சிலுவையின் எடை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 9,908 
 
 

அந்த சாய்வு நாற்காலியில் மெதுவாக உட்கார்ந்தார் ஆரோக்கியதாஸ். வழக்கம்போல் அவரது பார்வை அந்த கண்ணாடி பீரோவின் அருகில், வண்ண விளக்குகளால் சூழப்பட்டிருந்த அந்த படத்தின்மேல் பதிந்தது. யூதர்கள் கையில் சாட்டைகளுடன் நிற்க, சிலுவையை சுமந்துகொண்டு நடக்கும் இயேசுநாதரின் படம் அது. அந்த கருணை ததும்பிய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

ஒவ்வொரு முறையும் அந்த படத்தைப் பார்க்கும்போது, ” நீ சுமந்த அந்த சிலுவையின் எடை என்னப்பா?”, என்று மனதிற்குள்ளேயே கடவுளை கேட்டுக்கொள்வார். உலகத்திற்கே தெரியாத அந்த உண்மை அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஓய்வுபெற இன்னும் 4 மாதங்களே உள்ளன அவருக்கு.

தனக்கு வந்த பதவி உயர்வுகளையெல்லாம் நிராகரித்து, அன்றிலிருந்து இன்றுவரை எலிமெண்ட்ரி ஸ்கூல் வாத்தியாராகவே, குழந்தைகளுடன் காலம் கழித்து ஓய்வுபெறப் போவதை நினைத்தபோது அவருக்குப் பெருமையாகத்தான் இருந்தது.

திருமணமாகி 25 வருடங்கள் ஆகியும் தனக்கு குழந்தையே இல்லை என்பதும், தொடக்கக் கல்விதான் ஒரு குழந்தையை செதுக்கி நல்லமுறையில் உயர்த்தும் என்ற அவரின் மேலான கருத்தும்தான், அவர் தனக்கு வந்த பதவிகளையெல்லாம் உதறிவிட்டு, எலிமெண்ட்ரி ஸ்கூல் வாத்தியாராகவே இருக்க விருப்பப்பட்டார்., என்பது அவருக்கு மட்டுமல்ல, அந்த ஊரில் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

‘ஆரோக்கியதாஸ் வாத்தியார் வரார்’, என்றாலே இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான். கை நீட்டி அடிக்காத வாத்தியார் என்றால் கேட்கவேண்டுமா என்ன?

”பரங்கிக்காயைப் பறித்து….பட்டையை நன்றாய் சீவி….பொடிப்பொடியாய் நறுக்கி”, என்று ஆரம்பித்து அதையே பொறியல், சாம்பார், கூட்டு, பாயசம் என வாயாலேயே சமைத்து ஊட்டிவிடும் அவரை குழந்தைகள் அளவுகடந்து நேசிப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.

எந்தவொரு குழந்தையையும் அடிக்காமலும், அவர்கள் மனது புண்படாமலும் நடந்து இத்தனை வருடங்கள் ஓடிவிட்டதை நினைக்கும்போது அவருக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. இதில் தனக்கு கர்வப்படவும் உரிமை இருக்கிறது என்று சில சமயங்களில் நினைத்ததும் உண்டு.

”ரிட்டயர்டு ஆகிவிட்டால் தெனமும் உன்னை பாத்துகிட்டே இருப்பேன்…தெனைக்கும் அந்த கேள்விய கேட்பேன்”, பெருமூச்சு விட்டார்.

”அய்யா…”

வெளியில் யாரோ கூப்பிட்டார்கள்.

”யாரு?”, மூக்குக் கண்ணாடியை துண்டால் துடைத்துக்கொண்டே வெளியே வந்தார் ஆரோக்கியதாஸ்.

ஒரு நடுத்தர வயது பெண்ணும் அவளுக்குப் பக்கத்தில் ஒரு வயதான பெண்மணியும் நின்றுகொண்டிருந்தனர்., அந்த வயதான பெண்மணி அநேகமாக அந்த பெண்ணின் தாயாராகவோ அல்லது மாமியாராகவோ இருக்க வேண்டும். கூடவே ஒரு ஆறு வயது சிறுவனும் நின்றுகொண்டிருந்தான்.

மூக்குக் கண்ணாடியை நன்கு உயர்த்தி பார்த்ததில் அந்த சிறுவனை மட்டும்தான் அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.

”நீ மில்லுக்காரர் மாணிக்கம் பையன்தானே! என்ன விஷயம்…இவங்க யாரு?”

”அய்யா! நாங்க வடக்குத் தெருவுங்க…எம்புள்ள உங்க கிளாஸ¤ல….”, விசும்பத் தொடங்கினாள் அந்த பெண்மணி.

இவருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

”என்னம்மா? அழுவாம சொல்லு…என்ன ஆச்சு?”

”சார் இவங்க… நம்ம கிளாஸ¤ல படிக்குதுல்ல கோமதி…அதோட அம்மா…சார்”, என்றான் அந்த சிறுவன்.

இவரின் மனம் வகுப்பறைக்குச் சென்று, அத்தனை பெண் குழந்தைகளுக்கு மத்தியில் கோமதியைக் கண்டுபிடித்து, அவள் உருவத்தை தன் கண்களில் பதிப்பதற்கு முன்னமே,

”அந்த புள்ள பூச்சிமருந்த குடிச்சிருச்சுங்க”, என்றாள் அந்த வயதான பெண்மணி. அவள் சொல்லும்போதே பக்கத்திலிருந்த பெண்ணின் அழுகை வேகம் பிடித்தது.

”மொதல்ல அழுவாம என்ன நடந்ததுன்னு வெலாவாரியா சொல்லுங்க”, ரேழிக்கு அவர்களை அழைத்து உட்காரச் சொன்னார்.

”அந்த புள்ள வீட்ல யார்கிட்டேயும் நாலஞ்சு நாளா பேசவே இல்லீங்க…’உம்’முன்னு இருந்திச்சு…பூச்சிமருந்து டப்பாவ கக்கூஸ¤க்குள்ள எடுத்துகிட்டுப் போய் குடிச்சு அங்கயே விழுந்து கெடந்திச்சுங்க…”

மேற்கொண்டு பேசமுடியாமல் அழுகை அவளின் தொண்டையை அடைத்தது.

”மூச்சுத் தெணறி சத்தம் போட்டுச்சு…ஆஸ்பத்திரில கெடத்திருக்கு., சின்ன புள்ள… எவ்வளவு நேரங்க தாங்கும்?”, அழுகை அந்த பெண்ணை பேசவிடவில்லை.

”நீங்க அப்படி பண்ணாம இருந்திருந்தா அந்த புள்ள இப்படியெல்லாம் போயிருக்காதுங்க…பேத்தியோட சிரிப்பு கண்ணுல நிக்குதுங்க…”, அழ யத்தனித்தாள் அந்த பெண்மணி.

தூக்கிவாரிப் போட்டது இவருக்கு.

‘நான் என்ன பண்ணினேன்?’, குழப்பம் தெளிய மறுத்தது. இனி அந்த இரண்டு பெண்மணிகளை விசாரித்துப் பிரயோஜனமில்லை.

”ஸ்கூல்ல யாராவது அந்த பொண்ண அடிச்சீங்களா? கேலி செஞ்சீங்களா? என்னப்பா நடந்தது?”, அந்த சிறுவனை அணைத்துக் கொண்டார்.

”நான் ஒன்னும் செய்யல சார்…போனவாரம் மேரிய அடிச்சான்னு கோமதிய கூப்பிட்டு தனியா உட்கார வச்சீங்க., அது கையில துணியக் கொடுத்து போர்டு அழிக்க சொன்னீங்க…”, நிறுத்தினான் சிறுவன்.

சென்றவார சம்பவம் இவருக்கு ஞாபகம் வந்தது.

‘பெருக்கல் கணக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, வகுப்பறையில் சிறு ஆரவாரம். திரும்பி பார்த்தபோது இரண்டு மூன்று அடிகள் மேரியின் மீது விழுந்தது. மேரியால் கோமதியின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. இடையில் புகுந்து விளக்கி சமாதானப் படுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது. வழக்கமான பென்சில், சிலேட்டு சண்டையாக இருந்திருக்கக் கூடும். கோமதியை மேரியின் பக்கத்தில் விடாமல் தனியாக உட்காரவைத்து, கணக்குப் பாடம் முடிந்தவுடன் துணியைக் கொடுத்து போர்டு அழிக்கச் சொன்நது ஞாபகத்திற்கு வந்தது.

”அன்னிக்கு சாயந்திரம் மேரி, ஸ்டெல்லா, முத்து, பீட்டர் எல்லோரும் சேர்ந்து போர்டு அழிக்கிற துணிய கோமதிக்கிட்ட கொடுத்து ‘பலகைய சுத்தம் பண்ணு’, ‘பீட்டரோட செருப்பத் துடை’ன்னு சொல்லி ரொம்ப கிண்டல் பண்ணினாங்க சார்., துடைக்கலைன்னா தனியா அந்த பலகைலதான் உட்காரணும்., எங்ககூட சேத்துக்க மாட்டோம்’னு சொன்னாங்க., அதனால திரும்பவும் ரெண்டு பேருக்கும் சண்டை வந்திடிச்சு சார்…அதுக்கப்புறம் கோமதி அழுதுகிட்டே வீட்டுக்குப் போயிடிச்சு”, முடித்தான் சிறுவன்.

அந்த மழலைச் சொற்கள் அவரை ஆட்டம் காண வைத்தன.

”ரெண்டுபேரும் பக்கத்துல உட்கார்ந்தா சண்டை போடறாங்கன்னு கோமதிய தனியா உட்கார சொன்னேன்…போர்டு அழிக்கச் சொன்னது சாதாரணமா நடந்தது…இதப் போய் ஏன் சீரியஸா எடுத்துகிட்டு, பூச்சிமருந்து வரைக்கும் போய்….”, அதற்குமேல் அவரால் பேச முடியவில்லை.

”அத தண்டனையா நெனச்சு மனசுக்குள்ளயே புழுங்கி கெடந்திருக்கு புள்ள…”

‘அந்த சிறுமியை போர்டு அழிக்கச் சொல்லியிருக்கக் கூடாதுதான். குழந்தைகள் ஸ்கூலுக்குப் படிக்க வருகிறவர்கள். அவர்களிடம் வேறு வேலைகளை சொல்ல பெற்றோருக்கு அதிகாரம் உண்டே தவிர ஆசிரியருக்கு இல்லை.’

”அந்த புள்ளைய நாலஞ்சு நாளா கூப்பிட்டு தனியா உட்கார சொன்னதால, அத ஒதுக்கிட்டீங்களோன்னு நெனச்சு இப்படி பண்ணிருச்சுங்க…”

அழுதுகொண்டிருந்த அந்த அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது? பிள்ளையை பெற்றிருந்தாலல்லவா அந்த வலி தெரியும்? சாதாரணமான விஷயம்தான் என்றாலும், தவறுக்குத் தானும் காரணம் என்பதால் அவரால் பேச இயலவில்லை.

ஒரு சிறுமி தற்கொலை முயற்சி செய்யும் அளவிற்கு தன்னுடைய செயல் அமைந்துவிட்டதை எண்ணி பார்த்தபோது, அந்த வருத்தம் பாவமாக அவர் மனதில் நிலைகொண்டது. இதற்காக கேலி செய்த மற்ற சிறுவர்களை கண்டிக்கவேண்டும். அது எப்படி முடியும்? ஒருவேளை கண்டிக்கப்போய் அந்த சிறுவர் சிறுமிகளில் யாராவது ஒருவர் கோமதியைப்போல் செய்துவிட்டால்…? மீண்டும் ஒரு பாவத்தைத் தாங்க முடியுமா?.

தூக்கம் குழம்பியது. ஆதரவுக்கு யாராவது வேண்டும் போலிருந்தது. மனைவி ரோஸ்லினை நினைத்துப் பார்த்தார். ரத்தப் புற்றுநோயால் அவள் இறந்தபோது அந்த வீட்டில் இருந்த வெறுமை தற்போது பன்மடங்காகி தன்னைத் தின்பதுபோல் உணர்ந்தார்.

”மன்னிப்பு கேட்பதற்கு வயசு பார்க்கக்கூடாது”, என்று ரோஸ்லின் சொல்வது அடிக்கடி அவர் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. நிலவிய மெளனத்தோடும், வெறுமையோடும் அவரின் யுத்தம் தொடர்ந்தது.

மறுநாள் ஆஸ்பத்திரியில்…

மூக்கிற்கும், வாய்க்கும் சேர்த்து ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தியிருந்தார்கள். சலைன் வாட்டர் ஒருபக்கம் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. கோமதி இவரைப் பார்த்து ஏதோ சொல்ல முயல, பக்கத்திலிருந்த நர்ஸ் மெதுவாக ஆக்ஸிஜன் மாஸ்க்கை எடுத்தாள்.

”இனிமே யாரையும் அடிக்க மாட்டேன் சார்”,ஈனஸ்வரத்தில் சிணுங்கினாள் அந்த சிறுமி. அவளின் தலையை மெதுவாகக் கோதினார் ஆரோக்கியதாஸ். மன்னிப்பு கேட்டு அழவேண்டும் போலிருந்தது. நா தழுதழுக்க அவர் பேச ஆரம்பித்தபோது,

”பேஷண்ட டிஸ்டர்ப் பண்ணாதீங்க…சார் உங்க விசிட்டிங் டைம் முடிஞ்சுபோச்சு…”, உள்ளே வந்த டாக்டர் இவரை வெளியேற்றினார்.

வீட்டில் அந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தார். ஆஸ்பத்திரியில் கிடத்தியிருந்த கோமதியின் முகம் அவர் கண்களில் நிழலாடிக் கொண்டிருந்தது.அந்த சிறுமிக்கு கடன்பட்டிருப்பதாக உணர்ந்தார். தன் மனதில் நிலைகொண்டிருந்த அந்த பாவத்தின் எடை அதிகரிப்பதுபோல் இருந்தது.

வழக்கமாக அவரது பார்வை அந்த படத்தின்மேல் நிலைகுத்தி நின்றது. இப்போது அந்த சிலுவையின் எடை அவருக்குப் புரிந்தது. உலகத்தின் மொத்த பாவங்களையும் சுமந்து செல்லும் இயேசுநாதரின் கருணை ததும்பிய அந்த முகத்தையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரது அந்த பார்வை, ”என்னுடைய இந்த பாவத்தையும் சுமப்பாயா?”, என்று இறைஞ்சுவதுபோல் இருந்தது.

– திரு [thiru_writer@hotmail.com] (ஜூன் 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *