சின்ன பொய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 8,033 
 
 

நாகராஜன் சார் ஆளையே பாக்க முடியல? கடைப்பக்கமே இரண்டு மாசமா காணோம்?

முகத்தில் வெளுத்த தாடியும், மீசையும் தெரிய முகத்தில் கவலையுடன் நின்று கொண்டிருந்தவர் கொஞ்சம் உடம்பு சரியில்லை நாராயணா, என்று சொன்னார்.

அதுக்காக கடைக்கே வராம இப்படி மீசையும் தாடியுமா இருக்கணுமா சார்?

மனசு சரியில்ல நாராயணா , என்ன பண்ணி என்ன பிரயோசனம்? தனக்குள் அலுத்துக்கொண்டவர் கிளம்ப ஆயத்தமானார்.

சார் மனசு கிடக்கட்டும் முதல்ல உட்காருங்க, இவருக்கு சேவிங் மட்டும்தான் முடிச்சவுடனே உங்களுக்கும் பண்ணி விடறேன்.

சொன்னவனிடம் எனக்கு எதுக்கு நாராயணா இனிமேல் கட்டிங், சேவிங் எல்லாம், அலுத்துக்கொண்டார்.

மனுசன் ஏதோ பெரிய கவலையில் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட நாராயணன் சார் அதைப்பத்தி பேசலாம், கொஞ்ச நேரம் உட்காருங்க.கஸ்டமருக்கு சேவிங்கை ஆரம்பித்தான்.

அந்த நகரில் நான்கு சலூன் கடைகள் உண்டு, இவனது கடை நகரை ஒட்டி உள்ள காலனியில் உள் புறம் அமைந்திருந்தது, என்றாலும் இவனது வாடிக்கையாளர்கள் இவனை தவிர வேறு எங்கும் செல்ல விரும்பமாட்டார்கள். காரணம் இவன் தொழில் திறமை என்பதை விட இவனது பேச்சு எப்பேர்பட்ட ஆட்களையும் வசீகரம் செய்து விடும். பலருக்கு முடி வெட்டிக்கொண்டிருக்கும் போதே அவர்களது பிரச்சினைகளை இவனிடம் சொல்வர். இவன் அதற்கு ஏதாவது ஒரு தீர்வை சொல்லுவான். அது அவர்களுக்கு ஏற்றதாக பெருமபாலும் இருந்து விடுவதால் வேலை முடிந்த பின் தனது கவலைகளை இறக்கி வைத்த சந்தோசத்தில் செல்வர்.

இதனால் குடும்பஸ்தர்களுக்கு இவன் கடை ஒரு வர பிரசாதம்.இளைஞர்கள் இவனை தேடி வரும்போது தவறான பாதையில் அவர்கள் செல்வது தெரிந்தால் அவர்கள் முன்னாலேயே சொல்லி விடுவான். வேணாம் தம்பி, நீ பிறந்ததுல இருந்து எனக்கு தெரியும், பாத்து பத்திரமா நடந்துக்கோ என்று அறிவுரை சொல்லிவிடுவான்.

ஆரம்பத்தில் அவன் சொல்லை கேட்காமல் ஈடுபட்டவர்கள், அதன் விளைவினால் அண்ணே நீங்க சொன்னது சரிதான்னே என்று சொல்லி வருத்தப்படுவர். அதற்கும் ஏதாவது ஆறுதல் சொல்லி விடுவான்.

தலையில் தண்ணீர் அடித்து முடி வெட்ட ஆரம்பிக்கும்போதே நாகராஜன் அவரது பிரச்சினையை சொல்ல ஆரம்பித்து விட்டார். அவருக்கு வரிசையாய் மூன்று பெண் குழந்தைகள்,இவருக்கும் தனியார் கம்பெனியில் வேலை, எப்படியோ தட்டி முட்டி பெண்களை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அதில் தான் இப்பொழுது சின்ன சிக்கல். பெரிய பெண் கொஞ்ச நாட்களாய் சரியில்லாதது போல் அவருக்கு படுகிறது.

கல்லூரிக்கு போய் கொண்டிருக்கிறாள், இது இரண்டாவது வருடம், இவள் படித்து முடித்து ஏதாவது ஒரு வேலைக்கு வந்தால்தான் இவருக்கு ஒரு துணை கிடைத்தது போல் இருக்கும். அப்படி நினைத்துக்கொண்டிருக்கும் போது அந்த பெண்ணின் நடவடிக்கைகளை பார்த்த இவருக்கு இந்த வயதில் வரும் காதல்,கீதல்,போன்றவற்றில் விழுந்து விட்டாளோ என்ற பயம் வந்து விட்டது. அதை எப்படி கேட்பது என்று தெரியாமல் மனதுக்குள் புழுங்கிக்கொண்டே இருக்கிறாராம்.

என்னதான் சினிமாவில் காதல் காட்சிகளை பார்த்தாலும், தன் வீட்டில் அப்படி நடக்கிறது என்று தெரிந்துவிட்டால் ஒவ்வொரு மனிதனும் பதறி விடுகிறான். அதுவும் நடுத்தரமாய் வாழ்க்கையை ஒட்டும் பெரும்பாலோர் சுத்தமாய் மனதை விட்டு விடுகின்றனர்.

பக்கத்து வீட்டுக்காரர்களோ,சொந்தக்காரர்களோ இனி நம்மை மதிக்க மாட்டார்கள் என்ற எண்ண்மே அவ்ர்களை கலங்க அடித்து விடுகிறது. இதை மனதுக்குள் ஓட விட்ட நாராயணன், சார் இதுக்கெல்லாம் கவலைப்பட்டு மனசை கெடுத்துக்காதீங்க, எதையுமே வெளிப்படையாய் பொண்ணூகிட்ட பேசுங்க சார், இந்த காலத்துல பசங்க எல்லாம் புரிஞ்சுக்கறவங்களாத்தான் இருக்காங்க, சொன்னவன், அவருக்கு முடி வெட்டி விட்டு சேவிங்கையும் முடித்தவன், நான் ஒரு யோசனை சொல்றேன் அதைய சும்மா உங்க பொண்ணுங்கிட்ட காதுல போட்டு வையிங்க என்று சொல்லி அவர் காதில் ஏதோ சொன்னான்.

நாகராஜன் கொஞ்சம் தெளிவு பெற்றவராய் கட்டணத்தை கொடுத்து விட்டு, நீ சொன்ன யோசனைய செஞ்சு பாக்கறேன். ரொம்ப நன்றி நாராயணா , என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.அதற்குள் அடுத்த கஸ்டமரை பார்க்க ஆரம்பித்திருந்தான் நாராயணன்.

ஒரு மாதம் ஓடியிருந்தது, நாராயணா என்ற குரல் கேட்டவன் திரும்பி பார்க்க கட்டிங் பண்ணணும் இன்னும் எத்தனை பேர் இருக்காங்க? என்று கேட்டு நாகராஜன் நின்று கொண்டிருந்தார். வாங்க சார் இன்னும் ஒருத்தர்தான் இருக்காரு, உட்காருங்க. இங்கேயே நிக்கிறேன், முகத்தில் பழைய களை வந்திருந்தது.

சார் சந்தோசமா இருக்கீங்க போலிருக்கு? முடிவெட்ட தலை முடியை வாகாய் சரி செய்து கொண்டே கேட்டான். ஆமா நாராயணா, நீ சொன்ன யோசனைய பொண்ணுகிட்ட சும்மா சொலற மாதிரி சொன்னேன், அதுக்கப்புறம் இரண்டு மூணு நாள்ல அவளுடைய நடவடிக்கை எல்லாம் பழைய மாதிரி, இல்லையில்ல இப்ப்வெல்லாம் ரொமப்வே ஈடுபாட்டோட படிக்க ஆரம்பிச்சுட்டா. நானும் ஒரு முடிவு பண்ணிட்டேன், அவளை மேல் படிப்பும் படிக்க வச்சுடணும்னு.

கண்டிப்பா படிக்க வையுங்க சார், படிக்கிற வயசுல இந்த பிரச்சினை வர்றது நாம பாக்கறதுதானே, சொல்லிக்கொண்டே தன் வேலையை தொடர்ந்தான் நாராயணன்.

அவன் சொன்ன சின்ன் யோசனையால் தன் பெண்ணிடம், “நம் சொந்தத்தில் டாகடர் படிப்பு படித்துக்கொண்டிருக்கும் பையனுக்கு உன்னை பெண் கேட்டார்கள், நாந்தான் டாக்டருக்கு கொடுக்கணும்னா என் பொண்ணும் புரொபசர் அளவுக்கு படிக்க வச்சுட்டுத்தான் கொடுப்பேன் அப்படீன்னு சொல்லிட்டேன், நான் சொன்னது சரிதானே? என்று சொல்லி அவள் முகத்தை பார்த்தபொழுது கொஞ்ச நேரம் சலனமில்லாமல் இருந்த முகம், பின் பிரகாசமாய் அடுத்த வருசம் முடிஞ்சவுடன் மேல் படிப்புக்கு அப்ளை பண்ணிடறப்பா, என்ற பதிலை மட்டும் சொன்னாள். இதிலிருந்தே அவள் மனதில் டாகடர் மனைவி ஆகவேண்டும், அதற்கு தானும் ஒரு புரொபசர், ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டதை தெரிவித்தது.

சொன்னது பொய்தான் என்றாலும் வருங்காலத்தில் அவளது கல்வித்தரம் மூலம் அவளுக்கு டாக்டர் மாப்பிள்ளை கிடைக்கலாமல்லவா? இப்பொழுது சபலப்படும் அவள் மனதை மாற்றி படிப்பில் கவனத்தை செலுத்த வைத்தால்போதும் என்று நினைத்து கொண்டார் நாகராஜன்.

Print Friendly, PDF & Email
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *