சின்னம்மா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 8,482 
 

காட்சி 1:
——–
சார்…பஸ் எத்தன மணிக்கு எடுப்பீங்க

10:20

எத்தன மணிக்கு ஜெயங்கொண்டத்துல இருப்போம்

5 மணிக்கு

இடையில ஆண்டிமடம் நிறுத்துவீங்களா…

ஏறு…ஏறு….

என்னய்யா போவுலாமான்னு சூப்பர் பாக்கை பிரித்து வாயில் கொட்டினார் ஓட்டுநர்.

காட்சி 2:
——–

எங்கம்மா இந்த நேரத்துல போற

எங்கயாவது போறன் ஒங்களுக்கு என்ன?எந்த சொந்தமுமா எனக்கு இல்ல ஒரு நாளைக்கி ஒரு வூட்ல கஞ்சி குடிச்சாலும் ஆயிசு முடிஞ்சிடும்.

ஒங்கிட்டலாம் பேச முடியாது…எங்கயாவது போய் தொல

நரம்பு பையொன்றில் இரண்டு,மூன்று சேலையையும் ஒரு தண்ணி பாட்டிலையும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் பொன்னம்மா.

எங்கே போவதென்ற உத்தேசமில்லை.இரவு 10 மணிக்கு புறப்படும் அவளுக்கு எந்த ஊருக்கும் பேருந்து இல்லை.இடுப்பில் சுருக்கு பையொன்றை செருகி இருக்கிறாள்.பணம் இருப்பதாக தெரியவில்லை.

உள் கிராம சாலைகளை கடந்து நெடுஞ்சாலை வரவே நான்கு கி.மீ ஆகும்.இங்கு அரை மணி நேரத்திற்கு ஒரு அதிவேக பேருந்து செல்லும். அதில் இவள் ஏறப்போவதுமில்லை.

காட்சி 3:
——–
ஆயி…நான் அண்ணன் பேசுறேன்

எங்கேர்ந்து பேசுறீங்க

சிலுவச்சேரிலேர்ந்து…

ஓ….பன்னீரு அண்ணனா நல்லா இருக்கீங்களா…புள்ளிவோ எப்புடி இருக்கு.என்ன போனு பண்ணிலாம் பேசுறீங்க…

சும்மாதான் ஆயி…சின்னாம்மாள பாத்து எம்மோம் நாளு ஆவுது வெசாரிக்கலாம்னுதான்.

இப்பதான் சாப்ட்டு தூங்குச்சி…மணி பத்தர ஆச்சில்ல…

சரி ஆயி காலைல பேசுறேன்.

கெரண்டு வேற இல்ல போனுல சார்ஜி இருக்காது.மதியானம் போல பேசுங்க அம்மா வூட்லதான் இருக்கும்.

காட்சி 2-ன் தொடர்ச்சி:
——————–
இரண்டு மகன்களை பெத்தவள் பொன்னம்மா.நாலு ஏக்கர் வயலை ஆளுக்கு ரெண்டாய் பிரித்துத் தந்துவிட்டாள் ஆம்பள செத்த வொடனே…

இரண்டு பேரில் ஒருவன் கூட பொன்னம்மாளை சேர்த்துக் கொள்ளவில்லை.

ஒரு வருடம் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தவள்.இன்று கோபத்துடன் வெளியேறி விட்டாள்.

நெடுஞ்சாலையை தொட்டு வெகு தூரம் முனகிக்கொண்டே நடந்தாள்.மணி 2 இருக்கும்.

காட்சி 1-ன் தொடர்ச்சி:
——————–
விருத்தாச்சலம்லாம் எறங்கு….அடுத்தது ஆண்டிமடம் எறங்குறவங்க தூங்கிடாதீங்க…

காட்சி 2-ன் தொடர்ச்சி:
———————
தூக்கம் கண்ணை உசுப்பியது பொன்னம்மாளுக்கு…தூக்க கலக்கத்திலேயே நடக்கிறாள்.அவ்வப்போது நடு ரோடு என உணர்ந்து ஓரத்திற்கு நகர்ந்து நடக்கிறாள்.

தொடர்ச்சியான ஹாரன் சத்தம் எழுப்பியபடி கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் அடித்த ப்ரேக்கில் பாதி தூரம் இழைந்து சக்கரத்தில் சிக்கி இடது கையின்,வலது காலின் சதைகள் தேய்ந்து எலும்புகள் தெரிய வாய் பிளந்து பெருமூச்சு விட்டு அடங்கியது பொன்னம்மாள் உயிர்.

மணி 4 இருக்கும் ஒட்டுக் கண்ணு வக்கெப் போற ஆளுவோ எப்பயாச்சும் ரெண்டு பேரு டி.வி.எஸ் 50 யில் கடந்தபடி இருப்பார்கள்.

யோவ் பன்னீரு அங்க ஏதோ ஆக்சிரண்டு பஸ்சு நிக்கிது பாரு…

நிப்பாட்டு…நிப்பாட்டு…

நடத்துனரின் தகவலுக்கு போலிசும் வந்து சேர்ந்தது.

ஓட்டுநர் முந்திரிக் கொல்லைக்குள் அமர்ந்திருந்தார்.(போலிசுக்கு உண்மையாவே தெரியாது)

ஓட்டுநரிடம் விவரங்கள் கேட்டுக்கொண்டிருந்தார் ஏட்டு.

அய்யோ…சாமீ…சின்னாம்மா…சின்னாம்மா…

ஏட்டு விறு விறுவென வந்தார்.

யோவ் எந்தூரு நீ….எங்க போற… இது யாரு ஒனக்கு

சிலுவச்சேரிங்க…கண்ணு ஒட்டப் போறேன்… இது ஏஞ் சின்னம்மாளாங் காட்டியும்னு பதறிட்டேன்.

எந்தூரு அவங்க

கீரப்பாளயங்க…

இவங்களா…

இல்லீங்க…ராத்திரிதான் வெசாரிச்சேன் வூட்லதான் இருக்காங்கன்னு தங்காச்சி சொன்னுது.

இப்போ கேளுய்யா…

போனு சொச்சாப்புங்க…

சரி ஒம் பேரு,ஊர எழுதிக் குடுத்துட்டுப் போ…வெசாரிச்சி ஆளு அனுப்புறேன்.

காட்சி 4 :
——–
அலோ…பன்னீரா…அது ஒங்க சின்னம்மாதான் ஜெயங்கொண்டம் தருமாசுபத்திரிக்கு வா….

கணேசா…காலைல ஆக்சிரண்டுல செத்துது எஞ் சின்னம்மாதானாம்…நான் சேங்கணம் போயிட்டு என்னன்னு பாத்துட்டு போனு பன்னுறேன்.

காட்சி 5 :
——–
நாங் கணேசம் பேசுறேன்.பன்னீரு சின்னம்மா எறந்துட்டாங்க ஆளுவோ எழவுக்கு போவுனும்.பணங் காசி ஒன்னுங் கையில இல்ல….

கொல்லயில இருங்க வர்றேன்.

கொமாரு நீ மால கட்டிட்டு வண்டிக்கு சொல்லிட்டு வா…வர்ற வழியில 450 ரூவா அரிசி மூட்ட ஒன்னு எடுத்துட்டு வா…வாக்கரிசி கூட எடுக்கனும்.

காட்சி 4-ன் தொடர்ச்சி:
——————–

இதுல ஒரு கையெழுத்துப் போடுங்க…

என்னதுங்க மேடம் இது

போஸ்ட்மார்ட்டம் செய்யப் போறோம்…

அது எங்க சின்னம்மாளா என்னன்னே தெரிலங்களே…

அவங்கதான்…அவங்கதான்…

பன்னீரின் கைபேசி ஒலிக்கிறது.!

அண்ணே நாந்தான் பேசுறேன் அம்மாகிட்ட பேசனும்னு சொன்னீங்கள்ல…

சின்னம்மா…சின்னம்மா…

செத்தனா வாழ்ந்தனானு இப்போதான் ஞாபகம் வந்துருக்கு என் அக்கா மொவனுக்கு…நல்லாருக்கியாப்பா புள்ளிவோ எப்புடி இருக்கு….

நல்லாருக்கேஞ் சின்னம்மா…

இங்க பன்னீரு யாருங்க

நாந்தாங்க…

ஒங்க சின்னம்மாவோட சுருக்கு பையி இந்தாங்க…

சின்னம்மாவிடம் பேசிக்கொண்டே சுருக்குப் பையை திறந்தான். நான்கு 1 ரூபாய் திட்டுகள் இருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *