சீதாவின் கல்யாணம்

 

நடுச்சாமத்தில் வசந்தியின் கல்யாணம் நடந்து முடிந்தது. கல்யாண விமரிசையைப் பற்றியோ நடந்த கடம்பரத்தைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. அவ்வளவுக்குத் தடபுடல்.

மாப்பிள்ளை பொறியியல் வல்லுனர். அவருடைய அப்பா பெரிய்ய பணக்காரர். அவரை சம்மத்தி ஆக்கிக்கொள்ள நீ நான் என்று போட்டி இருந்தது. ஆனால் அவரோ வசந்தியைத்தான் தனது மருமகளாகத் தேர்ந்தெடுத்தார். அப்படியான ஒரு கல்யாணத்தில் செலவுகளுக்கும் கொண்டாட்டங் களுக்கும் கேட்கவா வேண்டும்.

இந்த வசந்தியின் கல்யாணத்துக்கும். நம்முடைய கதைக்கும் அதிகத் தொடர்பு இல்லை. இன்னும் சொல்லப் போனால், அந்தக் கவர்ச்சியான ராத்திரிக்கு முற்றுப்புள்ளி வைத்த விடியற்காலையிலிருந்துதான் நம்முடைய சுதையே தொடங்கிறது.

கல்யாணம் நடந்த அந்த வீட் டுக்குப் பக்கத்து வீடுதான் சிறுமி சீதாவின் வீடு. கல்லூரி ஆசிரியர் ஒருவரின் ஒரே செல்ல மகள் அவள். அந்தக் கல்லூரி ஆசிரியர் தேவ் அவர்கள் எங்களுடைய நெருங்கிய நண்பர். அதனால் சிறுமி சீதாவுக்கும் எங்களுக்கும் நெருங்கிய பழக்கம்.

அன்று காலையில் சீதா எழுந் திருந்ததும் முதலில் அவள் கண்ணில் பட்டது அந்தப் பக்கத்து வீட்டைச் சுற்றிலும் பரவிக்கிடந்த விதவித மான பட்டாசுக் காகிதக் குப்பைகள்; விதவிதமான புது முகங்கள். என்ன நடத்திருக்கும் அங்கே என்று சீதா யோசித்துப் பார்த்தாள். பிறகு அம்மா தான் சொன்னாள்; பக்கத்து வீட்டு வசந்தி அக்காவுக்கு ராத்திரி கல்யாணம் நடந்தது என்று, சீதாவுக்குப் புரியவில்லை. கல்யாணம் என்கிறதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறான். அது தனக்கு நெருக்கமான வசந்தி அக்காவுக்கு நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.

பக்கத்து வீட்டைப் போய் எட்டிப் பார்த்தாள். வசந்தி அக்கா மணப்பெண் கோலத்தில் நாணத்தோடு நின்றிருப்பது தெரிந்தது. அவளைக் கையோடு அழைத்துக் கொண்டு போகப்போகும் மாப்பிள்ளையும், இனிப்புப் பலகாரங்களை எடுத்து விழுங்கும் மாப்பிள்ளைத் தோழர்களாயும் வியப்போடு பார்த்தாள். பிறகு தன் வீட்டுக்கு ஓடி வந்து பெற்றோரிடம், கல்யாணத்தைப் பார்க்கத் தன்னை ஏன் எழுப்பவில்லை என்று கோபத்தோடு கேட்டாள். அதோடு, அந்தக் கல்யாணத்தை அதேபோல – நடந்தபடியே – திரும்ப பார்க்க வேண்டும் என்று சொன்னாள். தன்னால் ராத்திரி முழுக்கத் தூங்காமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கு முடியும் என்றும் சொன்னாள்.

சீதாவின் விருப்பத்தை எப்படி நிறைவேற்ற என்று அவளுடைய அப்பா சங்கடத்துடன் யோசித்துக் கொண்டிருந்தபோது அவள் அவருடைய மடியில் ஏறி உட்கார்ந்து பிஞ்சு விரல்களால் அவருடைய தலையை வருடி ‘அப்பா, நா ஒண்ணு சொல்றேன் கேப்பீங்களா’ என்று பிரியத்தோடு கேட்டாள். சரி என்றார்.

“எப்பா, நீங்க கல்யாணம் செய்யுங்கோப்பா. எனக்குக் கல்யாணம் பாக்கணும் போலிருக்கப்பா” என்றாள். வந்த சிரிப்பை அப்பாவால் அடக்க முடியவில்லை; வாய் விட்டுச் சிரித்தார். சீதாவின் முகம் வாடிவிட் டது. அவர் சிரிப்பை அடக்கிக் கொண்டு, “சீதாக்குட்டி, எனக்குக் கல்யாணம் ஆயிட்டதெ” என்றார்.

“எப்பொ; யாரைக் கல்யாணம் கட்டிக்கிட்டங்க” என்று கண்களை அகலமாக விரித்துக்கொண்டு கேட்டாள்.

“அம்மாவைத்தான்” என்றார் தேவ்.

இதைக்கேட்டு, அவளுள் ஒரு பெரும்புயல் ஏற்படும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அவள் அவர் மடியிலிருந்து இறங்கி, அவரை முறைத்துப் பார்த்துவிட்டு, தளர்ந்து நடந்து சென்றாள்.

அவளிடம் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்தை தேவ் புரிந்து கொள்ள முடியாமல் திகைத்தார். தன் மனைவியிடம் போய் நடந்ததைச் சொன்னார். பிறகு சீதாவின் அம்மாவும் அவரும் சீதாவிடம் வந்து அவளிடம் நயந்தும் கெஞ்சியும் கேட்டுத் தெரிந்து கொண்டது:

‘வசந்தியக்காக் கல்யாணம் நடந்த போதாவது ராத்திரி தூக்கத்தில் தன்னை எழுப்பாததையாவது போகிறது என்று மன்னித்து விடலாம். ஆனால் அப்பாவும் அம்மாவும் கல்யாணம் பண்ணிக்கொண்ட போது தன்னை எழுப்பவில்லை என்றால், அதுக்கு அவர்கள் என்ன சமாதானம் சொன்னாலும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்னதானிருந்தாலும் இவர்கள் இவ்வளவு சுய நலம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சீதாவால் நினைத்துக் கூடப் பார்க்க முடியலையே. இவ்வளவும் செய்துவிட்டு, இந்த அப்பா ஒண்ணுமே தெரியாதது போல தன்னோடுவந்து சேர்ந்து கொண்டு பூனையின் வாலைப் பிடித்து விளையாடுகிறார். அம்மாவுக்குத் தெரியாமல் கொய்யாப்பழம் கொண்டு வந்து கொடுத்து தன்னோடு எப்படிப் பிரியமாக இருக்க முடிகிறது இந்த அப்பாவால்.

சீதாவின் வாடிய முகத்தை மாற்றி பழையபடி அவள் முகத்தில் ஒரு புன்னகையைக் கொண்டுவரப் படாத பாடுபட வேண்டியதிருந்தது. அட்டைப் பெட்டி நிறைய்யக் கொடுத்த இனிப்புகளோ, சாவி கொடுத்ததும் நடனமாடும் கரடி பொம்மையோ கூட அவள் முகத்தை மலர்ச்சி அடைய வைக்க முடியவில்லை அவர்களால்.

அவர்கள் கல்யாணம் செய்து கொண்ட சமயத்தில் சீதா இல்லை என்று தங்கள் மகளிடம் சொன்னார்கள்.

“இல்லையா; யார் சொன்னது. தாத்தாவோட தொப்பி காற்றில் பறந்து போன போது நான் இருந்தேன், நம்ம வீட்டு முற்றத்தில் வந்து குரங்குக்குட்டி விளையாண்டபோது நான் இருந்தேன். எல்லாச் சமயத் திலெயுந்தான் நான் இருந்திருக்கிறேனே; நீங்க கல்யாணம் செய்யிறப்பொ மட்டும் நா இல்லையாக்கும். சரி… சரி….. நானும் ஒங்க மாதிரியே, நீங்க தூங்கிக்கிட்டிருக்கிறப்ப கல்யாணம் செய்துக்கிடுறென். அப்ப என்னையாரும் கேக்கக் கூடாது: சொல்லிட்டென்” என்றாள்.

“அதுசரிதான்; அப்படியே செய்துக்கொ. யாருக்கு எப்பக் கல்யாணம்ங்கிறதை எதிர்பார்க்கிறதை விட நீயே செய்துக்கிறதுதான் சரி” என்றார் அப்பா. அப்பாவின் இந்த வார்த்தை சீதாவின் விளையாட்டு மனசில் புதிய ஒரு திருப்பமாய் அமைத்து விட்டது யோசனை செய்ய ஆரம்பித்தாள் சீதா, தானே கல்யாணப் பெண்ணாகவும் இருந்து கொண்டு கல்யாணத்தையும் பார்த்து சந்தோஷப்படலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதும் ஆனந்தம் வந்தது. ஆனால் அவள் முகம் திடீரென்று வாட்டம் கண்டது. கல்யாணம் என்றால் மாப்பிள்ளை வேணுமே. யாரை மாப்பிள்ளையாக வைத்துக் கொள்கிறது?

யோசிக்கும் போது. மாப்பிள்ளையாக வருகிறவனுக்கு ரொம்பத் தெரிந்திருக்க வேணுமே என்றுபட்டது. அவள் சொல்லுக்கு அவன் கட்டுப்பட்டவனாக சொன்னபடி கேட்கிறவனாக இருக்க வேண்டும்: அவள் சினிமா பார்க்கப்போனால் அவன் துணைக்கு வரவேண்டும்: அவளுடைய முகம் பார்க்கும் கண்ணாடி யைத்தான் அவனும் உபயோகப் படுத்த வேண்டும்: கூப்பிடும் போதெல்லாம் அவளோடு விளையாட வரவேண்டும். சீதாவின் கற்பனை சிறகு விரித்தது.

இப்படியெல்லாம் இருக்கக்கூடிய ஒரு மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு லேசான காரியமாகத் தெரியவில்லை. அவளுக்கு அப்போதைக்கப்போது வந்து சாத்துக்குடிப் பழத்தையோ பொம்மையையோ பரிசளிப்பாரே ஒரு பெரிய தாடியுடன் இருக்கும் தாத்தா, அவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டதாக விசாரித்ததில் தெரிய வந்தது.

வசந்தி அக்காவின் கடைக் குட்டித் தம்பிக்குத்தான் இன்னும் கல்யாணம் ஆகவில்லை.

அவன் தனது அகலமான வீட்டு மாடியில் நின்றுகொண்டு கையை ஆட்டி சீதாவை விளையாடக் கூப்பிடுவானே அதே சிறுவன்தான். எவ்வளவோ நிறைய்ய விளையாட்டுப் பொம்மைகள் வைத்திருக்கிறான். முதல் முதலில் இவள் அவனுடைய விளையாட்டுச் சாமான்களைப் பார்க்கப் போனபோது. ஆப்பிள் பழம் என்று இவள் நினைத்தது நெசமான ஆப்பிள் பழமில்லை; மண்ணால் செய்யப்பட்டது என்று தெரிந்து ஏமாந்தபோது அவன் இவளைப்பார்த்து ஏளனமாகச் சிரித்தான்தான்; என்றாலும் கூட. வேற மாப்பிள்ளை கிடைக்காது என்பதால் அவனைப் கட்டிக்கொள்ளலாம். கல்யாணத்துக்குப் பிறகு அவன் திருந்திவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தது சீதாவுக்கு.

அப்பாவிடம் போய் சீதா இந்த தன் முடிவைச் சொன்னாள். அவர் இவளிடமிருந்து முதலில் நழுவ முயன்றார். ஆனால் இவள் விட வில்லை; உடும்புப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டாள்.

அப்பா சொன்னார். “வசந்தியின் தம்பி மிகவும் பெரிய இடத்துப் பிள்ளை. அவனை மாப்பிள்ளையாகப் பெற நமக்கு ஏராளமாக ரூபாய் தேவைப்படும். அவ்வளவு பணத்துக்கு நாம எங்கே போக” என்று கேட்டார்.

“பணமா; எவ்வளவு வேணும்? உங்கள்ட்டெ இல்லைன்னா நாந் தர்ரேன்” என்றாள். தன்னுடைய உண்டியலில் சிறிது சிறிதாகச் சேர்த்து வைத்திருந்த மூன்று ரூபாய் அவள் நினைவுக்கு வந்தது. அவளுடைய சொத்தாகிய அந்தப் பணம் முழுவதையும் தன் ரழைத் தந்தைக்குக் கொடுத்துவிடத் தீர்மானித் தாள். அவள் தந்தையோ இரக்கத்தோடு துயரம் தோய்ந்த புன் முறுவல் பூத்தார். எதையும் சுலபத்தில் புரிந்து கொள்ளும் சீதாவிற்கு வெறும் மூன்றே ரூபாயினால் அந்தக் காரியத்தை முடிக்க முடியாது என்பதைத் தெரிந்துகொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை .

சீதாவின் மனதில் திரும்பவும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. கல்யாணம் போன்ற மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சிக்கும் பணத்திற்கும் இவ்வளவு தொடர்பா என்று எண்ணிப் பார்த்ததில் மட்டும் ஏற்பட்டதல்ல அது. வசந்தியைப் பற்றிக் கேள்விப்பட்ட விசயமும் ஒரு காரணமாக இருந்தது.

வசந்தியக்காவின் கல்யாணத்தில் அன்று அவளுடைய அப்பா எவ்வளவு பணம் செலவழித்தார்; எவ்வளவு பொருள்களையும் ரொக்கமும் நகைகளுமாக சீர்வரிசை செய்து அவளுடன் அனுப்பிவைத்தார். இருந்தும். வசந்தியின் கணவன் அவளைத் துன்புறுத்துகிறானாம். குடித்துவிட்டுவந்து மதுப்போத்தலால் அவளுடைய முகத்தில் வீசி அடித்ததில் மூக்கிலிருந்து ‘கள கள’ என்று ரத்தம் கொட்டியதாம். புருசன் பெண்டாட்டி என்றால் இப்படியெல்லாம் கூடவா நடக்கும் என்று சீதா அதிர்ந்து போனாள்.

சீதா சோர்வடைந்து போகவே வீடு அகலப்பிழந்தது. கரடி பொம்மை கூட களை இழந்து கிடப்பதை அப்போதுதான் அங்கே வந்த தாத்தா கவனித்தார்.

தாத்தா வந்த பிறகுதான் சீதாவின் முகத்தில் கொஞ்சம் தெளிவு வர ஆரம்பித்தது.

தாத்தா எப்போது தனியாக இருப்பார் என்று பார்த்துக் கொண்டிருந்தாள். முதல் வாய்ப்பிலேயே தாத்தாவிடம் “நல்ல மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுப்பது எப்படி” என்று சொல்லும்படி வேண்டினாள்.

பேத்தியின் எதிர்பாராத கேள்வ யினால் தாத்தா உள்ளூர மகிழ்ந்து போனார். “ம்…. சீதாவிற்கு ஏற்ற மாப்பிள்ளை ராமனைத் தவிர வேற யார் இருக்க முடியும்?” என்று சொன்னார். அவர் சொல்லில் உண்மை தொனித்தது.

சீதாவின் முகம் பிரகாசம் அடைந்தது. அவளுக்கு ராமர் சீதை கதை நன்றாகவே தெரியும். அவள் கேள்விக்கு இவ்வளவு லேசாகவும் நிறைவாகவும் பதில் இருக்கும் என்று முதலிலேயே தெரியாமல் போயிற்றே.

தாத்தாவின் பழுத்த தாடியை அவள் வருடிக் கொண்டே.. அந்த ராமனைத் தன்னிடம் அழைத்து வருமாறு கேட்டுக்கொண்டாள். தாத்தா பெருமூச்சு விட்டுக்கொண்டே, அந்த ராமன் தான் அழைத்தால் வரமாட்டான் என்றும், ஆனால் அவள் முழுமனசுடன் வேண்டி அழைத்தால் கட்டாயம் வருவான் என்றும் சொன்னார். அவள்தான் சீதா வாயிற்றே: ராமனுக்கு சீதையின் பேரில்தான் ரொம்பப் பிரியம் ஆயிற்றே.

“அதுசரி தாத்தா, வசந்தி அக்கா வின் கல்யாணத்தில் பார்த்த மத்தாப்பு, வெடிகள், மேளதாளம், மீசை வைத்த ஆட்கள் இருவர்களுக் கெல்லாம் எங்கே போறது: ராமனே அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவானா?” என்று ஆவலோடு கேட்டாள்.

“ஆமாம். எல்லாத்தையும் அவன் கொண்டுவந்து சேர்த்துவிடுவான். நமக்கு அந்தக் கவலையே வேண்டாம்.”

சீதா ஒரு நொடி கண்களை மூடியபடி நின்றாள். உணர்ச்சி வயப்பட்ட நிலையில், “தாத்தா, இன்றைக்கு ராத்திரியே அவனைக் கூப்பிடுகிறேன். தயவு செய்து இதை அப்பா அம்மாவிடம் சொல்ல வேண்டாம்” என்று கம்மிய குரலில் சொன்னாள்.

அன்று ராத்திரி தூங்கப் போகும் வரை சீதா, புரியாத வகையில் அடிக்கடி புன்னகை செய்து கொண்டே இருந்தாள். ராத்திரி யாரும் எழுந் திருக்க வேண்டாம் என்று பெற்றோரை எச்சரித்தாள்.

நள்ளிரவில் அவள் எதிர்பார்க்கும் அந்த நிகழ்ச்சி சிலிர்ப்பூட்ட. அப்படி நீங்க எழுந்திருக்க நேர்ந்தா வேடிக்கையாத்தானிருக்கும்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். மாப்பிள்ளை தேடும் விசயமாக சீதாவின் இந்த புதிய முயற்சியைப் பற்றி, தூரத்து உறவினரான அந்தத் தாத்தாவிடமிருந்து தேவ் முன்னதாகவே அறிந்து வைத்திருந்ததால் சற்றே புன்னகை பூத்தார்.

மறுநாள் காலை சீதா சற்று சுணக்கமாகவே படுக்கையை விட்டு எழுந்தாள். அவளுடைய தேடலைப் பற்றி தேவ் மறந்தே போயிருந்தார். சீதாவின் முகத்தைப் பார்த்ததும் தான் மறுபடியும் எல்லாம் அவருக்கு நினைவு வந்தது. வழக்கமாக அவள் எழுத்திருந்ததும் அப்பாவின் மார் பில் வந்து உட்கார்ந்து கொள்வாள். அவர் அவளை. செல்லங் கொஞ்சுவார். அப்போது அவர் அவளுக்குப் பிடித்தமான பாட்டுகளைப் பாடுவார். ஆனால் அன்று காலையில் அவள் எழுந்ததிலிருந்து அப்படியே பொம்மை போல படுக் கையிலேயே உட்கார்ந்திருந்தாள். ஒரு தெய்வீக உணர்வுவயப்பட்ட, அருள் நிறைந்த நிலையிலும் காணப் பட்ட அவள் முகம் பெருமிதத் தோடு காட்சி அளித்தது. யாருடனும் பேசத் தயாரில்லை என்பது போலிருந்தது. ஏதாவது கேட்டால் கூட புன்னகை மட்டுமே செய்தாள். அந்தப் புன்னகை இறைவன் அருளைப் பெற்றது போல் காணப்பட்டது. புலனுக்கு எட்டாத கனவுலகில் அவள் திரிவது போலவும். அங்கே இருந்து பார்ப்பதற்கு தன்னுடைய பெற்றோர்கள் ஏதோ ஒரு சிறிய கோளில் இருக்கும் குழந்தை களைப் போலவும் அவளுக்குத் தெரிந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. தேவ் கல்லூரி செல்ல வேண்டியதில்லை. அவர் சீதாவின் நடவடிக்கையைக் கவனித்துக் கொண்டிருக்கவே, அவரையும் அறியாமல் பய உணர்வு கவ்வியது. பொழுது சாய்வதற்குள் பொறுமை இழந்த நிலையில், சீதாவை எப்படியாவது சிரிக்க வைக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். அவருடைய விடா முயற்சியால் சீதா கொஞ்சம் பேசினாள். ராத்திரி அவளுடைய ராமன் வந்ததாகவும், கையில் வில் ஏந்தி ‘தகதக’வென்று ஒளிவீசும் கிரீடம் அணிந்திருந்ததாகவும், தேவர் கள் புடைசூழ விண்ணுலக இசைக் கலைஞர்கள் இசை முழங்க கல்யாண மாப்பிள்ளைக் கோலத்தில் ராமனே வந்தானாம்.

இதை உண்மை என்றே சீதா நம்புவதாக தேவ் தெரிந்து கொண்டார். அப்படியான மயக்கத்தில் இருந்தாள் அவள். தேவ் இந்த விசயத்தைத் தனது மனைவியிடம் சொல்லிச் சிரித்தார். இருவரும் இதைப்பற்றிப் பேசி விழுந்துவிழுந்து சிரித்தார்கள்.

அவர்கள் இதைச் சொல்லிச் சிரிப்பதைக் கேட்ட சீதாவின் பெருமிதப்பட்ட முகம் வாடத் தொடங்கியது. சோர்வு படர்ந்தது. அன்று ஏற்பட்ட அந்த சோர்வும் வாட்டமும் சீதாவின் வாழ்வில் கடைசிவரை அகலவில்லை.

இதற்குப் பிறகு சில நாட்கள் கழித்து, தேவும் அவருடைய மனைவியும் ஒரு துயர நிகழ்ச்சியைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதை சீதா கேட்டாள். வசந்தி தற்கொலை செய்து கொண்டாளாம்! தாங்கள் பேசிக் கொண்டிருந்ததை சீதா கேட்டுவிட்டாள் என்பதை தேவ் அறிந்து கொண்டார். சீதா அவர்களைப் பார்த்த பார்வை இப்படிக் கேட்பதாக இருந்தது அவர்களை: ‘உண்மை எது. போலி எது; ஆரவாரமாகக் கொண்டாடப் பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நடுவில் நடைபெற்ற திருமணம் உண்மையா? என் திருமணத்தைக் கனவு என்று சொல்லிச் சிரித்தீர்களே அது கனவைத் தவிற வேறொன்று மில்லையா?’ என்று கேட்பது போலிருந்தது.

ஆண்டுகள் பத்து உருண்டோடி விட்டன. நான் இப்போது தேவ் அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கவில்லை. என்றாலும், எப்பவாவது, எங்கயாவது தேவும் நானும் சந்தித்துப் பேசிக்கொள்வோம்.

சமீபத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டபோது அவர் சீதாவின் திருமணத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார். ஆனால் திருமணத்தில் சீதாவுக்கு விருப்பமே இல்லையாம்.

இன்றுதான் அந்த வருத்தம் தரும் செய்தி வந்தது எங்களுக்கு. எங்க அன்பிற்குரிய சிதா இறந்து போய் விட்டாள். என்ன செய்தது என்று கேட்டோம். காய்ச்சலினால் என்று சொன்னார்கள்.

- மே 1991 (ஆங்கில மூலம்: மனோஜ் தாஸ்) 

தொடர்புடைய சிறுகதைகள்
ரமா தன் கதைகளுக்குப் படம் போடுகிறதை விரும்புவதில்லை என்னத்துக்குப் படம்; கண்ணால் படித்துக்கொண்டு போகும்போதே எல்லாம் வந்து நிக்குமே எதிரே. பத்திரிகைகளிடம் வேண்டாம் என்றே சொன்னாள். என்ன சொல்லி என்ன; அது ஒரு நோய்ப்பழக்கம் ஆகிவிட்டது அதுகளுக்கு. தான் சிருஷ்டிக்கும் பாத்திரங்களின் முகஜாடை அவளுக்குத்தான் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: கி.ரா. குற்றாலத்தில்ஒரு நாள், ரசிகமணி டி.கே.சி. அவர்களைப் பார்க்க ஒருத்தர் வந்தார். வந்தவர் செந்தமிழில் எங்களிடம் "அய்யா அவர்களைப் பார்க்க வந்திருப்பதாகச்" சென்னார். அவர் பேசுகிற விதமே அப்படி என்று தெரிந்தது.ரசிகமணி அவர்கள் இதை ரெம்ப அனுபவிப்பார்கள் என்று எங்களுக்குக் குஷி! அவரை அழைத்துக் ...
மேலும் கதையை படிக்க...
அருவிகளின் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்கிறது. இதே குற்றாலத்தில் எத்தனையோ நிகழ்வுகள்; நேரில் பார்த்தவை, சொல்லக் கேட்டவை என்று நடந்துபோனவை உண்டு. நேரம் நடு இரவையும் தாண்டிவிட்டது. தூக்கமும் போய்விட்டது. ரகுநாதன் சொல்லிக்கொண்டே வந்தார். காதுகள்தான் கேட்டுக்கொண்டு இருக்கின்றன; மனசு எங்கெல்லாமோ போய்ப் போய் ...
மேலும் கதையை படிக்க...
சொன்னால் நம்பமுடியாதுதான்! நாச்சியாரம்மாவும் இப்படி மாறுவாள் என்று நினைக்கவேயில்லை. அவள் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி. நாங்கள் எட்டுப்பேர் அண்ணன் தம்பிகள். ‘பெண்ணடி’யில்லை என்று என் தாய் அவளைத் தத்து எடுத்துத் தன் மகளாக்கிக் கொண்டாள். அம்மாவைவிட எங்களுக்குத்தான் சந்தோஷம் ரொம்ப. இப்படி ஒரு அருமைச் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: கி.ரா. விடிகாலை நேரமாகத்தான் இருக்கும். அவளுடைய இடது கை அவருடைய பரந்த புஜங்களைத் தடவி, ”என்னங்க…” என்றாள். ”ம்…” என்றுகொண்டே அவர் நெளிர்விட ஆயத்தமானபோது, அதை நிறுத்த முற்படுவதுபோல அவருடைய உடம்போடு பினைந்து பின்னிக்கொள்வது ஒரு சுகம். ”என்ன இது, சின்னப் பிள்ளைபோல…” ...
மேலும் கதையை படிக்க...
உழவர் சந்தை நிறுத்தத்தில் நகரப் பேருந்து வந்து சல் என்று நின்றது. பேகொண்ட கூட்டம். தாத்தா முண்டியடித்து படிக்கட்டில் கால் வைத்ததுதான் தெரியும்... அப்படியே அத்தாசமாக உள்ளே தள்ளி, சருகைக் காற்று கொண்டுபோவதைப் போல நடூ இடத்தில் கொண்டுபோய் நிறுத்திவைத்துவிட்டது. சுவர் ...
மேலும் கதையை படிக்க...
‘‘இந்தத் தேர்தல்ல நீங்க கட்டா யம் நிக்கணும்; ஒங்களெப் போல நல்லவங்க விலகி விலகிப் போகப் போயித்தான் மோசமானவங்க நின்னு ஜெயிச்சிருதாங்க!’’ ‘‘முடியாது, முடியாது! தேர்தல்ல யாவது, நா நிக்கிறதாவது... அந்தப் பேச்சே வேணாம்!’’ ‘தயவுசெஞ்சு அப்படிச் சொல்லப் படாது’ என்று எம்புட்டோ மன்னா ...
மேலும் கதையை படிக்க...
தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்த்துவிட்டார் தாசரி நாயக்கர். அப்படி ஆகிவிட்டது சம்சாரிகள் பாடு. 'ஒண்ணும் ஒப்பேறாது இனிமெ' என்று சொல்லிக்கொண்டார் தனக்குள். பாவிப்பயல்கள் இப்படிச் செஞ்சிட்டாங்களே? எல்லா விலைகளும் கூடிக்கிட்டே போறதென்ன? இந்த அவுரியின் விலை மட்டும் இப்படி தலைகீழாக குறையற்தென்ன? ஏதோ கவுல் ...
மேலும் கதையை படிக்க...
போத்திநாயுண்டுக்கு இன்னும் விடியலை; இவருக்கு மட்டுமில்லை, இந்த ஊர் சம்சாரிகளுக்கும் சுத்துப்பட்டி சம்சாரிகளுக்கும்கூட. இந்த அறுபது வருஷங்களில் இப்படி ஒரு திகைப்பைக் கண்டதுமில்லை கேட்டதுமில்லை இவர். இந்த நாடு நம்மை எங்கே அழைத்துக்கொண்டு போகிறது என்று யோசித்தார். சந்தேகமில்லாமல் சுடுகாட்டுக்குத்தான் என்று சொல்லிக்கொண்டார். போத்திநாயுண்டு ...
மேலும் கதையை படிக்க...
பாவய்யாவின் பூர்வீகம் சரியாகத் தெரியவில்லை. அவனைக் கோட்டுக்காரன் என்று சொல்லுவார்கள். கிழக்கே விளாத்திக்குளம் பக்கத்தில் ஏதோ ஒரு ஊர். இந்தக் கிராமத்துக்குப் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் போகும்போது இவனை, இங்கேயே கிட என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்களாம். பயலுக்கு அப்பொழுது தாலைஞ்சி வயசிருக்கும். ...
மேலும் கதையை படிக்க...
அசல்
தமிள் படிச்ச அளகு
அன்பே மனிதமாய்…
கன்னிமை
இல்லாள்
காலம் காலம்
உத்தி
அவுரி
விடிவு
விளைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)