சிலை அழுதது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 28, 2023
பார்வையிட்டோர்: 2,063 
 
 

(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தச் சிறிய சாலையின் இருமருங்கிலும் நின்ற மக்களின் கையில் அமெரிக்க தேசிய கொடிகள் படபடத்துக் கொண்டிருந்தன. வயது வித்தியாசமின்றி அனைவரும் கையில் ஆளுக்கொரு வாசகங்கள் எழுதிய அட்டையையோ, தேசிய கொடியையோ ஆட்டியவண்ணம் இருந்தனர். உன்னை மறக்க மாட்டோம் ரிச்சர்ட், உன் ஆன்மா சாந்தி அடையட்டும், நீ எங்களைப் பெருமை அடையச் செய்துவிட்டாய், நீ ஒரு சிறந்த வீரன் ரிக்கி, எனத் தங்கள் மனத்தில் ரிச்சர்டைப் பற்றி எழுந்த எண்ணங்களுக்கு உருவம் கொடுத்த பதாகை அட்டையை ஏந்திக்கொண்டு அவன் மறைந்த துக்கத்தை அனுசரித்துக் கொண்டிருந்தார்கள். 

வெய்யிலுக்குக் கண்ணைச் சுருக்கிக் கொண்டிருந்த அனைவரது கண்களும் அந்த “ஃபர்ஸ்ட் பாப்டிஸ்ட் சர்ச்’ என்ற தேவாலயத்தின் வாசலையே நோக்கிக் கொண்டிருந்தன. நிகழ்ச்சியின் சோகத்தால் யாரும் உரத்துப் பேசாமல்”கிசு கிசு” என்று பேசிக் கொண்டிருந்தாலும் அதுவும் ஒரு ‘கசமுசா’ சத்தத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. தேவாலயத்தின் உள்ளே இராணுவ வீரர்களும், மிக முக்கிய உறவினர்களும், நண்பர்களும் ரிச்சர்டின் இறுதிச் சேவையில் பங்கெடுத்துக் கொண்டிருந்தனர். தேவாலயத்தின் வாசலுக்கு இருபுறத்திலும் மக்களின் ஊர்திகள் நிறுத்துவது தடை செய்யப்பட்டு அரை மைல் தொலைவிற்குச் சாலை வெறிச்சோடி இருந்தது. தேவாலயத்தின் வாசலில் ஒரு கருப்பு நிற அமரர் ஊர்தியும், அதன் அருகில் இரு இராணுவ வீரர்களும் மட்டுமே இருந்தார்கள். 

ரிச்சர்ட் வில்லியம்ஸ் பிறந்து வளர்ந்து படித்த ஊர் அது. பல தலைமுறைகளாக அவன் குடும்பம் அங்கிருப்பதால் பெரிய உறவினர் கூட்டமும், கணக்கிடலங்கா நண்பர்கள் கூட்டமும் அந்த ஊரில் இருந்தனர். அனைவருக்கும் ரிச்சர்ட் தனது முப்பது வயது தாண்டுவதற்குள் இறந்தது அதிர்ச்சியைத் தந்தது. வில்லியம்ஸ் குடும்பம் தீவிர நாட்டுப்பற்று உள்ள குடும்பம். அப்பா வில்லியம்ஸ் தனது பரம்பரையில் அனைவரும் அமெரிக்க இராணுவப் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்பதில் அளவிட முடியாப் பெருமை கொண்டவர். அப்பா வில்லியம்ஸின் தாத்தா இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர். வில்லியம்ஸின் தந்தை வியட்நாம் போரிலும், வில்லியம்ஸின் பெரியப்பா கொரியன் போரிலும் பங்கேற்றவர்கள். வில்லியம்ஸும் அவரது சகோதரர்களும் ஈராக் போரிலும், ஆபரேஷன் டெசெர்ட் ஸ்டார்மிலும் (Operation Desert Storm) பங்கேற்றவர்கள். 

தனது மகன்களும் மகளும் அதுபோன்றே தங்கள் பரம்பரைப் பெருமையைக் காக்கும் வண்ணம் இராணுவத்தில் சேர்ந்தது அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. முதல் மகனும், அடுத்த மகளும் ஆபரேஷன் அனகொண்டா (Operation Anaconda) வில் பங்கேற்று ஆப்கானிஸ்தான் சென்றார்கள் ஒருவர் கண்ணிவெடிகுண்டில்(landmine) சிதற மற்றவர்தற்கொலைப்படைத் தாக்குதலில் (suicide attack) உயிர் இழந்ததற்கு வில்லியம்ஸ் மிக வருந்தினாலும், அதனால் அவர் அசரவில்லை. அடுத்து ரிச்சர்ட் தானும் இராணுவத்தில் சேரப்போகிறேன் என்றதும் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார். சென்ற வாரம் அவனும் சில வீரர்களும் பயணித்த “ப்ளாக் ஹாக்” (Black Hawk) ஹெலிகாப்டர் விமானம் கிழக்கு ஆஃப்கானிஸ்தான் பகுதியில் விபத்திற்குள்ளாகி வீரர்கள் அனைவரும் அதில் உயிரிழந்தனர். இராணுவம் இன்னமும் விபத்தின் காரணத்தைப் பற்றிய விசாரணையை முடிக்கவில்லை. இராணுவத்தினர் ரிச்சர்டின் உடலைச் சவப் பரிசோனைக்குப் பிறகு இன்று குடும்பத்திடம் ஒப்படைத்துத் தங்கள் இறுதி மரியாதையைச் செலுத்த வந்துள்ளனர். இனி தனது பரம்பரையில் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றுவதைத் தொடர யாரும் இல்லை என்ற அதிர்ச்சியிலும், இருந்த ஒரே மகனையும் பறிகொடுத்ததிலும் அப்பா வில்லியம்ஸ் மிகவும் ஆடிப்போயிருந்தார். சிறிது நாட்களுக்கு முன்தான் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் போனார். இப்பொழுது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. 

தேவாலயத்தின் கதவு திறந்தது. அனைவரும் தங்கள் பேச்சுக்களை நிறுத்தியதால் அந்த இடத்தில் பேரமைதி நிறைந்தது. ரிச்சர்ட் விமானப் படையில் இருந்ததால், விமானப்படை வீரர்கள் ஆறு பேர், சவப் பெட்டியைச் சுமக்கும் ‘பால் பியரர்ஸ்’ஆக, பக்கத்திற்கு மூவராக, அமெரிக்கக் கொடி போர்த்திய அவனது சவப்பெட்டியைச் சுமந்து கொண்டு மிகவும் விறைப்பாக அணிவகுத்து வந்தனர். அவர்களுக்கு முன்புறம் ஒரு வீரரும் பினபுறம் ஒரு வீரரும் அவர்களைப் போலவே விறைப்பாக நடந்து வந்தனர். அவர்களுக்குப் பின்னர்க் கருப்பு ஆடைகளும் தொப்பிகளும் அணிந்த நண்பர்களும், உறவினர்களும் கண்களைத் துடைத்துக் கொண்டு வந்து நின்றனர். உள்ளூர் தொலைக்காட்சி நிலையப் படம் பிடிப்பவர்களும், செய்தியாளர்களும் மட்டுமே சிறிது அங்கும் இங்கும் ஓடிப் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். 

சவப்பெட்டியைச் சுமந்து வந்த வீரர்களில் இரு பெண் வீராங்கனைகளும் இருந்தார்கள். அனைவரும் ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து, படிப்படியாக ஐந்து முறை திரும்பி, 90 பாகையில் நேர் செங்குத்தாகத் திரும்பி மீண்டும் விறைப்பாக நடந்து அமரர் ஊர்தியில் சவப்பெட்டியை ஏற்றினார்கள். பிறகு வண்டியின் இரு பக்கமும் பக்கத்திற்கு நால்வராக அணிவகுத்து விரைந்து நடந்து, வண்டியைத் தாண்டியதும் வரிசை கலைந்து ஓடிப்போய்த் தேவாலய ஊர்திகள் நிறுத்துமிடத்தில் இருந்த தங்கள் இராணுவ வண்டியில் ஏறிக் கொண்டார்கள். எங்கிருந்தோ சொல்லி வைத்தது போல உச்சியில் விளக்குகள் மின்னக் காவல்துறை ஊர்தியும், அதற்குமுன் இரு மோட்டார்பைக் காவலர்களும் திடுமெனத் தோன்றி அமரர் ஊர்தி முன்னர்த் தங்கள் ஊர்திகளை நிறுத்திக் கொண்டனர். 

இதற்குள் ரிச்சர்ட் குடும்பத்தின் உறவினர்களும் நண்பர்களும் ஊர்திகள் நிறுத்துமிடத்திற்குச் சென்று தங்கள் வண்டிகளில் ஏறிக் கொண்டார்கள். சக்கரநாற்காலியில் அப்பா வில்லியம்ஸைத் தள்ளி வந்த ரிச்சர்டின் அம்மாவும், ரிச்சர்டின் மனைவி அபியும் அவருக்காகப் பிரத்யேகமாகத் தருவிக்கப்பட்ட சக்கர நாற்காலியை ஏற்றும் வாடகை வேன் அருகில் வந்ததும் அதில் அவரை ஏற்றினார்கள். அப்பா வில்லியம்ஸ்டன் அம்மா பின்னால் அமர்ந்துகொள்ள, அபி முன்னிருக்கையில் அமர்ந்து கொள்ளவும் வண்டி புறப்பட்டது. தேவாலய வாசலில் நின்ற அனைவரும் அமைதியாகக் கொடிகளை அசைத்தனர். முன்னால் காவலர்களின் வண்டிகள், ரிச்சர்டின் அமரர் ஊர்தி, இரு இராணுவ வாகனங்கள், தொடர்ந்து ரிச்சர்டின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் ஊர்திகள் என ஊர்வலம் நகரின் மற்றொரு புறத்தில் இருந்த மயானத்தை நோக்கி ஊர்ந்தது. சாலையின் போக்குவரத்துச் சிறிது தடங்கலுற்றது. காவலர்களின் சைகைக்குக் காத்திராமல் இறுதி ஊர்வலம் என்று தெரிந்த உடனேயே ஊர்திகளில் சென்றவர்கள் தானாகவே சாலையில் ஓரங்கட்டி வழி விட்டனர். வழியில் நின்ற “பேஸ் பால் கேப்” தொப்பிகள் அணிந்திருந்த ஒரு சில இளைய தலைமுறையினரும் தொப்பிகளை அகற்றித் தலைகுனிந்து அஞ்சலி செலுத்தினர். 

வில்லியம்ஸின் வண்டி ரிச்சர்ட் படித்த பள்ளியை நெருங்கியது. பள்ளியின் வாசலில் உள்ள அறிவிப்புப் பலகையில், “உன் ஆன்மா சாந்தி அடையட்டும் ரிச்சர்ட் வில்லியம்ஸ்; உன் வாழிகாட்டுதலை நாங்களும் தொடர்வோம், நாட்டுப் பணியில் பங்கேற்போம்” என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அதைப் பார்த்ததும் அபியின் கண்கள் கலங்கின. பின்னால் ரிச்சர்டின் அம்மாவிடம் இருந்து ஒரு விசும்பல் தோன்றியது. எத்தனை முறை மகனை இந்தப் பள்ளியின் வாசலில் வண்டியில் கொண்டு வந்து இறக்கி விட்டிருக்கிறார். எத்தனை முறை அவன் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில் பார்வையாளராக வந்து மகனுக்கு உற்சாகமூட்டியிருக்கிறார். அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. 

அப்பா வில்லியம்ஸ் உணர்ச்சிகளற்ற சிலையாகவே அமர்ந்திருந்தார். வண்டி மயானத்தை அடைந்தது. மீண்டும் இராணுவ வண்டிகளில் இருந்து வெளிப்பட்ட எட்டு வீரர்களும் விறைப்பாக நடந்து அமரர் ஊர்தியை நெருங்கினார்கள். ரிச்சர்டின் குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் அங்குத் தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்தார்கள். முன் வரிசையில் ரிச்சர்டின் அம்மா, சக்கரநாற்காலியில் ரிச்சர்டின் அப்பா, பிறகு அபி என அமர்ந்து கொண்டார்கள். இரு பாதிரியார்கள் விவிலியத்தைக் கையில் வைத்துக் கொண்டு பிரார்த்தனைக்காகத் தயாராக நின்றார்கள். 

வீரர்கள் முன்போலவே பக்கத்திற்கு மூவராக அணிவகுத்து, முன்னும் பின்னும் இருவர் தொடர ரிச்சர்ட் உறங்கிய சவப்பெட்டியைக் கொண்டுவந்து பந்தலுக்கருகில் இருந்த ஒரு மேடையில் வைத்தார்கள். பிறகு லாவகமாகச் சடாரெனச் சப்பெட்டியின் மேல் போர்த்தியிருந்த தேசிய கொடியை உருவினார்கள். பக்கத்திற்கு நால்வராக நின்று கொண்டு சடார் சடாரென ஒலி வரும் வண்ணம் கொடியை உதறி, நீள வாக்கில் மடித்து தொடர்ந்து நீவிவிட்டவாறே மடிக்கத் தொடங்கினர். சிவப்பு வெள்ளைப் பட்டைகள் மட்டும் உள்ள பகுதியில் மடிக்க ஆரம்பித்து 13 முறை முக்கோண வடிவில் மாற்றி மாற்றிப் போட்டு மடித்து, வெள்ளை நட்சத்திரங்களும், நீல வண்ணமும் கொண்ட பகுதி வெளியில் தெரியுமாறு முக்கோண வடிவில் மடித்து முடித்தனர். அதை ஒருவர் மட்டும் கையில் பெற்றுக்கொள்ள மற்ற வீரர்கள் அணிவகுத்து மீண்டும் வெளியேறிய பிறகு கலைந்து சென்றனர். 

கொடியைப் பிடித்திருந்த வீராங்கனை மட்டும் விறைப்பாக ரிச்சர்டின் குடும்பத்தை நோக்கி நின்றார். ரிச்சர்டின் அம்மாவும்,அபியும் எழுந்து நின்று கொண்டார்கள். பாதிரியார்கள் ஒவ்வொருவராகப் பிரார்த்தனை முடித்து “ஆமன்” சொல்லி முடித்ததும் வீராங்கனை, அபியை நெருங்கி இராணுவ மரியாதை செய்த கொடியை அவள் கையில் கொடுத்துவிட்டு, ரிச்சர்டின் பணிக்கு இராணுவத்தின் சார்பாக நன்றி சொல்லிவிட்டு, அவன் ஆன்மா சாந்தியடையட்டும் என்று சொல்லிச் சல்யூட் அடித்துவிட்டு விரைப்புடன் நடந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து இறுதி மரியாதைகள் நடந்து ரிச்சர்ட் அடக்கம் செய்யப்பட்டான். அவ்வப்பொழுது தாள முடியாமல் அபியும் ரிச்சர்டின் அம்மாவும் கண்கலங்கினார். அல்லது விசும்பினர். ஆனால் அப்பா வில்லியம்ஸ் மட்டும் சிலை போன்று உணர்ச்சிகளற்ற முகத்துடனேயே இருந்தார். 

சடங்குகள் அனைத்தும் முடிந்து அனைவரும் வெளியே வந்து தங்கள் ஊர்திகளில் கிளம்பினர். அபியும், ரிச்சர்டின் அம்மாவும் மீண்டும் சக்கரநாற்காலியை வாகனத்தில் ஏற்றினர். ரிச்சர்டின் அம்மா ஏறியவுடன் கதவைச் சாத்த உதவிய அபி, முன்னிருக்கை கதவை நோக்கி நகர்ந்தாள். அதற்குள், “வண்டியை எடு!” என்று அப்பா வில்லியம்ஸின் கடினமான குரல் கேட்டது. அபி அதிர்ச்சி அடைந்தாள். அவளைப் போலவே அதிர்ச்சியுடன் வண்டியோட்டியும், ரிச்சர்டின் அம்மாவும் வில்லியம்ஸின் முகத்தைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு அபியைப் பார்த்தனர். அவள் முகத்தில் இருந்து அபி அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை என்று தெரிந்தது. திறக்கப்போன வாகனத்தின் கைப்பிடியில் இருந்து தனது கைகளை அதிர்ச்சியில் இருந்து மீளாமலே அகற்றிக் கொண்டாள். ரிச்சர்டின் அம்மா “அபி” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார். இடைவெட்டிய வில்லியம்ஸ் வண்டியோட்டியை நோக்கி, “இன்னமும் கிளம்பவில்லையா?” என்று உறுமினார். 

வண்டியோட்டியும் பரிதாபமாக ஒருமுறை அபியை நோக்கிவிட்டுத் தயக்கத்துடன் வண்டியை ஓட்டத் தொடங்கினார். வண்டி அவளைக் கடந்தபொழுது தலைகுனிந்து, கண்ணிர் வழிந்த முகத்துடன் ரிச்சர்டின் அம்மாவின் முகமும், சிலையாக இருந்த வில்லியம்ஸின் முகமும் அபியின் பார்வையில் தட்டுப்பட்டது. இனி எவ்வாறு மயானத்தில் இருந்து ஊருக்குள் செல்வது, ஏதேனும் நண்பர்களோ உறவினர்களோ சவாரி கொடுத்து உதவி செய்ய இருக்கிறார்களா அல்லது வாடகை வண்டியை எப்படி மயானத்திற்கு வரவழைப்பது? என்று குழம்பிய அபி சுற்றும் முற்றும் பார்த்தாள். 


“மிஸ்ஸஸ் வில்லியம்ஸ் உங்கள் வண்டி வரும் என்று காத்திருக்கிறீர்களா? உங்களுக்கு உதவ எங்களை அனுமதிப்பீர்களா?” என்ற குரல் கேட்டு அபி திரும்பினாள். வாட்ட சாட்டமான உருவத்துடனும், துக்கத்தை அனுசரிக்கக் கருப்பு ஆடை அணிந்திருந்த ஒரு சிறுவனையும் சிறுமியையும் இருகைகளிலும் பிடித்துக் கொண்டு கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவள் அவமானப் படுத்தப்பட்டு விட்டுச் செல்லப்பட்டதைப் பார்த்திருந்தாலும், அது தனக்குத் தெரியாதது போல நாகரிகமாகக் கேள்விகளை எழுப்பிய அவர் மேல் அபிக்கு ஒரு மரியாதை வந்தது. 

“என் பெயர் அபிகெயில். அபி என்று எல்லோரும் அழைப்பது போலவே நீங்களும் கூப்பிடுங்கள். நீங்கள்…உங்கள் பெயர் மிஸ்டர்…” என இழுத்தாள். 

“என் பெயர் தாமஸ் ஜோன்ஸ், டாமி என்று என்னை எல்லோரும் அழைப்பது போலவே நீங்களும் கூப்பிட்டால் மகிழ்ச்சி அடைவேன். இது எனது மகள் கேண்டிஸ்ஸும், மகன் கேரியும்.” என அறிமுகப்படுத்தினார். 

சிறுவர்கள் இருவரும் அபியின் கையைக் குலுக்கினர். அபிக்கு வழிகாட்டியவாறு தனது வண்டியை நோக்கி நடந்த டாமி, தான் ரிச்சர்டின் பள்ளிநாட்களின் நண்பன் என்றும், இப்பொழுது மாநிலத்தின் பல்கலைக்கழகக் கால்பந்தாட்டக் குழுவின் பயிற்சியாளர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். டாமியும் அபியும் முன்னிருக்கையிலும், குழந்தைகள் பின்னிருக்கையிலும் அமர்ந்து கொள்ள, டாமி நகரை நோக்கி வண்டியைச் செலுத்தினார். 

“உன்னை எங்கே இறக்கிவிடவேண்டும் அபி?” 

“நான் விடுதியில் இருந்து தேவாலயத்திற்கு வாடகை வண்டியில்தான் வந்தேன், அங்கிருந்து மயானத்திற்கு ரிச்சர்டின் பெற்றோர்களுடன் வந்தேன். என்னை நான் தாங்கும் விடுதியிலேயே இறக்கிவிட்டால் நலம். விமானநிலையத்திற்கு அருகில் இருக்கும் “ஹாலிடே இன்னில்” தங்கியிருக்கிறேன்.” 

“திரும்பவும் எப்பொழுது ஊருக்குப் போகிறாய்? எங்கள் வீட்டிற்கு வர நேரமிருக்குமா?”

“வரவேற்பிற்கு வந்தனம் டாமி, ஆனால் நாளை அதிகாலை விமானப்பயணத்திற்குத் திரும்பிச் செல்லும் 

பயணச்சீட்டை பதிவு செய்திருப்பதால் இம்முறை வர இயலாது. அடுத்தமுறை பார்ப்போம். சொல்லு டாமி! இதுவரை ரிச்சர்ட் தனக்கு ஒரு கால்பந்தாட்டக் குழு பயிற்சியாளர் நண்பன் இருந்ததைச் சொன்னதில்லையே!” 

“இல்லை, இது எனது புதிய பணி அபி. பணியில் சேர்ந்து ஓராண்டுதான் ஆகிறது. எனது பின்புலம், 
கல்லூரியில் படித்தது எல்லாம் கணினி அறிவியல். கணினி நிரல்கள் எழுதுவதில் எனக்கு விருப்பம் அதிகம். ஆனால் பள்ளி நாட்களில் இருந்து கால்பந்தாட்டத்தில் சூரன். அதனால் நல்ல நிதியுதவி பெற்றுப் புகழ் பெற்ற பல்கலையில் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பிறகு புகழ் பெற்ற சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனம் ஒன்றில் நல்ல ஊதியத்தில் ஒரு நல்ல வேலையும் கிடைத்தது. ஆனால் மனிதரை மனிதர் காலை வாரிவிடும் வணிக நிறுவனங்களில் என்னால் ஆர்வத்துடன் வேலை செய்ய முடியவில்லை. என் கனவு, குறிக்கோள் எல்லாம் கால்பந்தாட்டம்தான். அதனால் இந்த மாநிலப் பல்கலையில் பயிற்சியாளராகப் பணிபுரிய ஒரு வாய்ப்பும் கிடைத்ததால் மீண்டும் ஊருக்கே வந்துவிட்டேன்.”

“அதனால் என்ன டாமி? வாழ்க்கையில் உனக்குப் பிடித்த பாதையில் நீ பயணம் செய்கிறாய், அதுதானே முக்கியம். அத்துடன்மாநில அரசுப்பணிகளில் அதிக ஊதியம் பெறுபவர்கள் பல்கலைகளின் கால்பந்தாட்டக் குழுவின் பயிற்சியாளர்கள்தானே. ஊதியத்தைப் பொறுத்தவரை ஊதியத்தைப் பொறுத்தவரை நீ அதிகமாகத் தியாகம் செய்ய வேண்டியிருந்திருக்காது. உன் திறமை சரியாக வெளிப்பட்டால் பெரிய தேசிய அளவுக் குழுக்களிலும் நீ இடம் பெற வாய்ப்பும் கிடைக்கலாம், அப்படிக் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அப்படி நடந்தால் தொலைக் காட்சியில் கால்பந்தாட்ட வீரர்களிடம் நீ தொண்டை கிழியக் கத்துவதையும், அடுத்தப் பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குப் படம் போட்டு விளக்கித் தலை தலையாக அடித்துக் கொள்வதையும் பார்த்து ரசிக்கலாம் அல்லவா?” என்று அபி சிரித்தாள். “ஆனால் உன் கணினி நிரல்கள் எழுதும் திறமை வீணாகிறதே என்றுதான்…..” என்று இழுத்தவள். திடீரென நினைவு வந்தவளாக, முகம் பளீரிட, “இரு இரு. நீதானே பள்ளி இறுதி ஆண்டின் ‘ப்ரோம்’ நடனத்தில் உன் நடனத் துணையை ரிச்சர்டுக்கு மாற்றிக் கொடுத்து உதவி செய்த டாமி?” என்றாள். 

“ஹ…ஹா…ஹா…” என்று சப்தமாகச் சிரித்த டாமி, “உனக்கு அதை ரிக்கி சொல்லியிருந்தாலும், நீ மறக்காமல் நினைவு வைத்திருப்பதுதான் ஆச்சரியம்” என்றான். பிறகு பள்ளி நாட்களை நினைத்து அவன் முகம் மலர்ந்தது. 

“ஷெர்லி டேவிஸ், ஆஷ்லி டேவிஸ் என்ற சகோதரிகள் இருவர், இரட்டையர்கள்” என்றாள் அபியும் புன்னகைத்தப்படி. 

“அட பரவாயில்லையே, உனக்கு நல்ல ஞாபக சக்திதான் அபி” என்று புருவத்தைத் தூக்கிக் கண்கள் விரிய வியந்தான் டாமி. “ஆமாம், இந்த ஷெர்லி ரிக்கியின் தோழி. பள்ளி இறுதியாண்டு ‘ப்ரோம்’ நடனத்தின்போது அவனது நடனத் துணையாக ரிக்கியுடன் அவள் நடனமாட ஒருவருக்கொருவர் முடிவு செய்திருந்தார்கள். அவள் சகோதரி ஆஷ்லி என் நடனத் துணைவி. அந்தப் பள்ளி நாட்களின் இறுதி வாரத்தில் ஒருநாள் நாங்கள் “மெக் டானால்ட்ஸ்” சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று அரட்டை அடித்தவாறே கொறித்துக் கொண்டிருந்தோம். பேச்சு அப்படியே அரசியல் பக்கம் போயிற்று. அப்பொழுது குடியரசுக் கட்சியின் சார்பில் மீண்டும் இரண்டாம் முறையும் அதிபராக விரும்பி அதற்குப் போட்டியிட்டு ஜார்ஜ் புஷ் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. ஷெர்லி ஒரு தீவிரக் குடியரசுக் கட்சி ஆதரவாளி, ரிக்கியும்தான். நானும் ஆஷ்லியும் மக்களாட்சிக் கட்சியின் ஆதரவாளர்கள் என்றாலும் அரசியலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ரிக்கி அன்று ஏதோ ஒரு உற்சாகமான மனநிலையில் இருந்தான். தேர்தலைப் பற்றியும் புஷ்ஷின் திறமை பற்றியும் ஷெர்லி ஆவலுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இவன் குறுக்கே குறுக்கே இடக்காகப் பேசி, “புஷ் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர், போன தேர்தலிலேயே ஃப்ளோரிடாவில் மீண்டும் மீண்டும் வாக்குகளை எண்ணித்தான் அதிபரானார். இந்த முறை எத்தனை தடவை வாக்குகளை எண்ணித் தொலைய வேண்டுமோ இவரை மீண்டும் அதிபராக்க!” என்றெல்லாம் கூறி அவளைச் சீண்டிவிட்டுக் கொண்டே இருந்தான். அவளுக்கோ கோபம் ஏறிக் கொண்டே போனது. இறுதியில் அவனது சீண்டலைத் தாளமுடியாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஃப்ரென்ச் ஃப்ரயை அவன் முகத்தில் விட்டெறிந்து, குடித்துக்கொண்டிருந்த மில்க் ஷேக்கை அவன் தலையில் கொட்டி முழுக்காட்டி விட்டு வெளியேறிவிட்டாள். பிறகு அவனுடன் முகம் கொடுத்தும் பேசவில்லை. ரிக்கி “விளையாட்டுக்குத்தான் சொன்னேன்” என்று சமாதானப்படுத்தியும் பார்த்தான். ம்ம்ம்ஹும்…. அவள் கோபமே குறையவில்லை. பிறகு ரிக்கிக்கும் அவளது அடம் கோபத்தை ஏற்படுத்தியது. எப்படி இவர்கள் இணைந்து நடனமாடப் போகிறார்கள் என்று நண்பர்கள் நாங்கள் பேசிக் கொண்டோம். அது போலவே இருவரும் எனக்கு நடனத் துணையாக நீ தேவையில்லை என்று ஒருவருக்கொருவர் அறிக்கை விட்டுப் பள்ளியில் களேபரம் செய்தார்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் தங்களது நடனத் துணை யாரென்று அச்சாரம் செய்து விட்டதால் கடைசி நேரத்தில் மாற்று நடனத் துணையும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. கடைசியில் நானும் ஆஷ்லியும் ஆள் மாற்றிக் கொண்டு அவர்களுக்கு உதவ முன் வந்தோம். ரிக்கியும் ஆஷ்லியும், நானும் ஷெர்லியும் அந்த விழாவில் ஒருவருக்கொருவர் துணை” என்றான் டாமி சிரித்தவாறு. 

ரிக்கியே இதனைப் பலமுறை அபியிடம் சொல்லியிருக்கிறான். இன்று டாமியும் அதையே ஆர்வத்துடன் சொல்லும் பொழுது அபி வியப்புடன் குறுக்கிடாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த நண்பர்கள் கூட்டம் அனைவருக்கும் இது பசுமை மாறாத நிகழ்ச்சியாக இருப்பதைப் புரிந்து கொண்டாள். 

“இப்பொழுது அந்தச் சகோதரிகள் எங்கே இருக்கிறார்கள் டாமி?” 

“ஹ்ம்ம்… அவர்கள் அப்பாவிற்குப் பிட்ஸ்பர்கில் வேறு ஒரு நல்ல வேலை கிடைத்ததும் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்கள். ஷெர்லியும் ஆஷ்லியும் அங்கேயே பல்கலையில் படிப்பைத் தொடர்ந்தார்கள். பிறகு எங்களுக்குள் தொடர்பு விட்டுப் போயிற்று. ஃபேஸ்புக்கில் நானும் சில நண்பர்களும் அவர்களைத் தேடினோம். அடுத்த ஆண்டு பள்ளியில் நாங்கள் பட்டம் பெற்ற பத்தாமாண்டு விழா வருகிறது. அதனால் வகுப்புத் தோழர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டோம். இந்தப் பெண்களைத் தேடிக் கண்டுபிடிக்கக் கொஞ்சம் சிரமமாக இருந்தது. திருமணமானதும் தமது கணவர்களின் குடும்பப் பெயருக்கு மாறிவிட்டார்கள். அதனால் சிரமம். உனக்குத் தெரியுமோ? அவர்கள் இருவருக்கும் மீண்டும் இரட்டைக் குழந்தைகள், ஆளுக்கு இரண்டு இரண்டு பையன்கள்.” 

“இதைக் கேட்டால் ரிக்கி மிகவும் மகிழ்ச்சி அடைவான்” என்றாள் அபி. பிறகு தான் பேசியதில் உள்ள தவறு அவளுக்குப் புரிந்தது. “இதைக் கேட்டிருந்தால் ரிக்கி மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பான், இல்லையா டாமி?” என்று கரகரத்த குரலில், கலங்கிய கண்களுடன் பரிதாபமாக அவனைப் பார்த்துக் கேட்டாள். 

அவளது கலங்கிய முகத்தைத் திரும்பிப் பார்த்த டாமி, இடது கையால் வண்டியை ஒட்டிக் கொண்டே வலது கையால் அவளது முதுகில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான். அவளது கண்ணீர் அவனையும் கண் கலங்கச் செய்தது. தொண்டையைச் செருமிக் கொண்டு சாலையில் கவனமாக இருப்பவன் போல முகத்தைத் திருப்பிக் கொண்டான். பிறகு சோகமான குரலில், “உனக்கு ஒன்று தெரியுமா அபி, பிற்காலத்தில் வாழ்வில் சிறந்த சாதனைகள் செய்யப் போகிறவனாக அவனை மாணவர்கள் நாங்கள் யாவரும் தேர்ந்தெடுத்தோம். அது கனவாகப் போய்விட்டது. 

“ஆமாம், நானும் உங்கள் பள்ளியின் ஆண்டு மலரில் பார்த்திருக்கிறேன் உன்னையும் நீ பெரிய ‘பில்கேட்ஸாகவோ, ஸ்டீவ் ஜாப்’ ஆகவோ வரப் போகிறவன் என்றும் குறிப்பிட்டிருந்தது. அந்த ஆண்டு மலரில் உன் படத்தையும் பார்த்திருக்கிறேன். அப்பொழுது தலை நிறையச் சுருள் சுருளான கருகரு முடியுடன் ஒடிசலாக இருந்தாய். இப்பொழுது மொட்டைத் தலையுடன், சிறிது எடையும் போட்டு ஆளையே அடையாளம் தெரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.”

“அடுத்த ஆண்டு நடக்கப்போகும் பத்தாண்டு சந்திப்பில் என்னை யாருக்கும் அடையாளம் தெரியப்போவது இல்லை எனத் தெரிகிறது. இல்லையா அபி? ஆனால் எங்களுடன் ரிக்கி அந்த விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்பதை நம்புவது எனக்குச் சிரமமாக இருக்கிறது.” என்றான் கம்மியக் குரலில். சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருந்தார்கள். ரிக்கியைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க எண்ணினார்கள். வண்டியில் பெருத்த அமைதி நிலவியது. சிறுவர்களும் அவர்களது உரையாடலில் குறுக்கிடாமல், தொந்தரவு செய்யாமல் அமைதி காத்தார்கள். அபி பேச்சை மாற்ற எண்ணி அவர்கள் நல்ல பிள்ளைகளாக நடத்துக் கொள்வதற்கு அவனையும் சிறுவர்களையும் பாராட்டினாள். 

“எல்லாம் எனது அம்மா, அவர்களது பாட்டியின் கண்டிப்பான வளர்ப்பு செய்யும் மாயம். அவர்கள் நல்லொழுக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதனால் நானும் என் மனைவியும் அவர்கள் வளர்ப்பில் குறுக்கிடுவதே இல்லை,” என்றான் பெருமையாக, பிறகு “நீ இப்பொழுது என்ன செய்கிறாய் அபி, எங்கிருக்கிறாய்?” என்றான். 

“எனது மேல்படிப்பு முடிய இன்னமும் ஓர் ஆண்டு இருக்கிறது. நிர்வாக இயலில் நிதிநிர்வாகத்தைச் சிறப்புப் பாடமாகப் படிக்கிறேன். இப்பொழுது நியூ யார்க்கில் உள்ள “வால்ஸ்ட்ரீட்” நிதி நிறுவனம் ஒன்றின் கிளையில் கோடைக் காலத்தில் செயல்முறை பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்த ஆண்டு பட்டம் பெற்றதும் பிரபல நிதி நிறுவனங்கள் ஒன்றில் உதவியாளராகச் சிறிது காலம் பணி புரிய உத்தேசம். தேவையான அனுபவம் கிடைத்ததும் சேமிப்பு, பங்கு முதலீடு போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்கும் நிதி ஆலோசகராகச் சொந்தத் தொழில் செய்யும் திட்டமும் இருக்கிறது.” 

“என் உத்தியோக வருமானங்களை ஒப்பிட்டு நீ கருத்துச் சொன்ன பொழுதே நினைத்தேன், நீ இவ்வாறு நன்கு பொருளாதார ரீதியில் ஆராய்ந்து முடிவெடுப்பவள் என்று. பணத்தின் மதிப்பை நன்கு உணர்ந்தவள் என்று சொல், நல்ல திட்டம்தான். நீ தொழிலை ஆரம்பித்ததும் சொல், நான் உன் வாடிக்கையாளராகச் சேர்ந்து பயன் பெறுகிறேன். முதலில் ஃபேஸ்புக்கில் நாம் நண்பர்களாக மாறுவோம்” என்றான். சிறிது நேர அமைதிக்குப் பிறகு திடீரென, “அப்பா வில்லியம்ஸிற்கு ரிக்கி உன்னைக் கலப்புமணம் செய்து கொண்டதில் வருத்தம் என்பது இங்கு அவன் நண்பர்கள் யாவருக்கும் ஓரளவுக்குத் தெரியும். ஆனால் இன்று நடந்ததற்கு அவர் மீது வருத்தம் கொள்ளாதே பக்கவாதத்தினால் முடக்கப்பட்ட வாழ்க்கை, மகனின் இழப்பு, நிதிநிலைமை சரியில்லை என அடிமேல் அடி ஏற்கனவே அவர் கொஞ்சம் முசுடு என்பது பலருக்கும் தெரிந்த உண்மை” என்றான். 

“என்ன நிதி நிலைமை சரியில்லையா?” 

“ஆமாம், ஏகப்பட்ட மருத்துவச் செலவு என நினைக்கிறேன். அத்துடன் வசிக்கும் வீட்டின் மேலும் கடன் வாங்கியிருப்பார்கள் போலிருக்கிறது. கடன் அட்டையிலும் இனி வாங்க முடியாத நிலை. இது எனக்கு எதேச்சையாகத் தெரிந்தது. எனது தம்பி பல்கலையில் படிப்பவன் அவ்வப்பொழுது கிடைக்கும் பகுதி நேர வேலை செய்து படிப்புக்குப் பணம் சேர்ப்பான். வில்லியம்ஸிற்குச் சக்கர நாற்காலி வாழ்க்கை என்றதும் அவர்கள் வீட்டில் பல மாறுதல்கள் செய்ய வேண்டி வந்திருக்கிறது. கட்டுமானப் பணியில் இவனும் ஈடுபட்டிருந்தான். வாசலில் சக்கரநாற்காலிக்குத் தோதாகச் சரிவு அமைப்பது, சில வாசல்களை அகலப்படுத்துவது, குளியலறையை மாற்றுவது போன்ற வேலைகள். அப்பொழுது ஒருமுறை அவரும் அவர் மனைவியும் மருத்துவமனைக்குச் சென்றுவிட, தம்பியும் அவன் நண்பர்களும் வீட்டில் தனியாக வேலை செய்து கொண்டிருந்திருக்கிறார்கள். தொலைபேசியில் பல அழைப்புக்கள் வந்ததாம். செய்திப் பெட்டியில் செய்திகள் விட்டுச்சென்றவர்களில் இருந்து அழைத்தவர்கள் கடனை வசூல் செய்ய நெருக்கடி கொடுத்து, கிட்டிபோட்டுக் கடன் வசூலிக்கும் நிறுவனங்கள் என்று தெரிந்திருக்கிறது. தம்பி சொல்லித்தான் எனக்குத் தெரியும். என்ன செய்வது…. வயதான பின்பு நோய் என ஏதும் வந்தால் சிரமம்தான். மருத்துவச் செலவுகள் செய்து கட்டுப்படியாகாது. வில்லியம்ஸிடம் வசதியாகச் சக்கரநாற்காலியை ஏற்றி இறக்கும் வாகனமும் இல்லை. ஒவ்வொரு முறையும் வெளியே செல்ல வாடகைக்கு வண்டி எடுக்க வேண்டியிருக்கிறது. சொந்த வண்டி இருந்தால் அவர்களுக்கு அடிக்கடி வெளியே போய்வர வாய்ப்பிருக்கும். அவ்வாறு செல்வது மனச்சுமையைக் குறைக்கும். எப்பொழுதும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். போதாக்குறைக்கு அடிமேல் அடி விழுகிறது அவர்களுக்கு. மனிதர் வெறுப்பின் உச்சத்தில் இல்லாமல் வேறு எப்படி இருப்பார்?” 

அபி மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். ரிக்கியின் அம்மா அப்பாவின் நிலையை நினைத்து, வயதான காலத்தில் பிள்ளைகள் அனைவரையும் பறிகொடுத்துவிட்டு, உதவிக்கு யாரும் இன்றி, கடனுடனும் நோயுடனும் போராடிக்கொண்டு எவ்வளவு சிரமமாக இருக்கும் என்று தோன்றியது. அவர்கள் நிலைமையை மனிதாபிமானத்துடன் நோக்கி அவர்களுக்காக வருந்தியும் பரிந்தும் பேசும் டாமியின் மீது அவளுக்கு மதிப்பு அதிகமாகியது. அவளை அவளது விடுதியில் விட்டுவிட்டு டாமியும் அவன் குழந்தைகளும் சென்றுவிட்டார்கள். அறைக்குச் சென்று அபி விட்டத்தைப் பார்த்துக் கொண்டு ரிக்கியை நினைத்துக் கொண்டு படுத்திருந்தாள். அவளுக்கு உறக்கம் வரவில்லை. அவளுக்குரியவன் நகரின் ஒரு மூலையில் பெட்டிக்குள், தரைக்கடியில் மீளாத் துயில் கொண்டு இவள் வேதனையைப் பற்றிச் சிறிதும் அறியாமல் இருப்பதும், இவள் நகரின் மற்றொரு மூலையில் அவனை நினைத்து அழுது கொண்டிருப்பதும் நடக்கப்போகிறது என்று சென்ற வாரம் வரை அவள் நினைத்திருக்கவில்லை. அவனும் அவளும் சேர்ந்து கண்ட கனவுகளும், போட்ட திட்டங்களும் இப்பொழுது அர்த்தம் இல்லாமல் போனதை அவளால் நம்பமுடியவில்லை. 


அபி பால்டிமோரில் வளர்ந்தவள். ரிக்கியைவிட நான்காண்டுகள் வயதில் சிறியவள். அவளும் ரிச்சர்டும் முதலில் சந்தித்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. அப்பொழுது அவள் “மேரிலாண்ட் பல்கலை”யின் “ஸ்மித் ஸ்கூல் ஆஃப் பிசினெஸ்”ஸில் நிதியியல் மூன்றாமாண்டு முடித்திருந்தாள். கோடையில் “இண்டர்ன்” ஆகப் பயிற்சி பெற வில்லியாம்ஸ்பெர்கில் இருக்கும் “பால் கார்ப்பரேஷனுக்கு” மூன்று மாதங்களுக்கு வேலைக்கு வந்திருந்தாள். 

அப்பொழுது ரிச்சர்ட் தனது படிப்பை முடித்துவிட்டு ஹாம்ப்டனில் உள்ள “லேங்லி ஏர் ஃபோர்ஸ் பேஸில்” பணிபுரிந்து கொண்டிருந்தான். அந்த ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டம் ஹாம்ப்டனில் உள்ள “ஃபோர்ட் மன்றோ”வில் நடந்தது. வாணவேடிக்கை, கண்ட்ரி மியூசிக் பாடகர்கள் “எமிலி வெஸ்ட்” மற்றும் “ஜிம்மி வெய்ன்” ஆகியோரின் சிறப்பு இசைநிகழ்ச்சிகள் நடந்தன. அபிக்கு எமிலி வெஸ்ட்டின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அதனால் அவள் தன்னுடன் வேலை பார்க்கும் மற்றும் இரு பயிற்சி நிலையில் பணிபுரியும் மாணவர்களுடன் வந்து கலந்து கொண்டாள். 

எமிலி வெஸ்ட்டின் நிகழ்ச்சி முடிந்து அடுத்து ஜிம்மி வெய்னின் நிகழ்ச்சி நடந்த பொழுதுதான் ரிக்கியை முதலில் பார்த்தாள். அவன் “கவ் பாய்ஸ் அண்ட் இன்ஜின்ஸ்” பாடல் ஆரம்பித்த பொழுது உற்சாகமாகக் கூச்சலிட்டான். பிறகு தனது நண்பர்களுடன் ஆட ஆரம்பித்தான். பாடல் முடிந்ததும் பக்கச் சுவரில் முதுகைச் சாய்த்துக்கொண்டு ஒரு காலை மடக்கிச் சுவரில் ஊன்றி ஓய்வு எடுத்தான். அபி அவனுக்கு மேல் வரிசையில் நின்று கொண்டு லெமனேட் குடித்துக் கொண்டிருந்தாள். “பரவாயில்லையே நன்றாகவே ஆடுகிறான் இவன்” என்று மனத்தில் நினைத்துக் கொண்டாள். அப்பொழுது அவளுக்குப் பின் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு ஓடி விளையாடிய சிறுவர்கள் இவள் மேல் இடித்துவிட அபியின் கையில் இருந்த லெமனேட் இருந்த காகிதக் கோப்பை அவள் கை தவறி அவன் தலையில் விழுந்து அவனை முழுக்காட்டியது. அவள் அவசர அவசரமாக மன்னிப்பு கேட்பதற்குள், ரிக்கிக்கு இது எப்படி நடந்தது எனப் புரிந்து விட்டது. ஒரே சமயத்தில் அவள் “மன்னித்துவிடுங்கள்’ என்றும், அவன் “பரவாயில்லை” என்றும் சொல்லிக் கொண்டார்கள். “என்னைப் பானத்தால் குளிப்பாட்டும் இரண்டாவது பெண் நீங்கள்” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுச் சிரித்தவாறே போய்விட்டான். 

மறுபடியும் எதிர்பாராமல் அடுத்த வார இறுதியிலும் அவனைச் சந்தித்தாள். இம்முறை “வில்லியம்ஸ்பர்க் புஷ் கார்டன்” உல்லாசப் பூங்காவில் நண்பர்களுடன் அவள் சுற்றிக் கொண்டிருந்த பொழுது எதிர்ப்பட்டான். அந்தச் சமயமும் அவள் சோடா குடித்துக் கொண்டிருந்தாள். கையில் பானத்துடன் அவளைப் பார்த்ததும், அவன் மேல் ஊற்றிவிடுவாள் என்று அச்சம் கொண்டவன் போலச் சட்டென்று திரும்பி ஓடுவது போலப் பாசாங்கு செய்து அவளைப் பார்த்துச் சிரித்தான். அவளுக்கும் அவன் செய்கையைப் பார்த்துச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்து சிரித்ததில் புரைக்கேறியது. பிறகு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவனிடம் தான் அவனை முழுக்காட்டிய இரண்டாவது பெண் என்று அவன் சொன்னதைக் குறிப்பிட்டு முதலாவது பெண் யாரென்று கேட்டாள். அவனும் மிக உற்சாகமாகத் தனது பள்ளி இறுதியாண்டு ப்ரோம் நடனத்துணை ஷெர்லி டேவிஸுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட தகராறையும், அவள் அவன் தலையில் மில்க் ஷேக் ஊற்றியதையும், நடனத் திட்டம் தடம் மாறிப் போக ப்ரோம் நடனத்திற்கு அவளது சகோதரியுடன் ஆடியதையும் விவரமாகச் சொன்னான். பின்னர்ப் பேஸ்புக்கில் நண்பர்களானார்கள், அவ்வப்பொழுது ஒருவரை ஒருவர் “போக்” செய்து கொண்டார்கள். 

அவள் தனது பயிற்சி முடிந்து, விடுமுறை முடிந்து இறுதியாண்டிற்கென மீண்டும் பல்கலை சென்ற பின்னர் அவர்களுக்குத் தங்கள் தொடர்பு சாதாரண நட்பு அளவிற்கும் மேலே சென்று விட்டது புரிந்தது. ரிக்கி அவ்வப்பொழுது வார இறுதியில் மேரிலாண்ட் வந்து அவளைச் சந்தித்தான். அவளை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்து ஒரு மோதிரம் பரிசளித்தான். அவளும் சம்மதித்து அவள் படிப்பு முடிந்து பட்டம் வாங்கிய பின்னர்த் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டனர். 

அந்த ஆண்டு இறுதியில் “தேங்க்ஸ் கிவ்விங்” என்னும் நன்றி கூறும் விழா நடக்கும் வார இறுதியில் அவளைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவனது பெற்றோருக்கு அவளை அறிமுகப்படுத்தி அவளை மணந்து கொள்ளப் போவதாகச் சொன்னான். அவனது அப்பா வில்லியம்ஸ் கொதித்தெழுந்தார். அதற்குக் காரணம் வெள்ளை இனத்தவரான அவரால் கறுப்பினப் பெண்ணான அபியைத் தனது மருமகளாகவோ அல்லது தனது மகனின் துணையாகவோ நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவனது தாயார் அதனைப் பெரிதுபடுத்தவில்லை. அவர் வெள்ளை இனத்தவரானாலும் நாட்டின் வட பகுதியிலேயே பெரும்பாலும் வாழ்ந்தவர். சிக்காகோவில் பிறந்து, நியூயார்க்கில் வளர்ந்து, வாஷிங்டன் டி.சி.யில் படித்து வேலை பார்த்தவர். அப்பொழுதுதான் இராணுவத்தில் பணிபுரிந்த ரிச்சர்டின் அப்பாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்து மணந்து கொண்டார். அத்துடன் இயல்பாகவே அவர் பரந்த மனத்துடன் இன வேறுபாடுகளைப் பொருட்படுத்தாதவர். 

ஆனால் ரிச்சர்டின் தந்தை வில்லியம்ஸின் பின்புலம் வேறு. அவர் குடும்பத்தினர் நாட்டின் தென் மாநிலங்களில்  ஒன்றில் பரம்பரை பரம்பரையாகக் குடியிருப்பவர்கள். வெள்ளை இனத்தவர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று ஆழ் மனத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டவர்கள். அப்பா வில்லியம்ஸின் தந்தையும் பெரிய தந்தையும், அதாவது ரிச்சர்டின் தாத்தாவும் பெரிய தாத்தாவும், இனவெறிக் கொண்ட “கே.கே.கே.” அல்லது “கு க்ளக்ஸ் கிளான்” (KKK / Ku Klux Klan), என்ற இனவெறிக் கும்பலுடன் மறைமுகத் தொடர்பு கொண்டு ஆதரவும் அளித்ததாக அரசல் புரசலாக ஊரில் செய்திகள் உண்டு. இந்த இனவெறிக்கூட்டம் கொள்ளையர்கள் போன்று தங்கள் முகத்தைக் காட்டாமல் வெள்ளை முகமூடி அணிந்து, நீண்ட வெள்ளை அங்கி அணிந்து, கறுப்பர்களுக்குச் சம உரிமை தருவதை 1950 மற்றும் 1960 களில் எதிர்த்துக் கலவரம் செய்த தீவிரவாதிகள். கறுப்பர்களைத் துன்புறுத்துவதையும், அவர்களது வீட்டு வாசல்களில் சிலுவைகளை எரித்து அச்சுறுத்துவதையும் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் அந்தக் கும்பல் பரவலாகச் செய்து வந்தது. இதுபோன்ற அர்த்தமற்ற பிடிவாதப் போக்குக் கொண்ட கொள்கைகளைக் கொண்ட கும்பலுடன் தொடர்பு கொண்டவர்களது குடும்பத்தோர் கறுப்பின ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து கொள்வதை நினைத்தும் பார்க்க முடியாதுதான். 

ஆனால் கறுப்பின ஒபாமாவை நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுத்த இக்கால இளைஞர் கூட்டத்தைச் சார்ந்தவன் ரிச்சர்ட். அவனுக்கு ஏனோ எப்பொழுதும் இன வேற்றுமை மனத்தில் தோன்றியதில்லை. அபியையும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. தேங்க்ஸ் கிவிங் பண்டிகைக்கு அபியை அவன் அழைத்துவந்து இவள்தான் என் வருங்கால மனைவியாக வரப் போகிறவள் என்று அறிக்கைவிடுவான் என்று அவன் குடும்பத்தில் யாரும் எதிர்பாக்கவில்லை. அப்பா வில்லியம்ஸ் அபியிடம் முகம் கொடுத்துப் பேசவேயில்லை. ரிச்சர்டின் விருப்பம் தெரிந்தவுடன் அவனிடமும் பேச மறுத்துவிட்டார். அபிக்கு அந்தக் குடும்பப் பண்டிகை அவளது வரவால் மகிழ்ச்சி இழந்தது வருத்தமாக இருந்தது. ஆனால் ரிக்கி சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. அவளையும் அடுத்த நாளே அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான். அபியிடமும், “வருந்தாதே, அவர்கள் அக்கால மனிதர்கள், பழமையிலிருந்து வெளி வர விரும்பாத அசட்டுப் பிடிவாதம் என் அப்பாவிற்கு அதிகம். நீயும் நானும் சிறியவர்கள் அல்ல. உனக்கும் எனக்கும் என்ன பிடிக்கிறது என்று நமக்குத் தெரியும். வாழ்க்கையில் எது சரி, எது தவறு என்று ஆராய்ந்து பார்க்கும் அறிவு உள்ளவர்கள்தான் நாம். நமக்குப் பிடித்த வாழ்க்கையை நாம் தேர்ந்தெடுத்ததில் எந்தத் தவறும் இல்லை.” என்று ஆறுதல் சொன்னான். 

தொடர்ந்து கோடையில் அவர்கள் திட்டப்படியே அபி பட்டம் வாங்கியதும் அவர்கள் திருமணம் நடந்தது. அபியின் குடும்பமும் உறவினர்களும், நண்பர்களும், ரிக்கியுடன் பணியாற்றும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டார்கள். அவன் பெற்றோர் திருமணத்தைப் புறக்கணித்து விட்டனர். அவன் தனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவனது திருமணப் படங்களின் தொகுப்பையும் காணொளியையும் யூ டியுப், பிக்காஸா, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து கொண்டு செய்தி அனுப்பினான். திருமணமான கையோடு அவனுக்கு ஆஃப்கானிஸ்தான் செல்ல வேண்டிய உத்தரவு கிடைத்தது. எனவே அவன் திரும்பி வரும் வரை குழந்தை பெற்றுக் கொள்வதைத் தள்ளிப் போடவும், அவள் மேல் படிப்பில் சேர்ந்து அவன் திரும்பி வருவதற்குள் அவளது படிப்பை முடிக்கவும் திட்டம் போட்டார்கள். ரிக்கிக்குப் பெண் குழந்தை என்றால் மிகவும் ஆசை என்று அவளுக்குத் தெரியும். குழந்தை பிறக்கும் பொழுது அவன் உடன் இருப்பதை அபியும் விரும்பினாள். 

பெரும்பாலான இராணுவ வீரர்களுக்குத் தங்கள் குழந்தைகள் பிறக்கும் பொழுது அருகிருக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. படங்களையும் காணொளிகளையும்தான் முதலில் பார்ப்பார்கள். போர் முனையில் இருந்து வந்து சேர்வதற்குள் குழந்தை வளர்ந்திருக்கும். யாரோ மூன்றாவது மனிதரை அறிமுகப்படுத்துவது போல இதுதான் உன் அப்பா, இதுதான் உங்கள் பிள்ளை என்று அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும். அவர்களும் வாழ்வில் ஒரே ஒரு முறை கிடைக்கும் அரிய வாய்ப்பினை விரைவில் வளரும் குழந்தைகளின் முதல் மழலைச் சொல், முதல் நடை போன்ற மகிழ்ச்சி தரும் அனுபவங்களைத் தொலைத்துவிடுவார்கள். எனவே அவன் போருக்குச் சென்றதும் இவள் படிப்பைத் தொடர்ந்தாள். இருவரும் மின்னஞ்சல் மூலம் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வளர்த்துக் கொண்டார்கள். மீண்டும் திருமணத்திற்கு முன் இருந்த கல்லூரி நாட்கள் போலவே காலம் சென்றது. 

அவன் திரும்பி வருவதையும், அவள் பட்டம் வாங்குவதையும் ஒரு சேரக் கொண்டாட ஹவாய் அல்லது கரீபியன் தீவுகளுக்கு உல்லாசப் பயணம் சென்று கொண்டாடுவது, அல்லது உல்லாசக் கப்பல் பயணம் போவது, எங்கு வாழ்க்கையைத் தொடங்குவது போன்ற சிறியதும் பெரியதுமாகப் பலப் பல திட்டங்கள் இருவரிடமும் இருந்தன. ஆனால் அத்தனை திட்டங்களும் இராணுவத்தில் இருந்து ஒரு நாள் நள்ளிரவு வந்த தொலைபேசி அவசரச் செய்தி ஒன்றில் சிதைந்து சுக்கு நூறாக நொறுங்கியது. ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் நிகழ்ந்த “ப்ளாக் ஹாக் ‘ ஹெலிகாப்டர் விமான விபத்தில் ரிச்சர்டும் மேலும் சில வீரர்களும் இறந்து விட்டார்கள் எனவும், அவனது உடல் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு டெலாவேரில் உள்ள “டோவர் ஏர் ஃபோர்ஸ் பேஸிற்கு” அனுப்பி வைக்கப்படவிருப்பதை அறிவித்து வருத்தமும் தெரிவிக்கப்பட்டது. தூக்கத்தில் சிறிது நேரம் ஏதும் பயங்கரக் கனவு கண்டு கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் அபிக்கு வந்தது. அதிர்ச்சி மட்டும்தான் அவளுக்கு அப்பொழுது இருந்தது; அழுகை சுத்தமாக வரவேயில்லை. நிலைமை உண்மைதான் என உணர்ந்ததும் ரிச்சர்டின் தாயைக் கூப்பிட்டுச் செய்தியைச் சொன்னாள். பிறகு அவனது உடலை அவன் ஊருக்கு எடுத்துச் சென்று இறுதி மரியாதை செய்வதற்கும் அடக்கம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தாள். ரிச்சர்டின் பெற்றோர்கள் அவர்கள் பங்குக்கான ஏற்பாடுகளைத் தங்கள் ஊரில் தயாராகச் செய்து வைத்திருந்தார்கள். 

அபி நேற்று இரவு ரிச்சர்டின் ஊருக்கு வந்தாள், நாளை பொழுது விடியும் முன்னரே மீண்டும் பால்டிமோருக்குப் பயணமாவாள். ஏனோ வாழ்க்கையே ஒரு முடிவுக்கு வந்தது போல, அர்த்தமில்லாமல் போனது போல உணர்ந்தாள். கைபேசியை எடுத்து மணியைப் பார்த்தாள் நள்ளிரவுக்கு மேலே ஆகியிருந்தது. இன்னமும் மூன்று மணி நேரத்தில் கிளம்ப வேண்டும் தூக்கம் வரும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. கைபேசி வழியே தனது ஃபிலிக்கர் தளத்திற்குச் சென்று தனது படங்களின் தொகுப்பில் ரிச்சர்டின் படங்களாகத் தேடித் தேடி பார்க்க ஆரம்பித்தாள், கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. பார்வையை மறைத்தது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் பார்ப்பதைத் தொடர்ந்தாள். ரிச்சர்டிற்குப் பிறகு கையோடு தன்னை வெட்டிவிட்ட ரிச்சர்டின் தந்தை மீதோ, அதனை மறுத்து ஏதும் செய்ய இயலாமல் கலங்கிப் போயிருந்த ரிச்சர்டின் தாயின் மீதோ அவளுக்கு ஏனோ சிறிதும் கோபமே வரவில்லை. ரிச்சர்டே போன பிறகு இவர்கள் யார் என்ற நிலைக்கு அவள் மனம் எப்பொழுதோ சென்றுவிட்டிருந்தது. 


அபிக்கு மீண்டும் வகுப்புகள் ஆரம்பித்து அதில் மூழ்கிப் போனாள். ரிக்கியின் நினைவுகள் வரும்பொழுது புத்தகங்களையே வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருப்பாள், தலையில் எதுவும் ஏறாது. ரிக்கி ஆயுள் காப்பீடு எடுத்திருந்திருக்கிறான். அந்த இழப்பீட்டுத் தொகை அவளுக்குக் கிடைத்தது. அவனுக்கு இறுதி மரியாதை செலுத்தும்பொழுது வீர வணக்கத்துடன் முக்கோண வடிவில் மடித்துக் கொடுக்கப்பட்ட தேசிய கொடிக்கு ஒரு கண்ணாடி போட்ட முக்கோண வடிவ மரப்பெட்டியை வாங்கி அதில் கொடியைப் பத்திரப்படுத்தி ரிக்கியின் புகைப்படத்திற்கு அருகில் வைத்துக் கொண்டாள். 

நவம்பரில் ‘வெட்டரன்ஸ்’ நாள் (Veterans day) என்னும் வீரர்கள் தினத்தில் ரிக்கியின் நினைவு அவளை அதிகம் வாட்டியது. அவனது பெற்றோர்களுக்கும் அப்படித்தானே இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். அவர்கள் மூன்று பிள்ளைகளையுமே நாட்டுக்காக இழந்தவர்கள், அவர்களுக்கு வலி அதிகமாகத்தான் இருக்கும். ஒருமுறை அவர்களைப் போய்ப் பார்த்து வந்தாலென்ன என்று தோன்றியது. வரும் தேங்க்ஸ் கிவிங் நாளுக்குச் சென்று வர விமானப் பயணச் சீட்டு ஏற்பாடு செய்து கொண்டாள். ஆனால் ரிக்கியின் பெற்றோர்களுக்கு அவள் வருவதைத் தெரிவிக்க விரும்பவில்லை. வரத் தேவையில்லை என்று சொல்லிவிட்டால் மீறிப் போவது நன்றாக இருக்காது. திடீரெனப் போய் எதிரில் நின்றால் அவர்களால் தவிர்க்க முடியாது என்று அபிக்குத் தோன்றியது. 


மரங்களில் இருந்து இலைகள் உதிரத் தொடங்கின. குளிர் சிறிது சிறிதாக அதிகரித்தது. ரிக்கியின் தந்தை வில்லியம்ஸ் தனது சக்கரநாற்காலியை உருட்டிக் கொண்டு போர்ட்டிகோவிற்கு வந்தார். வாசலில் இருந்த பெரிய மக்னோலியா மரங்கள் ஏதோ அலுத்துச் சலித்துப் போனது போல அசைவற்று நின்றன. பெரும்பாலான வீடுகளின் வாசலில் தேங்க்ஸ் கிவ்விங் நாள் அலங்காரம் இருந்தது. வைக்கோல் கட்டும். சில சோளத் தட்டைகளும், சோளக் கொல்லை பொம்மைகளும், வாசல் கதவில் அலங்கார மலர் வளையங்களும் அல்லது குறைந்தது ஒரு ஆரஞ்சு வண்ணப் பூசணிக்காயாவது இருந்தது. 

வில்லியம்ஸ் குளிருக்கு இதமாக இருக்கச் சிவப்புக் கட்டம் போட்ட ஃப்ளேனெல் முழுக்கைச் சட்டை அணிந்து, பழுப்பு கார்டுராய் கால்சராயும் அணிந்திருந்தார். மடியில் புத்தகமும், கழுத்தில் கயிற்றில் தொங்கவிடப்பட்ட படிக்கும் கண்ணாடியும் இருந்தன. ஆனால்படிப்பில் ஆர்வம் இல்லாது வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். 

ரிக்கியின் அம்மா இரண்டு கோப்பைகளில் சூடான மால்ட் பானமும் அதில் மார்ஷ்மல்லோ கட்டிகளையும்  மிதக்கவிட்டுக் கொண்டுவந்தார். வில்லியம்ஸின் அருகில் இருந்த முக்காலியில் அவரது கைக்கெட்டும் தூரத்தில் கோப்பைகளை வைத்தார். தனது தோளில் போட்டு எடுத்து வந்திருந்த சால்வையை வில்லியம்ஸின் தோளில் போர்த்திவிட்டு, போர்ட்டிகோவில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டார். மனைவி வந்ததோ, அதைத் தொடர்ந்து அவர் செய்த பணிவிடைகளோ வில்லியம்ஸிடம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. சிலைபோலவே இறுகிய முகத்துடன் இருந்தார். அவரும் அவர் மனைவியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதும் குறைந்து விட்டது. ஏதோ மிச்சமிருக்கும் நாட்களைக் கழிக்க வேண்டுமே என்ற வெறுப்பில் நாட்களை ஓட்டும் மனப்பான்மையில் இருந்தார்கள். 

வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது இருவர் கவனத்தையும் கவரவில்லை. விமான நிலையத்தில் இருந்த ஊர்திகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த வண்டியை அபியே ஒட்டிக் கொண்டு வந்திருந்தாள். வண்டியின் கதவு திறந்து சாத்தப்படும் சப்தம் கேட்டு இருவரும் ஒரு சேரத் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களைப் பார்த்து கையை அசைத்து விட்டு வண்டியின் டிக்கியில் இருந்து ஒரு பெரிய தோல் பையை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டாள் அபி. அவளைப் பார்த்து எரிச்சலடைந்த வில்லியம்ஸ் தனது மனைவியை நோக்கித் திரும்பி,”ஏன் இந்தக் கறுப்பி இங்கே வந்திருக்கிறாள்? நீ ஏதும் அழைத்தாயா? என் நிம்மதியைக் குலைக்கவே பிறந்தவள் இவள். ஏதேனும் பணம் அல்லது உதவி என்று கேட்டால் துரத்திவிடு, இனி இந்தப் பக்கமே வராதே என்று எச்சரித்து விடு,” என்றார். 

அவர் பேசியது எங்கே அபியின் காதில் விழுந்துவிடுமோ என்று கலவரம் அடைந்த ரிக்கியின் அம்மா, “நான் அழைக்கவில்லை, அவள் வரப்போவது எனக்குத் தெரியாது. சரி, சரி, நீங்கள் அமைதியாக இருங்கள். இப்படிப் பேசுவது அவள் காதில் விழுந்தால் அவள் வருந்த மாட்டாளா? என்ன இருந்தாலும் அவள் நம் ரிக்கியை மணந்தவள் இல்லையா? நீங்கள் எதுவும் பேசாதீர்கள். அவளிடம் நானே பேசிக் கொள்கிறேன்,” என்று மெதுவான குரலில் அவரைக் கண்டித்து விட்டு எழுந்தார். 

“ஆமாம், இவளுடன் பேச எனக்கு என்ன இருக்கிறது?” என்று முணுமுணுத்தார் வில்லியம்ஸ். அவரது செய்கையால் ஆயாசம் அடைந்த அவர் மனைவி அவரைக் கண்களால் அடக்கிவிட்டு வாசலுக்கு வந்தார். 

“வா, அபி. என்ன இந்தப் பக்கம், நான் உன்னை எதிர்பார்க்கவே இல்லை.” 

“மாம், நீங்கள் மிகவும் மெலிந்து விட்டீர்கள்.” என்று கூறிய அபி ரிக்கியின் அம்மாவை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள். தோளில் தொங்கிய பையைப் போர்ட்டிகோவின் வாசல் கதவருகில் இருந்த ஆடும் நாற்காலியில் வைத்துவிட்டு, குளிருக்காக அணிந்திருந்த அங்கியின் தலைக் குல்லாவை நீக்கிவிட்டாள். 

“மாம், திடீரென முடிவெடுத்துப் புறப்பட்டுவிட்டேன், உங்களுக்குத் தெரிவிக்க அவகாசம் இல்லாமல் போனது.” என்றவள் சக்கரநாற்காலியில் அவளை வரவேற்காமல், வேறு புறம் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்த வில்லியம்ஸிடம் சென்று அவரையும் கட்டி அணைத்துக் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். 

“உங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது டாட்?” 

வில்லியம்ஸ் அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை. அதைப் பொருட்படுத்தாத அபி பையைத் திறந்து அதில் ரிக்கிக்கு இராணுவ மரியாதை செய்து முக்கோணமாக மடித்து அளிக்கப்பட்ட தேசிய கொடியை அது வைக்கப் பட்டிருந்த முக்கோண மரப்பேழையுடன் எடுத்துக்கொண்டு வீட்டிற்குள்ளே சென்றாள். ரிக்கியின் அம்மாவும் அவளைத் தொடர்ந்தார். 

“அபி, குளிருக்கு இதமாகச் சூடாகக் குடிக்க ஒரு சாக்லேட் பானம் செய்து தருகிறேன்” என்றவாறு சமையலறைக்குச் செல்லத் திரும்பினார். 

“வேண்டாம் மாம். நன்றி. இப்பொழுதுதான் விமான நிலையத்தில் பருகினேன், சிரமப்பட வேண்டாம், இந்தாருங்கள் இராணுவத்தினர் தந்த தேசிய கொடி ரிக்கியின் படத்திற்கு முன் வையுங்கள்” என்று கொடுத்தாள். 

“நீயே வைத்துவிடு அபி.” 

சுவரில் வரிசையாக மாட்டப்பட்டிருந்த படங்களில் இராணுவ உடையுடன் இருந்த ரிக்கியின் கொள்ளுத் தாத்தா, பெரிய தாத்தா, அண்ணன், அக்கா, ரிச்சர்ட் என அனைவரும் அவளைப் பார்த்துப் புன்னகைப்பது போல இருந்தது அபிக்கு. பொதுவாக அனைவருக்கும் ஒரு சல்யூட் வைத்தாள். அனைவரது படங்களுக்கும் கீழே அவரவர் தேசிய கொடி இருந்தது. ரிக்கியின் படத்திற்கு முன் இருந்த இடத்தின் கீழே மட்டும் அந்த நீண்ட ஷெல்ஃப் பலகை காலியாக இருந்தது. அபி அவன் படத்தின் முன்பு கொடியை வைத்துவிட்டு மீண்டும் அவனுக்கு மட்டும் ஒரு சல்யூட் வைத்தாள். 

அவன் திடீரெனப் படத்திலிருந்து எழுந்து வந்து, அபி அவன் மீது பானம் ஊற்றிவிடுவாள் என்பது போல அச்சப்படுவதாகப் பாசாங்குக் காட்டி ஓடிச் சிரிக்க மாட்டானா என்று தோன்றியது அபிக்கு. முதல் முறை அவனைப் பார்த்த பொழுது இருந்த அதே போன்ற அவனது தனித் தன்மையான முத்திரைச் சிரிப்புடன் படத்தில் அவன் இருந்தான். அவன் படத்துக்குப் பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பிவிட்டு அபி திரும்பினாள். அவள் கண்கள் கலங்கி இருந்தன. ரிக்கியின் அம்மாவும் கண்ணைத் துடைத்துக் கொண்டார். அபி அவர் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்துவிட்டு மீண்டும் வெளியே வாசலுக்கு வந்தாள். 

அவளைத் தொடர்ந்த ரிக்கியின் அம்மா, “உன் படிப்பு எப்படிப் போகிறது அபி, வரும் கோடையில் முடித்து விடுவாயல்லவா?’ என்றார். 

“ஆமாம் மாம். நன்றாகப் படிக்கிறேன், வரும் கோடையில் முடித்துவிடுவேன்.” 

அபி பையைக் குடைந்து அதிலிருந்து சிறிய கைப்பை ஒன்றை எடுத்து அதிலிருந்த ஒரு உறையை ரிக்கியின் அம்மாவிடம் கொடுத்தாள். 

“என்ன அபி இது?” என்றவாறு பிரித்தவர் அதில் உள்ள காசோலையை எடுத்துப் பார்த்தார். அதில் பெறுநர் ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் வில்லியம்ஸ்’ என்று குறிப்பிடப்பட்டு நானூறு ஆயிரம் டாலர்களுக்குத் தொகை நிரப்பப்பட்டிருந்தது. 

அவரது கேள்விக்குறியான பார்வையைப் புரிந்து கொண்ட அபி, “மாம், இது ரிக்கியின் உயிர் காப்பீட்டுத் தொகை எனக்குச் சேரவேண்டும் என்று குறிப்பிட்டு காப்பீட்டுப் பத்திரம் எடுத்திருந்திருக்கிறான். அதனால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.”

“நானூறு ஆயிரம் டாலர்களுக்குக் காப்பீடா!!! இராணுவம் வழங்கும் உச்ச காப்பீட்டு அளவுத் தொகை அல்லவா இது?” 

“ஆமாம் மாம். காப்பீடு செய்தது தெரியும், ஆனால் இந்த அளவுக்கு ஒரு பெரிய தொகைக்கு ரிக்கி செய்திருப்பான் என்று எனக்குத் தெரியாது.” 

“அதை ஏன் நீ எங்களுக்கு எழுதிக் கொடுக்கிறாய் அபி? அவன் உன் நலனுக்காகக் கொடுத்திருக்கிறான். அவனுக்கு ஏதாவது நேர்ந்தால் நீ சிரமப்படக் கூடாது என்பது அவன் நோக்கமாக இருந்திருக்கிறது. அதை நீ எங்களுக்குத் தர நினைப்பது தவறு. உன் படிப்பு முடிந்ததும் படிப்புக்காக நீ வாங்கிய கல்விக்கடனை அடைக்கலாம், ஒரு வேலை கிடைக்கும்வரை உள்ள இடைப்பட்ட காலத்தைத் தள்ள உதவியாயிருக்கும். ஒரு சிறிய ஊரில் நீ வாழ நினைத்தால் தொகையில் ஒரு பகுதியைப் போட்டு சிறிய வீடும், மற்றொரு பகுதியை மூலதனமாக வைத்து உனது திட்டப்படி ஒரு தொழிலும் தொடங்க முடியும், அதனால் உன் எதிர்கால வாழ்க்கையும் சீராக அமையும், இந்தா இதைப் பிடி. ரிக்கியின் விருப்பத்துக்கு மாறாக நீ இதைச் செய்வதோ, அதற்கு உடன்பட்டு நாங்கள் ஏற்றுக் கொள்வதோ சரியல்ல.” காசோலையை உறையில் போட்டு மீண்டும் அவளது பையிலேயே போட்டார் ரிக்கியின் அம்மா. 

“இல்லை மாம். போர் முனையில் மரணம் எதிர்பார்க்கக் கூடியது என்றாலும் ரிக்கியும் இவ்வளவு சீக்கிரம் அவன் வாழ்வு முடிவடையும் என நினைத்திருக்க மாட்டான். எங்களுக்குக் குழந்தைகள் இருந்தால் எப்படித் திட்டமிடுவானோ அது போல முன்னெச்சரிக்கையாகத் திட்டமிட்டிருப்பான் போலும். அவ்வாறு ஏதும் பிள்ளை பிறந்திருந்தால் நானே உங்களிடம் இந்தப் பணத்தைத் தர எண்ணாமல் அவன் குழந்தையின் நல்வாழ்விற்குத்தான் பயன்படுத்துவேன். ஆனால் நாங்கள் சிறிது காலம் போகட்டும் என நினைத்ததால் குழந்தைகளைப் பற்றிய எங்கள் திட்டங்கள் நிறைவேறாமல் போய்விட்டது. இவ்வளவு பணம் எனக்கு எதற்கு? எனக்குப் படிப்பு இருக்கிறது. உழைக்கும் காலம் இன்னமும் நிறைய இருக்கிறது. ஆர்வமும் இருக்கிறது. அந்த மூலதனமே எனக்குப் போதும் என் எதிர்காலத்தை நானே எதிர்கொள்வேன். டாடும் நீங்களும் சக்கரநாற்காலியை ஏற்றி இறக்கும் ஒரு வண்டியை இதில் வாங்கிக் கொண்டால் ரிக்கி நிச்சயம் மகிழ்வான், இல்லையா?” 

அபி மீண்டும் பையிலிருந்து உறையை எடுத்து ரிச்சர்டின் அம்மாவின் கையில் திணிக்க முயன்றாள். அவர் தடுத்தார். 

அபி சக்கரநாற்காலிக்கு அருகில் சென்று வில்லியம்ஸின் முன் முழங்காலிட்டு அமர்ந்தாள். அவர் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல், பொருட்படுத்தாமல் இன்னமும் சிலை போலவே அமர்ந்திருந்தார். அபி அவரது சட்டைப் பையில் உரையை மடித்துச் செருகினாள். அவரது மடி மீது முகத்தைப் புதைத்துக் கொண்டு “என்னை மன்னித்துவிடுங்கள் டாட்” என்றாள். 

அவர் மெதுவாகத் திரும்பி அவளைப் பார்த்தார். அபி தலையை உயர்த்திக் கலங்கிய கண்களுடன் மீண்டும், “என்னை மன்னித்துவிடுங்கள் டாட், உங்கள் பரம்பரையின் சிறப்பைத் தொடர, உங்கள் ஆசைப்படி, இராணுவத்தில் பணியாற்ற ரிக்கியின் வாரிசை உங்களுக்கு என்னால் கொடுக்க முடியாமல் போய்விட்டது. இதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.” என்றவள் எழுந்து வில்லியம்ஸை ஆறுதலாக அணைத்து மீண்டும் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, “உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் டாட்” என்று சொன்னாள். 

ஆடும் நாற்காலியில் இருந்த தனது தோள்பையை எடுத்து மாட்டிக் கொண்டு ரிக்கியின் அம்மாவை அனைத்து அவர் கன்னத்திலும் முத்தமிட்டாள். பிறகு வாசலைக் கடந்து திரும்பிப் பார்க்காமல் வெளியேறினாள். வண்டியில் ஏறும் முன்பு கையசைத்து, “குட் பை, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் வில்லியம்ஸ்” என்று கூறி வண்டியைக் கிளப்பிச் சென்றுவிட்டாள். 

அதுவரை டாட், மாம் என்றவள் சட்டென்று யாரோ முன்பின் தெரியாத மூன்றாம் மனிதர்களை அழைப்பது போல மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் என்றதிலிருந்து நீங்களும் நானும் இனி யார் யாரோ, நமக்குள் இனி எந்தத் தொடர்பும் இல்லை, இனி நீங்களே அழைத்தாலும் உங்கள் வீட்டில் நான் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று அபி குறிப்பால் உணர்த்தியது ரிக்கியின் அம்மாவிற்குப் புரிந்தது. தனது மகன் அன்பு செலுத்திய ஒரே உயிரும் அவர்களை விட்டு நீங்கியது புரிந்தது. அபியின் அந்த வேதனைக்குக் காரணம் அவள் வந்த பொழுது வில்லியம்ஸ் பேசியது அவள் காதில் விழுந்து விட்டதால் என்பதும் புரிந்தது. 

ஒரு தேங்க்ஸ் கிவிங் பண்டிகையில் தொடங்கிய அவளது உறவு மற்றொரு பண்டிகைச் சமயத்தில் முறிந்து விட்டது. அவர்கள் அவளைச் சரிவர நடத்தாவிட்டாலும் அவள் அந்தக் குடும்பத்திற்குத் தனது நன்றியைக் காண்பித்து விட்டாள். ஒரு பெருமூச்சுடன்,வேதனை நிறைந்த முகத்துடன் ரிக்கியின் அம்மா வில்லியம்ஸைத் திரும்பிப் பார்த்தார். இதுவரை சிலை போலவே இருந்த வில்லியம்ஸ் இப்பொழுது குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தார்.

– அனிச்ச மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2013, கௌதம் கெளதம் பதிப்பகம், சென்னை.

நன்றி: http://www.FreeTamilEbooks.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *