சிண்ட்ரெல்லா!

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 17,606 
 

‘கல்கி’யில் வெளியான என்னுடைய சிறுகதையின் வலைப்பதிவு வடிவம் இது.

‘வலைப்பதிவு வடிவம்’ என்று குறிப்பிட ஒரு காரணம் உண்டு. இந்த நிகழ்ச்சி முழுக்க உண்மையில் நடந்ததுதான். ஆகவே, இதை இந்த Blogக்கான ஒரு வலைப்பதிவாகவே எழுதத் தொடங்கினேன். பாதி எழுதிக்கொண்டிருக்கும்போது, ’இதைக் கொஞ்சம் மெனக்கெட்டால் ஒரு சிறுகதையாக மாற்றிவிடலாமே’ என்று தோன்றியது. ’என்ன பெரிய வித்தியாசம்?’ என்று யோசித்தபடி எழுதி முடித்தேன்.

இப்போது அதனை வாசித்தபோது, வலைப்பதிவும் கதையும் (என்னுடைய அளவுகோலில்) ஒன்றாகாது என்று தோன்றியது. முக்கியமான வித்தியாசம், 200 பேர்மட்டும் படிக்கப்போகும் வலைப்பதிவில் கொஞ்சம் வளவளா என்று அளக்கலாம். நுணுக்கமான வர்ணனைகள், விடையில்லாத கேள்விகளுக்கெல்லாம் இடம் உண்டு, சில முடிச்சுகளை அவிழ்க்காமல்கூட விட்டுவிடலாம், யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள். வெகுஜனப் பத்திரிகைக்கு எழுதும் கதையில் அதெல்லாம் முடியாது.

ஆகவே, இந்தப் பதிவில் சிறுகதை வடிவத்துக்குப் பொருந்தாது என்று எனக்குத் தோன்றிய பகுதிகளையெல்லாம் வெட்டி எடுத்துவிட்டு, ‘கல்கி’க்கு அனுப்பினேன். அதை அவர்கள் அப்படியே வெளியிட்டது எனக்கு மகிழ்ச்சி.

***

‘அப்பா, செருப்பைக் காணோம்!’

மகள் பரிதாபமாக வந்து சொல்ல, மும்முரமாக நடந்துகொண்டிருந்த நான் ஏதோ ஞாபகத்தில் தலையாட்டினேன். ‘வெரி குட் கண்ணு.’

அவள் குழப்பத்துடன் விழித்தாள். ‘அம்மா திட்டுவாங்களே!’

அப்போதுதான் எனக்கு லேசாகச் சுரீரென்றது. ’ஏன் கண்ணு? என்னாச்சு? அம்மா யாரைத் திட்டுவாங்க? உன்னையா? என்னையா?’ என்றேன்.

’செருப்பைக் காணோமே’ என்றாள் அவள் மறுபடி. கண்களில் உடனடி அழுகையின் ஆரம்பம் தெரிந்தது, ‘இங்கேதான்ப்பா விட்டேன்.’

விஷயத்தின் தீவிரம் உணர்ந்து, காதில் மாட்டியிருந்த சினிமாப் பாட்டை அவிழ்த்துப் பாக்கெட்டில் போட்டேன். ‘செருப்பைக் காணோமா?’

‘ஆமாப்பா, உனக்கு எத்தனைவாட்டி சொல்றது?’

நான் பரபரப்பாக அந்தப் பார்க்கைச் சுற்றி நோட்டமிட்டேன். மாலை வெளிச்சம் மங்கிக்கொண்டிருந்த நேரம் என்பதால் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த அரையிருட்டில் சின்னப் பிள்ளையின் செருப்புகளை எங்கே தேடுவது?

பொதுவாகக் குழந்தைகளுக்கு எதையும் பத்திரமாகப் பாதுகாக்கும் அக்கறையும் கிடையாது, அவசியமும் கிடையாது, அவற்றைத் தொலைப்பதுபற்றி அவை பெரிதாக அலட்டிக்கொள்ளப்போவதும் இல்லை.

ஆனால் பெரியவர்கள் அப்படி விட்டேத்தியாக இருந்துவிடமுடியாது. செருப்பு தொலைந்தது என்றால், குழந்தை வெறுங்காலுடன் நடந்து காலில் கல்லோ முள்ளோ குத்திவிடுமோ என்கிற நினைப்புக்குமுன்னால், அந்தச் செருப்பை எத்தனை காசு கொடுத்து வாங்கினோம் என்பதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. ‘ஏன் தொலைச்சே? காசு என்ன மரத்துல காய்க்குதா’ என்று அதன்மீது பாய்கிறோம்.

நான் பாயப்போவதில்லை, என் மனைவி பாய்வாள். அதற்காகதான் குழந்தை அழுகிறாள், செருப்பைத் தொலைத்துவிட்டோமே என்பதற்காக அல்ல.

பெரியவர்களின் புரியாத காசுக் கணக்கினால், தாங்கள் அணிந்துள்ள, பயன்படுத்துகிற பொருள்களின்மீது ஓர் இயல்பற்ற, அவசியமற்ற போலி அக்கறையைப் பிள்ளைகள் வளர்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆனால் அதன்மூலம் அவை அந்தப் பொருள்களைத் தொலைக்காமல் பத்திரமாகப் பாதுகாக்கப்போவதும் இல்லை என்பது இந்தப் பெரியவர்களுக்குப் புரிந்து தொலைப்பதில்லை.

இந்த அபத்தக் கூட்டணியின் விளைவு, பிள்ளைகள் எதையாவது எக்குத்தப்பாகத் தொலைத்துவிட்டுப் பதறுகிறார்கள். அப்படிப் பதறுவதைத்தவிர அவர்களால் வேறு எதையும் செய்துவிடமுடியாது எனும்போது, நாம் அந்த அநாவசிய மன அழுத்தத்தை அவர்களுக்கு ஏன் தரவேண்டும்?

இத்தனை விளக்கமாக எழுதிவிட்டேனேதவிர, இதை எப்போதும் என் மனைவியிடம் சொல்லிப் புரியவைக்க என்னால் முடிந்ததில்லை. ‘அதுக்காக, எல்லாத்துலயும் கேர்லஸா இருன்னு பிள்ளைக்குச் சொல்லித்தரணுமா?’ என்பார் நேர் எதிர்முனையில் நின்று.

இதனால், வீட்டில் ஏதாவது பண்டிகை, விசேஷம், உறவுக்காரர்கள் திருமணம் என்றால் பிள்ளையைவிட, எனக்குப் பதற்றம் அதிகமாகிவிடும். பெண் குழந்தையாச்சே என்று அதன் கழுத்தில் நகையை மாட்டுவானேன், பிறகு தொலைத்துவிட்டுப் பதறுவானேன்?

ஒன்று, குழந்தைக்கு நகையைமட்டும் மாட்டவேண்டும், அதுவாக வந்து ‘இந்த நகை எனக்கு வேண்டும்’ என்று விரும்பிக் கேட்டாலொழிய, நம் ஆசைக்காக அதை அலங்கரித்துவிட்டு, பின்னர் அந்த நகையைப் பராமரிக்கிற பொருந்தாத பொறுப்பை இலவச இணைப்பாகத் தரக்கூடாது.

அல்லது, குழந்தைக்கு நகை அணிவிப்பது என் ஆசை, ஆகவே, அந்த நகை தொலையக்கூடும் என்கிற சாத்தியத்துக்கும் நான் மனத்தளவில் தயாராகிவிடவேண்டும். ஒருவேளை அதைப் பாதுகாத்தே தீர்வதென்றால், அந்தப் பொறுப்பை நான்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லவா?

என் கட்சி, கடையில் திரும்பக் கிடைக்காத அபூர்வமான பொருள்களைத் தொலைத்தாலேனும் கொஞ்சம் வருந்தலாம், மற்றவற்றைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இன்னொரு பிரதி வாங்கிக்கொண்டுவிடலாம், குழந்தை மனத்தைவிடவா அந்த அற்ப செருப்பு முக்கியம்?

இந்தத் தத்துவ விசாரங்கள் ஒருபக்கமிருக்க, இப்போது அந்தச் செருப்பு எங்கே போனது?

குழந்தை இங்கேதான் அவிழ்த்துவிட்டேன் என்கிறாள். அந்த இடத்தில் பல பாதச் சுவடுகள்மட்டுமே உள்ளன. செருப்பைக் காணவில்லை.

செருப்பு என்ன தங்கச் சங்கிலியா? அதற்கென்று யாரும் திருடர்கள் வரப்போவதில்லை. பல குழந்தைகள் ஓடியாடும் இடம், ஏதாவது ஒன்று அந்தச் செருப்பை ஓரமாகத் தள்ளிவிட்டிருக்கக்கூடும். கொஞ்சம் தேடினால் கிடைத்துவிடும்.

மிச்சமிருக்கும் சொற்ப வெளிச்சத்தில் என்னுடைய செல்ஃபோனையும் துணையாகச் சேர்த்துக்கொண்டு மெதுவாகத் தேட ஆரம்பித்தேன். குழந்தை விசும்பியபடி என் பின்னால் நடந்துவந்தாள். நான் குனிந்து தேடுகிற அதே இடங்களில் அவளும் அக்கறையாகத் தேடினாள்.

நாங்கள் அந்த மணல் தொட்டியை முழுக்கச் சுற்றிவந்தாயிற்று. சறுக்குமரம், ஊஞ்சல்கள், சீ சா, குரங்குக் கம்பிகள் போன்றவற்றின் கீழும், ஏ, பி, சி, டி வடிவத்தில் அமைந்த இரும்பு வலைகளுக்குள்ளும், அக்கம்பக்கத்து பெஞ்ச்களின் இருட்டுக் கால்களுக்கிடையிலும்கூடக் குனிந்து தேடியாகிவிட்டது. செருப்பைக் காணவில்லை.

ஒருவேளை, ஒற்றைச் செருப்பு கிடைத்திருந்தாலாவது தொடர்ந்து தேடலாம். இரண்டுமே கிடைக்கவில்லை என்பதால், யாரோ அதனை எடுத்துப் போயிருக்கவேண்டும். குழந்தைச் செருப்பை யாரும் வேண்டுமென்றே திருடமாட்டார்கள், தவறுதலாகதான் கொண்டுசென்றிருப்பார்கள்.

எப்படியும் அந்தச் செருப்பு இன்னொரு சின்னக் குழந்தைக்குதானே பயன்படப்போகிறது? அனுபவிக்கட்டும்! நான் தேடுவதை நிறுத்திவிட்டேன்.

ஆனால் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்தாள். ‘அம்மா திட்டுவாங்க’ என்பதைத் தவிர வேறு வார்த்தை அவளிடமிருந்து வரவில்லை.

‘பரவாயில்லை கண்ணு, நான் சொல்றேன் அம்மாகிட்டே’ என்றேன் நான். ‘திட்டமாட்டாங்க, கவலைப்படாதே!’

அவள் திருப்தியடையவில்லை. மறுபடி ஒருமுறை அந்த மணல் தொட்டியை ஏக்கமாகத் திரும்பிப் பார்த்தாள். ‘இங்கேதான்ப்பா விட்டேன்’ என்று வேறோர் இடத்தைக் காட்டினாள்.

இதற்குள் பூங்காவில் மற்ற எல்லாரும் கிளம்பிச் சென்றிருந்தார்கள். நாங்கள்மட்டும்தான் தனியே நின்றோம். அந்த வெறுமையில் செருப்பு அங்கே இல்லாத உண்மை ‘பளிச்’சென்று உறைத்தது.

பாதரச விளக்கு வெளிச்சம். தரையில் கிடந்த சிறு சருகுகளுக்கும் நிழல் முளைத்திருந்தது. அவற்றைப் பார்க்கப் பார்க்க, ஒவ்வொன்றும் சிறு பிள்ளைச் செருப்புகளைப்போலவே தோன்றியது.

நாங்கள் இன்னொருமுறை அந்த விளையாட்டுப் பூங்காவை மெதுவாகச் சுற்றி வந்தோம். ஒருவேளை மணலுக்குள் ஒளிந்திருக்குமோ என்கிற சந்தேகத்தில் காலால் விசிறிக்கூடத் தேடினோம். பலன் இல்லை.

இனிமேலும் தேடுவது நேர விரயம். வீட்டுக்குப் போகலாம்.

‘எப்படிப்பா? கால் குத்துமே.’

‘வேணும்ன்னா என் செருப்பைப் போட்டுக்கறியா?’ அவிழ்த்துவிட்டேன்.

‘உனக்குக் கால் குத்துமே.’

’பரவாயில்லை, போட்டுக்கோ.’

அவள் நிச்சயமில்லாமல் அந்தச் செருப்புக்குள் நுழைந்தாள். இப்போதுதான் நடை பழகுகிறவளைப்போல் மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்தாள்.

நானும் செருப்பில்லாமல் வெறும் தரையில் நடப்பது ரொம்ப நாளைக்குப்பிறகு இப்போதுதான். உள்ளங்காலில் நறநறத்த சின்னச் சின்ன மண் துகள்கள்கூட, கண்ணாடித் துண்டுகளாக இருக்குமோ, காலைக் கிழித்துவிடுமோ என்று கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

சிறிது நேரத்துக்குள், அவள் பொறுமை இழந்துவிட்டாள். ‘எனக்கு இந்தச் செருப்பு வேணாம்ப்பா’ என்றாள். ‘ரொம்பப் பெரிசா இருக்கு.’

‘அதுக்காக? வெறும் கால்ல நடப்பியா?’ எனக்குச் சட்டென்று அந்த யோசனை தோன்றியது. ‘அப்பா உன்னை உப்பு மூட்டை தூக்கிக்கட்டுமா?’

‘ஹை!’ என்றாள் அவள் அனிச்சையாக, ‘நிஜமாவா சொல்றே?’

’ஆமா கண்ணு’ என்று குனிந்தேன், ‘ஏறிக்கோ, வீட்டுக்குப் போகலாம்!’

அவள் உற்சாகமாக என் முதுகில் தாவி ஏறினாள். சற்றே சிரமத்துடன் எழுந்து என்னுடைய செருப்பை அணிந்துகொண்டேன், நடக்க ஆரம்பித்தேன்.

இதற்குமுன் அவளை உப்பு மூட்டை தூக்கிச் சென்றது எப்போது என்று எங்கள் இருவருக்குமே நினைவில்லை. சின்ன வயதில் ஆசையாகத் தூக்கியது, வயதாக ஆக இடுப்பில் தூக்கிவைத்துக்கொள்வதுகூடக் குறைந்துவிட்டது. ‘இனிமே நீ பிக் கேர்ள், நீயே நடக்கணும்’ என்று பொறுப்பைச் சுமக்கவைத்துவிட்டோம்.

ஆகவே, இந்தத் திடீர் விளையாட்டு எங்கள் இருவருக்குமே இனம் புரியாத பரவசத்தைக் கொடுத்தது. இருபது ப்ளஸ் கிலோ முதுகில் கனத்தபோதும்.

ரோட்டில் எங்களைப் பார்த்தவர்கள் விநோதமாக நினைத்திருப்பார்கள். ‘ஏழெட்டு வயசுப் பொண்ணை முதுகுல தூக்கிட்டுப் போறானே, இவனுக்கென்ன பைத்தியமா?’

நினைத்தால் நினைக்கட்டுமே. அதற்காக ஒவ்வொருவரிடமும் போய் ‘செருப்பு தொலைஞ்சுடுச்சு’ என்று தன்னிலை விளக்கமா கொடுத்துக்கொண்டிருக்கமுடியும்?

ஒருவேளை செருப்பு தொலையாவிட்டாலும்கூட, என் பிள்ளையை நான் உப்பு மூட்டை சுமக்கிறேன்? உனக்கென்ன? சர்த்தான் போய்யா!

சிறிது தொலைவுக்குப்பின் காதருகே கிசுகிசுப்பாக அவள் குரல் கேட்டது, ‘அப்பா, நீ ஏன் எதுவும் பேசமாட்டேங்கறே?’

‘பேசலாமே, நோ ப்ராப்ளம்’ என்றேன். ‘நான் உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?’

‘அப்பா, உனக்கு ஏன் இப்டி மூச்சுவாங்குது?’ என்றாள் அவள், ‘நான் ரொம்ப கனமா இருக்கேனா? கீழே இறங்கிடட்டுமா?’

‘சேச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்லை, அப்பாவுக்குப் பெரிய தொப்பை இருக்குல்ல, அதான் மூச்சு வாங்குது!’

‘தொப்பையைக் குறைக்கதானே நீ பார்க்ல வாக்கிங் போறே?’ அவள் பெரிதாகச் சிரித்தாள், ‘நீ வாக்கிங்ன்னு டெய்லி பார்க்குக்கு வர்றதால எனக்கும் ஜாலி, உன்னோட வந்து விளையாடலாம்.’

‘ஆமா, ஆனா செருப்பைத் தொலைக்கக்கூடாது, அம்மா திட்டுவாங்க.’

‘சரிப்பா, இனிமே தொலைக்கலை’ என்றவள் மறுநிமிடம் அதை மறந்து, ‘அப்பா, உன் தொப்பை குறைஞ்சுட்டா நீ டெய்லி வாக்கிங் போகமாட்டியா? என்னையும் பார்க்குக்குக் கூட்டிகிட்டு வரமாட்டியா?’

‘என் தொப்பை குறையறதுக்குள்ள நீ பிக் கேர்ள் ஆகிடுவேம்மா, அப்போ உனக்குப் பார்க்ல்லாம் தேவைப்படாது.’

அவளுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். பின், ‘நிலா சூப்பரா இருக்குப்பா’ என்றாள் மிக மெல்லிய குரலில்.

நான் மெல்ல நிமிர்ந்து பார்த்தேன். கழுத்தில் தொற்றியிருந்த அவளுடைய கைகள் சுவாசத்தை இறுக்கின. மெதுவாக நடந்தபோதும் மூச்சிரைத்தது, அதற்கு நடுவிலும், நிலா அழகாகதான் இருந்தது.

ஐந்து நிமிட நடையில், எங்கள் வீடு நெருங்கிவிட்டது. ‘நான் இறங்கிக்கறேன்ப்பா’ என்றாள் அவள்.

’ஏன்ம்மா?’

‘நான் அம்மாகிட்டே போகணும். செருப்பு தொலைஞ்சுடுச்சுன்னு சொல்லணும். இறக்கி விடுப்பா, ப்ளீஸ்!’

இது என்னமாதிரி மனோநிலை என்று புரியாமல், மெல்லக் குனிந்து அவளைக் கீழே இறக்கிவிட்டேன். வெற்றுப் பாதங்களைப் பற்றித் துளி கவலையில்லாமல் குடுகுடுவென்று வீட்டை நோக்கி ஓடினாள். அந்த வேகம், எனக்குப் பொறாமை தந்தது.

நிமிர்ந்து நிலாவைப் பார்த்தபடி நடந்தேன். வீட்டுக்குள் உற்சாகமான பேச்சுக்குரல் கேட்டது. ’பரவாயில்லை விடு கண்ணு, அது பழைய செருப்புதான், நாளைக்குக் கடைக்குப் போய்க் குட்டிக்குப் புதுச் செருப்பு வாங்கலாமா?’

– நவம்பர் 2012

Print Friendly, PDF & Email

1 thought on “சிண்ட்ரெல்லா!

  1. அருமையான கதை என் பால்ய நினைவுகளை கொண்டு வந்து விட்டது..நானும் இது போன்று ஏன் தந்தையின் முதுகின் மீது உப்பு மூட்டை எறியதுண்ண்டு ,,அந்த இன்பத்திற்கு அளவென்பதே இல்லை.. வார்த்தைகளால் விவரிக்க முடியாத பாசமும் இன்பமும் ஒருங்கே அமைந்திருந்த சமயம் அது… பசுமை மாற நினைவுகளாக என் நெஞ்சில் உள்ளன..

    வாழ்த்துக்கள் இது போன்று நெகிழ வைக்கும் கதையை அளித்ததற்கு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *