கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 6,399 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கொழுந்துமடுவத்தின் முன்னால் பகல் கொழுந்து நிறுப்பதற்காகப் பெண்கள் வரிசையாக நின்றனர். கனத்துக் கொண்டிருந்த கொழுந்துக் கூடையை நிலத்தில் இறக்கி வைத்துவிட்டுத் தலையிலே கட்டியிருந்த கொங்காணியை அவிழ்த்து நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டாள் பார்வதி. பதினைந்தாம் நம்பர் பணிய மலையிலிருந்து கொழுந்துக் கூடையுடன் மடுவத்தை நோக்கி ஏறிவந்ததால் மூச்சிரைத்தது. அவளைப்போலவே வரிசையில் நின்றிருந்த வேறுசில பெண்களும் நெற்றி வியர்வையைத் துடைத்தும் கொங்காணியால் விசிறியும் தம்மை ஆசுவாசப் படுத்திக் கொண்டனர்.

கொழுந்துமடுவத்தின் அருகேதான் தோட்டத்துப் பாடசாலை அமைந்திருக்கிறது. அங்குதான் பார்வதியின் மகன் கணேசு கல்வி கற்கிறான். பார்வதியைக் கண்டதும் ஓடிவந்து அவளது கைகளைப் பற்றிக்கொண்ட கணேசு, “ஆயா, சேரு ஒன்ன வரச் சொல்ராரு…..” எனப் பரபரத்தான்.

பார்வதி நிமிர்ந்து பார்த்தாள். தூரத்தில் பாடசாலை வாசலில் நின்றிருந்த ஆசிரியர் அறிமுகச் சிரிப்பை உதிர்த்தபடி தலையசைத்தார்.

வரிசையில் முன்னே நின்றிருந்தவளிடம் தனது கொழுந்துக் கூடையைக் கொடுத்து, “பூங்கோத, சேரு கூப்பிடுராரு….. என்னான்னு கேட்டிட்டு வந்துடுறேன்…. என் கொழுந்தையும் நிறுத்துப்புடு” எனக்கூறிய பார்வதி, கணேசுவையும் அழைத்துக்கொண்டு ஆசிரியரிடம் சென்றாள்.

“வாங்கம்மா, ஒங்க புள்ளையப்பத்திக் கதைக்கத்தான் கூப்பிட்டேன் ……. கணேசு இந்தத்தடவை ஐஞ்சாம் ஆண்டு ஸ்கொலஷிப் சோதனை எடுக்கப்போறான் தெரியுமில்ல.”

“ஆமாங்க.”

சிலநாட்களாகப் பாடசாலைக்குப் புறப்படும்போது பயிற்சிப் புத்தகமும் கொப்பி பென்சிலும் வேண்டுமெனக் கணேசு கேட்டுக் கொண்டே இருந்தான். சென்ற தடவை சம்பளப்பணம் வீட்டுச் செலவுக்கே போதாமல் போய்விட்டதால் அவற்றை வாங்கிக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. இப்போது அதைப் பற்றிக் கதைப்பதற்காகத்தான் வாத்தியார் கூப்பிட்டிருக்கிறார் என்பதை அவள் ஊகித்துக் கொண்டாள்.

“நானும் எத்தனையோ தடவை சொல்லிப்பாத்திட்டேன். இவன் கொப்பி, பென்சில் இல்லாமல்தான் ஸ்கூலுக்கு வாறான். கணேசோட அப்பா கந்தையாகிட்டையும் கூப்பிட்டுச் சொன்னேன். தாய் தகப்பனுக்குப் பிள்ளமேல அக்கறை இல்லேன்னா நாங்க என்ன செய்யிறது?”

ஆசிரியர் சொன்ன வார்த்தைகள் பார்வதிக்குப் பெரிதும் சங்கடத்தை ஏற்படுத்தின. அவளது கணவன் இதுவரை இந்த விடயத்தைப்பற்றி அவளிடம் கூறாமல் விட்டதை நினைத்தபோது அவளுக்குக் கணவன் மேல் எரிச்சலாகவும் இருந்தது.

“ஆமாங்க, அவரும் சொன்னாருங்க…… ஆனா போனமாசம் சம்பளம் கொறைவுங்க. அவருக்கு அடிக்கடி வயித்துவலி வந்துறுது….. ஒழுங்கா வேலைக்குப் போறதில்லீங்க. எஞ்சம்பளத்திலதான் குடும்பமே ஓடுதுங்க…. அதுதான் கொஞ்சம் செரமமாய்ப் போச்சுங்க……”

“அது சரியம்மா, உங்க கஷ்டம் எனக்கு விளங்குது. நீங்க கஷ்டப்படுறமாதிரி உங்க பிள்ளையும் படக்கூடாதேன்னுதான் நான் சொல்றேன். அவனை எப்படியாவது படிக்கவைக்கிற வழியைப் பாருங்க. கணேசு ரொம்பக் கெட்டிக்காரன். நீங்க கொஞ்சம் அக்கறைப்பட்டா அவனை முன்னுக்குக் கொண்டு வந்திடலாம்.”

“சரிங்க, எப்புடியாவது எல்லாத்தையும் வாங்கித் தந்திடுறேன்….. அவனைப் படிக்கவைச்சு முன்னுக்குக் கொண்டாறது ஒங்க பொறுப்புங்க …….” எனக்கூறிக் கைகூப்பிவிட்டு அவரிடம் விடைபெற்றுக் கொண்டாள் பார்வதி.

கணவனை நினைத்தபோது பார்வதிக்கு எரிச்சலாக இருந்தது. கொஞ்சங்கூட குடும்பத்தில் அக்கறையில்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்குவரும் கணவன்மேல் அவளுக்குக் கோபமும் அதிகமாகியது.

இப்போது எங்கே பணத்திற்குப் போவது? டோபி லயத்துப் பெருமாயியிடம் கேட்டுப்பார்க்கலாமா எனப் பார்வதியின் சிந்தனை ஓடியது. அவசரத் தேவைகளுக்கெல்லாம் அவள்தான் பலதடவை உதவியிருக்கிறாள். ஆனாலும் முன்னர் அவளிடம் வாங்கிய கடன் அப்படியே இருக்கிறது. இப்போது மீண்டும் போய்க் கேட்பதற்குப் பார்வதியின் மனம் ஒப்பவில்லை.

பார்வதிக்கு இப்போது சீட்டரிசி ஞாபகந்தான் வந்தது. பணத்திற்கு ஒருவழி தேடுவதென்றால் எப்படியாவது இந்தமாதச் சீட்டரிசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பூங்கோதையிடம் கொழுந்துக் கூடையை வாங்கிக் கொண்டு நேராகப் பணிய லயத்தை நோக்கி நடந்தாள் பார்வதி. அங்குதான் சீட்டரிசிச் சிகப்பாயியின் வீடு இருக்கிறது. சிகப்பாயி பல வருடங்களாகச் சீட்டுப்பிடித்து வருகிறாள். தோட்டத்துப் பெண்களிடையே அவள் பிடிக்கும் சீட்டுகள் பிரபல்யம் வாய்ந்தவை. அரிசிச்சீட்டு, தூள்ச்சீட்டு, மாவுச்சீட்டு என வகை வகையாகச் சீட்டுகள் பிடித்தாலும் அவள் பிடிக்கும் அரிசிச் சீட்டுக்குதான் கிராக்கி அதிகம். அதனாலேதான் ‘சீட்டரிசிச் சிகப்பாயி’யென அடைமொழியும் அவளது பெயருடன் ஒட்டிக் கொண்டுவிட்டது.

பெண்களில் சிலர் தமது கணவன்மார்களுக்குத் தெரியாமல் சீட்டுப் பிடித்து சிறுதேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் அரிசிச் சீட்டுத்தான் அனேகமான சந்தர்ப்பங்களில் கைகொடுத்து உதவுகிறது.

பார்வதி சிகப்பாயியின் வீட்டை அடைந்தபோது வேலை முடிந்து வந்த சிகப்பாயி ‘ஊத்துப்பீலி’ யில் கால்கை கழுவிக் கொண்டிருந்தாள்.

“என்ன பார்வதி, இந்த நேரத்தில வந்திருக்கே…. ஏதும் அவசரமா?”

“ஆமாங்கக்கா, ஒங்கிட்டத்தான் வந்திருக்கேன்……. முக்கியமான சங்கதி…….. இந்தப்பயணம் சீட்டரிசியை எனக்குத் தந்து ஒதவணும்…… கணேசுவுக்கு அவசரமாகக் கொப்பி புஸ்தகம் வாங்கவேண்டிருக்கு… .”

“என்ன பார்வதி ஒனக்குத் தெரியாதா, இந்தப்பயணம் செல்லாயிக்குத்தான் சீட்டு. நேத்துக்கூட அவ கேட்டா. சீட்டரிசியை வித்துத்தான் புள்ளைக்கு மூக்குத்தி செய்யணுமுன்னு சொல்லிக் கிட்டிருந்தா…..”

சீட்டுப் போடுவதற்கு ஆட்கள் சேர்ந்ததும் துண்டெழுதிப் போட்டு குலுக்கல் முறையில் யார்யாருக்கு எத்தனையாவது சீட்டு என்பதைத் தெரிவுசெய்து முதலிலேயே சிகப்பாயி சொல்லிவிடுவாள். சீட்டுப் பிடிக்கும் சிகப்பாயிக்குத்தான் முதற்சீட்டு. சீட்டுப்போடுபவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு கொத்து அரிசியைச் சிகப்பாயியிடம் அளந்து கொடுத்துவிட வேண்டும். அப்படி அளந்து கொடுக்கும்போது மேலதிகமாக ஒருபிடி அரிசியையும் சேர்த்துத்தான் கொடுப்பது வழக்கம். மாதமுடிவில் சீட்டரிசியை உரியவருக்கு அளந்து கொடுத்துவிட்டு மேலதிக அரிசியைச் சிகப்பாயி எடுத்துக் கொள்வாள்.

“அக்கா நீ நெனைச்சா எதுசரி செய்யலாந்தானே….. இந்தப் பயணம் எப்புடிச்சரி சீட்டரிசியை எனக்குத் தந்திடு…… இந்த நேரத்தில சீட்டரிசி தேவைக்கு ஒதவாட்டிப்போனா அதுல என்ன பெரயோசனம்? அவசரத்துக்கு ஒதவும் என்னுதானே அந்த மனுசனுக்குத் தெரியாம சீட்டுப் போடுறேன்.” பார்வதி கெஞ்சும் குரலில் கூறினாள்.

பார்வதிக்கு இரண்டாவது சீட்டுத்தான் குலுக்கலில் தெரிவானது. அந்த மாசத்தில் பூங்கோதையின் மகள் பெரியவளாகியதால் சடங்குசுத்திச் சமைச்சுப் போடுவதற்கு அந்த மாதச் சீட்டரிசியைத் தனக்குத் தரும்படி பூங்கோதை மன்றாடியதால் பார்வதி அந்தச் சீட்டை அவளுக்கு விட்டுக்கொடுத்தாள். பூங்கோதைக்கு கிடைக்கவிருந்த கடைசிச் சீட்டுத்தான் இப்போது பார்வதிக்குக் கிடைக்கும்.

சிகப்பாயி யோசித்தாள். செல்லாயியிடம் பேசி எப்படியாவது இந்த மாதச் சீட்டைப் பார்வதிக்கு வாங்கிக் கொடுத்து விடவேண்டும். பார்வதி நீண்ட காலமாக அவளிடந்தான் சீட்டுப் போடுகிறாள். ஆனாலும் ஒருபோதாவது இப்படிச் சீட்டரிசியை முன்னுக்குத் தந்துதவும்படி வேண்டியதில்லை. அவளுக்குத் திடீரென ஓர் எண்ணம் தோன்றியது. மாதக்கடைசியில் அவள் புதிதாகத் ‘தூள் சீட்டு’த் தொடங்க இருக்கிறாள். பார்வதியை அதில் சேர்த்துக்கொண்டால் முதல் சீட்டை அவளுக்குக் கொடுத்து உதவலாம்.

“ஏம் பார்வதி, அடுத்த கெழம புதுசா தூள் சீட்டு தொடங்கிறேன், அதில சேந்துக்கிறியா?; எனக்குக் கெடைக்கிற மொத சீட்டை ஒனக்குத் தந்துடுறேன்….. ஒனக்குச் செலவுக்கும் கூடுதலாப் பணம் கெடைக்கும்.”

மாதத்தில் ஒருதடவை ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் அவர்களது பாவனைக்கென ஒரு பைக்கற் தேயிலை தோட்டத்தில் வழங்கப்படுவதால் அதற்கு ‘லேபர் டஸ்ற்’ என்று பெயர். இந்த லேபர் டஸ்ற் தேயிலையில் பிடிக்கப்படும் சீட்டுத்தான் தூள் சீட்டு.

“எம் புருசனைப்பத்தி ஒனக்குத் தெரியாதாக்கா… அந்த ஆளு, தூள் கெடைச்ச ஒடனேயே அதில ஒரு பக்கற் தூளை எடுத்துக்கிட்டுப்போய் லயத்துக் கடையில குடுத்து சாராயம் குடிப்பது… மாசக்கடைசியில சாயத்தண்ணி குடிக்கவே நாலு வீட்டில ஓசி கேட்டுப் பல்லு இளிக்கவேண்டியிருக்கு….. இந்த லச்சனத்தில நான் எங்க தூள் சீட்டுப் பிடிக்கிறது….” என்றாள் பார்வதி ஆதங்கத்துடன்.

முதல்நாள் நடுக்காம்பரா அருக்காணியிடம் கொஞ்சம் தேயிலைத் தூள் கேட்டபோது அவள் கூறிய வார்த்தைகள் பார்வதியின் நெஞ்சில் உறைத்தன. “தோட்டத்தில குடுக்கிற தூளை சாராயக்கடையில குடுத்து தண்ணியப் போட்டுக்கிட்டு ஓம்புருசன் லயத்தல பண்ணிற அட்டகாசம் தாங்க முடியல…. இதிலவேற ஓசித்தூள் கேட்டு எங்களுக்குக் கரச்சல்.” பார்வதிக்கு அவமானமாக இருந்தது ; திரும்பிவிட்டாள்.

“சரி பார்வதி, நீ யோசிக்காமப் போ….. புதிசா போடுற தூள் சீட்டைச் செல்லாயிக்குக் குடுத்துப் புட்டு ஒனக்கு இந்த மாசச் சீட்டரிசியைத் தந்திடுறேன்….. ஓம் புள்ளையைப் படிக்க வைக்க நீ கேக்கிறப்போ மறுக்கமுடியுமா……” என்றாள் சிகப்பாயி.

பார்வதிக்கு அவளது பேச்சு பால் வார்த்ததுபோல் இருந்தது. சிகப்பாயி ஒரு பேச்சுச் சொன்னால் ஒரு நாளும் மாறமாட்டாள்,

அரிசி சீட்டுப் போடுவதற்குப் பார்வதி வழக்கமாக ஒரு முறையைக் கையாண்டு வருகிறாள். ஒவ்வொரு நாளும் உலையில் அரிசி போடும்போது ஒருபிடி அரிசியை எடுத்துத் தனியாக ஒரு சட்டியில போட்டு வைப்பாள். கிழமை முடிவில் ஒரு கொத்து அரிசி தேறிவிடும். அதையே அவள் சீட்டரிசியாகச் சிகப்பாயியிடம் கொடுத்துவிடுவாள். அவள் மட்டுமல்ல தோட்டத்துப் பெண்களில் அனேகமானோர் இந்த முறையிலேதான் சீட்டரிசி போடுவது வழக்கம்.

சமையலுக்கு வேண்டிய சாமான்களைச் செலவுப் பெட்டியிலே தான் வைப்பார்கள். ஆனாலும் சீட்டரிசிக்காகச் சேர்த்து வைக்கும் பிடியரிசியைக் கணவனது கண்ணிலே பட்டுவிடக் கூடாதென்பதற்காகச் செலவுப் பெட்டியின் அடியிலே மறைத்து வைப்பாள் பார்வதி. கணவனுக்குப் பணம் தேவைப்படும்போது செலவுப் பெட்டியைத்தான் துழாவுவான் என்பது அவளுக்குத் தெரியும்.

பிடியரிசி எடுத்துவிடுவதால் பல நாட்கள் அரைவயிறும் பட்டினியுமாகப் பார்வதி காலங் கழித்திருக்கிறாள். கணவனும் அவளது மகனும் சாப்பிட்டதுபோக மீதியைத்தான் பார்வதி சாப்பிடுவாள். சோறு மீதப்படாத வேளைகளில் வெறும் சாயத்தண்ணீரைமட்டும் குடித்து விட்டுப் படுக்கையில் முடங்கிக் கொள்வாள். சில நாட்களில் வடித்த கஞ்சியில் உப்பைப் போட்டுக் குடித்துவிட்டுப் படுப்பதுமுண்டு.

போன மாதத்தில் ஒருநாள் மட்டக்கொழுந்து மலையில் கொழுந்தெடுத்துக் கொண்டிருந்தபோது பார்வதிக்குத் தலை சுற்றியது. தேயிலைச் செடிகளை இருகைகளாலும் பற்றியபடி நின்றவள் சிறிதுநேரத்தில் மயங்கிச் சாய்ந்துவிட்டாள். மயக்கம் தெளிந்தபோது, கங்காணி அவளைத் தோட்டத்து ஆஸ்பத்திரிக்குக் கொழுந்து லொறியில் அனுப்பிவைத்தார். ஆனாலும் அவள் அங்கு செல்லாமல் லயத்துக்குத் திரும்பிவிட்டாள். அவளுக்கு மட்டுந்தான் தெரியும், அது பசிமயக்கம் என்று.

கணேசுவின் பள்ளிக்கூட உடுப்பு சேறும் சகதியுமாய் இருந்தது. பாடசாலையில் இனாமாகக் கொடுத்த சீருடைத் துணியில் தைத்த அந்த ஒருசோடி உடுப்பையே கணேசு தினமும் பாடசாலைக்கு உடுத்திச் செல்வான். அதைத் துவைத்து இஸ்தோப்பில் அடுப்புக்கு நேராக மேலேசெருகியிருந்த மட்டக் கம்பிலே கொழுவி உலரவிட்டுக் கொண்டிருந்தாள் பார்வதி. இப்படிக் காயவிடும்போது புகைக்காவி படிந்து வெள்ளைநிற சேட் கருமையடைந்துவிடும்.

“சேட் ஒரே புகைபுடிச்சுக் கிடக்குன்னு பொடியங்கள் நக்கல் அடிக்கிறாங்க ஆயி” எனப் பலதடவை கணேசு அவளிடம் கூறியிருக்கிறான்.

சீட்டரிசி கிடைத்ததும் அதனை விற்றுக்கிடைக்கும் பணத்தில் பயிற்சிப் புத்தகமும் கொப்பி பென்சிலும் வாங்கியபின் மீதிப்பணத்தில் கணேசுவுக்கு ஒரு சோடி கால்சட்டை சேட் தைத்துவிடவேண்டும்.

பார்வதி இரவுச் சாப்பாட்டைச் சமைத்து முடித்த வேளையில் அவளது கணவன் கந்தையா தள்ளாடியபடி உள்ளே நுழைந்தான். அவன் வந்த கோலத்தைப் பார்த்தபோது பார்வதிக்கு ஆத்திரம் பொங்கியது.

“தெனமும் இப்புடி மூக்குமுட்டக் குடிச்சு அநியாயம் பண்ணுறியே ஒனக்கு அறிவிருக்கா ?”

“என்னடி வந்ததும் வராததுமா தொணதொணங்கிறே….” கந்தையா அவளைப் பார்த்து முறைத்தான்.

“நான் ஏதாவது சொல்ல வந்தேன்ன, தொணதொணக்கிறேன்னு என் வாய அடக்கிப்புடுவே…… இன்னிக்கு வாத்தியாரு என்ன சொன்னாரு தெரியுமா…… நம்ம கணேசுவுக்குக் கொப்பி பொஸ்தகம் வாங்கிக் குடுக்கச் சொல்லி போனகெழமையே ஒன்னைக் கூப்பிட்டுச் சொன்னாராம் ; கவனிச்சியா? ”

“ஆமாடி, வாத்தியாரு நம்மளைக் கண்டா ஏதாவது சொல்லத்தான் செய்வாரு. அவர் சொன்னபடியெல்லாம் வாங்கிக் கொடுக்க எந்த நேரமும் நம்ம கையில மடியில காசிருக்கா? ”

“நாளு தவறாமக் குடிக்கிறதுக்கு மட்டும் காசிருக்காக்கும்.”

“என்னடி சொன்னே….?” என ஆத்திரத்துடன் அவளை நோக்கிப் பாய்ந்த கந்தையா, எட்டி அவளது வயிற்றில் உதைத்தான். “குட்டி போட்ட நாயி மாதிரி…… எந்த நாளும் ஒங்கிட்டக் கரச்சலா இருக்கு… சும்மா வளவளன்னு கத்திக்கிட்டு…..” அவனது கோபம் தணியவில்லை.

“ஐயோ” என அலறியபடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு நிலத்திலே குந்தினாள் பார்வதி.

இன்று சாராயக் கடையில் அவனுக்கு நேர்ந்த அவமானம் அவனை இப்போது நிதானமிழக்க வைத்துவிட்டது. அவன் எப்போதும் ஸ்டோர் லயத்து வெள்ளையன் கடையிலேதான் சாராயம் குடிப்பான். வெள்ளையனின் பலசரக்குக்கடை ஸ்டோர் லயத்தில் இருக்கிறது. பல சரக்குக் கடையிலிருந்து கிடைக்கும் வருமானத்தைவிட இரகசியமாகச் செய்யும் சாராய வியாபாரத்திலேதான் அவனுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. தினமும் மாலை வேளைகளில் பலர் அவனது கடையில் சாராயம் குடிப்பார்கள். தெரிந்தவர்களுக்குக் கடனுக்கும் சாராயம் கொடுத்துவிட்டுச் சம்பள நாட்களில் அந்தப் பணத்தை வசூலித்து விடுவான் வெள்ளையன். அன்று கந்தையா சாராயம் குடிக்கச் சென்ற போது, வெள்ளையன் சற்றுக் காரசாரமாகவே பேசினான்.

“கந்தையா கடன் கூடிப்போச்சுன்னு நேத்தே சொன்னேன். எந்த நாளும் கடன் குடுக்கேலாது….. நான் இன்னிக்குக் கெடைக்கிற சல்லிய வச்சுத்தான் நாளைக்குச் சாமான் வாங்கிக்கிட்டு வரணும். அதனால கோவிச்சுக்காம சல்லியைக் கொணந்து கட்டிட்டு அப்புறமா வா…”

“என்னங்கண்ணே, ஒங்க சல்லிய நான் எப்பவாவது கொடுக்காம வுட்டிருக்கேனா…. சம்பளத்துக்கு முந்தியே கொணந்து தந்திறேன். இன்னிக்கு மட்டும் ஒரு காப்போத்தல் தாங்க…. ”

“அதெல்லாம் முடியாதப்பா…. நேத்தே சொன்னேன்தானே இன்னிக்கு சல்லியில்லாம வரவேணாமுன்னு ; சும்மா கரச்சல் பண்ணாதப்பா.”

“என்ன முடியாதுங்கிறே, எப்பசரி நான் கடன் கொடுக்காம வுட்டிருக்கேனா… போனமாசங்கூட சல்லிகட்டேலாம வீட்டில இருந்த லெச்சுமி விளக்கைக் கொண்டாந்து குடுத்து என் கடனைத் தீர்க்கலியா… அநியாயமாத்தானே அந்த விளக்கைக் கொறஞ்ச வெலைக்கு வாங்கினே….”

“இந்தா தேவையில்லாத பேச்சுப்பேசாத… எனக்கு கோவம் வந்துச்சுன்னா நடக்கிறதே வேற” என்றான் வெள்ளையன் சினத்துடன்.

“என்ன செஞ்சுபுடுவே…. நீ கள்ளத்தனமா லயத்தில சாராயம் விக்கிறதப் பொலிசுக்குச் சொன்னேன்னா அப்புறம் நீ றிமாண்டிலதான் கெடக்கணும்.”

“இந்தா கந்தையா வீண் பேச்செல்லாம் வேணாம்…. இன்னிக்கு மட்டும் தாறேன். நாளைக்குச் சல்லியில்லாம வராத” எனக்கூறி கால்போத்தல் சாராயத்தை ஊற்றிவந்து கந்தையாவிடம் கொடுத்தான் வெள்ளையன்.

மூலையில் குடித்துக் கொண்டிருந்த கங்காணி ஒருவர் “என்ன கந்தையா நம்மவூட்டுக் கௌரவத்தைக் காப்பாத்தணுமில்லியா. இந்த மாதிரி சொல்லுக்கு இடம் வைக்கக்கூடாது….. நாளைக்கே கொண்டாந்து அந்தச் சல்லியை வீசிப்புடு…. அப்பதான் நமக்கும் கௌரவம்” எனத் தடுமாற்றத்துடன் கூறினார்.

“கங்காணியாரே, நான் வழுவட்டைத்தனமா நடந்துக்கவே மாட்டேன். கையில சல்லியிருந்தா ஒடனேயே வீசிப்புட மாட்டேனா?”

“யாவாரம் கெட்டுப்போகும் கந்தையா ; சும்மா சும்மா சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டிருக்காத, நேரத்தோட வீட்டுக்குப்போ…. வெளிச்சம் இருக்குத்தானே……”

வெள்ளையன் இப்படிக் கூறியபோது, அவன் தன்னை வெளியே விரட்டுவது போன்ற உணர்வுதான் கந்தையாவுக்கு ஏற்பட்டது. தள்ளாடியபடியே வீட்டுக்கு வந்தான்.

வெள்ளையன் மேல் ஏற்பட்ட கோபத்தை இப்போது பார்வதியின் மேல்தான் தீர்க்க முடிந்தது கந்தையாவுக்கு.

அடிவயிற்றைப் பிடித்தபடி சிறிது நேரம் குந்தியிருந்த பார்வதி ஆவேசமாக எழுந்தாள்.

மூலையில் நித்திரையில் ஆழ்ந்திருந்த கணேசுவை உசுப்பி, “அடே கணேசு எந்திரடா….. வா இப்பவே ஒன் தாத்தா வீட்டுக்குப் போவோம்…. இந்தப்பாவி மனுசனோட வாழ ஏலாது… எந்த நாளும் குடிச்சுப்புட்டு வந்து அடியும் ஒதையுந்தான்….” பார்வதியின் குரலில் உறுதி தொனித்தது.

“என்னடி சொன்னே… என்னைவுட்டுப் போயிடுவியா நீ?”

“ஆமா, நான் இப்பவே போறேன். என் ஆயி அப்பன் குடுத்த நகைநட்டு சாமானத்தையெல்லாம் அழிச்சிட்டே…. வீடே மொட்டையாப் போச்சு…. இனி நான் மட்டுந்தான் கொறையாயிருக்கு…. ஒன்கூட இருந்தேன்னா என் புள்ளையோட படிப்பும் நாசமாப்போம்.”

பார்வதியின் குரலில் இருந்த உறுதி கந்தையாவைத் திகைக்க வைத்தது. அவள் இப்படி ஒருபோதும் அவனைப் பிரிந்துசெல்ல முடிவு செய்ததில்லை.

கந்தையா பார்வதியின் அருகே சென்று அவளது கைகளைப் பற்றினான்.

“பார்வதி, என்ன வுட்டுட்டுப் போயிடாதெடி” அவனது குரல் நடுங்கியது.

“வுடுய்யா கையை… நான் சொன்னாச் சொன்னதுதான்…” பார்வதி அவனது பிடியிலிருந்து கைகளை விடுவிக்கத் திமிறினாள்.

“பார்வதி ஒம்மேல சத்தியமாச் சொல்றேன். இனிமே நான் குடிக்கவேமாட்டேன். நீ மட்டும் என்னை வுட்டுப் போயிடாத” அவன் அவளது தலையில் கையைவைத்துச் சத்தியஞ் செய்தான். அவனது குரல் கரகரத்தது; கண்கள் கலங்கின.

“கையை வுடுங்கன்னா வுடுங்க… எத்தன தரம் இப்புடிச் சத்தியம் பண்ணியிருக்கீங்க…. ஒங்க சத்தியத்தை நான் நம்பவே மாட்டேன்.”

“பார்வதி, கடைசியாச் சொல்றேன்.. இனிமே நான் குடிச்சிட்டு வந்தேன்னா நீ என்னை வுட்டுப்போயிடு. இப்ப போவேணாம்.” அவன் கெஞ்சினான்.

படுக்கையில் இருந்து எழுந்த கணேசு கண்ணைக் கசக்கிக் கொண்டு திகைப்புடன் தாயையும் தந்தையையும் மாறிமாறிப் பார்த்தபடி இருந்தான்.

“சரி சரி கையை வுடுங்க, சாப்பாடு போடுறேன்… சாப்பிட்டுப் படுங்க.”

பார்வதி அவனுக்கும் கணேசுவுக்கும் சாப்பாட்டுக் கோப்பையில் சோற்றைப் போட்டுக் கொடுத்தாள்.

கந்தையாவினால் சாப்பிட முடியவில்லை. சிறிது உணவை அருந்திவிட்டுக் கையைக் கழுவினான். காதில் செருகியிருந்த பீடியை எடுத்து அடுப்பில் கிடந்த கொள்ளிக்கட்டையில் பற்றவைத்துக் கொண்டே சாக்கை விரித்து மூலையில் சாய்ந்து கொண்டான்.

பார்வதி எதுவுமே பேசவில்லை. அவளது மௌனம் அவனை வருத்தியது.

“என்ன பார்வதி மூஞ்சியை உம்முன்னு வைச்சுக்கிட்டு இருக்கே.. ஏதோ குடிமயக்கத்தில் காலை நீட்டிப்புட்டேன். அத மனசுல வச்சுக்காத.. இனிமே சத்தியமா ஒம்மேல கையை வைக்க மாட்டேன்.”

இதுவரை நேரமும் அடுப்பின் முன்னால் குந்தியிருந்த பார்வதி இப்போது விம்மிவிம்மி அழுதாள்.

அவன் எழுந்து சென்று ஆதரவாக அவளது தலையைத் தடவிவிட்டான்.

அவள் விம்மலிடையே கூறினாள். “ஏன் இந்தக் குடியை வுடமாட்டேங்கிறீங்க? இங்கபாருங்க, தொங்கல் காம்பராவில இருக்கிற கருப்பாயி கம்முனாட்டியா இருந்துக்கிட்டே புள்ளையைப் படிக்கவைச்சு இன்னிக்கு மாஸ்டர் ஆக்கலியா… நீங்க இந்தக் குடிய மட்டும் வுட்டுப்புட்டீங்கன்னா நமக்கு ஒரு கஸ்டமும் இருக்காது…. நமக்கு இருக்கிறதே ஒரு புள்ளதான். அவனையும் நல்லாப் படிக்க வைக்கலாம்.”

“சரி பார்வதி, நான்தான் குடிக்கமாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டேனே… இன்னும் நம்பிக்கையில்லையா….. சரி சரி எந்திரு, சாப்பிட்டுப் படுத்துக்க….”

கந்தையா படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். என்றுமில்லாதவாறு அவனது உள்ளம் பதகளித்துக் கொண்டிருந்தது. பார்வதியுடன் இதுவரை காலமும் வாழ்ந்த வாழ்க்கையை அவன் எண்ணிப்பார்த்தான். புதுமணப்பெண்ணாக அவள் அவனிடம் வந்தபோது எவ்வளவு சீரும் சிறப்புடனும் வந்தாள். நகை நட்டும் பொருள்பண்டமுமாக அவள் கொண்டுவந்த எல்லாவற்றையும் அவன் குடித்துக் குடித்து அழித்துவிட்டான். அவனுடன் வாழ்ந்த வாழ்க்கையில் அவள் கண்டதெல்லாம் வறுமையும் துன்பமும்தான். இதுவரை காலத்தில் அவள் தனக்காக எதையுமே அவனிடம் வேண்டியதில்லை. பிள்ளையின் முன்னேற்றத்துக்காக அவனைப் படிக்க வைப்பதற்காக இந்தப் பாழாய்ப்போன குடிப்பழக்கத்தைத்தான் விட்டுவிடும்படி தினந்தினம் வேண்டுகிறாள்.

அவன் எழுந்து சென்று மீண்டும் பீடி ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டான். பார்வதியும் நித்திரையின்றிப் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது.

* * * * *

சீட்டரிசியை வந்து பெற்றுக்கொள்ளும்படி சிகப்பாயி சொல்லியனுப்பியிருந்தாள்.

கொழுந்துக் காலமாதலால் ஞாயிற்றுக்கிழமையும் தோட்டத்தில் வேலை கொடுத்தார்கள். பகல்கொழுந்து நிறுத்து முடிந்ததும் பார்வதி சிகப்பாயியிடம் சென்றபோது அவள் சீட்டரிசியை அளந்து கொடுத்தாள். நாற்பது கொத்து அரிசியைச் சாக்குடன் தூக்கி முதுகிலே வைத்தபோது கொழுந்து நிறைந்த கூடையைப்போல் அது பெருஞ்சுமையாய்க் கனத்தது.

“ பார்வதி, சீட்டரிசியை லயத்துக்கடையில வித்தியென்னா அநியாய விலைக்குத்தான் எடுப்பாங்க…. டவுனில கொண்டு போய்க்கொடுத்தா நூறுரூபா சரி கூடக்கிடைக்கும்” எனப் புத்திமதி கூறினாள் சிகப்பாயி.

சீட்டரிசியை வீட்டுக்குக் கொண்டுவந்ததும் அதனை இஸ்தோப்பில் கோழி அடைக்கும் மூலையில் வைத்து கோழிக் கூடையால் மூடிவைத்தாள் பார்வதி. புருஷனுக்குத் தெரியாமல் அதனை விற்பதானால் அந்திக்கு வேலைவிட்டு வந்ததும் லயத்துக் கடையிலேதான் விற்கவேண்டும். அரிசியோடு டவுனுக்குப் புறப்பட்டுச் சென்றால் அது புருஷனுக்குத் தெரியவந்துவிடும்.

பகல் சாப்பாட்டை முடித்துக்கொண்டுவந்ததும் அவள் மீண்டும் வேலைக்குப் புறப்பட்டபோதுதான் கந்தையா கவ்வாத்து முடிந்து வீட்டுக்குத் திரும்பினான். நான்கைந்து நாட்களாக அவன் வெள்ளையனின் சாராயக் கடைப்பக்கம் போகாமல் இருப்பது பார்வதிக்குச் சிறிது ஆறுதலை அளித்தது. ஆனாலும் மாலை வேளைகளில் அவன் எங்கோ வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குப் பிந்தி வருவதுதான் அவளுக்குச் சந்தேகத்தைக் கொடுத்தது.

பார்வதிக்கு மலையில் வேலையோடவில்லை. அந்திக்கு அவள் புருஷன் வீட்டுக்குத் திரும்புமுன் சீட்டரிசியை எடுத்துச் சென்று விற்றுக் காசாக்கிவிடவேண்டும்.

அன்று பிந்தித்தான் அந்திக் கொழுந்து நிறுத்தார்கள். அவள் வீட்டுக்குத் திரும்பியபோது கணேசு லயத்தின் முன்னால் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

கொழுந்துக் கூடையை விறாந்தையில் இருந்த கொக்கியில் மாட்டிவிட்டு சீட்டரிசியை எடுப்பதற்காக உள்ளே சென்றாள் பார்வதி.

அங்கே அவள் கண்ட காட்சி…..

கோழிக் கூடை திறந்தபடி மூலையில் கிடந்தது. அவள் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சம்பாதித்த சீட்டரிசி மூடையோடு காணாமல் போய்விட்டது. பார்வதிக்கு அடிவயிற்றைக் கலக்கியது. தலை சுற்றியது. “ஐயோ” என அலறியபடி நிலத்திலே குந்தினாள்.

பார்வதியின் மனதில் வைராக்கியம் புகுந்துகொண்டது. அவள் தனது வாழ்க்கைப் பாதையைச் சீராக்க வேண்டிய காலம் வந்துவிட்டதெனத் திடமாக எண்ணினாள். அவளது உடைமையாக இருந்த இரண்டொரு துணிமணிகளையும் கணேசுவின் பாடசாலை உடுப்பையும் எடுத்துக் கொழுந்துக்கூடையில் போட்டுக் கொண்டாள்.

“வாடா கணேசு….. பொறப்படு….., இனி இந்த வீட்டில நாம இருக்கக்கூடாதடா….. ஒங்கப்பன் திருந்தவே மாட்டான். நீ இங்க இருந்தியென்னா ஒன் படிப்பும் நாசமாப்போம்…..” அவள் கணேசுவின் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

அப்போது அவசர அவசரமாக அங்கே வந்து சேர்ந்தான் கந்தையா.

“எங்க பொறப்பட்டுட்டே பார்வதி? குடிகாறன் திருந்தவே மாட்டான்னு நெனைச்சுத்தானே சீட்டரிசியைக் கோழிக் கூடையால மறைச்சுவச்சே…. என்மேல ஒனக்கு இன்னமும் நம்பிக்கை வரல்லியா? சீட்டரிசியை எடுத்து செலவுப் பெட்டிக் குள்ள வச்சிருக்கேன்…. நான் திருந்தியிட்டேன் பார்வதி….. போய்ப்பாரு.”

பார்வதியின் உள்ளம் சந்தோஷத்தால் விம்மியது. அவள் தனது செயலுக்காக இப்போது பெரிதும் வெட்கப்பட்டாள்.

“இல்லீங்க… இப்ப ஒங்கமேல எனக்கு நம்பிக்கை வந்துருச்சுங்க…” எனக்கூறிய பார்வதி “நீங்களே அந்தச் சீட்டரிசியைக் கொண்டுபோய் செலவுக் கடையில வித்து சல்லிய வாங்கிக்கிட்டு வாங்க… நாளைக்கு கணேசுவுக்கு வேண்டிய கொப்பி புஸ்தகம் வாங்கிக்குவோம்” என்றாள்.

“அதெல்லாம் வேணாம் பார்வதி; நான் அந்தி அந்திக்கு நாட்டில போயி கைக்காசுக்கு வேலசெஞ்சு நாலுநாள் சம்பளம் வாங்கியிருக்கேன்… அதில கணேசுவுக்கு புஸ்தகம் வாங்கலாம்….” என்றவன் மடியில் இருந்த பணநோட்டுகளை எடுத்து அவளது கைகளில் திணித்தான்.

பார்வதி மெய்மறந்தவளாய் “என்வூட்டு ராசால்ல….” எனக்கூறி அவனைக் கட்டிக்கொண்டு நெஞ்சில் முகம் புதைத்தாள்.

அவர்களது செலவுப் பெட்டியை சீட்டரிசி நிறைத்திருந்தது.

– வீரகேசரி 1997

– அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், முதற் பதிப்பு: மே 1998, மல்லிகைப் பந்தல் வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *