கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 10, 2024
பார்வையிட்டோர்: 4,822 
 
 

(2015ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 41-45 | அத்தியாயம் 46-52

அத்தியாயம்-46

இந்திரா ஆபீசுக்கு வந்தாள். பிரசாத் ஏற்கனவே வந்திருந்தான். இந்திரா அவனைப் பார்க்காதது போலவே இருந்தாள். அவனும் எப்பொழுதும் போல் “ஹலோ! குட்மார்னிங்” என்று சொல்லவில்லை. இந்திரா பைல்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். இருவரும் முன்பின் தெரியாதவர்கள் போல் இருந்துவிட்டார்கள்.

மாலையாகிவிட்டது. இருவரும் பஸ்ஸ்டாப் அருகில் வந்து நின்று கொண்டார்கள். எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் பஸ் வரவேயில்லை. ஆட்டோ ஒன்று வந்தது. இந்திரா அதில் ஏறப்போன பொழுது பிரசாத் திடீரென்று கேட்டான்.

“என்னைக் கொஞ்சம் சென்டர் அருகில் இறக்கி விடறீங்களா?”

சரி என்பது போல் இந்திரா தலையை அசைத்தாள். பிரசாத் ஏறிக்கொண்டான். இருவரும் வழியில் ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளவில்லை. செண்டர் வந்துவிட்டது. இந்திரா ஆட்டோவை நிறுத்தச் சொன்னாள்.

பிரசாத் இறங்கிக் கொண்டே “தாங்க் யு” என்றான்.

“நோ மென்ஷன்” என்றாள். அவன் இறங்கிக் கொண்டான். இந்திராவைப் பார்த்து கையை ஆட்டப்போனான். ஆனால் இந்திரா அவன் பக்கம் திரும்பாமல் வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்ததால் நிறுத்திக் கொண்டான். அவன் முகம் சிறுத்துவிட்டது. வருத்தத்தை அடக்கிக் கொண்டிருந்தாற்போல் இருந்தான்.

இந்திரா வீட்டுக்கு வந்தாள். எவ்வளவுதான் வேண்டாம் என்று நினைத்தாலும் பிரசாத் தன்னைக் கண்டு கொள்ளாமல் இருந்தது திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. சமீபகாலமாக பிரசாதின் வருகையால் தனக்குத் தெரியாமலேயே பொழுது போய்க் கொண்டிருந்தது. மூன்று நான்கு நாட்களாக பிரசாத் வராமல் இருந்துவிட்டதால் வீட்டில் சந்தடியே இல்லை. போனும் ஒலிக்கவில்லை. இருந்த ஒரு நட்பும் விலகிப் போய் விட்டாற்போல் இருந்தது இந்திராவுக்கு.

வீட்டுக்கு வந்ததும் இந்திரா கைகால் அலம்பிக் கொண்டு உடை மாற்றிக் கொண்டாள். பவானி உப்புமா செய்திருப்பதாகவும், சாப்பிடச் சொல்லியும் சொன்னபோது பசியில்லை என்று மறுத்துவிட்டாள். அலமாரியில் எப்போதோ பாதியில் விட்டுவிட்ட ஒயர் கூடையை எடுத்து பின்னத் தொடங்கினாள். வாழ்க்கை இவ்வளவு வெறுமையாக இருப்பானேன்? எதனிடமும் ஆர்வம் இல்லை. இதற்கு முன்னால் புது சினிமா ரிலீஸ் ஆனால் முதல் ஆட்டத்திற்கே போக வேண்டும் என்ற பிடிவாதம் இருந்தது. எப்போதும் ஜாலியாக கொட்டமடித்துக் கொண்டிருப்பாள். இந்திரா ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்தாள். எல்லாம் வழக்கம் போல் தான் இருந்தது. அவளிடம்தான் ஏதோ மாறுதல் வந்துவிட்டது. இதற்கு முன்னால் மேகங்களைப் பார்த்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். வானத்தில் ஓடும் மேகங்களைப் பார்த்துவிட்டு வித்யாபதியிடம் சட்டிக் காட்டுவாள். அவன் சிரித்துக் கொண்டே “அந்த மேகங்களில் எது நீ? எது நான்?” என்பான்.

“அருகருகில் ஜோடியாய் மீன்களை போல் தென்படும் மேகங்கள் நாம்” என்பாள்.

ஒன்று முன்னாடியும் இன்னொன்று பின்னாலும் இருக்கும் மேகங்களை அவள் ஏற்றுக் கொள்ளமாட்டாள். ஏன் என்றால் இருவரும் சமமாக அருகருகில் நடந்து சொல்ல வேண்டும். அதைச் சொன்னால் வித்யாபதி சிரித்து விடுவான். “அசட்டுப் பெண்ணே!” என்று மூக்கைப் பிடித்து ஆட்டுவான்.

“ஹலோ! குட் ஈவினிங்! நான் உள்ளே வரலாமா?” வாசலில் குரல் கேட்டது. இந்திரா திடுக்கிட்டு நிமிர்ந்தாள். எதிரே பிரசாத் நின்றிருந்தான்.

“என்ன புதிதாக கேட்கிறீங்க? உள்ளே வாங்க” என்றாள்.

“நீங்க இன்றைக்கு புதிதாக தென்படுறீங்க, அதனால்” என்றான் உள்ளே வந்து கொண்டே.

உண்மைதானா என்பது போல் பார்த்தாள் இந்திரா. அவனும் ஆமாம் என்று பார்வையாலேயே உணர்த்தினான்.

பிரசாத் உள்ளே வந்து இந்திராவுக்கு எதிரில் உட்கார்ந்து கொண்டான். இந்திராவுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. கவனம் முழுவதும் ஒயர் கூடை பின்னுவதிலேயே இருப்பது போல் வேகவேகமாக பின்னத் தொடங்கினாள். அவனும் அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இருவருக்கும் நடுவில் மௌனம் குறுக்குச் சுவராக நின்றது. அவன் அதைச் சிதறடிக்க முயன்றபடி சொன்னான். “நீங்க என்னை மன்னிக்க வேண்டும்.”

‘”ஏன்?”

“நான் முட்டாள்தனமாக நடந்து கொண்டுவிட்டேன்.”

“எந்த விஷயத்தில்?”

“முந்தா நாள்… உங்களுக்கும் அக்காவுக்கு நடந்த சண்டையில் என் மூளையே சுற்றத் தொடங்கிவிட்டது. என் காலடியில் பூமி நழுவிப் போய் விட்டது. நேற்று உங்க அக்காவுடன் பேசிய பிறகுதான் என் மனதிற்கு சமாதானம் ஏற்பட்டது.”

இந்திரா நிமிர்ந்து பார்த்தாள். அக்காவும் இவனும் நேற்று பேசிக் கொண்டார்களா? என்னவாக இருக்கும்? எதுவாக இருந்தால் தனக்கு என்னவாம்?

பிரசாத் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த இந்திராவின் விரல்களை பார்த்துக் கொண்டே சொன்னான். “மனிதனின் பெரிய பலவீனம் எது தெரியுமா? எதிராளியின் பிரமேயம் இல்லாமல் தானாகவே ஆசைகளை வளர்த்துக் கொள்வதுதான். அவை நிறைவேறாவிட்டால் உலகமே தலைகீழாகிவிட்டது போல் வேதனைப்படுவான்.”

இந்திரா கேட்டுக் கொண்டிருந்தாள். அவன் தொடர்ந்தான்.

“செய்த பாவம் சொன்னால் போகும் என்பார்கள். உங்களுடைய பிரமேயம் இல்லாமலேயே நான் சில யோசனைகளை செய்திருந்தேன். உங்கள் வாழ்க்கையில் யாரும் இல்லை என்று நினைத்திருந்தேன். வித்யாபதியின் விஷயம் தெரிய வந்ததும் …”

இந்திரா சரேலென்று தலையை உயர்த்தினாள். “தயவு செய்து அவனுடைய பெயரை எடுக்காதீங்க. அந்த விஷயத்தை யாருடனும் பகிர்ந்து கொள்வது எனக்குப் பிடிக்காது. என் வாழ்க்கையில் அபூர்வமானது ஏதாவது இருந்தால் அது வித்யாபதியின் அறிமுகம்தான் என்பேன்.”

பிரசாதின் கண்ணிமைகள் படபடத்தன. ‘ஓ.கே. ஓ.கே. நான் அவனைப் பற்றிப் பேசவில்லை. என்னைப் பற்றிச் சொல்லப் போகிறேன். இதோ பாருங்கள். உங்கள்மீது எனக்குக் காரணம் தெரியாமலேயே அபிமானம் ஏற்பட்டுவிட்டது. உங்கள் வாழ்க்கையில் யாருமே இருந்திருக்க மாட்டார்கள் என்று ஆசைபட்டேன்.”

“அதுபோன்ற ஆசை எதையும் நான் ஏற்படுத்தவில்லையே?”

“அஃப்கோர்ஸ்! அது உண்மைதான். சொன்னேனே, மனிதன் எதிராளியின் பிரமேயம் இல்லாமலேயே பெரிய அளவில் ஆசைகளை ஏற்படுத்திக் கொள்வான் என்று. அதன் விளைவைக் கூட என்றாவது ஒரு நாள் அனுபவித்துத்தான் தீரணும் என்று தெரிந்துகொண்டேன். முந்தா நாள் நான் இங்கிருந்து நேராக வீட்டிற்குப் போகவில்லை. பைத்தியம் போல் எங்கெல்லாமோ சற்றிக் கொண்டிருந்தேன். சாப்பிடவில்லை. தூங்கவில்லை. மனம் முழுவதும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. என்மீதே எனக்குக் கோபம் வந்தது. நான் ஒரு முட்டாள் என்று நினைக்கத் தோன்றியது. ரொம்பவும் களைத்துப் போனேன். வீட்டுக்குப் போனதும் பத்து நாள் பட்டினிக் கிடந்தவன் போல் கட்டிலில் போய் விழுந்தேன். என் சித்தியின் மகள் கலவரமடைந்தாள். அம்மாவுக்குக் கடிதம் எழுதட்டுமா என்று கேட்டாள். வேண்டாமென்றேன். இறுதியில் அந்த கொந்தளிப்பு அடங்கிவிட்டது. வெள்ளம் வந்து வடிந்து விட்ட நிலம் போல் ஆகிவிட்டது என் மனம். நான் எதற்காக இவ்வளவு வருந்துகிறேன் என்று என்னையே கேட்டுக் கொண்டேன். சுஜாதாவின் விஷயத்தைச் சொன்ன போது நீங்கள் எவ்வளவு சிரத்தையோடும் இரக்கத்தோடும் கேட்டுக் கொண்டீங்க? உங்களிடம் எந்த மாறுதலும் இல்லை. மேலும் இன்னும் நெருக்கமானவர்களாக ஆகிவிட்டோம். அப்படி இருக்கும் போது நான் மட்டும் வித்யாபதியின் விஷயம் கேள்விப்பட்டதும் ஏன் அதுபோல் நடந்துகொண்டேன்?”

அந்தப் பெயரைக் கேட்டதும் இந்திரா மறுபடியும் நிமிர்ந்து பார்த்தாள்.

பிரசாத் கைகளை நீட்டிக் கொண்டே சொன்னான். “தயவு செய்து அப்படிப் பார்க்காதீங்க. உங்களுடைய நண்பன் என்ற முறையில் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் ஒவ்வொரு நபரைப் பற்றியும் பேச எனக்கு உரிமை இருக்கு என்று நினைக்கிறேன். நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? உங்களைப் பற்றித்தான் யோசித்தேன். உங்களுக்கு இருபத்தி மூணு அல்லது இருபத்திநாலு வயதாவது ஆகியிருக்கும். இதுவரை எந்த சம்பவமும் உங்கள் வாழ்க்கையில் இல்லாமல் இருந்திருக்கும் என்று நினைப்பது என்னுடைய தவறு. ஆணாதிக்க மனப்பான்மை! காலம் மாறிவிட்டது. ஆனால் ஆணின் மனம்தான் இன்னும் மாறவில்லை என்று நினைக்கிறேன். ஆணுக்கும் சமமாக பெண்ணும் வாழ்க்கையை எதிர் நோக்கி வருகிறாள். வாழ்க்கையில் ஆணுக்கு எவ்வளவு அனுபவங்கள் எதிர்படுமோ அதற்கிணையாகப் பெண்களுக்கும் ஏற்படும். பெண்கள் திரை மறைவாக, கிணற்றுத் தவளையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் முட்டாள். நேர்மையாக யோசித்துப் பார்த்தால் காதல் விவகாரத்தில் நான் எப்படி தோல்வி அடைந்தேனோ நீங்களும் அதேபோல் தோல்வியை அடைந்திருக்கீங்க. இருவரின் அனுபவமும் ஒன்றுதான். நியாயமாக யோசித்துப் பார்த்தால் நாமிருவரும் ஒருவரை ஒருவர இன்னும் அதிகமாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். சுஜாதா விஷயத்தைக் கேட்டுவிட்டு உங்களிடம் எந்த மாறுதலும் வரவில்லை. நல்ல மனதுடன் என் வேதனையைப் புரிந்துகொண்டீங்கள்.

ஆனால் என்னால் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை. அதை நினைத்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது. அதனால்தான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய கடந்த கால வாழ்க்கையை நீங்கள் எப்படி பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டீர்களோ அதுபோலவே உங்களுடைய கடந்தகாலத்தையும் நான் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞனாக நான் செய்ய வேண்டிய காரியம் அது. நாமிருவரும் நல்ல நண்பர்கள். எந்த மனிதனுக்குமே வாழ்க்கையில் பணத்தைவிட, புகழைவிட, இன்னும் சொல்லப் போனால் காதலையும்விட உயர்வானது நட்பு என்பது என் எண்ணம். இந்த நட்பை பெற முடிந்தது மிக அதிர்ஷ்டம். வாழ்க்கையில் நல்ல நட்பைவிட அபூர்வமானது வேறு இல்லை என்பது என் கருத்து.'”

இந்திரா கூடை பின்னுவதை விட்டுவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சிரித்துக் கொண்டும், எதையும் லட்சியம் செய்யாமல் இருப்பவன் போல் தென்படும் பிரசாத் இன்று வேறு மனிதனாகக் காட்சியளித்தான்.

பிரசாத் சீரியசாகக் கேட்டான். “என்ன சொல்றீங்க? நாமிருவரும். நண்பர்கள். இல்லையா?”

இந்திரா தலையை அசைத்தாள்.

“நட்பில் உரிமையும் இருக்கும். தவறு செய்தால் கூச்சப்படாமல், தயங்காமல் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளணும். நான் உங்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.”

“நீங்க இப்போ என்ன தவறு செய்தீங்க?”

“மூன்று நாட்களாக உங்கள் கண்ணில் படவில்லை. ஏறக்குறைய உங்களை விட்டு விலகிவிட்டாற் போலவே நடந்துகொண்டேன். அது என்னுடைய தவறுதான்.”

“பலே ஆள்தான் நீங்க.” இந்திரா பக்கென்று சிரித்துவிட்டாள். அதற்குள் பவானி இரண்டு தட்டுகளில் பக்கோடா கொண்டு வந்தாள். இந்திரா இரண்டையும் தானே பெற்றுக் கொண்டு ஒன்றை பிரசாதிடம் கொடுத்தாள்.

“தாங்க் யூ. இப்போ என் மனம் ரொம்ப லேசாகிவிட்டது” என்றான். ‘

‘எனக்கும்” என்றாள் இந்திரா சிரித்துக் கொண்டே.

அத்தியாயம்-47

அன்று வித்யாபதி எழுந்துக் கொள்ளும் போது யாருடையதோ குரல் புதிதாக கேட்டது. “சீதா! என்னவென்று சொல்லட்டும் என் கஷ்டங்களை? இவருக்கு இப்படி உடம்பு சரியில்லாமல் போய்விட்டதென்று மகன்களுக்கு கடிதம் எழுதினேன். தந்தி கொடுத்தேன். அப்படியும் ஒருத்தனும் வந்து பார்க்கவில்லை. எதற்காக வரப்போகிறார்கள்? அவரவர்களின் குடித்தனம், சந்தோஷம், கஷ்டங்கள் அவரவர்களுக்கு. என் வருத்தம் என்ன வென்றால் வராவிட்டாலும் போகட்டும். குறைந்த பட்சம் அப்பாவுக்கு எப்படி இருக்கிறது என்று ஒரு கடிதம் கூட எழுதவில்லை. அதுபோன்ற குழந்தைகளை பெற்றது என் துரதிர்ஷ்டம்தான். பெரியவன் இஞ்ஜினியர். அவனுடைய மாமனாருக்கு அதில் ஏகப்பட்ட பெருமை. ஆனால் வயிற்றை கட்டி வாயைக் கட்டி படிக்க வைத்தது நாங்கள். எங்கள் நிலைமை இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் குழந்தைகளை விட பணம்தான் முக்கியம் என்று இருந்திருப்போம். எனக்கு முழங்கால் வலி. அவரால் எழுந்து நடமாட முடியாது. எங்கள் வாழ்க்கை எப்படித்தான் முடியப் போகிறதோ தெரியவில்லை.”

“சும்மா இருங்கள் அத்தை. எல்லாவற்றுக்கும் அந்தக் கடவுள் இருக்கிறார்.” சீதா சொல்லிக் கொண்டிருந்தாள்.

“உனக்கு சமீபத்தில் ஏதோ ஆக்சிடெண்ட் ஆகிவிட்டதாமே. உயிர் பிழைத்ததே பெரிய காரியம் என்று சுந்தரி சொன்னாள்.”

“ஆமாம் அத்தை. நீங்க போய் குளித்துவிட்டு வாங்க. மாமாவை ஆஸ்பத்திரியில் சேர்க்கும் பொறுப்பு என்னுடையது. போதுமா?” என்றாள் சீதா.

வித்யாபதி வெளியில் வந்தான். “நன்றாக இருக்கிறாயாப்பா?” என்று அன்புடன் குசலம் விசாரித்தாள்.

வித்யாபதிக்கு அந்தம்மாள் யாரென்று நினைவுக்கு வரவில்லை. சீதாவின் பக்கத்து உறவு என்று தெரிந்து கொண்டுதான் இருந்தது. நன்றாக இருப்பது போல் தலையை அசைத்துவிட்டு “நீங்க சௌக்கியம்தானே?” என்று கேட்டான்.

“என்ன சௌக்கியமோ என்னவோ. அவருக்கு…” என்று புராணம் பாடத் தொடங்கினாள்

“அத்தை! நீங்க போய் குளித்துவிட்டு வாங்களேன்” என்றாள் சீதா.

வித்யாபதி ஹாலுக்கு வந்து உட்கார்ந்துகொண்டு ராஜாராமனை குசலம் விசாரித்தான். அவருக்கு உடம்பு முழுவதும் நீர் கண்டிருந்தது. பார்த்தாலே நோயாளி என்று தெரிகிறது. இரண்டு மகன்கள் இருக்கிறார்களாம். ஒருத்தனும் பொருட்படுத்துவதில்லை.

வித்யாபதி ஒன்பது மணிக்கு போன் செய்து டாக்டரை அழைக்கச் செய்தான். அவர் வந்து ராஜாராமனைப் பரிசோதித்துவிட்டு உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கணும் என்று சொல்லிவிட்டார். சீதா சொன்னதற்கிணங்க வித்யாபதி அவரை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டான். சீதாவின் அத்தை வித்யாபதியைப் பார்த்து பூரித்துப் போய்விட்டாள்.

“சுபத்ரா! நீங்க ரொம்ப கொடுத்து வைத்தவங்க. மணியான பையன். இந்தக் காலத்தில் குழந்தைகள் பெற்றோர்களை வசைபாடி கொண்டுதானே இருக்கிறார்கள். உங்களையும், குழந்தைகளையும் அவன் அனுசரணையுடன் கவனித்துக் கொள்வதைப் பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் இந்த அதிர்ஷ்டம் முழுவதும் எங்க சீதாவுடையதுதான். பூஜையைப் பொறுத்து புருஷன், தானத்தைப் பொறுத்து குழந்தைகள் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எங்க சீதா தங்கப் பூக்களால் பூஜை செய்திருக்கிறாள்” என்று பாராட்டிக் கொண்டிருந்த போது சீதா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். வித்யாபதி வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான்.

அத்தை சீதாவைவிட்டு மகன்களுக்குக் கடிதம் எழுத வைத்தாள். ஆனாலும் பதில் வந்தபாடில்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்த நான்காவது நாள் ராஜாராமன் போய்ச் சேர்ந்தார். அத்தையின் சோகம் சொல்லி மாளாது. “என்னைத் தனியாக தவிக்கவிட்டுவிட்டு இப்படிப் போய் விட்டீங்களே? இனி யார் என்னைப் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள்? நான் எங்கேயாவது குளத்தில் குட்டையில் விழுந்து சாக வேண்டியதுதான்” என்று அழுதுக் கொண்டிருந்த போது வித்யாபதியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. துக்கத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் சீதா அங்கிருந்து போய்விட்டாள. அத்தையின் மகன்கள் வந்து சேர்ந்தார்கள். தாயை அந்தப் பட்டிக்காட்டிலேயே இருக்கச் சொன்னார்கள்.

“இத்தனை நாளும் அவர் இருந்ததால் என்னால் இருக்க முடிந்தது. இப்போ என்னால் ஒண்டியாக இருக்க முடியாதுப்பா. தைரியம் போறாது” என்றாள் அத்தை அழுதுகொண்டே. அண்ணனிடம் இருக்கச் சொல்லி தம்பியும், தம்பியிடம் இருக்கச் சொல்லி அண்ணாவும் முறைவாசல் கொண்டாடினார்கள். பேச்சுவார்த்தை முற்றி சண்டையாக மாறியபோது சீதா இடையில் புகுந்து சமரசம் செய்தாள்.

“உங்க அம்மாவுக்கு ஏதாவது வழி சொல்லுங்கள் முதலில்” என்றாள்.

“உனக்குத் தெரியாது. என் மனைவி நோயாளி. எங்க வீடு சின்னது” என்று சின்னவன் மறுத்தான்.

“நான் எப்போதும் வெளியூர்களுக்குப் போய்க் கொண்டிருப்பேன். என் மனைவி வேலைக்குப் போகிறாள்” என்று பெரியவன் சாக்குச் சொன்னான்.

அவர்களுடைய வாதத்தைக் கேட்கும்போது இழுத்து ஒன்று கொடுக்கலாமா என்ற அளவிற்கு ஆத்திரம் வந்தது. பெற்றதாய் கண்ணீர் கடலில் நின்று கொண்டிருக்கிறாள். அந்தக் கண்ணீர் அவர்களைக் கொஞ்சமும் பாதிக்கவில்லை. தாயைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இல்லையா? ரொம்ப சுயநலம் பிடித்தவர்கள் போல் பேசுகிறார்கள். அவர்களுடைய சந்தோஷத்தைத்தான் பார்க்கிறார்களே தவிர தாயைப் பற்றி யோசிக்கவே இல்லை.

மகன்கள் இருவரும் கிளம்பிப் போய்விட்டார்கள். அத்தை அழுது கொண்டே படுத்திருந்தாள். கணவன் போன துக்கத்தைவிட மிச்சம் இருக்கும் இந்த வாழ்க்கையை எப்படி கழிக்கப் போகிறோம் என்ற வேதனைதான் அதிகமாக இருந்தது. சீதா அத்தையைத் தேற்றிக் கொண்டிருந்தாள். காபியாவது குடிக்கச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“என்ன செய்யட்டும்? யாரும் இல்லாதவர்களுக்கு அந்த கடவுள்தான் துணை. அந்தப் பட்டிக்காட்டிலேயே போய் இருந்துகொள்கிறேன். எப்படியாவது என் பாட்டைப் பார்த்துக் கொள்கிறேன். இருந்தால் சாப்பிடுகிறேன். இல்லையா தண்ணி குடித்துவிட்டு படுத்துக் கொள்கிறேன். ஆனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். வேலை மெனக்கெட்டு வந்து உன் மகன்கள் ஏன் பார்க்க மாட்டேங்கிறார்கள் என்று கேட்பார்கள். அதுதான் என் வருத்தம்.”

“உங்க வேதனை எனக்குத் தெரியும் அத்தை. உலகம் அப்படித்தான் பேசும். உலகத்தைப் பற்றி நமக்குத் தேவையில்லாவிட்டாலும் நம் விஷயம் உலகத்திற்கு வேண்டும். என்ன செய்வது? யாராக இருந்தாலும் சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.”

“இதைவிட செத்துப் போவது மேல் என்று தோன்றுகிறது.”

“அந்த நினைப்பு வரத்தான் செய்யும். யாரிடமும் எதுவும் சொல்ல முடியாத போது, யாருக்கும் நம்முடைய தேவை இல்லாதபோது அப்படித்தான் தோன்றும்.”

“என் தங்கமே! இவ்வளவு ஐஸ்வரியத்தில் வசதியாக வாழ்ந்தாலும் எதிராளியின் வேதனையை எவ்வளவு நன்றாகப் புரிந்து கொள்கிறாய்? எவ்வளவு நல்ல மனம் உனக்கு?”

“எல்லாம் புரியும்படி அந்தக் கடவுள்தான் செய்தார் அத்தை” என்றாள்.

வித்யாபதி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி பக்கத்தில் வைத்தான். சீதாவின் வார்த்தைகள் அவனுக்குப் புதிய அர்த்தத்தைத் தோற்றுவித்தன. அத்தையின் மகன்கள் சுயநலமாக இருக்கிறர்கள் என்றும், தங்களுடைய சந்தோஷத்தை மட்டும் பார்த்துக் கொள்கிறார்கள் என்றும் தான் எரிச்சல் அடைந்து கொண்டிருந்தான். தான் செய்து கொண்டிருக்கும் காரியம்தான் என்ன? சீதாவின் கணவனாக தன்னுடைய கடமையை நிறைவேற்றி வருகிறானா?

தாய் காலையில் காபி கொண்டு வந்த கொடுத்த போது அவன் தலைமீது கையை வைத்துக் கொண்டே சொன்னாள். “வித்யா! ராஜாராமனையும், அவர் மனைவியையும் பார்த்த பிறகுதான் நான் எவ்வளவு கொடுத்த வைத்தவள் என்று புரியவந்தது. உண்மையிலேயே நான் அதிர்ஷ்டசாலி. என் பேச்சை மீறி அந்த இந்திராவைப் பண்ணிக் கொண்டு இருந்தால் நானும் குழந்தைகளும் எங்கே இருந்திருப்போம் சொல்லு. எனக்காகத்தான் சீதாவைப் பண்ணிக் கொண்டாய். எனக்கு சில சமயம் தோன்றும். சீதா ரொம்ப நல்லப் பெண். இந்தத் திருமணத்தை முடித்து சீதாவுக்கு உன்னைவிட நான்தான் அநியாயம் செய்து விட்டேனோ என்று. வித்யா! நான் உன்னிடம் வேறு எதையும் கேட்கவில்லை. சீதாவை மட்டும் கொஞ்சம் சந்தோஷமாக வைத்துக்கொள். நம்மால் சீதா கஷ்டப்பட்டால் அந்த கடவுள்கூட நம்மை மன்னிக்க மாட்டார். இன்று நாம் இவ்வளவு நிம்மதியாக, எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் நீ அவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டதுதானே. தங்குவதற்கு, சாப்பாட்டுக்கு, துணிமணிக்கு, குழந்தைகளின் படிப்பு எதற்கும் குறையில்லாமல் இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் சீதாதானே? சீதா மட்டும் கர்வம் பிடித்தவளாக இருந்தால் நாம் எங்கே இருந்திருப்போம் நீயே சொல்லு. இன்று நானும், குழந்தைகளும் நிம்மதியாக இருக்கிறோம். நீயும், சீதாவும் சந்தோஷமாக இருந்தால்தானே இந்த நிம்மதி எனக்கு நிலைத்திருக்கும்? நீ என்னை நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறாய். அதில் எனக்கு எந்த குறையும் இல்லை. ஆனால் சீதாவையும் நன்றாகப் பார்த்துக் கொள். சீதாவுக்கு வருத்தம் ஏற்படும் விதமாக நடந்து கொள்ளாதே.”

“இப்போ நான் என்ன செய்து விட்டேன் அம்மா?”

“சீதாவின் உறவினர்கள் உன்னைப் பற்றியும் இந்திராவைப் பற்றியும் ஏதேதோ கதைகள் பேசும் போது எனக்கு ரொம்ப ரோஷமாக இருக்கிறது. என் மகன் அப்படிப் பட்டவன் இல்லை என்று சொல்லத் தோணும். ஆனால் இந்த உலகம் நம்முடைய செயல்களைத்தான் பார்க்குமே தவிர பேச்சை எங்கே கேட்கப் போகிறது? இன்றைக்கு கோவிலுக்குப் போயிருந்தேன். அங்கே என்ன நடந்தது தெரியுமா?”

“என்ன நடந்தது?”

“சீதாவின் தூரத்து உறவுக்காரி ஒருத்தி வந்திருந்தாள். என்னைப் பார்த்தும் வேலை மெனக்கெட்டு குசலம் விசாரித்து அந்த இந்திராவும் உங்க வீட்டிலேயே இருக்கிறாளா என்று கேட்டாள். எங்க வீட்டில் எதற்காக இருக்கப் போகிறாள் என்று நான் சொன்னதற்கு, உங்க மகன் அவளைக் கல்யணம் செய்து கொண்டு விட்டானாமே என்றாள். அவர்களுக்கு என்னால் என்ன பதில் சொல்ல முடியும்? கம்பெனி வேலையில் மூழ்கி நீ நாலு பேருக்கு முன்னால் வரமாட்டாய். வந்தால் தெரியும் உனக்கு. ஒவ்வொருத்தரும் பேசுவதைக் கெட்டால் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகணும் போல் இருக்கும். வித்யா! உனக்குத் தெரியாதது என்ன இருக்குப்பா? நான் சொல்ல வேண்டுமா என்ன? நம் குடும்ப கௌரவத்தை சந்தி சிரிக்கும்படி செய்வாயோ அல்லது உள்ளங்கையில் வைத்துத் தாங்குவாயோ எல்லாம் உன் கையில்தான் இருக்கிறது. என் வேதனையைக் கொஞ்சம் புரிந்து கொள்.” சுபத்ராவின் கண்களிலிருந்து நீர் பொல பொலவென்று உதிர்ந்தது.

மகனும், மருமகளும் அந்நியோனியமாக இல்லை என்றும், அவர்கள் குடித்தனம் ஊராரின் வாயில் அவலாக, கேலிக்கூத்தாக மெல்லப் படுகிறது என்று அவளுக்குத் தெரியும். இது அவள் மனதில் ஆறாத காயமாக இருந்து வந்தது. அதனால் கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தாலும் மகனுக்கு புத்திமதி சொல்லிக் கொண்டுதான் இருந்தாள். அதைவிட அவளால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தக் கல்யாணத்தை முடித்து மகனையும் சீதாவையும் வேதனையில் ஆழ்த்திவிட்டோம். இதெல்லாம் தன்னால் வந்த வினைதான் என்று தன்னையே நொந்து கொள்ளவும் செய்தாள்.

ராஜாராமனின் மரணம் வித்யாபதிக்கு புதிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தது. மகன்கள் தாய்க்கு நிறை வேற்ற வேண்டிய கடமைகளை சரிவர செய்யவில்லை என்றும், சுயநலத்துடன் இருக்கிறார்கள் என்று அவர்களைப் பழித்தான். தான் செய்து கொண்டிருக்கும் காரியம்தான் என்ன? சீதாவின் பால் தன்னுடைய நடத்தை சுயநலம் இல்லாமல் வேறு என்ன? பொறுப்பை மறந்து விட்டு சொந்த சுகத்தைத் தேட வில்லையா?

அத்தியாயம்-48

வித்யாபதி ஆபீசுக்கு வந்தான். அவன் இங்கே வந்து சுமார் இருபது நாட்களாகிவிட்டது. அன்று சீதாவுக்கு ஆக்சிடெண்ட் ஆனது தெரிந்து ஆஸ்பத்திரிக்குப் போன நிமிஷத்திலிருந்து, நேற்று முந்தா நாள் சீதா எழுந்து சாதாரணமாக நடமாடும் வரையில் வீட்டிலேயே இருந்துவிட்டான். காலமானது அவன் எண்ணங்களின் மீதும், நம்பிக்கையின் மீதும் அலையாய் பொங்கி மூழ்கடித்து விட்டது. இந்த இருபத்தி இரண்டு நாட்களும் அவன் வாழ்க்கையில் அழிக்க முடியாத கல்வெட்டுகளாக நிலைத்துவிட்டன. அவன் கண் முன்னால் இருந்த பிரமைகள் எல்லாம் விலகிவிட்டன. அவனுக்கு அவனே புது மனிதனாகத் தோன்றினான்.

அவன் பைல்களை எடுத்துக் கொண்டிருந்த போது அதன் மீது கடிதம் ஒன்று வைக்கப் பட்டிருந்தது. எடுத்துப் பார்த்தான். அது இந்திரா எழுதிய கடிதம். அதில் இவ்வாறு இருந்தது.

“வித்யா,

நீ என் கண்ணில் பட்டு இருபது நாட்களுக்கு மேல் ஆகிறது. நீ நலமாகத்தான் இருக்கிறாய் என்று அவ்வப்பொழுது பிரசாத் மூலமாக தெரிந்து கொண்டுதான் இருந்தது. நீ என்னைப் பற்றி யோசிக்கவும் நேரம் இல்லாதபடி பிசியாக இருந்திருப்பாய் என்றும் தெரியும். நான் உன்னை கொஞ்சம்கூட குறை சொல்லவில்லை.

வேலை அழுத்தத்தில் இருப்பவர்களுக்குக் காலம் எப்படி ஓடிக் கொண்டிருக்கிறது என்ற நினைப்பே இருக்காது. ஆனால் எந்த வேலையும் செய்யாமல், ஒரு நபரைப் பற்றி யோசித்துக் கொண்டு அவன் வருகைக்காகவும், அவனிடமிருந்து போனுக்காகவும் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நேரமே ஓடாது. இந்த இருபது நாட்களும் இரவும் பகலும் நான் எவ்வளவு வேதனையை அனுபவித்தேன் என்று அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். ஆபீசுக்குப் போன் செய்தால் நீ வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஒரு முறை உங்கள் வீட்டுக்குச் செய்தால் உன் தங்கை ரொம்ப கடுமையாகப் பேசினாள். உனக்குப் போன் பண்ண முடியவில்லையே என்ற வருத்தத்தையாவது என்னால் தாங்கிக் கொள்ள முடியுமோ என்னவோ. ஆனால் திரும்பவும் போன் செய்து அந்தக் கடுமையை மட்டும் சகித்துக் கொள்ள முடியாது என்று தோன்றியது.

இந்த மாதிரி எத்தனை நாட்கள்? எத்தனை வருடங்கள்? நம் இருவரின் வாழ்க்கைக்கு முடிவு, இப்படி ஒருவருக்காக ஒருவர் காத்துக் கொண்டே கழிப்பதுதானோ என்று தோன்றுகிறது. சிலசமயம் சீதாவுடன் சேர்ந்திருக்கும் உன்னைப் பார்த்தால், நான்தான் பிரமையில் இருப்பது போலவும், சீதாவை உன் வாழ்க்கையிலிருந்து நீக்கும் சக்தி உன்னிடமே இல்லையோ என்றும் தோன்றுகிறது.

இந்த இருபது நாட்களும் என் இந்த பயத்தை மேலும் அதிகரிக்கச் செய்து விட்டன. வித்யா! இது என்னுடைய தவறுதானோ? உன்னைப் பார்க்க முடியவில்லையோ என்ற ஆவேசத்தால் உதித்த எண்ணம்தானோ? என் மனதை என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. சில சமயம் உன்னை ஆழமாக நம்புகிறது. இன்னொரு சமயம் உன்னை சந்தேகத்துடன் பார்க்கிறது. இந்த போராட்டத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எந்த வேலையிலும் என் மனம் லயிக்கவில்லை. எனக்குத் தெரியும் வித்யா. இதற்கெல்லாம் காரணம் நானேதான். அறியாமையால் என் சுயநலத்தை பொருட்படுத்தாமல் உங்க அம்மாவின் சார்பில் யோசித்தேன். அவளுடைய சம்மதத்துடன்தான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளணும் என்று நினைத்தேன். நான் எவ்வளவு முட்டாள்தனமாக யோசித்தேனோ, என் அறியாமையால் வாழ்க்கையில் எவ்வளவு விலைமதிப்பற்றதை இழந்துவிட்டேனோ இப்போ எனக்கு புரிகிறது. உங்க அம்மாவுக்கு என் மனநிலை புரியுமா? ஒருக்கால் என்றைக்குமே புரியாதோ என்னவோ. இந்த உலகதில் யாருமே தம் சுயநலத்தைத் தவிர எதிராளியைப் பற்றி யோசிக்க மாட்டார்கள். யோசிக்கவும் கூடாது. ஏன் என்றால் மற்றவர்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தால் நம்மால் எதுவும் செய்ய முடியாது. இந்த விஷயம் எனக்குப் புரிந்து விட்டது.

வித்யா! அதற்காகத்தான் கேட்கிறேன். நான் இப்பொழுது யாரைப் பற்றியும் யோசிக்கவில்லை. நம் இருவரின் வாழ்க்கையின் கரை எந்தப் பக்கம்? இப்பொழுது துணிந்து நாம் ஒரு முடிவை எடுக்கவில்லை என்றால் வாழ்க்கை முழுவதும் இப்படியே கழிந்து விடும் போல் இருக்கிறது. திருமணம் ஆன நீயும், கல்யாணம் ஆகாத நானும் இருவரின் வாழ்க்கையும் சூனியமாக நிலைத்து விடும் போலிருக்கிறது.

வித்யா! இன்று நான் கோதாவரி எக்ஸ்பிரஸ் வண்டியில் விசாகப்பட்டிணம் போய்க் கொண்டிருக்கிறேன். இனி திரும்பி வரமாட்டேன். அங்கே ஷிப்யார்ட்டில் வேலை ஒன்று இருக்கிறதாம். சித்தப்பா எனக்கு அந்த வேலையை வாங்கித் தருவதாக எழுதியிருக்கிறார். நான் போகிறேன். நான் உண்மையிலேயே உனக்கு வேண்டும் என்று இருந்தால் நீ சீதாவுடன் உறவை அறுத்துக் கொண்டு வந்துவிடு. நாம் இனித் திரும்பி வரவேண்டாம். நான் நன்றாக யோசித்துவிட்டுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். சித்தப்பாவின் முகவரியை கீழே எழுதியிருக்கிறேன். நான் உனக்கு வேண்டும் என்றால் நேராக அங்கே வந்து விடு. நாமிருவரும் சாசுவதமாக சேர்ந்திருக்கப் போகிறோமா இல்லையா என்று முடிவு செய்து கொள்வதற்கு இதைக் கடைசித் தருணமாக நான் நினைக்கிறேன். உன் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன்.

இப்படிக்கு,
இந்திரா

வித்யாபதி அந்தக் கடிதத்தைப் படித்ததும் திகைத்துவிட்டான். ஒரு தடவைக்குப் பத்து தடவை திரும்பத் திரும்ப படித்தான். அவன் இந்திராவுக்கு போன் செய்யப் போன பொழுது மேனேஜர் வந்தார். “சார்! பெங்களூரிலிருந்து வெங்கட்ராமன் வந்திருக்கிறார்” என்றார். அவர் சொல்லி முடிப்பதற்குள் ‘ஹலோ! குட் மார்னிங்க” என்றபடி கையை நீட்டிக் கொண்டே வழுக்கை தலை ஆசாமி ஒருவர் உள்ளே வந்தார். வித்யாபதி எழுந்து அவருடன் கையைக் குலுக்கினான்.

பன்னிரெண்டு மணியாகிவிட்டது. வெங்கட்ராமன் லஞ்ச் முடிந்ததும் கிளம்பிப் போனார். வித்யாபதி மேஜை முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டான். அதற்குள் கதவைத் திறந்துகொண்டு “சார்” என்று தயங்கிக் கொண்டே வந்தான் ரமணன். கம்பெனியில் அக்கவுண்டெண்ட். பல வருடங்களாக வேலை செய்து வருகிறான். அவனுடைய மருமகனும் இங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன விஷயம்?” கேட்டான் வித்யாபதி.

“நீங்க ஒரு சின்ன உதவி செய்யணும் சார்.”

“சொல்லுங்கள்.”

“என் மருமகன் இருக்கிறானே. அவன் நடத்தை கொஞ்ச நாளாக சரியாக இல்லை. நீங்கதான் கொஞ்சம் கண்டித்து வைக்கணும்.”

”என்ன செய்தான்?”

“என் மகளை கட்டிக் கொடுத்து ஆறு வருடங்கள் ஆகிறது. இரண்டு குழந்தைகள். வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த போது நான்தான் அய்யாவிடம் சொல்லி இங்கே வேலை வாங்கிக் கொடுத்தேன். பைல்களைப் பார்க்க தெரியாத போது நான்தான் வேலையும் கற்றுக் கொடுத்தேன். இப்போ என்ன செய்தான் தெரியுமா?”

“என்ன செய்தான்?”

“யாரோ நர்ஸைக் காதலிக்கிறானாம். என் மகளை விட்டு விடுவானாம். என் மகள் ஒரே அழுகை.”

வித்யாபதி நிமிர்ந்து உட்கார்ந்தான். தன் முகத்தில் வேகமாக படரத் தொடங்கிய செம்மை அவன் கண்ணில் படாதவாறு தலை குனிந்தபடி பைல்களை பார்க்கத் தொடங்கினான்.

“அவனுக்கு அந்த நர்ஸ் மீது இருக்கும் மோகத்தில் கட்டிய மனைவியின் புலம்பல் காதில் விழவில்லை. நீங்கதான் கொஞ்சம் புத்தி சொல்லணும்.”

“என்னால் என்ன சொல்ல முடியும்?”

ரமணனின் முகம் கோபமாக மாறியது. “இந்த மாதிரியெல்லாம் நடந்து கொண்டால் வேலையை விட்டு நீக்கி விடுவேன் என்று சொல்லுங்கள்.”

“அதற்குப் பயந்து விடுவானா? வேறு வேலை தேடிக் கொள்வான்.”

“கிழித்தான். அவன் என்ன பெரிய படிப்பு படித்துவிட்டான்? இங்கே என்றால் பெரிய அய்யா என் முகத்தைப் பார்த்து வேலை போட்டுக் கொடுத்தார். நீங்க சும்மா கொஞ்சம் மிரட்டுங்கள். வேலை விட்டு நீக்கி விடுவதாகச் சொல்லுங்கள். அதற்குமேல் நான் பார்த்துக் கொள்கிறேன்.”

ரமணன் வித்யாபதி சம்மதத்திற்காகக் காத்திருக்கவில்லை. “டேய் மது! இங்கே வா. அய்யா கூப்பிடுகிறார்” என்று குரல் கொடுத்தான்.

அவன் வந்தான். ரமணன் எதற்காக கூப்பிட்டான் என்று அவனுக்குப் புரிந்துவிட்டது போலும். தலை குனிந்தபடி நின்று கொண்டான்.

“உன் மாமனார் உன்மேல் ஏதோ புகார் சொல்லுகிறாரே. என்ன விஷயம்?” என்று கேட்டான். மது பதில் சொல்லவில்லை.

“மனைவி, குழந்தைகள் இருக்கும் போது இது போல் போக்கிரித்தனமாக நடந்து கொள்ளலாமான்னு கண்டித்து வைய்யுங்க. அந்தச் சிறுக்கி இவனுடைய சம்பளத்தைப் பார்த்துதான் பின்னால் சுற்றுகிறாள். அதைச் சொன்னாலும் புரிய மாட்டேங்கிறது. சின்னய்யா உன்னை வேலையை விட்டு நீக்கி விடுவாராம். இந்த மாதிரி பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்ளாதே என்கிறார் சின்னயா.” சொல்ல நினைத்ததை தானே சொல்லிவிட்டான் ரமணன். மது பதில் பேசவில்லை.

“இந்த வேலை போய்விட்டால் அவள் உன் முகத்தைக்கூட பார்க்கமாட்டாள். முதலில் வேலை பறி போகாமல் பார்த்துக்கொள்” என்று அதட்டினான் ரமணன்.

மது தலையை அசைத்தான். இருவரும் போய்விட்டார்கள்.

வித்யாபதி நாற்காலியில் பின்னால் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். தான் என்ன பெரிய காரியத்தைச் செய்து விட்டோம் என்று மதுவுக்கு நியாயத்தை எடுத்துச் சொல்ல முடியும் என்று தோன்றியது.

அத்தியாயம்-49

மாலை சீக்கிரமாக வந்து விட்டது. வித்யாபதி வந்தவர்களை எல்லாம் பார்த்து அனுப்பிவிட்டு களைத்துப் போனவனாக நாற்காலியில் சாய்ந்து கொண்டான். இவ்வளவு நாட்களாக ஆபீசுக்கு வராததால் வேலைபளு சேர்ந்து விட்டிருந்தது. அவசரமாக கவனிக்க வேண்டிய பைல்கள் நிறைய இருந்தன. அதற்குள் டிரைவர் வந்தான். “அம்மா இதை உங்களிடம் தரச் சொன்னாங்க சார்” என்று ஒரு கவரைத் தந்து விட்டு சல்யூட் செய்துவிட்டுப் போய்விட்டான்.

பைலில் கையெழுத்திடப் போன வித்யாபதி அதை நிறுத்திவிட்டு கவரைத் திறந்து பார்த்தான். சீதா எழுதிய கடிதம் அது. அதில் இவ்வாறு இருந்தது.

உங்களுக்கு,

சீதா வணக்கத்துடன் எழுதிக் கொள்வது.

நான் இப்பொழுது மினார் எக்ஸ்பிரஸில் பாம்பேக்கு, எங்கள் அத்தையிடம் போகிறேன். நான் வேண்டுமென்றே இந்தப் பயண விஷயத்தை உங்களிடம் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தேன். நான் இந்த இருபது நாளாக உங்களுக்குள் வேறு மனிதனைக் கண்டேன். அவன் என்னைச் சீராட்டினான். அன்பு செலுத்தினான். எனக்குத் துணையாகவும் நிழலாகவும் இருந்தான். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் எப்படிப்பட்ட நபர் எனக்குக் கணவனாக வரவேண்டும் என்று எண்ணியிருந்தேனோ சாட்சாத் அதே போன்ற நபர் என் கண்முன்னால் நின்றிருந்தான். எனக்கு ஜுரம் குறைந்து விட்டது. காயங்கள் ஆறிக் கொண்டு வருகின்றன. நீங்க ஆபீசுக்குப் போய் விட்டீர்கள். எனக்குத் தெரியும். இந்த இருபது நாளாக என்னைத் தேற்றி, ஆதரவு காட்டிய நபர் இனி எப்போதும் என் வாழ்க்கையில் என் கண்ணில் படவே மாட்டான் என்று. நீங்க ஆபீசிலிருந்து திரும்பி வந்ததும் பழைய ஆளாக மாறி விடுவீர்கள். உங்களுடைய அலட்சியத்தையோ, அனாதரவையோ என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இதற்கு முன்பாக இருந்தால் எனக்கு உங்களுடைய அன்பு தெரியாது. நெருக்கத்தில் இருக்கும் சந்தோஷமும் தெரியாது. ஒரு முறை அன்பை பெற்றுவிட்டு அதே நபரால் மறுபடியும் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்வதை நான் மட்டுமே இல்லை, யாருமே விரும்ப மாட்டார்கள். அதனால்தான் நான் தொலை தூரத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.

போகும் முன்னால் தயக்கம் இல்லாமல், எந்த பயமும் இல்லாமல் என் மனதில் இருப்பதைச் சொல்லி விட்டுப் போக விரும்புகிறேன். இதை நானாக சொல்லவில்லை என்றால் உங்களுக்கு என்றுமே தெரிய வாய்ப்பு இல்லை. ஏன் என்றால் என் மனம் உங்களுக்குப் புரியாது. புரிந்துகொள்ள வேண்டிய தேவையும் உங்களுக்கு இல்லை.

நான் உங்களைக் கல்யாணம் செய்துகொண்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் உங்கள் வாழ்க்கையில் முன்பின் தெரியாதவள் போல் மூன்றாம் மனுஷியாகவே நிலைத்துவிட்டேன். உங்கள் மனம் எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியும். உங்களுடன் நடந்த இந்த திருமணம் மிகப்பெரிய தவறு என்று நான் உணர்ந்து கொண்டேன். இது நான் செய்த தவறு இல்லை. எங்க அப்பா செய்த தவறு. திருமணம் ஆன முதல்நாளன்றே உங்கள் மனதில் என்னுடைய இடம் எது என்று தெரிந்துவிட்டது. ரொம்ப ரோஷமடைந்தேன். உங்களுடன் குடித்தனம் செய்ய முடியாது என்று அழுதேன். ஆனால் அப்பா எனக்கு குடும்ப கௌரவத்தைப் பற்றி நினைவூட்டினார். என் சுகத்தைவிட அதுதான் முக்கியம் என்றார். உங்களை வெற்றிக்கொண்டு வழிக்குக் கொண்டு வரச்சொல்லி அறிவுரை வழங்கினார். என்னால் உங்களை வெற்றிக் கொள்ளவா முடியாது என்று நினைத்தேன். தொடக்கத்தில் பிடிவாதத்தால் உங்களை நெருங்க முயன்றேன். அது பயன்படாத போது அன்பால் உங்களைக் கட்டிப் போட வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் உங்க அம்மாவையும் கூடப் பிறந்தவர்களையும் ஆதரவுடன் கவனித்துக் கொண்டேன். அதுவும் லாபமில்லை என்று தோன்றிவிட்டது. லஞ்சம் கொடுத்து யார் மனதிலும் இடம் பிடிக்க முடியாது என்று பாடத்தைக் கற்றுக் கொண்டேன்.

ஆண் பெண் இருவருக்கும் நடுவில் நெருக்கம் ஏற்பட வேண்டும் என்றால், அன்பு என்ற கயிற்றால் பிணைக்கப்பட வேண்டும். அது பரஸ்பரம் ஏற்பட வேண்டிய வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு. அப்பொழுதுதான் அந்த ஆண் பெண்ணின் சேர்க்கை மகோன்னதமாக இருக்கும்.

இந்த இரண்டு வருடங்களில் நான் இருபதாண்டு அனுபவத்தைப் பெற்றுவிட்டேன். அப்பாவின் இறப்பு, உங்களுடைய பாராமுகம். உறவினர்களின் ஏளனம்… எல்லாம் சேர்ந்து என்னை மேலும் வருத்தத்தில் ஆழ்த்திவிட்டதோ அல்லது பிடிவாதக்காரியாக மாற்றிவிட்டதோ எனக்கே தெரியவில்லை. நான் உங்களிடம் திரும்பத் திரும்ப சொல்கிறேன். இந்தத் திருமணம் நடந்ததில் என்னுடைய தவறு எதுவும் இல்லை. உங்களை நான் ரொம்பவும் கஷ்டப்படுத்தி விட்டேன் என்று எனக்குத் தெரியும். தொடக்கத்தில் பழிவாங்கும் தோரணையில் உங்களுக்குப் பிடிக்காத காரியங்களை செய்து உங்களை மேலும் துன்புறுத்த வேண்டும் என்று தோன்றியதுண்டு. ஆனால் அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்து கொண்ட பிறகு நிறுத்திக் கொண்டேன்.

உங்களுடைய மனம் எங்கே இருக்கிறதென்று எனக்குத் தெரியும். நீங்கள் இந்திராவைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கு நான் குறுக்கே இருக்க மாட்டேன். ஏன் என்றால் ஒரு மனிதனை வலுக்கட்டாயமாக நம் வாழ்க்கையுடன் பிணைத்து வைத்துக் கொண்டால் அமைதியின்மையும் போராட்டமும் தவிர வேறு எதையும் அடைய முடியாது என்று அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். நான் போகிறேன். தயவு செய்து என்மீது இரக்கம் காட்ட வேண்டாம். எனக்கு யாருடைய இரக்கமும் தெவையில்லை. எனக்கு உங்களிடமிருந்து வேண்டியது என்னவென்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதைக் கொடுக்க உங்களால் முடியாத போது உங்கள் வாழ்க்கையில் திருஷ்ட்டிப் பொம்மையாக இருப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. நீங்க விவாகரத்து பேப்பர்களை அனுப்பி வையுங்கள். கையெழுத்துப் போட்டு அனுப்பி வைக்கிறேன். ஒரு நிமிடம்கூட தாமதம் செய்ய மாட்டேன். கடவுள் எனக்கு எல்லாம் வழங்கியிருக்கிறார் என்று எல்லோரும் சொல்லுவார்கள். நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் எனக்கு எதுவும் கொடுக்கவில்லை என்று இப்பொழுது புரிகிறது. என்னுடைய அதிர்ஷ்டம் என்னைப் பழிக்கிறது. எல்லோரின் கண்களுக்கு அதிர்ஷ்டசாலியாக தென்படும் துரதிர்ஷ்டசாலி நான். இந்த உண்மையை நேர்மையாக ஒப்புக்கொண்டு விலகிப் போகிறேன்.

சீதா.

வித்யாபதி சிலையாய் அப்படியே உட்கார்ந்துவிட்டான்.

இரவு எட்டு மணியாகிவிட்டது. அவன் இன்னும் அப்படியே சலனமில்லாமல் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு எதிரே இந்திரா மற்றும் சீதா எழுதிய கடிதங்கள் இருந்தன.

வித்யாபதிக்கு அவை இரண்டு வழிகளாகத் தோன்றின. கேள்விக்குறியுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன. அவன் இரு கரங்களும் கேசங்களுக்குள் நுழைத்துக் கொண்டு மேஜைமீது சரிந்தபடி உட்கார்ந்திருந்தான். அவன் முகத்தில் வியர்வை படிந்தது. உள்ளம் தீவிரமான போராட்டத்திற்கு உள்ளாகியிருந்தது.

அத்தியாயம்-50

ஒரு வாரத்திற்குப் பிறகு…

வித்யாபதி ஆபீசில் உட்கார்ந்து கொண்டு பைல்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். மிகவும் இளைத்து விட்டிருந்தான். தாடி வளர்ந்திருந்தது. களைப்பு, தூக்கமின்மை, வேதனை அவன் கண்களில் தெளிவாகத் தென்பட்டுக் கொண்டிருந்தது.

அதற்குள் தடாரென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் பிரசாத். அவன் சூறாவளிக் காற்றுப் போல் காட்சியளித்தான். “வித்யாபதி! இந்திரா ஆபீசுக்கு லாங் லீவ் போட்டிருக்கிறாளாம். ஊருக்குப் போயிருக்கிறாளாம். எந்த ஊருன்னு அவள் அக்காவிடம் எவ்வளவு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறாள். உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” அவன் முகத்தில் பதற்றம் தெரிந்தது.

வித்யாபதி அவனை உட்காரச் சொல்லி சைகை செய்தான். ஆனால் அவன் உட்காரவில்லை. இருப்புக் கொள்ளாதவன் போல் கைகளை அசைத்துக் கொண்டே சொன்னான். “நான் ஊரில் இல்லை. இன்றைக்குத்தான் வந்தேன். இந்திரா அப்படிப் போய் விட்டாள் என்றால் ஏதோ பெரிய காரணம் இருந்திருக்கும். ஏதோ வேதனை ஏற்பட்டால் தவிர அப்படிச் செய்ய மாட்டாள்.”

வித்யாபதி அவன் பதற்றத்தைப் பார்த்துவிட்டு “தெரிந்து கொண்டு நீங்க என்ன செய்யப் போறீங்க?” என்றான்.

“என்ன செய்வேனா? என்னால் முடிந்தால் அந்த வேதனையைத் தீர்த்து வைப்பேன். முடியாது போனால் ஆறுதலாவது செல்லுவேன். அவளை எனக்குப் பிடிக்கும். அவளை நான் ரொம்பவும் நேசிக்கிறேன். அவளுடைய நண்பன் நான். நான் மட்டும் ஊரில் இருந்திருந்தால் அப்படிப் போயிருப்பாளா? போக விட்டிருப்பேனா?”

“ஒரு நிமிஷம் உட்காருங்கள் ப்ளீஸ்” என்றான் வித்யாபதி. பிரசாத் உட்காரவில்லை. நாற்காலியைப் பிடித்துக் கொண்டு அமைதியற்று நின்றிருந்தான்.

வித்யாபதி டிராயரைத் திறந்து இந்திராவின் கடிதத்திலிருந்த விலாசத்தைக் குறித்துக் கொடுத்தான். பிரசாத் அதைப் பார்த்துவிட்டு “மைகாட்! விசாகப்பட்டிணமா?” என்றான். உடனே மணியைப் பார்த்துக் கொண்டு “கோதாவரி எக்ஸ்பிரஸ்க்கு நேரமிருக்கிறது. இப்போழுது கிளம்பினால் பிடித்துவிட முடியும். இந்திராவைப் பார்த்தால்தான் என்னால் திரும்பவும் பழையபடி ஆகமுடியும். வருகிறேன்” என்றான்.

“ஒரு நிமிஷம் இருங்கள். நானும் வருகிறேன். உங்களை ஸ்டேஷனில் இறக்கி விடுகிறேன்” என்றான் வித்யாபதி. பிரசாத் வியப்புடன் பார்த்தான். வித்யாபதி அதை கவனிக்காதது போல் கார் சாவியை எடுத்துக் கொண்டான்.

இருவரும் ஸ்டேஷனுக்கு வந்தார்கள். வழியில் பிரசாதும் சரி, வியாபதியும் சரி ஒரு வார்த்தைகூட பேசிக் கொள்ளவில்லை.

வித்யாபதி பிரசாதை ஸ்டேஷன் அருகில் இறக்கி விட்டான். “தாங்க்யூ. உங்களுக்கு ரொம்ப சிரமம் கொடுத்துவிட்டேன்” என்றான் பிரசாத்.

“பரவாயில்லை. இந்தக் கடிதத்தை நான் கொடுத்ததாக இந்திராவிடம் கொடுத்து விடுங்கள்.” சட்டைப் பையிலிருந்து கவரை எடுத்துக் கொடுத்தான்.

“கண்டிப்பாக” என்றான் பிரசாத்.

பிரசாத் ஏறிய ரயில் புறப்பட்டது.

வித்யாபதி வீட்டிற்குத் திரும்பினான். கார் டிரைவ் செய்து கொண்டிருந்த போது அவன் மனதில் “நான் எடுத்த முடிவு சரியானதுதான்” என்று திரும்பத் திரும்பத் தோன்றிக் கொண்டே இருந்தது.

அத்தியாயம்-51

பம்பாயில்…

சீதா தலைக்குக் குளித்துவிட்டு சோபாவில் உட்கார்ந்தபடி சிடுக்கை எடுத்துக் கொண்டிருந்தாள். அத்தை, மாமா வீட்டில் இல்லை. கல்யாணத்திற்குப் போயிருந்தார்கள். சீதாவையும் வரச்சொல்லி ரொம்ப வற்புறுத்தினார்கள். ஆனால் சீதா மாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.

“என்னடி பெண்ணே? எப்போ பார்த்தாலும் இப்படி இரை தின்ன பாம்புபோல் ஒரே இடத்தில் கிடக்கிறாய்? உடம்பு சரியாக இல்லையா? ஏதாவது விசேஷமா?” என்று கேட்டாள் அத்தை.

“அப்படி எதுவும் இல்லை அத்தை” எனறாள் சீதா.

“அது சரி. உன் கல்யாணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிறதே. இன்னும் பேச்சு மூச்சு எதுவும் காணுமே? குடும்பக்கட்டுபாடா?”

“இல்லை அத்தை.”

“போகட்டும். டாக்டரிடம் காட்டிக்கொள்.”

“தேவையில்லை அத்தை.”

“உன் கணவனும் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? ஜாலியாக பொழுது போயிருக்கும். அவனையும் வரச்சொல்லி கடிதம் எழுது.”

“அவர் வரமாட்டார். வேலை அதிகமாக இருக்கும்.”

“மனைவிக்குப் பிறகுதான் எந்த வேலையும். உங்க மாமா என்ன செய்வார் தெரியுமா? வீட்டில் டூர் என்று கிளம்பிவிடுவார். நான் பிறந்தவீட்டுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு கிளம்புவேன். இரண்டு பேரும் வெளியூரில் சந்தித்துக் கொள்வோம். எங்க மாமியார் இருக்காளே, பெரிய ராட்சசி. அவருடன் ஒரு வார்த்தை பேச விடமாட்டாள். எங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் இந்தக் காலத்துப் பசங்களுக்கு ஏது? கல்யாணம் ஆனதிலிருந்து கைகோர்த்துக் கொண்டு ஊர் சுற்றுவதுதானே வேலை?”

அந்தம்மாளுக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்து விட்டாலும் போதும். தன் கணவரைப் பற்றிய விஷயங்கள்தான் பேசுவாள். இந்த வயதிலும் அவர்களுக்குள் பாசப் பிணைப்பு குறையவே இல்லை. அதைப் பார்த்தால் சீதாவுக்கு வியப்பாக இருந்தது. அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அந்தக் குறையை பரஸ்பரம் துணையாக இருந்து கொண்டு தீர்த்துக் கொள்ளப் பார்ப்பார்கள். சீதாவுக்கு அவர்களைப் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

திடீரென்று காலிங் பெல் ஒலித்தது. சீதா போய்க் கதவைத் திறந்தாள். அத்தை உள்ளே வந்து கொண்டே “என் மறதியைப் பார்த்தாயா? கல்யாணத்திற்குக் கிளம்பிக் கொண்டு பிரசண்டேஷனை வீட்டிலேயே வைத்துவிட்டேன். உங்க மாமாவும் நினைவுப் படுத்தவில்லை” என்று உள்ளே வந்து பரிசுப் பொருளை எடுத்துக் கொண்டு வந்தாள்.

சீதா அத்தையை அனுப்பிவிட்டு உள்ளே வந்தாள். எதிரே காலண்டர் கண்ணில் பட்டது. சீதா தேதியைப் பார்த்தாள். தான் வந்து ஒரு வாரமாகிவிட்டது. வித்யாபதியிடமிருந்து கடிதமோ, டெலிகிராமோ, போனோ எதுவுமே வரவில்லை. சீதா பெருமூச்சு விட்டுக் கொண்டாள். அவன் பாராமுகமும், அலட்சியமும் அவளுக்குப் புதிது இல்லை. ஆனால் அந்த வருத்தம் மட்டும் அவளை விட்டு நீங்கவே இல்லை. இதற்கு முடிவே இல்லை. அவன் ஒருக்கால் வக்கீலைப் பார்க்கும் பரபரப்பில் இருக்கிறானோ என்னவோ? இந்திராவும் வித்யாபதியும் சந்தோஷமாக இருப்பது போன்ற காட்சி அவள் கண் முன்னால் வந்து நின்றது. இந்திரா உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. தன்னை மனப்பூர்வமாக காதலிக்கும் நபருக்கு முன்னால் இந்த சமுதாயம் ஏற்படுத்திய திருமணம் என்ற சடங்கு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. இந்திராவின் அதிர்ஷ்டத்தைப் பார்த்து அவள் பொறாமைப்படக் கூடாது. ஆனால்… ஆனால் அவளால் அது முடியவில்லையே? அவள் கண்களிலிருந்து பொல பொலவென்று நீர் வழிந்தது.

திரும்பவும் காலிங் பெல் ஒலித்தது. அத்தை மறுபடியும் எதையாவது மறந்துவிட்டாள் போலும். திரும்பவும் வந்திருக்கிறாள்.

சீதா கண்களைத் துடைத்துக் கொண்டு போய் கதவைத் திறந்தாள். அத்தையின் பக்கம் முழுவதுமாக திரும்பாமலேயே திரும்பப் போனாள். ஆனால் அத்தை போட்டுக் கொண்டிருந்த செண்டின் நறுமணம் மூக்கைத் துளைக்கவில்லை. பட்டுப்புடவையின் சலசலப்பு சத்தம் கேட்கவில்லை. வெள்ளை நிற உடைகளுடன் காலில் செருப்பு அணிந்திருந்த ஒரு நபர் வாசற்படிக்கு அந்தப் பக்கம் நின்றிருந்தான். சீதா நிமிர்ந்து பார்த்தாள். மறுநிமிடம் தலையை சுற்றிக் கொண்டு வந்தது. வாசலில் வித்யாபதி நின்றிருந்தான்.

ஒரு வினாடி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றிருந்தார்கள். “உள்ளே வரலாமா?” கேட்டான் அவன்.

சீதா சுயநினைவு பெற்றவளாக வழிவிட்டாள். அவன் உள்ளே வந்தான்.

சீதா உள்ளே போனாள். அவன் சோபாவில் சரிந்தபடி உட்கார்ந்தான். பத்து நிமிடங்கள் கழித்து சீதா காபி டம்ளருடன் வந்தாள். அந்த முகத்தில் வலிய வரவழைத்துக் கொண்ட சுய அபிமானமும், துணிச்சலும் தென்பட்டன. “டைவோர்ஸ் காகிதங்களை நீங்களே நேரில் கொண்டு வந்தீங்களா?”

அந்த வார்த்தைகள் கூரிய கத்தியைப் போல் இருந்தன. அவன் திகைத்துப் போனாற்போல் பார்த்தான். அவன் முகத்தில் வேதனை, வருத்தம் தெளிவாக தென்பட்டன. அந்தக் கத்தியால் ஏற்பட்ட காயத்தை நிசப்தமாக தாங்கிக் கொண்டான். வலிந்த சிரிப்புடன் சொன்னான். “காகிதத்தால் முடியும் வேலை என்றால் தபாலிலேயே வந்திருக்கும். நான் சுயமாக ஏன் வரப் போகிறேன்?”

சீதா அவன் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த முகத்தில் பயம், ரோஷம் மறைந்து போய் லேசாக மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும் வந்து சேர்ந்தன. அவன் பேச்சு புரியாதது போல் குழப்பத்துடன் பார்த்தாள்.

“சீதா! நான் உன்னை அழைத்துப் போவதற்காக வந்திருக்கிறேன்.” தெளிவற்ற குரலில் சொன்னான்.

அவன் அந்த வார்த்தைகளை சொன்ன தோரணையில் என்ன இருந்ததோ தெரியவில்லை. மறுநிமிடம் சீதா அழுதுவிட்டாள். அவன் காபி டம்ளரை பக்கத்தில் வைத்துவிட்டு சீதாவின் கையைப் பிடித்துக் கொண்டான். கைகளால் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுது கொண்டிருந்த சீதா, முழங்காலில் சரிந்து சோபாவின் விளிம்பில் சரிந்தாள். அந்த அழுகை இதயத்தைக் கசக்கிப் பிழியும்படியாக இருந்தது. வித்யாபதியின் தாடை எலும்பு இறுகியது. அவன் எதுவும் சொல்லவில்லை. நகர்ந்து வந்து சீதாவின் தலையை மடியில் சாய்த்துக் கொண்டான். அவள் அழுகை மேலும் கூடியது. சீதாவை மேலும் அருகில் இழுத்துக் கொண்டு கன்னத்தை, தலை முடியை தடவிக் கொண்டே இருந்தான். அன்பு நிறைந்த அந்தத் தொடுகையில் சீதாவின் எத்தனையோ கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டது.

அத்தியாயம்-52

விசாகப்பட்டிணத்தில்…

இந்திரா அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தாள். அன்றைக்கும் வித்யாபதி வரவில்லை. அவன் வருவான் என்றும், மாட்டான் என்றும் அவள் மனம் மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தது. அவள் வந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் வித்யாபதி வராதது இந்திராவுக்கு வியப்பாக இருந்தது. இந்தத் தனிமை பயங்கரமாக, பைத்தியமாக்குவது போல் இருந்தது.

அதற்குள் யாரோ கதவைத் தட்டினார்கள். இந்திராவின் இதயம் படபடத்தது. கதவைத் தட்டிய விதத்திலேயே ஏதோ நெருக்கம் தெரிந்தது. ஒரே எட்டில் போய் தடாலென்று கதவைத் திறந்தாள்.

எதிரே பிரசாத் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் இந்திரா திகைத்துப் போனாள். தான் எந்த ஊருக்குப் போகிறாள் என்று யாரிடமும் சொல்லக் கூடாது என்று அக்காவிடம் சத்தியம் வாங்கியிருந்தாள்.

“நீங்களா?” வியப்புடன் கேட்டாள்.

“ஆமாம். நானேதான்” என்றான் தன்னையே விரலால் சுட்டிக் காட்டிக் கொண்டு பெருமையாக. “என்னிடம் சொல்லாமல் ஓடி வந்துவிட்டால் கண்டுபிடித்து விட முடியாது என்று தானே நினைத்தீங்க? இந்த பூமியில் நீங்க எங்கே ஒளிந்து கொண்டிருந்தாலும் என்னால் கண்டுபிடித்து விட முடியும்” என்றான் முறுவலுடன்.

இந்திராவுக்கு அவன் பேச்சையும் சிரிப்பையும் பார்க்கும் போது நிம்மதியாக இருந்தது. இருட்டுக் குகையில் வெளிச்சம் தோன்றியது போல் இருந்தான் அவன். “வாங்க” என்றாள். அவன் உள்ளே வந்தான்.

இந்திரா அவனுக்குக் காபியைக் கொடுத்துவிட்டு குளிக்கச் சொன்னாள். அவன் காபியைக் குடித்துக் கொண்டே இந்திராவைக் காணாமல் தான் தவித்த தவிப்பை விலாவாரியாக சொன்னான்.

“என் முகவரியை உங்களுக்கு யார் கொடுத்தார்கள்?” என்று கேட்டாள்.

”அம்மாடியோவ்! சொல்ல மாட்டேன். அது ரகசியம்” என்றான். அவன் குளிக்கப் போகும் முன் “மறந்தே போய்விட்டேன். உங்களுக்கு வித்யாபதி கடிதம் கொடுத்தனுப்பி இருக்கிறார்” என்று ஜேபியிலிருந்து கவரை எடுத்துக் கொடுத்துவிட்டு குளிக்கப் போய்விட்டான்.

இந்திராவின புருவங்கள் முடிச்சேறின. உறையைக் கிழித்துக் கடிதத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினாள்.

“இந்தூ,

நான் வராமல் இப்படி கடிதம் எழுதுவதற்குக் கோபித்துக் கொள்ளாதே. உன் கடிதத்தை ஒரு முறைக்கு இரண்டு முறை படித்து விட்டேன். என்னுடைய விருப்பம் போல் முடிவு செய்வதற்கு நான் இப்பொழுது சுதந்திரமானவன் இல்லை. என் வாழ்க்கை என் ஒருத்தனுக்கு மட்டுமே சொந்தம் இல்லை. ஒரு காலத்தில் எனக்கு முழு சுதந்திரம் இருந்தது. என் வாழ்க்கையின் மீது பரிபூர்ணமான அதிகாரம் இருந்தது. அதனால்தான் அன்றைக்கு உன்னை எங்கேயாவது போய் கல்யாணம் செய்து கொண்டு விடலாம் வா என்று என்னால் கூப்பிட முடிந்தது.

நீ வரவில்லை. அம்மாவுக்கு விருப்பம் இல்லாமல் உன்னைப் பண்ணிக் கொண்டால் என்னால் சந்தோஷமாக இருக்க முடியாது என்று மறுத்துவிட்டாய். அது எவ்வளவு பெரிய உண்மை? அன்றைக்கு என்னை நான் சரியாக புரிந்து கொள்ளாவிட்டாலும் நீ மட்டும் சரியாக என்னைப் புரிந்து கொண்டு இருக்கிறாய். அதற்கும் பிறகும்கூட சீதாவுடன் நடந்த திருமணத்தை ஒரு தவறு என்றுதான் எண்ணி வந்தேன். சீதாவை விட்டுவிட்டு உன்னைப் பண்ணிக் கொண்டால் அந்தத் தவறைத் திருத்திக் கொண்டதாக ஆகிவிடும் என்று நினைத்துவிட்டேன். ஆனால் அது எவ்வளவு தவறு என்று இப்பொழுது எனக்குப் புரிகிறது.

இந்தூ! இப்பொழுது உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வைத்துக்கொள். என்ன நடக்கும் தெரியுமா? இந்திராவைக் காதலித்த வித்யாபதியை சீதா பண்ணிக் கொண்டாள் என்று உலகத்திற்குத் தெரியாது. சீதாவின் கணவனை இந்திரா மயக்கிவிட்டு கைப்பற்றி விட்டாள் என்ற பழியை உன்மீது சுமத்தும். இந்தத் திருமணத்தால் வேண்டாத பழியும், நிம்மதியின்மையும் தவிர வேறு எதுவும் இருக்காது. நான் வாழ்க்கையில் உனக்கு தர நினைத்தது இது இல்லை. இது நான் உனக்குச் செய்யும் அநியாயமே தவிர நியாயம் இல்லவே இல்லை.

அந்தப் பக்கம் சீதாவின் விஷயத்தைப் பற்றி யோசித்துப் பார்த்தால் என்னைக் கல்யாணம் செய்து கொண்டது சீதாவின் தவறு இல்லை. இப்போ நான் என் வழியைப் பார்த்துக்கொண்டு போனால் சீதாவின் கதி என்னவாகும்? ஆண் என்பதால் நான் இந்தக் கல்யாணத்திலிருந்து விடுபட்டு, உன்னைப் பண்ணிக் கொண்டு சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் சீதா அப்படிச் செய்ய முடியுமா?

கணவனால் கைவிடப்பட்ட பெண்ணை ஆதரித்து, இரக்கம் காட்டக் கூடிய சமுதாயமா நம்முடையது? இல்லை, இல்லவே இல்லை. அதாவது நான் செய்த தவறுக்கு சீதாவின் வாழ்க்கையை பலி கொடுக்கிறேன் என்று அர்த்தம். இந்த இரண்டு வருடங்களும் எனக்குத் தெரியாமலேயே சீதாவை துன்புறுத்தி வந்திருக்கிறேன். இந்தூ! உனக்குத் தெரியாது. அன்றைக்கு உன் வீட்டுக் கிரகப்பிவேசம் நடந்த அன்று நாம் இருவரும் நெருக்கமாக இருந்ததைப் பார்த்துவிட்ட சீதா, வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் எண்ணத்துடன் காரை வேண்டுமென்றே விபத்திற்குள்ளாக்கினாள். ஆனால் கடவுள் கிருபையால் சீதாவுக்கு எதுவும் ஆகவில்லை.

நான் என்ன செய்தேன்? சீதாவை சாவை நோக்கித் துரத்திக் கொண்டிருந்தேன். மை காட்! இந்த விஷயம் தெரிந்த பிறகு மனிதநேயம் இருக்கும் ஒருத்தனால் திரும்பவும் அந்தக் காரியத்தைப் பண்ண முடியுமா? முடியாது. பண்ணவும் மாட்டேன்.

சீதா அடிபட்ட பொழுது, ஜன்னி கண்ட நிலையில் என்னைப் பிடித்துக் கொண்டு “நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு இந்தத் தண்டனை கொடுத்தீங்க?” என்று உலுக்கி எடுத்தப் பொழுதுதான் என் கண்கள் திறந்து கொண்டன.

இத்தனை நாளும் நான் பிரமையில் இருந்தேன். என்னுடைய சுயநலத்தைப் பார்த்துக் கொண்டேனே தவிர சீதாவைப் பற்றி யோசித்துப் பார்க்கவில்லை. இந்தூ! இளமையின் ஆரம்பக் கட்டத்தில் மனிதனுக்கு காதல்தான் முக்கியம் என்று தொன்றும். பிறகு நாளடைவில் அனுபவம் ஏற்பட ஏற்பட வேதனை, சந்தோஷம், ஏமாற்றம் இவற்றையெல்லாம் விட வாழ்க்கைதான் முக்கியம் என்று தோன்றும். வாழ்க்கை என்றால் தன் சுகத்தை மட்டுமே தேடிக் கொள்வது இல்லை. கடமையை நிறைவேற்றுவது என்று புரியும். இதைத் தெரிந்து கொள்ளாதவன் மனதளவில் இன்னும் வளர்ச்சி அடையாதவனாகத்தான் இருப்பான்.

உன் பக்கத்திலிருந்து யோசித்துப் பார்த்தால், சீதாவைக் கல்யாணம் செய்து கொண்டதும் உன்னை விட்டு விலகிப் போகாமல் இருந்ததுதான் உனக்குச் செய்த அநியாயம் என்று தோன்றுகிறது. நான் இவ்வளவு நாளாக என்ன செய்து கொண்டிருந்தேன்? உன்னைக் கனவுக் கூண்டில் அடைத்து வைத்திருந்தேன். உன்னை விட்டு தொலைவிற்குப் போன பிறகும் உனக்கு அண்மையில் இருப்பது போல் பிரமையை ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். நீ என்னைக் காதலித்ததன் விளைவாக உனக்கு ஏராளமான பழிச்சொற்கள் வந்து சேர்ந்தன. உலகம் என்ன சொல்கிறது தெரியுமா? நீ குடியிருக்கும் அந்த வீட்டை நான் சீதாவின் பணத்தில் வாங்கி, உனக்கு அன்பளிப்பாக கொடுத்திருக்கிறேனாம். இப்படிப் பட்டவை எத்தனையோ? இந்தூ! நாம் யாரையாவது காதலித்தால், நம்மால் அவர்களுக்கு சுகம், சந்தோஷம், நிம்மதி கிடைக்க வேண்டும். அதைவிடுத்து அமைதியின்மை, வேதனை, வேண்டாத பழிச்சொற்கள் இவைகளைத் தருவது துரதிஷ்டம் இல்லையா. என்னால் உனக்கு இவைதானே கிடைத்தன, இதெல்லாம் என்னுடைய தவறுதான் என்று தோன்றுகிறது. இந்தூ! வாழ்க்கை ரொம்ப வேடிக்கையானது. யாரையோ கொண்டு வந்து நம்முடன் சேர்க்கும். நம்மவர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களை தொலை தூரத்திற்குத் தள்ளி விடுகிறது. நினைத்தும் பார்த்திராத கரைக்கு நம் வாழ்க்கையின் படகை கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறது. காதல் என்ற அனுபவத்தைப் பெற்ற ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு விதத்தில் இந்தப் போரட்டத்தைச் சந்திக்காமல் இருக்க முடியாது. பிரசாதுக்கு உன் முகவரியை நான்தான் கொடுத்தேன். நான் சரியான காரியத்தைத்தான் செய்துக் கொண்டிருக்கிறேன் என்ற நம்பிக்கையுடன் கொடுத்தேன். இந்தூ! வாழ்க்கையில் என்றுமே நீ தனிமையை உணரக் கூடாது என்பது என் விருப்பம். நீ என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் அந்த ஆண்டவனாலும் என்னைப் புரிந்து கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். சீதா பம்பாய்க்குப் போயிருக்கிறாள். அழைத்து வருவதற்காக கிளம்பிக் கொண்டிருக்கிறேன். இத்தனை நாளாக நான் வித்யாபதி என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். இல்லை, நான் சீதாவின் பதி, சீதாபதிதான்.”

பிரசாத் குளித்து விட்டுத் திரும்பி வந்தபோது இந்திரா அழுது கொண்டிருந்தாள். அவன் பதற்றமடைந்து அருகில் வந்தான். இந்திராவைப் பிடித்துக் கொண்டு “என்னவாச்சு?” என்று கேட்டான்.

இந்திரா கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள். “எனக்கு இங்கே மூச்சு முட்டுகிறது. காற்றோட்டம் இல்லாது போல் இருக்கு. என்னை எங்கேயாவது வெளியே அழைத்துக் கொண்டு போக முடியுமா?” என்று கேட்டாள்.

”ஓ.கே. ஒ.கே. வித் பிளெஷர்” என்றான் அவன் வியப்புடன் பார்த்துக்கொண்டே. உடை மாற்றிக் கொள்வதற்காக உள்ளே போனான்.

இந்திரா வித்யாபதி எழுதிய கடிதத்தைக் கிழித்துப் போடவில்லை. பேக்கில் வைத்துக் கொண்டாள். “வித்யா! நான் ஆவேசத்தில் படித்தேன். எனக்கு சரியாக புரியவில்லையோ என்னவோ? திரும்பவும் படிக்க வேண்டும். அது எனக்குப் புரிந்த அன்று, அதிலிருக்கும் ஒவ்வொரு எழுத்தும் உண்மைதான் என்று உணர்ந்த அன்று, அதைக் கிழித்துப் போட்டு விடுவேன். அந்த நாள் என் வாழ்க்கையில் வருமோ வராதோ அந்தக் கடவுளுக்குத்தான் தெரிய வேண்டும்.” கண்களைத் துடைத்துக் கொண்டே நினைத்துக் கொண்டாள்.

நிறைவடைந்தது.

– பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனராணி அவர்களின் படைப்பு “Sithapathi” தமிழில் “சீதா(வின்)பதி” என்ற தலைப்பில்.

– சீதா(வின்)பதி (நாவல்), தெலுங்கு: யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில்: கௌரி கிருபானந்தன், முதற்பதிப்பு: 2015, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *