வா.. என்றாள்.

சற்று தூரம் நடந்தவனை பார்த்து சைக்கிளில் சென்ற ஒரு பெரியவர் “டேய் குட்டி.. ரோட்ட விட்டு கீழே இறங்கி நட..” என்றார். துரும்பனும் ரோட்டின் ஓரமாக நடந்து சென்றான். இடைநிலை பள்ளியை தாண்டி செல்லும் போது யாரோ அவன் தோளை பிரம்பால் தட்டினார்கள். பயந்து போய் திரும்பி பார்த்தவனை “தட்டை தூக்கிகிட்டு வெளிய எங்கடா போற..” என்று உயரமான ஒருவர், அடிப்பது போல் பிரம்பை ஓங்கினார். “போ. ஸ்கூலுக்குள்ள போ..” என்று விரட்டினார். துருவன் பயந்து போய் பள்ளிக்குள் சென்றான். “சீக்கிரம் போ.. இல்லைனா முட்டை தீந்துடும்..” என்று மீண்டும் அவனை அதட்டினார். “ஓஹோ.. சோறு போடுறாங்க போல..” என்று துருவன் நினைத்து கொண்டான்.

சுற்றி முற்றும் பார்த்தான், நிறைய பேர் தட்டுடன் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களை பின் தொடர்ந்து சென்றான். மூன்று பெரிய வரிசைகளில் நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். இவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். சிறிது நேரத்தில் அவன் முறை வந்தது, தட்டில் சூடான சாம்பார் சாதமும் ஒரு அவித்த முட்டையும் வைத்தார்கள். தட்டை எடுத்து கொண்டு வேகமாக வெளியே ஓடினான்.

எங்கடா ஓடுற.. கையில் பிரம்புடன் மீண்டும் அந்த உயரமானவர் நின்று கொண்டிருந்தார்.

அம்மாகிட்ட.. என்று பயத்துடன் முனகினான்.

எல்லாம் சாயந்திரம் ஸ்கூல் விட்டவுடனே போலாம்.. போ போய்.. அங்க உட்காந்து சாப்பிடு.. என்று உயரமானவர் அதட்டவே, துரும்பனும் போய் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஒரு கை சாம்பார் சாதத்தை எடுத்து வாயில் வைத்தான், இரண்டு நிமிடத்தில் தட்டு காலியானது. மெதுவாக பள்ளியின் வாசலுக்கு வந்தான், வெளியே ஓடிவிட அடியெடுத்து வைத்தவனின் முதுகில் பிரம்பால் அடி விழுந்தது.

நெனச்சேன்டா.. நீ திரு திருன்னு முழிக்கும் போதே.. இன்னைக்கு தான புதுசா சேர்ந்திருக்க.. சொல்லு உன் பேரென்ன?..

பயந்து போய் கண்ணில் நீர் வழிய நின்றவனை பார்க்க பாவமாக இருந்தது அவருக்கு. “சரி அழாத.. உன் அம்மா நாலு மணிக்கு வந்து கூட்டிகிட்டு போறேன்னு சொல்லி இருக்காங்க.. நீ போய் அந்த ஒன்னாம் வகுப்புல உட்காரு..” என்று தூரத்தில் இருந்த ஒரு பெரிய வகுப்பறையை காட்டினார். அவர் கை காட்டிய திசையில் அழுது கொண்டே சென்றான் துரும்பன். “பாவம்.. புது பையன் போலிருக்கு.. அதான் அம்மாகிட்ட போகணும்னு அழறான்” என்று நினைத்து கொண்டார்.

ஒன்னாம் வகுப்பிற்குள் நுழைந்தவனை “வாங்க சார்.. எங்க ஊர் சுத்திட்டு வரீங்க..” என்று ஒரு ஆசிரியை முறைப்பாக கேட்டார். “மேடம்.. புது பையன்.. உள்ள உட்கார வைங்க.. அம்மாகிட்ட போகணும்னு அழறான்.. வெளிய ஓடிப் போய் தொலைஞ்சி போயிட்டான்னா எல்லாருக்கும் பிரச்சினை..” என்று துரும்பனின் பின்னாடியே வந்த உயரமானவர் சொன்னார்.

சரிங்க சார்..என்றார் அந்த ஆசிரியை.

உன் பேரு என்னடா.. என்று துரும்பனை பார்த்து ஆசிரியை கேட்டார்.

துரும்பன்.. என்றான்.

ஓஹோ.. துருவனா? துருவன்.. அழகான தமிழ் பேர். யாராவது உன் பேரை கேட்டா துருவன்னு சொல்லணும்..சரியா? போய் அந்த மூன்றாவது வரிசையில் உட்காரு.. என்றார். சரியென்று தலையாட்டி கொண்டே சென்று உட்கார்ந்தான்.

சரி.. புள்ளைங்களா.. இப்ப எல்லாரும் கணக்கு பாடம் பார்க்க போறோம்.. என்றார். சிறுவர்களுக்கான கூட்டல் கழித்தல் விதிகளை விளக்கினார். துருவன் தன்னை சுற்றி என்ன நடக்கிறதென்று புரியாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தான்.

சிறிது நேரம் கழித்து, “சரி இப்போ கேள்வி கேட்கலாமா..” என்றார் ஆசிரியை. ஒவ்வொருத்தராக கேட்டு கொண்டே வந்தார். துருவனின் முறை வந்தது “உன்கிட்ட பத்து நெல்லிக்காய் இருக்கு.. உன் தம்பிக்கு ரெண்டு, உன் அம்மாக்கு ரெண்டு குடுத்துட்ட.. இப்போ மீதி எத்தனை இருக்கும்.. என்றார்.

மீதி என்கிட்டே ஆறு இருக்கும்.. எனக்கு தம்பி இல்ல, ஆனா தங்கச்சி ரெண்டு இருக்கு.. என்றான்.

ஆசிரியை சிரித்து கொண்டே.. சரிடா..உட்கார் என்றார்.

சற்று நேரத்தில் வேறொரு ஆசிரியர் வந்தார். “வான் மழை” என்ற பாடலை படித்து காட்டினார். பிறகு எல்லோரையும் பார்த்து கேட்டார் “நமக்கு எப்ப மழைக் காலம்.. யாராவது சொல்லுங்க பார்ப்போம்?” என்றார். ஐப்பசியும் கார்த்திகையும்.. என்றான் துருவன். வெரி குட்.. எல்லாரும் கை தட்டுங்க.. என்றார் ஆசிரியர். எல்லோரும் தனக்கு கை தட்டியதை பார்க்கும் போது, துருவனுக்கு உடல் முழுவதும் சிலிர்த்தது.

பிறகு இன்னொரு கேள்வியை கேட்டார். மழை காலத்துல நாம எப்படி பாதுகாப்பா இருக்கணும்? எங்க.. யாரவது சொல்லுங்க பார்ப்போம்.. என்றார். “மழையில நனைய கூடாது.. ஈரத் துணிய அணிய கூடாது” என்றான் துருவன். போன வருடத்து மழையில், பிறந்து மூன்று மாதமே ஆன அவனது தம்பி உடல்நிலை சரியில்லாமல் இறந்ததை நினைத்து கொண்டான். “சூப்பர்’டா.. எல்லாரும் திரும்ப கை தட்டுங்க..” என்றார் ஆசிரியர். இம்முறை கை தட்டல் சற்று பலமாக இருந்தது. துருவனுக்கு இதெல்லாம் புதுமையான ஆனால் இன்பமான அனுபவமாக இருந்தது.

புது பையனா.. உன் பேரென்னடா.. என்றார் ஆசிரியர். எல்லா மாணவர்களும் ஒரே ராகத்தில் சத்தமாக “துருவன்..” என்றார்கள்.

சரிங்கடா.. எல்லாரும் வரிசையா கிளம்பி மைதானத்துக்கு போங்க.. உங்க எல்லாருக்கும் அடுத்தது PT பீரியட்.. என்றார்.

எல்லாருடனும் சேர்ந்து மைதானத்திற்கு வந்தான் துருவன். மதியம் பார்த்த உயரமானவர் நின்றிருந்தார். சில உடற்பயிற்சிகளை சொல்லி தந்தார். சற்று நேரம் கழித்து, “எல்லாரும் ஒருத்தர் பக்கத்துல ஒருத்தர் நேரா நில்லுங்க.. என்றார். பிறகு, “வர்ற குடியரசு விழாவுல சின்ன பசங்களுக்கு ஓட்ட பந்தயம் வைக்க போறோம்.. உங்கள்ல வேகமா ஓடுற முதல் பத்து பேர் அன்னைக்கு போட்டியில கலந்துக்குவீங்க..” என்றார்.

சரி.. நான் விசில் ஊதுனவுடனே எல்லாரும் ஓடிப் போய், அதோ.. அங்க இருக்குற புளிய மரத்த தொட்டுட்டு இங்க வரணும்..சரியா.. என்றார்.

உயரமானவர் விசிலடித்ததும், காற்றாய் பறந்தான் துருவன். அவன் மரத்தை தொட்டு விட்டு திரும்பி வந்து நின்ற பத்து வினாடிகள் கழித்து தான் இரண்டாவது சிறுவன் வந்து சேர்ந்தான். “பிரமாதம்’டா.. எப்படிடா இப்படி புயல் மாதிரி ஓடற?” என்று ஆச்சரியமாக கேட்டார். வாழ்வாதாரத்தை காப்பாற்ற தினமும் வெறும் வயிற்றில் ஓடுபவனுக்கு, இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று அவருக்கு தெரிய வாய்ப்பில்லை.

பள்ளி முடிந்த பின் வெளியில் கிளம்பினவனை வகுப்பில் இருந்த சில மாணவர்கள் அழைத்தார்கள். டேய் துருவா.. நாளைக்கு என் பக்கத்துல உட்காரு.. என்றான் ஒரு சிறுவன். போடா.. அவன் என் பக்கத்துல தான் உட்காருவான்.. என்றான் இன்னொருவன். பொதுவாக துருவன் அருகில் சென்றாலே, அனைவரும் சற்று விலகி நிற்பார்கள். ஆனால் இவர்கள் அவனை, அருகில் அமர சொல்லி அழைத்தது துருவனுக்கு புதிதாக இருந்தது.

யாரிடமும் எதுவும் கூறாமல் பள்ளியை விட்டு வெளியில் வந்தான். இருப்பிடத்திற்கு வந்தவனை “எஞ்சாமி.. எங்கயா போயிட்ட.. எங்கெல்லாம் தேடுனேன் தெரியுமா” என்று நிம்மதி கலந்த பதட்டத்துடன் கேட்டாள் மாரி.

மதியம் அவனை உயரமானவர் பள்ளிக்குள் துரத்தியதை பற்றி கூறினான். “அய்யய்யோ.. நீ போட்டிருக்கிறது அந்த பள்ளியோட சீருடை உடுப்பு.. அதான் அவரு உள்ள போக சொல்லி விரட்டியிருக்காரு..” என்று சிரித்தாள்.

அம்மா.. நாளைக்கும் நான் அங்க போகட்டா.. அங்க ரொம்ப நல்லாயிருக்கும்மா.. என்ற துருவனை புரியாமல் பார்த்தாள் மாரி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *