“உங்களுக்கு ஆயுசு நூறு சார்” என்றான் மெக்கானிக். நூறு கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் இவர் பேருக்கு தலையாட்டிக் கொண்டு சிரித்து வைத்தார். வாங்குற சம்பளத்துல பாதி வண்டிக்கே போய்விடுதே என எண்ணிக் கொண்டே சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்.
வரும் வழியில் கயல்விழியை நினைத்துக் கொண்டார் வரதுப்பிள்ளை. இறங்கும் முன் ஓடிவந்து பையைத் துழாவுவாள். பிள்ளை ஏமாறாதிருக்க ஏதாவது வாங்கிப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டவராய், பகவான் ஸ்வீட் ஸ்டாலில் வண்டியை நிறுத்தி ஓமப்பொடி வாங்கிக் கொண்டார்.
கடையிலிருந்து வீட்டுக்கு நான்கு மைல் தூரம். வீட்டை வந்து அடையும் வரை ஏதாவதொரு பிரச்சனை அவருடைய நெஞ்சைக் குடைந்து கொண்டிருக்கும். இரண்டு வருடங்களாக அதாவது கயல் பிறந்ததிலிருந்து மனதிற்கு சற்று ஆறுதலாக இருக்கிறது. அவள் தூங்குவதையும், சாப்பிடுவதையும் பார்க்கும் போது அப்பா ஸ்தானம் என்பது கடவுள் கொடுக்கும் வரம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
வரதுப்பிள்ளையும் வயதில் கிறுக்குத்தனமாகத்தான் சுற்றி அலைந்தார். அந்த வயதில் கோயில் கருவறையிலுள்ள தெய்வம் அவருக்குச் சிலையாகத்தான் தெரிந்தது. ஜமா சேர்த்துக் கொண்டு கையெழுத்து பத்திரிகையெல்லாம் நடத்தினார். அதில் கல்லா-கடவுளா என அவர் எழுதிய தொடர் கட்டுரையை சிநேகிதர்கள் இன்றும் சிலாகிப்பார்கள்.
வரதுப்பிள்ளையின் அப்பா தீவிர சிவபக்தர். நெற்றியில் விபூதி பட்டை இல்லாமல் அவரை வெளியில் பார்க்க முடியாது. வரதுப்பிள்ளையிடம் அவர் ‘உன் சித்தாந்தம் வாழ்க்கைக்கு உதவாது’ என நேரே சொன்னதில்லை. தெய்வமே உணர வைத்தால் ஒழிய யாரும் யாரையும் திருத்த முடியாது என அவருக்குத் தெரியும்.
படிப்பை முடித்து தனது உழைப்பை காசாக்க முயலும் போது தான் வரதுப்பிள்ளை தெரிந்து கொண்டார் சமூகம் தான் நினைத்தபடி இல்லையென்று. அவருக்குத் தெரிந்து சிறிய காரியத்துக்காக பணத்தை எதிர்பார்ப்பவர்களாகத்தான் எல்லோரும் இருந்தனர். தெய்வம் இல்லையென்றவன், தெய்வத்தை ஏற்றுக் கொண்டவனைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக தவறு செய்வதை வரதுப்பிள்ளை கண் கூடாகக் கண்டார்.
காந்தியை படித்துவிட்டு பணத்துக்காக பொய் சொல்பவர்களை அவருக்கு அறவே பிடிக்கவில்லை. அவரது உண்மையின் மீதிருந்த நாட்டத்தால் அரசாங்க உத்தியோகமும் அவருக்கு கிடைக்காமல் போனது. பணத்திற்காகவும், பெண்ணிற்காகவும் மனிதர்கள் எந்த அளவுக்கு தரம்தாழ்ந்து போவார்களென அவர் கண்கூடாகக் கண்டார். பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பவன் போதுமென்றா நினைக்கிறான்.
வேறு வழியில்லாமல் தான் வரதுப்பிள்ளை முதலியாரின் மளிகைக் கடையில் கணக்கு எழுதும் வேலைக்குச் சேர்ந்தார். முதலியார் கறாரான பேர்வழி. போணியாகாவிட்டாலும் எட்டரை மணிவரை உட்கார்ந்து தான் ஆகவேண்டும். மற்றவர்களைப் போல் வரதுப்பிள்ளைக்கு நொண்டிச் சாக்கு சொல்லத் தெரியாது. கணக்கு முடிக்கிற மாதத்தில் குடும்பஸ்தன் என்று கூட பார்க்காமல் கடையே கோயிலென்றும் முதலியாரே தெய்வமென்றும் தான் கிடக்க வேண்டும். இந்த வேலையையும் விட்டால் வேறு போக்கிடம் கிடையாது வரதுப்பிள்ளைக்கு.
நிறைய இடத்துல ஜாதகம் பொருந்தி வந்திச்சி. எல்லா பெண்களும் மாசத்துக்கு அம்பதாயிரம் சம்பாரிப்பவனாகத்தான் எதிர்பாரத்தார்கள். சுயம் வரத்துல கலந்துக்க ஆம்பளையா இருந்தா போதுமா, நாட்டுக்கு இளவரசனா இருக்க வேண்டாம்.
ஒரு இடத்திலிருந்து பெண்வீட்டார் அவனுடைய சம்பளம் பற்றி விசாரிக்க முதலியாரிடம் சென்று கேட்டிருக்கிறார்கள். முதலியார் போட்டு உடைத்துவிட. பெண் வீட்டார் கழன்று கொண்துமில்லாமல் அந்த இடத்துல வேலைக்கு இருக்கிற வரை அவரால உருப்படவே முடியாது என வரதுப்பிள்ளை அப்பாவின் காதுபடவே ஏசினார்கள்.
திருமணத்திற்கு பணப்பொருத்தம் மட்டுமே இப்போதெல்லாம் பார்க்கப்படுகிறது. இந்தக் காலத்தில் நல்லவனை யார் தேடுகிறார்கள். பணம் சம்பாரிக்கவல்ல வல்லவனைத்தான் தேடுகிறார்கள். நான் வரம் வாங்கி வந்தது அப்படி என்று வரதுப்பிள்ளை தன்னைத் தேற்றிக் கொண்டார்.
திலகமும் வரதுப்பிள்ளைக்கு வாய்க்க இருந்தவள் அல்ல. திலகத்தைப் பெண் பார்க்க போனவர்கள் எண்ணிக்கை குறையவே இவரையும் சேர்த்துக் கொண்டார்கள். மாப்பிள்ளை பையன் ஜகா வாங்க இவருக்கு அடித்தது யோகம். திருமணம் என்பது ஜாதகப் பொருத்தத்தை எல்லாம் மீறி எப்படி நடத்தி வைக்கப்படுகிறது என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
திலகமும் அவ்வப்போது வார்த்தைகளை வீசத்தான் செய்வாள். தம்படிக்கு வக்கற்றவனாக இருந்தாலும் கோபம் வரத்தானே செய்யும். வரதுப்பிள்ளை மளிகைக் கடையே கதியென்று கிடப்பது அவளுக்கு பிடிக்கவில்லை. “அதே வரும்படிக்கு எத்தனை வருசமா குப்பை கொட்டுவிங்க, மாசக்கடைசியல் நாம விரதம் இருக்கலாம் குழந்தை என்ன பண்ணும்” என்று அவள் கேட்பதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.
அன்று ஏன் விடிந்தது என்று இருந்தது வரதுப்பிள்ளைக்கு, வீட்டுக்கு இரண்டு மாத வாடகை பாக்கி. வந்து உட்கார்ந்து விட்டார் வீட்டுக்கு சொந்தக்காரர். “என்ன வரது குழந்தைகுட்டினு ஆனதுக்கு அப்புறம் இன்னும் சாமர்த்தியம் இல்லாம இருந்தா எப்படி. ஒருத்தர் வரும்படியை வைத்து இந்தக் காலத்துல குடும்பம் நடத்த முடியுமா? நாலு வழியிலேர்ந்தும் பணம் வரணும். இல்லைனா இப்படி அவமானப்பட்டு நிக்க வேண்டியது தான். உண்மையை நம்பிப் போன அரிச்சந்திரன் வெட்டியானாய்த்தானே ஆனான். நீ நல்லவனாய் இருக்கிறதுனால தெய்வம் கூரையைப் பிச்சிகிட்டு குடுக்குமா என்ன. எந்த ருதுவும் இல்லாம யார்கிட்டயாவது பத்து ரூபா வாங்க முடியுமா உன்னால. பொட்ட புள்ளயா வேற போயிடிச்சி எல்லாம் செஞ்சாகணும் அப்ப எங்க போய் முட்டிக்கிவே. இன்னும் ரெண்டு நாள் டைம் தரேன், அப்புறம் பழக்கப்பட்ட நாடார் இப்படி செஞ்சிட்டாரேன்னு நினைக்கப்படாது ஆமா சொல்லிட்டேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
வரதுப்பிள்ளை தான் யோக்கியனாக இருக்க வேண்டும் என்பதற்காக வைராக்கியத்துடன் அப்படி இல்லை. வரதுப்பிள்ளையின் இயல்பே அப்படித்தான். வார்த்தை மாறி பேசத் தெரியாது. சொல்லாததை சொன்னேன் என்று சத்தியம் அடிக்க வரதுப்பிள்ளையால் முடியாது. அப்பா இறந்த பிறகு தேரை இழுத்து தெருவில் விட்டது போலாகிவிட்டது வரதுப்பிள்ளையின் கதை. சுயமாக முடிவு எடுப்பதில் தடுமாறித்தான் போகிறார். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைதான். செலவுக்கு காசில்லை என்றால் திலகத்தின் பேச்சில் உஷ்ணம் கொஞ்சம் ஜாஸ்தியாகத்தான் இருக்கும். வரதுப்பிள்ளையின் மனம் புழுங்கத்தான் செய்கிறது அதனால் உதறிவிட்டு சம்போமகாதேவா என்று போய்விட முடியுமா என்ன.
வீடு தான் மனிதனின் விடுதலையான இடம். நிம்மதியைத் தொலைத்தவர்கள் அதனை வேறு எங்கு போய்த் தேடுவார்கள். பேச்சால சூடுவைக்கிறதுல யாரும் திலகத்தைப் போலாகமுடியாது. போன மாசக் கடைசியில் கடையிலேர்ந்து வந்த அசதியில ஒருவா காபி கேட்டுவிட்டேன். வந்த பதிலை பார்க்கணுமே அவளிடமிருந்து “காபி கேட்க வந்துட்டாரு டீ எஸ்டேட் ஓனரு” என்றாள். வரதுப்பிள்ளைக்கு ஏன்டா கேட்டோம் என்றாகிவிட்டது. ஒருநாள் சர்க்கரை போடலயா என தெரியாத்தனமாக கேட்டுவிட்டேன். “டீக்கு சர்க்கரை இல்லைன்னு இல்ல வீட்டுல சர்க்கரை தீர்ந்து போய் இரண்டு நாளாச்சி நான் சொன்னப்ப ஊமை சாமியார் மாதிரி இருந்துட்டு இப்ப கேட்குறதை பாரு” என்றாள் சம்பாரிக்கிறது குறைச்ச என்றாலும் நாக்குக்கு ருசி கேட்கிறது பாரு என வரதுப்பிள்ளை தன்னைத் தானே நொந்து கொண்டார்.
வரதுப்பிள்ளை வீட்டருகே வந்துவிட்டார். இப்போது தான் அவர் ஞாபகத்திற்கு வந்தது. ஆறாயிரம் கடனுக்காக பைனாஸ் கம்பெனிக்காரன் வீடு புகுந்து டி.வியை எடுத்து போனதும் அதனால திலகம் கோவிச்சிட்டு குழந்தையுடன் பிறந்தகம் போனதும். வரதுப்பிள்ளை வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றார். வைத்த பொருள் வைத்த இடத்தில் இருப்பதைப் பார்த்த போது வரதுப்பிள்ளைக்கு கயல்விழி ஞாபகம் வந்தது. வரதுப்பிள்ளைக்கு தன்னைக் கரிச்சிகொட்டவாவது திலகம் வேண்டியதா இருந்தாள். எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாமனார் வீட்டுக்கு போவது என வரதுப்பிள்ளைக்கு யோசனையாய் இருந்தது. வெறுமை புதைகுழியில் தள்ள வரதுப்பிள்ளை தன் பெண்டாட்டி பிள்ளையை அழைத்து வரும்பொருட்டு சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினார்.
பக்கத்து வீட்டு வானொலி பண்பலையில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ
கடைசி வரை யாரோ