சில பதற்றங்களும் பாறாங்கற்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 19, 2023
பார்வையிட்டோர்: 1,986 
 
 

“ஜெயந்தி…. உனக்கு ஃபோன்” ராம்மோகன் சொன்ன போது ஜெயந்திக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் அலுவலகத்திற்குள் நுழைந்திருக்கிறாள். ஆடிட்டிங் என்று ஒரே பரபரப்பு! யாராக இருக்கும்?

“ஹலோ நான் ஜெயந்தி பேசறேன்.”

“நான் பார்வதி பேசறேங்க… உங்க சுமித்ரா வீட்டுக்குப் பக்கத்து வீடு… அவங்களுக்கு வலி வந்திருக்கு. துடிக்கிறாங்க. அவங்க வீட்டில யாரும் கவனிக்க மாட்டேங்கறாங்க. நான்தான் இத்தனை நேரம் கூட இருந்தேன். என்ன பண்றதுன்னு தெரியலை. உங்களுக்கு ஃபோன் பண்றதுக்காக அவங்களைத் தனியா விட்டுட்டு வந்திருக்கேன். உடனே வர்றீங்களா?”

“அப்படியா… கொஞ்சம் கவனிச்சுக்கங்க…. இதோ வந்திடறேன்” – பதற்றமாய் ஃபோனை வைத்த ஜெயந்திக்கு என்றுமில்லாத படபடப்பு நெஞ்சில். கைகள் வியர்த்தன. எல்லோரும் இருந்தும் எங்கோ தன் சகோதரி அனாதையாய்த் துடிக்கும் காட்சி நெஞ்சைக் குமுற வைத்தது.

என்ன செய்வது இப்போது? அலுவலகத்தில் அத்தனை பேரும் கருமமே கண்ணாக, வரப்போகும் ஆடிட்டருக்காய் வேலை செய்து கொண்டிருந்தார்கள். இப்போது விடுப்பு கேட்பதென்பது மிகப் பெரிய பொறுப்பின்மை!

கதவைத் தட்டி அனுமதி பெற்று, உள்ளே சென்று மேனேஜரிடம் லேசான அவமானத்தில் குனிந்த தலையாய், “சார்… அக்கா வீட்டில இருந்து ஃபோன் வந்தது. அவங்களை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணனும். உடனே நான் போகணும்… – நிலைமையை சரியான பரிமாணத்தில் விளக்க முடியாத இயலாமையில் வரப்போகும் பதிலுக்காகக் காத்திருந்தாள்.

“மேடம், உங்களுக்கே நல்லாயிருக்கா? வேற ஏதாவது ஆல்டர்னேட்டிவ் அரேன்ஜ்மெண்ட் செய்துட்டு வந்திருக்கணும். இப்ப வந்து லீவு கேட்கிறீங்களே! கொஞ்சம் பொறுப்பா இருந்து என்கூட ஒத்துழைங்க ப்ளீஸ்…” மேனேஜர் கூறியதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அந்த நேரத்தில் ஜெயந்திக்கு அவ்வார்த்தைகள் நெருப்புக் கங்குகளாய்ச் சுட்டன.

“சார்… அக்கா வீட்டில கொஞ்சம் பிரச்சினை. நான் இப்ப போகாட்டி அவங்க உயிருக்கே ஆபத்து நேரிடலாம். போயிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்திடறேன், ப்ளீஸ் சார்…”

பத்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியில் வந்து கைப்பையை எடுத்துக் கொண்டு வாணியிடம் மட்டும் சொல்லிக் கொண்டு ஓட்டமாய்க் கீழே வந்து ஆட்டோவில் ஏறி, “ராம்நகர் ராமர் கோயில் வீதிக்குப் போங்க” என்றாள்.

“சுமிக்கா, உனக்கு ஏன் இத்தனைப் பாடு? எத்தனை அருமையாக வளர்ந்த பெண் நீ! வீட்டில் முதல் கல்யாணம். எத்தனை ஆடம்பரமாய்ச் செய்து கொடுத்தோம்! ஏன் இப்படி அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விட்டது உனக்கு. எப்படி மாறி விட்டாய்! பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வர அனுமதியில்லை என்று வருவதேயில்லை. வந்த சில தடவைகளிலும் விவரமாய் எதுவும் பேசவில்லை. மௌனமாகிப் போனாய்! பாழுங் கிணற்றில் தள்ளி விட்டோம் என்று எங்கள் மேல் கோபமா சுமிக்கா?”

ஜெயந்திக்கு உடனே தன் சகோதரியைப் பார்த்து, கைகளை இறுகப் பற்றி, அவள் தலையைத் தன் நெஞ்சில் சாய்த்து, “நான் வந்துட்டேன் சுமிக்கா! இனி எதுக்கும் கவலையில்லை” என்று சொல்ல வேண்டுமாய் இருந்தது.

வீட்டை அடைந்து உள்ளே ஓடிய போது அங்கு நிலவியிருந்த நிசப்தத்தில் வாசலிலேயே சுமித்ராவின் முனகல் கேட்டது. சுமியின் மாமனார் மாமியார் கணவன் மூவரும் முகத்தில் பாவம் ஏதும் காட்டாதிருக்க சபதம் செய்தவர்கள் போல ஹாலில் சோஃபா, தரை, சேர் என்று முறையே அமர்ந்திருந்தார்கள். ஒப்புக்குக்கூட ஒரு வார்த்தை பேசவில்லை.

ஜெயந்தியும் எதுவும் பேசாமல் உள்ளறைக்கு ஓடினாள்.

சுமித்ரா! இருபத்திரண்டு வருடங்கள் உடனிருந்து களித்து, ஒரே மலரின் இன்னொரு இதழாய்ச் சிரித்த சகோதரி… பூரண கர்ப்பிணி கட்டிலில் இடமும் வலமுமாய் அசைந்து வலுக்கட்டாயமாகத் தணித்துக் கொண்ட குரலில் “அம்மா அம்மா” என்று அனத்தியதை ஜெயந்தியால் சகிக்க முடியவில்லை.

“சுமிக்கா, ஜெயந்தி….! வந்துட்டேன் பாரு….ஒண்ணுமில்லை. இப்பவே போயிடலாம்…” அருகிலிருந்த பார்வதியிடம் “கொஞ்சம் பார்த்துக்கங்க, இதே போய் ஆட்டோவைக் கூட்டிக்கிட்டு வந்திடறேன்” என்றவாறு வெளியே ஓடி வந்தாள்.

ஹாலுக்கு வந்த போது தன் ஒவ்வொரு செய்கையும் கண்காணிக்கப் படுகிறது என்ற எண்ணம், சட்டென்று தன் கண்களைத் தாழ்த்திக் கொண்ட சிவராமனின் செய்கையிலிருந்து புரிந்தும், “இல்ல இதுவல்ல நேரம்…. சுமித்ரா, ஆட்டோ, ஆஸ்பத்திரி – இவை மட்டுமே இப்போதைய பிரதான எண்ணங்கள்.”

காலை பத்தரை மணிக்கு ஒரு அலுவலக நாளில் ஒரு முக்கியமான சாலை இப்படியா வெறிச்சென்றிருக்கும்? ஒரு ஆட்டோ கூட கண்ணில் படவில்லை. இந்த சாலைகள் சேரும் பிரதான சாலைக்குத்தான் போக வேண்டும்.

கஞ்சி போட்ட காட்டன் சேலையும், கவனித்து வாரப்பட்ட கூந்தலுமாய் ஒரு இளம் பெண்ணின் ஓட்டம் அந்த நேரத்திற்கு மிகவும் வித்தியாசமாய் இருந்தது.

ஓடினாள், சட்… கால் செருப்பு அறுந்து குப்புற விழ இருந்தவள் சமாளித்துக் கொண்டாள். அழகான ராஜஸ்தான் செருப்பு! “உன் பிறந்த நாளின் போது எதுவும் கொடுக்க முடியவில்லை. உனக்காகவே காத்திருந்து வாங்கிய செருப்பு இது.” பிறந்த நாள் பரிசாக செருப்பா? “இது பரிசு அல்ல…. உன் பாதையில் உன்னுடன் எப்போதும் வரத் தயாராக இருக்கும், உன்னைத் தாங்கக் காத்திருக்கும் என்கிற என் மனத்தின் அடையாளம்… ஆல்வேஸ் வித் யூ!” – சின்னத்துண்டுப் பேப்பருடன் போன மாதம் பிறந்த நாள் முடிந்து ஒரு வாரம் கழித்து வாணி கொடுத்த கலைவேலைப்பாடுகள் அமைந்த செருப்பு!

என்ன செய்வது? செருப்புத் தைப்பவரைத் தேடியலைய நேரமில்லை. எடுத்துப் போட்டுக் கொள்ளக் கைப்பை இல்லை. சமாளித்து, அறுந்து போன வாருடனேயே காலைச் சிறிது இழுத்து நடந்ததில், நடையை மாத்து உன் நடையை மாத்து” சாலைத் திருப்பத்தில் வேலையற்ற இளைஞர்களின் பாட்டு!

நகக்கண்ணில் ஊசி ஏற்றிய வேதனையாக செருப்புகளை சாலையோரத்தில் “சாரி வாணி” என்றபடி எறிந்து விட்டு வெற்றுக் கால்களில் ஆட்டோ பிடித்து மீண்டும் வீட்டுக்கு வந்த போது சுத்தமாய்ப் பதினைந்து நிமிடங்கள் கடந்திருந்ததுடன் சேலை கசங்கி, தலை கலைந்து, வியர்வையில் ப்ளவுஸ் முதுகுடன் ஒட்டி யாரோ ஒரு ஜெயந்தி போல் இருந்தாள்.

சுமித்ராவால் உடனே எழுந்திருக்க முடியவில்லை. பார்வதி மட்டும் இல்லாதிருந்தால் ஜெயந்தி மயக்கமடைந்திருப்பாள்.

சுமிக்கா… கொஞ்சம் முயற்சி பண்ணு. என் தோளைப் பிடிச்சுக்கோ… வா. வெளியே ஆட்டோ காத்திருக்கு… இதோ ஆஸ்பத்திரிக்குப் போயிடலாம், கொஞ்சம் தெம்பா இரு…” பார்வதியும் அவளுமாய் சுமித்ராவை நடத்தி வெளியே அழைத்து வந்து ஆட்டோவில் ஏற்றினார்கள்.

மாமியார்காரி சமையலறைக்குள் இருந்தாள். மாமனார் பேப்பர் படிக்க, சிவராமன் சட்டைகளை உதறி லாண்டரிக்கு அனுப்ப ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.

சுமித்ராவை ஆட்டோவில் அமர்த்திவிட்டு, விட்டுச் சென்ற கைப்பையை உள்ளறையிலிருந்து எடுத்துக் கொண்டு வெளியே வந்த ஜெயந்தி அப்போதும் ஏதும் பேசும் உத்தேசம் இல்லாதவளாகத்தான் இருந்தாள். ஆனால் மாமியார்க்காரி தொண்டையை செருமிக் கொண்டு “நல்லாத்தான் இருக்கு நாடகம்… ஓட்டமும் ஆட்டமும்! மகாராணிக்கு இதுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சலில்லை” என்றதில் ஜெயந்தி கடினமாய்ப் போட்டு வைத்திருந்த சங்கிலி அறுத்துக் கொண்டது. இத்தனை நேரம் நெஞ்சை அழுத்தியிருந்த வேதனை பட்டென்று வெடித்து லாவாக் குழம்பாய்க் கொந்தளித்தது.

“ஏன் அத்தை.. நீங்க எல்லாம் மனுஷங்கதானா? ஒரு பொண்ணு, யாரோ இல்லை… உங்க மருமக, நிறைமாதமாய் வயித்தில குழந்தையை வைச்சுக்கிட்டுத் துடிக்கிறாளே ஏதாவது கொஞ்சம் கொஞ்சம் இரக்கம் காட்டினீங்களா? உங்க காசு, பணம், விருப்பு, வெறுப்புக்கெல்லாம் இதுதானா நேரம்? நீங்களும் ஒரு பொம்பளைதானே? நீங்க மட்டும் என்ன உங்க மகனை சுகமா நிண்ணுகிட்டேவா பெத்தீங்க? என் ஜென்மத்தில் இந்த மாதிரி ஒரு குடும்பத்தைப் பார்த்ததில்லேப்பா… அன்போ, பாசமோ, கேவலம் கொஞ்சம் மனிதாபிமானம் கூட இல்லாத நீங்கள்லாம் மனுஷங்களே இல்லை… எங்கேயோ மலை மேலே பாறாங்கல்லா கிடக்க வேண்டியவங்க… தப்பிப் போய் இங்க பிறந்ததுமில்லாம ஒண்ணும் தெரியாத வெகுளிப் பெண்ணைக் கல்யாணம் பண்ணி சித்திரவதை வேற செய்திருக்கீங்க! உங்களையெல்லாம்… ஏன் மாமா, வெளிய உங்க பொண்டாட்டி துடிச்சுக்கிட்டிருக்கா நீங்க சட்டையை உதறிகிட்ட இருக்கீங்க… உங்களுக்கெல்லாம் எதுக்கு சட்டையும் வேட்டியும்? போயி…” என்றவளை “ஜெயந்தீ…” என்ற சுமித்ராவின் அலறல் சுயநினைவுக்குக் கொண்டு வந்தது.

வலுக்கட்டாயமாக நிறத்தப்பட்ட குமுறல் பௌதிக நிலைம விதிக்குட்பட்டது போல, “த்தூ…. பாறாங்கள் ஜென்மங்க” என்ற நிச்சயமான, நிதர்சனமான துப்பலுடன் முடிவு பெற்றது.

ஆட்டோவில் சுமித்ராவை சமாதானப்படுத்திக் கொண்டே, “ரிலாக்ஸ் ஜெயந்தி… அவசரப் படாதே” என்று தனக்குத்தானே தலையில் தட்டி ஆசுவாசப் படுத்திக் கொள்ள செய்த முயற்சி பாதி வெற்றியும் பாதி தோல்வியுமாய் இருந்தது.

ஜெயந்தி என்ற 23 வயது இளம் பெண்ணுக்கு ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் அருகாமையும் அவஸ்தையும் மிகவும் புதிது! பொய் வலி, பனிக்குடம் உடைதல், லேபர் பெய்ன் போன்ற வார்த்தைகளைப் பிறர் பேசக் கேட்டிருக்கிறாள். இப்போது சுமித்ராவுக்கு என்ன என்பதை அவளால் நிச்சயமாகத் தீர்மானிக்க முடியவில்லை. இதற்கு என்ன முதலுதவி, உடைகளைத் தளர்த்த வேண்டுமா? பாம்புக்கடிக்கு வாழைப்பட்டை வைத்தியத்தைத் தவிர வேறெதுவும் நினைவுக்கு வரவில்லை ஜெயந்திக்கு.

ஆஸ்பத்திரிக்குச் சென்று சுமித்ராவை அட்மிட் செய்யும் வரை ஜெயந்திக்கு சுயநினைவே இருக்கவில்லை. ஒருவேலை ஆட்டோவிலேயே குழந்தை பிறந்தால் குழந்தையைத் தாங்குவதா சுமித்ராவைக் கவனிப்பதா போன்ற அபத்தமான சிந்தனைகள் கூட வந்தன.

ஆஸ்பத்திரி வாசலில் சுமித்ராவை அழைத்து வந்த கோலத்தைப் பார்த்து ஆஸ்பத்திரி நர்ஸ் ஓர் அலறலுடன் “மை காட்… ஏம்மா நீங்கள்லாம் படிச்சவங்கதானே? அறிவிருக்கா? கொஞ்சம் முன்னாடியே கூட்டிகிட்டு வர வேண்டியது தானே?” என்ற போது ஜெயந்தி எதுவும் உறைக்கும் மனநிலையில் இல்லை.

சுமித்ராவை அட்மிட் செய்து, அப்பாவுக்கு ஃபோன் செய்து ஆஸ்பத்திரிக்கு வரவழைத்து, வீட்டிற்குப் போய் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி வேண்டிய பொருட்களுடன் அனுப்பி வைத்து, மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த முரளிக்கு விஷயத்தைச் சொல்லி அவனையும் அழைத்துக் கொண்டு மீண்டும் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு வந்த போது மணி ஒன்றரை ஆகியிருந்தது.

லேசான ஆசுவாசத்துடன் சகோதரனின் அண்மையும் கிடைக்க, மகா ஆத்திரத்துடனும், பொருமலுடனும் நடந்ததைச் சொல்லி முடித்த போது அழுகையில் கண்களும் கன்னமும் நனைந்தன.

சகோதரியின் கண்களில் நீர், இயல்பாக அந்த இள ரத்தத்தைத் தூண்டி விட “பிடிச்சு எகிற வேண்டியதுதானே ஜெயந்திக்கா? அந்த ராஜஸ்தான் செருப்பிலேயே நாலு அறை குடுத்திருக்க வேண்டியதுதானே? பாவம், வாணியக்காவுக்குத் தெரிஞ்சா எவ்வளவு சங்கடப்படுவாங்க?” என்ற முரளிக்கு,

“நிறைய கெட்ட கெட்ட வார்த்தையா சொல்லித் திட்டணும் போல இருந்து முரளி… ஆனா சொல்லத் தெரியலை. பாறாங்கல் ஜென்மங்கள்னு திட்டினேன். லிட்ரலா துப்பினேன். இவங்க கேட்டவுடனே வைர மோதிரம் தர்றதுக்கு நாம என்ன கோலாரையா குத்தகைக்கு விட்டிருக்கோம்?” என்றாள்.

“கேட்க வேண்டியதுதானே? ஏன்யா வைரமில்லாத பொண்டாட்டி வேண்டாம்… ஆனா அவகூட ” நாக்கைக் கடித்து அடக்கிக் கொண்டான்.

பேசிப்பேசி பொருமலைத் தீர்த்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தபோது சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. கொஞ்சம் நிம்மதியுடன் வாசலுக்கு வந்த ஜெயந்தியின் பார்வையில் ஒரு வயதான பெண்மணி ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் கைத்தாங்கலாக அழைத்து வரும் காட்சி தென்பட, “இதே இன்னொரு பாறாங்கல் குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டவள்” என்று நினைத்துக் கொண்டாள்.

குழந்தை பிறந்த சேதியை முரளி மூலம் (“உள்ளே போக மாட்டேன். வெளியவே நிண்ணுதான் சொல்லிட்டு வருவேன். ஏதாவது ஏடாகூடமா பேச்சு வந்தது, அந்தாளு தீர்ந்தான் ஆமா…”) சொல்லியனுப்பியும் யாரும் வரவில்லை.

இரண்டு மாதங்கள் சுமித்ரா குழந்தைக்குப் பாலோடு கண்ணீரையும் கலந்துதான் தந்தாள். அவள் பேசுவதே அபூர்வமாய் இருந்தது.

கருவுற்ற ஏழாம் மாதம், மெல்லிய கதம்பப் பூக்கள் சூட்டி, சீர்வரிசைகள் நிரம்பத் தந்து பட்டுப் புடவையில் தேவதைப் பெண்ணாய்ப் பார்த்து, கண்ணாடி வளையோசைகளே சின்னக் கண்ணனின் மழலையாய்க் கொண்டு, அடியொற்றி வைக்க ஆயிரம் பேர் அருகாமையில் பணிவிடை செய்ய லாலி பாடி, ஆரத்தி எடுத்திருந்தால் சுமித்ராவும் சிரித்திருப்பாள்.

சுமித்ராவின் புகுந்த வீட்டு வக்கிரம் வீட்டில் எல்லோரையும் தாக்க, இனி சுமித்ராவை அனுப்பவே வேண்டியதில்லை என்று முடிவு செய்தனர். தாய்மை நிலையில் ஓருயிர் இன்னோர் உயிரை வெளிப்படுத்தத் தயாராய் நின்ற நிலையை நாடகம் என்று வர்ணித்தவர்கள் கொலைக்கும் தயங்காதவர்கள் என்பது புரிந்து போக சுமித்ராவை மீண்டும் அங்கே அனுப்பி முழுசாய்ப் பலி கொடுக்கத் தயாராயில்லை.

ஒரு நாள் காலை அலுவலகத்திற்குக் கிளம்பிய போது, சுமித்ரா, “ஜெயந்தி, நான் எங்க வீட்டுக்குப் போகறதா முடிவு பண்ணிட்டேன்” என்ற போது, ஜெயந்திக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“என்னது, உங்க வீடா? அப்படி ஒண்ணு இருக்கா சுமிக்கா உனக்கு?”

“இல்லை ஜெயந்தி… நான் இப்படியே இருந்துட முடியுமா? எப்ப இருந்தாலும் நான் அங்க போக வேண்டியவதான். எத்தனை நாள் இங்க பாரமா இருக்க முடியும்? நீ வேற கல்யாணம் ஆகி போக வேண்டிய பொண்ணு. உனக்கு எதுவும் தெரியாது.”

“சுமிக்கா… ப்ளீஸ். யோசி.. நீ என் கூடப் பிறந்தவ. பாரம் இல்லை. அப்படியே உனக்குக் கஷ்டமா இருந்தா இங்கேயிருந்தே ஒரு வேலைக்குப் போய்கிட்டு வந்துகிட்டு இரு உன்னை இழக்கிற அளவுக்கு எங்களுக்கு நெஞ்சுரம் இல்லை.”

யார் வார்த்தையும் சுமித்ராவிடம் செல்லுபடி ஆகவில்லை. ஒரு நாள் காலையில் பிடிவாதமாய் குழந்தையுடன் டாக்ஸியில் ஏறிக்கொள்ள, முணுமுணுத்துக் கொண்டே முரளியும் கலவரமாய் அப்பாவும் கூடப் போனார்கள். வாசலில் அழுகையில் அம்மா.

நிலைப்படியில் சாய்ந்து நின்றிருந்த ஜெயந்தி டாக்சி கண்மறையும் வரை பார்த்திருந்தாள்.

“நோ கெல்பெர்னியா, சீசர் ஷல் கோ” – எத்தனை பய ஊசிகளுடன் கெல்பெர்னியா சீசரைப் போக வேண்டாமென்று தடுத்திருப்பாள்… சீசர் வீரன். ஆண்மகன். அதிகாரமாய் “போவேன்” என்றான். சுமித்ரா பெண், சாதாரணப் பெண். அடக்கமாய், ஆனால் பிடிவாதமாய் “போவேன்” என்றாள்.

ஜெயந்திக்கு அந்த ஒரு நாள் நினைவுக்கு வந்தது. எத்தனை ஓட்டம், எத்தனை உணர்ச்சிகள், எத்தனை பதட்டங்கள்! ஒரு ஆயுசுக்குப் போதுமான அலைச்சல்! அத்தனையும், ஒரு “ஷல்கோ”வில் அர்த்தமற்றதாய்ப் போய் விட்டன.

“மனிதாபிமானம், இரக்கம், பாசம் இல்லாத அவர்களைப் பாறாங்கல் ஜென்மங்கள் என்றேன். இதோ மானம், ரோஷம் இல்லாமல் அவர்களைத் தேடிப் போகும் சுமிக்கா கூட ஒரு பாறாங்கல் ஜென்மம்தான்.”

புதிதாய் ஒன்று புரிந்து கொண்ட மாதிரி, ஜெயந்தி கண்களை மூடிக் கொண்டாள்.

– சந்திரக் கற்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1998, சென்னை பல்கலைப் பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *