சின்ன விஷயம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2018
பார்வையிட்டோர்: 7,798 
 
 

ரகசியங்கள்னா பெருசாத்தான் இருக்கணும்னு அர்த்தமில்லை! ஒரு அற்பத்தனமான விஷயம், அடுத்தவங்ககிட்ட சொன்னா எங்கே ரொம்பக் கேவலமா எண்ணிடுவாங்களோ என்ற எண்ணம்; மேலும் இதெல்லாம் ஒரு விஷயமான்னு கூடச் சொல்லிவிடுவார்களோ என்ற பயம்! சின்ன விஷயம்தான். நிறைய நிறைவேற்றப் படாத சின்னச் சின்ன விஷயங்களை இந்த மனம் என்ற பெட்டிக்குள் போட்டு வைக்க முடியலை. ரொம்பக் கஷ்டமா இருக்கு. அழுகை வருது. வெளியே சொன்னால், சரியான புலம்பல் பார்ட்டி அப்படின்னு ரொம்ப சுலபமாப் பட்டம் கட்டிடுவாங்க. அதனால்தான் சந்தியா யாருடனும் இதைப்பற்றிப் பேசாமலேயே இருக்கிறாள்.

சினிமா!…சிலருக்கு இது கனவு. பலருக்கு இதுதான் உலகம். ஆனால் சந்தியாவுக்கோ இது வெறும் ஆசைதான். திரையரங்குக்குச் சென்று தமிழ்த்திரைப்படம் பார்க்கவேண்டும் என்பதுதான் அவளுடைய நீ…ண்ட நாள் ஆசை. மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது ஒரு அற்பத்தனமான விஷயமாகப் பட்டாலும், சந்தியாவைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய ஆசை.

சின்ன வயதில் ஒரு கார்ட்டூன் படம் பார்க்க அப்பா திரையரங்கத்திற்கு அழைத்துச்சென்றதாக ஞாபகம். ஆனால் தமிழ்ப்படங்கள் பார்க்கக் கூட்டிச்சென்றதாகச் சந்தியாவுக்கு நினைவில்லை. ஒரு குறிப்பிட்ட வயதுக்குப்பிறகு சினிமா பார்க்க ஆசைப்பட்டால், படங்கள் கேட்ட அன்றே கேசட்டுகளில் வீட்டுக்கு வந்தன. எத்தனை தடவை வேண்டுமானாலும் போட்டுப் பார்க்கலாமாம்! அப்படிச் சொல்லிவிடுவார்கள்! திரையரங்கில் போய்ப் பார்க்கும் அந்த, சந்தோஷம்! அந்த, சத்தம்! சுற்றியிருப்பவர்களின் விமர்சனம், ஒரே படத்தைப் பற்றிப் பலபேருடைய பல விதமான கண்ணோட்டம் இதெல்லாம் காதாரக் கேட்க வேண்டும் என்று சந்தியாவுக்கு ரொம்…ப ஆசை!

ஒருமுறை மிகப் பிடிவாதமாக அப்பாவிடம், “அப்பா அந்தப் படத்தை தியேட்டர்ல பார்த்தாத்தான் நல்லா இருக்கும்பா. என் பிஃரண்ட்ஸ் எல்லாரும் பாத்துட்டாங்க. தியேட்டர்ல போய்ப் பார்க்கலாம்ப்பா…”

“அதெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு உன் புருஷன் கூட போய்ப் பாத்துக்கோ.” அப்பாவின் குரலில் கண்டிப்பு இருந்தது.

“ரொம்பச் சின்ன விஷயம்தானே கேக்கறேன். வேற யார்கிட்ட போய்க்கேட்க முடியும்? எனக்கு சினிமாக்கு போகணும்னா என் பிஃரண்ட்ஸ் கூடப் போய்ப் பார்க்கத் தெரியாதா? குடும்பத்தோட போகலாம்னு கேக்கறதைக் கூட நிறைவேற்ற முடியாதா?” ஒவ்வொருதடவையும் சினிமா பார்க்கும் ஆசை நிராகரிக்கப்படும்போது சந்தியா தனக்குத் தானே இப்படிப் புலம்புவது உண்டு. வேறென்ன செய்யமுடியும்? சினிமா மட்டும்தானா? இதுபோன்று மறுக்கப்பட்ட ஆசைகள்தான் எத்தனை எத்தனை?

பிடிக்காத எதையோ படித்து, பிடிக்காத ஏதோ வேலைக்குப் போய், பிடிக்காத எதையோ சாப்பிட்டு… ம்ம்ம்… கல்யாணத்துக்குப் பிறகாவது காட்சி மாறுதான்னு பாக்கலாம்!

21-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தாலும் நன்கு படித்து வேலையில் இருக்கும் சில பெண்களுக்கேகூடத் தனிப்பட்ட விருப்பம் என்பது மறைக்கப்பட வேண்டியுள்ளது. வெளியிட்டாலும் அது ஏதாவது ஒரு விதத்தில் மறுக்கப்பட்டு அல்லது முடக்கப்பட்டுவிடுகிறது என்பதே சத்தியமான உண்மை!

கல்யாணத்துக்கு முன் ராகவனுடனான முதல் உரையாடலில் விழுந்த முதல்அடி, “தமிழ் சினிமான்னா அவ்வளவாப் பிடிக்காது! கூட்டமான இடம் பிடிக்காது. அதனால சினிமாவைத் தியேட்டர்ல போய்ப் பார்ப்பது ரொம்பக் குறைவாம்! அதுவும் தமிழ் சினிமா, தியேட்டரில் பார்த்ததே இல்லையாம்!”

கல்யாணமானா எல்லாம் தலைகீழா மாறிடுவாங்க! அப்போ பாத்துக்கலாம்! தைரியமாக இருந்தாள் சந்தியா.

கணவனை மாற்றிவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தாள் சந்தியா. ஆனந்த விகடன் ஒரு குறிப்பிட்ட படத்திற்கு அளித்த விமர்சனம் அந்தப்படத்திற்கான உத்திரவாதத்தைத் தர, அதைக்காட்டி ஒரு வழியாக ராகவனை வழிக்குக் கொண்டுவந்துவிட்டாள். திரையரங்குக்குப் போகும்போதே தெரியும் ராகவனுக்கு ஒரு சதவிகிதம் கூடத் திரைப்படத்திற்கு வர விருப்பமில்லை என்று! டிட்கெட் எடுத்த பிறகுதான் சந்தியாவுக்கு மூச்சே வந்தது. திரைப்படம் தொடங்கச் சிறிது நேரம் இருந்ததால் அருகில் இருந்த உயர்தர உணவகத்தில், அட்டையில் தேடித்தேடி உணவை வரவழைத்து வேண்டுமென்றே பொறுமையாக ராகவன் சாப்பிட்டதைக் கண்டபோது சந்தியாவுக்கு அழுகையே வந்துவிட்டது.

“சீக்கிரம் சாப்பிடுங்க படம் போட்டுடப் போறாங்க. நான் விளம்பரத்தில் இருந்து பார்க்கணும்.”

“பிஃரைட் ரைஸ் ரொம்ப நல்லா இருக்கு. முடிச்சிட்டு வரேன்!”

“யோவ், நீ சினிமாவுக்கு வந்தியா சாப்பிட வந்தியா?” சந்தியாவுக்கு கத்தவேண்டும் போல் இருந்தது.

ஒரு வழியாகத் திரையரங்குக்குள் நுழைந்து உட்கார்ந்ததும்தான் ஜென்ம சாபல்யம் அடைந்தது போலிருந்தது.

ஆனால் ராகவன் தலையைக் குனிந்தே உட்கார்ந்திருக்கவும், சந்தியா,

“ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என,

“தலைவலிக்குது சந்தியா. பேசாம வீட்டுக்குப் போய்ட்டு அடுத்த சனிக்கிழமை வந்து பார்க்கலாம்.”

“அடுத்த சனிக்கிழமை எப்படி? அன்னைக்குத்தான் நமக்கு பிஃளைட்.” எப்படியோ அவனோடு மல்லுக்கட்டி முழுப் படத்தையும் பார்த்தாள். ஆனந்த விகடன் உத்தரவாதம் அளித்தது போலவே ரொம்ப நல்ல படம்தான்.

மேலும், கணவனுடன் சேர்ந்து பார்க்கும் முதல் படம்தான் என்றாலும் படம் பார்த்த சந்தோஷமும் இல்லை திருப்தியும் இல்லை.

அதற்குப்பிறகு திரைப்படத்திற்குப் போகலாம் என்றாலே ஏதாவது நாடகம் நடத்துவது ராகவனிடம் வெளிப்படையாகவே தெரிந்தது. ராகவன் இயல்பில் நல்லவன்தான்; பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தாராளமாகச் செலவு செய்வான், சந்தியாவுக்காக! ஆனால் சினிமாவைத் திரையரங்கில் சென்று பார்ப்பது மட்டும் நடக்காத ஒன்றாகவே இருந்தது.

சந்தியா கருவுற்றிருந்த காலம். அந்த நேரம் ராகவனுக்கு வேலை இல்லாமல் இருந்தது போதாத காலம். ஆனாலும் சந்தியாவுக்கு அதே ஆசை தலைதூக்க ராகவனைப் பார்த்து, “ஒரேயொரு படம் தியேட்டர்ல போய்ப் பார்க்கலாங்க?” மறுக்க முடியாதவன் பதிலாகச் சொன்னது இதுதான், “அடுத்த மாதம் ஒரு நல்ல தகவல் வந்ததும் கூட்டிட்டுப் போறேன் சந்தியா.”

அடுத்த வாரமே நல்ல தகவல் வந்தது. ஆனால் கொடுத்த வாக்குதான் காப்பாற்றப் படவேயில்லை. அதற்குள் அம்மா வீட்டுக்குப் போகவேண்டிய கட்டாயம். அங்கேயும் உடன்பிறந்தவர்களிடம் கேட்டும் வந்த பதில், “இந்த மாதிரி நேரத்துல அங்க இங்க போறதெல்லாம் சரியில்ல. அப்புறம் ஏதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா உன் வீட்டுக்கு யார் பதில் சொல்றது?”

இவர்களின் எண்ணம் அடுத்தவர்க்குப் பதில் சொல்வதில் இருந்ததே தவிர எனக்கென்று ஒரு மனம் இருப்பதையும் அதில் ஒரே ஒரு ஆசை சுற்றிச் சுற்றி வருவதைப் பற்றியும் நினைத்ததாய்த் தெரியவில்லை. “சினிமா தானே. குழந்தை பிறந்து கொஞ்சம் வளர்ந்ததும் போயேன். இது ஒரு விஷயமா?” சந்தியாவுக்கு வேதனையாக இருந்தது.

குழந்தை பிறந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு வந்து, அதே புராணத்தை ஆரம்பித்தாள் சந்தியா. இந்தத் தடவை ராகவனிடமிருந்து வந்த மறுப்பு வேறு விதமாக இருந்தது. “கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா? தியேட்டர்ல அவ்வளவு சத்தத்தில அவன் பயந்துட மாட்டானா? அதுவும் இல்லாம ரெண்டரை மணி நேரம் அவன் ஒரே எடத்தில எப்படி உக்காந்திருப்பான்? அவ்வளவு பிடிவாதமா உனக்கு? அப்படி தியேட்டர்ல தான் போய்ப் பார்த்தாகணுமா? நான் எவ்வளவு லேட்டஸ்ட்டான படமெல்லாம் கம்ப்யூட்டர்ல போட்டு வச்சிருக்கேன். நான் உனக்காக செய்யிற நல்லது எதையுமே நீ புரிஞ்சிக்க மாட்டியா சந்தியா? அவன தூங்க வச்சிட்டுப் பாரேன். யார் வேண்டாம்னா?”

தப்பிச்சிட்டான்…

குழந்தைக்கு நாலு வயதானபோது மீண்டும் ஆரம்பித்தாள். “இராவணன் பார்க்கலாம். நல்லா இருக்காம். இராமாயணத்தோட மாடர்ன் வர்ஷனாம்! ஆ.வி. ல போட்டிருந்தது.”

ஆறு வருஷத்துக்குப் பிறகு சந்தியாவின் காட்டில் மழை. எப்படியோ ராகவன் சினிமா பார்க்கத் திரையரங்குக்குக் கூட்டிச் சென்றான், மனதேயில்லாமல்! ரெக்ஸ் வாசலில் ஐஸ்வர்யா ராயின் படத்தைப் பார்க்கப் பெரிய வரிசை இருந்தது. “போன வாரமெல்லாம், தெருவோட ஆகக் கடைசி வரைக்கும் கூட்டம் இருந்தது லா. இப்போ நாட் சோ கிரவ்டட் யூ நோ.” எங்களுக்கு முன்னால் நின்றிருந்த இருவர் பேசிக்கொண்டார்கள். உண்மையில் சந்தியாவுக்கு இதுபோன்ற சின்னச் சின்ன உரையாடல்களைக் கூட கேட்டு அனுபவிப்பது பிடிக்கும். “இந்தத் தடவையாவது எந்தத் தடங்கலும் இல்லாமல் முழுசாப் படம் பார்க்கணும்” என்ற எண்ணத்தோடு குழந்தைக்கு வேண்டிய எல்லாவற்றையும் தயார் செய்து, போய் உட்கார்ந்த ஒரு ஒண்ணரை மணி நேரத்தில் குழந்தை அப்பாவுக்கு உதவியாக… அழ ஆரம்பிச்சிட்டான். சொல்லவா வேண்டும். “குழந்தையை ரொம்ப டார்ச்சர் பண்ற மாதிரி இருக்கு….” என்று ராகவன் இழுக்க,

“சரி போலாம் வாங்க!” என்று வருத்தத்துடன் கிளம்பிவிட்டாள் சந்தியா. அதற்குப் பிறகு அந்தப் படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு ஏதோ ஒரு விசேஷ நாளில் ஏதோ ஒரு தொலைக்காட்சி “ராவணன்” படத்தை வெளியிட்டுப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டது. சில வருடங்களில் இன்னொரு குழந்தை வந்தது. வேலை, குழந்தை வளர்ப்பு, குடும்ப வேலை என்று நேரமே இல்லாமல் போன நிலையில் தொலைக்காட்சியில் காட்டப்படும் படங்களைக்கூடப் பார்க்க நேரமில்லாமல் இருந்தது.

ஒரு பள்ளி விடுமுறைக் காலத்தில் பெரிய பையனிடம் சந்தியா புதிதாக வந்திருக்கும் திரைப்படத்தின் பெயரைச் சொல்லி, “ரொம்ப நல்லா இருக்காமே.. நாம மூணு பேரும் போகலாமா? அப்பாவுக்கு வேலையிருக்காம்.”

“தமிழ் மூவி தியேட்டர்ல பார்த்ததே இல்லம்மா. நீங்க வேணும்னா போய்ட்டு வாங்களேன்.”

பல வருடங்களுக்கு முன்பு ராகவன் சொன்ன அதே அறிவுரை. “எனக்குப் பிடிக்காது, ஆனா நீ போய் தியேட்டர்ல பார்க்கறதுல எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை. நானே புக் பண்ணித் தரேன்.”

“நான் போக மாட்டேன்னு நெனச்சித் தானே இப்படிப் பேசறீங்க?”

“நான் திரும்பவும் சொல்றேன். நீ மட்டும் தியேட்டர்ல போய்ப் படம் பார்க்கறது என்ன பெரிய பாவமா?”

“இது பாவ புண்ணியம் பற்றிய பேச்சு இல்லை. எனக்கு என் குடும்பத்தோடப் போய்ப் பார்க்ணும்னு ஆசையே தவிர, புதுசா வர்ற எல்லா படத்தையும் போய்ப் பாக்கணும்னா கேட்டேன்?”

“தியேட்டர்ல உங்க சொந்தக்காரங்க யாராவது என்னைப் பாத்தா என்ன சொல்லுவாங்க?”

“எந்த ஊர்ல இருக்க நீ? சிங்கப்பூர்ல தியேட்டர்ல போய்ப் படம் பார்க்க என்ன பிரச்சனை? யார் என்ன சொல்லப் போறா? அப்படியே சொன்னாதான் என்ன? இப்படியே எல்லாரைப் பத்தியும் யோசிச்சிட்டே இருந்தா, நம்மோட நிம்மதி தான் போகும். எனக்குத் தியேட்டர்ல போய்ப் படம் பார்க்கப் பிடிக்காது. என்னைக் கட்டாயப்படுத்தாதே.”

ரொம்பத் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள், அன்று அப்பா… இன்று பிள்ளை!

ஆனால் இவர்கள் இருவருக்குமே நன்றாகத் தெரியும் சந்தியா இப்படியெல்லாம் போகக் கூடியவள் இல்லை என்று!

திரையரங்கத்தில் போய்ப் படம் பார்க்கவேண்டும் என்ற ஆசை ரொம்பவும் சாதாரண ஆசைதானே. அப்பாவும் அதற்குச் சாக்குப்போக்குச் சொல்லித் தட்டிக்கழித்துவிட்டார்கள், புருஷன் இந்த விஷயத்தில் பரம வில்லன், பிள்ளை இவர்களின் தொடரி. பேரப் பிள்ளைகள் காலத்தில் இன்னும் வேகமான மாறுதல்கள் வரலாம். அவர்களே திரைப்படம் எடுக்கலாம். அப்போது கூட என்னைத் திரையரங்கத்திற்குக் கூட்டிச் சென்று படம் காட்டுவார்களா? அல்லது வயசான என்னைக் கஷ்டப் படுத்தக் கூடாது என்பதற்காக வீட்டிலேயே பிரிவியூ காட்டுவதற்காக எனக்காகவே ஒரு திரையரங்கம் கூடக் கட்டலாம்.

இப்போதெல்லாம் நிறைய நல்ல படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. சந்தியா இப்போதும் ஆனந்தவிகடனில் திரை விமர்சனம் படிக்கின்றாள். திரையரங்கத்தில் புதிதாக வந்த திரைப்படத்தைத் தன் குடும்பத்தோடு பார்க்கின்றாள்… கனவில்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *